Thursday, November 29, 2007

காமக் கடும்புனல்

ஆபிஸிலே லேட்டாகி வெறுப்போட உச்சக்கட்டத்துக்கு வந்து பைக் ஸ்டார்ட் செய்ய வந்தால் டயரு பஞ்சராகி கிடந்தததில் வாழ்க்கையை வெறுத்து போயி ஆட்டோ'விலாவது வீட்டுக்கு போலாமின்னு பேஸ்மண்ட்லிருந்து வெளியே வந்தான் முருகேஷன். பெங்களூரூ வாழ் IT கூலிகளுக்கு இருக்கும் அதே அழகு களையான முகத்தை வைத்து கொண்டு MG ரோட்டிலில் நின்று கோரமங்களா பர்த்தீரா'ன்னு கெஞ்சி கொண்டிருந்தான். மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து ஒன்பது மணி வரையும் இந்த ஆட்டோகாரர்கள் செய்யும் அலும்பை நினைத்து கொண்டு ஒவ்வொருத்தராய் கேட்டும், ஒருத்தனும் நிக்காமால் அதுவும் நின்றுக்கூட எங்க போகனும் கேட்காமலே கண் புருவத்தை உயர்த்தி கேட்டு அங்கயா? அங்க நான் வரலை'கிற மாதிரி ஒவ்வொரு ஆட்டோவா நகர்ந்து கொண்டுருந்தது. மணி வேறு எட்டு தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.இனிமேல் மேன்சன் போயி குளித்து சாப்பிட கெளம்ப ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகும், இப்போவே பசியோட இருக்கோமே? பேசாமே சாப்பிட்டு வந்து ஆட்டோ பிடிக்கலாமா'ன்னு யோசித்து கொண்டிருந்த வேளையில் "என்னா சார் இங்கன நிக்கிறிங்க, ரூம்'க்கு தானே போறீங்க, கையிலே ஹெல்மெட் வைச்சிட்டு ஆட்டோ கேக்கீறீங்க? பைக் ரிப்பேர்'ஆ? வாங்க நானும் ரூம் தான் போறேன், ஆட்டோவிலே போகலாம்'ன்னு மேன்சன் இம்சை FM கூப்பிட்டதும் முருகேசனுக்கு அப்பாடா என்றிருந்தது.

கோரமங்களாவில் அமைந்துள்ள பேச்சிலர் மேன்சனில் இரண்டாவது மாடியில் இரண்டு பேர் தங்கும் அறையில் இந்த இம்சையோடு தங்கும் அபாக்கிய நிலைமை முருகேஷனுக்கு ஏற்பட்டு மூணுவாரம் ஆகுது. ரூம் மேட் அரவிந்த் அமெரிக்க ஆன்சைட் முணு மாசந்தாண்டா'ன்னு சொல்லிட்டு போனதிலே இருந்து இந்த இம்சைதான் கூட தங்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் மேன்சன் ஓனரால் வந்து அறிமுகப்படுத்தபட்ட போது மிகவும் அமைதியாக இருந்த மனுசனின் சுயரூபம் மறுநாள் நைட்தான் தெரிந்தது.புல் மப்பில் வந்து உங்க பேரு முருகேஷனா, சந்திரமுகியிலே ரசினி வடிவேலுவே கூட முரூகேஸா'ன்னு கூப்பிடுவாரு, நானும் அப்பிடியே ஒங்களை கூப்பிடவா'ன்னு கேட்டதும் முருகேஷனுக்கு பத்திக்கொண்டு வந்தது. பேசமா தூங்குங்க, சும்மா டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு கத்திவிட்டு ரூம் கதவை சாத்திவிட்டு தூங்கினதுதான் இம்சைக்கிட்டே பேசிய கடைசி முறை.

