Wednesday, May 2, 2007

மதுரை சித்திரை திருவிழா


மதுரை சித்திரை விழா பற்றிய பலவகையான செவி வழி கதைகள் இருந்தாலும், அவ்விழாவின் முக்கியமான அழகர் ஆற்றில் இறங்கும் விஷேசமான சித்ரபெளர்ணமி தினம் பற்றிய என்னுடைய அப்பத்தா சொன்ன கதையோடு சொன்னதை வைத்து விழா பற்றிய சிறு அறிமுகம்.

ஒரு முறை சந்திரன் தான் ஒருவனே நிகரற்ற அழகன் என நினைத்து யானைமுகமும் எலியை வாகனமாக கொண்ட விநாயகரை குருபன் என நிந்திக்க விநாயகர் சந்திரனுக்கு விரைவில் அழகொழிந்து பிறரை நிந்திக்கும் உன்னை போன்றவர்களுக்கு படிப்பினையாக வளர்ந்து தேயும் பாங்காய் இருப்பாய் என சாபம் கொடுக்க, சந்திரன் சிவனிடம் முறையிட சிவனோ உன்னுடைய அகம்பாவத்துக்கு அதுவே சரியான தண்டனை, ஆகவே அதை ஒன்றும் செய்வதற்கில்லை என பதிலுரைக்கிறார். மேலும் சூரியன் சுட்டெரிக்கும் மாதமான சித்திரையிலும் சந்திரனாகிய உன் திறன் உலகுக்கு தெரியவேண்டியும் சித்திரை மாதத்தில் வரும் முழுநிலவு தினமன்று ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தறே உன் பங்கும் இருக்கவேண்டும் என சாபவிமோசனமும் கொடுக்கிறார். அதே சித்திரபெளர்ணமி தினமன்று மீனாட்சி திருவிழா காண வரும் அழகர் ஆற்றை கடக்க முயல்கிறார். அதிலும் ஒரு உட்கதை ஒன்றும் உள்ளது, மண்டூக மகிரிஷி 'க்கு சாபவிமோசனம் அளிக்கவே அழகர் ஆற்றில் இறங்குவதாகவும் அக்கதைகள் நீளும். இக்கதைகள் உண்மையோ, இல்லை உறுதியாக பொய்யாக இருந்தாலும் திருவிழாக்கள் நடப்பதற்குண்டான காரணம் ஒன்றே ஒன்றுதான், அது மக்கள் அனைவரும் எந்த உயர்வும் தாழ்வும் இல்லாமல் ஒரே இடத்தில் குழுமிக்க வேண்டும் என்பதே.

நேற்றிலிருந்து வைகையாற்றிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு விழா நடைப்பெறும் இடம் அருகே நீர் தேக்கப்பட்டது. அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவத்திற்க்காக பிரத்யேகமாக நீர் பாதையும் கட்டப்பட்டு இருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க இன்று காலை சுமார் ஆறு மணியளவில் பச்சை பட்டு உடுத்தி அழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். அதன்பின்னர் நடைப்பெற்ற உற்சவத்திற்கு பிறகு மண்டகப்படி ஆரம்பித்தது. விழாவை நேரடியாக முன்று நான்கு மணி நேரமும் ரசித்ததில் ஒரு சிறிய மனநிறைவு உண்டாகியது.

பிரத்யேக பாதை

அழகர் கடைசி வரைக்கும் என்னோட முணாவது கண்ணுலே சரியாவே வரலை, அதுனாலே சுட்டாச்சு

இனி விழா துளிகள்:-

ரொம்பவே நாட்களுக்கு பிறகு வையாத்திலே தண்ணி வந்தது.

காலை ஒன்பது மணிக்கே சுட்டெரித்த வெயில்

ஆத்திலே மொட்டை எடுக்கனுமா'ன்னு ஒவ்வொரு பத்தடிக்கும் விசாரிக்கும் நபர்கள்.

போலிஸின் கடுமையான கெடுப்பிடிகள்.

வழக்கம் போல் ஊர் முழுவதும் தண்ணிபந்தலும், அதிலே மோரும்,பனங்காரம்,ரஸ்னாவும் கொடுக்கப்பட்டது.

இப்போதைக்கு மதுரையின் சுப்ரபாதமான "டங்கா துங்கா மவுசுக்காரி" எல்லா இடத்திலேயும் பத்தடி உயரத்துக்கு ஸ்பிக்கர் கட்டி அலரவிடப்பட்டுருந்தது.

"ஏண்டி ரோசா அந்த பச்சை சட்டை ஒன்பின்னாடியே ஊரிலே இருந்தே வாறாண்டி, ஏதானாச்சும் என்னானு கேளுடி?" "ஹீக்கும் அந்த கருவாயன் பின்னாடியே வர்றதே தவிர வேற எதுவும் செய்யமாட்டேன்கிறான்!!"

"ஏலேய் மாப்பு, மொட்டையடிக்கிறப்போ மோதிரம் போடுறென்னு சொன்னே? இதுதானா மாப்பிளை அது?என்னாய்யா ஓடுற தண்ணியிலே கறைஞ்சிடும் போலே?"

"மாமா! காது குத்துறவரே காணோம், யாராவது ஆச்சாரி ஆத்துலே இருக்காங்களான்னு பாருங்க?"

"மொக்கயா! நம்ம சந்துவீட்டு பெருசு அரிசி பருப்பு வாங்கிட்டு போச்சே? என்னோமோ அழகர் திருவிழா அன்னிக்கு ஆத்துக்குள்ளே சோறு ஆக்கி போடபோறன்னு? எங்கன்னு தேடு? வந்ததுக்கு சாப்பிட்டாச்சும் போவோம்"

"எத்தேய்! இங்கன எப்போ இடம் வாங்கிப்போட்டே? சாமியெல்லாம் மண்டகப்படிக்கு வந்து போறளவுக்கு சம்பாரிச்சிட்டியா?"

"ஏண்டா ஒனக்கு பார்த்துருக்கிற பொண்ணு வந்துருக்குன்னு சொல்லி காலையிலே இருந்து சுத்துறோம்? எங்கடா அவிய்ங்களே?"

"ஆத்தி ஏழுமணிக்கு ஊமை வெயிலு மண்டையே பொளக்குது, வாங்கடா சீக்கிரமே வீட்டே பாத்தி ஓடுறுவோம்."

ஹி ஹி நமக்கு காது கொஞ்சம் தெளிவாதான் கேக்குமிங்க.... :)

Monday, April 16, 2007

வ.வா.சங்கத்து பரிசுப்போட்டி

வணக்கம் மக்கா,

நமது வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பரிசுப்போட்டி ஒன்னை அறிவிச்சிருந்தோம். போட்டின்னா பெருசா ஒன்னும் இல்லிங்க.. நகைச்சுவை பதிவு எழுதி அதை எங்களுக்கு அதை தெரியப்படுத்துங்கன்னு இந்த பதிவிலே அறிவிச்சிருந்தோம். உங்க வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான சம்பவத்தை உங்களை பிரதானப்படுத்தமால் ஏதாவது ஒரு கற்பனை கதாப்பாத்திரத்தோடு பிணைந்து பதிவு எழுதித்தாருங்கள். ஆப்பு வாங்கியிருந்தா கைப்புள்ள கதாபாத்திரமின்னு நினைச்சு எழுதிறாதீங்க, அப்புறம் சங்கத்திலே எங்களாலே மேற்கொண்டு பதிவு போடமுடியாது... :)

எனவே புதுவிதமான பாணியிலே சங்கத்தை மெருக்கேற்ற உங்களின் பதிவு அமைந்தால் நலம். விதிமுறைகளாக பெருசா ஒன்னும் வைக்கலிங்க..



1) கட்டாயமாக தமிழில்தான் இருக்கனும்னு சொல்ல மாட்டோம், புரியற மாதிரி இருந்தால் சரி.

2) தனிமனித, சமய, மதம் தாக்குதல் இருக்கக்கூடாது.

3) வ.வா சங்கத்தை களமாக கொண்டு எழுதியிருந்தால் முன்னுரிமை (கைப்புள்ள'யை விட்டுருங்கப்பா)

4) எப்பிடியாவது சிரிக்க வைக்கனும்.

5) சங்கம் பாணி காமெடி தவிர்த்து சங்கத்துக்கானப் புது பாணி காமெடி உருவாக்கும் விதத்தில் உங்கள் பதிவுகள் அமைதல் நலம்.

6) பின்னூட்டம் மூலமாக இடுகையை அறியப்படுத்துங்கள். பதிவரின் பெயரில் மட்டுமே அறியப்படுத்த வேண்டும். Anonymous மூலம் இடுகையை தெரிவித்தல் கூடாது.

7) ஒருவர் எத்தனை இடுகை வேண்டுமானாலும் அனுப்பலாம். எப்பொழுது எழுதியிருந்தாலும் பரவாயில்லை.(காலத்துக்கு அப்பாற்பட்டது நகைச்சுவை. ஹி ஹி)

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பதிவிற்கு இந்திய ரூபாய் ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.

பதிவுகளை அனுப்பி வைக்க கடைசிநாள்:- 22-04-2007 11.59 IST

அப்பிடியே உங்க வலைப்பூவிலே நம்ம சங்கத்தோட பரிசுப்போட்டிக்கு தட்டி வைச்சிட்டிங்கன்னா ரொம்பவே மகிழ்ச்சி, அதுக்காக நீங்க ரொம்ப கஷ்டபடவேணாமிங்க.... கிழே இருக்கிற சுட்டியை ஒரு தடவை கிளிக்'ங்க... அதுவே உங்களை பிளாக்கர் பக்கத்துக்கு கூட்டிட்டு போய் அதுவே எல்லாவேலையும் செஞ்சுரும்.












உங்களோட பங்களிப்பை எதிர்நோக்கும் சங்கத்து சிங்கங்கள்..

Wednesday, April 11, 2007

அழகென்ற சொல்லுக்கு....

ஒரு நாள் அர்த்தராத்திரியிலே சேட் பண்ணிட்டு இருக்கிறப்போ தீடிரென்னு கதிர் வந்து அழகுன்னா நீ என்ன நினைக்கிறே'ன்னு கேட்டார். எனக்கு அப்போ சொல்லுறதுக்கு ஒன்னும் தோணலை.எதோ ஒன்னை சொன்னேன், அவர் நம்ம கொத்ஸ்'கிட்டே போயி விளக்கம் கேட்க அவரும் தன்னோட முதுமையிலே கூட இன்னும் தான் இளமையாக எழுதுறதுதான் அழகுன்னு சொல்லி கதிரை ஏமாத்தினதும் மட்டுமில்லாமே அழகை பத்தி பதிவென்னு இட்டு சங்கிலி தொடரா ஆரம்பிச்சி விட்டார். அது அங்க சுத்தி இங்க சுத்தி நம்ம கவிஞர் அய்யனாரும் எழுதி கடைசியா என்னை இழுந்து விட்டுட்டாரு...

அழகுன்னா என்ன'ன்னு ரொம்பவே யோசிச்சு யோசிச்சு பார்த்துட்டேங்க.. ஆனா கொஞ்சகாணு மேட்டர் கிடைச்சிருக்கு, இதெல்லாம் அழகா'ன்னு முழுசா படிச்சிட்டு கேட்டு அடிக்க வந்துறாதீங்க, ஏன்னா ஒங்களை மாதிரி நல்லவங்களுக்கெல்லாம் அது அழகு இல்லை :)

முருகன்:-


அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா

சுடராக வந்தவேல் முருகா - கொடும்
சூரரைப் போரிலே வென்றவேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழமுன்னை யல்லாது பழமேது முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீயல்லவோ முருகா
சக்தியுமை பாலனே முருகா - மனித
சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

இந்த பாடலை கேட்கிறேன்,கேட்டு கொண்டே இருக்கேன். எனக்கு முழுவதுமாக கடவுள் நம்பிக்கை கிடையாது, அதுவும் என்னையறியமாலே குழப்பத்துடனே சில கடவுள் நம்பிக்கை உண்டு, கடவுள் இருக்கா இல்லையா என தர்க்கரீதிக்கு இடைப்பட்ட நிலையில் இருக்கிற Agnostic கோஷ்டியை சேர்ந்தவந்தான் நானும். ஆனால் முருகனை கடவுள் உருவமாய் உருவகப்படுத்த முடியவில்லை. கல்லூரி தினங்களுக்கு அப்புறம் Agnostic நிலையில் தீவிரமான பின்னும் இன்னமும் முருகனை மட்டும் ஏத்துக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவனை என் தோழனாய், என் சகோதரனாயாய் நினைத்துக்கொண்ட சிறுவயது பழக்கம்தான் அது. ஒரு காலகட்டத்தில் முழுவதுமான ஆத்திகவாதியோ இல்லை நாத்திகவாதியோ ஆனால் கூட எந்தமிழின் செல்வன் முருகன் தான் என்றென்றும் அழகன்.

குறும்பு:-

பெரியாளாக வளர்ந்து விட்டாலும் இன்னமும் என்னை சுற்றுவட்டாரத்தில் அடையாளப்படுத்தபடும் வார்த்தை ரெட்டைசுழி வாலு. அந்தளவுக்கு ரொம்பவே குறும்பு பண்ணிருக்கேன். அஞ்சு அல்லது ஆறு வயசு சமயத்திலே ஏதோவொரு இடத்திலே ஓசி சர்க்கரை பொங்கல் வாங்கப்போயி ரொம்ப நேரம் கழிச்சி வந்தேன். படிக்கமாமே வெட்டியா ஊர் சுத்தப்போயிட்டேன்னு அம்மா என்னை குச்சியாலே அடிக்க போறப்போ நான் குனிய போக குச்சி தலையிலே பட்டு பொல பொலன்னு ரத்தம்... அவங்க அதை பார்த்து அழுது நானும் அழுதுட்டே ஆஸ்பத்திரி போறப்போ "அம்மா அந்த சர்க்கரை பொங்கலை வீட்டுக்கு போனதும் சாப்பிடுறேன்"ன்னு சொன்னதும் அழுதுட்டு இருந்த அம்மா சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

இன்னொரு சம்பவம் இதேமாதிரிதான் அதுவும் அதே வயசுன்னு தான் நினைக்கிறேன். எங்க மாமா கல்யாணம் திருப்பரங்குன்றத்திலே நடந்துச்சு, கல்யாண முதல் நாள் வரவேற்பிலே நான் எங்கேயோ வழித்தெரியாமே தொலைஞ்சு போயிட்டேன். கோவிலுக்கு பக்கத்திலே நின்னுட்டு அழுதுட்டு இருந்தோப்பா ஒருத்தர் போலிஸ் ஸ்டேசன்'லே கொண்டு விட்டார்..அங்கே போனதிலே இருந்து ஒரே அழுகைதான், போலிஸெல்லாம் பயந்து போயி என்னாடா வேணும் ஒனக்குன்னு கேட்க.. நான் இதுதான் சான்ஸ்'ன்னு முட்டை பொரட்டா கேட்டேன், ஏன்னா அதுக்கு மொதநாளுதான் எங்கப்பா வாங்கிதரமாட்டேன்னு சொல்லிட்டாரு, அவங்களும் அதை வாங்கிட்டு வர்ற போனநேரத்திலே எங்க சொந்தபந்தம் எல்லாரும் வந்துட்டாங்க.. எங்கப்பாவும் அம்மாவும் அழுதுட்டே என்னை கூட்டிட்டு போறப்பா அப்போவும் "அப்பா அந்த போலிஸ்ண்ணே எனக்கு முட்டை பொரட்டா வாங்கிட்டு வந்துருப்பாங்க"ன்னு சொன்னதும் எங்க மாமா புதுமாப்பிள்ளை விட்ட சாபம் இன்னமும் ஞாபகத்திலே இருக்கு, "அடேய் ஒனக்கும் இதே திருப்பரங்குன்றத்திலே கல்யாணம் நடக்கும், நீயும் இப்பிடிதான் என்னை மாதிரி அலைய போற?" :)

இன்னமும் எங்க சொந்தகாரங்க என்னை இப்போ பார்த்தா நம்பவே மாட்டாங்க.. நானா இப்பிடி மாறிப்போயிட்டேன்னு....

