Monday, December 22, 2008

நன்னீர் வயல்

"ஏண்டி, காலேஜ்க்கு போலியா? இன்னும் தோட்டத்திலே என்னத்த நோண்டிக்கிட்டு இருக்கே?"

"ஹிம், போவனும்! இன்னிக்கு மதியத்துக்கு மேலேதான் வகுப்பு, கொஞ்சம் நேரஞ்செண்டுதான் கிளம்பனும்"

"என்னத்தயாவது பொய் சொல்லிக்கிட்டு கெடக்காதுடீ, அந்த பய ஊருக்கு போனதுதானே ஒன்னோட சோர்வுக்கு காரணமின்னு தெரியும்"

"ஏய் ஆத்தா, என்னாத்தே, அங்கன மூலையிலே போயி பொலம்பிட்டு இருக்கே?"ன்னு சத்தம் போட்டுக்கிட்டே வீட்டிற்க்குள் சென்றாள் அங்கயற்கண்ணி, அவளை இந்த ஊருக்குள் எல்லாருக்கும் தெரிந்த பேரு, படிப்பாளி புள்ள, தமிழில் மூன்றாவது பட்டபடிப்பை படிப்பவள்.

"ஏண்டி அங்கு, காலேசேக்கு போவாமே இங்கன எதுக்கு நின்னுக்கிட்டு கெடக்கே?"

"ஏய் கெழவி, போவமாட்டே, நான் என்னத்துக்கோ நின்னு தொலைக்கேன், இப்போ நான் என்னத்துக்கு நிக்கிறேன்னு தெரிஞ்சு என்னத்த பண்ணி தொலைக்க போறே?"

"ஆத்தி மாரியாத்தா, உங்காத்தா'தான் சாமியாடி'ன்னா நீ எதுக்குடி அருளு இறங்கமே இப்போ சாமியாடுறே, மொட்டவெயிலிலே அதுவும் அறுப்பு போட்ட காட்டிலே நிக்கிறேன்னு கேட்டா கத்துறே"ன்னு சத்தம் போட்டுகிட்டே தண்டட்டி கெழவி வெலகி போனாள்.

"வாடா, வா. வா... ஊமைக்கொட்டான், ஒன்ன பார்க்கமேதான் ரெண்டு நாளா தவிச்சு கெடக்கேன்"

"ஒன்ன ரெண்டு நாளா பார்க்கமே இருந்தாதுனாலே தான் நான் சந்தோசமா இருக்கேன்"

"ஏன் பேசமாட்டே நீயி? ஒன்னப்பார்க்கமே ரெண்டு நாளா பைத்தியம் மாதிரி திரிஞ்சுட்டு இருக்கென், சும்மா இருந்தாக்கூட என்னத்துக்கு முஞ்சியே உம்முன்னு வைச்சிருக்கேன்னு ஆத்தா திட்டுது, இந்த காட்டு'லே வந்து நின்னா போறவாறதுக'ல்லாம் கேள்வி கேக்குதுக, நீ என்னாடா'ன்னா என்னை பார்க்கமே இருக்குறதுனாலேதான் சந்தோசமா இருக்கேன்னு சொல்லுறேன்னு அழ ஆரம்பித்தாள்.

"ஏலேய் லூசு பிடிச்சவளே, சும்மாகாச்சுக்கும் சொன்னாக்கூட ஒனக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துருமே, வேலை வெட்டியெல்லாம் பார்க்கவேணாமா? ஒன்னோட கண்ணு பார்வைக்கிட்டே இருக்கமுடியுமா?"

"யாரு ஒன்ன வேலயெல்லாம் பார்க்கவேணாமின்னு சொன்னா? காணாமே என்னோமோ இருந்துச்சுன்னு சொன்னேன்.. "

"ஆமா ரெண்டுநாளா என்னபார்க்கமே இருந்து பார்க்கிறேலே, அப்பிடியே ஓடிவந்து கட்டிபிடிச்சு இங்கிலிசுபடத்திலே வர்றமாதிரி ஒரு முத்தம் கொடுக்கவேண்டியதுதானே?"

"ஊமைக்கொட்டான், இந்த ஊரு ஒன்னயே எம்புட்டு நல்லவனு'ன்னு நம்புது தெரியுமா? நல்ல படிச்ச பய, அழகுசுந்தரம்'கிற பேருக்கேத்த மாதிரி கண்ணுக்கு லட்சணமா இருக்கான், சொந்த தொழிலு பண்ணுறான், அப்பன்க்கூட சேர்ந்து வெவசாயம் பண்ணுறான்னு ஒன்ன எல்லாரும் ஏத்தி வைச்சி பேசி கெடக்குதுக.. ஆனா நீ எப்பிடிபட்டவனு எனக்குல்ல தெரியும், எஞ்செட்டு பொண்ணுக எல்லாத்துக்கும் ஒம்மேலே ஒரு கண்ணு, அதுகளுக்கு முன்னாடியே நான் முந்திக்கிட்டேன்னு அவளுகளுக்கு கொஞ்சம் எரியதான் செய்யுது?"

"ஒன்னோட செட்டு'லே யாரு யாருடி? பேரை சொல்லு, கவுத்திறலாம்"

"கவுத்துற மொகறகட்டைய பாரு? செவனனே'னு இரு, இல்ல முரட்டு வைத்தியம் பார்த்துப்பிடுவேன்,

"கிழிச்சே, என்னோட மாமன்மக நீ, ஒனக்கு நானு, எனக்கு நீ'தான்னு எப்போவோ பேசி வைச்சிட்டாங்க, இவ்வளவு நாளிலே ஒருதடக்கயாவது கட்டி பிடிச்சிருக்கியா, கன்னத்திலே ஒரு முத்தமாவது கொடுத்திருக்கீயா?"

"அப்பிடியே இரு, பக்கத்திலே முள்சுள்ளி இருக்கு, ஓங்கி கன்னத்திலே போடுறேன், அத நான் கொடுத்த முத்தமா வைச்சிக்கோ"

"ஹீக்கும், நீ கொடுக்கிற முத்தம், முள்ளு சுள்ளி குத்துறமாதிரி இருக்குமின்னு சொல்லவர்றியா?"

