Tuesday, March 27, 2007

weirder habits .....

என்கிட்டே இருக்கிற விசித்திர குணத்தை சொல்லணுமின்னு நம்ம பாசக்கர பயப்புள்ள ஜி கூப்பிட்டுருக்காரு, அவரு கூப்பிட்ட அஞ்சு பேருகளிலே வெட்டி, CVR,இம்சையரசி, இணைய பாடகி மருதம்ன்னு எல்லாரும் பதிவு போட்டுட்டாங்க. என்னை இன்னும் அவரு கூப்பிட்டாரு, அப்புறம் இவரும் கூப்பிட்டாருன்னு பொய் சொல்லமுடியலைங்க, ஏன்னா நம்ம ஜியை தவிர வேற யாரும் என்னை கூப்பிடலை, என்கிட்டே இருக்கிற விசித்திரமான கிறுக்குத்தனமான லூசுத்தனமான, பைத்தியக்கார தனமான மெண்டல்தனமான எல்லாத்தையும் எத்தனை தடவை தான் அனுபவமின்னு மொக்கதனமான பதிவு எழுதுறது.....?? :)
வாசிப்பு:- புத்தக வாசிப்பு இல்லைன்னா நானே இல்லேன்னு சொல்லணும், எந்நேரமும் ஏதாவது ஒன்னை வாசிச்சுட்டு இருப்பேன், எங்க என்ன கிடைச்சாலும் அதிலே என்னமாவது எழுதிருக்கான்னு வாசிப்பேன், ஒரு ரூவா கொடுத்து வாங்கி திங்கிற கடலை பொட்டலம், பார்சல் கட்டி வர்ற சோத்து பொட்டலம், பெரிய ஹோட்டலிலே கொடுக்கிற டிஸ்யூ பேப்பரிலே இருக்கிற அவங்களோட முகவரி இப்பிடி எந்தவொரு பேதம் காட்டாமலே படிப்பேன், வாசிக்கிறதிலே அப்பிடியொரு வெறித்தனம்.

சின்னவயசிலே எனக்கும் என்னோட அக்காவுக்கும் வெள்ளிக்கிழமை காலையிலே சிறுவர்மலர் படிக்கிறதுக்கு பெரிய சண்டையே வரும், அதுவும் எனக்கும் அந்த புத்தகம் வந்ததும் மொத ஆளா நாந்தான் படிக்கனுமின்னு ஒரு பைத்தியம் உண்டு, இன்னும் இவ்வளவு பெரியாளா ஆனபிறகும் காலையிலே எந்திரிச்சதும் நீயூஸ் பேப்பரை முதலில் யாரு படிக்கிறதுன்னு எங்கப்பாவுக்கும் எனக்கும் பயங்கர சண்டை வரும், அதுவும் நீயூஸ்பேப்பர் படிக்கிறப்போ அது ஒன் பை ஒன்'ஆ இருக்கணும், நீயூஸ்பேப்பர் படிக்கிறதை மொதப்பக்கத்திலே இருந்து கடைசி பக்கம் வர்றவரைக்கும் வைச்சிட்டே படிக்கிறது தான் நீயூஸ் பேப்பருக்கு மரியாதைன்னு நினைக்கிறவன் நானு, ஆனா எங்கப்பா நான் படிக்கிறோப்ப நடுப்பக்கத்தை கொடுன்னு கேட்டு நச்சரிப்பார், நான் எதையும் கொடுக்கமாட்டேன், இதுனாலே பெரிய சண்டை வந்து எங்கப்பா நடுப்பக்கத்தை பிடுங்குவாரு, நான் அவரோட கோபத்தை கூட்டுறதுக்கு நீயூஸ் பேப்பர் மொத்தயும் ஸ்டாப்ளர் பின்'னடிச்சுட்டு படிப்பேன்.

