Wednesday, December 20, 2006

நந்தன்

"அம்மா.. அம்மா... என்னை தேடி நந்து வந்தானா??" என்று கேள்வியை எழுப்பியபடி ஒட்டமும்,நடையுமாய் வீட்டினில் நுழைந்தாள் விஜயா. "ஏண்டி எத்தனை தடவை ஒன்கிட்டே சொல்லிருக்கேன்? இப்பிடியெல்லாம் ஓடி வரதேன்னு? இன்னும் கல்யாணத்துக்கு முழுசா ஒரு வாரம் கூட இல்லைடி? எதாவது ரத்தகாயம் வாங்கிறாதேடி!"

"அம்மா! அதுக்கு நான் என்ன செய்யட்டும் சொல்லு? சின்னவயசிலிருந்தே நான் ஆக்டிவா வளர்ந்திட்டேன், அதுவுமில்லாமே நீதான் என்னை அப்பிடி வளர்த்தேன்னு பெருமையா ஊரெல்லாம் சொல்லிட்டு இப்போ என்னோட மேரேஜ் கமிட் ஆன கடைசி ரெண்டு மாசமா ஒரு டயலாக்கே கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி சொல்லிக்கிட்டே இருக்கே!"

"இதே மாதிரிதான் நானும் எங்கம்மாகிட்டே என் கல்யாணத்தப்பேயும் கேட்டேன்... அதுக்கு எங்க பாட்டிதான் பதில் சொன்னாங்க! என்னானா கல்யாணத்துக்கு முன்னாடி ஏதாவது காயம் பட்டா நம்மாலே அந்த விசேஷத்திலே முழுமனசா நிறைஞ்ச படி அனுபிவிக்கமுடியாதாம்! எப்பிடியாவது அந்த காயம் ஞாபகம் வந்து அதே பத்தி நினைச்சிட்டோமின்னா சின்னமுகச்சுழிப்பு வந்தாலும் அதே ஒருத்தவங்க பார்த்திட்டாலும் அட இந்த பொண்ணுக்கோ, பையனுக்கோ இதிலே சம்மதமில்லை'ன்னு நினைச்சிருவாங்களாம்!"

"தாயே, நான் கேட்டதுக்கு பதில் சொல்லுன்னா, வேறே என்னத்தையோ பேசிக்கிட்டு இருக்கே? நான் கேட்டது நந்து வந்தானா'ன்னு??"

"உன்னைமாதிரிதான் அவனும் டீச்சர் வந்துடாங்களா'ன்னு இதுவரைக்கும் அஞ்சுதடவை வந்து கேட்டுட்டு போயிட்டான்!,என்னடி உங்களுக்குள்ளே நடக்குது?? இனிமே அந்த பயங்கிட்டே பேசுறதே குறைச்சிட்டா நான் சந்தோஷப் படுவேன், ஆமா சொல்லிட்டேன். ஒனக்கு ஏதாவது சொல்லிட்டா போதும், அப்புறம் என்கிட்டே நாலு நாளைக்கு பேசமாட்டே! உங்கப்பாவும் ஒனக்கு சப்போர்டா அவரும் என்கிட்டே பேசமாட்டாரு.! ஹிச்.. என்ன பண்ண நான் மட்டும் அதே ஏன் செஞ்சேன்னு தனியே உட்கார்ந்திருப்பேன்."

"மம்! அதெல்லாம் இல்லே! நீதான் எதையும் விடப்பிடியா பிடிச்சு தொங்குவேலே, அதை ஒனக்கு எப்பிடி புரியவைக்கிறது, இதுதான் நல்லவழின்னு நானும்,அப்பாவும் முடிவு பண்ணினோம்! அதுதான் அந்தமாதிரி டிரிட்மெண்ட்!!" இவ்வாறு சொல்லிக்கிட்டு இருக்கும் சமயத்தில் "டீச்சர், டீச்சரு"ன்னு உள்ளே நுழைக்கிறான் நந்து அலைஸ் நந்தகண்ணன்.

"ம் வாடா! படுபாவி நானும் ரெண்டு நாளா ஒன்னே எப்பிடியாவது ஜெயிச்சிடனுமின்னு இருந்தேன், போச்சுடா, நான் என்னோட தோல்வியே ஒத்துக்கிறேன், தயவுச்செய்து சொல்லிடு சாமி.. என்னாலே முடியலேப்பா"

"என்ன டீச்சர், இப்பிடி சொல்லிட்டிங்க! நீங்க எப்பிடியாவது கண்டுபிடிச்சிருவீங்கன்னு நினைச்சேன். ஆனா கடைசியிலே இப்பிடி தோத்து போயிட்டிங்க?"

"நந்து இதிலே தோத்தது கூட கவலையில்லை ஆனா எனக்கு வருத்தமின்னா நீ இனிமே கொடுக்கப்போறே கமண்ட்லேதான், சும்மாவே என்னயே நீ ரொம்ப லந்து பண்ணுவே? அதுக்கும் மேலே என்னை நீ டீச்சருன்னு சொல்லி கூப்பிடுறேதே ஒரு நக்கலுக்குதானே!"

"டீச்சர், நோ பீலிங்ஸ்.. அது என்ன பாட்டுன்னு சொல்லிறேன். 'புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள் தன்னிலே பொதுவான வழக்கமாம்' க்கிறே வரி பாரதியார் எழுதின புதுமைப்பெண்'கிறே கவிதையிலே வர்ற ஒரு பத்தி அது! நீங்க ஃபெமினா'ல்லாம் வாங்கி படிக்கிறீங்க, ஆனா நம்ம கவிஞர் எழுதின கவிதைகள் தெரியலே'னு சொல்றீங்களே டீச்சர்!"

"ஓ அப்பிடியா! நான் இதுக்காவே ரெண்டு நாளா லைப்பேரியிலே கதியா கிடந்து கிட்டத்தட்ட நூறு புத்தகத்தையெல்லாம் படிச்சேன். அதிலேயும் பாரதி கவிதைகளும் படிச்சேண்டா, ஆனா அதிலே இந்த வரிகள் இருந்துச்சான்னு தெரியலை!"

