Wednesday, September 13, 2006

மதுரை புத்தகக் கண்காட்சி
எங்கூர் பக்கம் எதாவது கண்காட்சின்னா அதுவும் தமுக்கத்திலே சித்திரைப் பொருட்காட்சி இல்லன்னா மடீசியா போடுறே பொருட்காட்சிதான் பேமஸ். இப்போதான் மொதமுறையா புத்தககண்காட்சி போட்டுருந்தாங்க. நல்லாதான் இருத்திச்சு, சின்னப்புள்ளலே எதாவது பொருட்காட்சி போட்டா எங்கப்பாக்கிட்டே கூட்டிக்கிட்டு போகச்சொல்லி நச்சரிப்பேன். காரணம் என்னானா அங்கே போனா பெரிய தோச சைஸ்க்கு அப்பளம் சாப்பிடலாம், ராட்டினம் இருந்தா அதிலே சுத்தலாம். ஆனா இப்போ சில வித்தியாசங்கள் கண்கூடாக தெரிஞ்சுப் போச்சு, நாமும் வளர்ந்துட்டோமில்லே.
தமுக்கத்திலே நடுமையப் பகுதிலே அழகா செட் போட்டு நன்றாக செய்திருந்தார்கள் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்தவர்கள். சனிக்கிழமை என்பதனால் நன்றாக கூட்டம் வந்திருந்தது. சினிமா தியேட்டர்களிலும், ராஜாஜி,மாநகராட்சி ஈகோ பார்க்கிற்கு வரும் கூட்டத்தை விட கொஞ்சம்தான் அதிகம்.

நான் சனிக்கிழமை மாலைவேளையில் சென்று எனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்கின்றதா எனமுதலில் ஒவ்வோரு ஸ்டாலிலும் சுற்றிப் பார்த்தேன். சில புத்தகங்கள் தலைப்புக்களிலேயே வாங்கும்படி ஈர்த்தன, வெகுஜன எழுத்தாளர் எழுதிய சில புத்தகங்களும், சில புத்தகங்களில் புரட்டும் பொழுது கண்ணிற்கு தென்படும் வரிகளில் ஈர்க்கப்பட்டு வாங்க வேண்டுமென நினைத்த புத்தகங்கள் பல. இவ்வாறக படித்தும் ரசித்தும் சிலவற்றை வாங்க வேண்டுமேன முடிவு செய்து அன்றே வாங்கிய புத்தகங்களின் எண்ணிகை மொத்தம் பதினொன்று.

அன்றைய தினத்தில் ஒரு சுவராசியமான விஷயமெனில் நான் வாங்கிய கந்தப் புராணம், ஓஷோவின் மீண்டும் புல் தானாக வளர்கின்றது, பெரியாரின் பொன்மொழிகள் ஆகிய புத்தகங்களை தெரிவுச் செய்து பணம் செலுத்த சென்றப் போது அந்த பதிப்பகத்தாரின் காசாளார் என்னை உற்றுநோக்கி என்னவோ கேட்க வருவது போல முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மறுபடியும் சென்றேன். எவ்வகையான புத்தகங்கள் வாங்க வேண்டுமென அனைத்துப் புத்தகங்கள் அனைத்தையும் விருவிருவென எடுத்துக் கொண்டு பில்லுக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்தேன். ஆனால் முதன்முறையாக ஒரு ஸ்டாலில் ஆண்டாள் பிரியதர்சினியின் மன்மதஎந்திரம் கவிதைத் தொகுப்பை புரட்டிப் பார்த்து தாக்குண்டுப் போனேன், ஆம் கீழ்கண்டவைகள்தான் நான் முதலில் அப்புத்தகத்தில் வாசித்தவைகள்,

ஒருநாள் தினவு
உனக்கு
ஒருநாள் உணவு
எனக்கு.


நீங்கள் நினைத்தது சரியே... ஆம் அக்கவிதை தொகுப்பு பாலியல் தொழிலாளி பற்றியதே.

கண்ணதாசன்,பாலகுமரன்.வைரமுத்து,தபூசங்கர்,சாண்டில்யன்,இராமகிருஷ்ணன்,வடிவேல்! என அனைத்து தரப்பட்ட எழுத்தாளர்களின், மற்றும் நமது கெளதம் எழுதிய கிழக்கு பதிப்பகத்தாரின் வெளியிட்டான பத்துக் கட்டளைகள் புத்தகங்களும் வாங்கினேன். மொத்தம் நான் வாங்கிய புத்தகங்கள் முப்பத்தி ஒன்று. இம்முறை ஆங்கிலப் புத்தகங்களில் ஒன்றுகூட வாங்கவில்லை. ஆமாம் எத்தனை நாளைக்கு தான் ஒரு பக்கத்தை படிக்க லிப்கோ,கன்சியஸ்ன்னு பார்த்து அர்த்தம் கண்டுபிடிச்சு படிச்சிக்கிட்டு இருக்கிறது, நமக்கு என்ன தெரியுதோ அதை மட்டும் செய்வோமின்னு அதை வாங்கலை.

அங்கே கண்காட்சியிலே இருந்த எல்லா புத்தகத்தையும் தூக்கிட்டு வந்திரலமின்னு ஒரு நப்பாசை கூட இருந்துச்சு. நம்மளை மாதிரி விஐபி ஏதாவது தப்பு பண்ணினா ஏதாவது ஒரு மாளிகையிலே ஜெயில்ல வைப்பங்களாமே, நம்ம பெருசை போட்டுத் தள்ளிட்டு இந்த புத்தகக்கண்காட்சி இருக்கிற இந்த தமுக்கம் மைதானத்திலயே அடைச்சு வைக்கனுமின்னு கோரிக்கை விட வேண்டியதுதான், நல்லா ஓசியா பூரா புத்தகத்தையும் படிக்கலாம், கோழிகறி சாப்பிட்டுக்கிட்டே....

புத்தககண்காட்சி நிறைவுநாள் என்பதனால் நிறைய பிரபலங்களை காணமுடிந்தது. அதுவும் குறிப்பாக வைரமுத்து,ரவி தமிழ்வாணன் ஆகியோர் வருகைப் புரிந்திருந்தனர். அடுத்த வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் மதுரையில் புத்தகத்திருவிழா நடக்கும் என அறிவிப்பு கிடைத்தது. ஹீம் அடுத்த வருடமும் சென்று வந்து இதுப்போல் ஒரு பதிவிடுவேன்.