"நெசமா நீ அடி வாங்கிட்டுதாண்டா போவே... கல்யாணத்துப்புறம் ஆண்டாள் சொன்னமாதிரி கற்பூரம் வாசனையா? இல்ல கமலபூ வாசனையா'ன்னு ஆராய்ச்சி பண்ணலாமின்னு இருக்கேன், அதுவரைக்கும் பொறுமையா இரு"

"என்னடி கற்பூர வாசனை, அது இதுன்னு சொல்லி என்னை கழுத'ய ஆக்கீட்டியா? "

"லூசு மாமா! அதுக்கு வேற அர்த்தம், ஒனக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறது? ஆண்டாள் பாசுரங்கள் மாதிரி இன்னும் எந்தவொரு பெண் கவிஞரும் தங்களோட காதலை பத்தி சொல்ல முடியாது... உதாரணத்துக்கு ஒன்னு சொல்லுறேன் கேளு.."

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னை கிழங்கொடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென் அழலைத் தீர்வேனே.

இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? தன்னை கண்டுக்காது இருக்கிற காதலன் மேலே கோவப்பட்டு, அந்த வேகத்திலே.. "

"ஹிம், அதுக்கு மேலே சொல்லு, ஏன் வெட்கமெல்லாம் படுறே?"

"காத்துக்கூட உள்ளுக்க போவாத அளவுக்கு அப்பிடியே இறுக்கி கட்டிபிடிக்கிறது'னு அர்த்தம். இன்னும் இருக்கு, அதெல்லாம் ஒன்க்கிட்டே சொல்லமுடியாது போடா"

"ஹிம், பாசுரத்துக்கெல்லாம் அர்த்தம் சொல்லிதாறே, அது எப்பிடின்னு செஞ்சுதான் காட்டுனாதான் என்னா?"

"மொகரகட்டை, அதுக்குள்ள என்ன அவசரம், அதெல்லாம் நேரம் வர்றப்போ செஞ்சல்லாம் காட்டுவோம்."

"அந்த நேரம் வாறாமே போச்சுன்னா என்ன பண்ணுவே?"

"ஒனக்கெல்லாம் என்னை பார்த்தா எளக்காரமா இருக்குலே? ஊமைக்கொட்டான் ஒன்ன வெரட்டி வெரட்டி விரும்புறதுதான் ஒனக்கு தொக்கா போச்சில்லை, இந்த ஊரு பொம்புள்ள புள்ளய்ங்கன்னா ஒங்களமாதிரி ஆளுகளுகெல்லாம் எளக்காரமாதாண்டா இருக்கு?"

"அடியேய் இத்து போனவளே, அப்பிடியா நான் சொன்னேன்"

"பின்ன எப்பிடிப்பட்ட அர்த்தத்திலே சொன்னே?

ஒங்கப்பன் என்னோட அப்பனை வெட்டிட்டு செயிலுக்கு போனாதான் தன்னோட கட்டை வெந்து சாம்பலாகுமின்னு சொல்லிட்டு திரியுது.. இதிலே எங்கிட்டு நாமே சேர்ற‌து.. ஓடிபோயி க‌ல்யாண‌ம் ப‌ண்ணிட்டு லெட்ட‌ரு போட்டுருவோமா?

"என்னான்னு லெட்ட‌ரு போடுவே? நாங்க‌ ஓடிப்போயிட்டோமின்னா? அதுக்கு நீயி எங்க‌ப்ப‌ன் க‌ழுத்திலே ஓங்கி ஒன்னை போட்டுரு, நான் ஒங்க‌ப்ப‌ன் கழுத்திலே போட்டு பின்னாடியே வ‌ந்துறேன், ரெண்டும் வ‌ய‌சான‌ காலத்திலே செவ‌னே'ன்னு இருக்காமே முறுக்கிட்டு திரியுதுக‌"

"அடிய்யே கொலைக்கார‌ பாவி, எதுக்குடி இந்த‌ ர‌த்தவெறி"

"பின்ன‌, இதுக‌ ரெண்டு பேரு ப‌ண்ணுற‌ அக்க‌ப்போரு'லே ந‌ம்ம‌ கொல‌ச்சாமி கோயிலே பானைதூக்கி பூசை ப‌ண்ணுற‌து ப‌த்து ப‌தின‌ஞ்சு வ‌ருஷ‌மா ந‌ட‌க்காமே இருக்கு, இந்த‌ வ‌ருச‌த்து வைகாசி பொங்க‌லுக்காவ‌து சேர்ந்து சாமி கும்பிடுவோமின்னு எங்காத்தா'க்கு சாமி வ‌ந்து சொன்னுச்சு, எப்பிடி ந‌ட‌க்க‌ப்போகுன்னுதான் தெரியல"

"அட‌ சாமி வ‌ந்து சொல்லிருச்சா, அப்போ ந‌ட‌ந்துரும் விடு"

"போன‌ வார‌ம் கூட‌ ஒங்க‌ப்ப‌ன் எங்க‌ தெரு ப‌க்க‌ம் போச்சு, அதுக்கு எங்க‌வீட்டு பெருசு பொறுமின‌த‌ பார்க்க‌னுமே? என்ன‌ ச‌ண்டை எள‌வ‌ம‌சுரோ, இப்பிடி கீரியும் பாம்பா திரியுதுக‌, நீ வைக்க‌ப‌ட‌க்கிட்டே சாய்ச்சினே கெட‌க்க‌தே, ர‌வை'க்கு அடிச்ச‌ குளிரு'ல உள்ள‌ ஈர‌ம் கெட‌க்கும் ஆவு கீவு இருக்க‌ போவுது"

"அதெல்லாம் உள்ளே அமைதியாதான் கெட‌க்கு, நேர‌ம் கெட‌ச்சாதான் ப‌ட‌மெடுக்கும்"

"மொக‌ர‌க்க‌ட்ட‌ய‌ பாரு, ட‌புள்மீனிங்'லே வ‌ச‌ன‌ம் பேசுறீயாக்கும், பெருசு ச‌ண்டை தீர‌ ஏதாச்சும் சொல்லு"

"என்ன‌தான் ப‌ண்ணுற‌துதான் தெரிய‌ல‌, நம‌க்கு க‌லியாண‌ம் ந‌ட‌ந்த‌தான் இதுக‌ ஒன்னுகூடுமின்னு நினைச்சேன், அது எப்போ நடக்குமின்னே தெரியல, உங்க‌ண்ணே கடைக்கு போயிருந்தேன், அதுக்கூட‌ சொல்லி பொல‌ம்பிட்டு கெட‌ந்துச்சு."

"ஏலேய், சாராய‌க்க‌டை'க்கு எதுக்கு போனே?"

