Monday, July 16, 2007

பெங்களூரூ வலைப்பதிவர் சந்திப்பு - அனுபவங்கள்

சென்ற சனிக்கிழமை பெங்களூரூ லால்பார்க் பிளாக்கர் மீட்டிங், அதுவும் காலை 10.30 மணிக்கே எல்லாரும் வந்துருங்கன்னு அறிவிப்பு தட்டியெல்லாம் வைச்சிட்டு நான் போயி சேர்த்ததே 11.00 மணிக்குதாங்க. வெள்ளிக்கிழமை அதுவுமா நைட் பத்தரை மணி வரை ஆணிப்பிடுங்கிற இடத்திலே பெரிய பிராப்ளம், அதை சால்வ் பண்ணிட்டு போங்க'ன்னு டேமேஜர் சொன்னதுனாலே அதை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து நம்ம இயக்குனர் கூட சிறப்பு சந்திப்பு முடிச்சிட்டு கொஞ்ச நேரத்திலே அதாவது நடுநிசி 6 மணிக்கு செல்லா'கிட்டே இருந்து "நான் இப்போ ரயில்வே ஸ்டேசனிலே நிக்கிறேன், உங்க ரூம்'க்கு வர்றதுக்கு ஆட்டோகாரன்'கிட்டே சொல்லுங்க"ன்னு போன் வந்ததும் எழுந்துருச்சு உட்கார்ந்தது தான். அடுத்த பத்து நிமிசத்திலே நம்ம ரூம் பக்கத்திலே இருக்கிற பஸ்ஸ்டாண்ட்'லே வந்துட்டார், அவரே கூப்பிட்டு வந்தா மனுசன் வந்ததிலே லேப்டாப்'ஐ எடுத்து வைச்சிட்டு பவர்பாயிண்ட் ஸ்லைட் பண்ண ஆரம்பிச்சிட்டார். எனக்கு லைட்டா கண்ணை கட்ட கொஞ்சம் நேரம் தூங்கிட்டேன்.

அவரு அதை முடிச்சிட்டு எழுப்பி விட ரெண்டு பேரும் குளிச்சிட்டு கிளம்பி ஹோட்டலுக்கு போயி சாப்பிடறதுக்குள்ளே பத்து போன், இம்சைஅரசியும்,ஜியா'வையும் சாந்திநகர் பஸ்ஸ்டாண்ட் வரச்சொல்லி அவங்கிட்டே ஆசிரமத்து குழந்தைகளை பார்க்க போறப்போ வாங்கிட்டு போக சாக்லெட்ஸ்'ஐ பிக்பஜார்'லே வாங்கிட்டு வரச்சொல்லி அங்கயிருந்து லால்பார்க் கேட்'க்கு போறதுக்குள்ளே தீபா, பிரியா'கிட்டே இருந்து அடுத்தடுத்து போன் கால்ஸ், அதைவிட நம்ம மொக்கை மகராஜர் ரெட்பயருகிட்டே இருந்து போனிலே அவருக்கு துணையா அரைபிளேடு'ன் மறுஅவதாரமான மோகன்தாஸ் கவிஜ மடம் கட்டிய மாவீரன் ஆசீப்'ம் லால்பார்க் உள்ளே வந்து விட்டதாகவும் காத்திருக்கும் கொடுமையை சகித்து கொள்வதற்காக சிலபல கண்கவர் ஆட்டங்களை ரசித்து கொண்டிருக்கிறோமின்னு நேரடி வர்ணனை வேற....

கிளாஸ் ஹவுஸிலே தீபா,பிரியா'வும் பக்கத்து பக்கத்திலே உட்கார்ந்திருந்தாலும் ஒருத்தர்கொருத்தர் அறிமுகம் இல்லாத காரணத்தினால் பேசாமல் இருந்தனர். நானும் செல்லாவும் அங்கு போயி சேர்ந்ததும், ரெடபயர்,மோகன்,அண்ணாச்சி, எல்லாரும் அறிமுகப்படுத்தி கொண்டோம். அடுத்த கொஞ்சநேரத்திலே முதல் நாள் கையெழுத்தை பால்கோவா'வோட சாப்பிட்ட களைப்போடு ராசா வந்து சேர மழை பிடித்து கொண்டது, எல்லாரும் ஒதுங்க இடம் தேடி கண்ணாடி வீட்டுக்குள்ளே ஓட, மழைவிட்டதும் செக்யூரிட்டி அங்கயிருந்து விரட்டுனதும் ஒரு பெஞ்சு கல்லை தேடி போயி அமர்த்துட்டோம். அதுக்கப்புறம் ஐயப்பன் அவரு தங்கமணி,குழந்தை சகிதமாக வந்து சேர்ந்தார்.

