Thursday, September 27, 2007

சவடன் கதை

"யே ஆத்தா, எங்க சவடப்பச்சியை விடிக்காலே இருந்தே காணேலே? எங்கன போயிருக்கு?"ன்னு வீட்டுக்கு வெளியே நின்னு கேட்ட புள்ள யாருன்னு பார்க்க கண்ணை குருக்கிக்கிட்டு வீட்டை வெளியே வந்துச்சு பர்வதப்பத்தா.

"வாடியாத்தா, மருதமீனாட்சி, என்னாத்துக்கு அப்பச்சிய தேடி வந்தே?"

"அப்பத்தா என்னோட பேரு மீனாட்சி தான், சுருக்குன்னு மீனா'ன்னு கூப்பிடு, அப்போதான் இஸ்டைலா இருக்கும்"

"என்னடியாவேளெ சுடல, சுட்டுருச்சுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேவே, அவன் மருதக்கு போயிருக்கான், கருக்கலிலே போனான், இன்னும் வந்த சேதிய காணாம். என்னா சொல்லனும்?"

"நான் என்ன அப்புச்சி'கிட்டே சேதி சொல்லப்போறேன். சொக்கய்யா தான் பார்த்துட்டு வர சொன்னுச்சு"

"சரி அவன் வந்தா சொல்லிவிடுறேன். சொக்கன் சொல்லிதான் அவன் டவுனுக்கு போயிருக்கான்னு நினைச்சி கிடந்தேன்."

"வந்தா சொக்கய்யா கடைக்கு வரசொன்னுச்சு'ன்னு சொல்லிருப்பத்தா, நானு கம்மா'கிட்டே பாண்டியாட போறேன், நான் இங்கன வந்தேன்னா எங்கம்மா வந்து கேட்டுச்சு'ன்னா சொல்லிரு"ன்னு சொல்லி விட்டு ஓடி விட்டாள்.

கலியாணம் ஆன ரெண்டேமாசத்திலே சீக்கு வந்து செத்துப் போன புருசன் வீட்டிலே இருந்து தம்பி சவடன் வீட்டிலே தங்கினவ தான் பர்வதத்தா. இப்போ வயசு அறுவதஞ்சு தொட்டுருச்சிக்கிறதுக்கு பார்க்கிற பார்வைக்கு கண்ணை குறுக்கி மறுக்கி ஆள கண்டுபிடிக்கிற திரணி'லே தான் அந்த ஊரே நம்புச்சு, இல்லன்னா இன்னும் அம்பது தாண்டிருக்காதுனு தான் சொல்லிருப்பாங்க. பதினாறு வயசிலே மூளியாகி ஒழைக்க ஆரம்பிச்சதுதான் இன்னமும் நாத்து நடுறது, கடலை ஒடக்கிறது, அறுவடையிலே தூசி தட்டுறது'ன்னு எந்த கழனி வேலையானலும் செய்யும். அதுக்கூட ஒடம்பொறந்த சவடமுத்து ஊருக்கு ஒழைக்கிற உத்தமரு, ஒன்னேஒன்னு கண்ணேகண்ணு'ன்னு ஆம்பிள்ள பிள்ளய பெத்துட்டு துபாய் சீமையிலே வேலை பார்க்கிறான்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்ட நல்லவரு. இவரு கூடயும் இருவது வருசம் குடும்பம் நடத்தி சுமங்கலியா செத்துப்போச்சி பேச்சியாத்தா.

"ஏண்டா முத்து, கருக்கலிலே மருத போறேன்னு போனவன் பொழுது சாய வர்றே? எங்கேடலே போயிருந்தே?"

