Tuesday, November 14, 2006

இது ஒரு "எதிர்வினை" பதிவு

For every action, there is an equal and opposite reaction....

சர் ஐசக் நீயூட்டன் என்ற விஞ்ஞானி சொல்லிருக்காருன்னு பள்ளிக்கூடத்திலே படிக்கிறோப்போ பாடபொஸ்தகத்திலே படிச்சேன். அதுக்கப்புறமா அதே பத்தியே சுத்தமா ஞாபகமே இல்லாமாலே போயே போச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தப் பதிவே படிச்சேதும் இந்த வெள்ளைக்கார தொரை கண்டுப்பிடிச்சு சொன்ன அந்த "எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு"க்கிற தத்துவம் தீடீரென்னு மண்டையிலே பல்பு எரிஞ்ச கணக்கா வந்திருச்சு.

அவரு சொன்ன அசைவப்பதிவிலே கொஞ்சுண்டுதான் அசைவம் இருத்துச்சு, ஆனா மக்கா இது பூராவுமே அசைவம்தான், அப்புறமா படிச்சுப் பார்த்துட்டு என்னா இது பூராவும் கவிச்சியா இருக்குது நீங்க எதிர்வினை கொடுக்கப்பிடாது ஆமா... அதுக்குதான் மொதல்லே உஷர்ரா சொல்லிக்கிறேன். இதுப்பூராவுமே அசைவம்தான், என்னாடா திரும்ப திரும்ப சொல்லுறேன்னு பார்க்காதிங்க... இது எங்கூரு ஸ்டைல்ப்போய்.


எங்கூருக்கு மதுரை, மருதை.மதுரோய்,அப்பிடின்னு நிறைய பேரு வச்சு சனங்க கூப்பிடுவாங்க, அதுக்கும் காரணம், பெருமை,நாட்டுப்புறகதைகள், புராணக்கதைகள் இருக்குங்கய்யா!. இன்னொரு பெருமையும் இருக்குங்க ,அதுஎன்னானா எங்கே எந்த இடத்திலே எந்தநேரத்திலேயும் வேணுமின்னாலும் வயித்துக்கு போடுக்கிற இரை ருசியா கிடைக்குமுங்க. தூங்கநகருக்குள்ளே எங்கே சுத்துனாலும் ஒரு முக்குச்சந்துலேயாவது ஒரு பொரட்டா கடையாவது, பாட்டி இட்லிக்கடையாவது இருந்துரும். அதிலே கொஞ்சமா எனக்குத் தெரிச்சே நல்லா ருசியா இருக்கிற மூணுக்கடையே சொல்லுறேன்.

இப்போ பஸ்ஸ்டாண்டை மாத்திட்டாலும் மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு வர்றே பெரியார் பஸ்ஸ்டாண்ட்க்கு வந்துதான் ஆகணும்.அதுனாலே அதை மையமா வச்சு ஹோட்டல் வழியே சொல்லுறேன். எப்போவது ஊருப் பக்கம் வர்றப்போ இதெயெல்லாம் ஞாபகம் வச்சு கடைக்கு போயி டேஸ்ட் பண்ணிப் பார்த்துருங்க!!!!

கறித்தோசை:- பேரே கொஞ்சம் வித்தியசமா இருக்கா. இது சிம்மக்கல் கோனார் மெஸ்ஸிலே கிடைக்கும். அது எங்கே இருக்குன்னா மதுரை பஸ்ஸ்டாண்ட்க்கு அடுத்து ரயில்வே ஸ்டேசன்.. அதே ஒட்டி போகிற மெயின் ரோட்டிலே அப்பிடியே நடந்திங்கன்னா அடுத்ததா போஸ்ட்டாபீஸ் அப்பிடியே நெட்டா பிடிச்சு வந்துருக்குங்க, எங்கயும் வளையவேணாம், ஒரே நெட்டா நடத்துறே வேண்டியதுதான். கடைசியா சிம்மக்கல் ரவுண்டாணாக்கிட்டே வந்துருவீங்க. அங்கே நாலு ரோடு பிரியும் அதிலே தமிழ்ச்சங்க ரோட்டுக்கு அடுத்த ரோட்டிலே சென்ட்ரல் லைப்பேரிக்கு எதிர்த்தாப்பலே கோனார் மெஸ் இருக்கு.