படிக்கிற புத்தகங்களிலே கதை,கட்டுரை,பிக்சன்,லொட்டு லொஸ்குன்னு எதையும் பிரிச்செல்லாம் வாங்கி படிக்கிறதே கிடையாது, குறிப்பிடத்தக்க முறையிலே என்னை கவர்ந்த எல்லா புத்தகங்களை கணக்குவழக்கிலாமே திரும்ப திரும்ப படிப்பேன், சிலசமயம் கல்கி அவரோட செல்வனை பத்தி சொல்லுறதையும் ஷிட்னி ஷெல்டன் தன்னோட கதாநாயகியோட கதையை ஆரம்பிக்கிறதையும் படிப்பேன்,படிப்பேன், படிச்சிட்டே இருக்கேன்.

ஞாபக சக்தி:- இது என்க்கிட்டெ இருக்கிற பெரிய பிரச்சினை, முக்கியமான கடவுசொல் எல்லாம் மறந்து தொலைஞ்சிரும் ஆனா நான் யாருக்கிட்டே வாங்கினதோ இல்லை நான் யாருக்கோ கொடுத்த வசவுசொல் மட்டும் அப்பிடியே ஞாபகம் இருக்கும். நான் திட்டு வாங்கிருந்தேனா அதை ஞாபகம் வைச்சிட்டு அவங்கிட்டே பேசவே மாட்டேன், அவங்களே வந்து தான் செஞ்சது தப்புன்னு வந்து கேட்டாலும் அந்த மன்னிப்பை ஏத்துக்காத மனோபாவமெல்லாம் இருந்துச்சு, ஆனா இப்போ எல்லாம் கொஞ்ச கொஞ்சமா என்னையே நானே மாத்திட்டு வாறேன், ஆனா புகை கூண்டுக்கு வெள்ளை அடிச்சாலும் லேசா தெரியிற புகை கருப்பு மாதிரி வாங்கின திட்டு வார்த்தைகளை அப்பிடியே மனசிலே வைச்சிருப்பேன்.

தனிமை:- சிலசமயங்களிலே ஆள் ஆரவமற்ற காட்டிலே நம்ம மட்டும் தனியா இருந்தா எப்பிடியிருக்குமின்னு நினைச்சு பார்த்துக்குவேன், அப்பிடியொரு சூழ்நிலை வந்தா என்னன்னெ பண்ணனுமின்னு பெரிய திட்டங்கள் மனசிலே இருக்கு. இன்னமும் வீட்டிலே வாரக்கடைசியிலே தனியா உட்கார்த்துருப்பேன், நண்பர்கள் எல்லாம் வெளியே போலாமின்னு போனாலும் சரி, நான் எங்கேயும் போகமே அப்பிடியே தனியா வீட்டுக்குள்ளே இருப்பேன், நானும் என்னை சுற்றியிருக்கிற அந்த வெறுமையும் தான் பிடிக்கும்.

அறிவுரை:- இது எனக்கிட்டே இருக்கிற கெட்டகுணம்.எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் அறிவுரையை அள்ளி தெளிப்பேன், ஒரு தடவை எங்க கம்பெனி VP கூட மீட்டிங், அவருக்கும் அங்கே வழக்கம்போலே அறிவுரையை அள்ளிக்கொட்டொ கொட்டுன்னு கொட்டி என்னையே பார்த்தாலே இப்போ ஓடிப்போயிருவாரு.ஊர்ப்பக்கம் போனா யாராவது படிக்கிற பசங்க வந்து படிக்கிறதுக்கு ஏத்தமாதிரி வேலையை பத்தி பேசிட்டா போதும், ஆரம்பிச்சிரும் அறிவுரை அய்யாசாமி பெர்சனாலிட்டி.... இப்போதைக்கு ஜாவா தான் பீக், போனத்தடவை இருந்தமாதிரி VB'க்கு இப்போ மவுசு இல்லேன்னு அள்ளித் தெளியோ தெளிச்சிருவேன்.

ஆர்வக்கோளாறு:- சும்மா இருக்கிற நேரத்திலே ஏதாவது ஒன்னே ஆர்வமா செஞ்சு பார்ப்போமின்னு ஆரம்பிப்பேன்.சிலசமயங்களிலே அந்த விஷயம் எனக்கு சம்பந்தமில்லாமே இருக்கும், ஆனா எதையாவது கத்துகணுமின்னு அதை போட்டு நோண்டுறது, வீட்டிலே அந்தமாதிரிதான் எல்லா எலக்ட்ரிக்கல் திங்க்'ஸிலே ரிப்பேர் பார்க்கிறேன்னு ஒப்பேத்திருவேன். அந்த வகையிலே எல்லாரும் எழுதுறமாதிரி நாமெல்லும் பதிவு எழுதிப்பிடாலமின்னு தைரியமா பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சது. ஆனா இன்னவரைக்கும் உருப்படியா ஒன்னுமே எழுதினதே கிடையாது. எல்லாமே ஆர்வக்கோளாறிலே ஓப்பேத்தின கணக்குதான்.