அட்டெண்ட்ஸ் கொடுத்தவர்கள்:-

1) செந்தழல் ரவி
2) ஆசிப் மீரான்
3) மோகன் தாஸ்
4) அனானி 1
5) அனானி 2
6) தீபா &Mr.தீபா
7) கொங்கு ராசா
8) பத்மபிரியா
9) ஓசை செல்லா
10) ஐயப்பன்
11) ஜீ
12) இம்சை அரசி
13) சுபமுகா
14) பலூன் மாமா
15) அனானி 3அந்த செவ்வக மேஜையில் ஐயப்பன், செல்லா கேமராக்களும் , என்னோட லேப்டாப் இடத்தை அடைத்து கொள்ள, எல்லார் காதுகளையும் செல்லா'வின் போட்டோகிராபி பற்றிய விளக்கம் அடைத்து கொண்டது. லென்ஸ், அப்சார்ப்பர், ஜீம், சப்ஜெக்ட், லோ லைட்டிங், டார்க் லைட்டிங்'னு ஒரே டெக்னிக்கல் டேர்ம்ஸ் சிதறி ஓடிக்கொண்டு இருந்தது. ஒரு மணி நேரத்தில் முடிந்து விடலாம் என ஆரம்பிக்கப்பட்ட புகைப்பட கலை பற்றிய அறிமுகம் 2.30 மணி நேரம் வரை ஆனதுக்கு முதற்காரணமே அனைவரும் சுவராசியத்துடன் ரசித்தது தான். அதை விட ஐயப்பனும் , செல்லாவும் பல மாடல் போட்டோக்களை எடுத்து செய்முறை சோதனைகளை நடத்தி காட்டினர். அதுக்கு மாட்டின செய்முறை சோதனை எலி நாந்தான்... ( போட்டோ எடுத்த சாமிகளா என்னையே வைச்சி காமெடி பண்ணிறாதிங்கய்யா)ஆசிரமத்துக்கு போவதற்கு டைம் வேற ஆகிவிட்டதால் எல்லாரும் டாக்ஸி, பைக்கில் கிளம்பி போனோம். ரெட்பயர் நைட் ஃபிளைட்'லேய் கொரியா போயி பாம்பு சூப் சாப்பிடனும் அங்கயிருந்து அப்பிட்டு, நம்ம கொங்கு ராசா என்னை தங்கமணி வையுமின்னு வீட்டுக்கு போயிட்டாங்க.நாங்கள் ஆசிரமம் சென்றடைவதற்கு கொஞ்சம் லேட்டாகி விட மதிய சாப்பாட்டு வேளைக்கான நேரம் கடந்தே போயிவிட்டது. அனைவரையும் வரிசையில் அமரவைக்கப்பட்டனர். பார்க்கில் கல்வெட்டு மாதிரி அசையாது நின்றவர் இங்கே பலூன்மாமா'வாக அவதாரம் எடுத்தார். அனைத்து குழந்தைகளுக்கும் பலூனில் கிரிடங்கள் செய்யப்பட்டு ஒவ்வொருத்தர்க்கும் அணிவிக்கப்பட்டது. குழந்தைகளில் சிலர் அருமையாக பாட்டு பாடியும், நடனம் ஆடியும் அசத்தினர்.
கிரீடமும், வாளும் சுமந்த கவிஜ மடத்து மஹாராஜா...
சுவாமிஜி'க்கு மட்டும் பெரிய கிரிடம்....
"நச்" புகழ் செல்லா'வுக்கே நச்'ன்னு ஒரு போட்டோ....
அதன்பின்னர் அவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுக்களும் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு பிரார்த்தனை நேரமாகி விட்டதால் அனைவரும் அங்கிருந்து மிக்க மகிழ்ச்சியுடன் கிளம்பி வந்தோம்.

Thursday, July 12, 2007

மாணிக்க மலர்

"ஏண்டா எந்திருடா! இன்னிக்கு ஆபிஸிலே மீட்டிங் இருக்குன்னு 9 மணிக்கெல்லாம் போறேன்னு நைட் தூங்குறப்போ சொல்லிட்டு இப்போ 8 மணி வரை தூங்கினா எப்பிடி??"ன்னு ரூம்மேட் கத்தின கத்துலே எழுந்து உட்கார்ந்தான் சந்துரு.