"மேலசந்து மருததேவரு பொண்ணுவயத்து பேத்தி இருக்குலே அது நேத்து பொழுதுலே பெரிய மனுசியாட்டாளாம், அவக வீடு அனுபானடி'லே இருக்குலே, அதுதான் மருதனும் நானும் அங்கன போயி மேக்காரியமெல்லாம் பார்த்திட்டு வந்தோம்"

"என்னோமோ, ஒன்னதேடிக்கிட்டு சொக்கன் அனுப்பிச்சான்னு ஊருக்குள்ளே இருக்கிற குஞ்சான் குளுவனெல்லாம் வந்து நீயிருக்கியான்னு கேட்டு போச்சுக"

"அப்பிடியா, ஆளு அனுப்பினனா? என்ன சோலியா இருக்கும்? ஒரு எட்டு பார்த்தியாறேன், மத்தியானமா அந்த வீட்டிலே தின்னது,பசி வயத்த கிள்ளுது, கேப்பகஞ்சி காஞ்சப்போறேன்னு நேத்து சொன்னீயே, இன்னமும் மிச்சம் இருக்கா, சொக்கப்பச்சிய பார்த்திட்டு வந்து குடிச்சிக்கிறேன்.”

“ஹிம் அதெல்லாம் இருக்கு, வெரசா வா, பேசுறேன் பேசுறேன்னு விடிய விடிய ரெண்டு பயலுகளும் பேசிக்கிட்டு கெடக்காதீயே”

சவடமுத்துவும், சொக்கனும் ஓரு சோட்டு வயசு, அந்த காலத்திலே படிக்க பள்ளிக்கூடம் அனுப்பினா ஊரு வாயக்காலிலே சுத்திட்டு கிடந்த பட்டிக்காட்டு பக்கிகதான். சவடன் கூலிவேலைக்கும் கொலுத்து வேலைக்கும் போயி சம்பாரிக்க ஆரம்பிச்சதும், சொக்கு அந்த வியாபாரம் பார்க்கிறேன், இந்த வியாபாரம் பார்க்கிறேன்னு நஷ்டப்பட்டு நோகமதானே நாமெல்லாம் கஞ்சி குடிச்சோம்! எதுக்கு கஷ்டப்பட்டு பொழக்கனுமின்னு கத்துவட்டி கொடுத்து வாங்கி பொழைக்க ஆரம்பிச்சான். கடன் வாங்கவறனுவக்கு விலாசம் காட்டனுமின்னு ஊருக்குள்ளே இருந்த டீக்கடைக்காரனுக்கே கடன் கொடுத்த ஆறேமாசத்திலே வட்டிக்கு கடையே எழுதி வாங்கிட்டான். அதிலே கொஞ்சகொஞ்சமா விஸ்தரிச்சு இப்போ கிளப் கடையா ஆக்கி சும்மா வந்தா வரட்டும் வராட்டி போகட்டுமின்னு உட்கார்ந்தவன் தான்.

"சொக்கா, என்னாப்பே கூப்பீட்டு விட்டியா? அக்கா சொன்னுச்சு? ஏதும் மருத போயிட்டு வர்ற சோலி இருக்கா என்ன?"

"வாப்பே சவுடா, எங்கனப்போயிருந்தே? நேத்து ரவைக்கு வீட்டுக்கு போனவ இன்னிக்கு ரவைக்கு இங்க வர்ற? என்னாலே சேதி?"

"ஆத்தி ஒனக்கு விசயமே தெரியாதா? மேலதெரு மருதனோட பிள்ளை ஒன்னே அனுப்பானடி'லே கொடுத்து இருந்தானே? அவ மூத்தப்பிள்ள பெரியமனுசாயிட்டா. அவன் மருவானோட இந்த பய மவன் சண்டை போட்டானாமே, அதுக்கு இவரு முருக்கிக்கிட்டு நான் வரமாட்டேன்னு சொல்லிட்டான், அதுனாலே மருதய்யன் போயி சண்டைய தீர்த்து வைக்கிறேன்னு ரெண்டு பய காலிலேயும் விழுந்து எந்திருச்சிட்டு வந்தான்.”

“நீ என்னாப்பே அங்கன போயி பண்ணினே?”

“நான் என்ன பண்ணேனா? நாட்டமை இல்லாத ஊருக்குள்ளே தடியெடுத்தவந்தானே தீர்ப்பு சொல்லனும், அதுதான் ரெண்டு பயலுகள்கிட்டேயும் சமாதானம் பேசினேன், பக்கி பயப்புள்ளக சண்டை வந்ததே சராயம் குடிக்கப்போன வந்த கைகலப்பாம், எழவெடுத்தவனுக அப்பனுக்கு தெரிஞ்ச கோவப்படுவான் சண்டை போட்ட காரணத்தை தவிர மத்ததே தான் பேசிட்டு கெடந்தானுக.”