"அதுக்கு படிச்சேன்னு சொல்லாதீங்க! சும்மா புஸ்தகத்தே மேஞ்சேன்னு சோல்லுங்க. என்னோமோ போங்க! ஒங்களே நான் டீச்சருன்னு சொல்லிக்கிறவே வெக்கமா இருக்கு! இனிமே கவலை படாதீங்க, நீங்க ஜெயிச்சாலும், தோத்தாலும் கிப்ட் பண்ணலாமின்னு புக் வாங்கி வந்தேன் இந்தாங்க."

"டேய், என்னாடா இது பாரதியார் கவிதைகளா.. ரொம்ப நன்றிடா, இனிமே நுனிப்புல் மேயமே முழுசாவே படிக்கிறேன். ஆனா நீ இவ்வளோ பேசியும் உம்மேலே எனக்கு கோவம் வராதுக்கு காரணம் கூட எனக்கு தெரியலைடா? நீ சின்னபிள்ளயா இருக்கிறப்போ நம்ம பக்கத்து வீட்டு பையன் இவ்வளோ அழகா இருக்கானேனு உன்னையே தூக்கிட்டு வந்து எங்கவீட்டிலே வச்சு விளையாடுவேன், ஆனா இப்போதான் பன்னிக்குட்டி ஏன் குரங்கு குட்டி கூட சின்ன வயசிலே அழகாதான் இருக்குங்குறது உண்மைதான் போலே! குரங்குன்னு சொன்னதும்தான் நீ சின்னவயசிலே செஞ்ச குறும்பெல்லாம் ஞாபகம் வருது, எவ்வளோ நாளா நான் ஆசையா வளர்ந்த ரோஜா செடியே தோட்டியோட உடைச்சது, என்னோட சைக்கிளிலே காத்து பிடிங்கி விடுறதின்னு, வீட்டுக்குள்ளே வந்ததும் கையிலே கிடைக்கிறதே விளையாடுறேன்னு சொல்லி அதே போட்டு உடைக்கிறது, ஐயோ நீ வர்றேன்னு சொன்னா போதும் எங்கம்மா உனக்காகவே பொருள்களையெல்லாம் ஒதுங்க வைக்க ஆரம்பிச்சிருவாங்க. இவ்வளவுதான் ஒரு லிஸ்டாவது போடமுடியுமா அது மொழக் கணக்கிலே நீண்டுக்கிட்டுதான் போகும்."

"டீச்சர், நீங்க சந்தடி சாக்கிலே என்னை பன்னி,குரங்குன்னு சொல்லிட்டிங்க, நல்லாயிருங்க.. அது என்னோமோ உண்மைதான் இனம் இனந்தே தேடி கண்டுபிடிச்சுதானே சேருமின்னு சொன்னது பொய்யில்லை!!"

"நீ வளர்ந்து பெரியவனா ஆனாலும் உன்னோட குறும்பு மட்டும் மாறலேடா, சரி என்னடா மேரேஜ்'க்கு வருவயில்லை??"

"இல்லே டீச்சர், அன்னிக்குதான் எனக்கு கணக்கு பரிட்சை, அடுத்து ஒருநாள்தான் லீவு பிஸிக்ஸ் எக்ஸாமுக்கு, அதுனாலே வரமுடியாது, எங்கேயிருந்தாலும் வாழ்க!ன்னு கட்டாயம் வாழ்த்துவேன்"

"ராஸ்கல்.. உனக்கு வரவர ரொம்ப சேட்டையா போச்சுடா! சரி அம்மா கூப்பிடுறாங்க, அப்புறம் மீட் பண்ணலாம்."

இந்நிகழ்ச்சிக்கு பிறகு விஜி தன்னுடைய கல்யாணவேலைகளில் முழ்கிப்போனாள், நந்துவோ தன்னுடைய மேல்நிலை இறுதி தேர்வுக்காக தயராகிக் கொண்டிருந்தால் அவ்விருவர்களுக்கும் தொடர்பு சுத்தமாக அற்றுப்போனது.வீட்டிலே விஜியின் அம்மாவும் அப்பாவும் கல்யாணத்திற்க்காக அடிக்கடி வெளியே சென்று விடுவதால் அவளுக்கு துணையாய் முதன்முறையாய் நந்து பரிசளிந்த பாரதியார் புத்தகம்தான். விஜியின் திருமணம் இனிதே முடிந்து தன் கணவருடன் வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றாள், அப்போதாவது அவனை சந்திகலாமின்னு முயன்ற வேளையில் அவன் பொது தேர்வு முடித்து என்டரன்ஸ் எக்ஸாம் படிக்க சென்னை சென்று விட்டதாக கேள்விப்பட்டு சிறிய வருத்தமுடன் செல்கிறாள். அதன்பின்னர் அவர்களுக்குள் எவ்விதமான கடிதப்போக்குவரத்தோ, தொலைப்பேசி பேச்சுகள் கூட அமையததால் இன்னும் சிறு காயமாகவே அவ்விருவரும் உணர்கின்றனர்.காலம் உருண்டு ஒடியது.

விஜி, கூடவே தன்மகனேயும் கூட்டிக்கொண்டு ஆறுவருடங்களுக்கு பிறகு இந்தியா வருகிறாள்.தன்னுடைய தாய்வீட்டுக்கு செல்லும் அவள் நேரில் சென்று பார்க்கவேண்டியர்களில் நந்துக்கே முதலிடம்.

"அம்மா நந்து எப்பிடிம்மா இருக்கான், என்னைப் பத்தி எதுவும் விசாரிச்சானா, இல்லேன்னா என்னை பத்தியாவது அவன்கிட்டே சொன்னீய்யா??"