இந்த மாதிரியெல்லாம் மொக்கை போடாமே நல்லா எழுதமின்னு கூப்பிட போற அஞ்சு பேர்:-

1) தல கைப்புள்ள,
2) விவசாயி இளா,
3) மதுரை தங்கம் தீக்ஷ்ண்யா,
4) பாசமலர் அவந்திகா,
5) பாசமலர் தூயா,

தலைப்புக்கு காரணமறிய இங்கே சுட்டுங்கள்.;)

[பிற்சேர்க்கை:- இந்த மாதிரி மடத்தனமா தலைப்பு வைச்சதுக்கு நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்... :( ]

Friday, March 23, 2007

"When I was in US..."

"The United States of America is a country of the western hemisphere, comprising fifty states and several territories. Forty-eight contiguous states lie in central North America between the Pacific and Atlantic Oceans, bound on land by Canada to the north and Mexico to the south; Alaska is in the northwest of the continent with Canada to its east, and Hawaii is in the mid-Pacific. The United States is a federal constitutional republic; Washington, its capital, is coextensive with the District of Columbia (D.C.), the federal capital district."


இதெல்லாம் நான் சொல்லலைப்பா, விக்கிபீடியா'லே இருக்கு.. இப்போ எதுக்குடா இதுன்னு கேட்கிறீங்களா? அப்போ கிழே இருக்கிறத படிச்சி பாருங்க...

நம்ம பசங்க அடிச்சு பிடிச்சு புதரகத்துக்கு போயிட்டு திரும்பி வந்ததுக்குப்புறம் அவனுக பண்ணுற அலப்பறை இருக்கே, ஐயோ சாமி அதெல்லாம் சொல்லி மாளாதுய்யா? என்னோமோ செவ்வாய்கிரகத்துக்கு ராக்கெட்'லே போயி அப்பிடியே அவங்க வீட்டுவாசலிலே இறங்கின கணக்கா பந்தா கட்டுவானுக. காலையிலே எந்திரிச்சு குளிக்கனுமிங்கிற பழக்கம் எல்லாம் போயி கிழிச்சு போன கோணி மாதிரி இருக்கிற ஜீன்ஸ் ஒன்னே போட்டுகிட்டு அமெரிக்கா'லே இது வாங்குனது'ன்னு காட்டுறதுக்காக சட்டைபிராண்ட் பேரை வெளியே தெரியுறமாதிரி இருக்கிற நாலு சட்டையை வாங்கிட்டு வந்துட்டு போட்டு திரிவாய்ங்கே. அதுக்குமேலே நாத்தமருந்து வேற அடிச்சு அவனையும் கடிக்கலாமின்னு வர்ற கொசுவெல்லாம் கொன்னு போட்டுப்பிடுவாய்ங்கே.

ஆரம்பகாலங்களிலே முக்குகடையிலே கொஞ்சகாணு தண்ணி வாங்கி குடிக்கவே அந்த கடைக்காரருக்கு ஐஸ் வைச்சிட்டு திரிஞ்ச பயலுக எல்லாம் அங்கிட்டு போயிட்டு வந்ததும் அந்த கடைக்காரருகிட்டே ஐஸ் மினரல் வாட்டருன்னு ஐநூறு நோட்டை எடுத்து காட்டுவானுக.