“கடைசியா என்னாச்சி? சமாதானம் ஆனானுகளா இல்லயா?”

“ஹிம் மருதமவன் என்னத்த நினைச்சானோ சரின்னு போயி கூரை கட்டப்போயிட்டான்.”

“அதுதாண்டா ஒன்ன எங்கனயும் இந்த பயலுக கூட்டிட்டு போறது, ஆகாத காரியத்தையும் ஆக்கி வைக்க பொறந்தவண்டா நீ சவடா!”

“யேப்பே என்னத்துக்கு இது, இருவது சந்துக இருக்கிற ஊருக்குள்ளே இருக்கிற எல்லாபயலுகளும் நமக்கு வேண்டப்பட்டனுவக தான், அவனுகளுக்குன்னு கஷ்டமின்னு வந்தா நமக்குன்னு வந்ததுதானே?”

“ஏலேய் ஒன்னவர சொன்ன காரியத்தை விட்டு வேற என்னத்தயோ பேசிட்டு இருக்கோம் பாரு, சுப்பைய்யாசாரி சங்கிலி செஞ்சு கொண்டாந்தாட்டாரு, இந்தா பாரு, காளியத்தா’கிட்டே கொடுக்கமுன்ன ஒன்கிட்டே காட்டிபிடனுமின்னு தான் ஒன்ன தேடின்னேன்.”

“ஓ.... ஆமாலு, அவரு பத்து நாளாகுமின்னு சொன்ன தவணை’க்கு சரியா முடிச்சி கொண்டாந்துட்டாரா, அடியாத்தி நல்லாதாய்யா இருக்கு, ஒத்தக்கொடின்னாலும் கெட்டியா இருக்குலே, ஆத்தா பார்த்துச்சின்னா பூரிச்சிருமிலே,என்னோட கெழவி கண்ணமூடுறதுக்குள்ளே தாலிகொடி செஞ்சு கொடுக்கலாமின்னு பார்த்தேன், முடியலை எழவு, இப்போ வந்திருக்கிற மருமகளுகாகவது வாங்கி செஞ்சு மாட்டுன்னு சொல்லிருக்கேன், சரின்னு சொல்லிருக்கான் பய, அவங்க இந்த வருச சித்திரை திருவிழா’வுக்கு வந்தாதான் தெரியும்”

“சவடா, மவன்னு சொன்னதும் ஞாபகம் வருது, பய மருத’லே வீடு ஒன்ன வாங்கி போட்டேன்னே? அதை என்னாடா வாடகைக்கு விட்டுருக்கானா என்ன?”

“ஆமாப்பே, கீதளத்திலே குடும்பம் ஒன்னு குடியிருக்கு, மெத்தயிலே சும்மாதான் போட்டு வைச்சிருக்கான், திருவிழா எதுவும் வந்தாலும் அங்கன வந்து தங்கிருக்கனுமின்னு வைச்சிருக்கான்.”

“சவடமாமோய், ஒன்னந்தானே நானு பொழுது சாயுற நேரத்திலே இருந்து தேடிட்டு இருக்கேன்”ன்னு பெருங்கொரலெடுத்து கூப்பிட்ட முத்தையா’வே பார்க்க வெளியே வந்தான் சவடன்.

“ஏனேலே, பால் தரலன்னா மாட்டுக்கே தீனி வைக்கமாட்டியே, இப்போ என்னத்துக்கு என்னை தேடினே?”

“ஆத்தி, விசயமின்னா தானே ஒன்னை ஊரே கூப்பிடும், அப்போ நான் இந்த ஊருக்காரன் இல்லயா? நீ இப்போ எங்க வீட்டுக்கு வா, பின்னாடி கொத்து வேலை பார்க்கனும், என்னாஏது பண்ணலாமின்னு நீயே வந்து பாத்து சொல்லு.”