"அடிய்யே, அது டாஸ்மாக்குடி, சாராய‌க்க‌டை இல்லை"

"என்ன‌ எழ‌வோ,அது ப‌டிச்ச‌ ப‌டிப்புக்கு வேற‌ என்ன‌த்த‌யாவ‌து வேல‌ய‌ பார்க்க‌மே அங்க‌ன‌ போயி சூப்ப‌ருவைச‌ரு வெல‌ பார்க்கிது"

"கா காசு'னாலும் க‌வ‌ருமெண்ட்'லே இருந்து வ‌ருது'லே"

"இன்னொரு த‌ட‌க்க‌ அங்க‌ன‌ போற‌தா கேள்விப்ப‌ட்டேன்,மிதி வாங்கிருவே.. மொத‌ல‌ அந்த‌ க‌ட்டைய‌ன் கூட‌ சுத்துற‌த‌ நிறுத்து."

"யாருடி அது?"

"அதுதான் அந்த நாலடியான், முத்தாசாரி ம‌வ‌ன்"

"அவ‌ன் என்ன‌ ப‌ண்ணினான் ஒன்ன‌? என்னிக்கோ ஒருநா தொண்டை ந‌னைப்போம், அதுக்கூட‌ ஒன‌க்கு பொறுக்க‌ல‌யா? அவ‌னை சொன்ன‌தும்தான் ஞாப‌க‌ம் வருது? எங்க‌டி நான் கொடுத்த‌ மீன் டாலரை"

"இருக்கு, ஏன் போட்டுதானே இருக்கேன்"

"ஹிம், அவ‌ங்கிட்டே பெச‌லா செய்ய சொன்னேன்"

"என்ன‌ பெரிய‌ பெச‌லு, அதுலே"

"நிச மீனு மாதிரி துள்ளுது'லே, உள்ளுக்குள்ளே கெட‌க்குற‌ப்போ ரெண்டு ப‌க்க‌த்திலேயும் தொட்டு ம‌ணிய‌டிக்கும் பாரு"

"ச்சீய்ய், அதுக்குதான் அன்னிக்கு வாங்கியாந்து இப்போ ச‌ங்கிலியிலே மாட்டிக்க‌ன்னு அட‌ம்பிடிச்சியா, ராஸ்க‌ல், பார்க்க‌தான் ஊமைக்கொட்டான்,ஆனா செய்யுற‌ வேலை பூராவும் க‌ள்ள‌த்த‌ன‌ம்"

"எப்பிடி அய்யவோட திற‌மை... எப்ப‌வும் என்னை நினைச்சிட்டே இருக்குற‌மாதிரி கொடுத்துருக்கேன், அப்பிடியே நீயும் உன்னை நினைச்சிட்டே இருக்குற‌மாதிரி இறுக்கி ஒன்ன கொடேன்"

"போடா நீ சொன்ன‌திலே இருந்து கூசிட்டே இருக்கு,ஒன்ன‌ப்ப‌ர்க்க‌ வெக்க‌மா இருக்கு, நான் வீட்டுக்கு போறேன்"

"அடியேய், இருடி, ஓடாதே, நம்ம‌ க‌லியாண‌த்துக்கு ஏதாவ‌து வ‌ழி இருந்தா சொல்லிட்டு போ"

"சாமி சொல்லிருச்சு'லே, ந‌ட‌க்கும் பாரு"னு வ‌ர‌ப்புதாண்டி ஊருக்குள் ஓடினாள் அங்கு.

அதன்பின்னர் தினமும் சந்திப்பதும்,பொய் சண்டையிட்டு கொள்வதுமாய் கழிந்த நாட்களில் ஒரு வெள்ளிக்கிழமையில் அங்கு வீட்டில் பெரிய களேபரம் ஆனது. ஊரிலே இருக்கும் அனைத்து மக்களும் அவளது வீட்டினில் கூடினர். சாதரணமாக செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் அங்கு'வின் அம்மா சாமியாடி குறி சொல்லுவாள். அதை சுற்றியுள்ள மக்கள் தங்களது குறைதீர்க்க வந்து அதை கேட்டு செல்வர். என்றும் இல்லாத அந்த வெள்ளிக்கிழமையில் அங்கு'விற்கே சாமி வந்திறங்கியது.

"ஏண்டி, இம்புட்டு படிச்சிருக்கா, இவளுக்கா சாமி வந்து இறங்கிருக்கு?"'னு யாரோ கேட்க

"ஏன் சாமி, படிச்சவ, படிக்கதாவா, தாலியறுக்காதவ, அறுத்தவா'னு பார்த்தா வந்திறங்கும்"ன்னு இன்னொரு பெண்மணி வாயடைத்தாள்.

"தாயே, எந்த ஊரு சாமியாத்தா நீ? அவ கலியாணம் ஆவாத கன்னிபொண்ணு'ம்மா, அவளை விட்டு மலை ஏறிருமா"ன்னு ஊரு பூசாரி அங்கு மேலே விபூதி அடிச்சிகொண்டுருந்தார்.

"நானு எதுக்கு ஏறனும், எனக்கு பூசை போட்டு எத்தனை நாளாச்சு, காலம்காலமா செஞ்சுட்டு ஒறமொறய ஒழுங்க செஞ்சீங்களா"

"தாயே, அது அங்காளி,பங்காளி,மச்சான்மாமனு உறவு வைச்சி முறை செஞ்சு பூசை பண்ணுறதுமா, இதுகதான் சண்ட போட்டுக்கிட்டு திரியுதுக, எங்கனம்மா பூசை வைக்க?"

"அந்த வம்ச உறவுமுறைக எல்லாரும் செழிக்கனுமின்னா படைய(ல்) போட்டு பூச பண்ண சொல்லு"

"ஆகட்டும்மா, இனிமே வருசவருசம் மச்சான், மாமான்னு உறவுமுறை மாத்தி பானை தூங்கியாந்து படையல் வைக்க சொல்லுறேன்'ம்மா"ன்னு அங்குவுக்கு சாமிய மலையேத்திய பூசாரி அங்குவின் அப்பாவிடம் பேசலானார்.