"ஹிச் போடி! உன்னோட கல்யாணத்துக்கு அப்புறம் நீயே இப்போதான் இங்கே வாறே, உன்னோட பிரசவத்துக்கு கூட நான்தான் அங்கே வந்தேன், நீ போனதுக்கப்புறம் நீ வச்ச ரோஜா செடியும், நந்துவும் என்னை வந்து பார்ப்பாங்கன்னு நினைச்சேன், ரோஜாவிலே மட்டும் தினமும் வாசம் வரும், ஆனா இந்த வாலுபய ஏதோ ஊரிலே படிக்கிறான் மட்டும் அவனோட அம்மா சொல்லி மட்டும் தெரியும்,ஆனா அவனே ஒருநாள் கூட நேரிலே பார்க்கலை!."

"என்னம்மா சொல்லுறே! ஒருநா கூட பார்க்கலையா,அவங்கம்மா என்னா சொன்னாங்க,"

"என்னா சொல்லப்போறா, மிலிட்டரி மெடிக்கல் காலேஜ்'லே டாக்டருக்கு படிக்கிறான்னு பெருமையா சொல்லுவா, கடைசியா டீச்சர் எப்பிடியிருக்காங்கன்னு கேட்க சொன்னான்னு சொல்லுவா, அவ்வளவுதான்."

"அட பரவாயில்லையே என்னை மறக்கமே இருக்கானா?? ஆச்சரியம்தான், சரி வா உன்னோட பேரனை ஹாஸ்பிட்டலே காட்டி வரலாம், வந்த ரெண்டுநாளிலே அவருக்கு நம்மூர் வெயில் ஒத்துக்காமே கஷ்டப்படுறாரு"

விஜி தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறாள்.அங்கே மருத்தவர் ஆலோசனைகாக காத்திருக்கும் சமயத்தில் "டீச்சர், டீச்சர்"ன்னு நந்து குரல் கேட்டு ஆச்சரியத்துடன் அந்த இளைஞனே பார்க்கிறாள்.

"நீங்க யாருங்க? யாருன்னு அடையாளம் தெரியலை?? ஆனா சந்தேகத்திலே கேட்கிறேன்? நீங்க நந்து.. நந்தக்கண்ணனா??"

"ஆமா டீச்சர், என்ன அதுக்குள்ளே என்னை மறந்திட்டிங்க பார்த்தீங்களா? ஆனா உங்களே பார்த்தமாத்திரத்திலே அடையாளம் கண்டுபிடிச்சு கூப்பிட்டேனே??"

"டேய் நந்து, நீயா ரொம்ப ஆச்சரியமா இருக்குடா, ஆளே மாறிப்போயிட்டே, பார்க்க என்னோமே ஒரு பயில்வானட்டாம் இருக்கீயா, என்னலே கண்டுப்பிடிக்கமுடியலே, இன்னும் கூட நந்துக்கிட்டே தான் பேசிக்கிட்டு இருக்கோமான்னு சந்தேகமா இருக்குடா?"

"நீங்க என்ன டீச்சர், எங்கம்மாவே என்னை அப்பிடித் தான் பார்த்தாங்க, கேள்விப்பட்டு இருப்பிங்கன்னு நினைக்கிறேன், நான் மெடிக்கல் படிச்சது மிலிட்டரி காலேஜ்லே, அதுனாலேதான் இப்பிடி ஒரு மாற்றம்! ஆனா உங்கக்கிட்டே எனக்கு ஒரு மாற்றம்கூட தெரியலே? அப்பிடியே இருக்கீங்க, இந்த குட்டிபையன் வந்ததுக்கப்புறமும் அப்பிடியே இருக்கீங்க.. ஆமா இவன் பேர் என்ன??"

"பார்த்தியா! நாமே பேசிக்கிட்டே நம்ம நாட்டு விருந்தாளியே அறிமுகப்படுத்தி வைக்க மறந்துட்டேன். இவர் பேர் சொன்னாக்கூட நீ ஆச்சரியபடுவே!!"

"என்ன டீச்சர், விருந்தாளியா?? அப்போ இவரு அந்நாட்டு பிரஜையா??? சரி பேர் என்னான்னு சொல்லுங்க? ஒங்ககிட்டே என்ன கேட்கிறது, நான் அவருகிட்டே கேட்டுக்கிறேன், ஹாய் டியர் வாட் இஸ் யூவர் நேம்?"

"என்னோட பேரு நந்த குமார்"ன்னு தமிழிலே பதிலளிக்கிறான் குழந்தை.

"என்னடா பண்ண சொல்லுறே, எனக்கு இவன் பிறந்ததும் பேர் வைக்கனுமின்னு வந்தோப்பா எனக்கு தோணினது உன்னோட பேர் நந்து மட்டும்தான்"

"டீச்சர்! என்ன சொல்லுறீங்க, அப்படியென்ன நான் உங்க வாழ்க்கையிலே வந்துட்டேன்??"

"ஆமாண்டா எனக்குன்னு கூட பிறந்தவங்க யாரும் கிடையாது, இந்தா அம்மா முன்னாடியே சொல்லுறேன், எனக்குன்னு நானே பேசி, நானா சண்டை போட்டுக்கிட்டு அழுது,அப்புறமா சிரிச்சுக்கிட்டு தனியாளாதான் வளர்ந்தேன்.அப்புறமா நீ என்னோட வந்ததுகப்புறமா தான் பாசம்,சண்டை,குறும்புதனம், இன்னும் என்னோமோ உன்கிட்டே இருந்து எனக்கும் வந்துச்சு. நீ எனக்கு மானசீகமான சகோதரனா இருந்தேடா,ஆனா இப்போ நீ அதையும் தாண்டி இன்னோரு உறவுக்குள்ளே வந்துட்டே!"

"டீச்சர்! என்னை அறியாமலே இப்போ எனக்கு கண் கலங்குது!"

"என் பையனுக்கு நந்து'ன்னு பேர் வைச்ச ராசியோ என்னோமோ உன்னைமாதிரியே தான் அவனும் இருக்கான் அவன் உடைச்ச பொருளே மட்டும் குவிச்சு வச்சா அது எவரெஸ்டா உசரத்துக்கு வந்திரும். இன்னோன்னு ஹாஸ்பிடலுக்கு வந்திட்டா இவனை பார்த்து டாக்டருங்க எல்லாம் அலறுவாங்க??"