“சொக்கப்பா , அப்பச்சி வீடு வரைக்கு போயாந்திறேன்... நீ இங்கன இரு, கஞ்சி குடிக்க சேந்தே வீட்டுக்கு போலாம்”

“ஏமலே, மாடுகண்டுக்கு தண்ணி காட்ட இருக்கிற எடத்தை எடுத்து ரூம்பு தடுக்கப்போறியா? அப்போ ஒன்னோட மாடுகள எங்கன கட்டிப்போடுவே?”

“இருக்கிறதே இம்புட்டு இடந்தானே சவடமாமு, மூத்த பயலுக்கு வேற வயசு முப்பதை தாண்டிருச்சு, அவனுக்கு அடுத்தமாசத்திலே கலியாணத்தை நடத்தி இந்த இடத்திலே வைச்சிரலாமின்னு பார்க்கிறேன். இப்போ பொழங்கிற இடம் பத்தாதிலே? பொண்ணு வேற ஆளாயிருக்கு.....”

“வெளங்கிருச்சு, ஆக இந்த இடத்திலே ரூம்பு தடுக்கத்தான் போறே? யாற கூட்டி கட்டப்போறே? மேலக்கால் பழனி பையன் மேஸ்திரி வேலைதானே பார்த்திட்டு இருக்கான், அவனை கூட்டியே முடிச்சிருவோமா? என்ன சொல்லுறே?”

“மாமு ஒனக்கு என்ன தோணுதோ செய்யி, நானு ஒன்னியும் சொல்லலை.”

“நானு அவன்கிட்டே பேசிட்டு சொல்லுறேன், இப்போ மணி என்ன ஏழா எட்டா.. இன்னோரம் வந்திருப்பான், அவனை போயி கையோட கூட்டியாந்து எம்புட்டு ஆகுமின்னு அவங்கிட்டே விசாரிச்சுபிடலாம்.”

“சவடப்பச்சி சவடப்பச்சி, ஒன்ன சொக்கப்பச்சி கடையிலே தேடிட்டு இருக்காங்க... என்னத்தையோ காணோமா, நீ எதுவும் பார்த்தியான்னு கேட்க ஒன்ன தேடிட்டு இருக்காங்க, வெரசா போ”ன்னு சொல்லிட்டு ஓடிப்போன சீனியாத்தா பேரனோட வேகவேகமாய் சொக்ககடைக்கு ஓடியாந்தான் சவடன்.

“வா மாமு, எங்கன அப்பிடியே நைசா நழுவி ஓடிப்போயிட்டே”ன்னு குத்தலாக கேட்ட சொக்கன் மகன் வேலுவின் முகத்தை பார்த்ததும் சவடனுக்கு பயங்கரமா இருந்தது.

“என்னப்பச்சி, என்னா சொல்லுறே? எங்கன நானு நழுவி போனேன், முத்தைய்யன் கூப்பிடன்னு அவன் வீட்டுக்கு போயிந்திருதேய்ன்.”

“அதுதான் மாமு, போறப்போ என்னத்த எடுத்துட்டு போனே?”ன்னு இன்னொரு பக்கம் சொக்கனோட மூத்த மவன் சாமிக்கண்ணு குதர்க்கமா கேட்டான்.

“ஏலேய்.. என்னாடாப்பே என்ன பேச்சு பேசுறீங்க? என்னத்த நான் எடுத்து போனேன், சொக்கா என்னாப்பே நடத்துச்சு இங்கன”

“என்னத்த அப்பன்கிட்டே குறுக்கு வெசரணையே போடுறே? நீ போனதிலேயிருந்து செஞ்சு வாங்கியாந்த கயித்து சங்கிலியை காணாம், கடைக்குள்ளே தேடு தேடுன்னு தேடியாச்சு, எங்கனயும் காணாம், அப்போ என்னத்த நினைக்கிறதுன்னு நீயே சொல்லு?”

“ஆத்தி, மடப்புர மாரியாத்தா, என்னா சோதனை இது? சாமி நானு என்னத்தயும் எடுக்கல’ப்பே! சொக்கா நீயாவது வாய தொறந்து சொல்லுப்பே”

“அதுவே பேச்சு மூச்சில்லாமே கெடக்கு, நீ பேச்சுவாக்குலே ஒன்னோட தொபையி மருமக கழுத்திலே இதேமாதிரி மாட்டனுமின்னு சொன்னியாமே, அதுக்குதான் எடுத்து வைச்சிருக்கீட்டியா?”

