Saturday, July 5, 2008

கேள்வி-பதில்களும்.... கேள்விகளும்..!

இம்சையக்காவின் இம்சையான நாலு கேள்விகளுக்கு என்னாலே முடிஞ்ச அளவுக்கு பதில் சொல்லியிருக்கேன். கொஞ்சம் விவகாரமா கேட்டாலும் பதில் சொல்லுறப்போ நிறைய கூல்'ஆ பதில் சொல்லியிருக்கேன்... பெங்களூரூலே குளிர ஆரம்பிச்சிருங்க.... ஹி ஹி ஹி

1. 'சின்னத்தல'-ன்னு பேரு வாங்கிட்டு வா.வ.சங்கம் பக்கம் எட்டிப் பாக்காமலே இருக்கீங்களே ஏன்?

அப்பிடியெல்லாம் இல்லை. ஆபிஸ் வேலை கொஞ்சம் அதிகமாக இருந்ததுனாலே சரியா பங்கெடுக்க முடியலை. ஆனா சங்கத்தோட இரண்டாம் ஆண்டு போட்டிக்கான வேலைகளிலே மற்ற சங்கத்து உறுப்பினர்கள் கூட வேலை செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன்.

2. ஒரு பெரிய ப்ரொபஷனல் கொரியர் ச்சே... ப்ரொபஷனல் போட்டோகிராபர் ஆயிட்டு வரதால இந்த கேள்வி. பின்நவீனத்துவமா புலிக் கவுஜ, எலிக் கவுஜனு எழுதற உங்களால பின்நவீனத்துவமா போட்டோ எடுப்பது எப்படினு சொல்ல முடியுமா? அதில் புனைவு ஃபோட்டோ கூட முடியுமா? அப்படியே புனைவு, பின்நவீனத்துவம்னா என்ன அது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னு மூத்தப் பதிவர் நீங்க சொன்னா எங்களை மாதிரி தெரியாத ஆளுங்க தெரிஞ்சுக்குவோம்.


போட்டோ எடுக்கிற பைத்தியம் காலேஜ்'லே படிக்கிறப்பவே வந்துருச்சு, இங்கன வந்ததுக்கப்புறம் நம்ம குரு CVR கூட சேர்ந்ததும் கொஞ்சம் முத்தியே போச்சு.. அப்புறம் பின்நவினத்துவமான் போட்டோ எடுத்துட்டு சொல்லுறேன்.

புனைவு'ன்னா எனக்கு முழுசா தெரியாது. தெரிஞ்ச வரைக்கும் சொல்லனுமின்னா "கொஞ்சமான உண்மைதகவல்களை வெச்சு மிகைப்படுத்தி எழுத்துக்களை சிருஷ்டிக்கிறதுக்கு தான் புனைவு". இது சரியா தப்பான்னு மத்தவங்க சொல்லட்டும்.

பின்நவினத்துவத்துக்கும் விளக்கம் சொல்ல ஆரம்பிச்சா பத்து பக்கத்துக்கு எழுதனும்... நான் அதுக்கு உண்மைதமிழன் இல்லை. ஹி ஹி

பின் நவினத்துவத்துக்கும் புனைவுக்கும் உள்ள வித்தியாசமின்னா "பின் நவினத்துவ எழுத்துக்கள் படிக்கிறவன் இன்னும் பத்து இருபது வருசம் கழிச்சு எழுத்து முறை இப்பிடிதான் இருக்குமோ'ன்னு தலை பிச்சிக்க வைக்கனும்"

புனைவு கதைகள் படிக்கிறவனுக்கு சிறிய உண்மைதகவல்களை வைச்சிக்கிட்டு இடம்,காலம் எல்லாத்தையும் துல்லியமாக எழுதி வாசகனின் நம்பகதன்மைக்கு எடுத்து செல்லனும்.

இப்போ ரெண்டுக்கும் உள்ளே வித்தியாசம் புரியுதா??? :))


3. காதல் பத்தி என்ன நினைக்கறீங்க? ரஞ்சனி மகாவுடனான பேச்சு வார்த்தை எந்த அளவில் இருக்கு?

அது சரி.... அதெல்லாம் உங்களைமாதிரியான இம்சை புடிச்சவங்க உருவாக்கிய புனைவுதானே??? அது அப்பிடியே அந்தளவு'லே தான் இருக்கு.... :))

4. வலையுலகுக்கு வந்தது மூலம் உங்களுக்கு கிடைச்சதா நினைக்கற விஷயங்கள் என்ன?

ஆபிசு'லே 40 மணி நேரம் பொட்டி முன்னாடி உக்கார்ந்து இருக்கிறத தாண்டி வீட்டிலே நிறைய நேரம் பொட்டியை திறந்து உட்கார்ந்து இருக்கேன். நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. இன்னும் வேற என்ன சொல்ல இருக்கு! புத்தகங்களை புரட்டி வாசிக்கிற அனுபவத்தை இழந்து எலிக்குட்டிய நகர்த்தி படிக்கிறதுதான் அதிகமாக ஆகி இருக்கு.... :(


இனி இந்த தொடர் கேள்விகள் சங்கிலி அமிரகத்து புலி, அதுவும் அடர்கானகத்து புலி, பின்நவினத்துவத்தின் சிங்கம் அய்யனார்'க்கு நகர்த்தப்படுகிறது.

1) பின்நவினத்தின் வரையறைகள் எதுவும் வகுக்க்பபட்டு இருக்கிறதா? அப்பிடியெனில் அந்த வரையறைகளுக்குள் உங்களின் எழுத்து பயணிக்கிறதா?

2) வெகுஜன எழுத்துக்கள் மாதிரி உங்களின் படைப்புகள் இல்லை? அதுமாதிரியாக உன்னால் எழுதவே முடியாதா? என உங்களை நோக்கி எழுந்த நண்பர்களின் விமர்சனங்களுக்கு என்ன பதில்?

3) உங்களின் படைப்புகளை அச்சுப்புத்தகமாய் வெளியிடுவதற்கு ஏதேனும் உத்தேசம் உள்ளதா? ஆம் என்றால் எப்போ? இல்லையெனில் ஏன்??

4) இணையம் எழுத்தும், பின்ன இத்யாதியும் தாண்டி குடும்பஸ்தானாக ஆன பினனரும் உங்களின் ஆரம்பகாலத்து மாதிரி வீரியமாக எழுதமுடிகிறதா?

Friday, June 6, 2008

கொஞ்சநாளைக்கு முன்னாடி.............

கொஞ்சநாளைக்கு முன்னாடி ஊருக்கு போயிருந்தப்ப நம்ம சோட்டு பசங்க என்னோமோ இண்டர்நெட்'லே எழுதி கிழிக்கிறேன்னு பெருமையா பேசிட்டு திரிவியா? அப்பிடி என்னதாண்டா எழுதி தொலைப்பே.. எங்களுக்கு கொஞ்சம் காட்டி தொலையேன்னு விரும்பி கேட்டு கெஞ்சினதுனாலே நம்ம இதயதளபதி வருங்கால சூப்பர்ஸ்டார்(கிர்ர்ர்...தூ) நடித்த அழகிய தமிழ் மகன் திரைகாவியத்தோட விமர்சனத்தை காட்டினேன். வரிக்கு வரி படிச்சி என்னை முறைச்சிட்டே இருந்தானுக... இதை நீதான் எழுதுனியே! இது FWD-Mail'லிலே திரிஞ்சுச்சே, எல்லாம் ஒன்னோட வேலைதானா?'ன்னு கர்-புர்'னு ஆனானுக. அவனுக எல்லாம் மதுரை மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள்.. எந்த கழகம் தெரியுமா? (.....) விஜய் ரசிகர் போர் படை கழகம்... :(

குருவி வந்தப்போ கழகதங்கத்துக்களுக்கு போன் பண்ணி அ.த.ம'க்கு மாதிரி ஒரு விமர்சனம் எழுதவா'ன்னு கேட்டேன். நீ படம் பார்த்துட்டியா'னு திரும்ப கேட்டானுக.. இல்ல சும்மா ஒரு குத்து மதிப்பா ஒங்க தலைவர் எப்பிடிப்பட்ட கதை???யிலே நடிப்பாரோ, அதை வைச்சி எழுதுறேன்னு சொன்னேன். "நீ ஒன்னும் விமர்சனம் எழுதி நக்கல் பண்ண வேணாம்.. படமே அப்பிடிதான் இருக்குன்னு சொல்லிட்டானுக, அப்புறமென்னா தலைமை கழக நிர்வாகிகளே சொல்லியான்னு விட்டுட்டேன். இருந்தாலும் குருவி விமர்சனங்களிலே கப்பிநிலவனோட இந்த பின் - நவீனத்துவ பதிவும் கீர்த்தியோட செம நக்கல் பதிவும் FWD-Mail'லே திரிஞ்சுகிட்டு கிடந்துச்சு.

------------------------------------------------------------------------

கொஞ்சநாளைக்கு முன்னாடி என்னோட ஜீ-டாக் கஸ்டம் மெஜஜ்'லே ஒரு கவுஜ ஒன்னு போட்டுருந்தேன். நான் எழுதுனதுதான்.. ஹி ஹி நம்புங்க.

வானம் முடிந்து மரக்கிளை உதிர்க்கும் மழையென தாயன்பிலிருந்து உனது அன்பிற்கு...

ஆபிஸிலே கூட குப்பை கொட்டுற ஒருத்தன் படிச்சிட்டு இதுக்கு என்ன மீனிங்'னு கேட்டான். விளக்கி சொன்னதும் இவ்வளவுதானா'ன்னு போயிட்டான். அதுனாலே இன்னொரு கொலைவெறி கவுஜ எழுதியாக வேண்டிய கட்டாயத்துக்கு உந்தப்பட்டதுனாலே ஒன்னே ஒன்னு...

பெருவெளியின் காட்சியடைய சாளரம் வழியும் எரிதழலின் நிறமடைகிறது எனது அறை... உந்தன் முதன்முறை வருகையை போலே...

------------------------------------------------------------------------

கொஞ்சநாளைக்கு முன்னாடி வாங்குன Nikon - 40X'லே எடுத்த ஒரு படம்.



------------------------------------------------------------------------

கட்டகடைசியா நானும் கொஞ்சநாளைக்கு முன்னாடி வலைபதிவரா இருந்தவன் தான்'கிறத காட்டிக்கிறதுக்கான "உள்ளேன் ஐயா'கிற மொக்கை பதிவு"கிற டிரெண்ட் பதிவு இதுதான் ஆணிதரமா சொல்லிக்கிறேன்... தெளிவா குழப்புறோமா.... நாங்கல்லாம் யாரு... :)

Friday, April 25, 2008

ரெண்டு




முதற்வணக்கமின்னு ஒரு பதிவை தமிழ்லே தட்டுதடுமாறி பதிவேத்தி இன்னிக்கோட ரெண்டு வருசம் முடியப்போகுதுங்க.... ஆக இன்னிலிருந்து வெற்றிக்கரமா மூணாவது ஆண்டிலே அடியெடுத்து வைச்சாச்சு.... ஹி ஹி நாமே'லே சொல்லிக்காமே வேற யாரு சொல்லப்போறாங்க.... :)

இந்த வருசத்திலிருந்தாவது மாசத்துக்கு பத்து பதிவாது போடனுமின்னு கொள்கை முடிவு எடுத்துருக்கேன்.... :)

Tuesday, April 15, 2008

தனிமை...

ஆபிஸிலே ஆப்படிக்கிறதை நினைச்சி Gtalk'லே கூட போங்கடா நீங்களும் ஒங்க வேலையும்'ன்னு போட்டு புலம்ப முடியலை.

ரெண்டு மூணு மாசமா PIT போட்டியிலே கலந்துக்கனுமின்னு நினைச்சி போட்டோ எடுத்து அதே Picsa + GIMP'லே PP பண்ணி பத்திரமா வைச்சிக்கிறதோட சரி... :(

இந்தமாசத்து போட்டிக்கு கடைசி நாளு'லே ஆட்டைக்கு கலந்துக்க வந்தாச்சு....



இவரு ஒரு அறிவுஜிவி.... எதோ யோசனையிலே இருந்தாரு... அப்பிடி கிளிக்கியாச்சு.... :)



ஹி ஹி Candid shot...




இது கோவா calangute beach'எடுத்தது.... :)

Wednesday, February 27, 2008

நேயர் விருப்பம்

அடிக்கிற வெயிலிலே காஞ்சு கருகி போயிருவோம் போலயிருக்கே'ன்னு புலம்பிக்கிட்டே தாராபுரத்து பஸ்ஸடாண்ட்'ல் நின்றுக் கொண்டுருந்தான் தனபால். தூரத்தில் யாரோ தெரிந்தவன் போல ஏதோவொரு உருவம் அங்குமிங்கும் அலைவதை பார்த்த தனபாலுக்கு யாரு'ன்னு சட்டென்னு உரைக்கவில்லை, வயதுகளின் பெருக்கத்தில் மூக்கு மேலிருக்கும் அமர்வினை எடுத்துவராத கஷ்டத்தை பஸ்ஸ்டாண்டில் நின்று பத்தடிக்கு முன்னால் நிற்கும் பஸ்ஸில் எழுத்தை படிக்க பட்ட பாட்டை நினைத்து பொறுமி கொண்டிருந்தான். அதே உருவம் தான் நிற்கும் பக்கத்தை நோக்கியே வர உற்றுக்கவனிக்க ஆரம்பித்தான். வெகுவான ஆச்சரியத்தோடு அவனை அப்பிடியே கத்திக்கொண்டே போயி கட்டிக்கொள்ளும் அளவுக்கு பாசம் உந்த அது அவந்தானா பக்கத்தில் வந்ததும் கன்பார்ம் செய்துவிட்டு செய்யலாமென வெகு உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.

"அட தனா கண்னு, நீதானா அது தூரத்திலிருந்து பார்க்கிறப்போ யாரோ மாதிரி தெரிஞ்சயேப்பா! பாரு கும்பிடப்போன சாமியே நேரா வந்த கணக்கா இங்கன நிக்கிறே, ஒன்னப்பார்க்கதான் தாரப்புரம் வந்தேன்."

இவனா இன்னும் உசுரோடதான் இருக்கானா? தான் பார்க்கிறது கனவா நிஜமான்னு வெகுவான ஆச்சரியத்திலே அவனையே பார்த்துக்கொண்டுருந்தான் தனபால்.

"என்னா இப்பிடி பார்க்கிறே? இன்னும் நான் உசுரோட இருக்கேன்னு பார்க்கிறீயா?"

"சே ச்சே, அப்பிடி இல்லடா நாகு, நாமே சந்திச்சே பத்து வருசத்துக்கு மேலே ஆகிப்போச்சே, அதுதான் கொஞ்சம் குழப்பமா இருந்தேன்."

"நான் வேலைக்குன்னு சவுதி போயி பத்து வருசத்துக்கு மேலே ஆச்சு, ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அம்மா செத்தப்போ இங்க வந்தேன், அதுக்கப்புறம் இப்போதான் இங்கயே வர்றேன்."

"என்னாது அம்மா இறந்துட்டாங்களா? அதைக்கூட சொல்ல மாட்டியா நீயி? என்னம்மோ போடா, அந்த பிரச்சினை ஆனதுக்கபுறம் நீ சொல்லாமே கொள்ளாமே ஊரை விட்டு போனதும் எனக்கு அவ்வளவு கோவம் வந்துச்சு, நீயும் நானும் நாலு வருசத்துக்கு மேல ஒன்னா இருந்தும் அந்த பிரச்சினைக்காக அப்பிடியா ஓடிப்போறது?"

"சரி நான் முடிஞ்சு போன பிரச்சினையே பத்தி பேச வரலை, ஒன்னய பார்த்து போகலாமின்னு கோயம்புத்தூரிலே இருந்து இங்க வந்துருக்கேன், பக்கத்திலே அழகா ஒரு குட்டிப்பொண்ணு நிக்கிறாங்களே? இவங்க யாரு?"

"ஹிம், இவங்கதான் என்னோட பொண்ணு, மூணாவது படிக்கிறாங்க, பேரு சவுந்தர்யா, இன்னிக்கு சனிக்கிழமை'கிறதுனாலே அம்மணிக்கு லீவு. கோயம்புத்தூர் போறேன்னு சொன்னதும் என்னையும் கூட்டிட்டு போங்கன்னு வந்தாங்க"

"அப்பிடியா இனிமேதான் போகப்போறியா?"

"இல்ல இல்ல, போயிட்டு வந்தாச்சு, இப்போதான் பஸ்ஸிலே இறங்கி வந்து நின்னுட்டு இருக்கேன், நீ அடுத்த பஸ்ஸிலே இங்க வந்து இறங்கிறே"

"சரி இங்கயே நிக்க வைச்சு பேசிட்டு இருக்கே? வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போகமாட்டியா?"

மெல்லமாய் சிரிப்பை உதிர்த்து விட்டு பஸ்ஸ்டாண்ட் வெளியே வாகனகாப்பகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் மூவரும். வரும் வழியில் தற்போது சொந்தமாக எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பதாகவும் அதற்குண்டான ஸ்டாக் எடுக்கதான் கோவை வந்ததாகவும் நாகுவிடம் சொல்லிக்கொண்டே வந்தான் தனபால்.

"விஜி, இவந்தான் நாகராஜ், அடிக்கடி சொல்லுவேனே? அவந்தான் இவன்"ன்னு தன்னுடய மனைவியிடம் நாகராஜனை அறிமுகப்படுத்தினான்.

"நானும் இவனும்தான் ஒன்னா கோயம்புத்தூர் மில்'லே எலக்ட்ரிசியனா வேலை பார்த்தோம். கொஞ்சநாளிலே எனக்கு சவூதி'லே வேலை கெடைச்சிருச்சுன்னு அங்க போயிட்டேன்"

"ஹிம் ஒங்களை பத்தி சொல்லியிருக்காங்க, நீங்களும் இவரும் ஒன்னா திண்டுக்கல் பாலிடெக்னிக்'லே படிச்சி முடிச்சு கோயம்புத்தூர் வந்து வேலை பார்த்தது, தனியா வீடு எடுத்து தங்கினது'னு எல்லாமே சொல்லியிருக்காங்க"

தனபால் மனைவி இதை சொல்லிமுடித்ததும் சற்றே சந்தேகத்திடனே நாகராஜன் அவனை உற்று நோக்க ஆரம்பித்தான். சமையல் வேலையாய் அவள் உள்ளே போக தன்னுடைய சந்தேகத்தை கேட்டுறலாமின்னு என பேச ஆரம்பித்தான்.

"அடேய் தனா எல்லாத்தையும் சொல்லிட்டியா?"

"எல்லாமே சொல்லிட்டேன், ஆனா அந்த பிரச்சினையே மட்டும் சொல்லலை!"

"ஹிம், எப்பிடிடா இருக்கா அவ? நல்லாயிருக்காளா? சந்தோசமா இருக்கா இல்ல?"

"ஒருதடவை கோயம்புத்தூரிலே வேலை விசயமா போனப்போ அவ காரிலே போறத பார்த்தேன், என்னையே அவளும் பார்த்துட்டா போலே, கொஞ்சதூரம் போன காரை கூட திரும்ப வர்ற வைச்சி என்கிட்டே பேசிட்டு போனா, நல்லாயிருக்காளாம், பீளமேடு பக்கத்திலேதான் வீடு வந்துட்டு போங்கன்னு கூப்பிட்டா என்னாலேதான் போகமுடியல"

"ஓ, நான் அவளை பார்க்கலாமாடா?"

"இதேதான் அவளும் என்கிட்டே கேட்டா? நாகு எப்பிடியிருக்காங்க? கல்யாணம் ஆகிருச்சான்னு கேட்டா? அட நானே கேட்கமறந்து போயிட்டேன், கல்யாணம் ஆகிருச்சாடா ஒனக்கு? எங்க வீட்டை சவூதி'லே செட் பண்ணிட்டியா?"

"இல்லய்யா, அம்மாவும் எட்டு வருசமா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லி அலுத்து போயி செத்தே போயிட்டாங்க, நான் இப்பிடி பண்ணுறேன்னு அக்காவும் என்கிட்டே பேச்சை நிப்பாட்டி வருசத்துக்கு மேலா ஆகிப்போச்சு, ஒட்டு சொந்தமே என்னை புரிஞ்சுக்கலை, நான் என்ன பண்ணுறது?"

"ஹிம் என்னதான் பெரிய வருத்தமிருந்தாலும் நாப்பது வயசு வரைக்கும் கலியாணம் பண்ணாமலே'வா இருக்கிறது?"

"என்னாடா பண்ணச்சொல்லுறே? மறக்க முயற்சி பண்ணாலும் முடிய மாட்டங்கிதே? எங்க விசயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சு அவ அப்பா ரோட்டிலே வைச்சி என்னை தாறுமாறா திட்டுனது? நம்ம வேலை பார்த்த மில்'க்கே வந்து அவங்க அண்ணனுங்க அசிங்கமான வார்த்தைகள் எல்லாம் பேசி சண்டை போட்டும் அவளை மட்டும் என்னாலே மறக்கமுடியலை'யேடா!"ன்னு கண்ணோரத்தில் எட்டிப்பார்த்த ஈரத்தை மெல்லமாய் துடைத்து கொண்டான்.

"நாகு எனக்கு புரியுதுடா,, அதுக்காக நீ கல்யாணமே பண்ணிக்காமே இருக்கிறது நல்லாவா இருக்கு? இப்போ உனக்குன்னு இருந்த அம்மாவும் இல்லை, அக்காவும் பேசுறது இல்லன்னு சொல்லுறே? அப்போ வர்றப்போற காலங்களிலே ஒனக்குன்னு யாருடா இருக்கா?"

