Wednesday, February 27, 2008

நேயர் விருப்பம்

அடிக்கிற வெயிலிலே காஞ்சு கருகி போயிருவோம் போலயிருக்கே'ன்னு புலம்பிக்கிட்டே தாராபுரத்து பஸ்ஸடாண்ட்'ல் நின்றுக் கொண்டுருந்தான் தனபால். தூரத்தில் யாரோ தெரிந்தவன் போல ஏதோவொரு உருவம் அங்குமிங்கும் அலைவதை பார்த்த தனபாலுக்கு யாரு'ன்னு சட்டென்னு உரைக்கவில்லை, வயதுகளின் பெருக்கத்தில் மூக்கு மேலிருக்கும் அமர்வினை எடுத்துவராத கஷ்டத்தை பஸ்ஸ்டாண்டில் நின்று பத்தடிக்கு முன்னால் நிற்கும் பஸ்ஸில் எழுத்தை படிக்க பட்ட பாட்டை நினைத்து பொறுமி கொண்டிருந்தான். அதே உருவம் தான் நிற்கும் பக்கத்தை நோக்கியே வர உற்றுக்கவனிக்க ஆரம்பித்தான். வெகுவான ஆச்சரியத்தோடு அவனை அப்பிடியே கத்திக்கொண்டே போயி கட்டிக்கொள்ளும் அளவுக்கு பாசம் உந்த அது அவந்தானா பக்கத்தில் வந்ததும் கன்பார்ம் செய்துவிட்டு செய்யலாமென வெகு உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.

"அட தனா கண்னு, நீதானா அது தூரத்திலிருந்து பார்க்கிறப்போ யாரோ மாதிரி தெரிஞ்சயேப்பா! பாரு கும்பிடப்போன சாமியே நேரா வந்த கணக்கா இங்கன நிக்கிறே, ஒன்னப்பார்க்கதான் தாரப்புரம் வந்தேன்."

இவனா இன்னும் உசுரோடதான் இருக்கானா? தான் பார்க்கிறது கனவா நிஜமான்னு வெகுவான ஆச்சரியத்திலே அவனையே பார்த்துக்கொண்டுருந்தான் தனபால்.

"என்னா இப்பிடி பார்க்கிறே? இன்னும் நான் உசுரோட இருக்கேன்னு பார்க்கிறீயா?"

"சே ச்சே, அப்பிடி இல்லடா நாகு, நாமே சந்திச்சே பத்து வருசத்துக்கு மேலே ஆகிப்போச்சே, அதுதான் கொஞ்சம் குழப்பமா இருந்தேன்."

"நான் வேலைக்குன்னு சவுதி போயி பத்து வருசத்துக்கு மேலே ஆச்சு, ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அம்மா செத்தப்போ இங்க வந்தேன், அதுக்கப்புறம் இப்போதான் இங்கயே வர்றேன்."

"என்னாது அம்மா இறந்துட்டாங்களா? அதைக்கூட சொல்ல மாட்டியா நீயி? என்னம்மோ போடா, அந்த பிரச்சினை ஆனதுக்கபுறம் நீ சொல்லாமே கொள்ளாமே ஊரை விட்டு போனதும் எனக்கு அவ்வளவு கோவம் வந்துச்சு, நீயும் நானும் நாலு வருசத்துக்கு மேல ஒன்னா இருந்தும் அந்த பிரச்சினைக்காக அப்பிடியா ஓடிப்போறது?"

"சரி நான் முடிஞ்சு போன பிரச்சினையே பத்தி பேச வரலை, ஒன்னய பார்த்து போகலாமின்னு கோயம்புத்தூரிலே இருந்து இங்க வந்துருக்கேன், பக்கத்திலே அழகா ஒரு குட்டிப்பொண்ணு நிக்கிறாங்களே? இவங்க யாரு?"