“வேலு பார்த்து நிதானமா பேசுப்பே, ஓரேடியா கொட்டிறாதே, சொக்கன் எதான்னுச்சும் சொல்லட்ட்டும், நானு பேசிக்கிறேன்”

“ஏலே சவடா, ஒன்கிட்டே சங்கிலிய காட்டிட்டு காகிதத்திலே தான் மடிச்சி வைச்சேன், ஆனா எங்கன போச்சின்னு தான் காணலை, ஆனா இந்த பயலுக தான் தேடி பார்த்தானுக, எங்க போச்சின்னு தெரியலை’டா’ன்னு கண்ணிர் விட்டு மூர்ச்சையாகினான் சொக்கன்.

“ஏலேய் வேலு அப்பனை பிடிடா, இந்த பெருச தூக்கி போட்டு மிதிச்சாதான் உண்மைய சொல்லும், ஏய்யா ஒன்னோட தராதரம் என்ன எங்க தராதரம் என்ன? கீச்சாதி’லே இருந்தாலும் ஒன்னையும் எங்கப்பன் மதிப்பு கொடுத்து வைச்சிருந்தான் இல்ல, எப்புறம் என்ன இந்த ஈனப்புத்தி”ன்னு வார்த்தைகளாலும் கைக்களிலும் வெளுத்தான் சாமிக்கண்ணு.

“அப்பே கண்ணு, நானு எடுக்கலை’ப்பே, எனக்கு எடுக்கனுமின்னு அவசியமும் இல்லப்பே. நல்லா தேடிப்பாருங்கய்யா”

“எல்லாம் தேடி பார்த்துட்டு ஒன்னை தேடி ஆளு அனுப்பினோம்.... அன்னனைக்கு கடைகண்ணிக்கு போயி மேவேலை பார்த்து கொடுத்து சம்பாரிச்சிட்டு இருக்கிற ஒம்பையன் எப்பிடிய்யா துபாயி போனான், இப்பிடிதான் அப்பன்கிட்டே தெனம் தெனம் பேச்சை கொடுத்து காச களவாண்டு போனீயா சொல்லு?”

“ஆத்தி, இப்பிடியெல்லாம் என்மேலே பழி போடாதேப்பே, காசு இல்லன்னா திங்காமே கூட செத்து போயிருப்போமே தவிர இந்த மாதிரியெல்லாம் செஞ்சுருக்க மாட்டேப்பே... என்னை நம்புப்பே, நான் எதையும் எடுக்கலை அய்யா, சாமி என்னை நம்புய்யா”


சவடன் கைகும்பிட்டு அழுதும் அதை காதிலே வாங்கிக்காத சாமிக்கண்ணு சவடனை இழுந்து போட்டு முதுகில் குத்தி சொல்லிரு சொல்லி’ன்னு அடித்து கொண்டுருந்தான், ஊரே கூடி என்ன நடக்குதுன்னு உள்ளுக்குள்ளே விசாரிச்சிட்டு அதுகளே அப்பிடியா சேதி’ன்னு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிதுக. சவடனை இழுத்து போட்டு தள்ளி படாதபாடு படுத்தி கொண்டிருந்தனர் சாமிகண்ணுவும் , வேலுவும் அவனை அங்க இழுந்து தள்ளுவதும், இப்பிடி தள்ளியும் அடித்து கொண்டிருந்ததில் மூலையில் போயி விழுந்தான் சவடன். மூலையிலே வடை, பஜ்ஜி தின்னு போட்ட இலை பொறுக்கும் சட்டியிலிருந்து விழுந்தது சங்கிலி பொட்டலம்.

“சாமிகண்ணுண்ணே, சங்கிலி இங்கன கெடக்கு, கருமம் இந்த எழவை பார்க்கமே விட்டோம் பாரு, இப்போ ஊரே வேடிக்கை பார்த்திட்டு கெடக்காருய்ங்க, இப்போ என்னத்த பண்ணி தொலைக்கிறது?”