"எல்லாம் விதி படியே நடக்கட்டுமின்னு நானும் அதுப்படியே போயிட்டு இருக்கேன்"

"அப்பா அப்பா, நான் கேட்ட பாட்டை சூரியன் FM'லே போடுறாங்கப்பா'ன்னு சந்தோசமாக ஓடி வந்தாள் தனபால் மகள்

"என்னாடா இன்னுமா ரேடியா'லே நேயர்விருப்பம் போடுறாங்க"ன்னு ஆச்சரியத்தோடு கேட்டான் நாகு.

"ஆமாம், இப்போ FM ரேடியோ வந்ததுக்கபுறம் அந்த விருப்பம் இந்த விருப்பமின்னு போனிலே பேசி தள்ளுறாங்க! நம்ம காலத்திலே போஸ்ட் கார்ட்'லெ எழுதி போட்டு தினமும் சாயுங்காலம் இன்னிக்காவது நம்ம பேரை சொல்லி பாட்டு போட்டுருவாங்களான்னு காத்து கெடப்போமே"

"நீ இதை சொன்னதும் தேவி நினைப்புதாண்டா வருது. தினமும் பத்து கார்டு அனுப்புவாளே? ஒருதடவை என் பெயரையும் அவ பேரையும் சேர்த்து எழுதி காதலான தேவி, உன்னை சுற்றும் ஆவி பாட்டு வேணுமின்னு எழுதி போட்டிருக்கேன்னு சொன்னா, அது வந்துச்சான்னுகூட தெரியல."

"ஆமாம் இந்த நேயர் விருப்பம் கேட்கிறதுலே அவதானே தீவிரமா இருப்பான்னு சொல்லுவியே? நாமே தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்திலே இருந்தாலும் என்கிட்டே ஒருநாளும் பேசினது இல்லை. எப்பாவது நீயும் நானும் வெளியே போயிட்டு வந்தாலும் என்னை பார்த்தாலே அமைதியா போயிருவாளே! எப்பிடிடா லவ்'லாம் பண்ணீங்க, அதுவும் பாட்டெல்லாம் நேயர்விருப்பத்திலே போடுற அளவுக்கு பேசினீங்க?"

"அதெல்லாம் எப்பிடியோ பேசுவோம்.அவளுக்கு இளையராஜா'ன்னா ரொம்ப பிடிக்கும்,அதுவும் கார்த்திக் நடிக்கிற படத்துக்கு இளையராஜா மீயூசிக்'ன்னா ரொம்பவே விரும்பி கேட்பேன்னு சொல்லுவா! பனிவிழும் மலர்வனம் ரேடியோ'லே நேயர்விருப்பத்திலே வந்துச்சுன்னா அதிலே இவ பேரு கண்டிப்பா இருக்கும்."

"ஹிம் அவ சொன்னாதானே நீயி மூக்குக்கு கீழே கொஞ்சமா மீசைய சேவ் பண்ணிட்டு திரிஞ்சே, இப்போ என்னாடா'ன்னு காட்டான் மாதிரி கட்டு மீசை வைச்சிட்டு திரியிறே. "

"ஆமாம் அவளுக்கு கார்த்திக் பிடிக்கிறதுக்காக அப்பிடி இருந்தேன். இப்போதான் நான் தேவதாஸ் ஆகிட்டேனே? ஆனா சரியா ரோமக்கட்டு இல்லாதுனாலே தாடிதான் சரியா வரமாட்டேங்கிது"

"இன்னும் அந்த நக்கல் பண்ணுற பேச்சை விடலடா"ன்னு பேச்சுக்கு சொன்னாலும் அவனுடைய கண்கள் பனிக்க எத்தனிக்கும் தருணத்தையும் கவனித்தான் தனபால்.

"தனா நான் இங்க வந்ததே ஒன்னய பார்க்கிறதுக்கும் முக்கியமா அவளை பார்த்து விசாரிக்கிறதுக்கும் தான் வந்தேன். அவ வீட்டு அட்ரஸ் தர்றியா? நான் ஒருக்கா அவளை பார்த்துட்டு வந்திறேன்."

"அட்ராஸ்தானே தர்றேன். அதுக்கு முன்னாடி நான் இந்த எட்டு ஒன்பது வருசமா அனுபிவிக்கிற கொடுமையே நீயும் அனுபிவிக்கனும்"

"என்னடா அது"

"அட ஒன்னுமில்லடா, அம்மணி சாப்பிடக்கூப்பிடுறாங்க, வா போயி சாப்பிடலாம்."

"சரி அப்போ நான் அவளை பார்க்கிறதுக்கு ஒனக்கு ஒன்னும் ஆட்சோபணை இல்லைலே?"

"ஹிம் அதெல்லாம் இல்லை, நீ தாரளமா போயி பார்த்துட்டு வா, இப்பவே சாப்பிட்டு போயிட்டு கூட வா, நான் சாயுங்காலமா சென்னை போறேன், நீயும் என்கூட வந்தேன்னா எனக்கு கொஞ்சம் துணையா இருக்கும். ஒரு பல்ப் கம்பெனிகாரன் டீலர்ஷிப் தாரேன்னு சொல்லியிருக்கான், அவனை போயி பார்த்து பேசனும்."

மதிய உணவிற்கு பிறகு தனபாலிடமிருந்து அட்ரஸ் வாங்கிகொண்டு திரும்ப வர்றேன்னு கிளம்பி போனான் நாகராஜன். தேவியின் வீட்டை பீளமேடு'ல் கண்டுபிடிப்பதற்கு பெரிதாக எல்லாம் சிரமமபடவில்லை அவன். வீடு என சொல்லுவதை விட பெரிய பங்களா போலே இருந்தது, தயங்கி தயங்கி அங்கே போயி வெளியே நின்ற கூர்கா'விடம் தேவியை பார்க்க வேண்டி அவளுடைய அனுமதிக்கு பிறகு வீட்டுக்குள் சென்றான் நாகராஜன். பத்து வருடத்துக்கு முன்னர் பார்த்த அதேமாதிரியே இருந்தாள் தேவி. இன்னமும் படிய வாரிய கூந்தலும், மல்லிகை பூவும், மேல் நெத்தியில் சந்தனகீற்றும், இரு புருவங்களுக்கு சற்றே மேலே விரல் நுனி அளவு குங்குமமும், இப்பொழுது சற்று புதிதாக உச்சி நெற்றியிலும் குங்குமமும் வெகுபாந்தமாய் இருந்தாள். பேசுவதற்கு எந்த வார்த்தை கொண்டு ஆரம்பிப்பது'னு இருவரும் தடுமாற இருவர் வாயிலும் நல்லாயிருக்கியான்னு வந்து உதிர்த்தது.

"நான் நல்லா இருக்கேன் தேவி... நீ எப்பிடியிருக்கே? ஒன்னோட புருசன் என்ன பண்ணுறாரு?"

"எனக்கென்னா நான் மகாராணியாட்டாம் இருக்கேன், அவரு இங்க வாட்டர் பம்பு மேன்பாக்சரிங்க் பண்ணுற பிஸினஸ் பண்ணிட்டு இருக்காரு. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

"நான் சவூதி'லே ஒரு கம்பெனியிலே எலக்ட்ரிகல் டிபார்ட்மெண்ட்'லே இருக்கேன். லீவு'லே இங்க வந்தேன். வந்த இடத்திலே தனா'வே பார்க்கலாமின்னு வந்தேன். அவந்தான் ஒன்னோட அட்ரஸ் கொடுத்தான், அப்பிடியே பார்த்துட்டு போலாமின்னு வந்தேன்."ன்னு கிட்டத்தட்ட இரண்டுமணி நேரமாய் மனதிற்குள் என்ன பேசவேண்டுமென நினைத்தை அப்பிடியே அவளிடம் ஒப்பித்தான். எந்தவொரு சூழ்நிலையிலும் கண்கள் கலங்கிட கூடாது. வார்த்தைகள் வர கஷ்டப்படும் அளவுக்கு போயிறக்கூடாது'ன்னு உறுதியாக இருந்தான்.

"நீங்க முன்னப்பார்த்த மாதிரியே அப்பிடியே இருக்கீங்க, மீசைதான் பெருசா வைச்சிருக்கீங்க. இப்போ வந்த அம்மணிக்கு இப்பிடியிருக்கிறதுதான் பிடிச்சிருக்கா என்னா'ன்னு கேட்டு வெகுளியா சிரித்தாள் தேவி. ஆனால் இவனுக்குதான் கஷ்டமாக இருந்தது. இவனது முகம் போன போக்கை கவனித்த அவள் பேச்சை மாற்ற முற்பட்டாள்.

"இப்போல்லாம் கூட நான் நேயர் விருப்பத்துக்கு லெட்டர் அனுப்பிட்டு தான் இருக்கேன். முன்னாடி ஒரேயொரு கோவை ரேடியாதான், ஆனா இப்போ டிவி,FM ரேடியோ'ன்னு எல்லாத்திலேயும் இது போடுறாங்க இல்லே, எல்லாத்திலையும் லெட்டர் அனுப்பிட்டுதான் இருக்கேன்'ன்னு சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள். இன்னமும் அவளிடம் நிறையவே பேசவேண்டுமென நினைத்தாலும் நேரம் நெருங்க ஆரம்பித்ததும் தனா என்னை சென்னைக்குகூட வர சொல்லி கூப்பிட்டு இருந்தான். நான் கிளம்ப வேண்டியதா இருக்கு'னு சொல்லி அந்த இடத்தை விட்டு கிளம்பினான் நாகு.

கோயம்புத்தூர் பஸ்ஸ்டாண்ட்'லில் இருந்து சென்னை போகும் பஸ்க்கு அருகில் வெயிட் பண்ணுவதாக தனபால்'க்கு போன் செய்தான். இரவு பஸ் பயணத்திடனுடயே "நாகு தேவியை பார்த்து பேசினியா என்னா சொன்னா?'ன்னு கேட்ட தனபாலை கலங்கிய கண்களோடு பார்த்தான் நாகு.

"ஹிம் நல்லா இருக்காடா! அவ்வளவு பெரிய வீட்டிலே மகாராணியாட்டாம் இருக்கேன், சந்தோசமா இருக்கேன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிட்டே இருந்தா, இன்னமும் நேயர் விருப்பத்துக்கெல்லாம் லெட்டர் போடுறதா சொல்லிட்டு இருந்தா"

"அப்புறம் என்னாடா, நீ எதுக்கு அப்செட் மூடு'லே இருக்கே? இன்னமும் அவ நேயர்விருப்பத்திலே கேட்கிற பாட்டெல்லாம் ஒன்னாலே அவ பெயரோட கேட்கமுடியலன்னு வருத்ததிலே இருக்கியா? இப்பவே சொல்லு, இப்பவே நைட்'லே கூட நேயர் விருப்பம் வருது அதிலே அவ பெயரை சொல்லி பாட்டு போட சொல்லிருவோம்."

"உனக்கு என்ன பதில் சொல்லுறதுன்னே தெரியல'டான்னு குலுங்கி குலுங்கி ஆரம்பித்தான் நாகு.

"டேய் டேய் எதுக்கு அழுவுறே? இது பஸ்'டா, எல்லாரும் ஒருமாதிரியா பார்க்குறாங்க, என்னா ஆச்சு'னு சொல்லு"

"தனா தனா, கிளம்புறப்போ என்னை விட்டு தூரமா நின்னுட்டு அவ்வளவு நேரமா சிரிச்சிட்டு இருந்தவா அழவே கூடாது'ன்னு அவளோட உணர்ச்சிய கட்டுப்படித்திக்கிட்டு..." சொல்லி விசும்ப ஆரம்பித்தான் நாகு.

"தேவி அப்பிடி என்னாதான் சொன்னா?"

"ம்ம்..ம்ம்...ஒங்க பேரு வைச்சி கூப்பிட எனக்கொரு புள்ள இல்லாத அபாக்கியசாலியா இருக்கேன்னு சொல்லி கண்ணுலே தண்ணி வந்து அதை அடக்கமுடியாமே உள்ளே ஓடிட்டா"ன்னு சொல்லி இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தான் நாகு.

இந்த மனநிலையிலிருக்கும் நாகுவை என்ன சொல்லி தேற்றுவதுன்னு வெகுவான குழப்பதின் உச்சியில் அமைதியானான் தனபால்.பஸ்ஸில் இரவு நேரத்தில் கசியும் பாடலில் காதலான தேவி, உன்னை சுற்றும் ஆவி ஒலிக்க ஆரம்பித்தது.

Tuesday, February 5, 2008

எந்த பறவை எழுதியிருக்கும் இந்த கடிதத்தை?

நான்கு நாட்கள் வெளியூருக்குப் போய்விட்டு வந்தால், வீட்டில் எட்டுக் கடிதங்களாவது வந்திருக்கும். தொட்டிலில் கிடக்கிற பிள்ளையைக்கூட அப்புறம்தான் பார்க்கத் தோன்றும். பிரயாண அலுப்பு மாறாத முகமும், கசங்கினஉடைகளுமாக ஒவ்வொரு கடிதத்தையும் வாசிக்க வாசிக்க, விலாப்புறத்தில் மட்டுமல்ல... உடம்பு முழுவதும் சிறகுகளாக முளைத்திருக்கும்.

இரண்டு வாரத்துக்கு முன்னர் வெளிவந்த ஆனந்தவிகடனில் வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி எழுதிய அகமும்புறத்தின் தொடக்க வரிகள் இவை. இந்த இரண்டு வரிகள் நம்முடைய தகவல் பரிமாற்றத்தின் அழகியலை தொலைத்து போன வெறுமை மனதிற்குள் மெல்லமாய் படர்கின்றது.


Success in sight....

தினசரி வழக்கமாகிவிட்டது
தபால் பெட்டியைத் திறந்து
பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.

இரண்டு நாட்களாகவே
எந்த கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.

இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்.

எந்த பறவை எழுதியிருக்கும்
இந்த கடிதத்தை?

-வண்ணதாசன்

இந்த கவிதை படிச்சதும் என்னை என்னோமோ பண்ணிச்சு... இளமைப்பருவத்தில் என்னுடைய தம்பி எங்கள் சித்தப்பா வீட்டில் வளர்க்கப்பட்டான். அவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் இவனைதான் எட்டாம் வகுப்பு படிப்பு வரை வளர்ந்தார்கள். அதன்பின்னர் நானும் என்னுடய அக்கா எங்கம்மா எல்லாரும் அடம்பிடித்து எங்களுடைய வீட்டிலே கொண்டுவந்தோம். மூன்று வயதிலே இருந்து எங்களை விட்டு போன அவனை பெரும்பாலும் பார்ப்பது தீபாவளிக்கும், முழு ஆண்டு விடுமுறையிலும் தான். தீபாவளி வரும் மாதத்திற்கு முன் மாதம் முதலில் எங்களுடைய ஆரம்பிக்கும் அந்த செயின் லெட்டர்ஸ் பரிமாற்றங்கள். முதலில் அவந்தான் சித்தப்பா எழுதும் கடிதத்தில் கடைசியில் அழகான தன்னோட கையெழுத்திலே ராமூர்த்தீ இந்த தீவாளிக்கு நாமே நூறு வாலா ரெண்டு வாங்கி நீ ஒன்னு நா ஒன்னு வைக்கலாமின்னு எழுதுவான். அதுக்கப்புறம் சித்தப்பா எழுதியதுக்கு அப்பா எழுதும் பதில் லெட்டரிலே நானும் எங்கக்காவும் கொஞ்சமும் எழுதுவோம். எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பேனா உபயோகப்படுத்தக்கூடாது என்பதினால் பென்சிலில்தான் எழுதுவது. அப்பா பதில் எழுதிவிட்டு இந்தாடா நீயும் எழுதிட்டு போஸ்ட் பண்ணிருன்னு கொடுப்பாரு. அதை வாங்கியதும் எனக்கும் எங்க அக்காவுக்கும் முதலில் சண்டை வரும், யாரு முதலிலே எழுதுறதுன்னு! ஒரு வழியா சமதானம் ஆகி யாராவது எழுத ஆரம்பிப்போம். அதிலே நானாவது என்னோட அக்காவது போன வாரம் பெரிய சண்டை வந்து நான் அவளை அடிச்சிட்டேன்னு நானோ இல்ல என்னோட அக்கா அவனை அடிச்சிட்டேன்னு எழுதாமே அந்த லெட்டரை முடிப்பது இல்லை. சிலசமயங்களிலே எங்கப்பா அதை படிச்சிட்டு சிரிச்சிட்டே பசங்களா என்ன என்னா'டா இன்னமும் எழுத பாக்கி இருக்கு'ன்னு கேட்பாரு? அப்போல்லாம் ஒன்னுமே புரியாது. இப்போதான் நிறைய புரியுது...

இதேமாதிரி எங்க அப்பத்தா சித்தப்பா வீட்டிலே இருந்தா எங்களுக்கு லெட்டர் எழுதுனுமின்னா என்னோட தம்பிதான் எழுதி தருவான். அப்பத்தா'வுக்கு எழுதப்படிக்க தெரியாது. அதுனாலே அவங்க சொல்ல சொல்ல அவன் எழுதுவான். சில சமயங்களிலே பஸ்ஸிலே பிராயணம் பண்ணினது அப்புறம் அங்க ஆஸ்பத்திரிக்கு போயி டாக்டரை பார்த்ததுன்னு என்னத்தாயவது அப்பத்தா சொல்லும். இவனும் அதெய்யல்லாம் கேட்டு அப்பிடியே எழுதிட்டு கிழே சின்ன சின்ன கமெண்ட்ஸ் எல்லாம் போடுவான். அதை படிக்கிறப்போ நாங்க விழுந்து விழுந்து சிரிப்போம். அந்த லெட்டருக்கு நானும் எங்க அக்காவும் ரீப்ளை பண்ணுறோப்போ அதை மாதிரிதான் கமெண்ட் எல்லாம் போட்டு எழுதுவோம். அந்த கடிதங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை நைட் வர மகாபாரதம், இராமயாணம் தொடரை பற்றிதான் இருக்கும். அப்பத்தா எங்க வீட்டுலே இருந்தா நானு,அக்கா எல்லாரும் சேர்ந்துதான் பார்ப்போம். அப்போ நீயூஸ்பேப்பரிலே அந்த தொடருகளோட தமிழ் வசனம் வரும். அதை படிச்சிக்கிட்டே அந்த தொடர் பார்க்கிறது அப்பிடியொரு சுவராசியமா இருக்கும், அப்பத்தா ஊருக்கு போயிட்டா இதை படிச்சி சொன்னியா, அவரு அம்பு விடுறோப்போ இந்த வசனத்தை அப்பத்தா'கிட்டே சரியா சொன்னீயான்னு லெட்டரிலே எழுதுவோம். இன்னும் என்னோம்மோ இருக்கு. இப்போ டைப் பண்ணதான் முடியல.

இப்போல்லாம் எழுதறதோ இல்லை அந்த இண்லாண்ட் லெட்டரை பொறுமையா மடிச்சு ஒட்டுறதுக்கெல்லாம் முடியுமான்னு தெரியலை. படிப்புக்கப்புறம் இப்பவும் நாங்க வெளியூருலேதான் இருக்கோம். இன்னமும் கடிதப்போக்குவரத்து நடக்குது. அது என்ன வீட்டுக்கு அனுப்பவேண்டிய பணத்துக்கு உண்டான செக், அதை போஸ்ட் இல்ல கொரியர் அனுப்பிட்டு உடனே மொபலிலே அவனுக்கு கால் பண்ணி லெட்டர் வந்ததும் எனக்கு உடனே போன் பண்ணுன்னு வைச்சிரதுதான்..... :(

Monday, February 4, 2008

2007 - எழுதியதில் பிடித்தது....

மூன்று வருடங்களுக்கு முன்னர் எங்கோ ஏதோவொன்றை தேடப்போக தமிழ்வலைபூக்களை தெரியவர அன்றிலிருந்து வேலை நேரத்தை தவிர இங்குதான் பொழுது போக்கு. அதிலும் தமிழில் முதன்முதலில் எழுதியபிறகு கிடைத்த சந்தோஷம் இருக்கே, அப்பப்பா இன்னும் பிரமிப்பு அடங்கவில்லை. அதுவும் திணமணி நாளிதழில் போட்டோவெல்லாம் வந்த அந்த பெரிய பிரமிப்பெல்லாம் இன்னும் அடங்கவில்லை. பதிவுகள் எழுத ஆரம்பித்து இரண்டுவருடங்களுக்குள் கிட்டத்தட்ட ஆறு குழுப்பதிவுகளிலும் இணைந்தாயிற்று, அதில் இன்னும் இரண்டு - மூன்று பதிவுகளில் எழுதவே ஆரம்பிக்கவில்லை. எனக்கும் டைம் மேனஜ்மெண்ட்'க்கும் ஒத்து வரவே வராது. கிடைக்கிற நேரத்தை சரியாக உபயோகப்படுத்திக்கவும் தெரியாது. போன வருடத்தில் நிறைய பதிவுகளும் சிறுகதைகளும் மதுரை மொழி நடையில் எழுதனுமின்னு ரொம்பவே மெனக்கெட்டேன். கடைசிவரை முடியாமலே போனது.