"ஹிம், இவங்கதான் என்னோட பொண்ணு, மூணாவது படிக்கிறாங்க, பேரு சவுந்தர்யா, இன்னிக்கு சனிக்கிழமை'கிறதுனாலே அம்மணிக்கு லீவு. கோயம்புத்தூர் போறேன்னு சொன்னதும் என்னையும் கூட்டிட்டு போங்கன்னு வந்தாங்க"

"அப்பிடியா இனிமேதான் போகப்போறியா?"

"இல்ல இல்ல, போயிட்டு வந்தாச்சு, இப்போதான் பஸ்ஸிலே இறங்கி வந்து நின்னுட்டு இருக்கேன், நீ அடுத்த பஸ்ஸிலே இங்க வந்து இறங்கிறே"

"சரி இங்கயே நிக்க வைச்சு பேசிட்டு இருக்கே? வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போகமாட்டியா?"

மெல்லமாய் சிரிப்பை உதிர்த்து விட்டு பஸ்ஸ்டாண்ட் வெளியே வாகனகாப்பகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் மூவரும். வரும் வழியில் தற்போது சொந்தமாக எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பதாகவும் அதற்குண்டான ஸ்டாக் எடுக்கதான் கோவை வந்ததாகவும் நாகுவிடம் சொல்லிக்கொண்டே வந்தான் தனபால்.

"விஜி, இவந்தான் நாகராஜ், அடிக்கடி சொல்லுவேனே? அவந்தான் இவன்"ன்னு தன்னுடய மனைவியிடம் நாகராஜனை அறிமுகப்படுத்தினான்.

"நானும் இவனும்தான் ஒன்னா கோயம்புத்தூர் மில்'லே எலக்ட்ரிசியனா வேலை பார்த்தோம். கொஞ்சநாளிலே எனக்கு சவூதி'லே வேலை கெடைச்சிருச்சுன்னு அங்க போயிட்டேன்"

"ஹிம் ஒங்களை பத்தி சொல்லியிருக்காங்க, நீங்களும் இவரும் ஒன்னா திண்டுக்கல் பாலிடெக்னிக்'லே படிச்சி முடிச்சு கோயம்புத்தூர் வந்து வேலை பார்த்தது, தனியா வீடு எடுத்து தங்கினது'னு எல்லாமே சொல்லியிருக்காங்க"

தனபால் மனைவி இதை சொல்லிமுடித்ததும் சற்றே சந்தேகத்திடனே நாகராஜன் அவனை உற்று நோக்க ஆரம்பித்தான். சமையல் வேலையாய் அவள் உள்ளே போக தன்னுடைய சந்தேகத்தை கேட்டுறலாமின்னு என பேச ஆரம்பித்தான்.

"அடேய் தனா எல்லாத்தையும் சொல்லிட்டியா?"

"எல்லாமே சொல்லிட்டேன், ஆனா அந்த பிரச்சினையே மட்டும் சொல்லலை!"

"ஹிம், எப்பிடிடா இருக்கா அவ? நல்லாயிருக்காளா? சந்தோசமா இருக்கா இல்ல?"

"ஒருதடவை கோயம்புத்தூரிலே வேலை விசயமா போனப்போ அவ காரிலே போறத பார்த்தேன், என்னையே அவளும் பார்த்துட்டா போலே, கொஞ்சதூரம் போன காரை கூட திரும்ப வர்ற வைச்சி என்கிட்டே பேசிட்டு போனா, நல்லாயிருக்காளாம், பீளமேடு பக்கத்திலேதான் வீடு வந்துட்டு போங்கன்னு கூப்பிட்டா என்னாலேதான் போகமுடியல"

"ஓ, நான் அவளை பார்க்கலாமாடா?"

"இதேதான் அவளும் என்கிட்டே கேட்டா? நாகு எப்பிடியிருக்காங்க? கல்யாணம் ஆகிருச்சான்னு கேட்டா? அட நானே கேட்கமறந்து போயிட்டேன், கல்யாணம் ஆகிருச்சாடா ஒனக்கு? எங்க வீட்டை சவூதி'லே செட் பண்ணிட்டியா?"