"செல்வம், நீங்க எங்க இங்கிட்டு வந்தீங்க"

"ஓ, நான் என்ன வேலை பார்க்கிறேன்னு கூட ஒங்களுக்கு தெரியாது'லே? நான் எலக்ட்ரிசியன்'ஆ இருக்கேன், இங்க ஊரெல்லாம் பிளாட் கட்டிக்கிட்டு இருக்கிற அந்த பில்டர்ஸ்'கிட்டே காண்டாரக்ட் வொர்க் பண்ணுறேன், அல்சூருலே ஒரு வேலை, ஆபிஸிலா வந்ததுனாலே ஆட்டோதான், எனக்கு என்னோமோ ஊரே தெரியாதமாதிரி கோரமங்களா போறதுக்கு MG ரோடு வழியா போறான் இந்த ஆட்டோகாரன்'ன்னு சொன்ன செல்வத்தை ஒரு மாதிரியாக பார்த்தான் ஆட்டோகாரன்.

"ஆஹா, இம்சை தேவையில்லாமே பிரச்சினையே கிளப்புதே? நீங்க சாப்பிட்டாச்சா'ன்னு பேச்சுக்குதான் கேட்டான் முருகேஷன்.

"இல்லீங்க, நான் டெய்லி ரவுண்ட் விடாமே சாப்பிடுறது'லாம் இல்ல, நம்ம ரூம்கிட்டேயிருக்கிற பார்'லே குவார்டர் வாங்கி சாத்திட்டு தான் ஏதாவது சாப்பிடனும், தம்பி நீங்க தண்ணியடிப்பீங்களா?"

"ஹ்ம்ம் நான் டீ டோட்டலர்'னு சொல்லி இவனுக்கு என்னத்த விளங்க வைக்கிறதுன்னு ஹிம் அடிப்பேன் அடிப்பேன்'ன்னு வெறுப்பாக சொன்னான் முருகேஷன்.

"அப்போ இன்னிக்கு போலாமா? இந்தா நம்ம ரூம் வந்தாச்சு, வாங்க அப்பிடியே அடிச்சிட்டு உள்ளாறே போயிறலாம்'ன்னு கூப்பிட்ட இம்சைசெல்வத்தை அனுப்பி வைத்து விட்டா போதுமிடா சாமி'ன்னு பக்கத்து ரூம் மல்லுவிடம் சொல்லி பார்சல் வாங்கி வரச்சொல்லி குளித்து சாப்பிட்டான், மணி பதினொண்ணை தாண்டிய பொழுதில் புல் மப்பில் உள்ளே நுழைந்து இம்சை.

"தம்பி, என்ன இன்னும் தூங்கலையா? என்னமோ படிச்சிட்டு இருக்கீங்க போலே? ஹிம் பெரும் படிப்பு படிச்சவக, இங்கிலிசு பொஸ்தகமெல்லாம் படிக்கீறீங்க, நாங்கெல்லாம் சாதாரணமான ஐடிஐ தானே? எதாவது நானெல்லாம் படிக்கிறமாதிரி பொஸ்தகம் படிக்க கொடுங்களேன்'ன்னு கேட்டு புக் செல்ப்'ஆக இருந்த டிரெஸ் வைக்கும் செல்ப்'ஐ நோண்ட ஆரம்பித்தது இம்சை.

"என்ன தம்பி, பொஸ்தகம் பேரே மார்க்கமா இருக்கு, என்ன காமக் கடும்புனலா? அப்பிடின்னு ஒரு பொஸ்தகத்துக்கு பேரா'ன்னு போதையில் இருந்தாலும் தெளிவாக புத்தகத்தை படிக்க ஆரம்பித்தது.

"ஹிம் படிச்சி பாருங்க, சில கவிதைகள் ரொம்பவே ரசிக்க வைக்கிற அளவுக்கு இருக்கும்"

"தம்பி,புணராமல்'ன்னா என்ன அர்த்தம்'ன்னு கேட்ட செல்வத்தை ஒரு மாதிரியாக தான் பார்த்தான் முருகேஷன்.

"ஹலோ, அது என்னான்னு தெரியாதா? அது சுத்த தமிழிலே மேட்டரு'ன்னு அர்த்தம்."

"ஹிம் அப்போ சரி தான்"

"எது?"

அத்தனை வேதனைகளுக்கும் ஒரே காரணம்,
புணராமல் இருக்கமுடியவில்லை என்ற நிலைதானே.