போனவருடத்தில் மொத்தமாய் வைகையில் எழுதிய நாப்பத்தி முன்று சொச்சம் பதிவுகள், சங்கத்தில் பத்து, தேன்கிண்ணத்தில் கொஞ்சம்,சுவரொட்டியில் ஒட்டியது கொஞ்சமின்னு நூறை தாண்டியது. அதில் உருப்படியாக எழுதியாக என்ன எழுதியிருக்க போறேன்னு என்னால் ஏதுவும் எடுக்கமுடியவில்லை. எதையும் உருப்படியாக செய்திருந்தால் தானே அதை எடுத்துக்காட்டி பெருமைப்படலாம். காதல் கவிதைகள் எழுதுறேன் பேர்வழின்னு படிக்கிற காலத்திலே டைரிலே கிறுக்கினதை நண்பர்கள்கிட்டே காட்டி பெருமைப்படுவேன். அதிலிருந்து ரெண்டு மூணு கவிதைகளை இங்கயும் போட்டேன். வழக்கம்போல எல்லாரும் அதை கும்முன்னு கும்மி இனிமே எந்த காதல் கவிதைகளையும் பிளாக்'லே போடவேகூடாதுன்னு கொள்கை முடிவு எடுத்துட்டேன்... :)

அப்புறம் இந்த சிறுகதைகள் எழுதியதுன்னா பிளாக்'லே எழுதிய முதல் கதைக்கே தேன்கூடு போட்டியிலே நான்காம் பரிசு கிடைக்க அந்த வேலையாவது உருப்படியாக செய்யனுமின்னு கொஞ்சநாளு மெனக்கெட்டு எழுதிய இந்த கதைக்கு வழக்கம்ப் போலே இது உன்னோட சொந்த கதையா'ன்னு கேட்டு அன்னிலிருந்து கற்பனா கதாப்பாத்திரத்தை என்னோட வருங்கால மனைவி பெயர்'ன்னு சொல்லி எங்க போனாலும் இப்போ மகா எப்பிடியிருங்கன்னு கேட்கவைச்சிட்டாங்க... :( இந்த வேலைய செய்த புண்ணியவானுகளா நல்லாயிருங்க நல்லாயிருங்க... அதற்கு பின்னர் என்னோட சித்தப்பா பொண்ணு மரணத்தை கருவாக வைத்து எழுதிய மாணிக்கமலர். அதன்பின்னர் பொழைக்கிற பொழைப்பிலே நடக்கிற விசயங்களை வைத்து எழுதிய காதல் கதையும் எழுதியதில் பிடித்ததுதான்.

ஆனால் இதையெல்லாம் மீறி எனக்கு ரொம்பவே பிடித்தது சவடன் கதைதான். அதிலே நான் எழுத வந்த விஷயத்தை தருமி ஐயா தவிர யாருக்கும் படித்த பொழுது புரியவில்லை என்று நினைக்கிறேன். மேல்சாதியை சேர்ந்த நபரும் கீழ்சாதியை சார்ந்த நபரும் நண்பர்களாக இருக்கும்பட்சத்தில் ஏதாவதொரு சந்தர்ப்பத்திலே வரும் பிரச்சினைய சுற்றியிருப்போர் எப்பிடி மேல்சாதிக்காரனுக்கு ஏத்தமாதிரி மாற்றுவார்கள் என்பதே அந்த கதையின் கரு. அதுவும் சுத்தமான மதுரை கிராமத்து மொழி நடையிலே எழுதினா மட்டுந்தான் சரியா வருமின்னு முடிவு செய்து கிட்டத்தட்ட பத்து - இருபது முறையாவது அதை திரும்ப திரும்ப படித்து சரி பார்த்து கொண்டேயிருந்தேன். கொஞ்சம் மிஸ் ஆனாலும் அது தப்பான அர்த்தத்தை இங்கே ஏற்படுத்தி விடும் என்பதால் மிகவும் கவனத்தோடுதான் அதை பப்ளிஷ் பண்ணிண்ணேன். பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லாட்டியும் பெரிய அளவுக்கு பிரச்சினைய கொண்டு வராதுனாலே அந்த கதைதான் எனக்கு ரொம்பவே பிடித்தது.... :)


இதேமாதிரி எனக்கு பிடித்ததை நீங்களும் சொல்லுங்கன்னு நான் கூப்பிட போறது எனக்கு முதல் பின்னூட்டம் இட்ட குமரன் ததா.

இவரும் ஒரு வகையிலே எனக்கு கற்று கொடுத்தவர் அவருதான் கிரேட் மொக்கை புயல் செந்தழல் ரவி

எந்த கதை எழுதினாலும் இவரை மாதிரி எப்பிடியாவது எழுதியிறனுமின்னு முடிவு பண்ணி ஆரம்பிப்பேன்,வழக்கம்ப்போலே முடியாவே முடியாது. அவருந்தான் கள்ளியிலும் பால் வடித்த ஜிரா.

இவரு கொஞ்சம் ஸ்பெசலுதான் எங்க ஊருக்காரு. என்ன பதிவு போட்டாலும் மனசார பாரட்டுவாரு. அவருதான் நம்ம மதுரையம்பதி... :)

கப்பி, இம்சையக்கா வலையுலக தபூசங்கர் நவீன்'ன்னு எல்லாரும் சொன்ன வேலைய சரியா செஞ்சுட்டேன்னு நினைக்கிறேன்... நீங்க நாலு பேரும் நான் சொன்னதை சரியாக செஞ்சுருங்க... :)

Sunday, February 3, 2008

கடவுளின் தேசத்தில்.....

கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகத்தில் கடுமையான வேலை. எங்களை போன்ற அட்மினிஸ்ட்ரேட்டர் பொழப்பு பொழைக்கிறவனுக்கு வாரயிறுதிகளிலே மட்டுமே எதுவும் புதுசாவோ இல்லை இருக்கிற ஏதாவது மாற்றம் செய்யமுடியும். வாரயிறுதியில் அப்பிடின்னா மத்த வாரநாட்களில் மற்ற வழக்கமான வேலைகளும் ஓர்க் பிளான் தயாரிப்பதிலும் காணாமலே போனது. பொங்கல் விடுமுறை வந்த இரண்டு நாளு தவிர ஆபிசுதான் கதின்னு கிடந்தேன். போன சனிக்கிழமை உடன் வேலை பார்க்கும் மல்லுவுக்கு கோழிக்கோடில் திருமணம், சென்ற மாதமே பத்திரிக்கை வைத்துவிட்டு நீ வந்துதான் ஆகனுமின்னு கட்டாயப்படுத்த ஆபிஸ் வேலையும் சேர்ந்து பாடாய்படுத்த என்ன செய்வதென முழிபிதுங்கிதான் போனது. ஒரு வழியாக சர்வர் லைசென்ஸ் மக்கர் பண்ணதிலே போன வாரயிறுதியில் லீவு கிடைத்தது. கிடைத்த நாளை உருப்படியாக உபயோகப்படுத்தமென இடமே இல்லாத வேன்'லே ஒரமாக இடத்தை பிடிச்சு கோழிக்கோடு போயி சேர்ந்தாச்சு. அங்கயிருந்து அருகிலிருந்த கிராமத்திலேதான் அவருக்கு திருமணம். அங்க எல்லாத்தையும் ஆ'ன்னு வாயை பொளத்து பார்த்துட்டு கேரளா ஸ்டைல் சாப்பாட்டையும் வெட்டு வெட்டிட்டு ஊரை சுத்த கிளம்பிட்டோம்.

நம்ம புரட்சி போட்டோக்கிராபர் அண்ணன் CVR'ன் வழிக்காட்டுதலின் படி ஏதோ என்னாலே முடிஞ்ச அளவுக்கு போட்டோ எடுத்து தள்ளினேன்... :)

இது கோழிக்கோட்டிலிருந்து கண்ணூர் போற வழியிலே எடுத்தது. வேன் பாலத்தை கடந்து போறப்போ எடுத்ததுனாலே சரியா போகஸ் ஆகலை. வண்டியை நிறுத்தி எடுக்கலாமின்னு பார்த்தால் குறுகிய பாலம்கிறதுனாலே நெரிசலான போக்குவரத்து இருந்தது.... :(

culicut lake

கல்யாணம் முடிச்சிட்டு கோழிக்கோடு வர்ற வழியிலே இருந்த கப்பாடு பீச்'க்கு சென்றோம்.அன்னிக்கு பொழுது இருட்டியதும் கோழிக்கோடு திரும்பி புது மாப்பிள்ளை ஏற்பாடு பண்ணியிருந்த தீர்த்தவாரியிலே கலந்துக்கிட்டு சயனத்துக்கு போயாச்சு.

In Beach

In Beach

In Beach

Sunset

மறுநாள் காலையிலே அடிச்சி பிடிச்சி எழுந்திருச்சி வயநாடு'ஐ சுத்தியிருக்கிற எல்லா இடத்தையும் பார்த்திறனுமின்னு வெறியோடு கிளம்பி கேப் டிரைவரை போட்டு பாடாப்படுத்தியாச்சு. அந்த வகையிலே முதலிலே போன இடம் பூக்காடு ஏரி. அந்த ஏரியை சுத்தி மலைகள் சூழந்திருப்பது சிறப்பு. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை படகு சவாரியிலே சுத்திட்டு அடுத்த இடமான எடுக்கல் குகைக்கு கிளம்பினோம்.

பூக்காடு ஏரி:-

Pookad Lake

அந்த குகைக்கு போறதுக்கு கிட்டத்தட்ட 4 -5 கிமீ மலைப்பாதையிலே நடந்து போகனும். அப்போதான் அந்த குகை வாசலையே அடையமுடியும். அதுக்கே கூட வந்தவனுகளுக்கு மூச்சு வாங்க இதுக்கு மேலே அடியெடுத்து வைக்கமுடியாது'ன்னு வெளியே உக்கார்ந்துட்டானுக. கொஞ்ச பேரு மட்டும் உள்ளே போயி வந்தோம். குணா படத்திலே வர்ற குகைய விட கிட்டத்தட்ட பத்து இருபது மடங்கு பெரிதாக இருந்தது. உள்ளே போவதற்கு மிகவும் கடினமான வாசல் வேறு. கிட்டத்தட்ட நம்ம உடம்பை மூணா மடிச்சிதான் உள்ளேயே வாசலிலே நுழையமுடியும். அதுக்கு மேலே ஏறுவதும் பாறைகளுக்கு நடுவே நடக்க வேண்டும்.

குகையின் முன்வாசல்:-




இந்த பாதை ஒரு இடத்திலே மட்டுமே இருக்கு.... மீத பாதைய பாறை வழிதான் கடக்கவேண்டும்.




குகைக்கு உள்ளே:-



குகையோட உள்பகுதியிலே சில பழங்கால எழுத்து முறைகள் இருந்தன. அங்கயிருந்த இதெல்லாம் தமிழ் எழுத்துக்கள், நீம்கள் அறியுமோ'ன்னு வேட்டி கட்டின சேட்டன் சொன்னார். நானும் உத்து உத்து பார்த்தேன். ஒன்னும் சரியா தெரியல, கண்ணாடி எடுத்துட்டு போகலை.... :)


குகைய சுத்தி பார்க்கிறதுக்கே பொழுது சாய ஆரம்பிச்சிடுச்சு. கூட வந்த ஒருத்தன் காணமே போக அவனை தேடி நாலு பேரு போக அந்த நாலு பேரை தேடி இன்னொரு நாலு பேரு போக எல்லாரும் பிரிஞ்சிட்டோம். அப்புறமென்னா குடும்பப்பாட்டை பாடி எல்லாரும் ஒன்னுக்கூடி அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.



telescope lens வழியா எடுத்த போட்டோ... ஹி ஹி ஆர்வக்கோளாறு....

On the way to suchipura falls
Form house


suchipura falls

Suchipura Falls


குகை'க்கு அடுத்து போனது சுச்சிப்புரா அருவின்னு ஒரு இடம். ஜிராசிக் பார்க் 3'ம் பாகத்திலே பாறைகளுக்கு நடுவிலே பாதை இருக்கும் பாருங்க. அதேமாதிரியே ஒரு இடம் இந்த சுச்சிபுரா அருவி. தூரத்திலே தண்ணி சத்தத்தை கேட்டதும் ஹே'ன்னு கத்திக்கிட்டே திடு திடுன்னு ஓடி பாறை மேலெயெல்லாம் ஏறி செம ஆட்டம் போட்டாச்சு. மணி ஆறரைய தாண்டியதும் வனத்துறை சேட்டன்'ஸ் எல்லாம் வந்து இங்காரு புலி வரும், பேசாமே வந்திருங்கன்னு கூட்டியாந்துட்டானுக. அருவியிலிருந்து மேலே ஏறி வர்றவரை ஒரு பூனை கூட வரலை.... :( அப்புறமென்னா அங்கனயிருந்து பெங்களூரூ ஆன ஜிலேபி தேசத்துக்கு நட்டராத்திரியிலே வந்து சேர்ந்து அவனவன் வீட்டுக்கு போயி தூங்கி மதியம் ரெண்டு மணிக்கு ஆபிஸ் வந்து மேனஜர்'கிட்டே முறைப்பு பார்வைய வாங்கினோம்.... :)

Saturday, December 22, 2007

செப்புத் தாழ்ப்பாள்

கால்தடங்களை அழித்து செல்லும் கடல் அலையென,தன் மனதில் பதிந்த தடங்களை அழித்து செல்லதொரு வல்ல பெரும் ஆழி பேரலைய எதிர்நோக்கி அக்கணமே இந்த குப்பையுடலில் உயிர் என்று ஒன்று இருந்தால் அது தெறித்துவிட்டொழிய வேண்டுமென மனதோடு அந்த புளியமரத்தை வெறித்து பார்த்து கொண்டுருந்தான் வேலு. பெண்ணொருத்தி ஆணின் மீது செலுத்தும் அன்பு எப்பிடியிருக்குமென முழுவதையும் உணர்த்தவனாய், பரந்து விரிந்த மலர்ந்த அழகுமலரென்றின் நடுநாயகமாக நின்று தன்னை சுற்றி அந்த மலரின் இதழ்களெனும் வெளிவட்டம் என்ற காதல் வளர்ந்ததை நினைத்து பார்க்கல்லான்.

"ஏண்டியவளே கனகுமணி? இங்கன பாரு அஞ்சு ரூவா'வே கிழே போட்டுட்டு போயிட்டு இருக்கே?"

"அடியாத்தி! என்னோட செவத்த மச்சானே! ஒன்னோட கரிசனம் எனக்கு ஒன்னும் வேணாம்ய்யா! நீ என்னத்துக்கு காசை கிழே போட்டு வைச்சிருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும், எனக்கு ஒன்னும் தேவையில்ல அந்த காசு."

"சிறுக்கி, என்னத்துக்கு போட்டு வைச்சிருக்கோம் நாங்க! நீ முன்ன போறியே? காசு இங்கன கிடக்கே, அப்போ அது ஒன்னோடதுதான் நினைச்சி கூப்பிட்டேன்."

"பொய் கோழி மாமா, எனக்கு எதுக்குன்னு நல்லாவே தெரியும், நான் பாவாடை சட்டையிலே வந்திருக்கேன், காசு எடுக்க நான் குனிய நீ என்னத்த பாக்க அலையுறேன்னு நல்லாவே தெரியும், செவனேன்னு கெட'மாமேய்."

"ஹிம் நீ வெசயம் தெரிஞ்ச வெச காரிடி! பட்டப்படிப்பு படிக்க போறேன்னு தெனக்கும் சுடிதார் மாட்டிகிட்டு மருத போறே? நானும் அதை படிச்சு கிழிச்சு ஒன்னத்துக்கும் வக்கிலாமே பொட்டிக்கடை வைச்சிட்டு இருக்கேன். நீ படிச்சு என்னத்த கிழிக்க போறே? கழுதவயசு ஆகிப்போச்சிலே,இங்கன இருக்கிறப்பயாவது தாவணி கட்டவேண்டியது தானே?"

" ஒங்கடைக்கு பட்டதாரி கடன் வாங்கினமாதிரி ஒன்னோட கடைக்கு எதிர்க்க நானும் போட்டிகடை ஆரம்பிப்பேன். நீ என்ன எனக்கு தாலி கட்டப்போறவனா? ஒனக்கு பிடிச்சமாதிரி ஒடை உடுத்திட்டு நான் வர்றதுக்கு?"

"என்னய தவிர வேறயாருடி ஒன்னை கட்டப்போறது?"

"ஆத்தி ஒங்கப்பன் வெசப்பல்லுகாரனை மிஞ்சி நீ என்னத்தயாவது செஞ்சுட போறியா என்ன? அந்த பெருசு வெவசாயம் பண்ணுறேன்னு நிலத்தை உழுதது போக அடுத்தவங்ககிட்டே பேசுறேன்னு உசுரை வாங்கிட்டு திரியுது!"

"அப்போ எங்கப்பனை போட்டு தள்ளிறலாமா? சொல்லு எம்மாமன் மவளுக்காக அதைக்கூட செஞ்சுப்பிடலாம்"

"ஆத்தி எனக்கெதுக்கு கொலைகாரபுருஷன்! வேணுமின்னா அது நாக்கை மட்டும் துண்டிச்சிரு அது போதும்"

"ஏண்டி, ஒன்னை கட்டிக்க எங்கப்பனை நான் கொல்லனும்,இல்லன்னா அது நாக்கை வெட்டனுமா? அப்பிடியொன்னும் எனக்கு நீ தேவையில்ல போடி, எனக்கு அம்புட்டு பெரியமதிப்பு பிடிச்ச கெரக்கி இல்ல நீயி"

"அய்யோ, வேணாமின்னுதான் நான் எந்த பக்கம் போனாலும் பின்னாடியே வர்றியாக்கும், ஒங்கப்பன் எங்க வீட்டோட பேச்சை நிப்பாட்டி இருவது வருசமாகியும் நீ மட்டும் எங்க வீட்டுக்கு ஈ'ன்னு பல்லுளிச்சுட்டு போறதுக்கு என்னத்தய்யா காரணம்?"

"ஆமா... ஊருக்குள்ளே பொட்டைப்புள்ளய கலியாணம் பண்ணிக்க ஆளு இல்லாட்டியும் நான் அதை செஞ்சு தியாகி வாழறதுக்கு தயாரா இருக்கேன்னு ஒங்கப்பன்'கிட்டே சூசகமா சொல்லுறதுதான்"

"ஆமாம் ஒன்னோட தியாகத்தை நினைச்சி நம்ம திருமங்கலம் ஊரு மத்தியிலே சிலை வைக்கலாமின்னு ஊருக்காரங்க எல்லாரும் கூடி பேசிட்டு கெடந்தாங்க..."

"ஒன்னை மாதிரி தொணத்து பிடிச்சவளை கட்டுனா எனக்கு தியாகி பட்டந்தாண்டி கிடைக்கும் அப்புறம் செலையும் வைக்கதான் செய்யுவாங்க. சீக்கிரமே அந்த பட்டம் எப்போ கிடைக்குமின்னுதான் ஒன்னோட மாமன் காத்து கெடக்கான்"

"அப்பிடியே காத்து கெட"ன்னு சொல்லிவிட்டு விடுவிடுவென வாய்க்கா ஓரமாக ஓடிச்சென்று மறைந்தாள்.

கனகமணியின் தாய்மாமன் மகன் தான் முத்துவேல், இவள் பிறந்த அன்றே பிரசவத்தில் இவளது அம்மா இறந்து போனதும், எந்தங்கச்சிய நீ சரியா கவனிச்சுக்கலை, அதுதான் செத்து போயிட்டான்னும், என்னோட பொண்டாட்டிய பிரசவத்துக்கு நல்ல வைத்தியம் பார்க்கலை'ன்னு மச்சினன் மச்சினனுக்குள் சண்டை வந்து அன்றிலிருந்து பேசிக்கொள்வது கிடையாது.

"என்னடி அதிசயமா இன்னிக்கு தாவாணிதுணிய உடுத்திக்கிட்டு திரியுறே?"ன்னு கேட்ட அப்புத்தா'வை பார்த்து வெக்கசிரிப்பை உதிர்த்தாள் கனகு.

"அப்பத்தா, நம்ம தோட்டத்திலே கொஞ்சம் மல்லிய பறிச்சு நாரு கட்டி கொடு, நான் தலைக்கு வைச்சிக்க போறேன்."

"முத்து மாமா, ஒன்னோட கடையிலே தங்கசங்கிலி வியாபாரம் பார்க்கிறியாமே? எனக்கு அரைகிலோ'லே கயித்து சங்கிலி செஞ்சு கொடேன்."

"ஏண்டி வாயாடி, நக்கலா? பொட்டிக்கடையிலே தங்கம் வேணுமா ஒனக்கு? என்னிக்கும் இல்லாத திருநாளா தாவணி கட்டிக்கிட்டு வந்துருக்கே? அதை என்கிட்டே காட்டதானே வந்துருக்கே! புதிய வார்ப்புக்கள் வர்ற ரத்தி மாதிரியே இருக்கே? அவளே மாதிரியே அந்த கம்பத்துக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு லேசா மொகத்தை மட்டும் காட்டிகிட்டு நில்லு, நான் சொன்னது சரியா இருக்கும்.... "

"ஆத்தி, என்னை பார்த்தா வேஷக்காரி மாதிரியா இருக்கு? எவ்வளோ ஒருத்தி நடிக்கிறதுக்காக செஞ்சத என்னைய வைச்சி ஒப்பிட்டு பார்க்கிறியா? ஒங்கிட்டே பேசவே மாட்டேன்"

"ஏண்டி கோச்சிக்கிறே? சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன், இது ஒனக்கு நல்லாயிருக்கு, இனிமே தெனக்கும் இதேயே போட்டுக்கிட்டு படிக்க போ! ஹிம் ஒன்னோட வண்டி வந்துருச்சு, ஓடி போயி ஏறிக்கோ!"