"இன்னும்தான் ஒன் அவர் இருக்குலே! அதுக்குள்ளே கத்தி ஊரை கூட்டுறே? டீ போட்டாச்சா?"

"இவரு பெரிய தொரை ! மகாராசா எழுந்திருச்சதும் பெட் காப்பியோட எழுப்பி விடனுமா? அப்பிடியே பாத்ரூமை பார்த்து ஓடி போயிரு! சீக்கிரம் குளிச்சிட்டு கெளம்பு! நாங்கெல்லும் ஆபிஸிக்கு போகனும்!"

நண்பன் வினோத் போட்டு வைத்த டீ'யை குடித்து விட்டு காலைக்கடன்களை முடித்து விட்டு ஆபிஸிக்கு கிளம்பினான் சந்துரு.

"ஹலோ! நான் இப்போ மீட்டிங்'லே இருக்கேன்! நான் அப்புறமா கால் பண்ணுறேன்!"

"என்னடா சந்துரு! காலநேரமில்லாமே வூட்பீ கூடதான் போனிலே பேச்சுன்னா! மீட்டிங்'லே கூடவா"ன்னு கிண்டல் பண்ணிய கொலிக்'ஐ கடுப்புடனே பார்த்தான்.

"ஏய் நைட் தான் போனிலே மீட்டிங் முடியறதுக்கு 10 மணி ஆகுமின்னு சொன்னேன்'லே! அப்புறம் எதுக்கு கட் பண்ண பண்ண திரும்ப கால் பண்ணுறே???"

"ஐயோ அது எனக்கு தெரியுங்க! காலையிலிலே உங்க அம்மாவும், அக்காவும் போன் பண்ணினாங்க! ஒங்க சித்தப்பா பொண்ணு ரூபி'க்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குதாம், நேத்து மதியத்திலே இருந்து ஒன்னுமே அவ சாப்பிடலையாம்! உங்கக்கிட்டே சொன்னாங்களா?" இது சந்துருவின் வருங்கால மனைவி சுதா.

"நேத்து மதியம் அக்கா போன் பண்ணுறப்போ சொன்னுச்சு! நான் இந்த வாரம் சனி,ஞாயித்துக்கிழமையிலே வந்து பார்க்கிறேன் சொல்லிருந்தேனே! இப்போ எப்பிடி இருக்காளாம்?"

"அதுதான் தெரியலைங்க! நான் போய் பார்த்துட்டு மதியவாக்கிலே போன் பண்ணிச்சொல்லுறேன்! இப்போ போயி வேலையே பாருங்க"

சுதா போன் பண்ணியதில் இருந்து சந்துருவுக்கு வேலை ஒன்றுமே ஓடவில்லை. ரூபி என்று செல்லமாக அழைக்கப்படும் ரூபிணி அவன் சித்தப்பா'வின் மூன்றாவது பொண்ணு. பன்னிரண்டு வயசும், எட்டு வயசும் ரெண்டு பொண்ணுங்க இருக்கும்போது மூணாவது பையன் கொஞ்சம் தள்ளி பிறந்தா நல்ல சுகப்போகத்தை கொடுப்பான் அந்த வாரிசு'ன்னு ஏதோ ஜோசியர் சொன்னாங்க'கிறதினாலே சித்தி கர்ப்பமா இருங்கான்னு அக்கா அவன்கிட்டே சொன்னப்போ சந்துரு'வுக்கு பத்திக் கொண்டு வந்தது.

"என்னாக்கா ஒனக்கே ரெண்டு பசங்க இருக்காங்க! அதுவுமில்லாமே எனக்கு கல்யாணம் வேற பண்ணப்போறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க? இப்போ போயி நம்ம சித்தப்பா,சித்திக்கு இன்னொரு குழந்தையா?"

"அதுனாலே என்னாடா? நம்ம எல்லார் வீட்டிலேயும் ஆம்பிளை பசங்க இருக்கீங்க! அந்த சித்தப்பா வீட்டிலே இல்லலே? நீ எதுவும் வாயை வைச்சிட்டு சும்மாயிருக்காமே என்னத்தயாவது வெடுக்கென்னு சொல்லிறாதே?" இப்பிடி அக்கா சொன்னப் பிறகு அதை பற்றி பெரிதாக அவன் ஒன்னும் எடுத்துக் கொள்ளவில்லை.