"ஏலேய், அய்யா, ஒங்களுக்குள்ளே இருக்கிற பிரச்சினைக்கு ஒங்களுக்கு பொறந்த இந்த புள்ளக வாழ்க்கையிலே சீவிக்கவிட பண்ணிறாதிங்கய்யா, ஒன்னோட மவனும் கலியாணம் ஆவலை, இந்தா ஒன்னோட மவளுக்கும் கலியாணம் ஆவல, கலியாணம் ஆவாத பிள்ளக்கெல்லாம் சாமி இறங்க கூடாதுய்யா, இறங்கி தங்க ஆரம்பிச்சிருச்சான்ன அப்புறம் போகவே போவாது, ஒன்னோட மச்சானை சமாதானப்படுத்தி வர்ற வைசாசி'லே பூச போட வழியே பாருங்கய்யா, அவனும் மூத்தபொண்ணை இப்போதானே கலியாணம் முடிச்சி வைச்சிருக்கான், கல்யாண வயசிலே பையன் வேற வைச்சிருக்கான், நான் சொல்லுறத சொல்லிட்டேன், வம்சம் தளைக்கிறதுக்கு வழியே பாருங்க"ன்னு முழங்கி முடித்தார் ஊர் பூசாரி.

அடுத்து வந்த வைகாசியிலே ஊரே திரண்டு அந்த கிராமத்து மாரியம்மன் கோவிலில் பூசை போட்டு கொண்டுருந்தது.

"ஏண்டி, ஒனக்கு எப்பிடிடீ தீடீரென்னு சாமியெல்லாம் வந்து இறங்குச்சு, படிச்ச படிப்பு பத்தலன்னு டாக்ட்ரெட்'லாம் பண்ணிட்டு இருக்கே? ஒனக்கா சாமி வருது?'னு அழகுசுந்தரம் கேள்வி கேட்டான்.

"காரியம் சாதிக்கனுமில்ல, சாமியாடிறது பெரிய வித்தையா என்ன, கண்ண மூடிக்கிட்டே கைக்கால ஆட்டி கத்த வேண்டியதுதானே, சின்னவயசிலே இருந்து எங்காத்தா ஆடுறத பார்த்திட்டுதானே இருக்கேன்"

"அடிப்பாவி அது பொய் சாமியா???"

"ஆமாம், அதுக்கு என்ன இப்போ?"

"திருட்டு சிறுக்கிடீ நீயி? ஒங்கப்பனை எதுக்குடி அடிச்சே?"

"எத்தனி நாளு கோவம் தெரியுமா, எப்போ பார்த்தாலும் எல்லாத்துக்கும் மொரண்டு பிடிச்சிட்டு திரிஞ்சது, இப்போ ரெண்டு அடிய போட்டு, வம்சம் செழிக்க வழிய பாருன்னு சொன்னதும் ஒழுங்க செஞ்சுருச்சு பாரு, ஒங்கப்பன் அங்க இல்ல, இருந்துருச்சுன்னா அதுக்கும் ரெண்டு விழுந்திருக்கும்"

"அடிபாவீ.. சாமியாடுற பொம்பளக எல்லாம் உண்மையான சாமில்லாம் வந்து இறங்கி ஆடுறது இல்லய்யா? அப்பிடின்னா இப்போ அடிக்கடி சொல்லுவியே கோதைன்னு, அந்த சாமிய ஒனக்குள்ளே இறங்கி ஒரு ஆட்டத்தை போட சொல்லு? கற்பூரமா, கமலமா'னு கண்டுபிடிச்சிறலாம்"

"ஊமைக்கொட்டான், ஒன்னயும் இந்த ஊரு நல்லவன்னு நம்பிட்டு திரியுது பாரு'னு சிரிக்க ஆரம்பித்தாள் புது மணப்பெண் அங்கயற்கண்ணி அழகுசுந்தரம்.

Thursday, October 9, 2008

பெங்களூரூம் சிங்கபூரும்

சொந்த நாட்டை பிரிந்து வந்ததில் சிறிய வருத்தமும், சோகமும் சில சமயங்களில் சூழத்தான் செய்கிறது. படிப்பை முடித்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டாலும் பொட்டி தட்டும் வேலையிலிருந்து கொண்டு இப்பொழுதுதான் முதன் முறையாக வெளிநாட்டு வேலைக்காக சிங்கப்பூர் வந்திருக்கேன்.

சிறிது வருடங்களுக்கு முன்னர் பெங்களூரூ'ல் வேலையில் சேர்வதற்கு மதுரையிலிருந்து கிளம்பும் முன்னர் இருந்த சலனமான மனநிலை, பெங்களூரூ'லில் இருந்து சிங்கப்பூர் கிளம்பும் போதும் அதே மனநிலை நீர்க்காமால் இருந்தது. அன்றைய நாளில் இருந்தே அதே சொந்த ஊரை விட்டு பிரியும் சோகமும்,வருத்தங்களும் இருந்ததுக்கு பல காரணங்கள் உண்டு.

மதுரையோ அல்லது சென்னையிலோ வேலை பார்த்திருந்தால் இந்தளவுக்கு மற்ற மொழிகளை கத்துக்கனுமின்னு தோணியிருக்குமான்னு தெரியவில்லை. வேலைக்கு கிளம்பும் பொழுதோ இல்லை திரும்பி வரும் பொழுதோ பஸ்ஸில் உருப்படியாக இந்த இடத்துக்கு ஒரு டிக்கெட்'ன்னும், இறங்க வேண்டிய இடம் வந்ததும் தயவு செய்து சொல்லுங்கன்னு கன்னடத்தில் பேசவேண்டியதை மனப்பாடம் செய்துக்கொண்டே போனதினால் கூட அந்த ஊர்பாசம் வந்திருந்துக்கலாம்.