"ஏன் இவன் டாக்டருக்கு ஊசி போடுவானா??"

"இல்லேடா... டாக்டர்'ங்க ஹார்ட்பீட் டெஸ்ட் பண்ண ஸ்டெஸ்தஸ்கோப்பை காதிலே மாட்டிக்கிறோப்போ படக்குன்னு எடுத்து அதிலே கத்திருவான்,அவங்கதான் பாவம், அதுக்கப்புறம் அவங்களே பார்க்கவே பரிதாபமா இருக்கும். உன்னயே விட பத்து மடங்கு குறும்புக்காரன்தான். அங்கே பாரு இவனே டெஸ்ட் பண்ணின டாக்டர் காதை பிடிச்சிட்டே போறாரு பாரு! அதுதான் இவன் என்னோட இளையமகன்டா, குறும்புன்னா குழந்தைக எப்பிடி பண்ணுவாங்கன்னு எனக்கு சொன்ன நீதான் என்னோட மானசீகமான மூத்தமகன்...."

"முல்லைச் சிரிப்பாலே - எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய். ... இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ? அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ?"

Saturday, December 16, 2006

டங்கா.. துங்கா..மவுசுகாரி!!!!

நம்முடைய பண்டைய கலாச்சாரங்கள்,மக்களின் சிந்தனைகள், எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், ஆகியவற்றை பிற்சந்ததியினருக்கு ஆவணமாக திகழ்வதில் நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கிய பங்குண்டு என்பது திண்ணம். அவ்வகையில் கலை என்பது பொழுது போக்கு'க்காக மட்டுமில்லாமல் மக்களிடம் தகவலை கொண்டுச்செல்லும் ஊடகமாகவும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்தியே பரிமாற்றும் ஏணியெனவும் திகழ்கின்றது. நம்மோடு பின்னிபிணைந்து விட்ட பாரம்பரியத்தின்,இம்மண்ணின் மாசற்ற மங்காபுகழ் கலாசாரத்தின் அடிஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவைகளில் கிராமியத்து கலைகளுக்கு முக்கிய பங்குண்டு. அவ்வகையில் கரகாட்டம் நம்முடைய தமிழ் பரம்பரியக் கலை படிமங்களில் அழியா,அழியும் அழிக்கின்ற கலை வகைளில் ஒன்று.

"அலங்கரிக்கப்பட்ட குடத்தைத் தலையில் வைத்து கொண்டு அதே கிழே விழாமல் நிகழ்த்தப்படும் ஒரு வகையான தமிழக கிராமிய ஆட்டம்" என நம் பின்வரும் சந்ததியினருக்கு நாம் குறிப்பு'ன்னு எழுதி வைப்போம். நம்மால் முடிந்த ஒரு கலைச்சேவை?? ஆனால் அக்கலையில் ஈடுப்பட்டுள்ள கலைஞர்களில் அன்றாட வாழ்க்கையோ அவர்களே போல் வெளிச்சத்திடம் அண்டி மின்னி சாவும் விட்டில் பூச்சிகளென ஒரு சிறுநிகழ்வாகதான் இருக்கிறது.என்னுடைய படிக்கிற காலத்தில் எம் நண்பர் மேற்கொண்ட கிராமத்து கலைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக மற்றுமொரு நண்பனின் கிராமத்து வீட்டுக்கு சென்றிருந்தோம். அச்சமயம் அவனுடைய அண்டைவீட்டில் வசித்த கரகாட்டம் ஆடும் பெண்மணியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய சிறுவயதில் நிகழ்ந்த சந்திப்பு எனிலும் எவ்விதத்திலும் மறக்கவியலா தருணங்கள் அவை. ஒரு சாதாரணமாக வீதியிலோ, பேருந்து பயணங்களிலோ தென்படும் பெண்மணியாகவே அவருடைய தோற்றம். ஆனால் அவர் ஒரு கரகாட்ட கலைஞர்யென கேள்விப்பட்டதில் சிறிது வியப்புதான் தோணிற்று. அவரிடம் எவ்வகையான முகப்பூச்சோ,வெட்டி வெட்டி பேசும் ஒரு விதமான பேச்சோ எதுவுமில்லை. ஆனால் அதைவிட அவர் முகத்தில் ஒரு நிம்மதியாய் வாழும் ஜிவன் என்ற அறிகுறியான தேஜஸே இல்லை!!.அப்பெண்மணியை பார்த்தமாத்திரத்தில் நான் எழுப்பிய கேள்வி இதுதான், எப்பிடிங்க குடம் கிழே விழாமால் பேலன்ஸ் பண்ணி நடனமாடிறீங்க. அதுக்கு அவர் சிரித்தப்படியே "விடாமுயற்சியும்,கலையில் அர்ப்பணிப்பும், இருந்தால் எதுவும் இலகுதான்". அடுத்தகேள்வியாக உங்களின் நடனநிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானம் எந்தளவுக்கு உங்களின் வாழ்வாதரத்துக்கு சரியாக வருகின்றது. அதுக்கு அவரு அளித்த பதில் இன்றும் ஒரு வரி கூட மாறாமல் நினைவில் இருக்கு. "சிலவேளைகளில் வருடத்துக்கு ரெண்டு,முணு மாதங்களில் ஆட்டம் ஆட வாய்ப்பு கிடைக்கும்,மிச்சவேளைகளில் ஆங்கங்கே கிடைக்கும் கொலுத்து (விவசாய கூலி)வேலை பார்த்துதான் வயித்துக்கு கஞ்சி குடிப்பேன்".