குழந்தைகள்:-

எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயங்களிலே இதுவும் ஒன்னு. என்னோட அக்காவுக்கு குழந்தை பொறந்தப்போ என்கிட்டேதான் சர்க்கரை தண்ணி ஊத்துன்னு சொன்னாங்க. (தாய்ப்பால் தவிர வேற எதுவும் தரக்கூடாதுன்னு டாக்டர் அட்வைஸ்). அப்போதான் பிறந்து சிலமணி துளிகள் ஆனா அவனை மடியிலே வைச்சு சும்மாகாச்சிக்கு சர்க்கரை தண்ணின்னு சொல்லி ஸ்பூனை காட்டுன்னேன். அடடா என்னவொரு அழகு பூமாதிரி மெல்லியதாய் விரல்களும்,பஞ்சு பொதி மாதிரி மொத்த உடலும் இன்னமும் நினைச்சாலும் ரொம்பவே அழகாக உணர்வேன். இன்னமும் எங்க போனாலும் குழந்தைகளை கண்டா குஷி வந்துரும், அவங்க கூட போயி அவங்ளோட கிள்ளைமொழி கேட்கிறது அப்பிடியொரு அழகாக உணர்வேன்.

தனிமை:-

இதை பத்தி நான் ஏற்கெனவே எழுதி தள்ளிட்டேன். ஆனா என்னை பொருத்தவரைக்கும் அது என்னை ஆட்கொண்டது ரொம்பவே அதிகம், சிறுவயசிலே ரொம்பவே அதிகமாக வாயாடிட்டு இப்போ கொஞ்சமே அமைதியான மனோபவத்தை வளர்ந்துக்கிட்ட பிறகு தனிமை தனிமை தான். சிலவருடங்களுக்கு முன்னாடி குற்றால அருவிகளுக்கு சுற்றுலா போயிட்டு ரெண்டு நாள் பசங்ககூட சுத்திட்டு இருந்தேன், ஆனா தீடிரென்று தனிமையிலே இருக்கனுமின்னு தோணினதும் யாருக்கிட்டேயும் சொல்லமே காட்டுக்குள்ளே நான்மட்டும் தனியா 8மணி நேரம் இருந்துட்டு வந்தேன். எந்தவொரு கோட்பாடு இல்லாத சாலைகளும், உதிர்ந்து கருகிய சருகுகளும், சின்ன சின்ன பூச்சிகளும், ரீங்காரவண்டுகளும் அப்பிடியொரு அழகு. அப்போ கவிதை எழுத கிடைச்ச எண்ணங்கள் நிறைய... அதெல்லாம் கவிதையா வடிச்சி சூடு ஆறிப்போயி என்னோட டைரியிலே தூங்கிட்டு இருக்கு...


மதுரை:-

கழுதைக்கும் எங்கூருக்கும் எனக்கும் வைச்சு நீங்க பழமொழி சொன்னீங்கன்ன சிரிச்சிட்டே ஏத்துக்குவேன். ஏன்னா என்னாந்தான் வெளிநாடு,வெளிமாநிலமின்னு இருந்தாலும் நாமே அட்லிஸ்ட் ஒரு வினாடியாவது நம்மோளோட அந்த சொந்தமண்ணை நினைச்சு பார்க்கமே இருக்கமுடியாது. அந்தமாதிரி மழைநாளிலே வெளிவரும் மண்மணத்திலே நம்மளயறியாமலே சொந்த ஊர் ஞாபகம் வர ஆரம்பிச்சிடும். அதுக்கு காரணம் என்னான்னா சின்னவயசிலே விளையாடுறப்போ மழை வந்துடுச்சேன்னு வீட்டுக்குள்ளே ஓடி போயி சன்னல் வழியா சொட்டா சொட்டா வானம் பூமியிலே தண்ணி ஊத்தி விளையாடுற அந்த விளையாட்டை ரசிக்கிறப்போ வர்ற மண் வாசம் நுகர்ந்தவங்க எங்கே இருந்தாலும் அதே தருணம் திரும்ப நடக்கிறப்போ சொந்தமண்ணை நினைக்க ஆரம்பிச்சிரும்.

அந்தவகையிலே என்னோட ஊர் ரொம்பவே அழகு, மீனாட்சி அம்மன் கோவில் எதிரிலே இருக்கிற பள்ளிக்கூடத்திலே படிச்சிட்டு மதியவேளைகளிலே கோவிலுக்கு போயி விளையாடுற அந்த தருணங்கள் இன்னமும் அழகு.

தமிழ்:-

மதுரையும் தமிழையும் தனித்தனியான அழகுன்னு பிரிச்சு எழுதுறதுக்கு எனக்கே பிடிக்கலை. எனக்கு ரொம்ப பிடித்தமான அழகுன்னா நம்ம மொழியோட அழகுதான். இரட்டை கிளவிகளும், வெண்பாக்களும்,குறளும், காப்பியங்களும் தமிழ்மொழியின் சிறப்புகள். ஒவ்வொரு பகுதியிலும் வேவ்வேறுவிதமா பேசினாலும் அதொட தனித்தன்மையை இழக்காமல் இருக்கிறது அழகு. எந்த மொழிக்கும் அழகே அதோட எந்தவொரு பிறமொழி கலந்தாலும் அம்மொழியோட வளம் கெட்டு விடக்கூடாது. அந்தவகையில் நமது தமிழ் சொல்வளமிக்க மொழி. இன்னமும் அதை நல்லமுறையில் பயன்படுத்தி பிற்சந்ததியினரும் நம்தமிழ் மொழியை நினைத்து பாரதி சொன்னது போல பெருமிதப்பட வேண்டும்.

என்னையும்,உங்களையும் இணைந்த நம் தாய்மொழி தமிழ் அழகு, அதைவிட மொழிக்கு முன்னால் வரும் இரட்டைஎழுத்து சொல்லுக்கு உரியவள் என்றென்றும் அழகு..

இதுப்போல அழகாக??? பதிவு எழுத நான் அழைக்கும் மூவர்:-

மருத இளவரசர் தருமி ஐயா..
.
மருத சிங்கம் குமரன்...
சந்திரமதி அக்கா... (அண்ணா'ன்னு சொன்னா அடிக்க வருவாங்களா??)

சிறப்பு அழைப்பாளராக எங்கள் மருத சிங்கத்திலென்று பங்காளி
(அண்ணே நான் கூப்பிட்டுட்டேன், யாரும் கூப்பிடாமலே பதிவு போட்டாச்சுனு ஃபீல் பண்ணாதீங்க)

Friday, April 6, 2007

வெட்டிகாரு செப்பண்டி........

சில சமயத்திலே ஆபிஸிலே காலங்காத்திலே ஓவரா ஆணி பிடுங்க விட்டு கடுப்பேத்துவானுக. அந்தமாதிரி சமயத்திலே இருக்கிற கடுப்புக்கு எவனாவது ஒருத்தனை பிடிச்சு வம்பிழுக்கமின்னு தோணும், அப்பிடியொரு நொந்து நூலாகி நூடுல்ஸாகி வெறுப்பான சூழ்நிலையிலே மாட்டினவர் தான் நம்ம பாஸ்டன் புயல், பாலாஜி. அன்னிக்குன்னு பார்த்து தான் அவரு கொல்டி - சில திடுக்கிடும் உண்மைகள்'னு பதிவு போட்டுருந்தார். அது போதாது நமக்கு வம்பிழுக்க... ஹி ஹி...

நான்:- "வாப்பா பாலாஜி, இன்னும் தூங்கலையா?"

வெட்டி:- "வாங்க.. இப்போலாம் எனக்கு சரியா தூக்கம் வரதில்லை?"

நான்:- "ஓ இப்போ கனவெல்லாம் சுமா தானா?"

வெட்டி:- "ஐயோ நீங்களுமா? அது சும்மா கதைக்காக வந்த கதாபாத்திரம் பேருங்க!"

நான்:- "திரும்ப திரும்ப பொய் பேசுனா அது உண்மை'ன்னு ஆகிறுமா?"

வெ:- "பார்த்தீங்களா? நீங்களே அதே பொய்'ன்னு ஒத்துக்கிறீங்க?"

நா:- "ஏலேய் நான் சொன்னது நீயி எங்ககிட்டே சொல்லுவியே? இல்லே! இல்லேன்னு சொல்லுற அந்த பொய்யை பத்தி மக்கா"

வெ:- "அண்ணே! ஒங்களுக்கு இன்னிக்கு வேலை எதுவும் இல்லியா?"

நா:- "ஆமாம்.. ஆனா இன்னிக்கு ஒன்க்கிட்டெயிருந்து உண்மை வரவைக்கிறது இன்னிக்கு என்னோட பெரிய வேலையே!"

வெ:-" அப்போ சரி! அதை உண்மைன்னு வைச்சுக்கோங்க! இப்போ வேற டாபிக் பேசலாம்!"

நா:- "இன்னொரு நாள் அந்த வேற டாபிக்கை பத்தி பேசலாம்! இன்னிக்கு சுமா டாபிக் பத்தி மட்டுமே பேசுவோம்!"

வெ:- ":(((((((((((("

நா:- "எதுக்கு இத்தனை அழுவாச்சியை போடுறே?"

வெ:-" பின்னே அழாமே? என்ன செய்யுறது? நீங்க இந்தமாதிரியெல்லாம் கேள்வி கேட்கிறது வெளிநாட்டு சதினாலே தான்!"

நா:- "ஏலேய்! என்ன சதி இடியாப்பத்துக்கு சொதி'ன்னு பேசிட்டு இருக்கே? உண்மைய சொல்லு? அது நிஜத்திலே நடந்த கதையா? இல்லய்யான்னு?"

வெ:-"ஐயோ அது கற்பனை கதை தாண்ணே!"

நா:- "அப்பிடின்னா ஏன் அடுத்து இந்தியா வர்றப்போ சென்னைக்கோ இல்ல பெங்களூருக்கோ வர்றாமே நேரா ஹைதராபாத்'க்கு போறே? சரி இதுக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லுவே! அந்த கதை நீ சொல்லுற அதே எழுதி எவ்வளோ நாள் ஆச்சு! இப்போ எதுக்கு தூசு தட்டி மறுபடியும் எடுத்து வைச்சிருக்கே? அப்போ ஏதோ காரணம் இருக்கு இல்லியா?"

வெ:- "இப்போ வாய் விட்டு அழுதுட்டு இருக்கேன்! என்னை விட்டுருங்க!"

நா:- "டேய் டேய் நீயாவது அழுவுறதாவது? அதெல்லாம் செய்யமாட்டே'ன்னு தெரியும், ஆமா லவ் பண்ண பொண்ணு தேடுனோப்போ ஏன் தெலுங்கு பொண்ணை செலக்ட் பண்ணினே? கொல்டிஸ் நிறைய வரதட்சிணை கொடுப்பாங்கன்னா?"

வெ:-" அண்ணே நான் ஆணியே பிடுங்கலே! என்னை இப்போதைக்கு விட்டுறுங்க!"

நா:- "அடடே இப்பிடியெல்லாம் வடிவேல் வசனம் பேசுனா நாங்க சிரிச்சிட்டு விட்டுருவோமா? உண்மைய சொல்லுடி கண்ணு? எதுக்கு ஒன்னோட விமானம் ஹைதராபாத்'லே தரையிறங்க போகுது'ன்னு?

வெ:- "ஐயோ! எதுக்கு இப்பிடி அப்பிராணியே போட்டு பாடாப்படுத்துறீங்க? நான் நல்லவண்ணே!"

நா:- "இப்போ யாரு நீ நல்லவன் இல்ல! கெட்டவன்னு சொன்னது! இப்பிடி கண்டம் விட்டு கண்டம் பேசுறதே சுமா'ன்னா யாரு? அவளோட உண்மை பேரு என்னான்னு தெரிஞ்சுக்க தான்?"

வெ:-"அண்ணே டிவியிலே வர்றமாதிரியே பேசுறீங்க! நான் சீக்கிரம் இந்தியா வர்றது உண்மைதான், ஆனா ஒங்களுக்கு எப்பிடி தெரிஞ்சுச்சு? அதுமில்லாமே ஹைதராபாத் வரதுக்கு எப்பிடி தெரிஞ்சது?"

நா:- "அதுதானே! அப்பிடி வா வழிக்கு? அப்போ நீ இந்தியா வர்றதும் உண்மை அதிலே ஹைதராபாத் போறதும் உண்மை! அதிலே சுமா'வே மீட் பண்ணப்போறதும் உண்மைதானே?"

வெ:-"உண்மை!உண்மை'ன்னு ஏண்ணே இப்பிடி பேசியே உசுரை வாங்குறீங்க?"

நா:- "நீ எவ்வளோ நாளா அந்த சுமா பொய் பொய்'ன்னு சொல்லிட்டு இருந்தே? நீ வர்றப்போ ஒன்னயே வரவேற்க பெரிய ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு ராசா!"

வெ:- "என்ன எல்லாருக்கும் பண்ணுறமாதிரி கரகாட்டம் வைச்சு வரவேற்க போறீங்களா??"

நான்:- "என்னாப்பா இப்பிடி சொல்லிட்டே? நீ இங்கே வந்து இறங்கிறப்போ ஏர்போர்ட்'க்கே சாம்பிராணிப்புகை போடுற நாலு பேரை கூட்டிட்டு வந்து புகைமண்டலம் உண்டாக்கி விடுறோம்! ஒரு பக்கம் நீ நடந்து வர்றப்போ இன்னொரு பக்கத்திலே இருந்து சுமா நடந்து இல்ல ஓடிவர்றாங்க, ஒங்களுக்கு சைடுலே துணை நடிகை நாலு பேருக்கு உஜாலா'லே முக்கியெடுத்த துணியை உடுத்த சொல்லிட்டு ஓடி வர்ற சொல்லுவோம், இந்த மூவ்மெண்ட் எல்லாமே லூஸ் மோஷன்'லே நடக்கும். இன்னொரு முக்கியமா டொய்ங் டொய்ங்கு'ன்னு காட்டுதனமா ஒரு பாட்டை தெலுங்கு மீசீக் டைரக்டரை விட்டு பாட்டு பாடச்சொல்லி பேக்கிரவுண்ட்'லே வேற போடுவோம்! "

வெ:- "அடபாவிகளா! ஏய்யா இப்பிடியெல்லாம் கொலைவெறியோட திரியீறீங்க?"

நா:- "ஆஹா இன்னொன்னு மிஸ் ஆகிடிச்சு! நீ ஒரு பக்கம், சுமா ஒரு பக்கம் இன்னொரு பக்கம் துணை நடிகைஸ், அதிலே இன்னொரு பக்கம் நாங்கெல்லாம் ஒட்கார்ந்துகிட்டெ பார்ப்போம்"

வெ:-" நாங்கெல்லாமின்னா யாரு? யாரு?"

நா:- "ம்ம் அதுவா? நானு,தம்பி,புலி,ஜிரா,விவசாயி,அபிஅப்பா,கொத்ஸ், இன்னும் இங்கே நான் சொன்னதவிட நிறைய பேருக அதாவது ஒன்னோட ரசிககண்மணிகள் எல்லாரும் வருவாங்க!"

வெ:- "ஆஹா மொத்ததிலே என்னைய வெச்சு படமே எடுக்க போறீங்க! எனக்கு தூக்கம் வருது! போயி தூங்குறேன்!"

நா:- "கனவிலே சுமா மட்டுமே வர்ற வாழ்த்துக்கள்"

மக்களே இந்தமாதிரி நாமெல்லாம் ஜாலியா பேசுவோமா? உங்க ஐடி கொடுங்க.....

Tuesday, April 3, 2007

காதல் அரும்பிய தருணங்கள்!!!

காலைப் பனி
ஈரம் உதிர்க்கும் இலைகள்
வெயிலறியா மரத்தடி
உன் தலையை சுமந்த என் நெஞ்சம்
கண்களிரண்டையும் கலக்கவிட்டு தொடுக்கிறாய்
கேள்விக்கணை ஒன்றை!
காதல் கொண்டதேனென்று

பேருந்து பயணமென்றில் சிறு தூக்கத்திலும்
அறியாமலே நீ விரல் சூப்பிய கணங்களை
சொல்ல வாயெடுத்தும் வேண்டாமென்று
புன்னகை துளிர்த்தேன்

புன்னகைக்கு புன்னகையையே
பதிலிறுக்கும் இந்தப் புன்னகைதான்
காரணமென்று
வார்த்தைகளின்றி புன்னகைக்கிறேன்,
சொல்லித் தெரிவதில்லை காதல்.

Tuesday, March 27, 2007

weirder habits .....