"இல்லய்யா, அம்மாவும் எட்டு வருசமா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லி அலுத்து போயி செத்தே போயிட்டாங்க, நான் இப்பிடி பண்ணுறேன்னு அக்காவும் என்கிட்டே பேச்சை நிப்பாட்டி வருசத்துக்கு மேலா ஆகிப்போச்சு, ஒட்டு சொந்தமே என்னை புரிஞ்சுக்கலை, நான் என்ன பண்ணுறது?"

"ஹிம் என்னதான் பெரிய வருத்தமிருந்தாலும் நாப்பது வயசு வரைக்கும் கலியாணம் பண்ணாமலே'வா இருக்கிறது?"

"என்னாடா பண்ணச்சொல்லுறே? மறக்க முயற்சி பண்ணாலும் முடிய மாட்டங்கிதே? எங்க விசயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சு அவ அப்பா ரோட்டிலே வைச்சி என்னை தாறுமாறா திட்டுனது? நம்ம வேலை பார்த்த மில்'க்கே வந்து அவங்க அண்ணனுங்க அசிங்கமான வார்த்தைகள் எல்லாம் பேசி சண்டை போட்டும் அவளை மட்டும் என்னாலே மறக்கமுடியலை'யேடா!"ன்னு கண்ணோரத்தில் எட்டிப்பார்த்த ஈரத்தை மெல்லமாய் துடைத்து கொண்டான்.

"நாகு எனக்கு புரியுதுடா,, அதுக்காக நீ கல்யாணமே பண்ணிக்காமே இருக்கிறது நல்லாவா இருக்கு? இப்போ உனக்குன்னு இருந்த அம்மாவும் இல்லை, அக்காவும் பேசுறது இல்லன்னு சொல்லுறே? அப்போ வர்றப்போற காலங்களிலே ஒனக்குன்னு யாருடா இருக்கா?"

"எல்லாம் விதி படியே நடக்கட்டுமின்னு நானும் அதுப்படியே போயிட்டு இருக்கேன்"

"அப்பா அப்பா, நான் கேட்ட பாட்டை சூரியன் FM'லே போடுறாங்கப்பா'ன்னு சந்தோசமாக ஓடி வந்தாள் தனபால் மகள்

"என்னாடா இன்னுமா ரேடியா'லே நேயர்விருப்பம் போடுறாங்க"ன்னு ஆச்சரியத்தோடு கேட்டான் நாகு.

"ஆமாம், இப்போ FM ரேடியோ வந்ததுக்கபுறம் அந்த விருப்பம் இந்த விருப்பமின்னு போனிலே பேசி தள்ளுறாங்க! நம்ம காலத்திலே போஸ்ட் கார்ட்'லெ எழுதி போட்டு தினமும் சாயுங்காலம் இன்னிக்காவது நம்ம பேரை சொல்லி பாட்டு போட்டுருவாங்களான்னு காத்து கெடப்போமே"

"நீ இதை சொன்னதும் தேவி நினைப்புதாண்டா வருது. தினமும் பத்து கார்டு அனுப்புவாளே? ஒருதடவை என் பெயரையும் அவ பேரையும் சேர்த்து எழுதி காதலான தேவி, உன்னை சுற்றும் ஆவி பாட்டு வேணுமின்னு எழுதி போட்டிருக்கேன்னு சொன்னா, அது வந்துச்சான்னுகூட தெரியல."

"ஆமாம் இந்த நேயர் விருப்பம் கேட்கிறதுலே அவதானே தீவிரமா இருப்பான்னு சொல்லுவியே? நாமே தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்திலே இருந்தாலும் என்கிட்டே ஒருநாளும் பேசினது இல்லை. எப்பாவது நீயும் நானும் வெளியே போயிட்டு வந்தாலும் என்னை பார்த்தாலே அமைதியா போயிருவாளே! எப்பிடிடா லவ்'லாம் பண்ணீங்க, அதுவும் பாட்டெல்லாம் நேயர்விருப்பத்திலே போடுற அளவுக்கு பேசினீங்க?"