வழக்கமாக செல்லும் பஸ்ஸை தவறவிட்டதினால் ஏதோவொரு பஸ்ஸில் ஏறி எங்கயோ ஏறி எங்கயோ இறங்கிவிட்டேன். ஆபிஸ் இருக்கும் ஏரியா'வுக்கு செல்லும் பஸ் என எல்லாத்தையும் விசாரித்து தவறான பஸ்'ஸில் ஏறிவிட்டு கண்டக்டர் பாதி வழியில் ஓடும் பஸ்ஸில் இறங்க சொல்லி கத்த நானும் இறங்குறென்னு ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து ரோட்டில் தவறி விழுந்து, நொடியில் மரணம் என்பதை அன்றுதான் என்பதை புரிந்துக்கொண்டேன். ஆண்கள் இறங்கும் வழியில் இறங்க சொல்லி தானியங்கி கதவில் இறங்கும் பொழுதே அது மூடி விட தடுமாறி ரோட்டில் விழுந்து எழுந்திருக்கும் நொடி பொழுதில் பின் சக்கரம் தலையில் ஏறுவதற்கு மில்லி நொடிகள் இருந்தது. எப்பிடியோ தட்டு தடுமாறி எழுந்து கைகளில் கிடைத்த சிராய்ப்பு, முகம் முழுவதும் படர்ந்த தூசியும் தட்டிவிட்ட அதே நொடியில் வேடிக்கை பார்த்தவர்களும் விலகிபோயினர். அந்த நிமிடத்தில் கண்கள் இருண்டு, கை கால்கள் எல்லாத்திலும் சத்து குறைந்தாய், அழுகை வருவதற்குண்டான மனம் கலங்கியது. அந்த பெரிய கூட்டத்திலும் ஒரு கன்னடத்து பெண்மணி பேசிய ஆதரவு வார்த்தைகளுக்கு பின்னொரு நாட்களில் அர்த்தம் புரிந்தபொழுதுதான் அழுகை வெடித்து சிதறியது. சமயங்களில் அந்த இடத்தை கடக்கும் பொழுது மனது சிறிதாய் சலனப்படும்.

காவிரிப்பிரச்சினையில் நடைப்பெற்ற கடையடைப்பின் பொழுது சாப்பாட்டுக்கு பட்டப்பாடு'ஐ நினைத்து பார்த்தால் இன்னும் சற்றே கலக்கமாக இருக்கிறது. நடிகர் ராஜ்குமார் இறந்த பொழுது இங்கேயிருந்தால் சாப்பாட்டுக்கு சிங்கிதான் என ஊருக்கு கிளம்பினோம், பஸ் போக்குவரத்தை நிறுத்தி வைத்துவிட்டதால், ரெயில் பிடித்து செல்லலாமின்னு கார்ப்பரேஷன் சர்க்கிளிலிருந்து ஸ்டேசனுக்கு நடந்து சென்றோம். கலவரகாரர்கள் தமிழிலில் பேசி செல்பவர்களை அடிக்கிற மாதிரி வர, கன்னடம் சரியாக தெரியாத நாங்களோ எதுக்குடா வீட்டை விட்டு வெளியோ வந்தோமின்னு உள்ளுக்குள் உதறிய உதறலில் பூனை நடையாய் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். எப்பிடியோ எவ்வளவோ கஷ்டப்பட்டு வாயை கட்டுப்படுத்தி ஒரு வார்த்தை கூட பேசமால்தான் நடந்ததோம். பேருந்து நிறுத்தங்களிலில் இருந்த வினைல் போர்டுகளும், மின் விளக்குக்களும் உடைத்து எறியப்பட்டன, அந்தவொரு தருணத்தில் நாங்கள் நடந்து சென்ற பக்கத்திலிருந்த டியூப்-லைட் தூரத்திலிருந்து எறியப்பட்ட கல் அந்த லைட்'ஐ உடைத்து சிதற்றிற்று, மறுபடியும் நொடிபொழுது மரண கணம் மனதில் வந்து போனது.

மேயப்போகும் மாடு மிகச்சரியா கழனிபானையை தேடி போயி குடிப்பது போல் காலை எழுந்ததும் தங்கியிருந்த ஏரியாவுக்கு அருகில் இருக்கும் டீக்கடையில் டீ குடிந்தால்தான் அந்த நாளே முழுமை அடையாது. எத்தனை மணிக்கு எழுந்தாலும் அப்பிடியே முகத்தை கழுவி நேராக அந்த கடைக்கு சென்றுதான் நிற்கும். நான் வந்திருப்பது அவனுக்கு தெரிந்தாலும், கண்டுக்காமால் எல்லாத்தையும் கவனித்துவிட்டு "ஏனூ பேக்கு"ன்னு கேள்வி கேட்டதும் என்னை அறியாமாலே சிரித்துவிட்டு "நன்னுக்கு ஏனு பேக்குத்தாய்தோ அதே கொடி"ன்னு சொன்னதும் "ஏய் மகா ஒந்து பெசல் டீ ஆக்கோ"ன்னு சொல்லி மறுப்படியும் சிரிப்பான். எனக்கு தெரிந்த அரைக்கொறை கன்னடத்தில் அவனிடம் பேசும் பொழுது சிரித்துக்கொண்டே பதில் சொல்லிக்கொண்டே இருப்பான். கிளம்பி வரும் பொழுது அவனிடம் போயிட்டு வர்றேன்னு சொன்னதும், அவன் முகத்தில் தோன்றிய அந்த கவலையும், எனக்கு எல்லாத்தையும் பிரிவதில் பெரிய வருத்தமும் இருந்தது. அதே கடையில் உக்கார்ந்து வெண்குழல் ஒழிப்பு போரட்டம் செய்யும் பொழுது கவனித்து கொண்டே செல்லும் அந்த பகுதி டாக்டர், எனக்கு காய்ச்சல் வந்து அங்கு ஊசி போட சென்றால், அவரிடமிருந்து வரும் ரிக்கார்ட் ஸ்டேட்மெண்ட் இங்கே கட்டாயமாக சென்சார்ட்... :)

இன்னும் எழுதுவதற்கு எத்தனையோ இருந்தாலும் பெங்களூரூ'ஐ விட்டு கிளம்பும் பொழுது ஏர்போர்ட் டாக்ஸிலில் இருந்த அந்த அத்தனை நொடிகளும் இன்னும் என் மனதில் அப்பிடியே செல்லரிக்கிறது. சிங்கப்பூர் விடியக்காலை வந்திறங்கிய நொடியிலிருந்து பார்க்கும் எல்லாரிடமும் "I am really missing my Bangaluru"ன்னு சொல்லிக்கொண்டே இருந்தேன். செத்தால் புதைக்கப்படும் மண் மதுரை என்பது உறுதி என்பதினாலும் அந்த மரண கணங்களையும், வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்வதற்கு கற்று தந்த பெங்களுரூ'ஐ உண்மையாகவே மிஸ் செய்கிறேன்.
பெங்களூரூ ஏர்போர்ட்'ல் எடுத்த படம்... இந்த மாதத்து பிட் போட்டிக்கு இந்த படத்தை இன்னும் கொஞ்சம் டிக்கரிங் பண்ணி அனுப்பி வைக்கனும்....