என்கிட்டே இருக்கிற விசித்திர குணத்தை சொல்லணுமின்னு நம்ம பாசக்கர பயப்புள்ள ஜி கூப்பிட்டுருக்காரு, அவரு கூப்பிட்ட அஞ்சு பேருகளிலே வெட்டி, CVR,இம்சையரசி, இணைய பாடகி மருதம்ன்னு எல்லாரும் பதிவு போட்டுட்டாங்க. என்னை இன்னும் அவரு கூப்பிட்டாரு, அப்புறம் இவரும் கூப்பிட்டாருன்னு பொய் சொல்லமுடியலைங்க, ஏன்னா நம்ம ஜியை தவிர வேற யாரும் என்னை கூப்பிடலை, என்கிட்டே இருக்கிற விசித்திரமான கிறுக்குத்தனமான லூசுத்தனமான, பைத்தியக்கார தனமான மெண்டல்தனமான எல்லாத்தையும் எத்தனை தடவை தான் அனுபவமின்னு மொக்கதனமான பதிவு எழுதுறது.....?? :)




வாசிப்பு:- புத்தக வாசிப்பு இல்லைன்னா நானே இல்லேன்னு சொல்லணும், எந்நேரமும் ஏதாவது ஒன்னை வாசிச்சுட்டு இருப்பேன், எங்க என்ன கிடைச்சாலும் அதிலே என்னமாவது எழுதிருக்கான்னு வாசிப்பேன், ஒரு ரூவா கொடுத்து வாங்கி திங்கிற கடலை பொட்டலம், பார்சல் கட்டி வர்ற சோத்து பொட்டலம், பெரிய ஹோட்டலிலே கொடுக்கிற டிஸ்யூ பேப்பரிலே இருக்கிற அவங்களோட முகவரி இப்பிடி எந்தவொரு பேதம் காட்டாமலே படிப்பேன், வாசிக்கிறதிலே அப்பிடியொரு வெறித்தனம்.

சின்னவயசிலே எனக்கும் என்னோட அக்காவுக்கும் வெள்ளிக்கிழமை காலையிலே சிறுவர்மலர் படிக்கிறதுக்கு பெரிய சண்டையே வரும், அதுவும் எனக்கும் அந்த புத்தகம் வந்ததும் மொத ஆளா நாந்தான் படிக்கனுமின்னு ஒரு பைத்தியம் உண்டு, இன்னும் இவ்வளவு பெரியாளா ஆனபிறகும் காலையிலே எந்திரிச்சதும் நீயூஸ் பேப்பரை முதலில் யாரு படிக்கிறதுன்னு எங்கப்பாவுக்கும் எனக்கும் பயங்கர சண்டை வரும், அதுவும் நீயூஸ்பேப்பர் படிக்கிறப்போ அது ஒன் பை ஒன்'ஆ இருக்கணும், நீயூஸ்பேப்பர் படிக்கிறதை மொதப்பக்கத்திலே இருந்து கடைசி பக்கம் வர்றவரைக்கும் வைச்சிட்டே படிக்கிறது தான் நீயூஸ் பேப்பருக்கு மரியாதைன்னு நினைக்கிறவன் நானு, ஆனா எங்கப்பா நான் படிக்கிறோப்ப நடுப்பக்கத்தை கொடுன்னு கேட்டு நச்சரிப்பார், நான் எதையும் கொடுக்கமாட்டேன், இதுனாலே பெரிய சண்டை வந்து எங்கப்பா நடுப்பக்கத்தை பிடுங்குவாரு, நான் அவரோட கோபத்தை கூட்டுறதுக்கு நீயூஸ் பேப்பர் மொத்தயும் ஸ்டாப்ளர் பின்'னடிச்சுட்டு படிப்பேன்.

படிக்கிற புத்தகங்களிலே கதை,கட்டுரை,பிக்சன்,லொட்டு லொஸ்குன்னு எதையும் பிரிச்செல்லாம் வாங்கி படிக்கிறதே கிடையாது, குறிப்பிடத்தக்க முறையிலே என்னை கவர்ந்த எல்லா புத்தகங்களை கணக்குவழக்கிலாமே திரும்ப திரும்ப படிப்பேன், சிலசமயம் கல்கி அவரோட செல்வனை பத்தி சொல்லுறதையும் ஷிட்னி ஷெல்டன் தன்னோட கதாநாயகியோட கதையை ஆரம்பிக்கிறதையும் படிப்பேன்,படிப்பேன், படிச்சிட்டே இருக்கேன்.

ஞாபக சக்தி:- இது என்க்கிட்டெ இருக்கிற பெரிய பிரச்சினை, முக்கியமான கடவுசொல் எல்லாம் மறந்து தொலைஞ்சிரும் ஆனா நான் யாருக்கிட்டே வாங்கினதோ இல்லை நான் யாருக்கோ கொடுத்த வசவுசொல் மட்டும் அப்பிடியே ஞாபகம் இருக்கும். நான் திட்டு வாங்கிருந்தேனா அதை ஞாபகம் வைச்சிட்டு அவங்கிட்டே பேசவே மாட்டேன், அவங்களே வந்து தான் செஞ்சது தப்புன்னு வந்து கேட்டாலும் அந்த மன்னிப்பை ஏத்துக்காத மனோபாவமெல்லாம் இருந்துச்சு, ஆனா இப்போ எல்லாம் கொஞ்ச கொஞ்சமா என்னையே நானே மாத்திட்டு வாறேன், ஆனா புகை கூண்டுக்கு வெள்ளை அடிச்சாலும் லேசா தெரியிற புகை கருப்பு மாதிரி வாங்கின திட்டு வார்த்தைகளை அப்பிடியே மனசிலே வைச்சிருப்பேன்.

தனிமை:- சிலசமயங்களிலே ஆள் ஆரவமற்ற காட்டிலே நம்ம மட்டும் தனியா இருந்தா எப்பிடியிருக்குமின்னு நினைச்சு பார்த்துக்குவேன், அப்பிடியொரு சூழ்நிலை வந்தா என்னன்னெ பண்ணனுமின்னு பெரிய திட்டங்கள் மனசிலே இருக்கு. இன்னமும் வீட்டிலே வாரக்கடைசியிலே தனியா உட்கார்த்துருப்பேன், நண்பர்கள் எல்லாம் வெளியே போலாமின்னு போனாலும் சரி, நான் எங்கேயும் போகமே அப்பிடியே தனியா வீட்டுக்குள்ளே இருப்பேன், நானும் என்னை சுற்றியிருக்கிற அந்த வெறுமையும் தான் பிடிக்கும்.

அறிவுரை:- இது எனக்கிட்டே இருக்கிற கெட்டகுணம்.எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் அறிவுரையை அள்ளி தெளிப்பேன், ஒரு தடவை எங்க கம்பெனி VP கூட மீட்டிங், அவருக்கும் அங்கே வழக்கம்போலே அறிவுரையை அள்ளிக்கொட்டொ கொட்டுன்னு கொட்டி என்னையே பார்த்தாலே இப்போ ஓடிப்போயிருவாரு.ஊர்ப்பக்கம் போனா யாராவது படிக்கிற பசங்க வந்து படிக்கிறதுக்கு ஏத்தமாதிரி வேலையை பத்தி பேசிட்டா போதும், ஆரம்பிச்சிரும் அறிவுரை அய்யாசாமி பெர்சனாலிட்டி.... இப்போதைக்கு ஜாவா தான் பீக், போனத்தடவை இருந்தமாதிரி VB'க்கு இப்போ மவுசு இல்லேன்னு அள்ளித் தெளியோ தெளிச்சிருவேன்.

ஆர்வக்கோளாறு:- சும்மா இருக்கிற நேரத்திலே ஏதாவது ஒன்னே ஆர்வமா செஞ்சு பார்ப்போமின்னு ஆரம்பிப்பேன்.சிலசமயங்களிலே அந்த விஷயம் எனக்கு சம்பந்தமில்லாமே இருக்கும், ஆனா எதையாவது கத்துகணுமின்னு அதை போட்டு நோண்டுறது, வீட்டிலே அந்தமாதிரிதான் எல்லா எலக்ட்ரிக்கல் திங்க்'ஸிலே ரிப்பேர் பார்க்கிறேன்னு ஒப்பேத்திருவேன். அந்த வகையிலே எல்லாரும் எழுதுறமாதிரி நாமெல்லும் பதிவு எழுதிப்பிடாலமின்னு தைரியமா பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சது. ஆனா இன்னவரைக்கும் உருப்படியா ஒன்னுமே எழுதினதே கிடையாது. எல்லாமே ஆர்வக்கோளாறிலே ஓப்பேத்தின கணக்குதான்.

இந்த மாதிரியெல்லாம் மொக்கை போடாமே நல்லா எழுதமின்னு கூப்பிட போற அஞ்சு பேர்:-

1) தல கைப்புள்ள,
2) விவசாயி இளா,
3) மதுரை தங்கம் தீக்ஷ்ண்யா,
4) பாசமலர் அவந்திகா,
5) பாசமலர் தூயா,

தலைப்புக்கு காரணமறிய இங்கே சுட்டுங்கள்.;)

[பிற்சேர்க்கை:- இந்த மாதிரி மடத்தனமா தலைப்பு வைச்சதுக்கு நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்... :( ]

Friday, March 23, 2007

"When I was in US..."

"The United States of America is a country of the western hemisphere, comprising fifty states and several territories. Forty-eight contiguous states lie in central North America between the Pacific and Atlantic Oceans, bound on land by Canada to the north and Mexico to the south; Alaska is in the northwest of the continent with Canada to its east, and Hawaii is in the mid-Pacific. The United States is a federal constitutional republic; Washington, its capital, is coextensive with the District of Columbia (D.C.), the federal capital district."


இதெல்லாம் நான் சொல்லலைப்பா, விக்கிபீடியா'லே இருக்கு.. இப்போ எதுக்குடா இதுன்னு கேட்கிறீங்களா? அப்போ கிழே இருக்கிறத படிச்சி பாருங்க...

நம்ம பசங்க அடிச்சு பிடிச்சு புதரகத்துக்கு போயிட்டு திரும்பி வந்ததுக்குப்புறம் அவனுக பண்ணுற அலப்பறை இருக்கே, ஐயோ சாமி அதெல்லாம் சொல்லி மாளாதுய்யா? என்னோமோ செவ்வாய்கிரகத்துக்கு ராக்கெட்'லே போயி அப்பிடியே அவங்க வீட்டுவாசலிலே இறங்கின கணக்கா பந்தா கட்டுவானுக. காலையிலே எந்திரிச்சு குளிக்கனுமிங்கிற பழக்கம் எல்லாம் போயி கிழிச்சு போன கோணி மாதிரி இருக்கிற ஜீன்ஸ் ஒன்னே போட்டுகிட்டு அமெரிக்கா'லே இது வாங்குனது'ன்னு காட்டுறதுக்காக சட்டைபிராண்ட் பேரை வெளியே தெரியுறமாதிரி இருக்கிற நாலு சட்டையை வாங்கிட்டு வந்துட்டு போட்டு திரிவாய்ங்கே. அதுக்குமேலே நாத்தமருந்து வேற அடிச்சு அவனையும் கடிக்கலாமின்னு வர்ற கொசுவெல்லாம் கொன்னு போட்டுப்பிடுவாய்ங்கே.

ஆரம்பகாலங்களிலே முக்குகடையிலே கொஞ்சகாணு தண்ணி வாங்கி குடிக்கவே அந்த கடைக்காரருக்கு ஐஸ் வைச்சிட்டு திரிஞ்ச பயலுக எல்லாம் அங்கிட்டு போயிட்டு வந்ததும் அந்த கடைக்காரருகிட்டே ஐஸ் மினரல் வாட்டருன்னு ஐநூறு நோட்டை எடுத்து காட்டுவானுக.

அதே கடையிலே எட்டணா கொடுத்து ரெண்டு தேன்முட்டாயி வாங்கினதெல்லாம் மறந்துட்டு "கெட் மீ கேண்டி"ன்னு கேட்கிற பயலுக நாக்கை இழுந்து பிடிச்சு அறுக்கத்தான் தோணும்.நம்மளை பின்னாடியே வர்ற மணிநாயிக்கு 2ரூவா கொடுத்து டைகர் பிஸ்கட் வாங்கி போடலமின்னு நினைச்சா ஓ டாக்'க்கெல்லாம் ஏண்டா குக்கீஸ்'ல்லாம் போடுறீங்க?'ன்னு கேட்கறவங்களை ஏண்டா அமெரிக்கா பைபாஸ் ரோட்டிலே வச்சு லாரிகாரய்ங்கே தூக்காமே விட்டுயாங்கன்னு நாமே கடுப்போட கேட்டா அதிலேயும் அதுக்கு அவிய்ங்கே கொடுக்கிற நொணநாட்டிய பதிலு, "அங்கே நாங்கெல்லாம் பைபாஸ் ரோடு'ன்னு சொல்லமாட்டோம், Freeway'ன்னு தான் சொல்லுவோம்... :(

அடேய் அரைடவுசரு மண்டையங்களா நாலு மாசம் அமெரிக்கவிலே குப்பை கொட்டுனதுக்கே இம்பூட்டுடா, புஷ்'க்கு PA வேலை எதும் பார்த்துட்டு வந்துட்டா நம்ம பக்கத்திலே வர்றதுக்கு மோப்பநாயை விட்டு சோதனை பண்ணிப் பார்ப்பாய்ங்கே போலே!

சரி போதுமிடா வா இவனுக்கு நாலு பொரட்டா'வே வாங்கி கொடுத்து வீட்டுக்கு பத்திவிட்டுறனுமின்னு எப்பவும் போற ஹோட்டலிலே போனா அங்கேயும் வந்து ஆரம்பிச்சிறவனுக. நீங்க சமைக்கிறதுக்கு யூஸ் பண்ணிற ஆயில் ஃபேட் ஃபிரி'தானே'ன்னு விசாரிக்கிறதும், காசு கொடுக்கிறேன்னு சொல்லி பந்தாவா போயி கிரிட்டிட்கார்ட் அக்செப்ட் பண்ணுவீங்களா'ன்னு அவியங்கே பர்சிலே அடுக்கி வைச்சிக்கிற அஞ்சாறு அட்டைகளை எல்லாருக்கும் தெரியுனுமினும்கிறத காட்டிக்க கேட்கிறதும் நினைச்சு பார்த்தாலே இன்னும் நாலு அணுகுண்டுகளை போட்டு அவிய்ங்களை பூரா சிதைக்கனுமின்னுறே அளவுக்கு கோவம் வரும்!.

இம்புட்டு அலம்பல் பண்ணிக்கிட்டு இருக்கும்போது மூச்சுக்கு முன்னூறு தடவை, "What a hell, i feel sultry ,அங்கே அடிக்கிற குளிருக்கு நாங்க எப்பவுமே ஜெர்கின் போட்டுதான் திரிவோமின்னு ஏகத்தாள பேச்சு வேறே? இதெல்லாம் தாண்டி பெரிய கொடுமை என்னான்னா தான் ஒரு ஃபாரின்ரிட்டன்'கிறத காட்டிக்கிறதுக்கு வந்து பத்து மாசமானலும் தூக்கிட்டு திரியுற பேக் எல்லாத்திலேயும் ஃபிளைட் டேக்'ஐ மாட்டிக்கிட்டு திரிவானுக.

டிஸ்கி #1:-

இந்த பதிவு கிழ்கண்ட யாரையுமோ இல்லே அவங்க போட்ட போஸ்ட்'க்கு எதிர்வினை இல்லைன்னு அடிச்சு சொல்லிக்கிறேன்.

தேன் சிறில்
வெயிலில் மழை ஜி
ஜாவா பாவலர்

டிஸ்கி #2:-

தலைப்புக்கு காரணம் அவிய்ங்கே இங்க வந்ததும் அடிக்கடி சொல்லுற வார்த்தை:)

Thursday, March 22, 2007

ஏலேய் நாங்கெல்லாம் மருதக்காரய்ங்கே!!

மதுரை அல்லது மருத என எம்மக்களால் அழைக்கப்படும் சுற்றுவட்டாரத்தின் கலாச்சாரத்தையும் பழக்கவழக்கத்தையும் பிறரிடம் கொண்டுசேர்க்கும் ஊடகங்களான ஏடுகளும்,திரைப்படங்களும் காலம்காலமாய் முயற்சித்து கொண்டுருக்கின்றன. அம்முயற்சியில் வெற்றியெனும் நிலையை அடைய முயற்சித்த திரைப்படம் தான் பருத்திவீரன்.