எல்லாரும் ஆண் பிள்ளை என எதிர்பார்த்து பிறந்தது பெண் பிள்ளை என்று தெரிந்து சித்தி ஆஸ்பத்திரியிலே கத்தி அழுதுதை அம்மாவும் மூக்கு சிந்திக்கிட்டே சொன்னப்போ ஒன்னுமே தோணவில்லை அவனுக்கு! அவள் பிறந்த மறுநாள் அப்பா போன் பண்ணி அவள் இராசி,நட்சத்திரம், பாதம் எல்லாமே தன்னோடது ஒன்னா இருக்குன்னு சொன்னப்போது தான் மிகவும் ஆச்சரியமாகவும்,பாசமும் பொங்கி வர அவளை பார்ப்பதற்கு பெங்களூரூலே இருந்து மதுரை போய் பார்த்து வந்தான். பளிச்சென்னு முகக் களையும் அழுத்தம் திருத்தமான மூக்கு முழியுமான குழந்தை அவன் மனதிலே பளிச்சென்னு ஒட்டிக்கொண்டது. அதன் பின்னர் ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் இவனை பார்த்ததும் அவள் அழத் தொடங்குவதும், சித்தியும்,தங்கைகளும் "ஒன்னை ஏதோ வேத்து ஆளா நினைக்கிறா போல"ன்னு சொல்லுவதும் அடுத்தமுறை வரும் பொழுது நல்லா பழகிறலாமின்னு தனக்கு தானே சமதானப்படுத்தியதும் நினைவுக்கு வந்து போனது.

அவளின் முதல் பிறந்தநாளுக்கு டிரெஸ் வாங்கி கொண்டு போனதை சரியாக நினைவு வைத்து இரண்டாம் பிறந்தநாளுக்கும் சரியாக போன் பண்ணி கேட்டதும், நேரில் சென்று பார்க்கும் பொழுது சித்தி பின்னாடி போய் ஒழிந்து கொண்டு எட்டிப்பார்ப்பதும், தனக்கு பொண்ணு பார்க்க போகும் பொழுது நாட்டாமை படத்திலே மனோரமா பேசிய டயலாக்'யும் பேசி காட்டி எல்லாரையும் கலகலக்க வைத்ததையும், அவளின் குறும்புகளை நினைத்துக் கொண்டே அவனையறியாமலே கண்கள் கலங்குவதும், மனது எதிலேயும் நிலைப்பெறாமல் இருந்ததையும், மதிய சாப்பாட்டு நேரத்தில் அனைவரும் சாப்பிட அழைத்தும் பித்து பிடித்தவனாகவும் நொடிக்கொரு முறை அவள் நலம் பெற வேண்டுமென கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தான்.

செல்போனில் தம்பி நம்பர் பார்த்ததும் சற்றே பதறிய படியே கால் அட்டெண்ட் பண்ணினான் சந்துரு.

"ஹலோ! எப்பிடிடா இருக்கா இப்போ?"

"ஹிம் இப்போ பேச ஆரம்பிச்சிருச்சு! ஆனா ஒன்னுமே சாப்பிடலை! பால், ஜீஸ்'ன்னு எதோ கொஞ்சமா காலையிலே குடிச்சாளாம். இப்போதான் சித்தாப்பா'கிட்டே போன் பண்ணி வீட்டுக்கு வாங்க'ப்பா'ன்னு சொன்னாளாம். சித்தப்பா இப்போதான் எனக்கு போன் பண்ணி சொன்னார். நான் வீட்டிலே போயி பார்த்துட்டு கால் பண்ணுறேன்!"

"சரி வீட்டுக்கு போனதும் போன் பண்ணு! காலையிலே இருந்தே மனசை சரியில்லை!"

போனிலே பேசுனதுக்கப்புறம் மனதுக்கு கொஞ்சம் தெம்பாக உணர்ந்த சந்துரு தன்னுடைய மதிய சாப்பாட்டுக்கு சென்று வந்து தன்னுடைய வழக்கமான அலுவலக வேலையை தொடர ஆரம்பித்தான். இந்த வீக் அப்டேட் மீட்டிங்கிலே நிறைய பெண்டிங் இஸ்யூஸ் இருப்பதை கண்டு, அதை ஃபிக்ஸ் பண்ணுவதிலே குறியாக இருந்தாலும், மனதோரத்தில் ரூபிணி நலம்வேண்டி பிராத்தனையிலும் ஈடுப்பட்டு கொண்டே இருந்தான். தீடீரென அடித்த செல்போன் மணியை அணைத்து காதில் வைத்தான்.

"ஹலோ!"

"..."

"ஹலோ ராஜா!"

"..."

"டேய்.. யாரு இது?"

"......"

"எதுக்குடா அழுவுறே? என்னாடா ஆச்சு?"