அதே கடையிலே எட்டணா கொடுத்து ரெண்டு தேன்முட்டாயி வாங்கினதெல்லாம் மறந்துட்டு "கெட் மீ கேண்டி"ன்னு கேட்கிற பயலுக நாக்கை இழுந்து பிடிச்சு அறுக்கத்தான் தோணும்.நம்மளை பின்னாடியே வர்ற மணிநாயிக்கு 2ரூவா கொடுத்து டைகர் பிஸ்கட் வாங்கி போடலமின்னு நினைச்சா ஓ டாக்'க்கெல்லாம் ஏண்டா குக்கீஸ்'ல்லாம் போடுறீங்க?'ன்னு கேட்கறவங்களை ஏண்டா அமெரிக்கா பைபாஸ் ரோட்டிலே வச்சு லாரிகாரய்ங்கே தூக்காமே விட்டுயாங்கன்னு நாமே கடுப்போட கேட்டா அதிலேயும் அதுக்கு அவிய்ங்கே கொடுக்கிற நொணநாட்டிய பதிலு, "அங்கே நாங்கெல்லாம் பைபாஸ் ரோடு'ன்னு சொல்லமாட்டோம், Freeway'ன்னு தான் சொல்லுவோம்... :(

அடேய் அரைடவுசரு மண்டையங்களா நாலு மாசம் அமெரிக்கவிலே குப்பை கொட்டுனதுக்கே இம்பூட்டுடா, புஷ்'க்கு PA வேலை எதும் பார்த்துட்டு வந்துட்டா நம்ம பக்கத்திலே வர்றதுக்கு மோப்பநாயை விட்டு சோதனை பண்ணிப் பார்ப்பாய்ங்கே போலே!

சரி போதுமிடா வா இவனுக்கு நாலு பொரட்டா'வே வாங்கி கொடுத்து வீட்டுக்கு பத்திவிட்டுறனுமின்னு எப்பவும் போற ஹோட்டலிலே போனா அங்கேயும் வந்து ஆரம்பிச்சிறவனுக. நீங்க சமைக்கிறதுக்கு யூஸ் பண்ணிற ஆயில் ஃபேட் ஃபிரி'தானே'ன்னு விசாரிக்கிறதும், காசு கொடுக்கிறேன்னு சொல்லி பந்தாவா போயி கிரிட்டிட்கார்ட் அக்செப்ட் பண்ணுவீங்களா'ன்னு அவியங்கே பர்சிலே அடுக்கி வைச்சிக்கிற அஞ்சாறு அட்டைகளை எல்லாருக்கும் தெரியுனுமினும்கிறத காட்டிக்க கேட்கிறதும் நினைச்சு பார்த்தாலே இன்னும் நாலு அணுகுண்டுகளை போட்டு அவிய்ங்களை பூரா சிதைக்கனுமின்னுறே அளவுக்கு கோவம் வரும்!.

இம்புட்டு அலம்பல் பண்ணிக்கிட்டு இருக்கும்போது மூச்சுக்கு முன்னூறு தடவை, "What a hell, i feel sultry ,அங்கே அடிக்கிற குளிருக்கு நாங்க எப்பவுமே ஜெர்கின் போட்டுதான் திரிவோமின்னு ஏகத்தாள பேச்சு வேறே? இதெல்லாம் தாண்டி பெரிய கொடுமை என்னான்னா தான் ஒரு ஃபாரின்ரிட்டன்'கிறத காட்டிக்கிறதுக்கு வந்து பத்து மாசமானலும் தூக்கிட்டு திரியுற பேக் எல்லாத்திலேயும் ஃபிளைட் டேக்'ஐ மாட்டிக்கிட்டு திரிவானுக.

டிஸ்கி #1:-

இந்த பதிவு கிழ்கண்ட யாரையுமோ இல்லே அவங்க போட்ட போஸ்ட்'க்கு எதிர்வினை இல்லைன்னு அடிச்சு சொல்லிக்கிறேன்.

தேன் சிறில்
வெயிலில் மழை ஜி
ஜாவா பாவலர்

டிஸ்கி #2:-

தலைப்புக்கு காரணம் அவிய்ங்கே இங்க வந்ததும் அடிக்கடி சொல்லுற வார்த்தை:)

Thursday, March 22, 2007

ஏலேய் நாங்கெல்லாம் மருதக்காரய்ங்கே!!

