Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, September 12, 2007

GTalk - தனிப்பயன் - custom - கஷ்டம் - பதிவு

நமது அன்பு தம்பி கப்பிநிலவர் ஏற்படுத்திய டிரெண்ட்'ஐ பின்பற்றி ஒரு பதிவு.......

காலைல அலுவலகத்துக்கு வந்து பொட்டியைத் திறந்து ஜிடாக்ல நுழைஞ்சு custom மெசெஜை(தனிப்பயன் வாசகம் என்று சொல்லலாமா??) மாற்றும்போது ஒரு யோசனை..இந்த கஸ்டம் வாசகங்கள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி மற்றவர்களைக் கொஞ்சம் கஷ்டப்படுத்தினா என்ன....அதான் கடந்த சில தினங்களில் ஜிடாக்கில் என் தனிப்பயன் வாசகங்கள் கீழே...

ஹி ஹி இதெயெல்லாம் கவிஜ லிஸ்ட்'லிலே சேர்த்துக்கோங்க மக்கா... :)


மன்றாடலின் கடைநிலையில் துளிர்க்கும் புன்னகையில் சிலிர்க்கிறது,
நனைந்த சிறகுகளின் வழியூடும் தென்றலென நமது பிரியம்....

நஞ்சுதோய்ந்த பாம்புகள் அடர்ந்த வனபயணங்களில் வழிகாட்டியென
உந்தன் அன்பு பெருக்கில் பனிக்கும் கண்களின் ஒளி...

வண்ணகலவைகளின் கூட்டணியாய் அமைந்து விட்ட ஓவியமொன்றின் நினைவு,
உந்தன் கோபதாபத்தில் விளைந்த வதனம்.....

வாதங்களும் பிரதிவாதங்களிலும் நிகழந்துவிட்ட
இறுக்கமென்ற இடைவெளி தளர்த்த
சிறகு விரித்து பறந்து போனது
சினேகமென்னும் பறவை....

Monday, June 18, 2007

எனக்கான வெளியில்.......



சுயமறிதலின் போரட்டங்களில்
பறக்குமெனது ஆத்மா!

மேகக்கூட்டங்களில் கரைசலை நீர்க்கும்
வான்வெளியில் கலவாத
போரட்ட பாங்கொடு ஓப்பிட தொடங்கியதன் பயணம்
உச்சமென்னும் நிலைக்கு அடிபணியும்
நிலவிடமும்,உச்சமென்னும் நிலையொன்றை ஆளும்
ஞாயிறென்னும் மாயை தர்க்கம் கண்டு தோற்று
நிலையற்ற தன்னிலை அறிந்து திரும்பியதும்
இன்னுமொரு இரவிலும் தன் பயணத்தை தொடர
அதனின் திட்டங்களை வரையறுத்து கொண்டது.

அதன் பயணகால திட்டநடவடிக்கை வரையிலான
என் இருப்பு
குழப்பவெளிகளில் அலையும்
குருட்டு புலியின் வன்மைக்கு
ஒப்பானதே.

Monday, May 7, 2007

காதல் அரும்பிய தருணங்கள் - II

வழக்கமான இனியதொரு மாலைவேளையில்
கேள்விகளின் பிறப்பிடமான உன்னிடமிருந்து
காதல் கொண்டதேனென்று
இன்னுமொரு தரம் கணை

நினைவுட்டலில் என்மனம் பின்னோக்கி,

அதொரு கார்த்திகை மாதம்
வீதியில் விளக்கேற்றும் பெண்களில்
தனியொரு பிரகாசமாய் உன்னின் விழிச்சுடர்!
நம் பரஸ்பர பார்வை பரிமாற்றங்களின்
மையமாய் ஒளிச்சுடர்.


கருக்கலின் பிறகு கதிரவன் மின்னும்
பாங்காய் என்னின் இருள் மனதிலிருந்து
காதலின் ஒளி ஏற்றிய தினமது!

எதுகைகளிலும் மோனைகளிலும்
சொல்லி தெரிவதில்லை காதல்.

Tuesday, April 3, 2007

காதல் அரும்பிய தருணங்கள்!!!

காலைப் பனி
ஈரம் உதிர்க்கும் இலைகள்
வெயிலறியா மரத்தடி
உன் தலையை சுமந்த என் நெஞ்சம்
கண்களிரண்டையும் கலக்கவிட்டு தொடுக்கிறாய்
கேள்விக்கணை ஒன்றை!
காதல் கொண்டதேனென்று

பேருந்து பயணமென்றில் சிறு தூக்கத்திலும்
அறியாமலே நீ விரல் சூப்பிய கணங்களை
சொல்ல வாயெடுத்தும் வேண்டாமென்று
புன்னகை துளிர்த்தேன்

புன்னகைக்கு புன்னகையையே
பதிலிறுக்கும் இந்தப் புன்னகைதான்
காரணமென்று
வார்த்தைகளின்றி புன்னகைக்கிறேன்,
சொல்லித் தெரிவதில்லை காதல்.