"சந்திரா நம்ம ரூபி நம்மளை விட்டுட்டு போயிட்டா'டா!"

"டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்! என்னடா சொல்லுறே? இப்போதானாடா கொஞ்சநேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி பேச ஆரம்பிச்சாடா'ன்னு சொன்னே? என்னாடா நடத்துச்சு?"

"ஹிம்ம்ம்ம்ம்ம்... சித்தப்பாவுக்கு மட்டும் போன் பண்ணி வரச்சொல்லைடா! நம்ம அக்கா,அம்மா,அப்பா எல்லாருக்கும் போன் பண்ணி வரச்சொல்லிருக்கா? எல்லாரையும் ஒன்னா பார்த்துட்டு நம்மளை விட்டு போயிட்டா'டா!"

"அப்போ எல்லாரையும் கூப்பிட்டு பார்த்தவா என்னை மட்டும் பார்க்கமே போயிட்டாளே? தெய்வமே அவ என்கிட்டே பேசி பார்த்தது இல்லியே? எனக்கு இப்பிடியொரு சோதனையா?"

"டேய்... அப்பா பேசனுமின்னு சொல்லுறாங்க! இரு போனை கொடுக்கிறேன்!"

"ஹலோ அப்பா என்னாச்சு? என்ன நடக்குது அங்க? பக்கத்திலே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதுக்கு என்னா? மதியத்திலே இருந்து என்னப்பண்ணிட்டு இருந்தீங்க??"

"அடேய் சந்திரா! எல்லாம் முடிஞ்சு போச்சு! இப்போ ஆஸ்பத்திரி வாசலிலே தான் நிற்கிறோம். நாங்க இங்கன அழக்கூட தெம்பில்லாமே இருக்கோமிடா! அந்த பச்சை குருத்து உசுரை விட்டு அஞ்சு நிமிசம் கூட ஆவலை! எதும் பேசுற நிலைமை'லே நாங்க இல்ல! இன்னும் 2 - 3 மணி நேரத்திலே அவளை கொண்டு அடக்கம் பண்ணப்போறோம்."

"என்னாது! நான் வந்திறேன்ப்பா, அதுவரைக்கும் இருங்க!"

"டேய், இப்போ ஒனக்காக எல்லாம் இப்போ காத்துக்கிடக்க முடியாது, அவ ஒடம்பு ஏற்கெனவே விறைச்சுப் போச்சு, இனிமே வைச்சிருக்க வேணாமின்னு டாக்டர் சொல்லிட்டாங்க! அக்காவும் திருச்சி சித்தப்பா'வும் வந்ததும் நாங்க போயி அடக்கம் பண்ணிட்டு வந்துருவோம். இன்னும் ஒனக்கு 40 நாளிலே கல்யாணம், அதுனாலே நீ அங்கன இங்கன'லாம் அலைய வேணாம், இப்போ நான் எதுவும் பேசுற நிலைமையிலே இல்ல!"

"அப்பா! என்னா சொல்லுறீங்க? நான் வரவேணாமா? அவ கடைசியா ஒங்க எல்லாரையும் பார்த்துருக்கா! நான் அவளை கடைசியா ஒருதரம் பார்த்துகிறேனே? கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்கப்பா! நான் இப்பவே சென்னை ஃபிளைட் பிடிச்சு வந்து அங்க இருந்து ஏதாவது மதுரை ஃபிளேட் பிடிச்சு எப்பிடியாவது நைட்குள்ளே ஊருக்கு வந்துறேன். அப்பா... பிளிஷ், எனக்காக இதை மட்டும் செய்யுங்க? இப்போ சித்தப்பா'கிட்டே போனை கொடுங்க, நான் பேசணும்..."

"நீ ஒன்னும் பண்ணவேணாம்! சித்தப்பா பேச்சே வரமாட்டாமே ஒட்கார்த்துருக்கான், அவன்கிட்டே என்னாடா பேசப்போற? பேசாமே இரு! இன்னும் ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு வந்து பாரு.... இப்போ எதுவும் என்னாலே பேசமுடியாது."

அப்பா வெடுக்கென்னு பேசி போனை வைத்ததும் ஏறக்குறைய பைத்தியம் பிடித்த நிலைமையிலே இருந்தான், இம்மாதிரியான அவசர ஆத்திரத்துக்கு கூட நேரத்துக்கு போகமுடியாத தன்னுடைய வேலை , மற்றும் தனிமையை நினைத்து அழக்கூட திரணியில்லாமால் மனது கனத்துப் போனான்.