சிங்கப்பூர்:-


இங்கு வந்து சேர்ந்தவுடனே போன் பண்ணுங்கன்னு கோவி.கண்ணா'ண்ணே மெயில் போட்டுருந்தார். கடைசிக்கட்ட பரப்பரப்பில் அவர் எண்ணை குறித்துக்கொள்ள தவறிவிட்டேன். அலுவலகம் வந்து சேர்ந்து எல்லா ஃபார்மாலிட்டிஸ்ம் முடித்து பொட்டியை தொறந்து இனிய பயணத்துக்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்து அண்ணனுக்கு போன் செய்தேன். ஹலோ சொல்வதற்கு முன்னரே "இராம் சொல்லுங்க, நல்லாயிருக்கீங்களா"ன்னு பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கினார். அதுவுமில்லாமல் இங்கயிருக்கும் அனைத்து சிங்கைபதிவர் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து மாலைவேளையில் நான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு நேராகவே சந்திக்க, ஜெகதிசனோடு வந்தார். அதன்பின்னர் ஜோசப், விஜய் என எல்லாரும் ஒன்றாக ஒன்று கூடி இந்த வலையுலக புஜபல பராக்கிரமங்களை அளாளவிக்கொண்டுருந்தோம். பேச்சு வாக்கில் அவருக்கு முன்னரே நாந்தான் முதலில் பிளாக் ஆரம்பித்திருக்கேன்னு சொல்லி வைத்தேன். அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது நிஜார் எக்ஸ்பிரஸில் எழுதிய மாதிரி உள்ளங்கை மாங்காணி தான்... :) வந்த முதன் முதல் நாளில் இருந்தே என்னை ஆள் கொள்ளவிருந்த தனிமையை விரட்டிய அவர்கள் அனைவருக்கும் நன்றி என ஒன்றை வார்த்தை சொல்லி அவர்களிடமிருந்து என்னை தனிமைப்படுத்திகொள்ள என்னால் முடியாது.

In Room


இன்னும் தங்கியிருப்பது ஹோட்டல் என்பதினால் இங்கே சரிவர நெட் இணைப்பு கிடைத்தப்பாடில்லை. புதிய அலுவலகத்திலும் எந்தவொரு அக்சஸ்'ம் இல்லாததினால் கொண்டு வந்த புத்தகங்களோடும், ஒவ்வொரு இடமாக சுற்றிவருவதாகவும் பொழுது போகிறது. நம்ம ஊரு பழக்கமான சுதந்திரமான கட்டுப்பாடு இங்கே செல்லுபடியாகவில்லை. சாலையை கடக்க பொறுமையாக ஐந்து நிமிடங்கள் நிற்கிறார்கள், யாரு என்ன கேள்வி கேட்டாலும் சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறார்கள், லிட்டில் இந்தியா'வே தவிர முழு சிங்கப்பூரையும் சர்வ சுத்தமாக வைத்து இருக்கிறார்கள்.

Little India

டிரைபேட் எடுத்துட்டு வரலை... :( தீபாவளி முடியுறதுக்குள்ளே வாங்கி இதே இடத்திலே இன்னொரு படம் எடுக்கனும்.
இவர்கள் பேசும் இங்கிலிபிசு'ம், தமிழில் பேசும் பொழுது கொப்பியும் பொத்தால் உச்சரிப்பும், ரெயிலை MRTதான் சொல்லனுமின்னு இவர்களின் கட்டாயப்படுத்தலும் கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கு. ஹிம் போக போக எல்லாம் சரியா போயிரும் போலே இருக்கு'லா.... :))

Monday, August 18, 2008

பெங்களூரூ மலர் கண்காட்சி - படங்கள்

பெங்களூரூ மலர்காட்சியில் எடுக்கப்பட்ட சில படங்கள் உங்கள் பார்வைக்கு..


மலரால் வடிவமைக்கப்பட்ட வீணை. (Mobile Camera'லே எடுத்தது) இந்த பக்கத்திலே வர்றோப்போ என்னோட SLR Camera'லே Battery காலி..... :(((மலர் சாலை...


Contrast Flowers
போட்டோ'லே மட்டுமில்லை, நேரா பார்க்கிறோப்போ செம அழகு, Such a Pleasant looking.

இனி வரப்போற படங்கள் எல்லாமே Macro Mode'லே எடுத்தது, எல்லா மலர்களும் சுண்டு விரல் அளவுக்கூட கிடையாது, Tricky Macro method'லே எடுத்த போட்டோஸ்...

ஒரிஜினல் Macro lens விலையே கேட்டா மயக்கமே வந்திருச்சு... :(


மலர்வட்ட மையத்தில் தேன் குடிக்கும் தேனீ...நம்ம சுண்டு விரல் நகம் அளவுக்குதான் இந்த பூ சைஸ்... :)

இன்னும் குளோசா போயி எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும்.


வெள்ளையும் மஞ்சளும்...


ஊதா??'வும் மஞ்சளும்...


ரெட்டை இலை.....


பின்னாடி நிக்கிற தேனீ இந்த பூவுக்கு வருமின்னு ரொம்ப நேரம் வெயிட் பண்ணி பார்த்தேன், கடைசி வரைக்கும் வரவே இல்லை... :(
DOF நல்லா வந்திருக்கா?

இன்னும் நிறைய படம் எடுத்திருக்கேன், PP பண்ணத்தான் டைம் இல்லை, டைம் கிடைச்சா 2nd பார்ட் போடுறேன்.

Saturday, August 16, 2008

ஆர்வகோளாறும் படப்பொட்டியும்.

சனிக்கிழமை காலையிலே பொழுதுப்போக்க நினைச்சப்போ கிடைச்ச படப்பொட்டியும், ஒரு அப்பிராணி எறும்பும் கிடைச்சுச்சு, மேக்ரோ முறையிலே இருக்கிற லென்ஸ் திருப்பி வைச்சி, அப்புறம் லென்ஸ் மேலே இன்னொரு லென்ஸ் வைச்சி போட்டோ எடுத்தாச்சு, ஆனா என்ன கொடுமைன்னா நான் பண்ணின அக்கப்போரு'லே அந்த மாடலான எறும்பு தன்னுயிர் ஈந்துவிட்டது.

அந்த புண்ணிய ஆத்மா'க்காக ரெண்டு நிமிசம் மவுன அஞ்சலி செலுத்திட்டேன், நீங்களும் அதை செய்யுங்களேன் பிளிஷ்...
எறும்பு எங்கயிருக்குன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்..இன்னும் குளேசப் ஷாட்'லேயாவது தெரியுதுன்னு பாருங்க..