எம்மண்ணுக்கே உரிய அந்த புழுதிகலந்த காற்றும், எப்பவோ நீர் கண்டு அதைப்போலே திரும்ப கிடைக்குமான்னு எதிர்ப்பார்த்து காத்து கிடக்கும் கரிசல் நிலம்,முன்னோர் காலத்தில் கரை புரண்டு ஓடியதுன்னு அடையாளம் காட்ட வாய்க்கால் இப்பிடி எல்லாவகையும் அப்பிடியே அந்த மண்ணின் மணம் மாறாமல் பார்க்கும் கண்களில் விரியும் படியாகவே காட்சியமைப்புகளில் காண்பித்துவிட்டு கதைமாந்தர் மட்டும் அதற்கு சம்பந்தமில்லாமல் அமைந்துவிட்டால் அது விழலுக்கு இறைந்த நீர்தான்.ஆனால் இந்த நீர் நிலங்களை பசுமைப்படுத்த விளையும் நிலங்களில் பாய்ந்தோடும் தன்மை வாய்ந்தது. பாய்ந்தோடும் வெள்ளம் ரசிக்கும் நம்மை கொஞ்சமாய் சிரிக்கவிடுகிறது,நம் நினைவு மூட்டைகளில் வேகத்துடன் பாய்ந்து அதை சற்றே பிரிந்துவிடுகின்றது. போலி ஒப்பனைப்பூச்சுகளில் பேசித்திரியும் எதார்த்த வசனங்கள் கொஞ்சம் கூட படத்திலே கிடையாது,அனைத்து நிஜமாய் நம் வாழ்வில் நாம் சாதாரணமாக பேசும் பேச்சு வழக்கே இப்படத்தின் பெரிய பலம்.ஆரம்பத்தில் இருந்து படத்தின் இறுதிக்காட்சியின் இறுதி வார்த்தை வரை அப்பிடியே மருதச்சுற்றுவட்டார மொழிவளத்தின் சுத்தநீரில் தோன்றும் பிம்பமே அது, கடுகளவெனும் பிசிறுதனை கண்டுபிடிக்க முடியவில்லை.



பருத்திவீரனாக மார்கண்டய நடிகர் சிவகுமாரின் இளையமகன் கார்த்தி, அவருக்கு சித்தப்பா செவ்வாழையாக சரவணன், முத்தழகாக பிரியாமணியும் இன்னும் பலர் தங்களின் கதாப்பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப அப்பிடியே அச்சுஅசலாக வாழ்ந்து இருக்கின்றனர். படத்தின் தொடக்கத்தில் திருவிழா நடக்கிறது என விரியும் காட்சியில் ஒவ்வொரு அசைவிலும் கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், என கிராமத்து மக்களின் பொழுதுப்போக்கினையும் மொட்டை இடுதல், குழந்தைகளுக்கு காது குத்துதல்,பொங்கல் வைத்தல் என அம்மக்களின் தெய்வநம்பிக்கையும் விளங்க வைத்து இயக்குனர் கதையின் நாயகனான பருத்திவீரனை திருவிழாவில் எக்குத்தப்பாக கத்தியால் குத்துவதாக அறிமுகப்படுத்துகிறார்.அவனுக்கு பெயர் பருத்திவீரன் என்றாலும் அவ்வூரில் அழைக்கப்படும் சண்டியர் என்ற பெயருக்கேற்றமாதிரி வீரனின் கதாபத்திரம் அந்த காட்சியே விளங்கவைத்து விடுக்கிறது, அதேபோல் முத்தழகு என்னும் கதையின் நாயகியும் பள்ளியில் படிக்கும் மாணவியாகவும் அவளுக்கும் கதாநாயகன் மேலே தனிப்பட்ட அழமான பிரியம் இருப்பதாகவும்,அவனுக்காக தம் பெற்றோர்களை எதிர்க்குமளவு தறுதலையை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக வாழ்ந்து இருக்கிறார் பிரியாமணி. அவருக்கு ஏன் அப்பிடியொரு அவன்மேல் அப்பிடியொரு ஈர்ப்பு என்று சொல்ல வெள்ளைகருப்பு காட்சிகள் விரிகின்றன. ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இருக்கும் ஆலமரமும் அதன் வேர்களை பற்றி வானத்தில் பறக்கும் சிறுவர்களும், மரத்தின் நிழலில் அமர்ந்துவிளையாடும் சிறுமிகளும் அடடா காட்சியமைப்பு அட்டகாசம். சிறுவர்கள் விளையாட்டு சண்டையில் ஒரு சிறுவன் முத்தழகை கல்கிடங்கு or கிணத்துக்குள் தள்ளிவிட்டு ஓடிவிட வீரன் தான் தண்ணிரில் குதித்து முத்தழகை காப்பற்றுக்கிறான், அதிலிருந்து அவளுக்குள் பிறக்கிறது கன்னுக்குட்டி காதல். கடைசி காட்சியில் அவனோடு சேர்ந்து வாழப்போகும் போது அம்மாவை அறுவாளால் வெட்டப்போகுமளவுக்கு வெறித்தனமாகவும் மாறுகிறது அந்த காதல்.

கதாநாயகியின் அப்பாவாக பொன்வண்ணன் தன்னையொரு சாதீயபிம்பகாக காட்டி கொண்டு திரிகிறார்। தன் மனைவியின் அண்ணன் குறத்தியொருத்தியிடம் சாராயம் வாங்கிவிக்கும் செயல் தனக்கு பிடிக்காமல் போக, ஒரு பிரச்சினையில் அந்த பெண்மணி இவர்கள் ஆளு ஒருவரை கொலைச் செய்துவிட பழிக்குபழியாக அந்த பெண்மணியை கொலைசெய்கிறார்கள்। அப்பெண்மணியின் மகளை பொன்வண்ணனின் மனைவிஅண்ணன் கல்யாணம் செய்துகொண்டு வர தனக்குள் எந்திரிக்கும் சாதீயபிரவாகத்தில் அவர்களை பிரிந்து வருகிறார்। திருமணம் முடிந்தவர்கள் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து சாலைவிபத்தில் இறந்து போக அதை எடுத்து வளர்க்கும் சித்தப்பா செவ்வாழையாக நடித்து இல்லையில்லை வாழ்ந்துருக்கும் சரவணனின் கதாப்பத்திரம் அற்புதம், ஆனாலும் மகன்முறை வந்தாலும் அவனோடு தண்ணியடிப்பது என உறுத்தினாலும் கிராமங்களில் நிறையவே அந்தமாதிரியான சுவாரசிய மனிதர் பலரை பார்த்திரமுடியும்.




வழக்கமான சினிமாக்களில் கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கும் அதேமாதிரியான நேர்க்கோட்டு திரைப்படங்களில் கொஞ்சமே விலகியே இருக்க இயக்குனர் ரொம்பவே கஷ்டப்பட்டுருக்கிறார், அது எவ்வாறெனில் ஒருதலையாக காதலிப்போர் தீடீரென்று ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டு அப்பிடியே கனவில் வெளிநாட்டில் டூயட் பாட்டு பாடுவதாக காட்சியே வைக்கவில்லை.உசுரை காப்பத்தியவனுக்கே தன்னை அர்பணிக்க போவதாய் வாழும் கதாநாயகியும் ஆனால் அவளின் உள்ளன்பை நிரகரிக்கும் கதாநாயகியாய் நகரும் காட்சியமைப்புகளில் மெல்லிய நகைச்சுவை அதுவும் அந்த மதுரை மண்ணுக்கே உரிய குசுப்பு சேட்டைகளும் திகட்டவே திகட்டாத ஒன்று. மொட்டவெயில் அடிக்கும் கல்குவாரி உச்சியில் உட்கார்ந்து தண்ணியடிப்பதும், கம்பக்காட்டுக்குள்ளே வழியில் போவனை இழுந்து சிட்டு விளையாடி காசு பறிக்கும் காட்சிகள் அருமை.இப்பிடியே கலகலக்கப்பாக படத்தில் உச்சகட்ட காட்சியில் ஒரு சோகம் பிடிக்கப்போகிறது என்ற வழக்கத்துக்கு ஏற்ப காட்சியமைப்புகள் நகர்கிறது, முத்தழகு வீரன் முன்னாடியே அவன் சித்தப்பா பற்றி அவதூறாக பேசிவிட ஆத்திரப்பட்டு அவளை அவன் அடிக்க இன்னும் நகரும் காட்சிகளில் அவனுக்கும் காதல் பற்றிக்கொள்கிறது. எப்பிடியென்றால் முரட்டு கரும்பாறையை கீறி மெல்லியதாய் முளைவிடும் செடியை போல், கரட்டுகட்டு தாடிமுகத்தில் பூக்கும் புன்னகையில் பிறக்கிறது காதல், இதுவரைக்கும் நக்கல் நையாண்டியாய் நகர்ந்த கதை இருவரும் காதலிக்க ஆரம்பித்ததும் இன்னும் வேகமெடுக்கிறது.

இவ்வளவும் இயன்றவரை கதையை சொல்லிவிட்டு அதீத வலியை கொடுக்கும் உச்சக்கட்ட காட்சியை கொடுப்பதுதான் இப்படத்தின் இயக்குநரின் வெற்றியாக அவர் நினைந்திருந்தால் அது நூற்றுக்கு நூறு சதவிகத்தில் அவர் வென்று உள்ளார் என்றே சொல்லவேண்டும். எந்தவொரு கண்டிப்போ, முறைப்படுத்தப்பட்ட பாசப்பிணைப்புகள் அற்ற ஒருத்தன் தான் செய்யும் தவறுக்கு தன் உயிரில் நுழைந்த உறவை இழப்பதினால் மட்டுமே அவனுக்கு தான் செய்த தவறுகளுக்கு கிடைக்கும் தண்டனையென்று மவுனமாய் பதில் அளிக்கிறார் இயக்குநர்.

Wednesday, March 7, 2007

மடச்சாம்பிராணி'யின் பா.கே.ப.பி

பொன்ஸ்'க்கா என்னிடம் ஒப்படைத்த, பார்த்ததில், கேட்டதில் படித்ததில் பிடித்தது சங்கிலித்தொடர்'க்கு என்னத்தை எழுதலாமின்னு யோசிச்சி யோசிச்சு பார்த்தேன், அப்புறந்தான் தெரிஞ்சது முளை இருக்கிறவங்க யோசிச்சாதான் எதாவது வரும், என்னைமாதிரி காலிமனை கோஷ்டிகளுக்கெல்லாம் ஒன்னுமே தோணாதுக்கிற உலக ரகசியத்தை ரொம்ப நேரமா விட்டத்தை வெறிச்சு பார்த்திட்டே ஒரு பேனா கையிலே பிடிச்சிட்டு அதை வேற முகவாட்டுலே தட்டிக்கிட்டே இருந்தப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

"என்னத்தை படிச்சாலும் நீ ஒன்னத்தக்கும் தேறதே மடசாம்பிராணியா இருக்கே...? நாலு நல்ல விஷயத்தையாவது பார்த்து தெரிஞ்சுக்கோ அதிலே என்ன புதுவிஷயமிருக்கோ அதை கத்துக்கோ..!!" இது எங்கப்பா சன்ரைஸ் விளம்பரத்திலே வர்றமாதிரி அடிக்கடி உபயோகப்படுத்துற வார்த்தைகள்.. அதை பொறுமையா கேட்டாலும் இன்னமும் மடசாம்பிராணியாதான் இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சது :)

ஓகே ஸ்டார்ட் மீசிக்....



பார்த்ததில்:-

ரஜினி ரஜினியாய் நடிச்ச எல்லாப்படங்களும் பிடிக்கும்.




ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், காயத்திரி......

கமலின் மிகைப்படுத்தபடாத நடிப்பில் வந்த பல படங்கள் பிடிக்கும்.


இந்தி:-

ஷோலே

லகே ரஹோ முன்னாபாய்

டான் (original & Duplicate)


ஆங்கிலம்:-



The Pied piper of Hamelin. (புத்தகத்திலே படிச்சதை விட படத்திலே நல்லா இருந்துச்சு)






ERIN BROCKOVICH (ஜீலியா ராபர்ட்ஸ்'க்காக பார்க்கலாமேன்னு பார்த்த படம், ஆனா படம் பார்த்ததுக்கப்புறம் ஜீலியா பேர் மறந்து "எரின்" தான் கண்ணுக்குள்ளே தெரிஞ்சாங்க)






The Matrix (Neo'வே லினக்ஸ் Tux'க்கு கற்பனை பண்ணிட்டு படம் பார்த்தேன்)

இன்னும் லேட்டஸ்டா இதை ரொம்பவே ரசித்தேன்...





கேட்டதில்:-


நாயகன் படத்திலே கமல் பாடிய "தென்பாண்டி சீமையிலே.."

திருமதி பழனிசாமி படத்திலே வர்ற "பாத கொலுசு பாடிவரும்"

ரோஜா படத்திலே வர்ற "தமிழா தமிழா.. நாளை உந்நாளே"

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஜெயசந்திரன் பாடிய "ஒரு தெய்வம்"

பிரிட்டனியக்கா குதிச்சு குதிச்சு பாடிய "ஓ பேபி பேபி"

JLO'வோட "வெயிடிங் ஃபார் டுநைட்"

ரிக்கியோட "மரியா...மரியா..."

படிச்சதிலே:-

--கல்கி--
பொன்னியின் செல்வன்,
சிவகாமியின் சபதம்,

--சாண்டில்யன்--
கடல்புறா,
கடல்ராணி,
யவனராணி,
இராஜதிலகம்,
........

--வைரமுத்து--
கள்ளிக்காட்டு இதிகாசம்,
கவிராஜன் கதை,
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்,
பெய்யெனப் பெய்யும் மழை,
தண்ணீர்தேசம்,
வில்லோடு வா நிலவே,
கருவாச்சி காவியம் (இன்னும் படிக்க கொஞ்சம் பக்கங்கள் இருக்கு)

--தபூசங்கர்--
விழியிர்ப்பு விசை,
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்,
திமிருக்கும் அழகென்று பெயர்,
எனது கருப்புப்பெட்டி,
மழையானவள் (இது ஓசிலே போயிருச்சு)

--இன்னும் சில--

வடிவேலுவின் "வடி வடி வேலு வெடிவேலு"
ஆண்டாள் பிரியதர்ஷணியின் "மன்மதஎந்திரம்"
சிசு செல்லப்பாவின் "வாடிவாசல்"
தா.பாண்டியனின் "சேகுவாரா"
புலவர் செம்பியன் நிலவழகனின் "பழகுதமிழ்ப் பாட்டெழுதும் பாங்கு"
முனைவர் தமிழ்ப்பிரியனின் "அனைவருக்கும் பயன்தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்"

--என்றென்றும்--

ஐயனின் திருக்குறள்..
முண்டாசு கவிஞனின் அனைத்தும்..


இவ்வளவு தூரம் படிச்சிங்களே... வழக்கம்போலே மொக்கதனமான பதிவாதான் இருந்துச்சுல்லே... அப்போ நான் மடச்சாம்பிராணிதான்னு நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க....

சரி அடுத்து இந்தமாதிரி எழுதச்சொல்லுறதுக்கு என் கண்ணு முன்னாடி வந்துப்போன உருவம், வரவனை'யிலிருந்து கிளம்பி இப்போதைக்கு தூத்துக்குடி கலங்கரைவிளக்காக இருக்கிற குட்டப்புஸ்கி செந்தில் தான்..... ;)

வாங்க வரவனையான், நீங்க குடிச்சதிலே பிடிச்சது வில்ஸ்பிட்டரும் & பழைய மங்கனுமின்னு எங்களுக்கு தெரியும் ஆனா பார்த்ததிலே பிடிச்சதும், கேட்டத்திலே பிடிச்சதும், படிச்சத்திலே பிடிச்சதும்....?? என்னென்னு சொல்லுங்க...

Thursday, February 8, 2007

ஆத்தா! நானும் சுடர் ஏத்திட்டேன்!!!



ஒலிம்பிக்'லே ஒவ்வொரு கண்டமா சுடரை தூக்கிட்டு ஒடி இன்னொருத்தவங்கிட்டே சேர்த்து அவங்களையும் ஒடவைக்கிறமாதிரியே, ஒருத்தருக்கு இன்னொருத்தர் கேள்விகேட்டு அவரு இன்னொருத்தருக்கு கேள்வி கேட்டு வர்ற சங்கிலிதொடர் இங்கே தேன்கூட்டு சுடர் பதிவா ஆகிருக்கு, முதலிலே ஏத்துனது வெட்டிவீரர் பாலாஜி, அவரு நம்ம 12B'கிட்டே குடுக்க, அவரும் வழக்கம்போலே நக்கல்நையாண்டி எல்லாம் பண்ணிமுடிச்சிட்டு அதை நம்ம அகில உலக வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தின் தல'கிட்டே கொடுக்க அதை அவரு இப்போ என்கிட்டே குடுத்துருக்காரு,

தல,
எனக்கு சின்னவயசிலே படிச்ச குறளு ஒன்னு சட்டுன்னு ஞாபகம் வந்துச்சு,ஆனா அதுக்கு சரியா அர்த்தம் வேற தெரியலை.