இரண்டு நாள் கழித்து ஊருக்கு சென்றப்போது நேராக சித்தப்பா வீட்டுக்கு கூட மனதில்லாமல் தன்னுடைய வீட்டுக்கே சென்றான் சந்துரு.

"டேய் சந்திரா... இங்கப்பாரு எல்லாமே முடிஞ்சுப்போச்சு! இனி அங்கப்போயி எதுவும் என்னாச்சு? எதாச்சு'னு கேள்வி கேட்காதே? ரெண்டு நாளா சித்தி அழுது அழுது மயக்கமாகவே கெடந்தா, இப்போதான் ஏதோ எழுந்து ஒட்கார்ந்துருக்கானு சொன்னாங்க! ரொம்ப முக்கியமா நீ கலங்கி அழுதுறாதடா! அந்த வீடே நாங்க அழுது சிந்துன கண்ணிரா தான் இருக்கு...! போய் பார்த்துட்டு சித்தி,சித்தப்பாவேயும் சாப்பிட சொல்லு! நீ சொல்லியாவது சாப்பிடறாங்கன்னு பார்ப்போம்"

"ஹிம் சொல்லுறேன்!"

"சந்திரா, என்னாடா எல்லாமே முடிஞ்சதுப்புறம் வந்துருக்கே, அடக்கம் சரியா பண்ணியாச்சான்னு சோதனை பண்ண வந்தியா? இல்ல நீ வாங்கிக்கொடுத்த டிரெஸ் இருக்கா இல்லையான்னு பார்க்க வந்தியா? அன்னிக்குக்கூட சந்துரு'ண்ணே வாங்கின டிரெஸ் எடு! நான் போட்டுக்கிறேன்னு சொல்லிட்டே ஒன்னையே பார்க்கமே போயிட்டா!" தன்னை பார்த்ததும் இப்பிடி சொல்லி அழும் சித்தப்பாவை தேற்றுவதா இல்லை "ஒன்னை பார்த்ததும் ஒளிஞ்சுக்க ஒரு ஜீவன் இல்லாமே போயிருச்சே'ன்னு ஈனஸ்வரத்திலே அனத்துக்கிற சித்தியை சமாதானப்படுத்துவதா, எப்பவும் அண்ணே! அண்ணே'ன்னு காலை சுத்திக்கொள்ளும் தங்கைகள் இருவர் இப்போழுது மெல்ல தலையை தொங்கப்போட்டுக்கிட்டு அழுவதை சமதானப்படுத்துவதா என பயங்கர குழப்பத்திலே உட்கார்த்திருந்தான். அப்பா சொன்னமாதிரியே நாமும் அழுதுவிட்டால் இங்கு இன்னமும் துக்கம் பெரிதாகி விடுமென தன் உணர்ச்சிகள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான். சந்துருவுக்கு அனைவரும் அழும் இடத்தில் தான் மட்டும் அழாமல் இருப்பது தான் கல்நெஞ்சனா என கூட சந்தேகம் வர ஆரம்பித்தது. தன் வீட்டுக்கு சென்று இன்னும் மற்ற விபரங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம், இங்கிருக்கும் பட்சத்தில் தன்னை பார்த்து மேலும் இவர்கள் அழுவார்கள் என்ற காரணத்தில் தன் வீட்டை நோக்கி விரைந்தான்.

"அப்பா.. இந்த சூழ்நிலையிலே எப்பிடிப்பா கல்யாணம் நடத்துறது? இன்னும் ஆறு மாசம் கழிச்சி தேதி குறிங்க!"

"இல்லே அதெல்லாம் வேணாம் சந்திரா! நேத்தே நான் போயி ஜோசியரை பார்த்து பேசியாச்சு! கல்யாணத்தை தள்ளிப்போட வேணாமின்னு சொல்லிட்டார், ,"

"என்னப்பா சொல்லுறீங்க? ஏன்? எழவு நடந்த குடும்பத்திலே இருந்து இன்னும் கொஞ்சநாளிலே கல்யாணமுன்னு சொன்னா நல்லாவா இருக்கு? எனக்கு பிடிக்கலை? கல்யாணத்தை கொஞ்சநாள் கழிச்சு வைங்க"

"அடேய்.. சொன்னதை கேளுடா! ரூபிணி செத்து மண்ணுக்குள்ளே போகலடா! நம்ம மனசுக்குள்ளே தெய்வமா நிறைச்சுட்டா! வானத்திலே இருந்து தெய்வம் வந்தா நான் உங்களோட தெய்வமின்னு சொல்லி நிருப்பிச்சிட்டு போகும்? இந்தமாதிரி குறை வாழ்வு தேவதைதான் நாங்க ஒங்க எல்லாருக்கும் தெய்வமின்னு வாழ்ந்து நிருபிச்சி காட்டிட்டு போயிருக்கு"ன்னு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார் சந்துருவின் அப்பா..."

