Friday, November 17, 2006

பாண்டியநாடு சோறுடைத்து!!!

மிக பழமையான தமிழகநகரங்களில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களில் பிரதானமான இடம் மதுரை மாநகருக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வரலாற்று ஆய்வாளர்கள் வகுத்த காலஅளவீடுகளான கிமு.களில் முந்தியே ஒரு மொழிக்கே சங்கம் வளர்ந்த பெருமைக்குரிய நகரமாகும்.



மாட மதுரை', 'மதுரை மூதூர்', 'மணி மதுரை', 'வானவர்உறையும் மதுரை', 'மாண்புடை மரபின் மதுரை', 'ஓங்கு சீர் மதுரை', 'மண மதுரை' எனப்பல்வேறு சொற்றொடர்களால் சிறப்பித்துக் கூறும் சிலப்பதிகாரம். 'மதுரைப் பெருநன்மாநகர்' என மணிவாசகர் பாடுவார் திருவாசகத்தில். 'மிக்குபுகழ் எய்திய பெரும்பெயர்மதுரை' என மதுரைக் காஞ்சி பெருமிதமுறும். 'தமிழ் கெழுகூடல்' எனப் புறநானூறும்,'பாடு தமிழ் வளர்த்த கூடல்' என இன்னுமொரு தமிழ்ப் பாடலொன்றும் மதுரையின்மாண்பினைஎடுத்துரைக்கும். (நன்றி திண்ணை)

இவ்வற்றையும் தவிர்த்து மதுரை இன்றைய நாள்களில் உணவுவிடுதிகளுக்கும் புகழ்பெற்றது என அனைத்துதரப்பு மக்களின் கருத்தாகும். அது ஒரு வகையில் உண்மையே என அந்த மண்ணைச் சேர்ந்தவன் என்றமுறையில் ஏற்றுக்கொள்வேன், பஞ்சம்பிழைக்க பெங்களுருக்கு வந்தப்போது எங்கூரு போலவே இங்கேயும் இரவில் எந்நேரமும் சிற்றுண்டி கிடைக்குமின்னு நினைத்து அந்த நினைப்பிலே மண்தான் விழுந்தது. இங்கே மிகச்சரியாக 9.30 மணிக்கெல்லாம் எல்லாக்கடைகளும் அடைக்கப்படும்.



ஆனால் எங்க மதுரையில் நள்ளிரவு ஒரு மணிக்கு நாலு இட்லிக்கு நாலுவித சட்னி,சாம்பார் ஊத்தி சாப்பிட்டு வரலாம். உணவுகளின் வியாபாரத்துக்கு இரவென்றோ பகலன்றோ எவ்வித வேறுப்பாடுகள் கிடையாது. அவ்வகையான மூன்றுவேளைகளிலும் கிடைக்கும் வரிசைப்படுத்துக்கிறேன். இவைகள் அனைத்தும் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றுப்புறத்திலே அமைந்ததுதான்.


காலை:- சிலவருடங்களுக்கு முன்னர் மதுரை மாடர்ன் ரெஸ்ட்ரண்ட்'லே வெண்பொங்கல் சாப்பிட பெரிய கீயூ'வே நீக்குமின்னு சொல்லுவாங்க. ஆனா இப்போ அந்தளவுக்கெல்லாம் இல்லை.காலை வேளைகளில் கிடைக்கும் வெண்பொங்கல்,வடை ரொம்ப நன்றாக இருக்கும். அதுவும் பொங்கலில் முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து அதிலே தூவியிருப்பார்கள். அதுவும் நாலுபேரு சாப்பிடபோயிருந்திங்கன்னா அதிலே யாருக்கு நெய்முந்திரி வந்திருக்குன்னு கண்டுபிடிச்சி சாப்பிட்டிங்கன்னா நல்லா இருக்கும். அதேமாதிரி மசால் தோசையும் ரொம்ப நல்லாயிருக்கும். தோசைக்கு தொட்டுக்கிற கிடைக்கும் மல்லிச்சட்னி,மிளகா சட்னி,புதினா சட்னி எல்லாமே நல்ல சுவையா இருக்கும். இந்த ஹோட்டல் நேதாஜிரோட்டிலே இருக்குங்க.அப்பிடியே வெளியே வந்து விசலாத்திலே ஒரு ஸ்டராங்காப்பி சாப்பிடிங்கனா போதும்.அதே நேதாஜி ரோட்டிலே இன்னோரு ஹோட்டலும் ரொம்ப பேமஸா இருந்திச்சு ஆனா இப்போ இல்லே, அதோட பேரு ஆரியபவன்.