ஆபாசங்களும்,அனர்த்தமான வரிகளும்,ரெட்டை அர்த்தம் தொணிக்கும் பாட்டுவரிகளுக்குதானே நீங்களெல்லாம் ஆட்டம் போடுறீங்க? இம்மாதிரியான சூடான கேள்வி கேட்டது என்னுடைய நண்பனின் அண்ணன். அதுக்கு அந்த பெண்மணியோ சிறிதும் தயக்கம் இல்லாமல் சொன்னது, ஐயா நான் அப்பிடியிருக்க போய்தாய்யா நாலுபேரும் கூடுறாங்க, ஆனா என்னோட ஒடம்புக்குன்னு ஒன்னு வந்து மொடங்கிட்டா யாருய்யா வந்து என்னை பார்ப்பாங்கன்னு சொல்லு?, நீங்க சொல்லுறதிலே ஆபாசஅசைவுகளும்,ரெட்டை அர்த்தம் தொணிக்கிற வரிகளும் எல்லார்தாப்பா ரசிக்கிறாங்க. காடுகரையிலே நெத்தி வியர்வை நிலத்திலே சிந்தி வேலை பார்த்து திரும்புற என்னோட சாதிசனங்க ரசிக்கதான் என்னோட கலை. அது அவங்களே பொறுத்தவரை அவங்களுன்னு இருக்கிற பொழுதுபோக்கு அம்சம். ஒங்களைமாதிரி கொழாப்போட்ட ஆளுகதான் தப்பா பார்த்துபிட்டுதான் ஏட்டிலே கண்டமேனிக்கு எழுதுறீங்க, ஆணுக்கும்,பெண்ணுக்கும் இருக்கிற காதலே வள்ளுவர் எல்லா நிலைகளிலும் எடுத்து எழுதி ஒலையாக்கிட்டு போனாரு. நாங்க எங்க வயித்து பொழப்புக்கு அதிலே சிலதை தொட்டு கலையாக்குறோம். ஒங்க சினிமாவிலே அடிக்கிற கூத்தே விட நாங்க செய்யுறது ஒன்னும் மோசமில்லையெப்பா சாமிகளா..

அவருடைய இத்தகைய பதிலுக்கு எங்களால் கொடுக்கமுடிந்த ஒரே ஒரு பதில் மெளனம் மட்டுமே. அவங்க நிலைல இருந்தது இது ஒரு மிகச்சரியான விளக்கம் தான். நம் போன்ற பார்வையாளர்களுக்கு அக்கலைஞர்களின் நிலை என்னவென்று தெரியும்?? நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் ஒவ்வொரு வகையாக தாக்கத்தே ஏற்படுத்தி செல்கின்றன்ர். அவ்வகையில் எனக்கு இப்பெண்மணியும் ஒருவர். சென்றமுறை ஊருக்கு சென்றிருந்த பொழுது பேருந்து நிறுத்ததில் இவரை பற்றி பலவகையான வர்ணிப்பு அடைமொழிகளோடு கரகாட்டம் நடைபெறும் என சுவரெட்டியே கவனித்தேன், ஆக அவருடைய வாழ்க்கை ஆட்டத்தில், நம் வாழ்கையோ ஓட்டத்தில்???.

Friday, November 17, 2006

பாண்டியநாடு சோறுடைத்து!!!

மிக பழமையான தமிழகநகரங்களில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களில் பிரதானமான இடம் மதுரை மாநகருக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வரலாற்று ஆய்வாளர்கள் வகுத்த காலஅளவீடுகளான கிமு.களில் முந்தியே ஒரு மொழிக்கே சங்கம் வளர்ந்த பெருமைக்குரிய நகரமாகும்.மாட மதுரை', 'மதுரை மூதூர்', 'மணி மதுரை', 'வானவர்உறையும் மதுரை', 'மாண்புடை மரபின் மதுரை', 'ஓங்கு சீர் மதுரை', 'மண மதுரை' எனப்பல்வேறு சொற்றொடர்களால் சிறப்பித்துக் கூறும் சிலப்பதிகாரம். 'மதுரைப் பெருநன்மாநகர்' என மணிவாசகர் பாடுவார் திருவாசகத்தில். 'மிக்குபுகழ் எய்திய பெரும்பெயர்மதுரை' என மதுரைக் காஞ்சி பெருமிதமுறும். 'தமிழ் கெழுகூடல்' எனப் புறநானூறும்,'பாடு தமிழ் வளர்த்த கூடல்' என இன்னுமொரு தமிழ்ப் பாடலொன்றும் மதுரையின்மாண்பினைஎடுத்துரைக்கும். (நன்றி திண்ணை)

இவ்வற்றையும் தவிர்த்து மதுரை இன்றைய நாள்களில் உணவுவிடுதிகளுக்கும் புகழ்பெற்றது என அனைத்துதரப்பு மக்களின் கருத்தாகும். அது ஒரு வகையில் உண்மையே என அந்த மண்ணைச் சேர்ந்தவன் என்றமுறையில் ஏற்றுக்கொள்வேன், பஞ்சம்பிழைக்க பெங்களுருக்கு வந்தப்போது எங்கூரு போலவே இங்கேயும் இரவில் எந்நேரமும் சிற்றுண்டி கிடைக்குமின்னு நினைத்து அந்த நினைப்பிலே மண்தான் விழுந்தது. இங்கே மிகச்சரியாக 9.30 மணிக்கெல்லாம் எல்லாக்கடைகளும் அடைக்கப்படும்.ஆனால் எங்க மதுரையில் நள்ளிரவு ஒரு மணிக்கு நாலு இட்லிக்கு நாலுவித சட்னி,சாம்பார் ஊத்தி சாப்பிட்டு வரலாம். உணவுகளின் வியாபாரத்துக்கு இரவென்றோ பகலன்றோ எவ்வித வேறுப்பாடுகள் கிடையாது. அவ்வகையான மூன்றுவேளைகளிலும் கிடைக்கும் வரிசைப்படுத்துக்கிறேன். இவைகள் அனைத்தும் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றுப்புறத்திலே அமைந்ததுதான்.