அங்கே போயி உட்கார்த்திட்டு ஒரு கறித்தோசை ஆர்டர் பண்ணிருங்க. அது எப்பிடி இருக்குமின்னா ஆனியன் தோசைலே ஆனியன்க்கு பதிலா கறிவருவலே சும்மா தளதளன்னு கொழம்போட இருக்குமில்லே அதே அப்பிடியே தோசைலே போடுருப்பாங்க. சும்மா அடிப்பாகம் நல்லா செவக்க வெந்தவுடனே அதே திருப்பிப் போட்டு தோசமாவும்,கறிவருவலும் ஒன்னா சேர்ந்து வெந்து, ஆகா சூப்பரப்பு. சட்னி,குருமா எதுவும் இல்லேமே ஹார்லிக்ஸ் விளம்பரத்திலே சொல்லுறமாதிரி அப்பிடியே சாப்பிடலாம்.

வெங்காயக் குடல்:- இதுவும் நல்லா டேஸ்டியான சமாச்சாரம்தான். இது எங்கேன்னா யானைக்கல் பஸ்ஸ்டாப்க்கு முன்னாடி இருக்கிற எதிர்த்து.எதிர்த்து இருக்கிற ரெண்டு ஹோட்டலேயும் கிடைக்குமுங்க. சின்னவெங்காயத்தே பொடிபொடியா நறுக்கி, ஆட்டுக்குடலே ஃபிரை பண்ணிக் கொடுப்பாங்க, அப்பிடியே நாலு பொரட்டாவே பிச்சுப்போட்டு குழம்புக்களை ஊத்தி இதேயும் சேர்த்து சாப்பிடமின்னா ஆஹா சொகமய்யா!!!!

ஈரல் மிளகுரோஸ்ட்:- ஹி ஹி இதே எழுதுறப்போ எனக்கே எச்சில் ஊறிருச்சுங்க. இது தெற்குமாசி வீதி சின்னக்கடைவீதிலே இருக்கிற ராபியா மெஸ்ஸிலே கிடைக்கும். நாலு பெசல்பொரட்டா, பெப்பர் ஈரல் ரோஸ்ட்ன்னு ஆர்டர் சொன்னா போதும், சும்மா கும்முன்னு சாப்பிட்டு வந்திரலாம், ரோஸ்ட்லே என்னா விஷேமின்னா ஈரலே மொத்தல்லே வேகவைக்கிறப்போ வெறும் உப்பு மட்டும் போட்டு வேகவைச்சு அப்புறமா தோசக்கல்லிலே அதெ பொடி,பொடியா நறுக்கி, அதிலே நிறைய பெப்பரை போட்டு வறுத்து அது பதமா கொஞ்சக்காணு எண்ணையே ஊத்தி அதே அப்பிடியே வாழையிலைலெ கொண்டுவந்து கொடுத்தவுடனே அதிலே ஒரு துண்டை எடுத்து சுடசுட வாயிலே போட்டா ஆகா.....


ருசியா சாப்பிடுறவங்களுக்கு இன்னும் ஹோட்டல் நிறைய இருக்கு.. அதே அடுத்த பதிவிலே போடுறேன். ஆனா கோவிஞ்சுக்காதிங்க, அது சைவம்தான். மதுரையிலே இருந்துட்டு ஜிகர்தண்டா, தெற்குமாசி வீதி சுக்குமல்லி காப்பி, மாடர்ன் ரெஸ்டாரண்ட் வெண்பொங்கல் பத்திச் சொல்லலேன்னா செத்து சொர்க்கத்துக்கு போனாலும் எனக்கு சோறுத்தண்ணி கூட கிடைக்காது. அதே அடுத்தப் பதிவிலே சொல்லுறேன்.