"அதெல்லாம் எப்பிடியோ பேசுவோம்.அவளுக்கு இளையராஜா'ன்னா ரொம்ப பிடிக்கும்,அதுவும் கார்த்திக் நடிக்கிற படத்துக்கு இளையராஜா மீயூசிக்'ன்னா ரொம்பவே விரும்பி கேட்பேன்னு சொல்லுவா! பனிவிழும் மலர்வனம் ரேடியோ'லே நேயர்விருப்பத்திலே வந்துச்சுன்னா அதிலே இவ பேரு கண்டிப்பா இருக்கும்."

"ஹிம் அவ சொன்னாதானே நீயி மூக்குக்கு கீழே கொஞ்சமா மீசைய சேவ் பண்ணிட்டு திரிஞ்சே, இப்போ என்னாடா'ன்னு காட்டான் மாதிரி கட்டு மீசை வைச்சிட்டு திரியிறே. "

"ஆமாம் அவளுக்கு கார்த்திக் பிடிக்கிறதுக்காக அப்பிடி இருந்தேன். இப்போதான் நான் தேவதாஸ் ஆகிட்டேனே? ஆனா சரியா ரோமக்கட்டு இல்லாதுனாலே தாடிதான் சரியா வரமாட்டேங்கிது"

"இன்னும் அந்த நக்கல் பண்ணுற பேச்சை விடலடா"ன்னு பேச்சுக்கு சொன்னாலும் அவனுடைய கண்கள் பனிக்க எத்தனிக்கும் தருணத்தையும் கவனித்தான் தனபால்.

"தனா நான் இங்க வந்ததே ஒன்னய பார்க்கிறதுக்கும் முக்கியமா அவளை பார்த்து விசாரிக்கிறதுக்கும் தான் வந்தேன். அவ வீட்டு அட்ரஸ் தர்றியா? நான் ஒருக்கா அவளை பார்த்துட்டு வந்திறேன்."

"அட்ராஸ்தானே தர்றேன். அதுக்கு முன்னாடி நான் இந்த எட்டு ஒன்பது வருசமா அனுபிவிக்கிற கொடுமையே நீயும் அனுபிவிக்கனும்"

"என்னடா அது"

"அட ஒன்னுமில்லடா, அம்மணி சாப்பிடக்கூப்பிடுறாங்க, வா போயி சாப்பிடலாம்."

"சரி அப்போ நான் அவளை பார்க்கிறதுக்கு ஒனக்கு ஒன்னும் ஆட்சோபணை இல்லைலே?"

"ஹிம் அதெல்லாம் இல்லை, நீ தாரளமா போயி பார்த்துட்டு வா, இப்பவே சாப்பிட்டு போயிட்டு கூட வா, நான் சாயுங்காலமா சென்னை போறேன், நீயும் என்கூட வந்தேன்னா எனக்கு கொஞ்சம் துணையா இருக்கும். ஒரு பல்ப் கம்பெனிகாரன் டீலர்ஷிப் தாரேன்னு சொல்லியிருக்கான், அவனை போயி பார்த்து பேசனும்."

மதிய உணவிற்கு பிறகு தனபாலிடமிருந்து அட்ரஸ் வாங்கிகொண்டு திரும்ப வர்றேன்னு கிளம்பி போனான் நாகராஜன். தேவியின் வீட்டை பீளமேடு'ல் கண்டுபிடிப்பதற்கு பெரிதாக எல்லாம் சிரமமபடவில்லை அவன். வீடு என சொல்லுவதை விட பெரிய பங்களா போலே இருந்தது, தயங்கி தயங்கி அங்கே போயி வெளியே நின்ற கூர்கா'விடம் தேவியை பார்க்க வேண்டி அவளுடைய அனுமதிக்கு பிறகு வீட்டுக்குள் சென்றான் நாகராஜன். பத்து வருடத்துக்கு முன்னர் பார்த்த அதேமாதிரியே இருந்தாள் தேவி. இன்னமும் படிய வாரிய கூந்தலும், மல்லிகை பூவும், மேல் நெத்தியில் சந்தனகீற்றும், இரு புருவங்களுக்கு சற்றே மேலே விரல் நுனி அளவு குங்குமமும், இப்பொழுது சற்று புதிதாக உச்சி நெற்றியிலும் குங்குமமும் வெகுபாந்தமாய் இருந்தாள். பேசுவதற்கு எந்த வார்த்தை கொண்டு ஆரம்பிப்பது'னு இருவரும் தடுமாற இருவர் வாயிலும் நல்லாயிருக்கியான்னு வந்து உதிர்த்தது.