மதுரை அல்லது மருத என எம்மக்களால் அழைக்கப்படும் சுற்றுவட்டாரத்தின் கலாச்சாரத்தையும் பழக்கவழக்கத்தையும் பிறரிடம் கொண்டுசேர்க்கும் ஊடகங்களான ஏடுகளும்,திரைப்படங்களும் காலம்காலமாய் முயற்சித்து கொண்டுருக்கின்றன. அம்முயற்சியில் வெற்றியெனும் நிலையை அடைய முயற்சித்த திரைப்படம் தான் பருத்திவீரன்.

எம்மண்ணுக்கே உரிய அந்த புழுதிகலந்த காற்றும், எப்பவோ நீர் கண்டு அதைப்போலே திரும்ப கிடைக்குமான்னு எதிர்ப்பார்த்து காத்து கிடக்கும் கரிசல் நிலம்,முன்னோர் காலத்தில் கரை புரண்டு ஓடியதுன்னு அடையாளம் காட்ட வாய்க்கால் இப்பிடி எல்லாவகையும் அப்பிடியே அந்த மண்ணின் மணம் மாறாமல் பார்க்கும் கண்களில் விரியும் படியாகவே காட்சியமைப்புகளில் காண்பித்துவிட்டு கதைமாந்தர் மட்டும் அதற்கு சம்பந்தமில்லாமல் அமைந்துவிட்டால் அது விழலுக்கு இறைந்த நீர்தான்.ஆனால் இந்த நீர் நிலங்களை பசுமைப்படுத்த விளையும் நிலங்களில் பாய்ந்தோடும் தன்மை வாய்ந்தது. பாய்ந்தோடும் வெள்ளம் ரசிக்கும் நம்மை கொஞ்சமாய் சிரிக்கவிடுகிறது,நம் நினைவு மூட்டைகளில் வேகத்துடன் பாய்ந்து அதை சற்றே பிரிந்துவிடுகின்றது. போலி ஒப்பனைப்பூச்சுகளில் பேசித்திரியும் எதார்த்த வசனங்கள் கொஞ்சம் கூட படத்திலே கிடையாது,அனைத்து நிஜமாய் நம் வாழ்வில் நாம் சாதாரணமாக பேசும் பேச்சு வழக்கே இப்படத்தின் பெரிய பலம்.ஆரம்பத்தில் இருந்து படத்தின் இறுதிக்காட்சியின் இறுதி வார்த்தை வரை அப்பிடியே மருதச்சுற்றுவட்டார மொழிவளத்தின் சுத்தநீரில் தோன்றும் பிம்பமே அது, கடுகளவெனும் பிசிறுதனை கண்டுபிடிக்க முடியவில்லை.பருத்திவீரனாக மார்கண்டய நடிகர் சிவகுமாரின் இளையமகன் கார்த்தி, அவருக்கு சித்தப்பா செவ்வாழையாக சரவணன், முத்தழகாக பிரியாமணியும் இன்னும் பலர் தங்களின் கதாப்பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப அப்பிடியே அச்சுஅசலாக வாழ்ந்து இருக்கின்றனர். படத்தின் தொடக்கத்தில் திருவிழா நடக்கிறது என விரியும் காட்சியில் ஒவ்வொரு அசைவிலும் கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், என கிராமத்து மக்களின் பொழுதுப்போக்கினையும் மொட்டை இடுதல், குழந்தைகளுக்கு காது குத்துதல்,பொங்கல் வைத்தல் என அம்மக்களின் தெய்வநம்பிக்கையும் விளங்க வைத்து இயக்குனர் கதையின் நாயகனான பருத்திவீரனை திருவிழாவில் எக்குத்தப்பாக கத்தியால் குத்துவதாக அறிமுகப்படுத்துகிறார்.அவனுக்கு பெயர் பருத்திவீரன் என்றாலும் அவ்வூரில் அழைக்கப்படும் சண்டியர் என்ற பெயருக்கேற்றமாதிரி வீரனின் கதாபத்திரம் அந்த காட்சியே விளங்கவைத்து விடுக்கிறது, அதேபோல் முத்தழகு என்னும் கதையின் நாயகியும் பள்ளியில் படிக்கும் மாணவியாகவும் அவளுக்கும் கதாநாயகன் மேலே தனிப்பட்ட அழமான பிரியம் இருப்பதாகவும்,அவனுக்காக தம் பெற்றோர்களை எதிர்க்குமளவு தறுதலையை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக வாழ்ந்து இருக்கிறார் பிரியாமணி. அவருக்கு ஏன் அப்பிடியொரு அவன்மேல் அப்பிடியொரு ஈர்ப்பு என்று சொல்ல வெள்ளைகருப்பு காட்சிகள் விரிகின்றன. ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இருக்கும் ஆலமரமும் அதன் வேர்களை பற்றி வானத்தில் பறக்கும் சிறுவர்களும், மரத்தின் நிழலில் அமர்ந்துவிளையாடும் சிறுமிகளும் அடடா காட்சியமைப்பு அட்டகாசம். சிறுவர்கள் விளையாட்டு சண்டையில் ஒரு சிறுவன் முத்தழகை கல்கிடங்கு or கிணத்துக்குள் தள்ளிவிட்டு ஓடிவிட வீரன் தான் தண்ணிரில் குதித்து முத்தழகை காப்பற்றுக்கிறான், அதிலிருந்து அவளுக்குள் பிறக்கிறது கன்னுக்குட்டி காதல். கடைசி காட்சியில் அவனோடு சேர்ந்து வாழப்போகும் போது அம்மாவை அறுவாளால் வெட்டப்போகுமளவுக்கு வெறித்தனமாகவும் மாறுகிறது அந்த காதல்.

