Thursday, March 22, 2007

ஏலேய் நாங்கெல்லாம் மருதக்காரய்ங்கே!!

மதுரை அல்லது மருத என எம்மக்களால் அழைக்கப்படும் சுற்றுவட்டாரத்தின் கலாச்சாரத்தையும் பழக்கவழக்கத்தையும் பிறரிடம் கொண்டுசேர்க்கும் ஊடகங்களான ஏடுகளும்,திரைப்படங்களும் காலம்காலமாய் முயற்சித்து கொண்டுருக்கின்றன. அம்முயற்சியில் வெற்றியெனும் நிலையை அடைய முயற்சித்த திரைப்படம் தான் பருத்திவீரன்.

எம்மண்ணுக்கே உரிய அந்த புழுதிகலந்த காற்றும், எப்பவோ நீர் கண்டு அதைப்போலே திரும்ப கிடைக்குமான்னு எதிர்ப்பார்த்து காத்து கிடக்கும் கரிசல் நிலம்,முன்னோர் காலத்தில் கரை புரண்டு ஓடியதுன்னு அடையாளம் காட்ட வாய்க்கால் இப்பிடி எல்லாவகையும் அப்பிடியே அந்த மண்ணின் மணம் மாறாமல் பார்க்கும் கண்களில் விரியும் படியாகவே காட்சியமைப்புகளில் காண்பித்துவிட்டு கதைமாந்தர் மட்டும் அதற்கு சம்பந்தமில்லாமல் அமைந்துவிட்டால் அது விழலுக்கு இறைந்த நீர்தான்.ஆனால் இந்த நீர் நிலங்களை பசுமைப்படுத்த விளையும் நிலங்களில் பாய்ந்தோடும் தன்மை வாய்ந்தது. பாய்ந்தோடும் வெள்ளம் ரசிக்கும் நம்மை கொஞ்சமாய் சிரிக்கவிடுகிறது,நம் நினைவு மூட்டைகளில் வேகத்துடன் பாய்ந்து அதை சற்றே பிரிந்துவிடுகின்றது. போலி ஒப்பனைப்பூச்சுகளில் பேசித்திரியும் எதார்த்த வசனங்கள் கொஞ்சம் கூட படத்திலே கிடையாது,அனைத்து நிஜமாய் நம் வாழ்வில் நாம் சாதாரணமாக பேசும் பேச்சு வழக்கே இப்படத்தின் பெரிய பலம்.ஆரம்பத்தில் இருந்து படத்தின் இறுதிக்காட்சியின் இறுதி வார்த்தை வரை அப்பிடியே மருதச்சுற்றுவட்டார மொழிவளத்தின் சுத்தநீரில் தோன்றும் பிம்பமே அது, கடுகளவெனும் பிசிறுதனை கண்டுபிடிக்க முடியவில்லை.பருத்திவீரனாக மார்கண்டய நடிகர் சிவகுமாரின் இளையமகன் கார்த்தி, அவருக்கு சித்தப்பா செவ்வாழையாக சரவணன், முத்தழகாக பிரியாமணியும் இன்னும் பலர் தங்களின் கதாப்பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப அப்பிடியே அச்சுஅசலாக வாழ்ந்து இருக்கின்றனர். படத்தின் தொடக்கத்தில் திருவிழா நடக்கிறது என விரியும் காட்சியில் ஒவ்வொரு அசைவிலும் கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், என கிராமத்து மக்களின் பொழுதுப்போக்கினையும் மொட்டை இடுதல், குழந்தைகளுக்கு காது குத்துதல்,பொங்கல் வைத்தல் என அம்மக்களின் தெய்வநம்பிக்கையும் விளங்க வைத்து இயக்குனர் கதையின் நாயகனான பருத்திவீரனை திருவிழாவில் எக்குத்தப்பாக கத்தியால் குத்துவதாக அறிமுகப்படுத்துகிறார்.அவனுக்கு பெயர் பருத்திவீரன் என்றாலும் அவ்வூரில் அழைக்கப்படும் சண்டியர் என்ற பெயருக்கேற்றமாதிரி வீரனின் கதாபத்திரம் அந்த காட்சியே விளங்கவைத்து விடுக்கிறது, அதேபோல் முத்தழகு என்னும் கதையின் நாயகியும் பள்ளியில் படிக்கும் மாணவியாகவும் அவளுக்கும் கதாநாயகன் மேலே தனிப்பட்ட அழமான பிரியம் இருப்பதாகவும்,அவனுக்காக தம் பெற்றோர்களை எதிர்க்குமளவு தறுதலையை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக வாழ்ந்து இருக்கிறார் பிரியாமணி. அவருக்கு ஏன் அப்பிடியொரு அவன்மேல் அப்பிடியொரு ஈர்ப்பு என்று சொல்ல வெள்ளைகருப்பு காட்சிகள் விரிகின்றன. ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இருக்கும் ஆலமரமும் அதன் வேர்களை பற்றி வானத்தில் பறக்கும் சிறுவர்களும், மரத்தின் நிழலில் அமர்ந்துவிளையாடும் சிறுமிகளும் அடடா காட்சியமைப்பு அட்டகாசம். சிறுவர்கள் விளையாட்டு சண்டையில் ஒரு சிறுவன் முத்தழகை கல்கிடங்கு or கிணத்துக்குள் தள்ளிவிட்டு ஓடிவிட வீரன் தான் தண்ணிரில் குதித்து முத்தழகை காப்பற்றுக்கிறான், அதிலிருந்து அவளுக்குள் பிறக்கிறது கன்னுக்குட்டி காதல். கடைசி காட்சியில் அவனோடு சேர்ந்து வாழப்போகும் போது அம்மாவை அறுவாளால் வெட்டப்போகுமளவுக்கு வெறித்தனமாகவும் மாறுகிறது அந்த காதல்.