"நான் நல்லா இருக்கேன் தேவி... நீ எப்பிடியிருக்கே? ஒன்னோட புருசன் என்ன பண்ணுறாரு?"

"எனக்கென்னா நான் மகாராணியாட்டாம் இருக்கேன், அவரு இங்க வாட்டர் பம்பு மேன்பாக்சரிங்க் பண்ணுற பிஸினஸ் பண்ணிட்டு இருக்காரு. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

"நான் சவூதி'லே ஒரு கம்பெனியிலே எலக்ட்ரிகல் டிபார்ட்மெண்ட்'லே இருக்கேன். லீவு'லே இங்க வந்தேன். வந்த இடத்திலே தனா'வே பார்க்கலாமின்னு வந்தேன். அவந்தான் ஒன்னோட அட்ரஸ் கொடுத்தான், அப்பிடியே பார்த்துட்டு போலாமின்னு வந்தேன்."ன்னு கிட்டத்தட்ட இரண்டுமணி நேரமாய் மனதிற்குள் என்ன பேசவேண்டுமென நினைத்தை அப்பிடியே அவளிடம் ஒப்பித்தான். எந்தவொரு சூழ்நிலையிலும் கண்கள் கலங்கிட கூடாது. வார்த்தைகள் வர கஷ்டப்படும் அளவுக்கு போயிறக்கூடாது'ன்னு உறுதியாக இருந்தான்.

"நீங்க முன்னப்பார்த்த மாதிரியே அப்பிடியே இருக்கீங்க, மீசைதான் பெருசா வைச்சிருக்கீங்க. இப்போ வந்த அம்மணிக்கு இப்பிடியிருக்கிறதுதான் பிடிச்சிருக்கா என்னா'ன்னு கேட்டு வெகுளியா சிரித்தாள் தேவி. ஆனால் இவனுக்குதான் கஷ்டமாக இருந்தது. இவனது முகம் போன போக்கை கவனித்த அவள் பேச்சை மாற்ற முற்பட்டாள்.

"இப்போல்லாம் கூட நான் நேயர் விருப்பத்துக்கு லெட்டர் அனுப்பிட்டு தான் இருக்கேன். முன்னாடி ஒரேயொரு கோவை ரேடியாதான், ஆனா இப்போ டிவி,FM ரேடியோ'ன்னு எல்லாத்திலேயும் இது போடுறாங்க இல்லே, எல்லாத்திலையும் லெட்டர் அனுப்பிட்டுதான் இருக்கேன்'ன்னு சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள். இன்னமும் அவளிடம் நிறையவே பேசவேண்டுமென நினைத்தாலும் நேரம் நெருங்க ஆரம்பித்ததும் தனா என்னை சென்னைக்குகூட வர சொல்லி கூப்பிட்டு இருந்தான். நான் கிளம்ப வேண்டியதா இருக்கு'னு சொல்லி அந்த இடத்தை விட்டு கிளம்பினான் நாகு.

கோயம்புத்தூர் பஸ்ஸ்டாண்ட்'லில் இருந்து சென்னை போகும் பஸ்க்கு அருகில் வெயிட் பண்ணுவதாக தனபால்'க்கு போன் செய்தான். இரவு பஸ் பயணத்திடனுடயே "நாகு தேவியை பார்த்து பேசினியா என்னா சொன்னா?'ன்னு கேட்ட தனபாலை கலங்கிய கண்களோடு பார்த்தான் நாகு.