கதாநாயகியின் அப்பாவாக பொன்வண்ணன் தன்னையொரு சாதீயபிம்பகாக காட்டி கொண்டு திரிகிறார்। தன் மனைவியின் அண்ணன் குறத்தியொருத்தியிடம் சாராயம் வாங்கிவிக்கும் செயல் தனக்கு பிடிக்காமல் போக, ஒரு பிரச்சினையில் அந்த பெண்மணி இவர்கள் ஆளு ஒருவரை கொலைச் செய்துவிட பழிக்குபழியாக அந்த பெண்மணியை கொலைசெய்கிறார்கள்। அப்பெண்மணியின் மகளை பொன்வண்ணனின் மனைவிஅண்ணன் கல்யாணம் செய்துகொண்டு வர தனக்குள் எந்திரிக்கும் சாதீயபிரவாகத்தில் அவர்களை பிரிந்து வருகிறார்। திருமணம் முடிந்தவர்கள் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து சாலைவிபத்தில் இறந்து போக அதை எடுத்து வளர்க்கும் சித்தப்பா செவ்வாழையாக நடித்து இல்லையில்லை வாழ்ந்துருக்கும் சரவணனின் கதாப்பத்திரம் அற்புதம், ஆனாலும் மகன்முறை வந்தாலும் அவனோடு தண்ணியடிப்பது என உறுத்தினாலும் கிராமங்களில் நிறையவே அந்தமாதிரியான சுவாரசிய மனிதர் பலரை பார்த்திரமுடியும்.
வழக்கமான சினிமாக்களில் கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கும் அதேமாதிரியான நேர்க்கோட்டு திரைப்படங்களில் கொஞ்சமே விலகியே இருக்க இயக்குனர் ரொம்பவே கஷ்டப்பட்டுருக்கிறார், அது எவ்வாறெனில் ஒருதலையாக காதலிப்போர் தீடீரென்று ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டு அப்பிடியே கனவில் வெளிநாட்டில் டூயட் பாட்டு பாடுவதாக காட்சியே வைக்கவில்லை.உசுரை காப்பத்தியவனுக்கே தன்னை அர்பணிக்க போவதாய் வாழும் கதாநாயகியும் ஆனால் அவளின் உள்ளன்பை நிரகரிக்கும் கதாநாயகியாய் நகரும் காட்சியமைப்புகளில் மெல்லிய நகைச்சுவை அதுவும் அந்த மதுரை மண்ணுக்கே உரிய குசுப்பு சேட்டைகளும் திகட்டவே திகட்டாத ஒன்று. மொட்டவெயில் அடிக்கும் கல்குவாரி உச்சியில் உட்கார்ந்து தண்ணியடிப்பதும், கம்பக்காட்டுக்குள்ளே வழியில் போவனை இழுந்து சிட்டு விளையாடி காசு பறிக்கும் காட்சிகள் அருமை.இப்பிடியே கலகலக்கப்பாக படத்தில் உச்சகட்ட காட்சியில் ஒரு சோகம் பிடிக்கப்போகிறது என்ற வழக்கத்துக்கு ஏற்ப காட்சியமைப்புகள் நகர்கிறது, முத்தழகு வீரன் முன்னாடியே அவன் சித்தப்பா பற்றி அவதூறாக பேசிவிட ஆத்திரப்பட்டு அவளை அவன் அடிக்க இன்னும் நகரும் காட்சிகளில் அவனுக்கும் காதல் பற்றிக்கொள்கிறது. எப்பிடியென்றால் முரட்டு கரும்பாறையை கீறி மெல்லியதாய் முளைவிடும் செடியை போல், கரட்டுகட்டு தாடிமுகத்தில் பூக்கும் புன்னகையில் பிறக்கிறது காதல், இதுவரைக்கும் நக்கல் நையாண்டியாய் நகர்ந்த கதை இருவரும் காதலிக்க ஆரம்பித்ததும் இன்னும் வேகமெடுக்கிறது.