"இந்த கவிதைதான்"

"செல்வம் ஒங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா? ஒங்க வொய்ப் எங்க இருக்காங்க? நீங்க எதுக்கு இங்கயீருக்கீங்க?"

"ஹிம் ஆகிருச்சுப்பா, ஆகி ஒரு வருசத்துக்கு மேலே ஆக போகுது, நான் எங்க சொந்த ஊரு சேலத்திலே EB'லே காண்ட்ராக்ட்'லே லேபரா இருந்தேன், வினைக்குனே எங்க அக்கா மவளே கலியாணம் பண்ணி வைச்சாங்க, மொத ராத்திரி அன்னிக்குதான் தெரிஞ்சது, அவ யாரோயோ லவ்வு பண்ணுறான்னு என்னை தீடிரென்னு அவளுக்கு கட்டிட்டாங்கன்னு!. போயி தொட்டா அழுவுறா, இப்போவே செத்து போயிருவேன்னு அழுது சாதிக்கிறா, அதுக்கு மேலே நாமே என்ன செய்யமுடியும்? கவிதையிலே இருக்க'கிற வார்த்தை தவிர்த்து வாசிச்சா எனக்கு சரியா இருக்கும்'னு போதையிலே இருந்தாலும் தெளிவாக பேசிய செல்வத்தை வெகு ஆச்சரியமாக பார்த்தான் முருகேசன்.

"சரி அதுக்கப்புறம் சமாதானம் ஆகலயா?"

"எங்கே நான் அங்கயிருந்தா இதிலே சண்டை வருதுன்னு நானும் இந்தா ஊரை விட்டு வந்து நாலு மாசமா போவுது, வாரம் தவறாமே போயி பார்த்துட்டு வந்துறேன், எங்க அப்பன் ஆத்தா'க்கு தான் ஏதோ சந்தேகம் வந்து என்னை மாதிரியா பார்க்கிறாங்க, ஆனா எம்பொண்டாட்டி'க்கு தான் புரியவே மாட்டங்கிது'னு சொன்ன செல்வத்தின் கலங்கிய கண்களை கவனித்தான் முருகேஷன்.

"சரி செல்வம், இப்போ தூங்குங்க, வேற எதுவும் பேசவேணாம்"

அடங்காத காமத்துடன் தவித்துக்கொண்டிருக்கிறேன்
உனக்கோ அழ்ந்த அயர்ந்த உறக்கம்
விடிந்ததும் எப்படியாவது உன் வாயைப் பிடுங்கி
ரெண்டு அறை விடுவேன்

"இந்த கவிதைய படிச்சதும் நானெல்லாம் எத்தனி ரெண்டு அறை விட்டுருக்கனும் தெரியுமா தம்பி'ன்னு காலையில் குளித்து வந்ததும் கேட்ட செல்வத்தை பார்த்ததும் மிகவும் பரிதாபமாக இருந்தது, வயது முப்பது தாண்டி மூணு - நாலு வருசம் இருக்குமுன்னு தாடையிறக்கதிலும், காதுக்கு மேலே வெள்ளி முடி துளிர்ந்ததிலும் தெரிந்து கொண்டான் முருகேஷன், அதுவும் இந்த புக்'ஐ வரிக்கு வரி படித்து கொண்டுருக்கும் செல்வத்தை பத்தி என்ன நினைப்பதுமின்னு குழப்பமடைந்தான்.

"தம்பி நேத்து நைட் போதையிலே ஏதுவும் அதிகமாக பேசிட்டோனா?"

"அதெல்லாம் இல்ல செல்வம், ஒங்க கஷ்டத்தை சொன்னீங்க அவ்வளவுதான்'ன்னு பரிதாப பார்வையோடு சொன்னான் முருகேஷன்.

"சரிப்பா, நான் வேலைய முடிச்சிட்டு சாயங்காலமா ஊருக்கு போயிட்டு திங்கக்கிழமை'லே வாறேன்னு சொல்லிவிட்டு செல்வம் கிளம்பியதும் தானும் அலுவலகம் செல்ல வேண்டி கழுத்திலே மாட்ட வேண்டிய பட்டை,பள பள'ன்னு ஷீ, சாயம் போன கலரிலே டிரெஸை மாட்டிக்கொண்டு ஆட்டோவுக்கு தவம் கிடைக்கலான்.