Friday, August 25, 2006

நானும் என் (ச)முகங்களும்



மரிக்கும் மனிதங்களும், பிணம்பொறுக்கிய கொடுமைகளும்
தூங்கிஎழும் முன்னரே தலைப்புச்செய்திகளாக
செவிமடுக்கும் வேதனைகள் வேண்டாமென
உறக்கத்திலும் தொழும்கரங்கள்....!




இம்மாந்தரின் கடும்வன்மங்களும் சுடும்வசவுகளும்
தாங்கி பொறுத்தருளும் வல்லமையும்
எந்தாயிடம் உணவுவேண்டி விளிக்கும்
கண்ணீர்கோரா கலங்கிய கண்களுடன்....!




என் இணைபோட்டிதனை உருவாக்கி
அத்தொன்று பொறமைகொளச் செய்யவல்லா
உனக்குமொரு வழிதனைக் கொண்டுச் செல்லவேண்டி
உன்னைவிட உயரப்போகவேண்டியே உயர்ந்தேன்....!




பிறரிடம் தவறுகளும் வலிகளும் தரச்செய்யும்
கடுமை நிறைந்த போக்குகளுமாகிய
கறைபடிந்த வதனமாய் பெற்றோனோ
வாழ்வோட்ட காலவெளியில்....!




வானவீதிகளிலேயே திரிந்தலையும் கடவுள்களையும்
மண்வீதிகளில் வேடமணிந்த மனிதர்களையும்
எதிர்கொள்ளும் திறம்வேண்டும்
முன்னதை ஆவலுடன் பின்னதை வெறுப்பென....!




எல்லைக்கோட்டமையா வக்கிரகோரங்களும்
நிலைகுலைக்கும் கேடுதருணங்களும்
என்னுளும் எனைச்சார்ந்த வழிமக்களிலும்
களையகோரும் ஆற்றல்வேண்டி என்னின் சிந்தை....!

Friday, August 11, 2006

பிரிவாற்றாமை



பிரிவுறுவலி நீங்க உணர்வுகள் பிரவாகமெடுத்து
உன்னை இறுக்கி அணைக்கத் துவங்குகிறேன்...
ஆனால் உந்தன் உணர்வுகள் உணர்த்தியது என்னுள்
மகவை அணைக்கும் தாயென...!




பிரிவுற்றவேளைகளில் என் நினைவுறுத்தவேண்டி
என்ன செய்வாயென கேள்விதொடுத்தாய்..?
உன் புகைபடமென்றேன் நான்,
நீயோ உன்னுடைய நகக்கீறல்கள்
எனபதிலுறுத்தாய்...!





கடிதங்களிலும்,கைப்பேசியிலும்
கவிதைகளாய் எழுதித்தள்ளுகிறாயே என
உன் வினாவிற்கு பகிரங்கமான விளக்கம் இது...

மானசீகமாய் கடவுளைத் தொழவேண்டி
ஜபிக்கும் பக்தர் வகையறாக்களில்
நானும் ஒருவன் தான்....!





கிள்ளைமொழி பேசிக் கொல்லும்,
கிளியொருத்தி குரலை கேட்டு கிளர்வுற
தொடர்புறுகிறேன்.....!
கிடைக்கும் சில மெய்நிகர் முத்தங்கள் எனக்கு...
இன்னும் சில கவிதைகள்
வாசிக்கும் உமக்கு....

Friday, August 4, 2006

கவிதையாய் கைப்புள்ளை காவியம் (101 வரிகளில்)

திக்கற்ற கட்டிட காடுதனிலமர்ந்து
கணினியென்னும் அடிமையை
ஏவல் செய்யும்
விழிகருக்கும் பணியில்
புத்துணர்வு திரும்பவேண்டி
வலைபூக்கள் சொரிந்த
சாலைகளில் பயணிக்கும்
பயணிகள் அனைவருக்கும்
தாய்மொழி தங்கதமிழில்
சிரிப்பு தரவேண்டி சங்கமென்றை
கண்டளித்தாய் எமக்கு
செந்தமிழில் பெயரிட்டாய்
வருத்தப்படாத வாலிபர் சங்கமென..