இவ்வளவும் இயன்றவரை கதையை சொல்லிவிட்டு அதீத வலியை கொடுக்கும் உச்சக்கட்ட காட்சியை கொடுப்பதுதான் இப்படத்தின் இயக்குநரின் வெற்றியாக அவர் நினைந்திருந்தால் அது நூற்றுக்கு நூறு சதவிகத்தில் அவர் வென்று உள்ளார் என்றே சொல்லவேண்டும். எந்தவொரு கண்டிப்போ, முறைப்படுத்தப்பட்ட பாசப்பிணைப்புகள் அற்ற ஒருத்தன் தான் செய்யும் தவறுக்கு தன் உயிரில் நுழைந்த உறவை இழப்பதினால் மட்டுமே அவனுக்கு தான் செய்த தவறுகளுக்கு கிடைக்கும் தண்டனையென்று மவுனமாய் பதில் அளிக்கிறார் இயக்குநர்.

Wednesday, March 7, 2007

மடச்சாம்பிராணி'யின் பா.கே.ப.பி

பொன்ஸ்'க்கா என்னிடம் ஒப்படைத்த, பார்த்ததில், கேட்டதில் படித்ததில் பிடித்தது சங்கிலித்தொடர்'க்கு என்னத்தை எழுதலாமின்னு யோசிச்சி யோசிச்சு பார்த்தேன், அப்புறந்தான் தெரிஞ்சது முளை இருக்கிறவங்க யோசிச்சாதான் எதாவது வரும், என்னைமாதிரி காலிமனை கோஷ்டிகளுக்கெல்லாம் ஒன்னுமே தோணாதுக்கிற உலக ரகசியத்தை ரொம்ப நேரமா விட்டத்தை வெறிச்சு பார்த்திட்டே ஒரு பேனா கையிலே பிடிச்சிட்டு அதை வேற முகவாட்டுலே தட்டிக்கிட்டே இருந்தப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

"என்னத்தை படிச்சாலும் நீ ஒன்னத்தக்கும் தேறதே மடசாம்பிராணியா இருக்கே...? நாலு நல்ல விஷயத்தையாவது பார்த்து தெரிஞ்சுக்கோ அதிலே என்ன புதுவிஷயமிருக்கோ அதை கத்துக்கோ..!!" இது எங்கப்பா சன்ரைஸ் விளம்பரத்திலே வர்றமாதிரி அடிக்கடி உபயோகப்படுத்துற வார்த்தைகள்.. அதை பொறுமையா கேட்டாலும் இன்னமும் மடசாம்பிராணியாதான் இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சது :)

ஓகே ஸ்டார்ட் மீசிக்....பார்த்ததில்:-

ரஜினி ரஜினியாய் நடிச்ச எல்லாப்படங்களும் பிடிக்கும்.
ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், காயத்திரி......

கமலின் மிகைப்படுத்தபடாத நடிப்பில் வந்த பல படங்கள் பிடிக்கும்.