கல்லூரி பேருந்திலும் இவளை அதிசயமாக பார்த்த தோழிகளிடம் வெக்க சிரிப்பை மட்டும் உதிர்த்து மெளனமாகவே இருந்தாள்.முத்து மாமனுக்கு பிடித்த இந்த உடையை தான் தினமும் உடுத்தவேண்டுமென்று தினமும் அதேமாதிரியே கல்லூரி சென்று வந்தாள். ஒரு நாள் மாலை நேரத்தில் கல்லூரி முடிந்து நண்பர்களோடு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது முத்துவின் தந்தை மருதய்யன் எதிர்ப்பட்டார். எப்போழுதும் நேராபார்த்தாலும் ஒரு முறைப்பு பார்வையோடு பார்த்து செல்லும் மாமா இன்று தன்னிடம் பேசவேண்டும் என நோக்கில் வருவதாய் தோன்றியதும் கனகமணியே பேச்சை ஆரம்பித்தாள். பெருசு கொஞ்சம் எடக்கு பிடிச்சதுதான் அதுனாலே கொஞ்சம் எச்சரிக்கையாகவும் பேசவேண்டுமென்னு மனதுக்குள் நினைத்து கொண்டாள்.

"மாமா, நல்லாயிருக்கியா?"

"இருக்கேன், இருக்கேன்.... ஏனாத்தா இப்போல்லாம் தாவணியும்,கை நிறைய வளையலும்,தலையிலே பூவும் வைச்சிட்டு சுத்திருயே? என்னோட பையன் கடையிலே தெனமும் போறதா ஊருசனம் சொல்லி கேட்டேன். இப்பிடியெல்லாம் ஆளை அடிக்கிறமாதிரி உடை உடுத்திக்கிட்டு எம்மவனே மயக்கிறாலமின்னு திரியுறீயா?"

"என்ன மாமா ஒரேடியா பேசிட்டு போறே? நான் இது போடறது பிரச்சினையா? இல்ல ஒன்னோட மவன்கூட பேசுறது பிரச்சினையா?"

"என்னது நான் அதிகமா பேசுறேனா? நீதான் பொட்டகழுத படிக்கப்போறேன்னு சொல்லி தெனமும் ரெண்டு பயலுக கூட திரும்பி வர்றே? இதேமாதிரி என்னோட மவனையும் வளைச்சு போட்டுறாலாமின்னு நினைச்சிக்காதே, இந்த தேவிடியாதனமெல்லாம் வேற எங்கயாவது வைச்சிக்கோ!"

இந்த அமிலம் கக்கும் வார்த்தைகளை கேட்டு என்ன செய்வது என்று புரியாத கனகு விருவிருவென அங்கயிருந்து ஓடிவிட்டாள். வார்த்தைகளின் அவமானம் பொறுக்காதவள் இந்த புளியமரத்தில் தான் கயிறு மாட்டிக்கொண்டாள். ஐயோ ஆத்தா அம்மா'ன்னு ஊரே ஒப்பாரி வைத்து கொண்டு ஓடிய பொழுது என்ன ஏதோ என்று சென்று பார்த்த வேலுவின் விரக்தியின் உச்சத்தில் மனதளவில் செத்து போனான்.

பலவகையான சோகங்களும் மனதை வேதனைப்படுத்தி கொண்டுருக்க உச்சி வெயிலின் கோரத்திலும் அந்த புளியமரத்தினை உத்து கவனித்து கொண்டுருந்தான். தான் நின்று கொண்டிருந்த பரந்துவிரிந்த மலர் பரப்பின் வெளிவட்டம் உதிர்ந்து, சுருங்கி, பாதம் நொறுங்கி விழுந்த அந்த கணத்தை இப்பொழுது உணர்ந்து கொண்டுந்தான். தேக்குமரத்தில் பதிக்கப்பட்ட் செப்புத்தாழ்ப்பாள் கழண்டு விழுந்து ஏற்படுத்திய பள்ளமான வடுவாக கனகுவின் எண்ணம் அவன் இதயத்தில் வலித்து கொண்டுருந்தது.

கனகு'வை கொன்ற தன் அப்பனை என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் இந்த ஊரை விட்டு போனவன் ஒரு முறை கூட இந்த பக்கம் எட்டிப்பார்க்க வில்லை. பாவம் செய்த தன் தந்தைக்கு தன்னால் கொடுக்கமுடிந்த தண்டனையாக தன்னை அவன் கண்முன்னாலும் காட்டி கொண்டது இல்லை.தன்னுடைய அக்காவிடம் தொலைபேசியோ இல்ல கடிதப்போக்குவரத்தோ இருக்கிறதுனாலே இவன் உயிரோடு இருப்பதாக அவன் அக்காவும் அந்த ஊரும் நம்பியது. இப்போழுதுகூட அக்கா தனக்கு ஒடம்பு சரியில்லை, என்னாயாவது கொஞ்சம் பார்த்துட்டு போடா'ன்னு கெஞ்சி கேட்டதுனால்தான் ஊருக்கு வந்திருந்தான், ஆனால் அக்காவோ தன்னை ஏமாற்றியதும் அப்பன் ஊசுரு ரெண்டு நாளாக இழுந்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. இந்த இரண்டு நாட்கள் முழுவதிலும் புளியமரத்தை காணவே நேரத்தை செலவழித்து கொண்டுருந்தான். நினைவலைகளில் பலவகையாக அவனை அலைகழித்து கொண்டுந்த தருணத்தில் சிறுவன் ஒருவன் ஓடிவந்து மாமா மாமா, ஒங்கப்பன் செத்து போயிருச்சு, ஒன்னயா சீக்கிரம் அம்மா வரச்சொன்னுச்சு'ன்னு சொல்லி ஓடிவிட்டான். வெயிலின் கொடுமையில் தலையிலிருந்து பாதம் வரை வியர்வை ஆறாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு கண்களுக்கு கீழே மட்டும் வறண்ட பாலைவனமாய் இருக்க மெதுவாக வந்து வீட்டு திண்ணையில் வந்து அமர்ந்தான் வேலு.

"வேலு வந்துட்டான்ப்பா, இனி ஆகுற காரியத்தை பாருங்க, கடைசி ரெண்டு மாசமா அந்தா இந்தா'ன்னு இழுத்துக்கிட்டு இருந்த உசுரு இன்னிக்குதாய்யா போயி சேர்த்துருக்கு, ரொம்ப நேரத்துக்கெல்லாம் இதை வைச்சிருக்க முடியாது. சீக்கிரம் பாடைய கட்டுங்க"ன்னு அடுத்த வீட்டு பெரியவர் சத்தம் போட்டு கொண்டுருந்தார்.

உள்ளே அக்கா மெல்லமாய் விசும்பி கொண்டுருந்தாள். நாலு மாரடிப்பவர்கள் குய்யோ முய்யோன்னு சத்தம் அலறிக்கொண்டுருந்தனர். சேதி கேட்டு கொஞ்சம் கொஞ்சம் கூட்டம் சேர ஆரம்பித்தது. வந்தவர்கள் யாரும் இவன் கையை பிடித்து ஆறுதல் சொல்லவந்ததாக தெரியவில்லை. எப்பவோ விழவேண்டிய பொணம் இன்னைக்கு விழுந்துருக்கு, அத பார்க்க வந்துருக்கோம்'ன்னு திரிந்து கொண்டுருந்தார்கள்.

"ஏம்பா, இவனுக எரிக்கிற சாதிசனமாச்சே, அப்பன் மேலே இருக்கிற கோவத்திலே அவனுக்கு கொள்ளி வைப்பானா இந்த வேலு பையா"ன்னு மெதுவா கேட்டார் தலையாரி.

"ஏய்யா, இப்பிடி சொல்லுற பெத்த பிள்ள கொள்ளி வைக்காமே வேற யாரு வைக்கிறது?" என்ன வேலு சொல்லுறே? நீ கொள்ளி வைப்பே'ல்லே?ன்னு கேட்ட பெரியவர் முகத்தை கூட ஏறெடுத்து பார்க்கவில்லை வேலு.

"அப்பே, பெரும் தண்டனையா அவனுக்கு அந்த சாமியே கொடுத்துருச்சுப்பா, நீயும் மூணு வருசமா ஊருக்குள்ளே வர்றாமே அவனை பார்க்கமே இருந்துன்னு அவன் உசுரை பாதியா கொன்னுட்டே, இன்னமும் கொள்ளி வைக்காமே'ல்லாம் செத்த ஒங்கப்பனை கொடுமைப்படுத்தியிறாதே சாமி, வைக்கிறேன்னு ஒத்த வார்த்தை சொல்லிரு ராசா'ன்னு கேட்ட பெரியவர்க்கு சரி என்பது போலே தலையாட்டினான் வேலு.அடுத்த அரைமணி நேரத்திலே பாடை கட்டி சுடுகாட்டுக்கு எடுத்து வரப்பட்டு சிதை மூட்ட எல்லா வேலையும் நடக்க ஆரம்பித்தது. வேலுவின் மீசை செரைக்கப்பட்டு பானை சுத்தி ஒடைக்கப்பட்டு கொள்ளி கட்டைய வேலுவின் கையில் கொடுத்தான் வெட்டியான்.இவ்வளவு நேரமும் கண்கள் என்னும் இரண்டையும் இரும்புதிரை கொண்டு முடியிருந்தவன், மெல்லமாய் அதில் நீரை சுரந்து கண்கள் பனித்து தலைபகுதி எரு மேல் வைக்கப்பட்ட சூடத்தில் தீ முட்டினான்.

நேற்று அப்பன் அரைகுறை உசுருலும் தன்னை கூப்பிட்டு காதருகே ஒனக்கு நான் பண்ணின பாவத்துக்கு என்னை மன்னிக்கவே மாட்டேன்னு நல்லாவே தெரியும். நீ கொள்ளி வைக்காமே எங்கட்டை வேகாது, ஆனா அதை நீ செய்யமாட்டே! ஒங்காத்தா பத்தினினா எனக்கு கொள்ளி வைடா என சொன்ன அந்த விஷக்காரனின் வார்த்தை சாமர்த்தியத்தை நினைத்து வெறுத்து சுடுகாட்டிலிருந்து நடக்க ஆரம்பித்தான் வேலு.



(சர்வேசனின் நச் என்று ஒரு கதை போட்டிக்காக மற்றும் கொத்ஸ், CVR ஆகியோர் வழியில் ஆங்கில கலப்பில்லாமல் எழுதிய முயற்சி....)

Tuesday, December 18, 2007

எங்கயிருந்துடா கிளம்புறீங்க?

போன ஜென்மத்திலே பெரிய பெரிய பாவமெல்லாம் பண்ணினதாலேதான் பெரிய பெரிய சிட்டிகளிலே கஷ்டப்படுறோமின்னு மனசுக்குள்ளே நினைச்சிக்குவேன், ஹைதராபாத், சென்னை கடைசியா பெங்களூரூன்னு வாழ்க்கை வருஷமா போயிட்டுருக்கு, இப்போ அதுக்கு என்னாடா'னு கேட்கீறிங்க, ஒங்க கேள்விக்கு பதில் என்னான்னா பேச்சிலரா வண்டியோட்டுறது பெரும் பாடா இருக்குங்க, No more imagination. சோத்துக்கு பெரும்பாடா இருக்கு, காலையிலே ரெண்டு இட்லிய தின்னுட்டு ஆபிஸிக்கு போலாமின்னு பார்த்தா அடர்பச்சை கலரிலே சாம்பார்கிற பேருலே கொடுக்கிறானுக, அதை கஷ்டப்பட்டு எப்பிடியாவது தின்னுட்டு பொழுதை போக்கிட்டு இருந்தா மதியத்துக்கெல்லாம் சரியா சொல்லி வைச்சமாதிரி பசி வந்துருது, பச்சை கலரு பானக்கரம் சாம்பாரை நினைச்சா படக்கென்னு அமுங்கி போயிருது. நம்ம சோட்டு பயலோட கூட்டாளி இங்கன வந்து ரெண்டு நாளு இண்டர்வீயூ'க்கா தங்கியிருந்தான். வேலைக்கு ஆஃபர் லெட்டர் கிடைச்சும் வேணாவே வேணாமின்னு போயிட்டான், அதுக்கு அவன் சொன்ன காரணம்...

"நிக்க வைச்சி சோறு போடுறானுவே! சாம்பார்'னு என்னத்தயோ ஊத்துறானுக, தின்னுமுடிச்சி நாலு மணிநேரத்துக்கும் இனிக்குது"

"ஆட்டோக்காரனை கூப்பிட்டா என்னாம்மோ அவங்கிட்டே கடன்கேட்டமாதிரி நிக்காமே போறான்"

"ஊரு முழுக்க ரோடு மறியல் நடக்கிறமாதிரி வண்டிக்காரனுக ஊர்ந்துக்கிட்டே போறானுக"

நீங்களே இங்க கிடந்து அனுபவிங்கடா, என்னாலே கொட்டமுடிஞ்ச குப்பைய சென்னையிலே கொட்டிக்கிறேன்னு போயிட்டான்.... :(

எங்கயிருந்துடா கிளம்புறீங்க?

______________________________________________________________________________________


வெளியூருலே வந்துதான் நம்ம உசுரை வாங்கிட்டு போனானுகன்னு ஊருக்கு போயிருந்தப்போ நம்ம பேவரைட் கடையிலே ஈரல் ரோஸ்ட்'டோ பொரட்டா சாப்பிட்டு இருக்கிறப்போ எங்க ஏரியா தண்ணி வண்டி ஒன்னு ஆடிட்டே வந்து எப்பக்கத்திலே ஒக்கார்த்துச்சு. வந்ததும் என்னாடா ஊருக்குள்ளே பொழக்க வக்கில்லாமே வெளியூருலே வெளக்கெண்ணை ஜாகை மாத்திக்கீட்டியாமே'னு கேட்டுச்சு. என்னத்த சொல்ல, ஆமாம் இங்கன இருக்கிற ஒன்னமாதிரி இம்சைகதான் என்னை தொரத்திவிட்டிங்கன்னு பதிலு சொன்னேன், அப்போ கடைக்காரன் இலை போட்டதும் அவங்கிட்டே இம்சைய கூட்ட ஆரம்பிச்சிருச்சு. ஏய் இங்காரு, நேத்துதான் எனக்கு ஆம்பிளேட் போட்டுக் கொடுத்து ஏமாத்திட்டே, இன்னிக்காவது பொம்பிளைட் கொடு'ன்னு மொக்கை ஜோக்கை ஒன்னை சொல்லி தானா சிரிச்சுச்சு, ஐயோ அவ்வளவு நேரமா வேகமா வயித்துக்குள்ளே போயிட்டு இருந்த பொரட்டா மெதுவா நகர ஆரம்பிச்சிருச்சு. ஏலேய் பெங்களூரூ'க்கு நான் இருவது வருசத்துக்கு முன்னாடி டூர்'லே வந்திருக்கேன், அங்கதானே லாலுபார்க்கு இருக்கு, அதை சுத்திதானே ஊரு, இப்போ எப்பிடியிருக்கு ஊரு, அப்பிடிதானே இருக்குன்னு கேள்வி கேட்டு தொலைச்சது, என்னத்த பதில் சொல்ல? பொரட்டா பிச்சி போட்டு குழம்பு ஊத்தி திங்க ஆரம்பிச்சதும் இன்னும் தொண தொண'ன்னு கேள்வி கேட்டு ஊசுரை வாங்கிட்டு இருந்துச்சு. அப்போதான் ஏண்டா நாமே ரெண்டு பொரட்டா வாங்கி தொலைச்சோமின்னு வெறுப்பிலே இருந்தேன். கடைக்காரன் குழம்பு ஊத்த வந்தப்ப்போ முதலிலே பச்சை கலருலே சால்னா ஊத்தினே இல்லை, அங்க ஒருத்தர் சாப்பிட்டு இருக்காரு பாரு அந்த் செவப்பு கலரு சாலுனா'வே ஊத்துன்னு கேட்டுச்சு. நான் சாப்பிட்டது போதும் என்னை இவங்கிட்டே இருந்து காப்பத்திரு மீனாச்சியத்தா'னு ஓடி வந்துட்டேன்.

எங்கயிருந்துடா கிளம்புறீங்க?

______________________________________________________________________________________


காலேஜ் படிச்சு முடிச்சதும் ஜீனியரை'யே கரம்பிடித்த நம்ம சோட்டு பய வீட்டுக்கு கூப்பிட்டானேன்னு போயிருந்தேன். அம்மணி மார்கெட் போயிருந்தாங்க, டெய்லி இவந்தான் போவான். இன்னிக்கு ராம் வர்றான், அவங்கிட்டே நாந்தான் எல்லா வேலையும் பார்க்கிறேன்னு தெரியக்கூடாது'ன்னு அவங்க காலிலே விழுந்து எந்திருச்ச தடயத்தை கவனிச்சதும் பயப்புள்ள சன் டீவி, திருவாளர் திருமதி'ன்னு பேச்சை மாத்திட்டான். அந்த நிகழ்ச்சியிலே இவனும் இவன் அம்மணியும் கலந்துக்கனுமின்னு ஆசையா இருக்குன்னு சொன்னான். சரி அது பெரிய ஏதோ குவீஸ் ப்ரோகிராம் போலே, அதிலே இவங்க அறிவை திரட்டி ஜெயிச்சிட்டு வர்றதுக்கு துடிக்கிறானுக'னு கருமம் அந்த நிகழ்ச்சியை பார்க்கிற வரைக்கும் நினைச்சிக்கிட்டேன். கருமத்தை ரெக்கார்ட் வேற பண்ணிவைச்சிருந்து அதை வேற பிளே பண்ணி காட்டினான். அவன் மேலே என்னிக்கும் மரியாதை வைச்சது கிடையாது, இதை பார்த்துட்டு இந்த நிகழ்ச்சியிலே கலந்துக்கனுமின்னு துடிக்கிற அவனை என்னத்த சொல்லி தொலைக்கிறது. Are you mad'னு கேட்டதுக்கு பயப்புள்ள'க்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துருச்சு! முதலிலே ஒங்க வீட்டுக்கு கிளம்புடா'ன்னு பத்தி விட்டுட்டான். அந்நேரம் வீட்டுக்குள்ளே வந்த அவன் சம்சாரம் இரு, சாப்பிட்டு போ'ன்னு சொன்னுச்சு, இவன் உள்ளே இருந்துக்கிட்டு பொறமை பிடிச்சவனுகெல்லாம் சோறு போடாதம்மா'னு சொல்லிட்டான்.... :(


உண்மையிலே கேட்கிறேங்க எங்கயிருந்துதான் இவனுகளுக்கெல்லாம் கிளம்பி வர்றாங்கன்னு தெரியலை...

Thursday, November 29, 2007

காமக் கடும்புனல்

ஆபிஸிலே லேட்டாகி வெறுப்போட உச்சக்கட்டத்துக்கு வந்து பைக் ஸ்டார்ட் செய்ய வந்தால் டயரு பஞ்சராகி கிடந்தததில் வாழ்க்கையை வெறுத்து போயி ஆட்டோ'விலாவது வீட்டுக்கு போலாமின்னு பேஸ்மண்ட்லிருந்து வெளியே வந்தான் முருகேஷன். பெங்களூரூ வாழ் IT கூலிகளுக்கு இருக்கும் அதே அழகு களையான முகத்தை வைத்து கொண்டு MG ரோட்டிலில் நின்று கோரமங்களா பர்த்தீரா'ன்னு கெஞ்சி கொண்டிருந்தான். மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து ஒன்பது மணி வரையும் இந்த ஆட்டோகாரர்கள் செய்யும் அலும்பை நினைத்து கொண்டு ஒவ்வொருத்தராய் கேட்டும், ஒருத்தனும் நிக்காமால் அதுவும் நின்றுக்கூட எங்க போகனும் கேட்காமலே கண் புருவத்தை உயர்த்தி கேட்டு அங்கயா? அங்க நான் வரலை'கிற மாதிரி ஒவ்வொரு ஆட்டோவா நகர்ந்து கொண்டுருந்தது. மணி வேறு எட்டு தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.இனிமேல் மேன்சன் போயி குளித்து சாப்பிட கெளம்ப ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகும், இப்போவே பசியோட இருக்கோமே? பேசாமே சாப்பிட்டு வந்து ஆட்டோ பிடிக்கலாமா'ன்னு யோசித்து கொண்டிருந்த வேளையில் "என்னா சார் இங்கன நிக்கிறிங்க, ரூம்'க்கு தானே போறீங்க, கையிலே ஹெல்மெட் வைச்சிட்டு ஆட்டோ கேக்கீறீங்க? பைக் ரிப்பேர்'ஆ? வாங்க நானும் ரூம் தான் போறேன், ஆட்டோவிலே போகலாம்'ன்னு மேன்சன் இம்சை FM கூப்பிட்டதும் முருகேசனுக்கு அப்பாடா என்றிருந்தது.