காலை:- சிலவருடங்களுக்கு முன்னர் மதுரை மாடர்ன் ரெஸ்ட்ரண்ட்'லே வெண்பொங்கல் சாப்பிட பெரிய கீயூ'வே நீக்குமின்னு சொல்லுவாங்க. ஆனா இப்போ அந்தளவுக்கெல்லாம் இல்லை.காலை வேளைகளில் கிடைக்கும் வெண்பொங்கல்,வடை ரொம்ப நன்றாக இருக்கும். அதுவும் பொங்கலில் முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து அதிலே தூவியிருப்பார்கள். அதுவும் நாலுபேரு சாப்பிடபோயிருந்திங்கன்னா அதிலே யாருக்கு நெய்முந்திரி வந்திருக்குன்னு கண்டுபிடிச்சி சாப்பிட்டிங்கன்னா நல்லா இருக்கும். அதேமாதிரி மசால் தோசையும் ரொம்ப நல்லாயிருக்கும். தோசைக்கு தொட்டுக்கிற கிடைக்கும் மல்லிச்சட்னி,மிளகா சட்னி,புதினா சட்னி எல்லாமே நல்ல சுவையா இருக்கும். இந்த ஹோட்டல் நேதாஜிரோட்டிலே இருக்குங்க.அப்பிடியே வெளியே வந்து விசலாத்திலே ஒரு ஸ்டராங்காப்பி சாப்பிடிங்கனா போதும்.அதே நேதாஜி ரோட்டிலே இன்னோரு ஹோட்டலும் ரொம்ப பேமஸா இருந்திச்சு ஆனா இப்போ இல்லே, அதோட பேரு ஆரியபவன்.மதியம்:- இவ்வேளைகளில் சாப்பிட நிறைய இடம் இருக்குங்க. அதுவும் தென்னிந்திய வகைகளுக்கு ரொம்ப நிறையவே இருக்குங்க. நான் சொல்லப்போறது ஒரு வடநாட்டு உணவகம், அதோட பேரு மோகன் போஜனலாயா. இங்கே நார்த்இந்தியன் தாலி'ன்னு கேட்டிங்கன்னா ஒரு பெரிய தட்டிலே நாலு சுக்கா சாப்பாத்தி தொட்டுக்க ரெண்டு,மூணு கறியும் கொடுப்பாங்க, அதுக்கு முன்னாடி அவங்க ஸ்பெசலான ரசமலாய் கொஞ்சக்காணு வாங்கி டேஸ்ட் பார்த்துறுங்க. வேணுங்கிற அளவுக்கு ரொட்டி வாங்கிசாப்பிட்டு சாதம் வாங்கி ரசமும், கெட்டிதயிரை ஊத்தி முடிச்சிட்டா வயிறு நிறைச்சிரும். அங்கேயே ஸ்வீட்பீடாவும் கிடைக்கும். இந்த விடுதி மேலக்கோபுரவாசல் வழியா வெளியே வந்திங்கன்னா அந்த பகுதி வீதியிலே தேடிக் கண்டுபிடிக்கலாம்.

இரவு:- மாலைவேளைகளில் நிறைய இடங்களிலே இட்லி,தோசையும் கிடைக்கும்.நான் சொல்லப்போறது ரொம்ப பேமஸான ஒரு ஹோட்டல், அதுவும் அரசியல் விவகாரமெல்லாம் நடந்தது. அது வேற எதுமில்லே முருகன் இட்லிகடைதான்.அங்கே போனீங்கன்னா ஒரே ஒரு ஸ்பெசல் ஐட்டமான பொடிவெங்காய ஊத்தப்பம் சாப்பிடலாம். நாங்கெல்லாம் அங்கே போனா அது மட்டுந்தான் சாப்பிடறது. ஊத்தப்பத்திலே நெய் ஊத்தி சும்மா செவக்க வேகவைச்சிருப்பாங்க, ஆர்டர் பண்ணி வரதுக்குள்ளே ரெண்டுஇட்லி நாலு சட்னி, பொடி எண்ணெய், சாம்பார் ஊத்தி சாப்பிட ஆரம்பிச்சிங்கன்னா வந்திரும். அப்பிடியே சூடா சாப்பிட்டா நல்லாயிருக்கும். இது மேலமாசிவீதியிலே இருக்கிற இம்மையிலும் நன்மை தருவார் கோவில் பக்கத்திலே இருக்கு.

கொறிக்க:- இது எல்லா ஊருகளிலும் கிடைக்கிறதுதான், ஆனா எங்க ஊருலே ஒரு ஸ்பெசலா ஜிகர்தண்டா.. இதுயென்னா கொறிக்கவான்னு கேட்கப்பிடாது. அது ஒரு டேஸ்டா இருக்கும். நல்லா வயிறு நிறைய சாப்பிட்டா இதே ஒரு கிளாஸ் அடிச்சா சும்மா சில்லுன்னு இருக்கும். அதே தயாரிக்கப் பயன்படுத்தப்படுவது பால் பொருட்களும், கடல்பாசியுக்கிறதனால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல்நலத்துக்கு கெடுதியில்லை. ஆனாலும் நம்மாளே ரெண்டு,மூணு கிளாஸ்தான் சாப்பிடமுடியும்.இன்னோன்னு நீங்க இரயிலில் மதுரைக்கு வந்திங்கன்னா ஸ்டேசனுக்கு எதிர்தாப்பலே இருக்கிற அதாவது தங்கரீகல் தியேட்டருக்கு எதிர்ப்பாலே இருக்கிறே டவுன்ஹால் ரோட்டு முனையிலே இருக்கிற லாலா கடையிலே சுடசுட அல்வா ஒன்னே வாங்கி ஒரு விண்டை எடுத்து வாயிலே போட்டு பாருங்க. அப்புறம் மதுரையே மறக்கவே மாட்டிங்க.

Tuesday, November 14, 2006

இது ஒரு "எதிர்வினை" பதிவு

For every action, there is an equal and opposite reaction....