மதியம்:- இவ்வேளைகளில் சாப்பிட நிறைய இடம் இருக்குங்க. அதுவும் தென்னிந்திய வகைகளுக்கு ரொம்ப நிறையவே இருக்குங்க. நான் சொல்லப்போறது ஒரு வடநாட்டு உணவகம், அதோட பேரு மோகன் போஜனலாயா. இங்கே நார்த்இந்தியன் தாலி'ன்னு கேட்டிங்கன்னா ஒரு பெரிய தட்டிலே நாலு சுக்கா சாப்பாத்தி தொட்டுக்க ரெண்டு,மூணு கறியும் கொடுப்பாங்க, அதுக்கு முன்னாடி அவங்க ஸ்பெசலான ரசமலாய் கொஞ்சக்காணு வாங்கி டேஸ்ட் பார்த்துறுங்க. வேணுங்கிற அளவுக்கு ரொட்டி வாங்கிசாப்பிட்டு சாதம் வாங்கி ரசமும், கெட்டிதயிரை ஊத்தி முடிச்சிட்டா வயிறு நிறைச்சிரும். அங்கேயே ஸ்வீட்பீடாவும் கிடைக்கும். இந்த விடுதி மேலக்கோபுரவாசல் வழியா வெளியே வந்திங்கன்னா அந்த பகுதி வீதியிலே தேடிக் கண்டுபிடிக்கலாம்.

இரவு:- மாலைவேளைகளில் நிறைய இடங்களிலே இட்லி,தோசையும் கிடைக்கும்.நான் சொல்லப்போறது ரொம்ப பேமஸான ஒரு ஹோட்டல், அதுவும் அரசியல் விவகாரமெல்லாம் நடந்தது. அது வேற எதுமில்லே முருகன் இட்லிகடைதான்.அங்கே போனீங்கன்னா ஒரே ஒரு ஸ்பெசல் ஐட்டமான பொடிவெங்காய ஊத்தப்பம் சாப்பிடலாம். நாங்கெல்லாம் அங்கே போனா அது மட்டுந்தான் சாப்பிடறது. ஊத்தப்பத்திலே நெய் ஊத்தி சும்மா செவக்க வேகவைச்சிருப்பாங்க, ஆர்டர் பண்ணி வரதுக்குள்ளே ரெண்டுஇட்லி நாலு சட்னி, பொடி எண்ணெய், சாம்பார் ஊத்தி சாப்பிட ஆரம்பிச்சிங்கன்னா வந்திரும். அப்பிடியே சூடா சாப்பிட்டா நல்லாயிருக்கும். இது மேலமாசிவீதியிலே இருக்கிற இம்மையிலும் நன்மை தருவார் கோவில் பக்கத்திலே இருக்கு.

கொறிக்க:- இது எல்லா ஊருகளிலும் கிடைக்கிறதுதான், ஆனா எங்க ஊருலே ஒரு ஸ்பெசலா ஜிகர்தண்டா.. இதுயென்னா கொறிக்கவான்னு கேட்கப்பிடாது. அது ஒரு டேஸ்டா இருக்கும். நல்லா வயிறு நிறைய சாப்பிட்டா இதே ஒரு கிளாஸ் அடிச்சா சும்மா சில்லுன்னு இருக்கும். அதே தயாரிக்கப் பயன்படுத்தப்படுவது பால் பொருட்களும், கடல்பாசியுக்கிறதனால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல்நலத்துக்கு கெடுதியில்லை. ஆனாலும் நம்மாளே ரெண்டு,மூணு கிளாஸ்தான் சாப்பிடமுடியும்.