கைப்புள்ளயெனும் தானே
தலைவர் எனறிவித்து
அடிவாங்கும் உன் திறமைதனை
பலவகைகளை கண்டறித்தாய்
உன் திறமையின் விளைவுகளின்
விளைவாக விளைந்த
விழுபுண்களில் சாய்ந்து
விழுந்திராத விழாநாயகனான
உன்னைப்போற்றி கவிஎழுத
மின்மடலில் வினவினேன்...!

பதிலுற்றாய் விதிமுறையோடு
அதை வாசித்தால் நகைச்சுவை
மிளிரவேண்டுமெனவும்
வாசிக்கும் நெஞ்சங்கள்
சிறிதளவேணிணும்
புண்பட்டிட கூடாதென
இவ்வாறே உன்னுள்
வியாபித்திற்கும் தலைவனுக்கே
உரித்தாகும் சீரியபண்பு...?

அந்தூர் எந்தூர்
இந்தூரில் வசித்தாலும்
மாசுமருவற்ற தங்கதலைவனான
உன் திருமுகம் மனகண்ணில்
நிறுத்திட வரம்வேண்டி
நிழற்படம் வெளியிடகோரலாம்
தினமும் தரிசிக்கும்
பாக்கியம் பெற்றவர்
கழிக்கவேண்டும் திருஷ்டி
ஆகவே வேண்டாம்..

உன்னை வாழ்த்திட
பத்துவரியை மனதிலுறுத்தி
எழுத தொடங்கினேன்
அனுமார் வாலென
நீட்டித்தது உந்தன்புகழ்
எப்படியும் நிறைவுறும்
நூறாவது வரிகளின் இறுதியில்...!
சங்கத்தின் நூறாவதுநாள்
உந்தன் புகழ்பாடும்
பதிவுகளின் கணக்கு நூறு
அன்னியமொழி சேரும்
அச்சமேனே எனகருதி
தமிழில் உரைக்கிறேன்
இதொரு உடன்நிகழ்வுசெயல்

வாழ்த்தி உரைத்து
முடிக்கிறேன் இவ்வரியை
தொடங்கலாம் கலாய்க்கும்திணைதனை...

உதார்விடும் உன்னழகில்
கவரப்பட்ட இரும்பாய்
கழக கண்மணிகளின்
ஆதரவுகரங்கள் எண்ணிக்கை
கடல்தாண்டியும் செல்லுமெனில்

இளமாய் மிதமாய்
அடிகள் இடியென
விவாயத்திலும் விழுமோ
வெடிகுண்டுகள் அழிக்கும்
சிவம்தனிலும் பிரதிபலிக்குமோ
தேவகானங்கள் இயற்றும்
அரசவை கவிஞனுக்கும்
விழுமோ உன்மாதிரி...?

மண்ணின் மைந்தன்
பாண்டிய அன்புசெல்வன்
வில்லாய் வடிக்கும்
வீரதிருமகன் வாங்கும்
அடிகள் உன்னளவில்
சற்று குறையே...!
நீர் பெற்றதை பகிர்ந்தளிக்கும்
மனபாங்கு சிபிமன்னனிடம்
கிடையாதென்பது திண்ணம்....!

மக்கள்படை மாத்திரமே
சார்ந்ததல்ல உந்தன்பாசறை
களிறுபடையும் கப்பற்படையும் சேர்ந்தே
பொன்னெ மிளிர்கின்றன....!

திங்களொரு ஒன்றுமறியாமானுடர்
உன்னவை வரப்பெற்று
பரிசில்கள் பலபெறுவார்யென....!
உள்ளவாகை மிகுதியில் வந்து
அம்மானுடர் பெற்றுசெல்வது
ஆப்பசைத்த மாருதியின்
இலவச ராசனுபவங்கள்...!

சிரிப்பன்பதை மட்டுமே கொள்கைகொண்ட
இவ்வரசவை வாழுமெனில்
கவிதனை முடிவுற விளைகிறேன்
மனதில் தொங்கும்வினாவுடன்

சச்சரவுகளில் பயணிக்கும்
பயணிகள் அனைவருக்கும்
சுயவெறுப்புகளை கடந்து
ராஜபாட்டையில் வரவியலுமாயென...........?????