Friday, August 15, 2008

அய்யனார் துணையோடு போட்டிக்காக....

SLR கேமிரா வாங்கி வைச்சு சாம்பிராணி போடாத குறையாக சும்மா கெடந்துட்டே இருக்கு, உருப்படியா நாலு போட்டோ எடுத்து Filckr'லே போடலாமின்னு பார்த்தா கிடைக்கிற டைம்'ஐ உபயோகப்படுத்த தெரியல.

அதுதான் கடைசி நேரத்திலே போட்டிக்காக அய்யனார் துணையோடு போட்டிகளத்திலே குதிச்சாச்சு.

திருகோஷ்டியூர்-பட்டமங்கலம் ரோட்டிலே போனவாரம் ஞாயித்துக்கிழமை எடுத்தது. கேமரா'வே எடுத்ததும் அந்த ஊரு பெருசு சவுண்ட் விட்டுச்சு, வேற என்ன பண்ண ? வண்டியை பின்னாடி எடுத்துட்டு போயி 200MM லென்ஸ் போட்டு எடுத்தது.

நல்லா வந்துருக்குன்னு'கிற நம்பிக்கையிலே இந்த மாதத்து போட்டிக்கு...

அய்யனார்

இது இங்கன பெங்களூரூலே innovative multicity'ன்னு Hollywood studio மாதிரி பெரிய Theme park ஓப்பன் பண்ணியிருக்காங்க, அந்த வாசலிலே எடுத்தது.
என்னோட அக்கா பையன் வினித் குமார், செம சார்ப் கண்கள், இவனை 20 வருசம் மாடல்'ஆ காண்ட்ரெக்ட் பேப்பர்'லே சைன் வாங்கியிருக்கேன்... :)

Innocent Expression


ஏதோ டிரை பண்ணினது...

Glittering Gold Clock

Film City Entertainer.

Theme park Entertainer

பெங்களூரூ லால்பார்க் Glass house:-

Bangalore Lalbagh Glass house


அனைத்து படங்களும் என்னுடைய ஆஸ்தான குரு CVR அவர்களுக்கு சமர்பணம்.... :)

Saturday, July 5, 2008

கேள்வி-பதில்களும்.... கேள்விகளும்..!

இம்சையக்காவின் இம்சையான நாலு கேள்விகளுக்கு என்னாலே முடிஞ்ச அளவுக்கு பதில் சொல்லியிருக்கேன். கொஞ்சம் விவகாரமா கேட்டாலும் பதில் சொல்லுறப்போ நிறைய கூல்'ஆ பதில் சொல்லியிருக்கேன்... பெங்களூரூலே குளிர ஆரம்பிச்சிருங்க.... ஹி ஹி ஹி

1. 'சின்னத்தல'-ன்னு பேரு வாங்கிட்டு வா.வ.சங்கம் பக்கம் எட்டிப் பாக்காமலே இருக்கீங்களே ஏன்?

அப்பிடியெல்லாம் இல்லை. ஆபிஸ் வேலை கொஞ்சம் அதிகமாக இருந்ததுனாலே சரியா பங்கெடுக்க முடியலை. ஆனா சங்கத்தோட இரண்டாம் ஆண்டு போட்டிக்கான வேலைகளிலே மற்ற சங்கத்து உறுப்பினர்கள் கூட வேலை செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன்.

2. ஒரு பெரிய ப்ரொபஷனல் கொரியர் ச்சே... ப்ரொபஷனல் போட்டோகிராபர் ஆயிட்டு வரதால இந்த கேள்வி. பின்நவீனத்துவமா புலிக் கவுஜ, எலிக் கவுஜனு எழுதற உங்களால பின்நவீனத்துவமா போட்டோ எடுப்பது எப்படினு சொல்ல முடியுமா? அதில் புனைவு ஃபோட்டோ கூட முடியுமா? அப்படியே புனைவு, பின்நவீனத்துவம்னா என்ன அது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னு மூத்தப் பதிவர் நீங்க சொன்னா எங்களை மாதிரி தெரியாத ஆளுங்க தெரிஞ்சுக்குவோம்.


போட்டோ எடுக்கிற பைத்தியம் காலேஜ்'லே படிக்கிறப்பவே வந்துருச்சு, இங்கன வந்ததுக்கப்புறம் நம்ம குரு CVR கூட சேர்ந்ததும் கொஞ்சம் முத்தியே போச்சு.. அப்புறம் பின்நவினத்துவமான் போட்டோ எடுத்துட்டு சொல்லுறேன்.

புனைவு'ன்னா எனக்கு முழுசா தெரியாது. தெரிஞ்ச வரைக்கும் சொல்லனுமின்னா "கொஞ்சமான உண்மைதகவல்களை வெச்சு மிகைப்படுத்தி எழுத்துக்களை சிருஷ்டிக்கிறதுக்கு தான் புனைவு". இது சரியா தப்பான்னு மத்தவங்க சொல்லட்டும்.

பின்நவினத்துவத்துக்கும் விளக்கம் சொல்ல ஆரம்பிச்சா பத்து பக்கத்துக்கு எழுதனும்... நான் அதுக்கு உண்மைதமிழன் இல்லை. ஹி ஹி

பின் நவினத்துவத்துக்கும் புனைவுக்கும் உள்ள வித்தியாசமின்னா "பின் நவினத்துவ எழுத்துக்கள் படிக்கிறவன் இன்னும் பத்து இருபது வருசம் கழிச்சு எழுத்து முறை இப்பிடிதான் இருக்குமோ'ன்னு தலை பிச்சிக்க வைக்கனும்"

புனைவு கதைகள் படிக்கிறவனுக்கு சிறிய உண்மைதகவல்களை வைச்சிக்கிட்டு இடம்,காலம் எல்லாத்தையும் துல்லியமாக எழுதி வாசகனின் நம்பகதன்மைக்கு எடுத்து செல்லனும்.

இப்போ ரெண்டுக்கும் உள்ளே வித்தியாசம் புரியுதா??? :))


3. காதல் பத்தி என்ன நினைக்கறீங்க? ரஞ்சனி மகாவுடனான பேச்சு வார்த்தை எந்த அளவில் இருக்கு?

அது சரி.... அதெல்லாம் உங்களைமாதிரியான இம்சை புடிச்சவங்க உருவாக்கிய புனைவுதானே??? அது அப்பிடியே அந்தளவு'லே தான் இருக்கு.... :))

4. வலையுலகுக்கு வந்தது மூலம் உங்களுக்கு கிடைச்சதா நினைக்கற விஷயங்கள் என்ன?