கோரமங்களாவில் அமைந்துள்ள பேச்சிலர் மேன்சனில் இரண்டாவது மாடியில் இரண்டு பேர் தங்கும் அறையில் இந்த இம்சையோடு தங்கும் அபாக்கிய நிலைமை முருகேஷனுக்கு ஏற்பட்டு மூணுவாரம் ஆகுது. ரூம் மேட் அரவிந்த் அமெரிக்க ஆன்சைட் முணு மாசந்தாண்டா'ன்னு சொல்லிட்டு போனதிலே இருந்து இந்த இம்சைதான் கூட தங்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் மேன்சன் ஓனரால் வந்து அறிமுகப்படுத்தபட்ட போது மிகவும் அமைதியாக இருந்த மனுசனின் சுயரூபம் மறுநாள் நைட்தான் தெரிந்தது.புல் மப்பில் வந்து உங்க பேரு முருகேஷனா, சந்திரமுகியிலே ரசினி வடிவேலுவே கூட முரூகேஸா'ன்னு கூப்பிடுவாரு, நானும் அப்பிடியே ஒங்களை கூப்பிடவா'ன்னு கேட்டதும் முருகேஷனுக்கு பத்திக்கொண்டு வந்தது. பேசமா தூங்குங்க, சும்மா டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு கத்திவிட்டு ரூம் கதவை சாத்திவிட்டு தூங்கினதுதான் இம்சைக்கிட்டே பேசிய கடைசி முறை.

"செல்வம், நீங்க எங்க இங்கிட்டு வந்தீங்க"

"ஓ, நான் என்ன வேலை பார்க்கிறேன்னு கூட ஒங்களுக்கு தெரியாது'லே? நான் எலக்ட்ரிசியன்'ஆ இருக்கேன், இங்க ஊரெல்லாம் பிளாட் கட்டிக்கிட்டு இருக்கிற அந்த பில்டர்ஸ்'கிட்டே காண்டாரக்ட் வொர்க் பண்ணுறேன், அல்சூருலே ஒரு வேலை, ஆபிஸிலா வந்ததுனாலே ஆட்டோதான், எனக்கு என்னோமோ ஊரே தெரியாதமாதிரி கோரமங்களா போறதுக்கு MG ரோடு வழியா போறான் இந்த ஆட்டோகாரன்'ன்னு சொன்ன செல்வத்தை ஒரு மாதிரியாக பார்த்தான் ஆட்டோகாரன்.

"ஆஹா, இம்சை தேவையில்லாமே பிரச்சினையே கிளப்புதே? நீங்க சாப்பிட்டாச்சா'ன்னு பேச்சுக்குதான் கேட்டான் முருகேஷன்.

"இல்லீங்க, நான் டெய்லி ரவுண்ட் விடாமே சாப்பிடுறது'லாம் இல்ல, நம்ம ரூம்கிட்டேயிருக்கிற பார்'லே குவார்டர் வாங்கி சாத்திட்டு தான் ஏதாவது சாப்பிடனும், தம்பி நீங்க தண்ணியடிப்பீங்களா?"

"ஹ்ம்ம் நான் டீ டோட்டலர்'னு சொல்லி இவனுக்கு என்னத்த விளங்க வைக்கிறதுன்னு ஹிம் அடிப்பேன் அடிப்பேன்'ன்னு வெறுப்பாக சொன்னான் முருகேஷன்.

"அப்போ இன்னிக்கு போலாமா? இந்தா நம்ம ரூம் வந்தாச்சு, வாங்க அப்பிடியே அடிச்சிட்டு உள்ளாறே போயிறலாம்'ன்னு கூப்பிட்ட இம்சைசெல்வத்தை அனுப்பி வைத்து விட்டா போதுமிடா சாமி'ன்னு பக்கத்து ரூம் மல்லுவிடம் சொல்லி பார்சல் வாங்கி வரச்சொல்லி குளித்து சாப்பிட்டான், மணி பதினொண்ணை தாண்டிய பொழுதில் புல் மப்பில் உள்ளே நுழைந்து இம்சை.

"தம்பி, என்ன இன்னும் தூங்கலையா? என்னமோ படிச்சிட்டு இருக்கீங்க போலே? ஹிம் பெரும் படிப்பு படிச்சவக, இங்கிலிசு பொஸ்தகமெல்லாம் படிக்கீறீங்க, நாங்கெல்லாம் சாதாரணமான ஐடிஐ தானே? எதாவது நானெல்லாம் படிக்கிறமாதிரி பொஸ்தகம் படிக்க கொடுங்களேன்'ன்னு கேட்டு புக் செல்ப்'ஆக இருந்த டிரெஸ் வைக்கும் செல்ப்'ஐ நோண்ட ஆரம்பித்தது இம்சை.

"என்ன தம்பி, பொஸ்தகம் பேரே மார்க்கமா இருக்கு, என்ன காமக் கடும்புனலா? அப்பிடின்னு ஒரு பொஸ்தகத்துக்கு பேரா'ன்னு போதையில் இருந்தாலும் தெளிவாக புத்தகத்தை படிக்க ஆரம்பித்தது.

"ஹிம் படிச்சி பாருங்க, சில கவிதைகள் ரொம்பவே ரசிக்க வைக்கிற அளவுக்கு இருக்கும்"

"தம்பி,புணராமல்'ன்னா என்ன அர்த்தம்'ன்னு கேட்ட செல்வத்தை ஒரு மாதிரியாக தான் பார்த்தான் முருகேஷன்.

"ஹலோ, அது என்னான்னு தெரியாதா? அது சுத்த தமிழிலே மேட்டரு'ன்னு அர்த்தம்."

"ஹிம் அப்போ சரி தான்"

"எது?"

அத்தனை வேதனைகளுக்கும் ஒரே காரணம்,
புணராமல் இருக்கமுடியவில்லை என்ற நிலைதானே.

"இந்த கவிதைதான்"

"செல்வம் ஒங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா? ஒங்க வொய்ப் எங்க இருக்காங்க? நீங்க எதுக்கு இங்கயீருக்கீங்க?"

"ஹிம் ஆகிருச்சுப்பா, ஆகி ஒரு வருசத்துக்கு மேலே ஆக போகுது, நான் எங்க சொந்த ஊரு சேலத்திலே EB'லே காண்ட்ராக்ட்'லே லேபரா இருந்தேன், வினைக்குனே எங்க அக்கா மவளே கலியாணம் பண்ணி வைச்சாங்க, மொத ராத்திரி அன்னிக்குதான் தெரிஞ்சது, அவ யாரோயோ லவ்வு பண்ணுறான்னு என்னை தீடிரென்னு அவளுக்கு கட்டிட்டாங்கன்னு!. போயி தொட்டா அழுவுறா, இப்போவே செத்து போயிருவேன்னு அழுது சாதிக்கிறா, அதுக்கு மேலே நாமே என்ன செய்யமுடியும்? கவிதையிலே இருக்க'கிற வார்த்தை தவிர்த்து வாசிச்சா எனக்கு சரியா இருக்கும்'னு போதையிலே இருந்தாலும் தெளிவாக பேசிய செல்வத்தை வெகு ஆச்சரியமாக பார்த்தான் முருகேசன்.

"சரி அதுக்கப்புறம் சமாதானம் ஆகலயா?"

"எங்கே நான் அங்கயிருந்தா இதிலே சண்டை வருதுன்னு நானும் இந்தா ஊரை விட்டு வந்து நாலு மாசமா போவுது, வாரம் தவறாமே போயி பார்த்துட்டு வந்துறேன், எங்க அப்பன் ஆத்தா'க்கு தான் ஏதோ சந்தேகம் வந்து என்னை மாதிரியா பார்க்கிறாங்க, ஆனா எம்பொண்டாட்டி'க்கு தான் புரியவே மாட்டங்கிது'னு சொன்ன செல்வத்தின் கலங்கிய கண்களை கவனித்தான் முருகேஷன்.

"சரி செல்வம், இப்போ தூங்குங்க, வேற எதுவும் பேசவேணாம்"

அடங்காத காமத்துடன் தவித்துக்கொண்டிருக்கிறேன்
உனக்கோ அழ்ந்த அயர்ந்த உறக்கம்
விடிந்ததும் எப்படியாவது உன் வாயைப் பிடுங்கி
ரெண்டு அறை விடுவேன்

"இந்த கவிதைய படிச்சதும் நானெல்லாம் எத்தனி ரெண்டு அறை விட்டுருக்கனும் தெரியுமா தம்பி'ன்னு காலையில் குளித்து வந்ததும் கேட்ட செல்வத்தை பார்த்ததும் மிகவும் பரிதாபமாக இருந்தது, வயது முப்பது தாண்டி மூணு - நாலு வருசம் இருக்குமுன்னு தாடையிறக்கதிலும், காதுக்கு மேலே வெள்ளி முடி துளிர்ந்ததிலும் தெரிந்து கொண்டான் முருகேஷன், அதுவும் இந்த புக்'ஐ வரிக்கு வரி படித்து கொண்டுருக்கும் செல்வத்தை பத்தி என்ன நினைப்பதுமின்னு குழப்பமடைந்தான்.

"தம்பி நேத்து நைட் போதையிலே ஏதுவும் அதிகமாக பேசிட்டோனா?"

"அதெல்லாம் இல்ல செல்வம், ஒங்க கஷ்டத்தை சொன்னீங்க அவ்வளவுதான்'ன்னு பரிதாப பார்வையோடு சொன்னான் முருகேஷன்.

"சரிப்பா, நான் வேலைய முடிச்சிட்டு சாயங்காலமா ஊருக்கு போயிட்டு திங்கக்கிழமை'லே வாறேன்னு சொல்லிவிட்டு செல்வம் கிளம்பியதும் தானும் அலுவலகம் செல்ல வேண்டி கழுத்திலே மாட்ட வேண்டிய பட்டை,பள பள'ன்னு ஷீ, சாயம் போன கலரிலே டிரெஸை மாட்டிக்கொண்டு ஆட்டோவுக்கு தவம் கிடைக்கலான்.

"ஹலோ, அரவிந்த் நம்ம ரூம்'லே ஒரு ஓட்டை FM இருக்குன்னு சொன்னேன்'லே, அது கதையே நேத்து நைட் சொன்னுச்சு, அவரை பார்க்கவே பரிதாபமா இருக்குடா"

"ஹிம், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம்"ன்னு அரவிந்த் அமெரிக்கவில் இருந்து கொண்டு செல்வத்திற்கு பரிதாபப்பட்டான்.

திங்கக்கிழமை விடிந்த பொழுதிலே ரூம்க்கு வெளியே சத்தம் கேட்பதை கேட்டு கண் விழிந்து கதவே திறந்து பார்த்தான் முருகேஷன், செல்வந்தான் பக்கத்து ரூம் மல்லுவிடம் மல்லு கட்டி கொண்டிருந்தான்.

"செல்வம், நீங்க மொதல்ல உள்ளே வாங்க, எதுக்கு அவன்கிட்டே சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க?"

"தம்பி, ஊருலே இருந்து வந்ததும் இவன் மூஞ்சியிலே முழிச்சிட்டோமேன்னு எப்பிடியிருக்கே சேட்டா'ன்னு கேட்டேன், என்னாமோ என்னை விசித்திர பிராணியை பார்க்கிறமாதிரி பார்த்துட்டு குடிகாரன், லூசு மாதிரி உளறவன்'ன்னு மாதிரி மலையாளத்திலே முணங்கிட்டு போறான், எனக்கு என்ன மலையாளமா தெரியாது?"

மறுபடியும் செல்வம் ஊருக்குள் போயி பிரச்சினைய வளர்த்து வந்தது தெரிந்தது, அதுதான் அந்த கோபத்தை இங்கே காட்டிக்கொண்டிருக்கிறார் எனவும் புரிந்து கொண்டான்.

"சரி பஸ்'லே வந்த அலுப்பு இருக்கும், கொஞ்சம் நேரம் தூங்குங்க, மணி ஆறுதானே ஆகுது, வேலைக்கு போறதுக்கு இன்னும் டைம் இருக்குலே?"

"நீங்க தூங்குங்க தம்பி, நான் பொஸ்தகத்தை படிச்சிட்டு இருக்கேன்'னு காமகடும்புனலை தூக்கி வைத்து வாயில் முணங்கிட்டு இருந்தான் செல்வம்

ஜனனத்தில் உருத்திரண்டு, மணத்தில் ஊர் திரண்டு
இல்லறத்தில் உறவு திரண்டு, துறவறத்தில் அறிவு திரண்டு
மரணத்தில் தூர்ந்து...

இரவு அலுவலகம் முடிந்து அறைக்கு திரும்பும் பொழுது வாசலில் எதிர்ப்பட்ட மல்லு ஒங்கட ஆளு ரொம்பவே குடிச்சிட்டு ரூமிலே சத்தம் விட்டுருக்கு, என்னாண்ட கேளுங்கோ'ன்னு அழகு தமிழில் சொன்னதும் விருவிருவென படியேறி ரூம்'க்குள் ஓடினான்.அங்கே கண்ணீர் ஒழுக சரியான போதையில் தனக்கு தானே செல்வம் பேசிக்கொண்டுருந்தான்.

"செல்வம் என்னாச்சு, ஏன் இப்பிடி பண்ணிட்டு இருக்கீங்க?"

"ஆமாம் தம்பி, தப்பு பண்ணிட்டேன், நேத்து வீட்டிலே என் பொண்டாட்டிய நினைச்சிட்டே எங்கம்மா எங்கப்பா எல்லாரையும் கண்டமேனிக்கு திட்டிட்டு வந்துட்டேன், அந்த நேரமா வந்த அக்காவை கூட பயங்கரமா திட்டிட்டேன், அவங்களுக்கு என்னோட வேதனை தெரியாது, எதுக்கு திட்டினேன்னும் தெரியலை, என்ன சொல்லிலாம் திட்டினேன்னும் தெரியலை'ன்னு அழுது கொண்டே சொன்ன செல்வத்தை நினைத்து இரக்கப்பட்டான் முருகேஷன். இந்த சம்பவத்திற்கு பிறகு தினமும் போதை உச்சக்கட்டத்தினுடே ரூம்'க்குள் வந்த செல்வத்தை ஒன்றும் சொல்லவே இல்லை. போதையிலும் என்னோட மனசை புரிஞ்சுப்பா,அவளுக்காக தான் எதுவும் இன்னமும் செய்யமே இருக்கேன்'ன்னு சுயபட்டயம் வாசிச்சு கொண்டே இருப்பார்.

"ஹலோ, முருகேஷனுகளா, நானு செல்வராஜ் சம்சாரம் பேசுறேங்க, கொஞ்சம் அவர்கிட்டே போனை கொடுக்கீறிங்களா'ன்னு மொபைலில் கால் செய்த செல்வம் மனைவியிடம் அவர் இன்னும் ஆபிஸிலே இருந்து வரலை, வந்தா ஒங்க பக்கத்து வீட்டு நம்பருக்கு கால் பண்ண சொல்லுறேன்'னு போனை துண்டித்தான். அடுத்த அரை மணி நேரத்தில் மப்பில் வந்த செல்வமிடம் சொன்னதும் ஏன் போன வாரம் போயி கொடுத்துட்டு வந்த காசு தீர்ந்து போச்சா'ன்னு அவளே திரும்ப பண்ணட்டும்'ன்னு பெட்'லே போயி படுத்துறங்கி விட்டான் செல்வம்.

அடுத்து இரண்டு நாட்களாக செல்வத்தை காணாத முருகேஷன் எப்பிடியோ செல்வம் சம்சாரம் அவரை போனிலே பிடிச்சு ஊருக்கு வரசொல்லிருச்சு போலே? இந்தாளு ஊருக்குள்ளே பண்ணிட்டு வந்த கலாட்டா'விலே குடும்ப பிரச்சினை எதுவும் வந்திருக்கும், அதுதான் அங்க போயிட்டாருன்னு தனக்கு தானே நம்பிக்கொண்டிருந்தான் முருகேஷன், அடுத்த இரண்டு தினங்களுக்கு பிறகு தீடிரென்னு நைட் பத்து மணிக்கு போதை இல்லாமல் வந்த செல்வத்தை பார்க்கவே மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

"என்ன செல்வம், சொல்லாமே கொள்ளாமே எங்க போயிட்டிங்க?"

"ஆமாம் தம்பி, அன்னிக்கு அவ போன் பண்ண இல்ல? எங்கம்மா'வுக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லையாம், அதுதான் மறுநா காலையிலே நான் வேலை பார்க்கிற சூப்பிரெண்ட்'கிட்டே மறுக்கா போன் பண்ணி சொல்லியிருக்கா, நானும் ஊருலே போயி நாலு நாளு இருந்துட்டு வந்தேன், தம்பி இன்னொன்னு நான் எங்க ஊருக்கே போகப்போறேன்ப்பா, இந்த வேலையெ விடப்போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன், அவங்க நாளைக்கு ஒரு நா வேலைய முடிச்சிட்டு காசை வாங்கிட்டு கிளம்ப சொல்லிட்டாங்க'ன்னு சொன்ன செல்வத்தை வெகுவான ஆச்சரியத்தோடு பார்த்தான் முருகேஷன்.

"தம்பி நீங்க கேட்க வர்றது எனக்கு தெரியுது, என்னோட பொண்டாட்டி புரிஞ்சுக்கிட்டாப்பா!! நான் இவ்வளவு நா அமைதியா இருந்ததுக்கு பலன் கிடைச்சிருச்சு, அப்பிடியே இன்னிக்கு நைட் வந்து ஒங்கக்கிட்டெ சொல்லிட்டு காலையிலே போறப்பவே பேக் தூக்கிட்டு வேலைக்கு போயி எல்லாத்தையும் முடிச்சிட்டு ஊருக்கு கிளம்புறேன், அப்புறம் இன்னொன்னு இந்த புத்தகத்தை நான் எடுத்துக்கலாமா'"

"ஓ தாராளமா எடுத்துக்கோங்க! நல்லப்படியா வாழ்க்கைய ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துக்கள்"ன்னு சொன்னதும் செல்வத்துக்கு பெருமை பிடிபட வில்லை. நைட் கொஞ்சம் நேரமும் தன்னுடைய படிப்பு, அதற்கப்புறம் வேலை, எப்பிடி கல்யாணம் நடந்தது எனவும் சொல்லிவிட்டு வீட்டு அட்ரஸ் குறிச்சு வைச்சுக்கோங்க, கட்டாயமா ஊருக்கு வரனுமின்னு தூங்கிபோனான் செல்வம். அதன்பின்னர் தன்னுடைய வழக்கமான அலுவலில் எல்லா விஷயங்களுக்கும் மறந்து போனான் முருகேஷன். ஆறு மாதங்களுக்கு பிறகு தன்னுடைய டீம் மேட் ஒருத்தன் கலியாணம் சேலத்தில் நடக்கும் சமயத்தில் செல்வத்தையும் பார்த்துட்டு வரலாமின்னு அவன் கொடுத்து சென்ற அட்ரஸ் காகித்தை எடுத்து வைத்து கொண்டு கல்யாணம் முடிந்ததும் செல்வத்தை தேடிப்போனான். சேலத்தின் நகரை விட்டு கொஞ்சம் தள்ளி வெகு சாதரண குடியிருப்பு பகுதியில் அவன் வீடு கண்டுபிடிக்க கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது.

"செல்வம் அண்ணா? செல்வம் அண்ணா'ன்னு வீட்டுக்கு வெளியே நின்னு சத்தம் விட்ட முருகேசனை மெதுவா எட்டி பார்த்தாள் வயதான பெண்மணி.

"அம்மா நானு செல்வம் பெங்களூரூலே தங்கியிருந்தப்போ கூட தங்கியிருந்தேன் என்னோட பேரு முருகேஷன்'ன்னு சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டான்'

"ஓ நீங்கதானா தம்பி அது, வாங்க உள்ளுக்குள்ளே என தீடீரென்னு கண் கலங்கிய செல்வம் அம்மாவை பார்க்க வித்தியசமாக இருந்தது.

"என்னாம்ம்மா என்னா ஆச்சு? எதுக்கு கண் கலங்குறீங்க?"

"தம்பி, என்னோட செல்வம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி விஷம் குடிச்சி செத்து போயிட்டான்ப்பா, பாவிப்பய ஊரிலே இருந்து வந்ததிலே இருந்து கொஞ்சநாளு நல்லாதான் இருந்தான், என்ன ஆச்சோ தெரியலை, தீடீரென்னு பேயி பிடிச்சமாதிரியே கொஞ்சநாளு இருந்தான், தீடீரென்னு விஷத்தை குடிச்சி செத்து போயிட்டான், எங்களை விட்டு பிரிஞ்சு போன புள்ள திரும்ப வந்துருச்சேன்னு சந்தோஷமா இருந்தேன், ஆனா கொஞ்சநாளிலே எங்களை விட்டு ஒரேடியா பிரிஞ்சே போயிட்டான்னு அழுது கொண்டிருதார் செல்வம் தாய்.

அறைக்குள் இருந்து கலங்கிய கண்களோடு நிறைமாத கர்ப்பிணியாக வெளியே வந்தாள் செல்வம் மனைவி. கேட்கவே கஷ்டமா இருக்கும்மா, நான் கிளம்புறேன் சொல்லி விட்டு வெளியே வந்தான் முருகேஷன்.


முடிவே தெரியாத ஒன்றை
முடிக்கத் தெரியவில்லை
முடிவற்று நீளும்
முடிவற்றவைகளால்
முடியப்பட்டிருக்கிருக்கின்றன
முற்றும்.


கவிதைகள்:- நா.மகுடேஷ்வரனின் காமக் கடும்புனல்

Sunday, November 25, 2007

புரொப்பசர் ஞானபிரகாசம்

பாஸ்கர் என்ற நடிகர் இவரை அழுது வடியும் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களிலும், தமிழ் திரைப்படங்களிலும் துக்கடா வேடங்களிலும் நாம் பார்த்திருக்கலாம். சமிபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன மொழி படத்தில் புரொப்பசர் ஞானபிரகாசம் என்ற கதாபாத்திரமெடுத்து நடித்திருப்பார். படத்தில் அவர் பைத்தியமான மனநிலை கொண்டவராக சித்தரிக்கப்பட்டுருப்பார். அதாவது பழையநினைவுகளை இன்னும் மனதில் வைத்துக்கொண்டு நிகழ்காலத்தில் நடக்கும் எதுவும் தெரியாமால் அதே பழைய காலகட்டத்திலே வாழ்ந்து வருவார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றமாதிரியே எந்தவொரு மிகைப்படுத்த நடிப்பும் இல்லாமால் எதார்த்தமான முறையில் அழகாவே நடித்திருப்பார். அவர் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் படத்தின் கதையோட்டத்தை இணைந்தே வருவதும் இன்னும் மிக அழகாகவே இருக்கும்.