கைப்புள்ள கிளம்பு உன்வேட்டைக்கு
காத்திருக்கிறோம் நாங்கள்
நீ வாங்கிவரும் குச்சிமிட்டாயிக்கும்,குருவிபொறைக்கும்.... :-)

Friday, July 28, 2006

காதலியை காதலிக்கிறவர்களுக்காக



இந்த மாதிரி என்னைபத்தி
கவிதை எழுதிறதுதான் உனக்கு வேலையா
வேற பொழப்பில்லையா என வினவுகிறாய்!
சரிதான் உன்நினைப்புதானடி என்னோட
பொழப்பை கெடுக்கிறது....






உன் வீட்டுக்கு முறைவாசல்
வருகின்றபோது உங்கள்
பகுதி செய்தித்தாள் போடும்
பையனிடம் ஒரு பரஸ்பர ஒப்பந்ததுடன்
தற்காலிகமாய்
அந்த வேலை என்னிடம்...






நீ அனுப்பிய கவிதையை
என் தோழிகள் படித்துவிட்டர்கள்
என கோபத்துடன் வார்த்தைகளாக
கூறுகிறாய்,
ஆனால் உன் கண்களில்
அன்று பொறமைதீ
எரிந்திருக்கும் எனக்கு
தெரியாதா என்னா.....






உனக்காக
காத்திருந்து காத்திருந்து
ரொம்ப கடுப்பா போச்சுடின்னு
பொய் கோபம் வெடிக்கிறது
என்னுள்
அதற்கு நீ கொடுக்கும்
சமாதானமுத்தங்களை
வேண்டி...






திரும்ப திரும்ப
ஒரே மாதிரிதான்
உனக்கு ஒரு வேலையை
செய்ய தெரியுமா என
கேட்கிறாய் விழிக்கிறேன் நான்
உன் கன்னங்களிலிருந்து
என் உதடுகளை
எடுக்கும் பொழுது....






புத்தகத்தை திரும்பவேண்டி
உன் வீட்டிற்க்குள் நுழையும் முன்னே
அண்ணே உங்களுக்கு யார் வேணும்
விளிக்கிறாள் உன் அண்ணன்மகள்
உன்னிடமிருந்து புத்தகத்தை பெற்று
கிளம்பி வாசலடையும் முன்னே
செல்லம் அவரு உனக்கு மாமா
அண்ணன் இல்லையின்னு எனக்கு
மட்டுமே கேட்கும்படி
சத்தமாய் சொல்கிறாய்.....






திபாவளியன்று
பலகாரங்களை சுமந்து
முதன்முறையாக என்இல்லத்தினுள்
பெளர்ணமியென
நுழைகிறாய்...
விடயமாய் வலதுகாலை
முன்வைத்து...






உனக்கு கித்தார்
வாசிக்க தெரியுமாடா..
வினவும் நீ
நான் என்னவென
பதிலளிப்பேன் என
அறிந்தும் வார்த்தைகள்
வரட்டும் என்று
விஷமத்துடன்
என் கண்களை
ஊடுறுவுகிறாய்....






உன் தோழியிடம்
பேசும்பொழுது அவளை
கட்டிபிடிக்கிறாய்
ஹீம் எனக்கு இப்போது
விளங்கின்றது உன்னுடைய
குறிப்பால் உணர்த்தும் தன்மை...







தலைக்கு சிக்கெடுக்கும் பொழுது
உன்னை மாதிரி நல்ல லூசா
இருந்தா என்னா என
என்னை சுட்டிகாட்டி
உலகத்திற்கு தெரியாத
உண்மையை அறிவித்துவிட்டதாக
சிரித்துக்கொள்கிறாய்...

Thursday, June 29, 2006

தைத்த கவிதைகள் சில

புத்தகம் படித்தல் என்பது நம்மைப்போன்ற பலருக்கும் பிடித்தமான ஒன்று இல்லையா.சில புத்தகத்தின் பக்கங்கள் சில சமயம் நம்மை பாதித்து அதை
நினைவில் நிறுத்தும்படியும் செய்து விடும்.உதாரணத்திற்க்கு பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது பூங்குழலி தன் காதலர்கள் எனக்கூறி வந்தியதேவனிடம் கொள்ளிவாய் பிசாசுகளை காட்டும் பகுதியில் பயந்தே
போனேன்.அதே மாதிரி கடல்புறா வாசித்தப்போது அநாபயசோழனின் தீர்ப்புக்காக நீதிமன்றகாட்சியில் காஞ்சனாதேவி வில்லில் நாண் ஏற்றி
இளையபல்லவனுடன் தோன்றுவது அப்படியே என் கண்ணில் திரைகாட்சியாக விரிந்தது.
நான் கோவில் செல்லும் பொழுதுகளில் சிலசமயம் காசிஆனந்தனின் நறுக்குகள் நினைவில் வரும்.சில எழுத்துக்கள் ஒருவகையில் அனைவரையும் பாதிக்கும் என்பதில் மாற்று கருத்துகள் இல்லை என நினைக்கிறேன்.