இதற்கு மேலும் அப்பாவிடம் மேலும் பேசமுடியாது என நினைத்துக்கொண்டு பெரியவர்கள் எடுத்த முடிவை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாலும், வெகு விமரிசையாக நடத்தப்பட வேண்டிய தன்னுடைய கல்யாணம் வெகு எளிமையாக நடத்தப்பட்டது குறித்து ஆறுதல் அடைந்தான். சந்துரு திருமணத்திற்கு பிறகு சிறிதுசிறிதாக இயல்பு வாழ்க்கைக்கு அந்த குடும்பம் பழக்கப்படுத்தி கொண்டாலும் அவளது மரணம் எல்லாரிடம் எதாவதொரு சமயத்தில் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது. அதற்கு தக்கவாறு சந்துரு மனைவி கர்ப்பகமாக இருந்தப் பொழுது பெங்களூர் வந்து கவனித்துக் கொண்டு மாதம் வந்ததும் ஊருக்கு பத்திரமாகவும் அழைத்து போனாள் சித்தி. அவர்கள் சென்ற் இரண்டாம் மாதத்தில் ஒரு மதிய வேளையில் வலி வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்க போகிறோம் என தகவல் வந்ததும் ஃபிளைட் பிடித்து ஊருக்கு போய் சேர்ந்தான், இன்னும் 20 - 30 நிமிசத்திலே குழந்தை பிறந்துருமின்னு நர்சம்மா சொல்லிட்டு போனதும், பிறக்கும் குழந்தை குடும்பத்தின் முதல் வாரிசு என்பதனால் முதலில் பார்க்கவேண்டுமென்று கூடியிருந்தனர். அவனுக்கான அமைதியை கிழித்துக் கொண்டு புகுந்தது புதிய சத்தமென்று, வெள்ளைத்துணியில் மலர்ந்த மொட்டென்று அலங்காரம் என்பதை இல்லாமல் தேவதையாக சிரித்து கொண்டுருந்தது.

"அம்மா! அப்பிடியே சுதா ஜாடை'ம்மா" இது அக்கா

"இல்ல சந்துரு ஜாடைதான்! இங்கப்பாரு இடதுகன்னத்திலே அவனுக்கு இருக்கிறமாதிரி மச்சமிருக்கு" இது சித்தி

"மூக்கு பெரிசா இருக்கிறத பார்த்தா அவ அப்பத்தா மாதிரி இருக்கா!" இது அப்பா

"இப்பவே எல்லாரையும் மொறைச்சு,வீராப்பா பார்க்கிறா? அப்போ இது உங்க ஜாடைமாதிரி தானே இருக்கா?" இது அம்மா

"இல்ல! இல்ல! இது நம்மகிட்டே வாழ்ந்த மாணிக்கமலரின் மறு பிறப்பு"ன்னு சொல்லி முதன்முதலாக ரூபிணி'க்காக அழுதான் சந்துரு.

Monday, July 9, 2007

போங்கடா! நீங்களும் ஒங்க வேலையும்.....

நம்ம அருமை பெருமையெல்லாம் அடுக்கோ அடுக்கி பதிவா போட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறதையெல்லாம் சொல்லுடா'ன்னு கூப்பிட்ட இத்தனை பேரையும் மதிச்சு பதிவை போடமுடியாமே ஆபிஸிலே வேலையை தவிர வேற எதையும் பண்ணக்கூடாதுன்னு எல்லாத்திலேயும் ஃபீயூஸ் பிடுங்கிட்டானுக! அவனுக கிட்டே சண்டை போட திராணியில்லாமே இப்பிடிதான் தலைப்பு வைச்சிக்க முடியுது... :(