சரின்னுட்டு நம்ம மன்னார்'கிட்டே கேட்டேன், அவரு என்னா சொல்லிருக்காருன்னா..


இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
[517- தெரிந்து வினையாடல்]

இப்ப ஒனக்கு ஒரு காரியம் நடந்தாவணும். அத்தயும் இன்னொருத்தர் பண்ணணும்னு நெனக்கற நீ. இன்ன பண்றதுன்னு யோசி. இந்தக் காரியத்தை இன்னின்னாருதான் பண்ண முடியும்னு ஒரு லிஸ்டு போட்டு, அதுல யாரு இதுக்கு தோதா வரும்னு முடிவு பண்ணு. அந்தாளக் கூப்ட்டு 'என் ராசா! நீஇதான் கண்ணு இந்தக் காரியத்தச் சேய்யனும் எனக்காவ'ன்னு சொல்லி அவங்கிட்ட கொடுத்திடு. நீ நம்பினதுக்கே அவன் ஒனக்காவ சுத்தபத்தமா முடிச்சுக் கொடுப்பான்.


நீ எம்மேலே இம்புட்டு நம்பிக்கை வைச்சு என்னையும் மனிசனா மதிச்சு அஞ்சு கேள்வி கேட்டுருக்கே... எல்லாரும் ஒன்னய அடிக்கடி சொல்லுறமாதிரி நானும் சொல்லுறேன்.

"நீ ரொம்ப நல்லவரு தல"

1. குரூ...பெங்களூருதல்லி நிமகே இஷ்டமான, ப்ரீத்தியான நாலு சமாச்சாரங்கள் சொல்ல பேக்கோ.

ஏழித்தினி பிடி..

I) இங்கே இருக்கிற பசுமையான இயற்கைசூழல், எல்லா இடத்திலும் சின்ன அளவாவது ஒரு பூங்கா ஒன்னு இருக்கும்.

II) கர்நாடக மக்களின் மொழிவளமை. தாய்மொழிக்கு முன்னுரிமை தரதோடு மட்டுமில்லாமே இந்தி, இங்கிலிஸ்'ன்னு எல்லாமொழியையும் ஆரம்பகல்வியிலே இருந்தே ஆரம்பிக்கிறது.

III) ஹி ஹி பொண்ணுங்க.....

IV) டிராபிக் ஜாம்:)

2. அவ்வப்போது ராயலைக் கவிதை எழுதத் தூண்டுதலாக இருப்பது என்ன?

மண்டையிலே மசாலா காலியாகிறப்போ அந்த தப்பை பண்ணுவேன், அதிலே இந்த காதல் கவிதை எழுதுறேன்னு சொல்லி படிக்கிற எல்லாரையும் நிறைய தடவை வெறுப்பேத்தி இருக்கேன்.

3. உன்னோட வாழ்க்கையில நடந்த, இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி மீண்ட மாதிரி ஏதாவது ஒரு சம்பவம்/அல்லது நகைச்சுவை சம்பவம் ஒன்னைச் சொல்லப்பா?

ஒன்னா? ரெண்டா ? நிறைய தடவை நடத்துருக்கு, அதைக்கூட நான் ஏன் மாத்தினேன்னா?ன்னு பதிவை போட்டு செய்வினை வைக்கிறவங்களை தேடிப்போயி என் சொந்தசெலவிலே வைச்சிக்கிட்டேனே???

இப்போ லேட்டஸ்டா ஒன்னு சொல்லினுமின்னா போனவாரம் வெள்ளிக்கிழமை ஜிரா விட்டிலே சின்ன வலைப்பதிவர் மீட்டிங் நடத்துச்சு, நான் அவரு வீட்டுக்கு முன்னபின்னே போனது கிடையாது, அதுனாலே சரியா வழியும் தெரியாது, ஒரு இடத்திலே இருத்துட்டு அவருக்கே போன்பண்ணி நீங்களே வந்து என்னை பிக்கப் பண்ணிட்டு போயிருங்கன்னு சொன்னேன், சரி அவரு வர்றவரைக்கும் ஏன் சும்மா இருப்போமின்னு விவசாயிக்கு போன்பண்ணி நீங்க எங்கே இருக்கீங்கன்னு கேட்டேன், அவரு அதுக்கு "நானு ரொம்ப பிசி, நீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்டுட்டு அப்பிடியா எல்லாரையும் போய் மீட் பண்ணிட்டு போன் பண்ணுங்க"ன்னு சொல்லி வைச்சிட்டாரு.

ஜிரா வீட்டுக்கு போனா அங்கே பெரிய கோஷ்டியே உட்கார்த்து கும்மியடிச்சிட்டு இருத்துச்சு, முத்து தமிழினி, நாமக்கல் சிபி , கொலைவெறி படை தலைவர் செந்தழல் ரவி, காதல்முரசு அருட்பெருங்கோ, ஓமப்பொடி சுதர்சன், வீட்டுக்கு ஓனரு ஜிரா, அப்புறம் இன்னொரு எக்ஸ்டரா'வா ஒரு உருவம் உட்கார்த்திருச்சு, அவரை பார்த்ததும் சரியா யாருன்னு மட்டுபடலை, கிட்டத்தட்ட அரைமணி நேரமா பேசிட்டு இருந்தோம், ஆனா எல்லாரும் என்னைப் பார்த்து ஹி ஹி'ன்னு ஒருமாதிரியா தான் சிரிச்சுட்டு இருந்தாங்க...

கடைசியிலே முத்து "என்னா ராம் எல்லாரையும் சரியா அடையாளம் கண்டுபிடிச்சு பேசினீங்க..!ஆனா இந்த ஆசாமியை விட்டுட்டிங்க?"ன்னு கேட்டாரு, எனக்கு அவர யாருன்னே தெரியலை? இருந்தாலும் ஒரு Guess'க்கு இளா'வான்னு கேட்டேன், ஆனா மனுசன் என்னை கலாய்ச்சு தொங்கப்போடனும்மின்னே குரலை கூட மாத்தி ஆளை அதை வச்சு கூட கண்டுபிடிச்சிறகூடாதுன்னு பெரிய வில்லத்தனமெல்லாம் பண்ணிருந்தார். அங்கே இருந்த எல்லாப்பேரும் திட்டம் போட்டு என்னை ஓட்டி எடுக்கனுமின்னு பெரிய பிளான்'டோ இருந்திருக்காங்க. இளா'வுக்கு நான் போன் பண்ணுறோப்போ அவரு ஜிரா வீட்டுலே உட்கார்த்திருக்காரு. அதுவுமில்லமே நான் பேசினதை ஸ்பிக்கர்'லே வேற பொட்டு விட்டுருக்காரு.

கிட்டத்தட்ட ஒரு வருசமா பழக்கமிருந்தாலும், சங்கமின்னு வேறே ஒரே இடத்திலே கும்மியடிச்சாலும் இப்பொதான் நேரா பார்க்கிறேன். ஹீம் என்னபண்ண? விட்றா! விட்றா !இந்தமாதிரி பல்பு வாங்கிறது நமக்கு மொததடவையான்னு மனசை தேத்துக்கிட்டேன். எல்லாரும் ஹெக்கெபிக்கென்னு சிரிச்சு முடிச்சதும் வழக்கம்போலே ஒரு வீரவசனம் "நான் உள்ளே வர்றப்பவே நினைச்சேன், நீங்க இளாவான்னு கேட்கலாமின்னு தோணுச்சு"ன்னு உதார் விட்டேன்.

4. மிசஸ் ராயல் பத்தி மிஸ்டர் ராயலின் கனவுகள் என்னென்ன?

அது கனவு எல்லாம் இல்லை....தவம்ன்னு கூட வைச்சுக்கலாம். காரணம் என்னான்னா என்னாலே ஒரு சரியான முடிவு எடுக்கமுடியாது, அப்பிடியே எடுத்தாலும் எங்கேயாவது ஒரு இடத்திலே மாட்டிக்கிட்டு பே'ன்னு முழிப்பேன், அதுவுமில்லாமே மெனக்கெட்டு ஊதி ஊதி எரிச்சா எரியிற வாழைமட்டை மாதிரி வேறே நானு,ஒருத்தர் தார்குச்சியை வெச்சுக்கிட்டு அடியை போட்டு விரட்டுனா தான் என்னைலே வேலையே பார்க்கமுடியும். அதுனாலே என்னை வழிநடத்துற எஜமானியா என்னோட மிஸ்ஸஸ் வரனுமின்னு ஆசை இருக்கு.

5. தமிழ் திரையுலகில் உங்களைக் கவர்ந்த இரு திரைப்படக் காட்சிகளைச் சொல்லவும். ஏன் பிடிச்சிருக்கும்னும் சொல்லணும்?

I) இப்போ திடீரென்னு முளைச்சு நான் லிட்டில், பாட்டிலு சூப்பர்ஸ்டார்'ன்னு சவுண்ட் விடுறாய்ங்கே, நம்மளோட எப்பவும் சூப்பர்ஸ்டார் நடிச்ச படமான 'ஆறிலிருந்து ஆறுபது வரை' எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலே ஒரு காட்சியிலே ஏழ்மை நிலையிலே இருக்கிற கதாநாயகன் தன்னோட சகோதரி வீட்டுக்கு போறோப்ப தன்னால் இயன்றவரையிலே வாங்கிட்டு போனதை அவள் உதாசினப்படுத்திரதும், அதுக்கு ரஜினி தன்னோட இயலாமையை நினைச்சிட்டு அப்பிடியே கலங்கின கண்களோடு வெளியே வருவார். மேலும் அவருமேலே தங்கை இன்னும் சுடுவார்த்தைகளை பிரயோகிப்பாள். அதையும் அமைதியா கேட்டுட்டு வெளியே வருவாரு..... இப்போ எங்கேய்யா எங்க தலைவர்...???

II) பதினாறு வயதினிலே படத்திலே வர்ற "ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் மட்டும் வளர்க்கலை! அதுக்கு பதிலா என்னை வளர்த்துச்சு!!!" வசனத்தை நாமே நிறைய இடத்திலே கேட்டுருப்போம். ஆனா அந்த வசனம் வர்ற சூழ்நிலையான கதாநாயகி எந்தவொரு ஆதரவும் இல்லாமே உடல்நிலை சரியில்லாத நிலையிலே அருகிலே இருந்து அவளை கமல் கவனித்துவிட்டு அப்பிடியே தூங்கிருவாரு. ஸ்ரீதேவி கண்முழிச்சு பார்த்து சந்தேகம் + அருவெருப்பு பார்வையோட பார்க்கிற அந்த தருணத்திலேதான் கமல் அந்த வசனம் பிரயோகிப்பார்.

அப்பாடி அஞ்சு கேள்விக்கும் பதில் சொல்லுறதுக்குள்ளே மண்டை காய்ச்சுருச்சுடா சாமியோவ்... இப்போ நான் வேற அஞ்சு கேள்வி கேட்கணுமா???யாரை பிடிக்கிறது, அவங்ககிட்டே என்ன கேட்கிறதுன்னு ஒரே கன்பியூசனு? "ஐயோ ஐயோ'னு உட்கார்ந்து அழாத குறையா இருந்தேன்." ஏன்னா நாப்பாட்டுக்கு எதாவது விளையாட்டா கேட்கப்போக அது வேறமாதிரி அவங்க புரிஞ்சுக்கிட்டா என்னப்பண்ணுறதுன்னு பயம் வேற தொத்திக்கிருச்சு. ரொம்ப நேரமா யோசிச்சு கடைசியா சிக்கினவங்க நம்ம கவிதா'க்கா.

ஓகே ஓவர் டூ கவிதா




1) இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. குறளுக்கு அர்த்தம் தெரியுமாக்கா?

2) அணிலு அணிலுன்னு சொல்லுறீங்களே... அது உங்க மல்டிப்பிள் பர்சனாலிட்டியிலே ஒன்னா?

3) இப்போ இருக்கிற வட்டத்தை தாண்டி நீங்க ரசிக்கிற விஷயங்கள் என்னென்ன?

4) இன்னவரைக்கும் நீங்க நினைச்சு நினைச்சு சிரிக்கிற சம்பவம் என்ன? (அதை படிச்சா எங்களுக்கும் சிரிப்பு வரணும்)

5) ஒரு கற்பனை:- டயம் மிஷின் கிடைச்சு அதிலே நீங்க பின்னோக்கி போகலாமின்னு சொன்னா எந்த வயசை தேர்த்தெடுப்பீங்க?


அப்பாடி நம்ம வேலை முடிஞ்சு போச்சு... குறளோட ஆரம்பிச்சமாதிரி அதை வைச்சே முடிச்சிறேன்.

குறளுக்கு அர்த்தம் சொன்ன மன்னாரு'க்கு அவரு வீட்டு முக்குலே இருக்கிற கடையிலே டீயும், பீடிகட்டும் ஓசியிலே எத்தனை தடவை வேணுமின்னாலும் வாங்கிக்கலாம். அதுக்கு ஆகிற செலவை தல தன்னுடைய சொந்த பணத்திலிருந்து அளிப்பார்.




"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்."
[104-- செய்ந்நன்றி அறிதல்]

நீ ஒரு ஆளுக்கு ஒரு நல்ல காரியம் பண்றேன்னு வையி. அதென்னமோ ஒன்னியப் பொருத்தவரைக்கும் ரொம்ப சின்ன காரியமா இருக்கலாம். ஆனா, அத்தோட மகிமையப் புரிஞ்சவனுக்கு அது ஒரு மலையளவுக்கு பெருசாத் தெரியும். இன்னா காரியம் செஞ்சுப்புட்டேப்பான்னு ஒன்னியக் கொண்டாடிருவான்.

Monday, January 29, 2007

How to convert new blogger

பிளாக்கர் புதிய சேவைக்கு எவ்வாறு மாறுவது என்பதை கிழே படங்களுடன் சின்ன விளக்கம். அத்தோடு தமிழ்மண கருவிப்பட்டை மற்றும் நண்பர்கள் கோபி மற்றும் ஜெகத் ஆகியோர் சரி செய்த பின்னூட்ட பிரச்சினை நிரலியும் சேர்த்துள்ளேன். படித்து பார்த்து இப்பதிவு எவ்வகையில் உதவியா இருந்தது எனச்சொல்லுங்கள்.

அதற்குமுன்னர் உங்களுக்கு தேவையான அடைபலகையை தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.

1)

polo
polo.txt
Hosted by eSnips


2)

bmw
bmw.txt
Hosted by eSnips

3)

tree
tree.txt
Hosted by eSnips


வேண்டிய அடைபலகையை தரவிறக்கம் செய்து உங்கள் Desktop'ல் சேகரித்துக் கொள்ளுங்கள்.

இனி வழிமுறைகள்:-



(Fig:1)

உங்களின் பிளாக்கர் கணக்கில் லாகின் செய்யதவுடன் வட்டமிட்ட பகுதி தென்படும் அதை அழுத்துங்கள்



(Fig:2)

உங்களின் கணக்குமுகவரி மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து டிக் மார்க் செய்து Continue அழுத்துங்கள்.



(Fig:3)


மேற்கண்டவாறு உங்களின் பிளாக், ஒன்றுக்கு மேற்ப்பட்டவையாக இருந்தால் அதையும் வரிசையாக காண்பிக்கும். இப்போ வேறேன்ன Continue அழுத்துங்கள்.




(Fig:4)


இப்போழுது உங்களின் ஜிமெயில் முகவரி கொடுக்க வேண்டும். முன்னாடி ஜிமெயில், பிளாக்கர்க்கு தனித்தனியே முகவரி இருந்தது, தற்பொழுது மேம்படுத்தப்பட்ட பிளாக்கர் கணக்கில் உங்களின் ஜிமெயில் ஐடியும் இணைக்கப்படும். ஆகவே உங்களின் பிரதான ஜிமெயில் ஐடி கொடுத்தால் செளகரியமா இருக்கும்.




(Fig:5)


இவ்வாறு ஒரு செய்தி வந்தெதனில் உங்களின் வலைப்பூ புதிதாக பூக்கவிருக்கிறது என்று பொருள். பூத்து முடிந்ததும் தனியாக மயில் வரும்.





(Fig:6)


முன்னாரே குறிப்பிட்டபடி உங்களின் ஜிமெயில் ஐடி இனிமேல் பிளாக்கரின் ஐடியாக இருக்கும்.





(Fig:7)


மறுபடியும் உங்களின் ஜிமெயில் முகவரி மூலம் லாகின் செய்து அடைபலகை(Template) சொடுக்குங்கள்.




(Fig:8)


கதையை படிக்க பொறுமை இருந்தால் படித்து பார்த்துவிட்டு, அடைப்பலகை மேம்படுத்தும் சுட்டியை சுட்டுங்கள்.