இன்னோன்னு நீங்க இரயிலில் மதுரைக்கு வந்திங்கன்னா ஸ்டேசனுக்கு எதிர்தாப்பலே இருக்கிற அதாவது தங்கரீகல் தியேட்டருக்கு எதிர்ப்பாலே இருக்கிறே டவுன்ஹால் ரோட்டு முனையிலே இருக்கிற லாலா கடையிலே சுடசுட அல்வா ஒன்னே வாங்கி ஒரு விண்டை எடுத்து வாயிலே போட்டு பாருங்க. அப்புறம் மதுரையே மறக்கவே மாட்டிங்க.

Tuesday, November 14, 2006

இது ஒரு "எதிர்வினை" பதிவு

For every action, there is an equal and opposite reaction....

சர் ஐசக் நீயூட்டன் என்ற விஞ்ஞானி சொல்லிருக்காருன்னு பள்ளிக்கூடத்திலே படிக்கிறோப்போ பாடபொஸ்தகத்திலே படிச்சேன். அதுக்கப்புறமா அதே பத்தியே சுத்தமா ஞாபகமே இல்லாமாலே போயே போச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தப் பதிவே படிச்சேதும் இந்த வெள்ளைக்கார தொரை கண்டுப்பிடிச்சு சொன்ன அந்த "எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு"க்கிற தத்துவம் தீடீரென்னு மண்டையிலே பல்பு எரிஞ்ச கணக்கா வந்திருச்சு.

அவரு சொன்ன அசைவப்பதிவிலே கொஞ்சுண்டுதான் அசைவம் இருத்துச்சு, ஆனா மக்கா இது பூராவுமே அசைவம்தான், அப்புறமா படிச்சுப் பார்த்துட்டு என்னா இது பூராவும் கவிச்சியா இருக்குது நீங்க எதிர்வினை கொடுக்கப்பிடாது ஆமா... அதுக்குதான் மொதல்லே உஷர்ரா சொல்லிக்கிறேன். இதுப்பூராவுமே அசைவம்தான், என்னாடா திரும்ப திரும்ப சொல்லுறேன்னு பார்க்காதிங்க... இது எங்கூரு ஸ்டைல்ப்போய்.


எங்கூருக்கு மதுரை, மருதை.மதுரோய்,அப்பிடின்னு நிறைய பேரு வச்சு சனங்க கூப்பிடுவாங்க, அதுக்கும் காரணம், பெருமை,நாட்டுப்புறகதைகள், புராணக்கதைகள் இருக்குங்கய்யா!. இன்னொரு பெருமையும் இருக்குங்க ,அதுஎன்னானா எங்கே எந்த இடத்திலே எந்தநேரத்திலேயும் வேணுமின்னாலும் வயித்துக்கு போடுக்கிற இரை ருசியா கிடைக்குமுங்க. தூங்கநகருக்குள்ளே எங்கே சுத்துனாலும் ஒரு முக்குச்சந்துலேயாவது ஒரு பொரட்டா கடையாவது, பாட்டி இட்லிக்கடையாவது இருந்துரும். அதிலே கொஞ்சமா எனக்குத் தெரிச்சே நல்லா ருசியா இருக்கிற மூணுக்கடையே சொல்லுறேன்.

இப்போ பஸ்ஸ்டாண்டை மாத்திட்டாலும் மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு வர்றே பெரியார் பஸ்ஸ்டாண்ட்க்கு வந்துதான் ஆகணும்.அதுனாலே அதை மையமா வச்சு ஹோட்டல் வழியே சொல்லுறேன். எப்போவது ஊருப் பக்கம் வர்றப்போ இதெயெல்லாம் ஞாபகம் வச்சு கடைக்கு போயி டேஸ்ட் பண்ணிப் பார்த்துருங்க!!!!

கறித்தோசை:- பேரே கொஞ்சம் வித்தியசமா இருக்கா. இது சிம்மக்கல் கோனார் மெஸ்ஸிலே கிடைக்கும். அது எங்கே இருக்குன்னா மதுரை பஸ்ஸ்டாண்ட்க்கு அடுத்து ரயில்வே ஸ்டேசன்.. அதே ஒட்டி போகிற மெயின் ரோட்டிலே அப்பிடியே நடந்திங்கன்னா அடுத்ததா போஸ்ட்டாபீஸ் அப்பிடியே நெட்டா பிடிச்சு வந்துருக்குங்க, எங்கயும் வளையவேணாம், ஒரே நெட்டா நடத்துறே வேண்டியதுதான். கடைசியா சிம்மக்கல் ரவுண்டாணாக்கிட்டே வந்துருவீங்க. அங்கே நாலு ரோடு பிரியும் அதிலே தமிழ்ச்சங்க ரோட்டுக்கு அடுத்த ரோட்டிலே சென்ட்ரல் லைப்பேரிக்கு எதிர்த்தாப்பலே கோனார் மெஸ் இருக்கு.