“ஹிம் ஹிம் செவன்னு இரு, நான் பார்த்துக்கிறேன்”ன்னு வெசக்காரபயலுக ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசி என்னத்தயோ முடிவு எடுத்தானுக.

“ஆத்தி வெவரமான பெருசு, எச்சியிலை எடுத்து போடுற சட்டியிலே போட்டு வைச்சிருக்கு பாருங்களேன்”ன்னு தீடீரென்னு அந்த சங்கிலியை பார்ப்பது போலே கத்தினான் சாமிகண்ணு. ஊருசனமெல்லாம் அட ஆமாம் இங்கன தானே கெடந்துச்சு, அதுக்குள்ளே ஏய்யா அப்பச்சியை போட்டு அடிச்சீங்க?ன்னு கேட்ட ஒருத்தனை பார்வையாலே மொறைச்சி அப்புறப்படுத்தினான் வேலு.

“வேலு , அப்பன் மூஞ்சிலே தண்ணி தெளிச்சிவிடுடா, சங்கிலி கெடச்சிட்டுச்சுன்னு சொல்லு, இந்த ஆளு மொகத்திலேயும் தண்ணி தெளிச்சி விட்டு எழுப்பு, வாங்குன அடியிலே சுருண்டு போயி கெடக்கு.”

“அண்ணே, அப்பன் எந்திருக்க மாட்டேமே மருகுதுண்ணே, என்ன பண்ணலாம்?”

“அப்பிடியே மெதுவா தோளிலே போட்டு வீடு வரை தூக்கியாந்திரு, இந்தாளை நானு அப்புறப்படுத்திட்டு கடையே சாத்தியாறேன்”

“சாமிண்ணே, சவடமாமு அவமானத்திலே வீடு போயி என்னத்தயாவது செஞ்சுக்கப்போகுதுண்ணே, அப்புறம் நாமே கஷ்டப்படணும்”

“ஏலேய் நீ என்னாத்துக்கு பயப்படுறே? அது அந்த மாதிரி செஞ்சுக்கிருச்சுன்னா நமக்கு தான் நல்லது, செஞ்ச தப்பு வெளியே தெரிஞ்சுருச்சி, அதுதான் இப்பிடி பண்ணிக்கிருச்சுன்னு நாமே தப்பிச்சுக்கலாம், அதுக்காக அவனுககிட்டே நாமே தோக்கமுடியுமா? நம்ம தராதரம் என்னத்துக்கு ஆகுறது?”

“ஹிம் நீ சொல்லுறதும் சரிதான், ஊருக்காரயங்க சவடமாமே கைதாங்கலா தூக்கிட்டு போறனுவே, வா நாமே அப்பிடியே கெளம்பிக்கோவோம்.”

வீட்டில் சவடனை போட்டதும் பர்வதப்பத்தா’கிட்டே எல்லாத்தையும் சொன்னார்கள். அதுவரைக்கும் அமைதியாய் வீடு வரை வந்த சவடன் மொணங்க ஆரம்பித்தான்.

“சொக்கா... என்னை நம்புப்பே நான் எடுக்கல, என்னை பெத்த ஆத்தா மேல சத்தியமா எடுக்கலை’ப்பே, என்னை நம்பு”

“ஏண்டா எருமையை போட்டு அடிக்கிறமாதிரி அடிச்சிருக்காங்க, ஊருக்காரயங்கே நீங்க செவன்னேன்னு வேடிக்கை பார்த்துட்டு கெடந்தீங்களா?”

“எங்கள எங்க கேள்வி கேட்கவிட்டானுக, அவனுகளா பேசிக்கிட்டு அடிச்சி போட்டானுக”

ஏஞ்சாமி ஊருக்குன்னா நீ ஓடியாடி வேலை பார்ப்பியே, இங்கப்பாரு ஒனக்குன்னு ஒன்னு ஆகியும் இப்பிடி பேசிட்டு கெடக்கானுக”ன்னு கண்ணீர் மல்க சவடனுக்கு ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தாள் பார்வதத்தா.

துக்கம் கொண்ட ராத்திரி நகரவேமாட்டேன்னு அடம் பிடிச்ச அழுத கணக்கா இருட்டி கெடந்த நேரத்திலே ஒருத்தன் கண்ணு மண்ணு தெரியாமே சவடன் வீட்டுக்கு ஓடியாந்தான்.