அதுவும் இறுதிக்காட்சிக்கு முன்னால் தன்னுடைய நிலையை நினைத்து உணர்வுகள் வெடித்து அழும் பாஸ்கரின் நடிப்பை பார்த்து உடனே எனக்கு சட்டென கண்களில் நீர் கோர்த்து கொண்டது. அந்த காட்சியில் தொடங்கும் இந்த வீடியோ'வே பாருங்க.




இந்த கதாபாத்திரத்தை யாராவது முண்ணனி நடிகர் ஏற்று செய்து இருந்தால் அவருக்கு பலவகையான பாரட்டுக்களும்,விருதுகளுக்கும் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுருக்கும். தமிழ் திரைப்படங்களில் துக்கடா கதாபாத்திரம் ஏற்று நடித்து என்னாதான் சிறப்பாக செய்தாலும் அவர்களுக்கு என்னதான் பெரிய பெயர் கிடைத்து விடப்போகிறது? அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்திலில் கொஞ்சமாய் அதிகமாக கிடைக்கும். ஞானபிரகாசம் கதாபாத்திரமாய் வாழ்ந்து காட்டிய பாஸ்கர் சமீபத்தில் வெளியான படங்களில் கதாநாயகர் பின்னால் அலையும் அதே கோமாளி நண்பர்களில் ஒருத்தராக தான் வந்து போனார்.

Friday, November 16, 2007

சாப்பிட வாங்க....

வெள்ளிக்கிழமை ஆகிருச்சுன்னா நாமே டீம் லஞ்ச் போலாமா'ன்னு பசங்க கேப்பானுக, கூட போயிட்டு ஓசி சோறு தின்னுட்டு சும்மா வரமாட்டாம்'லே....

பொட்டி வைச்சிருக்கோம்'லே அங்கனயும் போயி எங்க தெறமைய காட்டி படம் பிடிச்சிட்டு வருவோம்'லே...



மேலே வஞ்ஞிரம் மீனு, அதுக்கடுத்து மட்டன் மசாலா, அப்புறம் கீழே கொஞ்சம் ஆலு மசாலா, அதுக்கடுத்து பன்னீர் பலக், அப்புறம் நடுவிலே கடிச்சுக்க ஆனியன்.. :)




இது எப்பிடியிருக்கு... :)


பூனைக்குட்டி'க்கு
போட்டியா வீக்-எண்ட் ஜொள்ளு'ன்னு தான் தலைப்பு வைக்கலாமின்னு இருந்தேன்.... எதுக்கு சாப்பாட்டுற பொருளை அங்கன போயி கம்பேர் பண்ணகூடாது'ன்னு எடுத்துட்டேன்.. ஹி ஹி :)

Thursday, November 15, 2007

சொ.செ.சூ

எங்க ஊருக்குள்ளே அடிக்கடி எவனுக்கும் எவனும் ஆப்பு வைக்கமுடியாது, ஆப்புக்கிறது தனியா ஒரத்திலே தான் கிடக்கும் அதை நாமே தேடி வைச்சிக்கிட்டாதான் உண்டு'ன்னு சொலவாடை சொல்லி வெறுப்பேத்துவானுக. அதையெல்லாம் கேட்டு கெடமாடு மாதிரி மண்டய ஆட்டிக்கிட்டு நாமே ஏறி உட்கார்ந்துட்டு அய்யோ அம்மா'ன்னு கத்தி பிரயோசனமில்ல தானே?? என்ன ஆச்சு நம்ம பயப்புள்ள'க்குன்னு நீங்க பதறது புரியுது, அதுவும் ஒன்னுமில்லங்க நானும் டாக்டர் விஜய் நடிச்ச கலைகாவியமான அழகிய தமிழ்மகனை பார்த்து தொலைச்சிட்டேன்.சுருக்கமா புலம்பனுமின்னா வரவனையூருலேருந்து கிளம்புன புனிதபிம்பம் சொன்னமாதிரி சொ.செ.சூ'வே செவ்வாய்க்கிழமை நைட் நானே வைச்சிக்கிட்டேன்.

நன்றி - அருட்பெருங்கோ
படம்மாய்யா அது.. கலை காவியமய்யா!!!??? கருமம் காறி துப்பி துப்பியே தொண்டை தண்ணி வத்தி போச்சு. நம்ம டாக்டரு பெரிய ஓட்டப்பந்தய வீரராம்,(கருமம் பிடிச்ச எழவு) அவரு எல்லா போட்டியிலும் அவருதான் மொதலிலே வந்து தொலைப்பாராம், (பின்னே எந்த ஹீரோ'டா தோத்து போன மாதிரி காட்டி தொலைச்சிருக்கீங்க?) இவருக்கு போட்டியாளர் ஒருத்தருக்கு ஹீரோ போட்டிக்குள்ளே வந்துட்டா நாமே
தோத்துப் போயிருவோம்'ன்னு பயந்து எந்த திரையுலகத்திலேயும் உபயோகப்படுத்த முடியாத டெக்னாலாஜி'யே யூஸ் பண்ணுறாரு, அடேய் அரைடவுசர் ஆப்பாயில் மண்டை வில்லனுகளா ஏண்டா எல்லாரும் ஒரே மாதிரி லூசா'வே திரியுறீங்க, முடியலடா விட்டு தொலைச்சிருங்கடா... அந்த டெக்னாலாஜி என்னா தெரியுமா? கண்ணுக்கு தெரியாத கம்பி ஒன்னை ஹீரோ பைக் ஓட்டிட்டு வர்ற பாதையிலே குறுக்கே கட்டி வைக்கிறாரு, அதெய்யல்லாம் தெரியாமே நம்ம ஹீரோ பைக் ஓட்டிட்டு வந்துறாரு, அந்த சூழ்ச்சியிலே எப்பிடி தப்பிக்கிறான்னு தான் நாமெல்லாம் சீட் நுனியிலே உட்கார்ந்துறானும். (அப்பிடிய நுனியிலே உட்கார்ந்தமாதிரியே வெளியே ஓடி வந்து தொலைக்கனும்) எங்கனயோ இருந்து பட்டாம் பூச்சி ஒன்னு பறந்து வந்து அந்த கம்பியிலே வந்து உட்காருது, ஸ்பீடா கண்ணுமண்ணு தெரியாமே பைக் ஓட்டிட்டு வந்து நம்ம ஹீரோ சடனா என்னாத்தயோ பண்ணி வீலீங்க் எல்லாம் பண்ணி பறக்குறாரு, (எனக்கு அப்பிடியே எங்களை விட்டுருங்கடா பிளிஷ்ன்னு வீல்'ன்னு கத்த தோணுச்சு !!). எங்கிட்டோ இருந்து நாலஞ்சு குண்டனுக வந்து ஆச்சூ,பூச்சுன்னு கத்தி அடிவாங்கிட்டு ஓடி போயிறானுக, ஹீரோ அங்கன இருந்து வந்து பந்தயத்திலே ஓடி பிரைஸ் வாங்கிறாரு.... (கண்ணுல H2O எல்லாம் வத்தி போயி பிளட் வருதுங்க).அப்புறமென்னா முன்னால் முன்னால் வாடா, உன்னால் முடியும் தோழா'ன்னு பாட்டு பாடி தொலைக்கிறாரு, ஆனா இவ்வளவு மொக்கையா ரஹ்மான் பாட்டை கெரியக்கிராபி பண்ணி எந்த டைரக்டரும் ஒப்பேத்துனது இல்லை.

அப்புறமென்ன வெளக்கெண்ண கதாநாயகர் வந்துட்டாருலே, பின்னாடியே அரைலூசு கதாநாயகி களத்திலே குதிச்சு தொலைக்கனுமில்ல. அம்மணி அழகா என்னத்தயாவது காட்டிக்கிட்டே கோவிலுக்குள்ளே இண்ட்ரோ ஆகுறாங்க, அங்கன இருந்த கதாநாயகர் பார்க்கிறாரு, பார்த்த நிமிசத்திலே பத்திக்கிருச்சாம், ஓவரா ஃபீலிங்க் பண்ணுறாரு, பிறகு என்னமோ காமெடி'னு பண்ணிட்டு இருந்தானுக, அதெல்லாம் பார்த்துட்டு முடியலைங்க முடியல... இதுக்கு முன்னாடி பிட்டுக்காக சொந்தமண்ணிலே பொழக்க முடியாமே தடைவாங்கினவங்க வேற வந்து திருவண்ணாமலை ஜோதி, பரங்கிமலை ஜோதி'ன்னு சந்தானத்தை டயலாக் பேச வைக்கிறாங்க, ஆனா நல்லாதாய்யா கேமராசாட்'ஐ வைச்சி தொலையிறீங்க, எழவு நம்ம டாக்டரு வேற அதெ தன்னோட கையாலே ஜாடை வேற செஞ்சு காட்டி தொலைக்கிறாரு....... (இன்னும் அவங்க அப்பா படத்திலே அத்தைக்கு சோப் போட்டு விட்டத மறந்து தொலைக்கலை போலே). இதிலே எல்லாத்தையும் விட பெரிய கொடுமை என்னான்னா இவரு சொல்லுற கவிதை,கவிஜ,கவுஜை'ன்னு ஏதோ ஒன்னை சொல்லி பச்சப்புள்ள பிரைசு வாங்கிட்டு வருது, அந்த புள்ளய வைச்சாவது உருப்படியா கதை கொண்டு போவனுக'னு பார்த்தா ஹீரோ'க்கு ஏதோ வெளக்கெண்ண சக்தி இருக்குன்னும், எதிர்காலத்திலே நடக்கிறத அவரு இப்பவே கணிக்க முடியுமின்னு என்ன எழவயோ கூட்டி அந்த பிள்ளைய கொன்னுருனாக..... :( உண்மையிலே என்ன வெறுப்போட உச்சக்கட்டத்துக்கு கொண்டு போன சீன் அது.(போங்கடா நீங்களும் ஒங்க ஹீரோ'சியமும்) .

அந்த வெறுப்பிலே படம் பார்த்து தொலைச்சா, இவரு அடுத்து இன்னோரு ஓட்டப்பந்தய போட்டியிலே மொக்க காரணத்துக்காக விட்டு கொடுத்து அம்மணி மனசிலே இடம் பிடிக்கிறாரு, அய்யா நல்லவனுகளா அது எப்பிடிடா ஒங்க தியாகத்தை அடுத்தவங்கிட்டே சொல்லுறப்போ கரக்டா பின்னாடி ஹீரோயின் நின்னு தொலையிறாளுக. அப்பிடியே கட் பண்ணி பாட்டு வேற பாடி தொலையுதுக. இனி என்னாலே முடியலைடா'ன்னு நம்ம சோட்டு பய ஓடி போயிட்டான், நான் மட்டும்தாங்க கடைசி வரைக்கும் பார்த்து தொலைச்சேன், தீடீரென்னு டாக்டரு அப்பா இவரே தேடி ஊருக்குள்ளே வர்றாரு, அப்பயே தெரிஞ்சு போச்சு, இன்னொரு எழவே கூட்டி தொலைய போறானுகன்னு, சரியாதான் இருந்துச்சு. ஊர் உலகத்திலே என்னனோமோ கஷ்டமும் வந்து தொலைக்கிது, நமக்கு ஒத்த ஆளு தனியா போயி அம்பது பேரை காப்பாத்திறதை பார்த்து தொலையனுமின்னு கஷ்டம் போலே... :( எப்போடா இன்னோரு டாக்டரை காட்டப்போறீங்கன்னு பார்த்துட்டு இருந்தா வர்றாய்யா அழகுசிங்கம், வாயிலே சிகரெட்'ஐ வைச்சிட்டு நாலு பேத்தை அடிக்கிறாரு, மவனே இதுக்கு பேருதான் ஸ்டைலிஸ் இண்ட்ரோ'வா.... :(

இவரு வந்ததுக்கபுறந்தாங்க கதை சூடு பிடிக்குது, பின்னே நமீதா வர்றாங்களே, சூடு பறக்காதா என்ன? அவ அப்பன் சூரத்திலே துணி வியாபாரம் பண்ணுறானாம், அங்கன மிச்சம் கெடந்த துணியை தைச்சு போட்டு ஆடுது ஆட்டம். பாட்டு முடிஞ்சதும் என்னோமோ நடந்துச்சாம், நல்லவேளை எனக்கு போன் வந்துருச்சு, அதை நான் கவனிக்கலை. தீடீரென்னு பார்த்தா ரெண்டாவது டாக்டரு சென்னைக்கு வந்துறாரு, வந்த இடத்திலே ஸ்ரேயா பார்த்து அவங்க வீட்டுக்கு போறாரு. அங்க போனதும் அவங்க காசுபணத்தை பார்த்தும் ஆள்மாறாட்டம் பண்ணனுமின்னு முடிவு பண்ணிறாரு. இனிமே இந்த வெண்ண படத்த பார்க்கவே கூடாதுன்னு நானெல்லாம் அப்பயே முடிவு பண்ணிட்டேன்.

இவ்வளவு தூரம் டைப் பண்ணினதுக்கே எனக்கே நெஞ்சு வலிக்குதுங்க, அந்த மொக்கை படத்துக்கு இம்புட்டு பெரிய போஸ்டா'ன்னு, அத விட சில பேருக்கு ஹார்ட் -அட்டாக்'ஐ வரும்...

அதன் காரணிகள்:-

1) டாக்டர் விஜய் #1 படத்தில் கல்லூரி மாணவர்

2) டாக்டர் விஜய் #1 பேசுற பஞ்ச் டயலாக் (எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதைப்பண்ண முடியாதா?)

3) டாக்டர் விஜய் #1 கிளைமேக்ஸில் செய்யும் தியாகம்..... (அர்ஜீனா அவார்ட் இல்லன்னா ஆஸ்காரு நிச்சயம்)

4) டாக்டர் விஜய் #1'க்கும் டாக்டர் விஜய் 2'க்கும் உள்ள வித்தியாசம்!!!???!!!???

5) டாக்டர் விஜய் அவர்களை இளையதளபதி அடைமொழியிலிருந்து இதயதளபதி'ஆக இந்த நல்லுலகம் அறியப்பட போவது!!!

Tuesday, November 13, 2007

நாங்கல்லும் ஆட்டய கலைப்போம்'லே....

படம்:- 1



வலதும்.இடதும் பச்சைய மரம் மூணு மடங்கு வளர்ந்து நின்னாலும், புழுதி பறக்க நடுவிலே கருப்பா தார் சாலையிலே வெள்ளை பட்டை அடி'க்கு அடிக்கு இருந்தாலும் தவறி விழுந்தாலும் உசுரை காப்பாத்தா ஆயிரம் சொந்தகாரனுக தூக்கி நிப்பாட்டி காப்பாத்தி சொல்லுற ஒத்த வார்த்தைக்கு எடுத்த படமய்யா இது.......



பார்த்து போடி மவனே, இல்லன்னே நாலு பேரு தூக்கிட்டு போவோம் இந்த பாதையிலே.............. *

படம்:- 2




இது புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு செல்லும் சாலையில் Splendor நிப்பாட்டி எடுத்த போட்டோ...

படம்:- 3




எங்களுக்கும் சாப்ட்வேர் யூஸ் பண்ண தெரியுமில்ல... :)

படம்:- 4



வித்தியாசம் கண்டுபிடிங்க...

படம்:- 5



படம்:- 6




இது பெங்களூரூ - மைசூரூ மெயின் ரோட்டுலே எடுத்த படம்.....

படம்:- 7



சாலைகளுன்னு போட்டி வந்ததும் 39 பேருங்க துண்டு போட்டு ஒக்கார்த்துட்டாங்க, ஆத்தி இங்கன நாங்கெல்லும் பொட்டி தூக்கிட்டு திரியுறோமேலே... நாங்கல்லும் ஆட்டய கலைப்போம்'லே....

Friday, October 26, 2007

ஜில் ஜில் ஜிகர்தண்டா....

இந்த வீடியோ எடுத்தவர் எங்கேயிருந்தாலும் நல்லாயிருக்கனும்... :)

Sunday, October 14, 2007

அதிரடி எழுத்தாளர் ஜி'யுடன் Gtalk உரையாடல்

வீட்டுலே நேத்து நைட்டு 2 மணி வாக்கிலே ஆபிஸ் வேலையை பார்த்துட்டு இருந்தோப்போ நம்ம நெல்லைசீமையின் சிங்கமான எழுத்து புயல் ஜி ஆன்லைனில் வந்தார். அவருடைய அருமை பெருமைகளை பத்தி சொல்லனுமின்னா அது கொஞ்சம் ஓவர்டோஸ்'ஆ இருக்கும், ஏன்னா அவரு தன்னடக்கத்தோட சுரங்கம், எழுத்துதிறமையோட அரங்கம் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரார். சமீபத்திலே கூட அவருடைய போட்டோ'வே பார்த்துட்டு பாலிவுட்,கோலிவுட்,சாண்டல்வுட்'ன்னு எல்லா வுட்'களுக்கும் ஹீரோவாக்குமின்னு கியூ கட்டி நிக்கப்போய் அவரு அதெல்லாம் வேணாவே வேணாம், நாமே இருக்கிற இருப்புக்கு ஹாலிவுட்'தான் குட்'ன்னு அமெரிக்கா வந்தவரு. அவரே நம்மக்கிட்டே வந்து பேசுனா அது எவ்வளவு பெரியமனசு, அப்பிடியே அந்த வரலாற்று சிறப்புமிக்க உரையாடலை பதிஞ்சுருக்கேன், படிச்சி பாருங்க.

ஜி:- "என்னங்க 2மணிக்கு ஆன்லைனிலே இருக்கீங்க? அவ்வளவு பெரிய கடலையா வறுத்துக்கிட்டு இருக்கீங்களா?"

நான்:- "ஹிம் ஒன்னத்துக்கும் வக்கிலாமே தான் நீங்க பிங் பண்ணினதும் உடனே ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன், ஏங்க சும்மா வெறுப்பேத்துறீங்க? என்ன ஜி பதிவெழுதியே ரொம்ப நாளாகி போச்சு? ஏன் மேல்மாடி இன்னமும் காலியா இருக்கு?"

ஜி:- "இல்ல இப்போ கொஞ்சமா நிறைஞ்சு தான் இருக்கு! அதுதான் நாளையிலிருந்து மறுபடியும் பதிவுலக வாழ்க்கையை தூசுதட்டி ஆரம்பிச்சிறலாமின்னு இருக்கேன். நான் ரீ-எண்ட்ரி கொடுக்கிறதுக்கு நல்ல ஐடியா'வா சொல்லுங்களேன்"

நான்:- "என்னது நான் ஒங்களுக்கு ஐடியா சொல்லவா? தன்னடக்கம் இருக்கவேண்டியதுதான், அதுக்காக இம்புட்டெல்லாம் இருக்கக்கூடாது சாமியோவ்! சரி வேணுமின்னா ஒன்னு பண்ணுங்க, இப்போதைக்கு ஆஸ்திரேலியா கூட மரண அடி வாங்குனாலும் அடுத்த மேட்ச்'லே செயிச்சுருவோமின்னு திரியுற கிரிக்கெட் ரசிகர்களை தாக்கி பதிவு போடுங்க, சும்மா கும்முன்னு ஹிட் ஆயிராலாம்."

ஜி:- "எப்பிடி கிரிக்கெட் எல்லாம் ஒரு விளையாட்டா'ன்னா? அது ஏற்கெனவே எங்கயோ படிச்சிட்டேனே? வேற இன்னொன்னு பண்ணலாமா? இப்போதைக்கு ஒரு டீம்'ஐ திட்டி பதிவு போடுறதுக்கு தலைப்பு கண்டென்ட்'ன்னு ரெடி பண்ணி வைச்சிட்டு இந்த சீரியஸ் முடிச்சதும் போட்டுறலாமா?"

நான்:- "அப்பிடி கூட நம்ம மோகன்தாஸ் ரெடி பண்ணி வைச்சிட்டாருங்க, வேறமாதிரியா யோசிங்க, இப்போ நீங்க ரீ-எண்ட்ரி ஆனதும் எல்லாருக்கும் பத்திக்கனும், இன்னும் ரெண்டு மூணே வாரத்திலே ஜொலிச்சிறனும், அந்தமாதிரி எழுதப்பாருங்க"

ஜி:- "அவ்வ்வ்வ்வ்வ்வ், இவ்வளவெல்லாம் என்கிட்டே எதிர்பார்க்கீறீங்களா நீங்க? சீக்கிரமே ஜொலிக்க போற அளவுக்கெல்லாம் என்னத்தங்க நானெல்லாம் எழுதிட்டேன்?? இனிமேதான் அந்த அளவுக்கெல்லாம் எழுத முயற்சிக்கனும்!"

நான்:- "அடபாவி மக்கா நீயெல்லாம் இப்பிடி சொன்னா நானெல்லாம் என்னத்தையா சொல்லிக்கிறது? அதுவும் அறிவுஜீவிகளுக்கு மட்டுமே புரியுற அடர்த்தியான எழுத்துகள் வடிக்கவும், எங்களை மாதிரி சாதாரண வாசகர்களுக்கும் புரியுறமாதிரி எளிமையான நடையிலே எழுதி கலக்குற உங்களை மாதிரி நல்ல எழுத்தாளர்கள் எல்லாம் இப்பிடி சொன்னா நல்லாயிருக்குமா?"