சர் ஐசக் நீயூட்டன் என்ற விஞ்ஞானி சொல்லிருக்காருன்னு பள்ளிக்கூடத்திலே படிக்கிறோப்போ பாடபொஸ்தகத்திலே படிச்சேன். அதுக்கப்புறமா அதே பத்தியே சுத்தமா ஞாபகமே இல்லாமாலே போயே போச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தப் பதிவே படிச்சேதும் இந்த வெள்ளைக்கார தொரை கண்டுப்பிடிச்சு சொன்ன அந்த "எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு"க்கிற தத்துவம் தீடீரென்னு மண்டையிலே பல்பு எரிஞ்ச கணக்கா வந்திருச்சு.

அவரு சொன்ன அசைவப்பதிவிலே கொஞ்சுண்டுதான் அசைவம் இருத்துச்சு, ஆனா மக்கா இது பூராவுமே அசைவம்தான், அப்புறமா படிச்சுப் பார்த்துட்டு என்னா இது பூராவும் கவிச்சியா இருக்குது நீங்க எதிர்வினை கொடுக்கப்பிடாது ஆமா... அதுக்குதான் மொதல்லே உஷர்ரா சொல்லிக்கிறேன். இதுப்பூராவுமே அசைவம்தான், என்னாடா திரும்ப திரும்ப சொல்லுறேன்னு பார்க்காதிங்க... இது எங்கூரு ஸ்டைல்ப்போய்.


எங்கூருக்கு மதுரை, மருதை.மதுரோய்,அப்பிடின்னு நிறைய பேரு வச்சு சனங்க கூப்பிடுவாங்க, அதுக்கும் காரணம், பெருமை,நாட்டுப்புறகதைகள், புராணக்கதைகள் இருக்குங்கய்யா!. இன்னொரு பெருமையும் இருக்குங்க ,அதுஎன்னானா எங்கே எந்த இடத்திலே எந்தநேரத்திலேயும் வேணுமின்னாலும் வயித்துக்கு போடுக்கிற இரை ருசியா கிடைக்குமுங்க. தூங்கநகருக்குள்ளே எங்கே சுத்துனாலும் ஒரு முக்குச்சந்துலேயாவது ஒரு பொரட்டா கடையாவது, பாட்டி இட்லிக்கடையாவது இருந்துரும். அதிலே கொஞ்சமா எனக்குத் தெரிச்சே நல்லா ருசியா இருக்கிற மூணுக்கடையே சொல்லுறேன்.

இப்போ பஸ்ஸ்டாண்டை மாத்திட்டாலும் மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு வர்றே பெரியார் பஸ்ஸ்டாண்ட்க்கு வந்துதான் ஆகணும்.அதுனாலே அதை மையமா வச்சு ஹோட்டல் வழியே சொல்லுறேன். எப்போவது ஊருப் பக்கம் வர்றப்போ இதெயெல்லாம் ஞாபகம் வச்சு கடைக்கு போயி டேஸ்ட் பண்ணிப் பார்த்துருங்க!!!!

கறித்தோசை:- பேரே கொஞ்சம் வித்தியசமா இருக்கா. இது சிம்மக்கல் கோனார் மெஸ்ஸிலே கிடைக்கும். அது எங்கே இருக்குன்னா மதுரை பஸ்ஸ்டாண்ட்க்கு அடுத்து ரயில்வே ஸ்டேசன்.. அதே ஒட்டி போகிற மெயின் ரோட்டிலே அப்பிடியே நடந்திங்கன்னா அடுத்ததா போஸ்ட்டாபீஸ் அப்பிடியே நெட்டா பிடிச்சு வந்துருக்குங்க, எங்கயும் வளையவேணாம், ஒரே நெட்டா நடத்துறே வேண்டியதுதான். கடைசியா சிம்மக்கல் ரவுண்டாணாக்கிட்டே வந்துருவீங்க. அங்கே நாலு ரோடு பிரியும் அதிலே தமிழ்ச்சங்க ரோட்டுக்கு அடுத்த ரோட்டிலே சென்ட்ரல் லைப்பேரிக்கு எதிர்த்தாப்பலே கோனார் மெஸ் இருக்கு.

அங்கே போயி உட்கார்த்திட்டு ஒரு கறித்தோசை ஆர்டர் பண்ணிருங்க. அது எப்பிடி இருக்குமின்னா ஆனியன் தோசைலே ஆனியன்க்கு பதிலா கறிவருவலே சும்மா தளதளன்னு கொழம்போட இருக்குமில்லே அதே அப்பிடியே தோசைலே போடுருப்பாங்க. சும்மா அடிப்பாகம் நல்லா செவக்க வெந்தவுடனே அதே திருப்பிப் போட்டு தோசமாவும்,கறிவருவலும் ஒன்னா சேர்ந்து வெந்து, ஆகா சூப்பரப்பு. சட்னி,குருமா எதுவும் இல்லேமே ஹார்லிக்ஸ் விளம்பரத்திலே சொல்லுறமாதிரி அப்பிடியே சாப்பிடலாம்.

வெங்காயக் குடல்:- இதுவும் நல்லா டேஸ்டியான சமாச்சாரம்தான். இது எங்கேன்னா யானைக்கல் பஸ்ஸ்டாப்க்கு முன்னாடி இருக்கிற எதிர்த்து.எதிர்த்து இருக்கிற ரெண்டு ஹோட்டலேயும் கிடைக்குமுங்க. சின்னவெங்காயத்தே பொடிபொடியா நறுக்கி, ஆட்டுக்குடலே ஃபிரை பண்ணிக் கொடுப்பாங்க, அப்பிடியே நாலு பொரட்டாவே பிச்சுப்போட்டு குழம்புக்களை ஊத்தி இதேயும் சேர்த்து சாப்பிடமின்னா ஆஹா சொகமய்யா!!!!