“ஆத்தா, அப்பச்சி, வீடிக்காத்தலே சொக்கய்யா விஷத்தை குடிச்சிருச்சி, இப்போதான் வைத்தியர் வந்து மாத்து மருந்து கொடுத்திருக்காங்க, சவடப்பச்சி ஒன்னை பார்க்கனுமின்னு சொக்கய்யா கண்ணீர் விட்டு அழுவுதுய்யா”

சேதி கேட்டு உசுரு போற வேதனையிலும் ஓட்டமாய் ஓடி சொக்கன் வீட்டையடைந்தான் சவடன்.

“அப்பே, என்னோட ராசா, எதுக்கு இந்த மாதிரியெல்லாம் பண்ணே? இது எனக்கு நடந்த அவமாணந்தானே, நீ எதுக்கு ஒனக்கு தண்டனை கொடுத்துக்கிட்டே?”

“இல்லடா, சவடா, என்னோட சவடய்யன் அதெல்லாம் செய்யமாட்டான், காசா இறைச்சு போட்டுருந்தாலும் ஒத்த பைசா எடுக்கமாட்டான்னு என்னாலே சொல்லமுடியலை பார்த்திய்யா? என் பொருள் காணாமே போனதும் ஒன்னையும் சந்தேகத்துக்கு இடமா ஆக்கிட்டேனே? அதுவுமில்லாமே கண்ணுமண்ணு தெரியாமே ஒன்ன வேற போட்டு அடிச்சி போட்டுருக்கானுக இந்த காட்டுமெரண்டி பயலுக, அதெ தடுக்கக்கூட சத்திலேமே போயிட்டேன் பாரு..... “ன்னு ஈனஸ்வரத்திலே அழுதான் சொக்கன்.

“இல்ல ஐயா, நீ சந்தேகப்பட்டுக்கிறது உண்மை இல்லையே, ஏதோ சன்னமா தோணிருக்கு அவ்வளோதானே? ஆனா என்னந்தான் அந்த பயலுக அடிச்சாலும் எனக்கிட்டே இருந்த ஒத்த வார்த்தை நான் எடுக்கலை நான் எடுக்கலை’கிறதே தவிர வேற ஒன்னும் இல்லிய்யா?”

“பொருள் கிடைச்சாலும் ஒனக்கு எனக்கும் போன மானமருவாதியை மீட்டெடுக்க முடியுமா? நீ குத்தமில்லாதவன்னு நிருபிச்சிட்டே, ஆனா நான் பண்ணின தப்புக்கு நாந்தானே தண்டனை கொடுத்துக்கனும், அதுதான் சத்தமில்லாமே செத்து போலமின்னு பூச்சிமருந்தை குடிச்சிட்டேன், ஆனா காளியத்தா எப்பிடியோ பார்த்து கத்திப்பிட்டா”

“ஆத்தி, ஒனக்கு எதுக்குய்யா இந்த தண்டனையெல்லாம்? பயலுக விவரம் தெரியாமேதான் அடிச்சானுக, பெத்தபிள்ள பிறந்தோப்போ நடந்து பழகிறோப்போ தூக்கி கொஞ்சுனோமின்னா நெஞ்சிலே மிதிஞ்சா வலிக்குமா என்ன? அதுதான் மாதிரிய்யா எனக்கு வலிஞ்சது அவ்வளோதான்”

“என்னோட சாமி, நான் இப்போ படுத்திருக்கிற நிலமையிலே இருந்து எந்திரிச்சு நிக்கனுமின்னு ரொம்ப ஆசையா இருக்குடா சவடா, ஒன்னோட காலிலே நெடுஞ்சாண் கிடையா விழுந்து கெடந்து மன்னிப்பு வாங்கினுமின்னு உசுரு துடிக்கிதுடா சவடா’ன்னு கதறியழுத சொக்கனை கட்டி தானும் கண் நனைந்தான் சவடமுத்து.

பூமி நனைக்க வானமும் அந்த தருணத்தைதான் எதிர்பார்த்து கொண்டு இருந்தது.