Thursday, October 9, 2008

பெங்களூரூம் சிங்கபூரும்

சொந்த நாட்டை பிரிந்து வந்ததில் சிறிய வருத்தமும், சோகமும் சில சமயங்களில் சூழத்தான் செய்கிறது. படிப்பை முடித்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டாலும் பொட்டி தட்டும் வேலையிலிருந்து கொண்டு இப்பொழுதுதான் முதன் முறையாக வெளிநாட்டு வேலைக்காக சிங்கப்பூர் வந்திருக்கேன்.

சிறிது வருடங்களுக்கு முன்னர் பெங்களூரூ'ல் வேலையில் சேர்வதற்கு மதுரையிலிருந்து கிளம்பும் முன்னர் இருந்த சலனமான மனநிலை, பெங்களூரூ'லில் இருந்து சிங்கப்பூர் கிளம்பும் போதும் அதே மனநிலை நீர்க்காமால் இருந்தது. அன்றைய நாளில் இருந்தே அதே சொந்த ஊரை விட்டு பிரியும் சோகமும்,வருத்தங்களும் இருந்ததுக்கு பல காரணங்கள் உண்டு.

மதுரையோ அல்லது சென்னையிலோ வேலை பார்த்திருந்தால் இந்தளவுக்கு மற்ற மொழிகளை கத்துக்கனுமின்னு தோணியிருக்குமான்னு தெரியவில்லை. வேலைக்கு கிளம்பும் பொழுதோ இல்லை திரும்பி வரும் பொழுதோ பஸ்ஸில் உருப்படியாக இந்த இடத்துக்கு ஒரு டிக்கெட்'ன்னும், இறங்க வேண்டிய இடம் வந்ததும் தயவு செய்து சொல்லுங்கன்னு கன்னடத்தில் பேசவேண்டியதை மனப்பாடம் செய்துக்கொண்டே போனதினால் கூட அந்த ஊர்பாசம் வந்திருந்துக்கலாம்.

வழக்கமாக செல்லும் பஸ்ஸை தவறவிட்டதினால் ஏதோவொரு பஸ்ஸில் ஏறி எங்கயோ ஏறி எங்கயோ இறங்கிவிட்டேன். ஆபிஸ் இருக்கும் ஏரியா'வுக்கு செல்லும் பஸ் என எல்லாத்தையும் விசாரித்து தவறான பஸ்'ஸில் ஏறிவிட்டு கண்டக்டர் பாதி வழியில் ஓடும் பஸ்ஸில் இறங்க சொல்லி கத்த நானும் இறங்குறென்னு ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து ரோட்டில் தவறி விழுந்து, நொடியில் மரணம் என்பதை அன்றுதான் என்பதை புரிந்துக்கொண்டேன். ஆண்கள் இறங்கும் வழியில் இறங்க சொல்லி தானியங்கி கதவில் இறங்கும் பொழுதே அது மூடி விட தடுமாறி ரோட்டில் விழுந்து எழுந்திருக்கும் நொடி பொழுதில் பின் சக்கரம் தலையில் ஏறுவதற்கு மில்லி நொடிகள் இருந்தது. எப்பிடியோ தட்டு தடுமாறி எழுந்து கைகளில் கிடைத்த சிராய்ப்பு, முகம் முழுவதும் படர்ந்த தூசியும் தட்டிவிட்ட அதே நொடியில் வேடிக்கை பார்த்தவர்களும் விலகிபோயினர். அந்த நிமிடத்தில் கண்கள் இருண்டு, கை கால்கள் எல்லாத்திலும் சத்து குறைந்தாய், அழுகை வருவதற்குண்டான மனம் கலங்கியது. அந்த பெரிய கூட்டத்திலும் ஒரு கன்னடத்து பெண்மணி பேசிய ஆதரவு வார்த்தைகளுக்கு பின்னொரு நாட்களில் அர்த்தம் புரிந்தபொழுதுதான் அழுகை வெடித்து சிதறியது. சமயங்களில் அந்த இடத்தை கடக்கும் பொழுது மனது சிறிதாய் சலனப்படும்.