இந்தி:-

ஷோலே

லகே ரஹோ முன்னாபாய்

டான் (original & Duplicate)


ஆங்கிலம்:-The Pied piper of Hamelin. (புத்தகத்திலே படிச்சதை விட படத்திலே நல்லா இருந்துச்சு)


ERIN BROCKOVICH (ஜீலியா ராபர்ட்ஸ்'க்காக பார்க்கலாமேன்னு பார்த்த படம், ஆனா படம் பார்த்ததுக்கப்புறம் ஜீலியா பேர் மறந்து "எரின்" தான் கண்ணுக்குள்ளே தெரிஞ்சாங்க)


The Matrix (Neo'வே லினக்ஸ் Tux'க்கு கற்பனை பண்ணிட்டு படம் பார்த்தேன்)

இன்னும் லேட்டஸ்டா இதை ரொம்பவே ரசித்தேன்...

கேட்டதில்:-


நாயகன் படத்திலே கமல் பாடிய "தென்பாண்டி சீமையிலே.."

திருமதி பழனிசாமி படத்திலே வர்ற "பாத கொலுசு பாடிவரும்"

ரோஜா படத்திலே வர்ற "தமிழா தமிழா.. நாளை உந்நாளே"

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஜெயசந்திரன் பாடிய "ஒரு தெய்வம்"

பிரிட்டனியக்கா குதிச்சு குதிச்சு பாடிய "ஓ பேபி பேபி"

JLO'வோட "வெயிடிங் ஃபார் டுநைட்"

ரிக்கியோட "மரியா...மரியா..."

படிச்சதிலே:-

--கல்கி--
பொன்னியின் செல்வன்,
சிவகாமியின் சபதம்,

--சாண்டில்யன்--
கடல்புறா,
கடல்ராணி,
யவனராணி,
இராஜதிலகம்,
........

--வைரமுத்து--
கள்ளிக்காட்டு இதிகாசம்,
கவிராஜன் கதை,
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்,
பெய்யெனப் பெய்யும் மழை,
தண்ணீர்தேசம்,
வில்லோடு வா நிலவே,
கருவாச்சி காவியம் (இன்னும் படிக்க கொஞ்சம் பக்கங்கள் இருக்கு)

--தபூசங்கர்--
விழியிர்ப்பு விசை,
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்,
திமிருக்கும் அழகென்று பெயர்,
எனது கருப்புப்பெட்டி,
மழையானவள் (இது ஓசிலே போயிருச்சு)

--இன்னும் சில--

வடிவேலுவின் "வடி வடி வேலு வெடிவேலு"
ஆண்டாள் பிரியதர்ஷணியின் "மன்மதஎந்திரம்"
சிசு செல்லப்பாவின் "வாடிவாசல்"
தா.பாண்டியனின் "சேகுவாரா"
புலவர் செம்பியன் நிலவழகனின் "பழகுதமிழ்ப் பாட்டெழுதும் பாங்கு"
முனைவர் தமிழ்ப்பிரியனின் "அனைவருக்கும் பயன்தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்"

--என்றென்றும்--

ஐயனின் திருக்குறள்..
முண்டாசு கவிஞனின் அனைத்தும்..


இவ்வளவு தூரம் படிச்சிங்களே... வழக்கம்போலே மொக்கதனமான பதிவாதான் இருந்துச்சுல்லே... அப்போ நான் மடச்சாம்பிராணிதான்னு நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க....

சரி அடுத்து இந்தமாதிரி எழுதச்சொல்லுறதுக்கு என் கண்ணு முன்னாடி வந்துப்போன உருவம், வரவனை'யிலிருந்து கிளம்பி இப்போதைக்கு தூத்துக்குடி கலங்கரைவிளக்காக இருக்கிற குட்டப்புஸ்கி செந்தில் தான்..... ;)

வாங்க வரவனையான், நீங்க குடிச்சதிலே பிடிச்சது வில்ஸ்பிட்டரும் & பழைய மங்கனுமின்னு எங்களுக்கு தெரியும் ஆனா பார்த்ததிலே பிடிச்சதும், கேட்டத்திலே பிடிச்சதும், படிச்சத்திலே பிடிச்சதும்....?? என்னென்னு சொல்லுங்க...