ஜி:- "ஐயா சாமி என்னையெ வைச்சி நீங்க காமெடி கீமடி எதுவும் பண்ணலையே?"

நான்:- "நீங்கதான் வைகை புயல் வடிவேல் இல்லயே? ஒங்களை வெச்சி என்னத்த காமெடி பண்ணுறது? நீங்க பதிவுலகத்திலே பேமஸாக ஐடியா கேட்டீங்க, எனக்கு தெரிஞ்சத சொன்னேன் அம்புட்டுத்தேய்ன்!"

ஜி:- "அப்போ இன்னொன்னு பண்ணலாமா? ஆரம்பமே அதிரடியா நான் ஏன் ஸ்டார் ஆகவில்லை'ன்னு பதிவை போட்டு கலவரத்தை உண்டாக்கிவிட்டு அதிலே ஊர்வலமா வந்துறவா?"

நான்:- "ஹிம் நல்லாந்தான் யோசிக்கீறீங்க! ஆனா உங்களுக்குமுன்னாடியே இன்னொருத்தர் யோசிச்சு பதிவா போட்டுட்டாறே! இன்னும் பெட்டரா யோசிங்க, ஒங்களுக்கு இருக்கிற அளவிடவே முடியாத மூளையிலே கொஞ்சகாணு எடுத்து உபயோகப்படுத்தி பாருங்க, நல்லதொரு ஐடியா கிடைக்கும்... "

ஜி:- "ஆங் நல்ல ஐடியா அமெரிக்கா'விலே தமிழனுங்க சேட்டை'ன்னு சீரியஸா பதிவு போட்டுருவோம், நிலைமை கலவரமா போச்சின்னா உங்களை மாதிரி நான் அதை நகைச்சுவைக்காக எழுதின்னேன்னு சொல்லிக்கலாம்? எப்பிடி ஐடியா?"

நான்:- "யோவ் நான் உண்மையிலே ஜாலிக்காக தாய்யா அந்த பதிவே எழுதினேன்! நீ US'லே இருந்து இங்கன பெங்களூரூலே இருந்த அஞ்சாறு மாசத்திலே ஒன்னையே எத்தனை தடவை வாட்ச் பண்ணிருக்கேன், அந்த பதிவிலே இருக்கிறமாதிரியே எத்தனை தடவை நீ வென் ஐ வாஸ் யூ எஸ்'ன்னு பீலா விட்டுருப்பே? இப்போ அங்கன போனதும் டகால்டியா?"

ஜி:- "சரி சரி யாரும் பார்க்கலை, ஃபிரியா விடுங்க! இப்போ என்னந்தான் பண்ணுறது, கொஞ்சம் சீக்கிரமா எதாவது ஐடியா கொடுங்க!"

நான்:- "அப்போ இவர் கவனத்துக்கு அவர் கவனத்துக்கு'ன்னும் பதிவு போடுங்க, அதுவுமில்லான்னா எனக்கு கராத்தே தெரியும், குங்பூ தெரியும், அட்லிஸ்ட் குங்குமபூ போட்ட பால் குடிக்க தெரியுமின்னு வீடியோ எடுத்து பதிவா போட்டுருங்க!"

ஜி:- "ஆஹா இதுக்கூட நல்ல ஐடியா'வே இருக்கே? இதை டிரை பண்ணி பார்த்திறலாம்.."

நான்:- "ஒரு முக்கியமான விஷயம், அதிலே நீங்க சட்டை போடக்கூடாது, ஆனா கட்டாயமா கூலிங் கிளாஸ் மட்டும் போட்டுக்கனும்"

ஜி:- "Kewl, அப்பிடியே செஞ்சுறலாம், நாளைக்கே நான் ஒரு பதிவு போட்டுறேன்!"

நான்:- "நல்லது, இப்போ நாமே பேசினதை பதிவா போடப்போறேன்"

ஜி:- "ஹய்யோ, நாமே எவ்வளோ சீரியஸா'லாம் பேசிட்டு இருந்தோம், அதை பதிவா போட்டா என்னத்துக்கு ஆகிறது?

நான்:- "ஏய்யா வாளும் வேலும் என் இரு கண்கள்...போர்க்களம் என்பது இந்த ஜி-யின் பொழுதுபோக்கு... உறைந்த ரத்தம் நான் உறுஞ்சும் வாசம்...உருண்டோடும் தலைகள் நான் எட்டி விளையாடும் பந்துகள்'ன்னு புரொப்பலிலே போட்டு வைச்சிட்டு இதுக்கெல்லாம் கவலைபட்டா என்னத்துக்கய்யா ஆகுறது?? ஒரு வேளை இது சீரியஸா போச்சினா எல்லாரும் சொல்லுறமாதிரி நகைச்சுவைக்கு எழுதினதுன்னு சொல்லிக்கிறேன்! எப்பிடி என்னோட ஐடியா?"

ஜி:- "அது சரி எதோ ஒன்னு நடந்தா சரி!"

Wednesday, October 10, 2007

குட்டி சாத்தான் தொல்லை.....

குட்டிச்சாத்தான்னா என்னான்னு இன்னவரைக்கும் நாமெல்லாம் கண்ணாலே பார்த்தது இல்லலே... நாங்கெல்லாம் ஒன்னோட போட்டோ பார்த்துட்டோமின்னு சொல்லி சிரிக்கிறது தெரியுது, அப்பிடியெல்லாம் பச்சப்புள்ளய நக்கல் பண்ணப்பிடாது. ஆமாம் நீங்க கேள்விக்கேட்க வர்றது புரியுது, இன்னிக்கு நான் பச்சை சட்டைதான் போட்டுருக்கேன். வருசா வருசம் வர்ற வாலெண்டெஸ் டே'க்கு போட்டும் பார்த்தாச்சு, ஒன்னும் நடத்தமாதிரி இல்ல, இன்னிக்கு பச்சைச்சட்டை போட்டு என்னத்த ஆகப்போகுது? பேக் டூ த டாபிக். வாழ்க்கையிலே ஒரே ஒரு தடவை படிச்ச எட்டாவது வகுப்பு முழுப்பரிட்சை லீவு'ப்போ கண்ணாடி போட்டு படம் பார்க்கனுமின்னு சொன்ன முத்துக்குமாரை இழுத்துக்கிட்டு அபிராமி தியேட்டரிலே பார்த்த குட்டிச்சாத்தான் படம். அதுக்கு இப்போ என்னாடா'ன்னு கேட்கீறிங்க? புரியுது! மொக்கைன்னு லேபிள் போட்டோமில்ல இன்னும் இழுப்போமில்ல.

அந்த படத்திலே வர்ற பசங்கிட்டே குட்டிசாத்தான் எந்தமாதிரி நான் வரனுமின்னு கேட்க அவங்க அப்பா வரைஞ்ச படத்திலே இருக்கிறமாதிரி சொல்ல அதை மாதிரி வருவான். இப்போ நாமே எல்லாமே கேட்கமே இன்னொரு குட்டிச்சாத்தான் நம்ம கையிலே உட்கார்ந்து கிடக்கு. அதுதான் கருமம செல்லுபோனு. அய்யோ அதை வைச்சிட்டு நம்மளுக பண்ணுற அலப்பறை நொணநாட்டியம் இருக்கே. கொஞ்சவருசத்துக்கு முன்னாடி கன்னத்திலே கை வைச்சிக்கிட்டு போஸ் கொடுத்தவர் கூவி வித்த ஐநூத்துஒன்னுக்கு ரெண்டு செல்'ஐ வாங்கிட்டு அவனுக்கு ஒன்னு அவன் ஆளுக்கு ஒன்னுன்னு கொடுத்து ஒரே கடலை வருகல்தான். அப்போயும் நானெல்லாம் ஒரே ஒரு போனை தாங்க வைச்சிருந்தேய்ன், ஹிம் இன்னவரைக்கும் அதே கதைதான்.

இத்தாலிலே இருக்கிற சாய்ஞ்ச கோபுரம் மாதிரி கோணிக்கிட்டு தலையை வைச்சிட்டு ஊருக்குள்ளே திரியுறானுக, நடந்துட்டு போறவன் கூட ஸ்டைலுக்கு தோள்பட்டையிலே மொபலை வைச்சிட்டே தலையே சாய்ச்சிக்கிட்டே பேசிட்டு போறானுக. கொஞ்சவருசத்துக்கு முன்னாடி மதுரையிலே குப்பை கொட்டிக்கிட்டு இருக்கிறோப்போ அப்பாகிட்டே அழுது பிடிச்சி எப்பிடியோ ஒரு மொபைல் வாங்கியாச்சி, அதிலே எப்போ ரிங் அடிச்சாலும் இவருக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துரும். ஏண்டா என்னிக்காவது அதை உருப்படியா உபயோகப்படுத்திக்கிறியா? எப்போ பாரு, அதிலே வெட்டிப்பயலுக தான் பேசுறானுக, எழவு நீங்க என்னத்ததான் பேசி தொலையிறீங்கன்னு பிடிப்பட மாட்டங்கிதுன்னு பொலம்புவார்... ஹி ஹி அவருக்கு புரியுறமாதிரி பேசுனுமின்னா இந்த வார கடைசியிலே பெரியார் பஸ்ஸடாண்ட் கடைக்கு வந்துரு, LTC'க்கு மதியம் வந்துருன்னா பேசமுடியும். எல்லாமே கோட் வேர்ட்ஸ்தான். இப்போ போனவருஷத்திலே இருந்து அவரும் ஒரு மொபலை வாங்கி வைச்சிட்டுருக்காரு. அதிலே என்ன ஐ.நா சபை செயலாளர்க்கு அறிவுரை எதுவும் சொல்லுவாரு போலே'ன்னு பார்த்தா, பாலண்ணே, சின்னக்கடைதெரு வெண்மணிக்கு வந்துருங்க, டீ சாப்பிடலாம்,'ன்னு தான் மொக்கை போட்டுக்கிட்டு இருக்காரு. எல்லாம் காலம் செய்த கோலமின்னு பாட்டுதானே அங்கன பாடமுடியும்.

போன் மொக்கைனதும் நம்ம சோட்டு பய ஒருத்தன் ஞாபகம் வந்து தொலைக்கிது, பயலுக்கு சோறுதண்ணி எதுவும் வேணாம், சும்மா தொணதொண'னு அதிலே பேசிட்டே இருந்தா போதும் அதிலே பசியாறி தூங்கவும் செஞ்சு தொலைப்பான். நாமெல்லாம் நைட் தூங்குறப்போ என்ன செய்யுவோம், பெட் பக்கத்திலே குடிக்க தண்ணியும், அலாரம் கிளாக்'ம் எடுத்து வைச்சிட்டு தூங்குவோம், இந்த பயப்புள்ள மொபலை சார்ஜ் போட்டுட்டு, அதிலே கார்ட்-லெஸ்'ஐ எடுத்து காதிலே மாட்டிக்கிட்டு யாருக்காவது மிஸ்டு கால் கொடுத்து தொலைப்பான். மிஸ்டு கால் கொடுத்த பல பேருலே ஒருத்தன் இவனுக்கு கால் பண்ணா போதும், அவனுக்கு பிடிச்சது வினை. இந்த வெளக்கெண்ணே தூங்குறவரைக்கும் அந்த எதிராளி பேசனும், அவன் எதாவது சொல்லி கட் பண்ண போதும், டேய் டேய் இருடா, இன்னிக்கு எங்க ஆபிஸிலே ஒரு ஃபிகரு, கலருன்னு அவனை உசுப்பேத்தி விட்டு இது நல்லா குளிரு காயும், கடைசியா தூக்கம் வந்ததும் ஒன்கிட்டே ஏதோ ஒன்னு சொல்லனுமின்னு நினைச்சிட்டு இருந்தேன், தூக்கம் வேற வருது சரியா ஞாபகம் வரமாடேங்கிது, கோவிச்சிக்காமே நாளைக்கு காலையிலே போன் பண்ணுறீயா'னு பிட்ட போட்டு தூங்கிருவான். ஒனக்கு எப்பிடிடா இதெல்லாம் தெரியுமின்னு கேட்கிறீங்க ? எம்புட்டு கேள்விதான் கேப்பீங்களோ? ஹிம் டெய்லி அவரு பள்ளி கொள்றோப்போ போன் பண்ணுற கேனை நாந்தான். அவனும் பேசிட்டுதான் இருக்கான். அவன் ஆபிஸ் ஃபிகரை தான் இண்ட்ரோ பண்ணி விடமாட்டேன்கிறான்..........

விவாஜி'க்கு எதிர் கவுஜை....


இன்னல இருந்து உனக்கு குருப்பார்வைன்னு
தெரு முக்கு ஜோசியர் சொன்னாரு!
நம்ப மறுத்த என்னோட பிடிவாதத்தை
அன்னிக்குதான்டா அதையே தளர்த்திக்கிட்டேன்!

நீ நம்ம தெருவிலே குடியேறின முதல் நாள்
என்னோட நண்பனா மாறிட்டே!
என்னோட கடங்கார அட்டையெல்லாம்
எடுக்க விடாமே நீயே காசு கொடுத்துட்டே!

பாட்டில் ஓப்பன் பண்ணும்போது மட்டும்
உனக்கு எப்பிடியோ மூக்குக்கு மேலே கோவம் வந்திருது!
இருக்கிற எதையும் குடிக்கவிடாமே செய்யற
ஒன்னாலே எனக்கு மண்டை காயுது.

டீ கடைக்கு நான் போறத
யார் சொல்லாமலும் உனக்கு எப்பிடி தெரியுது?
தங்கராசா வடிகட்டி வாங்கினா மட்டும் நீ இப்பிடி
டென்சன் ஆகுறேன்னு எவனுக்கும் தெரியாது.

சம்பள நாள் வந்தா கவரு வருதோ இல்லியோ!
ஆபிசுக்கு சிரிச்சிகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!
மாசத்திலே கொஞ்சமாவது சேமின்னு
யாரும் சொல்லாத அட்வைஸ் பண்ணிட்டு போவே!

சுனாமி வந்து ஊரையெல்லாம் தூக்குச்சு
உனக்கு ஒன்னும் ஆகலைன்னு போன் பண்ணி கேட்டே?
கழுதையா பார்த்தா யோகமாம், ஊருலே சொன்னாங்க!
உன்னை நண்பனை அடைச்ச நான் யோகவந்தாண்டா!

உன் நட்பு வேணாமின்ன யாரும் சொன்னா?
சொன்னவன் திரும்ப வருவான்னு போடுவேன் எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா!
இந்த வருசம் ஆகஸ்ட் பர்ஸ்ட் விக்கெண்ட்'லே
வைப்ப்போம் ஊருக்கெல்லாம் பெரிய ட்ரீட்டா!


விவாஜி எதிர்மறை கவுஜை

Thursday, September 27, 2007

சவடன் கதை

"யே ஆத்தா, எங்க சவடப்பச்சியை விடிக்காலே இருந்தே காணேலே? எங்கன போயிருக்கு?"ன்னு வீட்டுக்கு வெளியே நின்னு கேட்ட புள்ள யாருன்னு பார்க்க கண்ணை குருக்கிக்கிட்டு வீட்டை வெளியே வந்துச்சு பர்வதப்பத்தா.

"வாடியாத்தா, மருதமீனாட்சி, என்னாத்துக்கு அப்பச்சிய தேடி வந்தே?"

"அப்பத்தா என்னோட பேரு மீனாட்சி தான், சுருக்குன்னு மீனா'ன்னு கூப்பிடு, அப்போதான் இஸ்டைலா இருக்கும்"

"என்னடியாவேளெ சுடல, சுட்டுருச்சுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேவே, அவன் மருதக்கு போயிருக்கான், கருக்கலிலே போனான், இன்னும் வந்த சேதிய காணாம். என்னா சொல்லனும்?"

"நான் என்ன அப்புச்சி'கிட்டே சேதி சொல்லப்போறேன். சொக்கய்யா தான் பார்த்துட்டு வர சொன்னுச்சு"

"சரி அவன் வந்தா சொல்லிவிடுறேன். சொக்கன் சொல்லிதான் அவன் டவுனுக்கு போயிருக்கான்னு நினைச்சி கிடந்தேன்."

"வந்தா சொக்கய்யா கடைக்கு வரசொன்னுச்சு'ன்னு சொல்லிருப்பத்தா, நானு கம்மா'கிட்டே பாண்டியாட போறேன், நான் இங்கன வந்தேன்னா எங்கம்மா வந்து கேட்டுச்சு'ன்னா சொல்லிரு"ன்னு சொல்லி விட்டு ஓடி விட்டாள்.

கலியாணம் ஆன ரெண்டேமாசத்திலே சீக்கு வந்து செத்துப் போன புருசன் வீட்டிலே இருந்து தம்பி சவடன் வீட்டிலே தங்கினவ தான் பர்வதத்தா. இப்போ வயசு அறுவதஞ்சு தொட்டுருச்சிக்கிறதுக்கு பார்க்கிற பார்வைக்கு கண்ணை குறுக்கி மறுக்கி ஆள கண்டுபிடிக்கிற திரணி'லே தான் அந்த ஊரே நம்புச்சு, இல்லன்னா இன்னும் அம்பது தாண்டிருக்காதுனு தான் சொல்லிருப்பாங்க. பதினாறு வயசிலே மூளியாகி ஒழைக்க ஆரம்பிச்சதுதான் இன்னமும் நாத்து நடுறது, கடலை ஒடக்கிறது, அறுவடையிலே தூசி தட்டுறது'ன்னு எந்த கழனி வேலையானலும் செய்யும். அதுக்கூட ஒடம்பொறந்த சவடமுத்து ஊருக்கு ஒழைக்கிற உத்தமரு, ஒன்னேஒன்னு கண்ணேகண்ணு'ன்னு ஆம்பிள்ள பிள்ளய பெத்துட்டு துபாய் சீமையிலே வேலை பார்க்கிறான்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்ட நல்லவரு. இவரு கூடயும் இருவது வருசம் குடும்பம் நடத்தி சுமங்கலியா செத்துப்போச்சி பேச்சியாத்தா.

"ஏண்டா முத்து, கருக்கலிலே மருத போறேன்னு போனவன் பொழுது சாய வர்றே? எங்கேடலே போயிருந்தே?"

"மேலசந்து மருததேவரு பொண்ணுவயத்து பேத்தி இருக்குலே அது நேத்து பொழுதுலே பெரிய மனுசியாட்டாளாம், அவக வீடு அனுபானடி'லே இருக்குலே, அதுதான் மருதனும் நானும் அங்கன போயி மேக்காரியமெல்லாம் பார்த்திட்டு வந்தோம்"

"என்னோமோ, ஒன்னதேடிக்கிட்டு சொக்கன் அனுப்பிச்சான்னு ஊருக்குள்ளே இருக்கிற குஞ்சான் குளுவனெல்லாம் வந்து நீயிருக்கியான்னு கேட்டு போச்சுக"

"அப்பிடியா, ஆளு அனுப்பினனா? என்ன சோலியா இருக்கும்? ஒரு எட்டு பார்த்தியாறேன், மத்தியானமா அந்த வீட்டிலே தின்னது,பசி வயத்த கிள்ளுது, கேப்பகஞ்சி காஞ்சப்போறேன்னு நேத்து சொன்னீயே, இன்னமும் மிச்சம் இருக்கா, சொக்கப்பச்சிய பார்த்திட்டு வந்து குடிச்சிக்கிறேன்.”

“ஹிம் அதெல்லாம் இருக்கு, வெரசா வா, பேசுறேன் பேசுறேன்னு விடிய விடிய ரெண்டு பயலுகளும் பேசிக்கிட்டு கெடக்காதீயே”

சவடமுத்துவும், சொக்கனும் ஓரு சோட்டு வயசு, அந்த காலத்திலே படிக்க பள்ளிக்கூடம் அனுப்பினா ஊரு வாயக்காலிலே சுத்திட்டு கிடந்த பட்டிக்காட்டு பக்கிகதான். சவடன் கூலிவேலைக்கும் கொலுத்து வேலைக்கும் போயி சம்பாரிக்க ஆரம்பிச்சதும், சொக்கு அந்த வியாபாரம் பார்க்கிறேன், இந்த வியாபாரம் பார்க்கிறேன்னு நஷ்டப்பட்டு நோகமதானே நாமெல்லாம் கஞ்சி குடிச்சோம்! எதுக்கு கஷ்டப்பட்டு பொழக்கனுமின்னு கத்துவட்டி கொடுத்து வாங்கி பொழைக்க ஆரம்பிச்சான். கடன் வாங்கவறனுவக்கு விலாசம் காட்டனுமின்னு ஊருக்குள்ளே இருந்த டீக்கடைக்காரனுக்கே கடன் கொடுத்த ஆறேமாசத்திலே வட்டிக்கு கடையே எழுதி வாங்கிட்டான். அதிலே கொஞ்சகொஞ்சமா விஸ்தரிச்சு இப்போ கிளப் கடையா ஆக்கி சும்மா வந்தா வரட்டும் வராட்டி போகட்டுமின்னு உட்கார்ந்தவன் தான்.

"சொக்கா, என்னாப்பே கூப்பீட்டு விட்டியா? அக்கா சொன்னுச்சு? ஏதும் மருத போயிட்டு வர்ற சோலி இருக்கா என்ன?"