"ஹலோ, அரவிந்த் நம்ம ரூம்'லே ஒரு ஓட்டை FM இருக்குன்னு சொன்னேன்'லே, அது கதையே நேத்து நைட் சொன்னுச்சு, அவரை பார்க்கவே பரிதாபமா இருக்குடா"

"ஹிம், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம்"ன்னு அரவிந்த் அமெரிக்கவில் இருந்து கொண்டு செல்வத்திற்கு பரிதாபப்பட்டான்.

திங்கக்கிழமை விடிந்த பொழுதிலே ரூம்க்கு வெளியே சத்தம் கேட்பதை கேட்டு கண் விழிந்து கதவே திறந்து பார்த்தான் முருகேஷன், செல்வந்தான் பக்கத்து ரூம் மல்லுவிடம் மல்லு கட்டி கொண்டிருந்தான்.

"செல்வம், நீங்க மொதல்ல உள்ளே வாங்க, எதுக்கு அவன்கிட்டே சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க?"

"தம்பி, ஊருலே இருந்து வந்ததும் இவன் மூஞ்சியிலே முழிச்சிட்டோமேன்னு எப்பிடியிருக்கே சேட்டா'ன்னு கேட்டேன், என்னாமோ என்னை விசித்திர பிராணியை பார்க்கிறமாதிரி பார்த்துட்டு குடிகாரன், லூசு மாதிரி உளறவன்'ன்னு மாதிரி மலையாளத்திலே முணங்கிட்டு போறான், எனக்கு என்ன மலையாளமா தெரியாது?"

மறுபடியும் செல்வம் ஊருக்குள் போயி பிரச்சினைய வளர்த்து வந்தது தெரிந்தது, அதுதான் அந்த கோபத்தை இங்கே காட்டிக்கொண்டிருக்கிறார் எனவும் புரிந்து கொண்டான்.

"சரி பஸ்'லே வந்த அலுப்பு இருக்கும், கொஞ்சம் நேரம் தூங்குங்க, மணி ஆறுதானே ஆகுது, வேலைக்கு போறதுக்கு இன்னும் டைம் இருக்குலே?"

"நீங்க தூங்குங்க தம்பி, நான் பொஸ்தகத்தை படிச்சிட்டு இருக்கேன்'னு காமகடும்புனலை தூக்கி வைத்து வாயில் முணங்கிட்டு இருந்தான் செல்வம்

ஜனனத்தில் உருத்திரண்டு, மணத்தில் ஊர் திரண்டு
இல்லறத்தில் உறவு திரண்டு, துறவறத்தில் அறிவு திரண்டு
மரணத்தில் தூர்ந்து...

இரவு அலுவலகம் முடிந்து அறைக்கு திரும்பும் பொழுது வாசலில் எதிர்ப்பட்ட மல்லு ஒங்கட ஆளு ரொம்பவே குடிச்சிட்டு ரூமிலே சத்தம் விட்டுருக்கு, என்னாண்ட கேளுங்கோ'ன்னு அழகு தமிழில் சொன்னதும் விருவிருவென படியேறி ரூம்'க்குள் ஓடினான்.அங்கே கண்ணீர் ஒழுக சரியான போதையில் தனக்கு தானே செல்வம் பேசிக்கொண்டுருந்தான்.

"செல்வம் என்னாச்சு, ஏன் இப்பிடி பண்ணிட்டு இருக்கீங்க?"