அங்கே போயி உட்கார்த்திட்டு ஒரு கறித்தோசை ஆர்டர் பண்ணிருங்க. அது எப்பிடி இருக்குமின்னா ஆனியன் தோசைலே ஆனியன்க்கு பதிலா கறிவருவலே சும்மா தளதளன்னு கொழம்போட இருக்குமில்லே அதே அப்பிடியே தோசைலே போடுருப்பாங்க. சும்மா அடிப்பாகம் நல்லா செவக்க வெந்தவுடனே அதே திருப்பிப் போட்டு தோசமாவும்,கறிவருவலும் ஒன்னா சேர்ந்து வெந்து, ஆகா சூப்பரப்பு. சட்னி,குருமா எதுவும் இல்லேமே ஹார்லிக்ஸ் விளம்பரத்திலே சொல்லுறமாதிரி அப்பிடியே சாப்பிடலாம்.

வெங்காயக் குடல்:- இதுவும் நல்லா டேஸ்டியான சமாச்சாரம்தான். இது எங்கேன்னா யானைக்கல் பஸ்ஸ்டாப்க்கு முன்னாடி இருக்கிற எதிர்த்து.எதிர்த்து இருக்கிற ரெண்டு ஹோட்டலேயும் கிடைக்குமுங்க. சின்னவெங்காயத்தே பொடிபொடியா நறுக்கி, ஆட்டுக்குடலே ஃபிரை பண்ணிக் கொடுப்பாங்க, அப்பிடியே நாலு பொரட்டாவே பிச்சுப்போட்டு குழம்புக்களை ஊத்தி இதேயும் சேர்த்து சாப்பிடமின்னா ஆஹா சொகமய்யா!!!!

ஈரல் மிளகுரோஸ்ட்:- ஹி ஹி இதே எழுதுறப்போ எனக்கே எச்சில் ஊறிருச்சுங்க. இது தெற்குமாசி வீதி சின்னக்கடைவீதிலே இருக்கிற ராபியா மெஸ்ஸிலே கிடைக்கும். நாலு பெசல்பொரட்டா, பெப்பர் ஈரல் ரோஸ்ட்ன்னு ஆர்டர் சொன்னா போதும், சும்மா கும்முன்னு சாப்பிட்டு வந்திரலாம், ரோஸ்ட்லே என்னா விஷேமின்னா ஈரலே மொத்தல்லே வேகவைக்கிறப்போ வெறும் உப்பு மட்டும் போட்டு வேகவைச்சு அப்புறமா தோசக்கல்லிலே அதெ பொடி,பொடியா நறுக்கி, அதிலே நிறைய பெப்பரை போட்டு வறுத்து அது பதமா கொஞ்சக்காணு எண்ணையே ஊத்தி அதே அப்பிடியே வாழையிலைலெ கொண்டுவந்து கொடுத்தவுடனே அதிலே ஒரு துண்டை எடுத்து சுடசுட வாயிலே போட்டா ஆகா.....


ருசியா சாப்பிடுறவங்களுக்கு இன்னும் ஹோட்டல் நிறைய இருக்கு.. அதே அடுத்த பதிவிலே போடுறேன். ஆனா கோவிஞ்சுக்காதிங்க, அது சைவம்தான். மதுரையிலே இருந்துட்டு ஜிகர்தண்டா, தெற்குமாசி வீதி சுக்குமல்லி காப்பி, மாடர்ன் ரெஸ்டாரண்ட் வெண்பொங்கல் பத்திச் சொல்லலேன்னா செத்து சொர்க்கத்துக்கு போனாலும் எனக்கு சோறுத்தண்ணி கூட கிடைக்காது. அதே அடுத்தப் பதிவிலே சொல்லுறேன்.