கதாநாயகியின் அப்பாவாக பொன்வண்ணன் தன்னையொரு சாதீயபிம்பகாக காட்டி கொண்டு திரிகிறார்। தன் மனைவியின் அண்ணன் குறத்தியொருத்தியிடம் சாராயம் வாங்கிவிக்கும் செயல் தனக்கு பிடிக்காமல் போக, ஒரு பிரச்சினையில் அந்த பெண்மணி இவர்கள் ஆளு ஒருவரை கொலைச் செய்துவிட பழிக்குபழியாக அந்த பெண்மணியை கொலைசெய்கிறார்கள்। அப்பெண்மணியின் மகளை பொன்வண்ணனின் மனைவிஅண்ணன் கல்யாணம் செய்துகொண்டு வர தனக்குள் எந்திரிக்கும் சாதீயபிரவாகத்தில் அவர்களை பிரிந்து வருகிறார்। திருமணம் முடிந்தவர்கள் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து சாலைவிபத்தில் இறந்து போக அதை எடுத்து வளர்க்கும் சித்தப்பா செவ்வாழையாக நடித்து இல்லையில்லை வாழ்ந்துருக்கும் சரவணனின் கதாப்பத்திரம் அற்புதம், ஆனாலும் மகன்முறை வந்தாலும் அவனோடு தண்ணியடிப்பது என உறுத்தினாலும் கிராமங்களில் நிறையவே அந்தமாதிரியான சுவாரசிய மனிதர் பலரை பார்த்திரமுடியும்.
வழக்கமான சினிமாக்களில் கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கும் அதேமாதிரியான நேர்க்கோட்டு திரைப்படங்களில் கொஞ்சமே விலகியே இருக்க இயக்குனர் ரொம்பவே கஷ்டப்பட்டுருக்கிறார், அது எவ்வாறெனில் ஒருதலையாக காதலிப்போர் தீடீரென்று ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டு அப்பிடியே கனவில் வெளிநாட்டில் டூயட் பாட்டு பாடுவதாக காட்சியே வைக்கவில்லை.உசுரை காப்பத்தியவனுக்கே தன்னை அர்பணிக்க போவதாய் வாழும் கதாநாயகியும் ஆனால் அவளின் உள்ளன்பை நிரகரிக்கும் கதாநாயகியாய் நகரும் காட்சியமைப்புகளில் மெல்லிய நகைச்சுவை அதுவும் அந்த மதுரை மண்ணுக்கே உரிய குசுப்பு சேட்டைகளும் திகட்டவே திகட்டாத ஒன்று. மொட்டவெயில் அடிக்கும் கல்குவாரி உச்சியில் உட்கார்ந்து தண்ணியடிப்பதும், கம்பக்காட்டுக்குள்ளே வழியில் போவனை இழுந்து சிட்டு விளையாடி காசு பறிக்கும் காட்சிகள் அருமை.இப்பிடியே கலகலக்கப்பாக படத்தில் உச்சகட்ட காட்சியில் ஒரு சோகம் பிடிக்கப்போகிறது என்ற வழக்கத்துக்கு ஏற்ப காட்சியமைப்புகள் நகர்கிறது, முத்தழகு வீரன் முன்னாடியே அவன் சித்தப்பா பற்றி அவதூறாக பேசிவிட ஆத்திரப்பட்டு அவளை அவன் அடிக்க இன்னும் நகரும் காட்சிகளில் அவனுக்கும் காதல் பற்றிக்கொள்கிறது. எப்பிடியென்றால் முரட்டு கரும்பாறையை கீறி மெல்லியதாய் முளைவிடும் செடியை போல், கரட்டுகட்டு தாடிமுகத்தில் பூக்கும் புன்னகையில் பிறக்கிறது காதல், இதுவரைக்கும் நக்கல் நையாண்டியாய் நகர்ந்த கதை இருவரும் காதலிக்க ஆரம்பித்ததும் இன்னும் வேகமெடுக்கிறது.

இவ்வளவும் இயன்றவரை கதையை சொல்லிவிட்டு அதீத வலியை கொடுக்கும் உச்சக்கட்ட காட்சியை கொடுப்பதுதான் இப்படத்தின் இயக்குநரின் வெற்றியாக அவர் நினைந்திருந்தால் அது நூற்றுக்கு நூறு சதவிகத்தில் அவர் வென்று உள்ளார் என்றே சொல்லவேண்டும். எந்தவொரு கண்டிப்போ, முறைப்படுத்தப்பட்ட பாசப்பிணைப்புகள் அற்ற ஒருத்தன் தான் செய்யும் தவறுக்கு தன் உயிரில் நுழைந்த உறவை இழப்பதினால் மட்டுமே அவனுக்கு தான் செய்த தவறுகளுக்கு கிடைக்கும் தண்டனையென்று மவுனமாய் பதில் அளிக்கிறார் இயக்குநர்.