"ஆமாம் தம்பி, தப்பு பண்ணிட்டேன், நேத்து வீட்டிலே என் பொண்டாட்டிய நினைச்சிட்டே எங்கம்மா எங்கப்பா எல்லாரையும் கண்டமேனிக்கு திட்டிட்டு வந்துட்டேன், அந்த நேரமா வந்த அக்காவை கூட பயங்கரமா திட்டிட்டேன், அவங்களுக்கு என்னோட வேதனை தெரியாது, எதுக்கு திட்டினேன்னும் தெரியலை, என்ன சொல்லிலாம் திட்டினேன்னும் தெரியலை'ன்னு அழுது கொண்டே சொன்ன செல்வத்தை நினைத்து இரக்கப்பட்டான் முருகேஷன். இந்த சம்பவத்திற்கு பிறகு தினமும் போதை உச்சக்கட்டத்தினுடே ரூம்'க்குள் வந்த செல்வத்தை ஒன்றும் சொல்லவே இல்லை. போதையிலும் என்னோட மனசை புரிஞ்சுப்பா,அவளுக்காக தான் எதுவும் இன்னமும் செய்யமே இருக்கேன்'ன்னு சுயபட்டயம் வாசிச்சு கொண்டே இருப்பார்.

"ஹலோ, முருகேஷனுகளா, நானு செல்வராஜ் சம்சாரம் பேசுறேங்க, கொஞ்சம் அவர்கிட்டே போனை கொடுக்கீறிங்களா'ன்னு மொபைலில் கால் செய்த செல்வம் மனைவியிடம் அவர் இன்னும் ஆபிஸிலே இருந்து வரலை, வந்தா ஒங்க பக்கத்து வீட்டு நம்பருக்கு கால் பண்ண சொல்லுறேன்'னு போனை துண்டித்தான். அடுத்த அரை மணி நேரத்தில் மப்பில் வந்த செல்வமிடம் சொன்னதும் ஏன் போன வாரம் போயி கொடுத்துட்டு வந்த காசு தீர்ந்து போச்சா'ன்னு அவளே திரும்ப பண்ணட்டும்'ன்னு பெட்'லே போயி படுத்துறங்கி விட்டான் செல்வம்.

அடுத்து இரண்டு நாட்களாக செல்வத்தை காணாத முருகேஷன் எப்பிடியோ செல்வம் சம்சாரம் அவரை போனிலே பிடிச்சு ஊருக்கு வரசொல்லிருச்சு போலே? இந்தாளு ஊருக்குள்ளே பண்ணிட்டு வந்த கலாட்டா'விலே குடும்ப பிரச்சினை எதுவும் வந்திருக்கும், அதுதான் அங்க போயிட்டாருன்னு தனக்கு தானே நம்பிக்கொண்டிருந்தான் முருகேஷன், அடுத்த இரண்டு தினங்களுக்கு பிறகு தீடிரென்னு நைட் பத்து மணிக்கு போதை இல்லாமல் வந்த செல்வத்தை பார்க்கவே மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

"என்ன செல்வம், சொல்லாமே கொள்ளாமே எங்க போயிட்டிங்க?"

"ஆமாம் தம்பி, அன்னிக்கு அவ போன் பண்ண இல்ல? எங்கம்மா'வுக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லையாம், அதுதான் மறுநா காலையிலே நான் வேலை பார்க்கிற சூப்பிரெண்ட்'கிட்டே மறுக்கா போன் பண்ணி சொல்லியிருக்கா, நானும் ஊருலே போயி நாலு நாளு இருந்துட்டு வந்தேன், தம்பி இன்னொன்னு நான் எங்க ஊருக்கே போகப்போறேன்ப்பா, இந்த வேலையெ விடப்போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன், அவங்க நாளைக்கு ஒரு நா வேலைய முடிச்சிட்டு காசை வாங்கிட்டு கிளம்ப சொல்லிட்டாங்க'ன்னு சொன்ன செல்வத்தை வெகுவான ஆச்சரியத்தோடு பார்த்தான் முருகேஷன்.