(Fig:9)



வரும் பக்கத்தை ஒன்றும் செய்யாமல் அப்பிடியே சேமியுங்கள்.



(Fig:10)



Upgrade Completed. என்ற செய்தி வந்து விட்டதா'ன்னு உறுதி செய்துக் கொள்ளுங்கள்.




(Fig:11)


இனிமேல் நம்முடைய தனிப்பட்ட (த.ம கருவிப்பட்டை+பின்னூட்ட ஜாங்கிரி நீக்கும் நிரலி) அடைபலகையை உங்களின் Desktop சேமித்து அதை திரும்பவும் Browse செய்து Upload செய்யுங்கள். இம்முறையும் Your changes have been saved. என்ற செய்தி வருகிறது என உறுதி செய்து கொள்ளுங்கள்.





(Fig:12)


இது புதிய பிளாக்கரின் தனிப்பட்ட அதுவும் மேம்பட்ட சேவைகளில் ஒன்று, பழைய HTML+CSS முறையில் நம்மால் Drag Drop செய்யமுடியாது, இப்புதிய சேவை மூலம் நமக்கு தேவையான தலைப்புகளில் Page Element உருவாக்கலாம்.





(Fig:13)

இப்படத்த பாருங்கள். எவ்வளவு எளிதாக element உருவாக்கலாமென்று.


புது பிளாக்கரின் மேம்படுத்தப்பட்ட சேவைகள்:-

1) எளிதான இடைமுகப்பு
2) Drog and Drop வசதி
3) பின்னூட்டங்களில் தனித்தனி வண்ணங்களாக காட்டலாம்
4) அதர் ஆப்சனில் மற்றவர் ஐடி கொண்டு பின்னூட்டமுடியாது.
5) செய்தியோடைகள் இலகுவாக இணைக்கலாம்.
6) XML கொண்டு இயங்குவதால் விரைவாக இருக்கும்
7) ஒரே சொடுக்கில் பதிவுகளை பதிவேற்றமுடியும் (single click publishing)
8) Sidebar'ல் வேண்டிய சுட்டுகளை உருவாக்கலாம்.

Thursday, January 18, 2007

மஞ்சுவிரட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு கொஞ்சவருஷத்துக்கு முன்னாடி வேடிக்கை பார்க்க போயிருந்தோம். பின்னே நீயெல்லாம் என்ன மாடு பிடிக்கவா போயிருக்க போறேன்னு காமெடியெல்லாம் பண்ணபிடாது. என்னாங்கய்யா வருச வருசமும் மாடு தலை தெறிக்க ஓடி வருது ,அதுக பின்னாடி நாலு பேத்திலிருத்து நாப்பது பேரு வரைக்கும் ஓடி விரட்டுறாங்க. அதிலே யாருக்கும் பிடி குடுக்கமே ரெண்டு பேத்தயாவது கொம்பாலே குத்தி கிழிக்குது, இல்லேன்னா தூக்கி விட்டுடெறியது, இப்பிடியெல்லாம் செய்தியா டிவியிலே பார்த்திட்டு இல்லேன்னா நீயூஸ் பேப்பரிலே படிச்சு பார்த்திட்டு வீரம் பொங்கோன்னு பொங்கி என்னாடா நம்மளே மாதிரி இருக்கிற மனுசங்க தானே அந்த வீரவிளையாட்டெல்லாம் விளையாடுறாங்க.

நம்மளும் ஓரமா கொஞ்சகாணு ஒரு இடத்தே பிடிச்சு வேடிக்கை பார்த்துட்டு வந்திரலாமின்னு எங்க கோஷ்டியிலே முடிவு பண்ணி அலங்காநல்லூர்'க்கு வண்டி கட்டுனோம், அப்போல்லாம் பாண்டிய மகாராசா பேரு போட்டுதானே ஊருக்குள்ளே பஸ்ஸெல்லாம் ஓடும். அதிலே படி ஏறுற இடத்திலே கிடைச்ச இம்முனுகாணு இடத்திலே நாலு பேரு தொங்கிட்டு போனோம், மருத சனம பூராப் பேரும் பஸ்ஸிலே இருக்கிறமாதிரி பேக்கூட்டமய்யா. ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு மணிநேரத்துக்குள்ளே போயி சேர்ந்தாச்சு, ஆனா அதுக்குள்ளே எங்களை மாதிரியே கொள்ள சனங்க அங்கேனே காத்து கிடந்தாங்க.



ம்ஹீம் சீக்கிரமே வந்தாச்சு, வந்ததுக்கு ஜல்லிக்கட்டை பத்தி ஏதாவது தகவல் சேகரிக்கனுமின்னு நாலஞ்சு பேத்துக்கிட்டே விசாரிச்சாம், முதலில் சிக்கினது ஒரு வயதான பெரியவர்:

"ஐயா , எதுக்கு மாட்டை துரத்திறதுக்கு ஜல்லிக்கட்டுன்னு பேரு வைச்சிங்க???"ன்னு எடுத்தவுடனே எகத்தாளமா ஒரு கேள்வி கேட்டோம், அதுக்கு அந்த பெரியவர் ஒன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன்னு சொல்லுறமாதிரி பார்வை பார்த்திட்டு "அப்பே அது ஜல்லியில்லே சல்லி!!!! அந்தகாலங்களில் நம்ம புழங்குற காசுக்கு சல்லின்னு பேரு இருந்தாச்சு, அதே முடிப்புலே கட்டி மாட்டு கழுத்திலே தொங்கவிட்டுறுவாங்க, அதே அத்திட்டு வர்றதுக்குதானோ என்னவோ சல்லிக்கட்டுன்னு வந்துச்சு"ன்னு பதில் சொன்னாரு. "அப்பிடியா நாமேதான் சொல்வழக்கிலே சல்லிக்கட்டே ஜல்லிக்கட்டு'ன்னு சொல்லுறோமோ?? சரிய்யா அதெயென் மஞ்சு விரட்டுன்னு பேரு வந்துச்சு"ன்னு அடுத்த கேள்வி கேட்டோம்.



"ஏலே எதயும் உருப்படியா தெரிச்சு வைச்சிருக்கமாட்டிங்களா, பட்டணத்திலே இருக்கிற பயலுக பூராவும் இப்பிடிதாய்யா போட்டு கொடாய்றீங்க, மஞ்சுவிரட்டுன்னா மஞ்சின்னு ஒரு மாலை செஞ்சு மாட்டுக கழுத்திலே தொங்கவிட்டுறுப்பாக, அதே அத்தெறியிற தானாலே கூட அந்த பேரு வந்திருக்கலாம் ,ஆனா முழுசா தெரியாதுப்பே"ன்னு ஜகா வாங்கிருச்சு பெருசு. அடுத்தடுத்து அவர் சொல்லுற பதிலிலே மேலும் தெரிஞ்சுக்கிறனுமின்னு ஆர்வத்திலே நிறைய கேள்வி கேட்டோம், அதிலே இப்போதைக்கு எனக்கு ரெண்டு மூணு தான் ஞாபகத்திலே இருக்கு.



வாடிவாசல்'ன்னா மாடுக வரிசையிலே வர்றதுக்காக பிரத்யோகமா அமைக்கப்பட்ட கொஞ்சம் குறுகலான வாசல், அது முனியாண்டி கோயில் சன்னதிக்கு ஓட்டி இருக்கும், இன்னும் வாடிவாசல் பத்தி விளக்கமா சொன்னாரு நாந்தான் மறந்திட்டேன். எதுக்கு இந்த ரத்தம் பார்க்கிற விளையாட்டுன்னு கேட்டதுக்கு "தமிழனுக்கு வீரந்தாய்யா அழகு, விலை ஒசந்த சொக்கா மாட்டுனா அழகாயிருவானா தமிழன்???, தமிழன் தன்னோட வீரதீரத்தை உலகத்துக்கு நிருபிச்சு காட்டுற விளையாட்டு தான் இந்த மஞ்சுவிரட்டு பந்தயமெல்லாம்!."



அவருக்கிட்டே பேசிமுடிச்சிட்டு அங்கே நடக்கிற எல்லாத்தையும் கவனிக்க ஆரம்பிச்சோம்.மாடுகளுக்கு நல்ல அலங்காரம் செய்யப்பட்டு கொம்பை ஊசி முனைக்கு ஈடா தீட்டி செதுக்கிவிட்டுறுந்தாங்க, அதுப்போக மாடுக மேலே கலர்ப்பொடிகளை தூவி கொம்புக்கு வர்ணம் பூசி கூட்டத்திலே ஓடிவர்றப்போ அடையாளம் தெரியதுறக்காக அந்த அலங்காரமெல்லாம் உபயோகப்படும். இப்பிடியே பிராக்கு பார்த்திட்டே இருக்கிறப்போ விரட்டு ஆரம்பிக்க போகுதுன்னு சொன்னவுடனே ஓடிப்போயி ஒரு கரண்டு கம்பத்துக்கிட்டே இருந்த சின்ன இடத்திலே ரெண்டு பேரும் தொங்கிட்டே பார்த்தோம், அப்பிடியே நேரமாக நேரமாக முண்டியடிச்சு முன்னுக்கு வந்து மாடு ஓடி வர்ற பாதைக்கு முன்னாடி வந்துச்சாசு, ஆஹா நாம்மெல்லும் வீரதீரத்தே நிருபிச்சு முன்னுக்கு வந்தாச்சுன்னு நினைச்சா அதுதான் வினையே.



மாடு ஓடி வர்றப்போ தூசி அம்புட்டும் நம்மதலையிலே விழுகுது, எல்லாப்பேரும் முண்டியடிச்சு பார்க்கனுமின்னு வந்து நம்ம மேலேதாய்யா சாயறாய்ங்கே, அந்தா இந்தாதான் ஜல்லிக்கட்டு ஆரம்பிச்சதது, யப்பே என்னா சத்தம், ஆராவாரம் ஒவ்வோரு மாடும் வாடிவாசலிருந்து வெளியே வர்றோப்போ பார்க்க நமக்கு உசுரு போயி திரும்ப வருது.



ஆனா வாசலில் மேலே உடகார்த்திட்டு மாடு வெளியே வந்ததும் சடக்கென்னு கிழே குதிச்சு அது மதிலை பிடிக்க பின்னாடியே துரத்தி ஓடுறாங்ங்க, அதுக என்னாடானா மூர்க்கதனமா எல்லாபேரையும் தூக்கி எறியுதுக, கிழே விழுந்தும் நம்ம பயலுக அதுகளை விடவே கூடாதுன்னு பின்னாடியே ஓடி மறுபடியும் மதிலை தவ்வி சவாரி போறாங்க. அதிலே ஆனா அமளிதுமளியிலே எல்லாக்கூட்டமும் ஒன்னுக்குமேலே ஒன்னா விழ சாமி அன்னிக்கு உசுரு தப்பினதே பெரியவிசயம்.

Tuesday, January 16, 2007

ஜல்லிப் பதிவு

ஹீம் இன்னிக்கு நம்ம பொங்கல் அதுவுமா இங்கே பொட்டி தட்டுறே வேலைக்கு வந்தாச்சு, சரி பண்டிகை அதுவுமா வந்துருக்கோமே கொஞ்சம் நிம்மதியா இருக்கலாமின்னு பார்த்தா வேலை வேலைன்னு அதே ஆணியே இன்னிக்கும் பிடுங்க விட்டானுக. இன்னிக்கு எவ்வளோ பெரிய நாளு அதுவும் நம்மளுக்கு சோறு போடுறே விவசாயிக்கு உதவியா இருக்கிற ஜிவராசிக்கு நன்றி சொல்லுற நாளு. அதுகளுக்கு குளிப்பாட்டி நல்லா சிங்காரிச்சு கலரு பெயிண்ட்ல்லாம் கொம்புலே அடிச்சு பார்க்கவே களையா இருக்குங்க. இந்த நாளிலே அதையெல்லாம் நேரடியா கண்ணாலே கண்டு ரசிக்க முடியாமே பண்ணின எங்க டேமேஜருக்கு கண்டனங்கள் சொல்லி இங்கே ஜல்லியடிச்சுக்கிறேன்.


கிழே இருக்கிற படங்கள் இந்த இடத்திலிருந்து சுட்டது.





Monday, January 1, 2007

வாழ்த்துக்களும்,நன்றிகளும்

ஊரெல்லாம் இன்னிக்கு லிவுன்னு தெரியும், ஆனா எங்க கம்பெனி ஆளுகளுக்கு அதெல்லாம் தெரியாதாம். அதுனானலே இன்னிக்கு ஆபிஸ் வரவைச்சிட்டாங்க. சரி வருஷ பிறப்பு அதுவுமா வேலைக்கு வந்தாச்சு இன்னிக்குன்னு என்னத்தை உருப்படியா செய்யுறது யோச்சுப் பார்த்ததிலே.......

புத்தாண்டு வாழ்த்து சொல்லி பதிவே போட்டு இந்த வருசத்து நம்ம வலைப்பூ பதியும் திறமையை ஆரம்பிக்கலாமின்னு அந்த நல்ல காரியத்தையும் செஞ்சுட்டேங்க.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

(கொஞ்சகானு பீட்டருங்கோ)

Recipe for a Happy New Year

Take twelve whole months,
Clean them thoroughly of all bitterness, hate, and jealousy ,
Make them just as fresh and clean as possible.

Now cut each month into twenty-eight, thirty, or thirty-one different parts,
but don't make up the whole batch at once.
Prepare it one day at a time out of these ingredients.

Mix well into each day one part of faith,one part of patience, one part of courage,
and one part of work.

Add to each day one part of hope,faithfulness, generosity, and kindness.
Blend with one part prayer,one part meditation, and one good deed.
Season the whole with a dash of good spirits,a sprinkle of fun, a pinch of play,
and a cupful of good humor.

Pour all of this into a vessel of love.
Cook thoroughly over radiant joy ,
garnish with a smile,
and serve with quietness, unselfishness,
and cheerfulness.

You're bound to have a happy new year 2 00 7 .

Hey, one sec I forgot to tell u what I have done

I have opened an account for you, which will function from 1st January 2007 in the bank of blessings. I have deposited 365 days full of joy, happiness, blessings, good health and riches and above all lots of Love.

I want you to have a

Joyful January ,
Flowering February,
Memorable March,
Awesome April,
Mellow May,
Jamboree June,
Judicious July ,
August full of Amity,
Sensational September,
Outstanding October,
Noble November ,
Delightful December.




பதிவோட தலைப்பில் நன்றின்னு போட்டதுக்கான காரணம், என்னோட நந்தன் கதை தேன்கூடு போட்டியிலே நாலாவது இடம் பிடிச்சிருக்கு. பெருமை தரும் வெற்றியோடு இவ்வருடத்தை ஆரம்பிச்சாச்சு, இப்பெருமையை எனக்கு அளித்த தேன்கூடு குழுமதினருக்கும், நடுவர் குழுவினருக்கும், ஓட்டு போட்ட நண்பர்கள்,அனைவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்.

Wednesday, December 20, 2006

நந்தன்

"அம்மா.. அம்மா... என்னை தேடி நந்து வந்தானா??" என்று கேள்வியை எழுப்பியபடி ஒட்டமும்,நடையுமாய் வீட்டினில் நுழைந்தாள் விஜயா. "ஏண்டி எத்தனை தடவை ஒன்கிட்டே சொல்லிருக்கேன்? இப்பிடியெல்லாம் ஓடி வரதேன்னு? இன்னும் கல்யாணத்துக்கு முழுசா ஒரு வாரம் கூட இல்லைடி? எதாவது ரத்தகாயம் வாங்கிறாதேடி!"

"அம்மா! அதுக்கு நான் என்ன செய்யட்டும் சொல்லு? சின்னவயசிலிருந்தே நான் ஆக்டிவா வளர்ந்திட்டேன், அதுவுமில்லாமே நீதான் என்னை அப்பிடி வளர்த்தேன்னு பெருமையா ஊரெல்லாம் சொல்லிட்டு இப்போ என்னோட மேரேஜ் கமிட் ஆன கடைசி ரெண்டு மாசமா ஒரு டயலாக்கே கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி சொல்லிக்கிட்டே இருக்கே!"