காவிரிப்பிரச்சினையில் நடைப்பெற்ற கடையடைப்பின் பொழுது சாப்பாட்டுக்கு பட்டப்பாடு'ஐ நினைத்து பார்த்தால் இன்னும் சற்றே கலக்கமாக இருக்கிறது. நடிகர் ராஜ்குமார் இறந்த பொழுது இங்கேயிருந்தால் சாப்பாட்டுக்கு சிங்கிதான் என ஊருக்கு கிளம்பினோம், பஸ் போக்குவரத்தை நிறுத்தி வைத்துவிட்டதால், ரெயில் பிடித்து செல்லலாமின்னு கார்ப்பரேஷன் சர்க்கிளிலிருந்து ஸ்டேசனுக்கு நடந்து சென்றோம். கலவரகாரர்கள் தமிழிலில் பேசி செல்பவர்களை அடிக்கிற மாதிரி வர, கன்னடம் சரியாக தெரியாத நாங்களோ எதுக்குடா வீட்டை விட்டு வெளியோ வந்தோமின்னு உள்ளுக்குள் உதறிய உதறலில் பூனை நடையாய் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். எப்பிடியோ எவ்வளவோ கஷ்டப்பட்டு வாயை கட்டுப்படுத்தி ஒரு வார்த்தை கூட பேசமால்தான் நடந்ததோம். பேருந்து நிறுத்தங்களிலில் இருந்த வினைல் போர்டுகளும், மின் விளக்குக்களும் உடைத்து எறியப்பட்டன, அந்தவொரு தருணத்தில் நாங்கள் நடந்து சென்ற பக்கத்திலிருந்த டியூப்-லைட் தூரத்திலிருந்து எறியப்பட்ட கல் அந்த லைட்'ஐ உடைத்து சிதற்றிற்று, மறுபடியும் நொடிபொழுது மரண கணம் மனதில் வந்து போனது.

மேயப்போகும் மாடு மிகச்சரியா கழனிபானையை தேடி போயி குடிப்பது போல் காலை எழுந்ததும் தங்கியிருந்த ஏரியாவுக்கு அருகில் இருக்கும் டீக்கடையில் டீ குடிந்தால்தான் அந்த நாளே முழுமை அடையாது. எத்தனை மணிக்கு எழுந்தாலும் அப்பிடியே முகத்தை கழுவி நேராக அந்த கடைக்கு சென்றுதான் நிற்கும். நான் வந்திருப்பது அவனுக்கு தெரிந்தாலும், கண்டுக்காமால் எல்லாத்தையும் கவனித்துவிட்டு "ஏனூ பேக்கு"ன்னு கேள்வி கேட்டதும் என்னை அறியாமாலே சிரித்துவிட்டு "நன்னுக்கு ஏனு பேக்குத்தாய்தோ அதே கொடி"ன்னு சொன்னதும் "ஏய் மகா ஒந்து பெசல் டீ ஆக்கோ"ன்னு சொல்லி மறுப்படியும் சிரிப்பான். எனக்கு தெரிந்த அரைக்கொறை கன்னடத்தில் அவனிடம் பேசும் பொழுது சிரித்துக்கொண்டே பதில் சொல்லிக்கொண்டே இருப்பான். கிளம்பி வரும் பொழுது அவனிடம் போயிட்டு வர்றேன்னு சொன்னதும், அவன் முகத்தில் தோன்றிய அந்த கவலையும், எனக்கு எல்லாத்தையும் பிரிவதில் பெரிய வருத்தமும் இருந்தது. அதே கடையில் உக்கார்ந்து வெண்குழல் ஒழிப்பு போரட்டம் செய்யும் பொழுது கவனித்து கொண்டே செல்லும் அந்த பகுதி டாக்டர், எனக்கு காய்ச்சல் வந்து அங்கு ஊசி போட சென்றால், அவரிடமிருந்து வரும் ரிக்கார்ட் ஸ்டேட்மெண்ட் இங்கே கட்டாயமாக சென்சார்ட்... :)

இன்னும் எழுதுவதற்கு எத்தனையோ இருந்தாலும் பெங்களூரூ'ஐ விட்டு கிளம்பும் பொழுது ஏர்போர்ட் டாக்ஸிலில் இருந்த அந்த அத்தனை நொடிகளும் இன்னும் என் மனதில் அப்பிடியே செல்லரிக்கிறது. சிங்கப்பூர் விடியக்காலை வந்திறங்கிய நொடியிலிருந்து பார்க்கும் எல்லாரிடமும் "I am really missing my Bangaluru"ன்னு சொல்லிக்கொண்டே இருந்தேன். செத்தால் புதைக்கப்படும் மண் மதுரை என்பது உறுதி என்பதினாலும் அந்த மரண கணங்களையும், வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்வதற்கு கற்று தந்த பெங்களுரூ'ஐ உண்மையாகவே மிஸ் செய்கிறேன்.