அதுபோல் காம உணர்வுகளை அடிப்படையாக கொண்டு நா.மகுடேஸ்வரனின் காமகடும்புனல் நூலில் என் மனதை தைத்தவைகளில் சில இவை.


உடுப்புகள் கிழித்து
உறுப்புகள் கிள்ளிக்கீறி
மானபங்கப்படுத்தினான்
'உன்தாயாருடையதைப்
போலிருந்ததா'என்றாள்
மானபங்கப்பட்டவள்.


'முறையல்லாதன செய்கிறாய்...
சொன்னால் கேள்அண்ணா....'
கண்ணீர் மல்கப் பேசு தோழி
உன்னை வன்புணரவந்தவன்
திகைத்து நிற்கட்டும்.


இப்பொழுதுதெரிகிறது
பிரம்மச்சாரியம்
கடும்நோன்பு
முதிர்கன்னிமை
கொடிய பட்டினி

ஆணின் வாழ்வோட்டத்தில்
நிச்சயம் ஒளிந்திருக்கிறாள்
இன்னொருத்தி
தாயல்லாத
தாரமல்லாத
சகோதரியல்லாத
மகள்லத்தாத
பரஸ்திரி

மரணப்படுக்கையில் இருப்பவரின்
ஞாபகத்திலாடும்
கடைசி முகங்களிலன்று
ஒரு வேசியினூடதாக
இருக்கலாம்.



என்னெய அடீங்கொ
கொல்லுங்கொ
கண்டதுண்டமொ வெட்டிப்போடுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ
நீங்கொ பாத்து வெச்சிருக்கிறே
மாப்புள்ளைக்கெ என்னெக் கட்டி வெய்யுங்கொ
கட்டிக்கெறென்.
அவனுக்கு புள்ளெ பெத்துத்தரச்சொல்லுங்கொ
பெத்துக்கெறென்
ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து 'வா போயர்றலாம்'னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பன் மேலே சந்தியாமச் சொல்றென்
போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்....ஆமா....


தலைப்பிற்கும் என்னை இந்தலைப்பில் எழுதத்தூண்டிய முகமூடிக்கு நன்றி

Friday, June 9, 2006

சொல் ஒன்று



என் கண்மணியே நான்... ஏங்க
உனக்கு என்னவொரு ஆனந்தம்....?
இதயம் வரை இனிக்க சொல்... இல்லை
இதயம் மரிக்க இல்லயென்று (கொ)சொல்....!

Wednesday, May 10, 2006

கவிதை + விடுகதை



மானுடர் வயிறார

சாயும் கோபுரங்கள்.....?




கண்டுபிடிங்க பார்க்கலாம்......?

மிகவும் பிடித்த கவிதை

முதல் வேலை
என்ன இது வேலை
எனக்கு பிடித்தவாறு
உடை அணிய உரிமை மறுக்கும் வேலை!!!
என் தாய்மொழி,
என் நாவில்,
எட்டிப்பார்க்ககூட தடை போடும் வேலை!!!
போலியான புன்னகையொன்றை,
நிரந்தரமாய் என் முகத்தில்ஒட்டிவிட்ட வேலை!!!
சரித்திரம் படைக்கவேண்டும்!
புரட்சியாய் புறப்படவேண்டும்!
தேசத்தை நிமிர்த்தவேண்டும்!
எனும் கனவையெல்லாம்கம்ப்யூட்டரில் கட்டிப்போட்டவேலை!!!
காந்தி விரட்டிய,வெள்ளையன்
இரவில் நித்திரை காண
என் நித்திரை கலைக்கும் வேலை!!!
இங்கு கற்றதையும்,பெற்றதையும்,
வெளிநாட்டு டாலருக்கு
அடகுவைத்துவிட்ட வேலை!!!
குவியலாய் இறுகிப்போன
இந்த வெறுப்பையெல்லாம்
சுக்குநூறக சிதறடித்தது,
"இருதுளி" கண்ணீர்!"
ரெம்ப சந்தோசமா இருக்குடா"
முதல்மாச சம்பளத்தை நீட்ட,
தாயின் கண்ணில் தோன்றியஒருதுளி!"
ரெம்ப கஷ்டமாக இருக்குடா"
வெகுநாளாய் வேலை தேடும்,
நண்பனின் கண்ணில் தோன்றியமற்றொரு துளி!!
-K.கார்த்திக் சுப்புராஜ்