"இதே மாதிரிதான் நானும் எங்கம்மாகிட்டே என் கல்யாணத்தப்பேயும் கேட்டேன்... அதுக்கு எங்க பாட்டிதான் பதில் சொன்னாங்க! என்னானா கல்யாணத்துக்கு முன்னாடி ஏதாவது காயம் பட்டா நம்மாலே அந்த விசேஷத்திலே முழுமனசா நிறைஞ்ச படி அனுபிவிக்கமுடியாதாம்! எப்பிடியாவது அந்த காயம் ஞாபகம் வந்து அதே பத்தி நினைச்சிட்டோமின்னா சின்னமுகச்சுழிப்பு வந்தாலும் அதே ஒருத்தவங்க பார்த்திட்டாலும் அட இந்த பொண்ணுக்கோ, பையனுக்கோ இதிலே சம்மதமில்லை'ன்னு நினைச்சிருவாங்களாம்!"

"தாயே, நான் கேட்டதுக்கு பதில் சொல்லுன்னா, வேறே என்னத்தையோ பேசிக்கிட்டு இருக்கே? நான் கேட்டது நந்து வந்தானா'ன்னு??"

"உன்னைமாதிரிதான் அவனும் டீச்சர் வந்துடாங்களா'ன்னு இதுவரைக்கும் அஞ்சுதடவை வந்து கேட்டுட்டு போயிட்டான்!,என்னடி உங்களுக்குள்ளே நடக்குது?? இனிமே அந்த பயங்கிட்டே பேசுறதே குறைச்சிட்டா நான் சந்தோஷப் படுவேன், ஆமா சொல்லிட்டேன். ஒனக்கு ஏதாவது சொல்லிட்டா போதும், அப்புறம் என்கிட்டே நாலு நாளைக்கு பேசமாட்டே! உங்கப்பாவும் ஒனக்கு சப்போர்டா அவரும் என்கிட்டே பேசமாட்டாரு.! ஹிச்.. என்ன பண்ண நான் மட்டும் அதே ஏன் செஞ்சேன்னு தனியே உட்கார்ந்திருப்பேன்."

"மம்! அதெல்லாம் இல்லே! நீதான் எதையும் விடப்பிடியா பிடிச்சு தொங்குவேலே, அதை ஒனக்கு எப்பிடி புரியவைக்கிறது, இதுதான் நல்லவழின்னு நானும்,அப்பாவும் முடிவு பண்ணினோம்! அதுதான் அந்தமாதிரி டிரிட்மெண்ட்!!" இவ்வாறு சொல்லிக்கிட்டு இருக்கும் சமயத்தில் "டீச்சர், டீச்சரு"ன்னு உள்ளே நுழைக்கிறான் நந்து அலைஸ் நந்தகண்ணன்.

"ம் வாடா! படுபாவி நானும் ரெண்டு நாளா ஒன்னே எப்பிடியாவது ஜெயிச்சிடனுமின்னு இருந்தேன், போச்சுடா, நான் என்னோட தோல்வியே ஒத்துக்கிறேன், தயவுச்செய்து சொல்லிடு சாமி.. என்னாலே முடியலேப்பா"

"என்ன டீச்சர், இப்பிடி சொல்லிட்டிங்க! நீங்க எப்பிடியாவது கண்டுபிடிச்சிருவீங்கன்னு நினைச்சேன். ஆனா கடைசியிலே இப்பிடி தோத்து போயிட்டிங்க?"

"நந்து இதிலே தோத்தது கூட கவலையில்லை ஆனா எனக்கு வருத்தமின்னா நீ இனிமே கொடுக்கப்போறே கமண்ட்லேதான், சும்மாவே என்னயே நீ ரொம்ப லந்து பண்ணுவே? அதுக்கும் மேலே என்னை நீ டீச்சருன்னு சொல்லி கூப்பிடுறேதே ஒரு நக்கலுக்குதானே!"

"டீச்சர், நோ பீலிங்ஸ்.. அது என்ன பாட்டுன்னு சொல்லிறேன். 'புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள் தன்னிலே பொதுவான வழக்கமாம்' க்கிறே வரி பாரதியார் எழுதின புதுமைப்பெண்'கிறே கவிதையிலே வர்ற ஒரு பத்தி அது! நீங்க ஃபெமினா'ல்லாம் வாங்கி படிக்கிறீங்க, ஆனா நம்ம கவிஞர் எழுதின கவிதைகள் தெரியலே'னு சொல்றீங்களே டீச்சர்!"

"ஓ அப்பிடியா! நான் இதுக்காவே ரெண்டு நாளா லைப்பேரியிலே கதியா கிடந்து கிட்டத்தட்ட நூறு புத்தகத்தையெல்லாம் படிச்சேன். அதிலேயும் பாரதி கவிதைகளும் படிச்சேண்டா, ஆனா அதிலே இந்த வரிகள் இருந்துச்சான்னு தெரியலை!"

"அதுக்கு படிச்சேன்னு சொல்லாதீங்க! சும்மா புஸ்தகத்தே மேஞ்சேன்னு சோல்லுங்க. என்னோமோ போங்க! ஒங்களே நான் டீச்சருன்னு சொல்லிக்கிறவே வெக்கமா இருக்கு! இனிமே கவலை படாதீங்க, நீங்க ஜெயிச்சாலும், தோத்தாலும் கிப்ட் பண்ணலாமின்னு புக் வாங்கி வந்தேன் இந்தாங்க."

"டேய், என்னாடா இது பாரதியார் கவிதைகளா.. ரொம்ப நன்றிடா, இனிமே நுனிப்புல் மேயமே முழுசாவே படிக்கிறேன். ஆனா நீ இவ்வளோ பேசியும் உம்மேலே எனக்கு கோவம் வராதுக்கு காரணம் கூட எனக்கு தெரியலைடா? நீ சின்னபிள்ளயா இருக்கிறப்போ நம்ம பக்கத்து வீட்டு பையன் இவ்வளோ அழகா இருக்கானேனு உன்னையே தூக்கிட்டு வந்து எங்கவீட்டிலே வச்சு விளையாடுவேன், ஆனா இப்போதான் பன்னிக்குட்டி ஏன் குரங்கு குட்டி கூட சின்ன வயசிலே அழகாதான் இருக்குங்குறது உண்மைதான் போலே! குரங்குன்னு சொன்னதும்தான் நீ சின்னவயசிலே செஞ்ச குறும்பெல்லாம் ஞாபகம் வருது, எவ்வளோ நாளா நான் ஆசையா வளர்ந்த ரோஜா செடியே தோட்டியோட உடைச்சது, என்னோட சைக்கிளிலே காத்து பிடிங்கி விடுறதின்னு, வீட்டுக்குள்ளே வந்ததும் கையிலே கிடைக்கிறதே விளையாடுறேன்னு சொல்லி அதே போட்டு உடைக்கிறது, ஐயோ நீ வர்றேன்னு சொன்னா போதும் எங்கம்மா உனக்காகவே பொருள்களையெல்லாம் ஒதுங்க வைக்க ஆரம்பிச்சிருவாங்க. இவ்வளவுதான் ஒரு லிஸ்டாவது போடமுடியுமா அது மொழக் கணக்கிலே நீண்டுக்கிட்டுதான் போகும்."

"டீச்சர், நீங்க சந்தடி சாக்கிலே என்னை பன்னி,குரங்குன்னு சொல்லிட்டிங்க, நல்லாயிருங்க.. அது என்னோமோ உண்மைதான் இனம் இனந்தே தேடி கண்டுபிடிச்சுதானே சேருமின்னு சொன்னது பொய்யில்லை!!"

"நீ வளர்ந்து பெரியவனா ஆனாலும் உன்னோட குறும்பு மட்டும் மாறலேடா, சரி என்னடா மேரேஜ்'க்கு வருவயில்லை??"

"இல்லே டீச்சர், அன்னிக்குதான் எனக்கு கணக்கு பரிட்சை, அடுத்து ஒருநாள்தான் லீவு பிஸிக்ஸ் எக்ஸாமுக்கு, அதுனாலே வரமுடியாது, எங்கேயிருந்தாலும் வாழ்க!ன்னு கட்டாயம் வாழ்த்துவேன்"

"ராஸ்கல்.. உனக்கு வரவர ரொம்ப சேட்டையா போச்சுடா! சரி அம்மா கூப்பிடுறாங்க, அப்புறம் மீட் பண்ணலாம்."

இந்நிகழ்ச்சிக்கு பிறகு விஜி தன்னுடைய கல்யாணவேலைகளில் முழ்கிப்போனாள், நந்துவோ தன்னுடைய மேல்நிலை இறுதி தேர்வுக்காக தயராகிக் கொண்டிருந்தால் அவ்விருவர்களுக்கும் தொடர்பு சுத்தமாக அற்றுப்போனது.வீட்டிலே விஜியின் அம்மாவும் அப்பாவும் கல்யாணத்திற்க்காக அடிக்கடி வெளியே சென்று விடுவதால் அவளுக்கு துணையாய் முதன்முறையாய் நந்து பரிசளிந்த பாரதியார் புத்தகம்தான். விஜியின் திருமணம் இனிதே முடிந்து தன் கணவருடன் வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றாள், அப்போதாவது அவனை சந்திகலாமின்னு முயன்ற வேளையில் அவன் பொது தேர்வு முடித்து என்டரன்ஸ் எக்ஸாம் படிக்க சென்னை சென்று விட்டதாக கேள்விப்பட்டு சிறிய வருத்தமுடன் செல்கிறாள். அதன்பின்னர் அவர்களுக்குள் எவ்விதமான கடிதப்போக்குவரத்தோ, தொலைப்பேசி பேச்சுகள் கூட அமையததால் இன்னும் சிறு காயமாகவே அவ்விருவரும் உணர்கின்றனர்.காலம் உருண்டு ஒடியது.

விஜி, கூடவே தன்மகனேயும் கூட்டிக்கொண்டு ஆறுவருடங்களுக்கு பிறகு இந்தியா வருகிறாள்.தன்னுடைய தாய்வீட்டுக்கு செல்லும் அவள் நேரில் சென்று பார்க்கவேண்டியர்களில் நந்துக்கே முதலிடம்.

"அம்மா நந்து எப்பிடிம்மா இருக்கான், என்னைப் பத்தி எதுவும் விசாரிச்சானா, இல்லேன்னா என்னை பத்தியாவது அவன்கிட்டே சொன்னீய்யா??"

"ஹிச் போடி! உன்னோட கல்யாணத்துக்கு அப்புறம் நீயே இப்போதான் இங்கே வாறே, உன்னோட பிரசவத்துக்கு கூட நான்தான் அங்கே வந்தேன், நீ போனதுக்கப்புறம் நீ வச்ச ரோஜா செடியும், நந்துவும் என்னை வந்து பார்ப்பாங்கன்னு நினைச்சேன், ரோஜாவிலே மட்டும் தினமும் வாசம் வரும், ஆனா இந்த வாலுபய ஏதோ ஊரிலே படிக்கிறான் மட்டும் அவனோட அம்மா சொல்லி மட்டும் தெரியும்,ஆனா அவனே ஒருநாள் கூட நேரிலே பார்க்கலை!."

"என்னம்மா சொல்லுறே! ஒருநா கூட பார்க்கலையா,அவங்கம்மா என்னா சொன்னாங்க,"

"என்னா சொல்லப்போறா, மிலிட்டரி மெடிக்கல் காலேஜ்'லே டாக்டருக்கு படிக்கிறான்னு பெருமையா சொல்லுவா, கடைசியா டீச்சர் எப்பிடியிருக்காங்கன்னு கேட்க சொன்னான்னு சொல்லுவா, அவ்வளவுதான்."

"அட பரவாயில்லையே என்னை மறக்கமே இருக்கானா?? ஆச்சரியம்தான், சரி வா உன்னோட பேரனை ஹாஸ்பிட்டலே காட்டி வரலாம், வந்த ரெண்டுநாளிலே அவருக்கு நம்மூர் வெயில் ஒத்துக்காமே கஷ்டப்படுறாரு"

விஜி தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறாள்.அங்கே மருத்தவர் ஆலோசனைகாக காத்திருக்கும் சமயத்தில் "டீச்சர், டீச்சர்"ன்னு நந்து குரல் கேட்டு ஆச்சரியத்துடன் அந்த இளைஞனே பார்க்கிறாள்.

"நீங்க யாருங்க? யாருன்னு அடையாளம் தெரியலை?? ஆனா சந்தேகத்திலே கேட்கிறேன்? நீங்க நந்து.. நந்தக்கண்ணனா??"

"ஆமா டீச்சர், என்ன அதுக்குள்ளே என்னை மறந்திட்டிங்க பார்த்தீங்களா? ஆனா உங்களே பார்த்தமாத்திரத்திலே அடையாளம் கண்டுபிடிச்சு கூப்பிட்டேனே??"

"டேய் நந்து, நீயா ரொம்ப ஆச்சரியமா இருக்குடா, ஆளே மாறிப்போயிட்டே, பார்க்க என்னோமே ஒரு பயில்வானட்டாம் இருக்கீயா, என்னலே கண்டுப்பிடிக்கமுடியலே, இன்னும் கூட நந்துக்கிட்டே தான் பேசிக்கிட்டு இருக்கோமான்னு சந்தேகமா இருக்குடா?"

"நீங்க என்ன டீச்சர், எங்கம்மாவே என்னை அப்பிடித் தான் பார்த்தாங்க, கேள்விப்பட்டு இருப்பிங்கன்னு நினைக்கிறேன், நான் மெடிக்கல் படிச்சது மிலிட்டரி காலேஜ்லே, அதுனாலேதான் இப்பிடி ஒரு மாற்றம்! ஆனா உங்கக்கிட்டே எனக்கு ஒரு மாற்றம்கூட தெரியலே? அப்பிடியே இருக்கீங்க, இந்த குட்டிபையன் வந்ததுக்கப்புறமும் அப்பிடியே இருக்கீங்க.. ஆமா இவன் பேர் என்ன??"

"பார்த்தியா! நாமே பேசிக்கிட்டே நம்ம நாட்டு விருந்தாளியே அறிமுகப்படுத்தி வைக்க மறந்துட்டேன். இவர் பேர் சொன்னாக்கூட நீ ஆச்சரியபடுவே!!"

"என்ன டீச்சர், விருந்தாளியா?? அப்போ இவரு அந்நாட்டு பிரஜையா??? சரி பேர் என்னான்னு சொல்லுங்க? ஒங்ககிட்டே என்ன கேட்கிறது, நான் அவருகிட்டே கேட்டுக்கிறேன், ஹாய் டியர் வாட் இஸ் யூவர் நேம்?"

"என்னோட பேரு நந்த குமார்"ன்னு தமிழிலே பதிலளிக்கிறான் குழந்தை.

"என்னடா பண்ண சொல்லுறே, எனக்கு இவன் பிறந்ததும் பேர் வைக்கனுமின்னு வந்தோப்பா எனக்கு தோணினது உன்னோட பேர் நந்து மட்டும்தான்"

"டீச்சர்! என்ன சொல்லுறீங்க, அப்படியென்ன நான் உங்க வாழ்க்கையிலே வந்துட்டேன்??"

"ஆமாண்டா எனக்குன்னு கூட பிறந்தவங்க யாரும் கிடையாது, இந்தா அம்மா முன்னாடியே சொல்லுறேன், எனக்குன்னு நானே பேசி, நானா சண்டை போட்டுக்கிட்டு அழுது,அப்புறமா சிரிச்சுக்கிட்டு தனியாளாதான் வளர்ந்தேன்.அப்புறமா நீ என்னோட வந்ததுகப்புறமா தான் பாசம்,சண்டை,குறும்புதனம், இன்னும் என்னோமோ உன்கிட்டே இருந்து எனக்கும் வந்துச்சு. நீ எனக்கு மானசீகமான சகோதரனா இருந்தேடா,ஆனா இப்போ நீ அதையும் தாண்டி இன்னோரு உறவுக்குள்ளே வந்துட்டே!"

"டீச்சர்! என்னை அறியாமலே இப்போ எனக்கு கண் கலங்குது!"

"என் பையனுக்கு நந்து'ன்னு பேர் வைச்ச ராசியோ என்னோமோ உன்னைமாதிரியே தான் அவனும் இருக்கான் அவன் உடைச்ச பொருளே மட்டும் குவிச்சு வச்சா அது எவரெஸ்டா உசரத்துக்கு வந்திரும். இன்னோன்னு ஹாஸ்பிடலுக்கு வந்திட்டா இவனை பார்த்து டாக்டருங்க எல்லாம் அலறுவாங்க??"

"ஏன் இவன் டாக்டருக்கு ஊசி போடுவானா??"