பெங்களூரூ ஏர்போர்ட்'ல் எடுத்த படம்... இந்த மாதத்து பிட் போட்டிக்கு இந்த படத்தை இன்னும் கொஞ்சம் டிக்கரிங் பண்ணி அனுப்பி வைக்கனும்....


சிங்கப்பூர்:-


இங்கு வந்து சேர்ந்தவுடனே போன் பண்ணுங்கன்னு கோவி.கண்ணா'ண்ணே மெயில் போட்டுருந்தார். கடைசிக்கட்ட பரப்பரப்பில் அவர் எண்ணை குறித்துக்கொள்ள தவறிவிட்டேன். அலுவலகம் வந்து சேர்ந்து எல்லா ஃபார்மாலிட்டிஸ்ம் முடித்து பொட்டியை தொறந்து இனிய பயணத்துக்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்து அண்ணனுக்கு போன் செய்தேன். ஹலோ சொல்வதற்கு முன்னரே "இராம் சொல்லுங்க, நல்லாயிருக்கீங்களா"ன்னு பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கினார். அதுவுமில்லாமல் இங்கயிருக்கும் அனைத்து சிங்கைபதிவர் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து மாலைவேளையில் நான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு நேராகவே சந்திக்க, ஜெகதிசனோடு வந்தார். அதன்பின்னர் ஜோசப், விஜய் என எல்லாரும் ஒன்றாக ஒன்று கூடி இந்த வலையுலக புஜபல பராக்கிரமங்களை அளாளவிக்கொண்டுருந்தோம். பேச்சு வாக்கில் அவருக்கு முன்னரே நாந்தான் முதலில் பிளாக் ஆரம்பித்திருக்கேன்னு சொல்லி வைத்தேன். அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது நிஜார் எக்ஸ்பிரஸில் எழுதிய மாதிரி உள்ளங்கை மாங்காணி தான்... :) வந்த முதன் முதல் நாளில் இருந்தே என்னை ஆள் கொள்ளவிருந்த தனிமையை விரட்டிய அவர்கள் அனைவருக்கும் நன்றி என ஒன்றை வார்த்தை சொல்லி அவர்களிடமிருந்து என்னை தனிமைப்படுத்திகொள்ள என்னால் முடியாது.

In Room


இன்னும் தங்கியிருப்பது ஹோட்டல் என்பதினால் இங்கே சரிவர நெட் இணைப்பு கிடைத்தப்பாடில்லை. புதிய அலுவலகத்திலும் எந்தவொரு அக்சஸ்'ம் இல்லாததினால் கொண்டு வந்த புத்தகங்களோடும், ஒவ்வொரு இடமாக சுற்றிவருவதாகவும் பொழுது போகிறது. நம்ம ஊரு பழக்கமான சுதந்திரமான கட்டுப்பாடு இங்கே செல்லுபடியாகவில்லை. சாலையை கடக்க பொறுமையாக ஐந்து நிமிடங்கள் நிற்கிறார்கள், யாரு என்ன கேள்வி கேட்டாலும் சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறார்கள், லிட்டில் இந்தியா'வே தவிர முழு சிங்கப்பூரையும் சர்வ சுத்தமாக வைத்து இருக்கிறார்கள்.

Little India

டிரைபேட் எடுத்துட்டு வரலை... :( தீபாவளி முடியுறதுக்குள்ளே வாங்கி இதே இடத்திலே இன்னொரு படம் எடுக்கனும்.




இவர்கள் பேசும் இங்கிலிபிசு'ம், தமிழில் பேசும் பொழுது கொப்பியும் பொத்தால் உச்சரிப்பும், ரெயிலை MRTதான் சொல்லனுமின்னு இவர்களின் கட்டாயப்படுத்தலும் கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கு. ஹிம் போக போக எல்லாம் சரியா போயிரும் போலே இருக்கு'லா.... :))