ஆபிசு'லே 40 மணி நேரம் பொட்டி முன்னாடி உக்கார்ந்து இருக்கிறத தாண்டி வீட்டிலே நிறைய நேரம் பொட்டியை திறந்து உட்கார்ந்து இருக்கேன். நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. இன்னும் வேற என்ன சொல்ல இருக்கு! புத்தகங்களை புரட்டி வாசிக்கிற அனுபவத்தை இழந்து எலிக்குட்டிய நகர்த்தி படிக்கிறதுதான் அதிகமாக ஆகி இருக்கு.... :(


இனி இந்த தொடர் கேள்விகள் சங்கிலி அமிரகத்து புலி, அதுவும் அடர்கானகத்து புலி, பின்நவினத்துவத்தின் சிங்கம் அய்யனார்'க்கு நகர்த்தப்படுகிறது.

1) பின்நவினத்தின் வரையறைகள் எதுவும் வகுக்க்பபட்டு இருக்கிறதா? அப்பிடியெனில் அந்த வரையறைகளுக்குள் உங்களின் எழுத்து பயணிக்கிறதா?

2) வெகுஜன எழுத்துக்கள் மாதிரி உங்களின் படைப்புகள் இல்லை? அதுமாதிரியாக உன்னால் எழுதவே முடியாதா? என உங்களை நோக்கி எழுந்த நண்பர்களின் விமர்சனங்களுக்கு என்ன பதில்?

3) உங்களின் படைப்புகளை அச்சுப்புத்தகமாய் வெளியிடுவதற்கு ஏதேனும் உத்தேசம் உள்ளதா? ஆம் என்றால் எப்போ? இல்லையெனில் ஏன்??

4) இணையம் எழுத்தும், பின்ன இத்யாதியும் தாண்டி குடும்பஸ்தானாக ஆன பினனரும் உங்களின் ஆரம்பகாலத்து மாதிரி வீரியமாக எழுதமுடிகிறதா?

Friday, June 6, 2008

கொஞ்சநாளைக்கு முன்னாடி.............

கொஞ்சநாளைக்கு முன்னாடி ஊருக்கு போயிருந்தப்ப நம்ம சோட்டு பசங்க என்னோமோ இண்டர்நெட்'லே எழுதி கிழிக்கிறேன்னு பெருமையா பேசிட்டு திரிவியா? அப்பிடி என்னதாண்டா எழுதி தொலைப்பே.. எங்களுக்கு கொஞ்சம் காட்டி தொலையேன்னு விரும்பி கேட்டு கெஞ்சினதுனாலே நம்ம இதயதளபதி வருங்கால சூப்பர்ஸ்டார்(கிர்ர்ர்...தூ) நடித்த அழகிய தமிழ் மகன் திரைகாவியத்தோட விமர்சனத்தை காட்டினேன். வரிக்கு வரி படிச்சி என்னை முறைச்சிட்டே இருந்தானுக... இதை நீதான் எழுதுனியே! இது FWD-Mail'லிலே திரிஞ்சுச்சே, எல்லாம் ஒன்னோட வேலைதானா?'ன்னு கர்-புர்'னு ஆனானுக. அவனுக எல்லாம் மதுரை மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள்.. எந்த கழகம் தெரியுமா? (.....) விஜய் ரசிகர் போர் படை கழகம்... :(

குருவி வந்தப்போ கழகதங்கத்துக்களுக்கு போன் பண்ணி அ.த.ம'க்கு மாதிரி ஒரு விமர்சனம் எழுதவா'ன்னு கேட்டேன். நீ படம் பார்த்துட்டியா'னு திரும்ப கேட்டானுக.. இல்ல சும்மா ஒரு குத்து மதிப்பா ஒங்க தலைவர் எப்பிடிப்பட்ட கதை???யிலே நடிப்பாரோ, அதை வைச்சி எழுதுறேன்னு சொன்னேன். "நீ ஒன்னும் விமர்சனம் எழுதி நக்கல் பண்ண வேணாம்.. படமே அப்பிடிதான் இருக்குன்னு சொல்லிட்டானுக, அப்புறமென்னா தலைமை கழக நிர்வாகிகளே சொல்லியான்னு விட்டுட்டேன். இருந்தாலும் குருவி விமர்சனங்களிலே கப்பிநிலவனோட இந்த பின் - நவீனத்துவ பதிவும் கீர்த்தியோட செம நக்கல் பதிவும் FWD-Mail'லே திரிஞ்சுகிட்டு கிடந்துச்சு.

------------------------------------------------------------------------

கொஞ்சநாளைக்கு முன்னாடி என்னோட ஜீ-டாக் கஸ்டம் மெஜஜ்'லே ஒரு கவுஜ ஒன்னு போட்டுருந்தேன். நான் எழுதுனதுதான்.. ஹி ஹி நம்புங்க.

வானம் முடிந்து மரக்கிளை உதிர்க்கும் மழையென தாயன்பிலிருந்து உனது அன்பிற்கு...

ஆபிஸிலே கூட குப்பை கொட்டுற ஒருத்தன் படிச்சிட்டு இதுக்கு என்ன மீனிங்'னு கேட்டான். விளக்கி சொன்னதும் இவ்வளவுதானா'ன்னு போயிட்டான். அதுனாலே இன்னொரு கொலைவெறி கவுஜ எழுதியாக வேண்டிய கட்டாயத்துக்கு உந்தப்பட்டதுனாலே ஒன்னே ஒன்னு...

பெருவெளியின் காட்சியடைய சாளரம் வழியும் எரிதழலின் நிறமடைகிறது எனது அறை... உந்தன் முதன்முறை வருகையை போலே...

------------------------------------------------------------------------

கொஞ்சநாளைக்கு முன்னாடி வாங்குன Nikon - 40X'லே எடுத்த ஒரு படம்.------------------------------------------------------------------------

கட்டகடைசியா நானும் கொஞ்சநாளைக்கு முன்னாடி வலைபதிவரா இருந்தவன் தான்'கிறத காட்டிக்கிறதுக்கான "உள்ளேன் ஐயா'கிற மொக்கை பதிவு"கிற டிரெண்ட் பதிவு இதுதான் ஆணிதரமா சொல்லிக்கிறேன்... தெளிவா குழப்புறோமா.... நாங்கல்லாம் யாரு... :)