"வாப்பே சவுடா, எங்கனப்போயிருந்தே? நேத்து ரவைக்கு வீட்டுக்கு போனவ இன்னிக்கு ரவைக்கு இங்க வர்ற? என்னாலே சேதி?"

"ஆத்தி ஒனக்கு விசயமே தெரியாதா? மேலதெரு மருதனோட பிள்ளை ஒன்னே அனுப்பானடி'லே கொடுத்து இருந்தானே? அவ மூத்தப்பிள்ள பெரியமனுசாயிட்டா. அவன் மருவானோட இந்த பய மவன் சண்டை போட்டானாமே, அதுக்கு இவரு முருக்கிக்கிட்டு நான் வரமாட்டேன்னு சொல்லிட்டான், அதுனாலே மருதய்யன் போயி சண்டைய தீர்த்து வைக்கிறேன்னு ரெண்டு பய காலிலேயும் விழுந்து எந்திருச்சிட்டு வந்தான்.”

“நீ என்னாப்பே அங்கன போயி பண்ணினே?”

“நான் என்ன பண்ணேனா? நாட்டமை இல்லாத ஊருக்குள்ளே தடியெடுத்தவந்தானே தீர்ப்பு சொல்லனும், அதுதான் ரெண்டு பயலுகள்கிட்டேயும் சமாதானம் பேசினேன், பக்கி பயப்புள்ளக சண்டை வந்ததே சராயம் குடிக்கப்போன வந்த கைகலப்பாம், எழவெடுத்தவனுக அப்பனுக்கு தெரிஞ்ச கோவப்படுவான் சண்டை போட்ட காரணத்தை தவிர மத்ததே தான் பேசிட்டு கெடந்தானுக.”

“கடைசியா என்னாச்சி? சமாதானம் ஆனானுகளா இல்லயா?”

“ஹிம் மருதமவன் என்னத்த நினைச்சானோ சரின்னு போயி கூரை கட்டப்போயிட்டான்.”

“அதுதாண்டா ஒன்ன எங்கனயும் இந்த பயலுக கூட்டிட்டு போறது, ஆகாத காரியத்தையும் ஆக்கி வைக்க பொறந்தவண்டா நீ சவடா!”

“யேப்பே என்னத்துக்கு இது, இருவது சந்துக இருக்கிற ஊருக்குள்ளே இருக்கிற எல்லாபயலுகளும் நமக்கு வேண்டப்பட்டனுவக தான், அவனுகளுக்குன்னு கஷ்டமின்னு வந்தா நமக்குன்னு வந்ததுதானே?”

“ஏலேய் ஒன்னவர சொன்ன காரியத்தை விட்டு வேற என்னத்தயோ பேசிட்டு இருக்கோம் பாரு, சுப்பைய்யாசாரி சங்கிலி செஞ்சு கொண்டாந்தாட்டாரு, இந்தா பாரு, காளியத்தா’கிட்டே கொடுக்கமுன்ன ஒன்கிட்டே காட்டிபிடனுமின்னு தான் ஒன்ன தேடின்னேன்.”

“ஓ.... ஆமாலு, அவரு பத்து நாளாகுமின்னு சொன்ன தவணை’க்கு சரியா முடிச்சி கொண்டாந்துட்டாரா, அடியாத்தி நல்லாதாய்யா இருக்கு, ஒத்தக்கொடின்னாலும் கெட்டியா இருக்குலே, ஆத்தா பார்த்துச்சின்னா பூரிச்சிருமிலே,என்னோட கெழவி கண்ணமூடுறதுக்குள்ளே தாலிகொடி செஞ்சு கொடுக்கலாமின்னு பார்த்தேன், முடியலை எழவு, இப்போ வந்திருக்கிற மருமகளுகாகவது வாங்கி செஞ்சு மாட்டுன்னு சொல்லிருக்கேன், சரின்னு சொல்லிருக்கான் பய, அவங்க இந்த வருச சித்திரை திருவிழா’வுக்கு வந்தாதான் தெரியும்”

“சவடா, மவன்னு சொன்னதும் ஞாபகம் வருது, பய மருத’லே வீடு ஒன்ன வாங்கி போட்டேன்னே? அதை என்னாடா வாடகைக்கு விட்டுருக்கானா என்ன?”

“ஆமாப்பே, கீதளத்திலே குடும்பம் ஒன்னு குடியிருக்கு, மெத்தயிலே சும்மாதான் போட்டு வைச்சிருக்கான், திருவிழா எதுவும் வந்தாலும் அங்கன வந்து தங்கிருக்கனுமின்னு வைச்சிருக்கான்.”

“சவடமாமோய், ஒன்னந்தானே நானு பொழுது சாயுற நேரத்திலே இருந்து தேடிட்டு இருக்கேன்”ன்னு பெருங்கொரலெடுத்து கூப்பிட்ட முத்தையா’வே பார்க்க வெளியே வந்தான் சவடன்.

“ஏனேலே, பால் தரலன்னா மாட்டுக்கே தீனி வைக்கமாட்டியே, இப்போ என்னத்துக்கு என்னை தேடினே?”

“ஆத்தி, விசயமின்னா தானே ஒன்னை ஊரே கூப்பிடும், அப்போ நான் இந்த ஊருக்காரன் இல்லயா? நீ இப்போ எங்க வீட்டுக்கு வா, பின்னாடி கொத்து வேலை பார்க்கனும், என்னாஏது பண்ணலாமின்னு நீயே வந்து பாத்து சொல்லு.”

“சொக்கப்பா , அப்பச்சி வீடு வரைக்கு போயாந்திறேன்... நீ இங்கன இரு, கஞ்சி குடிக்க சேந்தே வீட்டுக்கு போலாம்”

“ஏமலே, மாடுகண்டுக்கு தண்ணி காட்ட இருக்கிற எடத்தை எடுத்து ரூம்பு தடுக்கப்போறியா? அப்போ ஒன்னோட மாடுகள எங்கன கட்டிப்போடுவே?”

“இருக்கிறதே இம்புட்டு இடந்தானே சவடமாமு, மூத்த பயலுக்கு வேற வயசு முப்பதை தாண்டிருச்சு, அவனுக்கு அடுத்தமாசத்திலே கலியாணத்தை நடத்தி இந்த இடத்திலே வைச்சிரலாமின்னு பார்க்கிறேன். இப்போ பொழங்கிற இடம் பத்தாதிலே? பொண்ணு வேற ஆளாயிருக்கு.....”

“வெளங்கிருச்சு, ஆக இந்த இடத்திலே ரூம்பு தடுக்கத்தான் போறே? யாற கூட்டி கட்டப்போறே? மேலக்கால் பழனி பையன் மேஸ்திரி வேலைதானே பார்த்திட்டு இருக்கான், அவனை கூட்டியே முடிச்சிருவோமா? என்ன சொல்லுறே?”

“மாமு ஒனக்கு என்ன தோணுதோ செய்யி, நானு ஒன்னியும் சொல்லலை.”

“நானு அவன்கிட்டே பேசிட்டு சொல்லுறேன், இப்போ மணி என்ன ஏழா எட்டா.. இன்னோரம் வந்திருப்பான், அவனை போயி கையோட கூட்டியாந்து எம்புட்டு ஆகுமின்னு அவங்கிட்டே விசாரிச்சுபிடலாம்.”

“சவடப்பச்சி சவடப்பச்சி, ஒன்ன சொக்கப்பச்சி கடையிலே தேடிட்டு இருக்காங்க... என்னத்தையோ காணோமா, நீ எதுவும் பார்த்தியான்னு கேட்க ஒன்ன தேடிட்டு இருக்காங்க, வெரசா போ”ன்னு சொல்லிட்டு ஓடிப்போன சீனியாத்தா பேரனோட வேகவேகமாய் சொக்ககடைக்கு ஓடியாந்தான் சவடன்.

“வா மாமு, எங்கன அப்பிடியே நைசா நழுவி ஓடிப்போயிட்டே”ன்னு குத்தலாக கேட்ட சொக்கன் மகன் வேலுவின் முகத்தை பார்த்ததும் சவடனுக்கு பயங்கரமா இருந்தது.

“என்னப்பச்சி, என்னா சொல்லுறே? எங்கன நானு நழுவி போனேன், முத்தைய்யன் கூப்பிடன்னு அவன் வீட்டுக்கு போயிந்திருதேய்ன்.”

“அதுதான் மாமு, போறப்போ என்னத்த எடுத்துட்டு போனே?”ன்னு இன்னொரு பக்கம் சொக்கனோட மூத்த மவன் சாமிக்கண்ணு குதர்க்கமா கேட்டான்.

“ஏலேய்.. என்னாடாப்பே என்ன பேச்சு பேசுறீங்க? என்னத்த நான் எடுத்து போனேன், சொக்கா என்னாப்பே நடத்துச்சு இங்கன”

“என்னத்த அப்பன்கிட்டே குறுக்கு வெசரணையே போடுறே? நீ போனதிலேயிருந்து செஞ்சு வாங்கியாந்த கயித்து சங்கிலியை காணாம், கடைக்குள்ளே தேடு தேடுன்னு தேடியாச்சு, எங்கனயும் காணாம், அப்போ என்னத்த நினைக்கிறதுன்னு நீயே சொல்லு?”

“ஆத்தி, மடப்புர மாரியாத்தா, என்னா சோதனை இது? சாமி நானு என்னத்தயும் எடுக்கல’ப்பே! சொக்கா நீயாவது வாய தொறந்து சொல்லுப்பே”

“அதுவே பேச்சு மூச்சில்லாமே கெடக்கு, நீ பேச்சுவாக்குலே ஒன்னோட தொபையி மருமக கழுத்திலே இதேமாதிரி மாட்டனுமின்னு சொன்னியாமே, அதுக்குதான் எடுத்து வைச்சிருக்கீட்டியா?”

“வேலு பார்த்து நிதானமா பேசுப்பே, ஓரேடியா கொட்டிறாதே, சொக்கன் எதான்னுச்சும் சொல்லட்ட்டும், நானு பேசிக்கிறேன்”

“ஏலே சவடா, ஒன்கிட்டே சங்கிலிய காட்டிட்டு காகிதத்திலே தான் மடிச்சி வைச்சேன், ஆனா எங்கன போச்சின்னு தான் காணலை, ஆனா இந்த பயலுக தான் தேடி பார்த்தானுக, எங்க போச்சின்னு தெரியலை’டா’ன்னு கண்ணிர் விட்டு மூர்ச்சையாகினான் சொக்கன்.

“ஏலேய் வேலு அப்பனை பிடிடா, இந்த பெருச தூக்கி போட்டு மிதிச்சாதான் உண்மைய சொல்லும், ஏய்யா ஒன்னோட தராதரம் என்ன எங்க தராதரம் என்ன? கீச்சாதி’லே இருந்தாலும் ஒன்னையும் எங்கப்பன் மதிப்பு கொடுத்து வைச்சிருந்தான் இல்ல, எப்புறம் என்ன இந்த ஈனப்புத்தி”ன்னு வார்த்தைகளாலும் கைக்களிலும் வெளுத்தான் சாமிக்கண்ணு.

“அப்பே கண்ணு, நானு எடுக்கலை’ப்பே, எனக்கு எடுக்கனுமின்னு அவசியமும் இல்லப்பே. நல்லா தேடிப்பாருங்கய்யா”

“எல்லாம் தேடி பார்த்துட்டு ஒன்னை தேடி ஆளு அனுப்பினோம்.... அன்னனைக்கு கடைகண்ணிக்கு போயி மேவேலை பார்த்து கொடுத்து சம்பாரிச்சிட்டு இருக்கிற ஒம்பையன் எப்பிடிய்யா துபாயி போனான், இப்பிடிதான் அப்பன்கிட்டே தெனம் தெனம் பேச்சை கொடுத்து காச களவாண்டு போனீயா சொல்லு?”

“ஆத்தி, இப்பிடியெல்லாம் என்மேலே பழி போடாதேப்பே, காசு இல்லன்னா திங்காமே கூட செத்து போயிருப்போமே தவிர இந்த மாதிரியெல்லாம் செஞ்சுருக்க மாட்டேப்பே... என்னை நம்புப்பே, நான் எதையும் எடுக்கலை அய்யா, சாமி என்னை நம்புய்யா”


சவடன் கைகும்பிட்டு அழுதும் அதை காதிலே வாங்கிக்காத சாமிக்கண்ணு சவடனை இழுந்து போட்டு முதுகில் குத்தி சொல்லிரு சொல்லி’ன்னு அடித்து கொண்டுருந்தான், ஊரே கூடி என்ன நடக்குதுன்னு உள்ளுக்குள்ளே விசாரிச்சிட்டு அதுகளே அப்பிடியா சேதி’ன்னு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிதுக. சவடனை இழுத்து போட்டு தள்ளி படாதபாடு படுத்தி கொண்டிருந்தனர் சாமிகண்ணுவும் , வேலுவும் அவனை அங்க இழுந்து தள்ளுவதும், இப்பிடி தள்ளியும் அடித்து கொண்டிருந்ததில் மூலையில் போயி விழுந்தான் சவடன். மூலையிலே வடை, பஜ்ஜி தின்னு போட்ட இலை பொறுக்கும் சட்டியிலிருந்து விழுந்தது சங்கிலி பொட்டலம்.

“சாமிகண்ணுண்ணே, சங்கிலி இங்கன கெடக்கு, கருமம் இந்த எழவை பார்க்கமே விட்டோம் பாரு, இப்போ ஊரே வேடிக்கை பார்த்திட்டு கெடக்காருய்ங்க, இப்போ என்னத்த பண்ணி தொலைக்கிறது?”

“ஹிம் ஹிம் செவன்னு இரு, நான் பார்த்துக்கிறேன்”ன்னு வெசக்காரபயலுக ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசி என்னத்தயோ முடிவு எடுத்தானுக.

“ஆத்தி வெவரமான பெருசு, எச்சியிலை எடுத்து போடுற சட்டியிலே போட்டு வைச்சிருக்கு பாருங்களேன்”ன்னு தீடீரென்னு அந்த சங்கிலியை பார்ப்பது போலே கத்தினான் சாமிகண்ணு. ஊருசனமெல்லாம் அட ஆமாம் இங்கன தானே கெடந்துச்சு, அதுக்குள்ளே ஏய்யா அப்பச்சியை போட்டு அடிச்சீங்க?ன்னு கேட்ட ஒருத்தனை பார்வையாலே மொறைச்சி அப்புறப்படுத்தினான் வேலு.

“வேலு , அப்பன் மூஞ்சிலே தண்ணி தெளிச்சிவிடுடா, சங்கிலி கெடச்சிட்டுச்சுன்னு சொல்லு, இந்த ஆளு மொகத்திலேயும் தண்ணி தெளிச்சி விட்டு எழுப்பு, வாங்குன அடியிலே சுருண்டு போயி கெடக்கு.”

“அண்ணே, அப்பன் எந்திருக்க மாட்டேமே மருகுதுண்ணே, என்ன பண்ணலாம்?”

“அப்பிடியே மெதுவா தோளிலே போட்டு வீடு வரை தூக்கியாந்திரு, இந்தாளை நானு அப்புறப்படுத்திட்டு கடையே சாத்தியாறேன்”

“சாமிண்ணே, சவடமாமு அவமானத்திலே வீடு போயி என்னத்தயாவது செஞ்சுக்கப்போகுதுண்ணே, அப்புறம் நாமே கஷ்டப்படணும்”

“ஏலேய் நீ என்னாத்துக்கு பயப்படுறே? அது அந்த மாதிரி செஞ்சுக்கிருச்சுன்னா நமக்கு தான் நல்லது, செஞ்ச தப்பு வெளியே தெரிஞ்சுருச்சி, அதுதான் இப்பிடி பண்ணிக்கிருச்சுன்னு நாமே தப்பிச்சுக்கலாம், அதுக்காக அவனுககிட்டே நாமே தோக்கமுடியுமா? நம்ம தராதரம் என்னத்துக்கு ஆகுறது?”

“ஹிம் நீ சொல்லுறதும் சரிதான், ஊருக்காரயங்க சவடமாமே கைதாங்கலா தூக்கிட்டு போறனுவே, வா நாமே அப்பிடியே கெளம்பிக்கோவோம்.”

வீட்டில் சவடனை போட்டதும் பர்வதப்பத்தா’கிட்டே எல்லாத்தையும் சொன்னார்கள். அதுவரைக்கும் அமைதியாய் வீடு வரை வந்த சவடன் மொணங்க ஆரம்பித்தான்.

“சொக்கா... என்னை நம்புப்பே நான் எடுக்கல, என்னை பெத்த ஆத்தா மேல சத்தியமா எடுக்கலை’ப்பே, என்னை நம்பு”

“ஏண்டா எருமையை போட்டு அடிக்கிறமாதிரி அடிச்சிருக்காங்க, ஊருக்காரயங்கே நீங்க செவன்னேன்னு வேடிக்கை பார்த்துட்டு கெடந்தீங்களா?”

“எங்கள எங்க கேள்வி கேட்கவிட்டானுக, அவனுகளா பேசிக்கிட்டு அடிச்சி போட்டானுக”

ஏஞ்சாமி ஊருக்குன்னா நீ ஓடியாடி வேலை பார்ப்பியே, இங்கப்பாரு ஒனக்குன்னு ஒன்னு ஆகியும் இப்பிடி பேசிட்டு கெடக்கானுக”ன்னு கண்ணீர் மல்க சவடனுக்கு ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தாள் பார்வதத்தா.

துக்கம் கொண்ட ராத்திரி நகரவேமாட்டேன்னு அடம் பிடிச்ச அழுத கணக்கா இருட்டி கெடந்த நேரத்திலே ஒருத்தன் கண்ணு மண்ணு தெரியாமே சவடன் வீட்டுக்கு ஓடியாந்தான்.

“ஆத்தா, அப்பச்சி, வீடிக்காத்தலே சொக்கய்யா விஷத்தை குடிச்சிருச்சி, இப்போதான் வைத்தியர் வந்து மாத்து மருந்து கொடுத்திருக்காங்க, சவடப்பச்சி ஒன்னை பார்க்கனுமின்னு சொக்கய்யா கண்ணீர் விட்டு அழுவுதுய்யா”

சேதி கேட்டு உசுரு போற வேதனையிலும் ஓட்டமாய் ஓடி சொக்கன் வீட்டையடைந்தான் சவடன்.

“அப்பே, என்னோட ராசா, எதுக்கு இந்த மாதிரியெல்லாம் பண்ணே? இது எனக்கு நடந்த அவமாணந்தானே, நீ எதுக்கு ஒனக்கு தண்டனை கொடுத்துக்கிட்டே?”

“இல்லடா, சவடா, என்னோட சவடய்யன் அதெல்லாம் செய்யமாட்டான், காசா இறைச்சு போட்டுருந்தாலும் ஒத்த பைசா எடுக்கமாட்டான்னு என்னாலே சொல்லமுடியலை பார்த்திய்யா? என் பொருள் காணாமே போனதும் ஒன்னையும் சந்தேகத்துக்கு இடமா ஆக்கிட்டேனே? அதுவுமில்லாமே கண்ணுமண்ணு தெரியாமே ஒன்ன வேற போட்டு அடிச்சி போட்டுருக்கானுக இந்த காட்டுமெரண்டி பயலுக, அதெ தடுக்கக்கூட சத்திலேமே போயிட்டேன் பாரு..... “ன்னு ஈனஸ்வரத்திலே அழுதான் சொக்கன்.

“இல்ல ஐயா, நீ சந்தேகப்பட்டுக்கிறது உண்மை இல்லையே, ஏதோ சன்னமா தோணிருக்கு அவ்வளோதானே? ஆனா என்னந்தான் அந்த பயலுக அடிச்சாலும் எனக்கிட்டே இருந்த ஒத்த வார்த்தை நான் எடுக்கலை நான் எடுக்கலை’கிறதே தவிர வேற ஒன்னும் இல்லிய்யா?”

“பொருள் கிடைச்சாலும் ஒனக்கு எனக்கும் போன மானமருவாதியை மீட்டெடுக்க முடியுமா? நீ குத்தமில்லாதவன்னு நிருபிச்சிட்டே, ஆனா நான் பண்ணின தப்புக்கு நாந்தானே தண்டனை கொடுத்துக்கனும், அதுதான் சத்தமில்லாமே செத்து போலமின்னு பூச்சிமருந்தை குடிச்சிட்டேன், ஆனா காளியத்தா எப்பிடியோ பார்த்து கத்திப்பிட்டா”

“ஆத்தி, ஒனக்கு எதுக்குய்யா இந்த தண்டனையெல்லாம்? பயலுக விவரம் தெரியாமேதான் அடிச்சானுக, பெத்தபிள்ள பிறந்தோப்போ நடந்து பழகிறோப்போ தூக்கி கொஞ்சுனோமின்னா நெஞ்சிலே மிதிஞ்சா வலிக்குமா என்ன? அதுதான் மாதிரிய்யா எனக்கு வலிஞ்சது அவ்வளோதான்”

“என்னோட சாமி, நான் இப்போ படுத்திருக்கிற நிலமையிலே இருந்து எந்திரிச்சு நிக்கனுமின்னு ரொம்ப ஆசையா இருக்குடா சவடா, ஒன்னோட காலிலே நெடுஞ்சாண் கிடையா விழுந்து கெடந்து மன்னிப்பு வாங்கினுமின்னு உசுரு துடிக்கிதுடா சவடா’ன்னு கதறியழுத சொக்கனை கட்டி தானும் கண் நனைந்தான் சவடமுத்து.

பூமி நனைக்க வானமும் அந்த தருணத்தைதான் எதிர்பார்த்து கொண்டு இருந்தது.