"தம்பி நீங்க கேட்க வர்றது எனக்கு தெரியுது, என்னோட பொண்டாட்டி புரிஞ்சுக்கிட்டாப்பா!! நான் இவ்வளவு நா அமைதியா இருந்ததுக்கு பலன் கிடைச்சிருச்சு, அப்பிடியே இன்னிக்கு நைட் வந்து ஒங்கக்கிட்டெ சொல்லிட்டு காலையிலே போறப்பவே பேக் தூக்கிட்டு வேலைக்கு போயி எல்லாத்தையும் முடிச்சிட்டு ஊருக்கு கிளம்புறேன், அப்புறம் இன்னொன்னு இந்த புத்தகத்தை நான் எடுத்துக்கலாமா'"

"ஓ தாராளமா எடுத்துக்கோங்க! நல்லப்படியா வாழ்க்கைய ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துக்கள்"ன்னு சொன்னதும் செல்வத்துக்கு பெருமை பிடிபட வில்லை. நைட் கொஞ்சம் நேரமும் தன்னுடைய படிப்பு, அதற்கப்புறம் வேலை, எப்பிடி கல்யாணம் நடந்தது எனவும் சொல்லிவிட்டு வீட்டு அட்ரஸ் குறிச்சு வைச்சுக்கோங்க, கட்டாயமா ஊருக்கு வரனுமின்னு தூங்கிபோனான் செல்வம். அதன்பின்னர் தன்னுடைய வழக்கமான அலுவலில் எல்லா விஷயங்களுக்கும் மறந்து போனான் முருகேஷன். ஆறு மாதங்களுக்கு பிறகு தன்னுடைய டீம் மேட் ஒருத்தன் கலியாணம் சேலத்தில் நடக்கும் சமயத்தில் செல்வத்தையும் பார்த்துட்டு வரலாமின்னு அவன் கொடுத்து சென்ற அட்ரஸ் காகித்தை எடுத்து வைத்து கொண்டு கல்யாணம் முடிந்ததும் செல்வத்தை தேடிப்போனான். சேலத்தின் நகரை விட்டு கொஞ்சம் தள்ளி வெகு சாதரண குடியிருப்பு பகுதியில் அவன் வீடு கண்டுபிடிக்க கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது.

"செல்வம் அண்ணா? செல்வம் அண்ணா'ன்னு வீட்டுக்கு வெளியே நின்னு சத்தம் விட்ட முருகேசனை மெதுவா எட்டி பார்த்தாள் வயதான பெண்மணி.

"அம்மா நானு செல்வம் பெங்களூரூலே தங்கியிருந்தப்போ கூட தங்கியிருந்தேன் என்னோட பேரு முருகேஷன்'ன்னு சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டான்'

"ஓ நீங்கதானா தம்பி அது, வாங்க உள்ளுக்குள்ளே என தீடீரென்னு கண் கலங்கிய செல்வம் அம்மாவை பார்க்க வித்தியசமாக இருந்தது.

"என்னாம்ம்மா என்னா ஆச்சு? எதுக்கு கண் கலங்குறீங்க?"

"தம்பி, என்னோட செல்வம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி விஷம் குடிச்சி செத்து போயிட்டான்ப்பா, பாவிப்பய ஊரிலே இருந்து வந்ததிலே இருந்து கொஞ்சநாளு நல்லாதான் இருந்தான், என்ன ஆச்சோ தெரியலை, தீடீரென்னு பேயி பிடிச்சமாதிரியே கொஞ்சநாளு இருந்தான், தீடீரென்னு விஷத்தை குடிச்சி செத்து போயிட்டான், எங்களை விட்டு பிரிஞ்சு போன புள்ள திரும்ப வந்துருச்சேன்னு சந்தோஷமா இருந்தேன், ஆனா கொஞ்சநாளிலே எங்களை விட்டு ஒரேடியா பிரிஞ்சே போயிட்டான்னு அழுது கொண்டிருதார் செல்வம் தாய்.

அறைக்குள் இருந்து கலங்கிய கண்களோடு நிறைமாத கர்ப்பிணியாக வெளியே வந்தாள் செல்வம் மனைவி. கேட்கவே கஷ்டமா இருக்கும்மா, நான் கிளம்புறேன் சொல்லி விட்டு வெளியே வந்தான் முருகேஷன்.


முடிவே தெரியாத ஒன்றை
முடிக்கத் தெரியவில்லை
முடிவற்று நீளும்
முடிவற்றவைகளால்
முடியப்பட்டிருக்கிருக்கின்றன
முற்றும்.


கவிதைகள்:- நா.மகுடேஷ்வரனின் காமக் கடும்புனல்