"ஹிம் நல்லா இருக்காடா! அவ்வளவு பெரிய வீட்டிலே மகாராணியாட்டாம் இருக்கேன், சந்தோசமா இருக்கேன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிட்டே இருந்தா, இன்னமும் நேயர் விருப்பத்துக்கெல்லாம் லெட்டர் போடுறதா சொல்லிட்டு இருந்தா"

"அப்புறம் என்னாடா, நீ எதுக்கு அப்செட் மூடு'லே இருக்கே? இன்னமும் அவ நேயர்விருப்பத்திலே கேட்கிற பாட்டெல்லாம் ஒன்னாலே அவ பெயரோட கேட்கமுடியலன்னு வருத்ததிலே இருக்கியா? இப்பவே சொல்லு, இப்பவே நைட்'லே கூட நேயர் விருப்பம் வருது அதிலே அவ பெயரை சொல்லி பாட்டு போட சொல்லிருவோம்."

"உனக்கு என்ன பதில் சொல்லுறதுன்னே தெரியல'டான்னு குலுங்கி குலுங்கி ஆரம்பித்தான் நாகு.

"டேய் டேய் எதுக்கு அழுவுறே? இது பஸ்'டா, எல்லாரும் ஒருமாதிரியா பார்க்குறாங்க, என்னா ஆச்சு'னு சொல்லு"

"தனா தனா, கிளம்புறப்போ என்னை விட்டு தூரமா நின்னுட்டு அவ்வளவு நேரமா சிரிச்சிட்டு இருந்தவா அழவே கூடாது'ன்னு அவளோட உணர்ச்சிய கட்டுப்படித்திக்கிட்டு..." சொல்லி விசும்ப ஆரம்பித்தான் நாகு.

"தேவி அப்பிடி என்னாதான் சொன்னா?"

"ம்ம்..ம்ம்...ஒங்க பேரு வைச்சி கூப்பிட எனக்கொரு புள்ள இல்லாத அபாக்கியசாலியா இருக்கேன்னு சொல்லி கண்ணுலே தண்ணி வந்து அதை அடக்கமுடியாமே உள்ளே ஓடிட்டா"ன்னு சொல்லி இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தான் நாகு.

இந்த மனநிலையிலிருக்கும் நாகுவை என்ன சொல்லி தேற்றுவதுன்னு வெகுவான குழப்பதின் உச்சியில் அமைதியானான் தனபால்.பஸ்ஸில் இரவு நேரத்தில் கசியும் பாடலில் காதலான தேவி, உன்னை சுற்றும் ஆவி ஒலிக்க ஆரம்பித்தது.

16 comments:

said...

மக்கா, பின்னிட்டே.. சோக காவியம் அருமையா வருது..

said...

அருமை!

said...

முருகா முருகா...

நல்லாரு தம்பி. நல்லாரு.

said...

அருமை மாப்பி..;)

said...

Amazing man.. Keep good.

said...

வாவ் இராம்!!

கதையும் நடையும் சூப்பரு!!

ரொம்ப ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க இராம், பாராட்டுக்கள்!!

said...

இளா,

நன்றி நன்றி... :)

KTM,

நன்றி ராசா... :)

ஜிரா,

ஹி ஹி நன்றி... :)

said...

கோபி,

நன்னி மாப்பி...


விஜய்,

ரொம்பவே நன்றிங்க... :)

திவ்யா,

உங்களை மாதிரி பெரிய எழுத்தாளர்'லாம் பாராட்டுறப்போ சந்தோசமா இருக்குங்க... :) நன்றி நன்றி... :)

said...

ரெம்ப நல்லா இருக்கு.

said...

ம்... சோகம் தான்....நல்லா எழுதறீங்க கதை..

said...

சூப்பரப்பு, பின்னிட்ட போ.

said...

நாகராஜன், முத்துக்கா, கதிரு,


நன்றி! நன்றி! நன்றி!!

said...

மனதை நெகிழவைக்கும் கதை... அருமை...

said...

ரொம்ப அருமையான
சோக கதைங்க...

said...

அம்பி,
கதை நன்னா இருக்கு.

said...

கதை நல்லா இருக்குங்க.