"இல்லேடா... டாக்டர்'ங்க ஹார்ட்பீட் டெஸ்ட் பண்ண ஸ்டெஸ்தஸ்கோப்பை காதிலே மாட்டிக்கிறோப்போ படக்குன்னு எடுத்து அதிலே கத்திருவான்,அவங்கதான் பாவம், அதுக்கப்புறம் அவங்களே பார்க்கவே பரிதாபமா இருக்கும். உன்னயே விட பத்து மடங்கு குறும்புக்காரன்தான். அங்கே பாரு இவனே டெஸ்ட் பண்ணின டாக்டர் காதை பிடிச்சிட்டே போறாரு பாரு! அதுதான் இவன் என்னோட இளையமகன்டா, குறும்புன்னா குழந்தைக எப்பிடி பண்ணுவாங்கன்னு எனக்கு சொன்ன நீதான் என்னோட மானசீகமான மூத்தமகன்...."

"முல்லைச் சிரிப்பாலே - எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய். ... இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ? அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ?"

Saturday, December 16, 2006

டங்கா.. துங்கா..மவுசுகாரி!!!!

நம்முடைய பண்டைய கலாச்சாரங்கள்,மக்களின் சிந்தனைகள், எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், ஆகியவற்றை பிற்சந்ததியினருக்கு ஆவணமாக திகழ்வதில் நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கிய பங்குண்டு என்பது திண்ணம். அவ்வகையில் கலை என்பது பொழுது போக்கு'க்காக மட்டுமில்லாமல் மக்களிடம் தகவலை கொண்டுச்செல்லும் ஊடகமாகவும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்தியே பரிமாற்றும் ஏணியெனவும் திகழ்கின்றது. நம்மோடு பின்னிபிணைந்து விட்ட பாரம்பரியத்தின்,இம்மண்ணின் மாசற்ற மங்காபுகழ் கலாசாரத்தின் அடிஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவைகளில் கிராமியத்து கலைகளுக்கு முக்கிய பங்குண்டு. அவ்வகையில் கரகாட்டம் நம்முடைய தமிழ் பரம்பரியக் கலை படிமங்களில் அழியா,அழியும் அழிக்கின்ற கலை வகைளில் ஒன்று.

"அலங்கரிக்கப்பட்ட குடத்தைத் தலையில் வைத்து கொண்டு அதே கிழே விழாமல் நிகழ்த்தப்படும் ஒரு வகையான தமிழக கிராமிய ஆட்டம்" என நம் பின்வரும் சந்ததியினருக்கு நாம் குறிப்பு'ன்னு எழுதி வைப்போம். நம்மால் முடிந்த ஒரு கலைச்சேவை?? ஆனால் அக்கலையில் ஈடுப்பட்டுள்ள கலைஞர்களில் அன்றாட வாழ்க்கையோ அவர்களே போல் வெளிச்சத்திடம் அண்டி மின்னி சாவும் விட்டில் பூச்சிகளென ஒரு சிறுநிகழ்வாகதான் இருக்கிறது.



என்னுடைய படிக்கிற காலத்தில் எம் நண்பர் மேற்கொண்ட கிராமத்து கலைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக மற்றுமொரு நண்பனின் கிராமத்து வீட்டுக்கு சென்றிருந்தோம். அச்சமயம் அவனுடைய அண்டைவீட்டில் வசித்த கரகாட்டம் ஆடும் பெண்மணியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய சிறுவயதில் நிகழ்ந்த சந்திப்பு எனிலும் எவ்விதத்திலும் மறக்கவியலா தருணங்கள் அவை. ஒரு சாதாரணமாக வீதியிலோ, பேருந்து பயணங்களிலோ தென்படும் பெண்மணியாகவே அவருடைய தோற்றம். ஆனால் அவர் ஒரு கரகாட்ட கலைஞர்யென கேள்விப்பட்டதில் சிறிது வியப்புதான் தோணிற்று. அவரிடம் எவ்வகையான முகப்பூச்சோ,வெட்டி வெட்டி பேசும் ஒரு விதமான பேச்சோ எதுவுமில்லை. ஆனால் அதைவிட அவர் முகத்தில் ஒரு நிம்மதியாய் வாழும் ஜிவன் என்ற அறிகுறியான தேஜஸே இல்லை!!.



அப்பெண்மணியை பார்த்தமாத்திரத்தில் நான் எழுப்பிய கேள்வி இதுதான், எப்பிடிங்க குடம் கிழே விழாமால் பேலன்ஸ் பண்ணி நடனமாடிறீங்க. அதுக்கு அவர் சிரித்தப்படியே "விடாமுயற்சியும்,கலையில் அர்ப்பணிப்பும், இருந்தால் எதுவும் இலகுதான்". அடுத்தகேள்வியாக உங்களின் நடனநிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானம் எந்தளவுக்கு உங்களின் வாழ்வாதரத்துக்கு சரியாக வருகின்றது. அதுக்கு அவரு அளித்த பதில் இன்றும் ஒரு வரி கூட மாறாமல் நினைவில் இருக்கு. "சிலவேளைகளில் வருடத்துக்கு ரெண்டு,முணு மாதங்களில் ஆட்டம் ஆட வாய்ப்பு கிடைக்கும்,மிச்சவேளைகளில் ஆங்கங்கே கிடைக்கும் கொலுத்து (விவசாய கூலி)வேலை பார்த்துதான் வயித்துக்கு கஞ்சி குடிப்பேன்".

ஆபாசங்களும்,அனர்த்தமான வரிகளும்,ரெட்டை அர்த்தம் தொணிக்கும் பாட்டுவரிகளுக்குதானே நீங்களெல்லாம் ஆட்டம் போடுறீங்க? இம்மாதிரியான சூடான கேள்வி கேட்டது என்னுடைய நண்பனின் அண்ணன். அதுக்கு அந்த பெண்மணியோ சிறிதும் தயக்கம் இல்லாமல் சொன்னது, ஐயா நான் அப்பிடியிருக்க போய்தாய்யா நாலுபேரும் கூடுறாங்க, ஆனா என்னோட ஒடம்புக்குன்னு ஒன்னு வந்து மொடங்கிட்டா யாருய்யா வந்து என்னை பார்ப்பாங்கன்னு சொல்லு?, நீங்க சொல்லுறதிலே ஆபாசஅசைவுகளும்,ரெட்டை அர்த்தம் தொணிக்கிற வரிகளும் எல்லார்தாப்பா ரசிக்கிறாங்க. காடுகரையிலே நெத்தி வியர்வை நிலத்திலே சிந்தி வேலை பார்த்து திரும்புற என்னோட சாதிசனங்க ரசிக்கதான் என்னோட கலை. அது அவங்களே பொறுத்தவரை அவங்களுன்னு இருக்கிற பொழுதுபோக்கு அம்சம். ஒங்களைமாதிரி கொழாப்போட்ட ஆளுகதான் தப்பா பார்த்துபிட்டுதான் ஏட்டிலே கண்டமேனிக்கு எழுதுறீங்க, ஆணுக்கும்,பெண்ணுக்கும் இருக்கிற காதலே வள்ளுவர் எல்லா நிலைகளிலும் எடுத்து எழுதி ஒலையாக்கிட்டு போனாரு. நாங்க எங்க வயித்து பொழப்புக்கு அதிலே சிலதை தொட்டு கலையாக்குறோம். ஒங்க சினிமாவிலே அடிக்கிற கூத்தே விட நாங்க செய்யுறது ஒன்னும் மோசமில்லையெப்பா சாமிகளா..

அவருடைய இத்தகைய பதிலுக்கு எங்களால் கொடுக்கமுடிந்த ஒரே ஒரு பதில் மெளனம் மட்டுமே. அவங்க நிலைல இருந்தது இது ஒரு மிகச்சரியான விளக்கம் தான். நம் போன்ற பார்வையாளர்களுக்கு அக்கலைஞர்களின் நிலை என்னவென்று தெரியும்?? நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் ஒவ்வொரு வகையாக தாக்கத்தே ஏற்படுத்தி செல்கின்றன்ர். அவ்வகையில் எனக்கு இப்பெண்மணியும் ஒருவர். சென்றமுறை ஊருக்கு சென்றிருந்த பொழுது பேருந்து நிறுத்ததில் இவரை பற்றி பலவகையான வர்ணிப்பு அடைமொழிகளோடு கரகாட்டம் நடைபெறும் என சுவரெட்டியே கவனித்தேன், ஆக அவருடைய வாழ்க்கை ஆட்டத்தில், நம் வாழ்கையோ ஓட்டத்தில்???.

Friday, November 17, 2006

பாண்டியநாடு சோறுடைத்து!!!

மிக பழமையான தமிழகநகரங்களில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களில் பிரதானமான இடம் மதுரை மாநகருக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வரலாற்று ஆய்வாளர்கள் வகுத்த காலஅளவீடுகளான கிமு.களில் முந்தியே ஒரு மொழிக்கே சங்கம் வளர்ந்த பெருமைக்குரிய நகரமாகும்.



மாட மதுரை', 'மதுரை மூதூர்', 'மணி மதுரை', 'வானவர்உறையும் மதுரை', 'மாண்புடை மரபின் மதுரை', 'ஓங்கு சீர் மதுரை', 'மண மதுரை' எனப்பல்வேறு சொற்றொடர்களால் சிறப்பித்துக் கூறும் சிலப்பதிகாரம். 'மதுரைப் பெருநன்மாநகர்' என மணிவாசகர் பாடுவார் திருவாசகத்தில். 'மிக்குபுகழ் எய்திய பெரும்பெயர்மதுரை' என மதுரைக் காஞ்சி பெருமிதமுறும். 'தமிழ் கெழுகூடல்' எனப் புறநானூறும்,'பாடு தமிழ் வளர்த்த கூடல்' என இன்னுமொரு தமிழ்ப் பாடலொன்றும் மதுரையின்மாண்பினைஎடுத்துரைக்கும். (நன்றி திண்ணை)

இவ்வற்றையும் தவிர்த்து மதுரை இன்றைய நாள்களில் உணவுவிடுதிகளுக்கும் புகழ்பெற்றது என அனைத்துதரப்பு மக்களின் கருத்தாகும். அது ஒரு வகையில் உண்மையே என அந்த மண்ணைச் சேர்ந்தவன் என்றமுறையில் ஏற்றுக்கொள்வேன், பஞ்சம்பிழைக்க பெங்களுருக்கு வந்தப்போது எங்கூரு போலவே இங்கேயும் இரவில் எந்நேரமும் சிற்றுண்டி கிடைக்குமின்னு நினைத்து அந்த நினைப்பிலே மண்தான் விழுந்தது. இங்கே மிகச்சரியாக 9.30 மணிக்கெல்லாம் எல்லாக்கடைகளும் அடைக்கப்படும்.



ஆனால் எங்க மதுரையில் நள்ளிரவு ஒரு மணிக்கு நாலு இட்லிக்கு நாலுவித சட்னி,சாம்பார் ஊத்தி சாப்பிட்டு வரலாம். உணவுகளின் வியாபாரத்துக்கு இரவென்றோ பகலன்றோ எவ்வித வேறுப்பாடுகள் கிடையாது. அவ்வகையான மூன்றுவேளைகளிலும் கிடைக்கும் வரிசைப்படுத்துக்கிறேன். இவைகள் அனைத்தும் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றுப்புறத்திலே அமைந்ததுதான்.


காலை:- சிலவருடங்களுக்கு முன்னர் மதுரை மாடர்ன் ரெஸ்ட்ரண்ட்'லே வெண்பொங்கல் சாப்பிட பெரிய கீயூ'வே நீக்குமின்னு சொல்லுவாங்க. ஆனா இப்போ அந்தளவுக்கெல்லாம் இல்லை.காலை வேளைகளில் கிடைக்கும் வெண்பொங்கல்,வடை ரொம்ப நன்றாக இருக்கும். அதுவும் பொங்கலில் முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து அதிலே தூவியிருப்பார்கள். அதுவும் நாலுபேரு சாப்பிடபோயிருந்திங்கன்னா அதிலே யாருக்கு நெய்முந்திரி வந்திருக்குன்னு கண்டுபிடிச்சி சாப்பிட்டிங்கன்னா நல்லா இருக்கும். அதேமாதிரி மசால் தோசையும் ரொம்ப நல்லாயிருக்கும். தோசைக்கு தொட்டுக்கிற கிடைக்கும் மல்லிச்சட்னி,மிளகா சட்னி,புதினா சட்னி எல்லாமே நல்ல சுவையா இருக்கும். இந்த ஹோட்டல் நேதாஜிரோட்டிலே இருக்குங்க.அப்பிடியே வெளியே வந்து விசலாத்திலே ஒரு ஸ்டராங்காப்பி சாப்பிடிங்கனா போதும்.அதே நேதாஜி ரோட்டிலே இன்னோரு ஹோட்டலும் ரொம்ப பேமஸா இருந்திச்சு ஆனா இப்போ இல்லே, அதோட பேரு ஆரியபவன்.



மதியம்:- இவ்வேளைகளில் சாப்பிட நிறைய இடம் இருக்குங்க. அதுவும் தென்னிந்திய வகைகளுக்கு ரொம்ப நிறையவே இருக்குங்க. நான் சொல்லப்போறது ஒரு வடநாட்டு உணவகம், அதோட பேரு மோகன் போஜனலாயா. இங்கே நார்த்இந்தியன் தாலி'ன்னு கேட்டிங்கன்னா ஒரு பெரிய தட்டிலே நாலு சுக்கா சாப்பாத்தி தொட்டுக்க ரெண்டு,மூணு கறியும் கொடுப்பாங்க, அதுக்கு முன்னாடி அவங்க ஸ்பெசலான ரசமலாய் கொஞ்சக்காணு வாங்கி டேஸ்ட் பார்த்துறுங்க. வேணுங்கிற அளவுக்கு ரொட்டி வாங்கிசாப்பிட்டு சாதம் வாங்கி ரசமும், கெட்டிதயிரை ஊத்தி முடிச்சிட்டா வயிறு நிறைச்சிரும். அங்கேயே ஸ்வீட்பீடாவும் கிடைக்கும். இந்த விடுதி மேலக்கோபுரவாசல் வழியா வெளியே வந்திங்கன்னா அந்த பகுதி வீதியிலே தேடிக் கண்டுபிடிக்கலாம்.

இரவு:- மாலைவேளைகளில் நிறைய இடங்களிலே இட்லி,தோசையும் கிடைக்கும்.நான் சொல்லப்போறது ரொம்ப பேமஸான ஒரு ஹோட்டல், அதுவும் அரசியல் விவகாரமெல்லாம் நடந்தது. அது வேற எதுமில்லே முருகன் இட்லிகடைதான்.அங்கே போனீங்கன்னா ஒரே ஒரு ஸ்பெசல் ஐட்டமான பொடிவெங்காய ஊத்தப்பம் சாப்பிடலாம். நாங்கெல்லாம் அங்கே போனா அது மட்டுந்தான் சாப்பிடறது. ஊத்தப்பத்திலே நெய் ஊத்தி சும்மா செவக்க வேகவைச்சிருப்பாங்க, ஆர்டர் பண்ணி வரதுக்குள்ளே ரெண்டுஇட்லி நாலு சட்னி, பொடி எண்ணெய், சாம்பார் ஊத்தி சாப்பிட ஆரம்பிச்சிங்கன்னா வந்திரும். அப்பிடியே சூடா சாப்பிட்டா நல்லாயிருக்கும். இது மேலமாசிவீதியிலே இருக்கிற இம்மையிலும் நன்மை தருவார் கோவில் பக்கத்திலே இருக்கு.

கொறிக்க:- இது எல்லா ஊருகளிலும் கிடைக்கிறதுதான், ஆனா எங்க ஊருலே ஒரு ஸ்பெசலா ஜிகர்தண்டா.. இதுயென்னா கொறிக்கவான்னு கேட்கப்பிடாது. அது ஒரு டேஸ்டா இருக்கும். நல்லா வயிறு நிறைய சாப்பிட்டா இதே ஒரு கிளாஸ் அடிச்சா சும்மா சில்லுன்னு இருக்கும். அதே தயாரிக்கப் பயன்படுத்தப்படுவது பால் பொருட்களும், கடல்பாசியுக்கிறதனால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல்நலத்துக்கு கெடுதியில்லை. ஆனாலும் நம்மாளே ரெண்டு,மூணு கிளாஸ்தான் சாப்பிடமுடியும்.



இன்னோன்னு நீங்க இரயிலில் மதுரைக்கு வந்திங்கன்னா ஸ்டேசனுக்கு எதிர்தாப்பலே இருக்கிற அதாவது தங்கரீகல் தியேட்டருக்கு எதிர்ப்பாலே இருக்கிறே டவுன்ஹால் ரோட்டு முனையிலே இருக்கிற லாலா கடையிலே சுடசுட அல்வா ஒன்னே வாங்கி ஒரு விண்டை எடுத்து வாயிலே போட்டு பாருங்க. அப்புறம் மதுரையே மறக்கவே மாட்டிங்க.