1) கப்பி பய
2) தலைவலி
3) தருமி ஐயா
4) மணிகண்டன்
5) கவிதாயினி
6) கொல்லிமலை ஜே.கே
என்னையும் மதிச்சு கூப்பிட்ட அவங்க பாசத்தை நினைச்சி ஆனந்த கண்ணிரு பெருக்கெடுத்து ஓடுதுங்க.அந்த வெள்ளத்தை தடுத்து நிறுத்திட்டு வந்தா நம்ம ஆனைக்குட்டி லேப்டாப்'லே ஒட்கார்ந்துட்டு அடம்பிடிக்கிது, அதை ஓரமா ஒரு இடத்திலே பார்க் பண்ணிட்டு நம்மோட ஒலக சாதனைகளை ஒவ்வொன்னா எடுத்து விடுறேன். கல்லை விட்டு அடிக்கிறதா இருந்தா ஒவ்வொருத்தரா அடிக்கனும், இப்பிடியெல்லாம் மொத்தமா எல்லாம் சேர்ந்துக்கிட்டு அடிக்கப்பிடாது. டேமேஜ் ரொம்ப பலமா ஆகுதுலே.... :)

1) எங்கன இருந்தாலும் வேஷ்டி இல்ல கைலி, சட்டையோட தான் இருக்கிறது. பெங்களூரூலே தம்பி வேலைப் பார்க்குதே கொஞ்சம் நல்லாலாம் டிரெஸ் போட சொல்லக்கூடாதா'ன்னு எங்க தெருக்காரங்க அம்மா'க்கிட்டே சொல்லிட்டே இருப்பாங்க. ஹிம் அதுக்கு அவங்க ரிக்கார்டட் டயலாக் " பண்டி பய எதைச் சொன்னாலும் கேட்டு தொலையுறான் இல்ல"

2) படிச்சது என்னோமோ கணக்கிலே இளங்கலை பட்டம். ஆனா பார்க்கிறது கம்ப்யூட்டரிலே வேலை. நாமே எடுத்த மார்க்'லாம் இஞ்சினீயர் சீட்டு எல்லாம் கொடுக்கமுடியாது'ன்னு சொல்லிட்டாலும் நாங்கெல்லும் என்னத்தயோ படிச்சி கம்ப்யூட்டர் ஆஞ்சுனேயர் ச்சீ இஞ்சினீயர் ஆகியாச்சுலே...

3) எங்கப்போனாலும் நாமே பேசுற பேச்சு, அப்புறம் பண்ணுற நொணநாட்டியத்தை வைச்சே இது மருதயிலே இருந்து கிளம்புனது'னு ஈஸியா எல்லாரும் கண்டுப்பிடிச்சிருவாய்ங்கே.

4) அப்புறம் இந்த கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன்னு என்னத்தயோ பண்ணக்கிட்டு இருக்கிறது! என்னோட டைரியை படிச்ச ஒரு நல்லவர் ஒங்களுக்கு நல்ல மொழி வளமை??? இருக்குன்னு சொல்லிப்பிட்டார். ஹி ஹி இனி ஒங்க பாடுதான் பெரும் திண்டாட்டம்.

5) பசங்க எல்லாரையும் ஓட்டி லந்து விடுறதுதான் மொத வேலையே! ஒரு பயப்புள்ள கல்யாணத்துக்கு போய் அவனை மேடையிலே வைச்சே செமயா லந்தை விட்டு இன்னவரைக்கும் அவன் எங்கக்கிட்டே பேசுறதே இல்லை.

6) டெக்னாக்லாஜிலே எக்ஸ்பர்ட் ஆகுறேன் பேர்வழின்னு என்னத்தயாவது போட்டு நொண்டோ நொண்டி அதை ஒன்னுமில்லாமே ஆக்கி ஒப்பேத்துறது பெரிய சாதனை மக்கா... எங்கப்பாரு அடிஅடின்னு அடிச்சும் இன்னவரைக்கும் அது குறைஞ்சப் பாடு இல்ல...

7) எத்தனதடவை தான் சொல்லுறதுன்னே தெரியலை.. இப்பவும் சொல்லிக்கிறேன், பொஸ்தகத்தை படிக்க ஆரம்பிச்ச அதை கீழே வைக்கிறதே இல்ல. சின்னவயசிலே அம்புலிமாமா படிக்கிறோப்போ எங்கப்பார் சொல்லுவாரு.. "இந்த பயலை வீட்டிலே விட்டுட்டு போனா திருடன் வந்து திருடிட்டு போனாலும் அவன் பாட்டுக்கு படிச்சிட்டு இருப்பான்!"

8) இதுதாங்க என்னோட அருமை பெருமையெல்லாம் என்னை எல்லாருக்கும் அடையாளம் காட்டுறது. அது என்னான்னா என்னோட சோம்பேறித்தனம். எல்லாரும் ஒன்னா கூடி எங்கய்யாவது வெளியா போலமின்னு இருந்தா நாந்தான் லாஸ்டா நிப்பேன். அம்புட்டு சுறுசுறுப்பான சோம்பேறி.