ஈரல் மிளகுரோஸ்ட்:- ஹி ஹி இதே எழுதுறப்போ எனக்கே எச்சில் ஊறிருச்சுங்க. இது தெற்குமாசி வீதி சின்னக்கடைவீதிலே இருக்கிற ராபியா மெஸ்ஸிலே கிடைக்கும். நாலு பெசல்பொரட்டா, பெப்பர் ஈரல் ரோஸ்ட்ன்னு ஆர்டர் சொன்னா போதும், சும்மா கும்முன்னு சாப்பிட்டு வந்திரலாம், ரோஸ்ட்லே என்னா விஷேமின்னா ஈரலே மொத்தல்லே வேகவைக்கிறப்போ வெறும் உப்பு மட்டும் போட்டு வேகவைச்சு அப்புறமா தோசக்கல்லிலே அதெ பொடி,பொடியா நறுக்கி, அதிலே நிறைய பெப்பரை போட்டு வறுத்து அது பதமா கொஞ்சக்காணு எண்ணையே ஊத்தி அதே அப்பிடியே வாழையிலைலெ கொண்டுவந்து கொடுத்தவுடனே அதிலே ஒரு துண்டை எடுத்து சுடசுட வாயிலே போட்டா ஆகா.....


ருசியா சாப்பிடுறவங்களுக்கு இன்னும் ஹோட்டல் நிறைய இருக்கு.. அதே அடுத்த பதிவிலே போடுறேன். ஆனா கோவிஞ்சுக்காதிங்க, அது சைவம்தான். மதுரையிலே இருந்துட்டு ஜிகர்தண்டா, தெற்குமாசி வீதி சுக்குமல்லி காப்பி, மாடர்ன் ரெஸ்டாரண்ட் வெண்பொங்கல் பத்திச் சொல்லலேன்னா செத்து சொர்க்கத்துக்கு போனாலும் எனக்கு சோறுத்தண்ணி கூட கிடைக்காது. அதே அடுத்தப் பதிவிலே சொல்லுறேன்.

Friday, October 27, 2006

மதுரை வலைபதிவர் சந்திப்பு

முகம் தெரியா மனிதர்கள், சில வேளைகளில் கருத்து ஒற்றுமை என்பதை பேச்சளவில் கூட ஏற்றுக்கொள்ளா மனிதர்கள், இவ்வளவு முரண்பாடுகள் நிறைந்த எங்களை ஒன்றிணைந்தது தமிழ், அதுவும் தமிழ் வலையுலகு.

சிலவேளைகளில் பேச்சு,எழுத்து அனைத்திலும் ஆங்கிலமாகி போனவுடன் எனக்கு சின்ன சலிப்பு தட்ட ஆரம்பித்தது. என்னவொரு வாழ்க்கை அதுவும் நம்முடைய தாய்மொழியில் எழுதவோ, சுயகருத்துகளை பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளக்கூட வழிவகை இல்லமால் போயிட்டனோ என்று???.

அப்போது அறிமுகமான வலைப்பூ உலகத்தில் சிலவகைகளை பதிய ஆரம்பித்தேன். நான் சில பதிவர்கள் பதிவுகளை படித்து சிலாகித்து இருக்கிறேன், எப்படி இவ்வளவு அருமையாக எழுதுகிறார்கள், விவாதங்கள் நடத்துக்கிறார்கள் என்று. அதையெல்லாம் நான் செய்ய முயன்று தோற்றுப்போயிருக்கிறேன்.ஆனால் அவர்களின் அன்பை சம்பாரித்து(???) அவர்களின் குழுமத்தில் ஒரு அங்கத்தினராக இடம் பிடித்திருக்கிறேன். வலைப்பூ பதிவர் சந்திப்புக்கு கலந்துக் கொள்ள சென்றேன் என்றால் என்னையும் அங்கிகரித்து உள்ளார்கள் என்றே அர்த்தம்.எதுக்கு இம்பூட்டு பில்டப்ன்னு நீங்க கேட்கறது புரியுது, அது ஒன்னுமில்லைங்க என்னையும் ஒரு மனிசனா மதிச்சு மீட்டிங்கெல்லாம் கூப்பிட்டாங்களே அதுவும் அதை பத்தி ஒரு பதிவு வேறே போடப் போறோமின்னு ரெண்டு நாளா யோசிச்சு மேலே இருக்கிற ஒரு பாரா எழுதினேன்.:)

வலைப்பதிவர் சந்திப்புன்னா போண்டா,டீ இல்லாமல் கூட நடத்தி காட்டமுடியிமின்னு செய்து காட்டிய தருமி ஐயாவிற்கு ஒரு நன்றி. ஆனா எல்லாப்பேத்துக்கும் ஓசிலே பவண்டோ, கைமுருக்கு,அதிரசம் கிடைச்சுச்சே. முருக்கு, அதிரசம் கொண்டுவந்த மகேஷ்க்கு நன்றி.சந்திப்பு நடைப்பெற்ற இடமான அமெரிக்கன் காலேஜே பத்தி கொஞ்சுண்டு சொல்லிக்கிறேன். இது 1881 வருடத்தில் அமெரிக்க மெசனரிகளால் துவங்கப்பட்ட கல்லூரியாகும். அக்காலத்து பாணி சிவப்பு வண்ண அழகான கட்டிடங்களும், பசுமை நிறைந்த மரஞ்செடி கொடிகளால் சூழப்பட்ட அற்புதமான வளாகம்.

நான் போறப்பா சரியா மணி 3.05 ஆச்சு. மீட்டிங்க் 3 மணிக்குன்னு சொல்லிருந்தாங்க. நமக்குதான் இந்த பஞ்சு மிட்டாயே(Functionality)பிடிக்காதே. பேருக்கு அனுமதி வாங்குறமாதிரி சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லிட்டு உள்ளே போனேன். வாசலிலே தருமி,ஞானவெட்டியன் ஐயா,பிரபு ராஜதுரை,ஜி.ராகவன்,முத்து,மகேஷ் ஆகியோர் நின்று கொண்டு இருந்தார்கள்.தருமி ஐயா எல்லாரும் சொல்ற மாதிரி மொதல்ல இருந்த போட்டாவுக்கும் நேரில் பார்க்கிறதுக்கும் துளியும் சம்பந்தமில்லாமல்தான் இருந்தார். கொஞ்சம் நேரங்கழிச்சு வந்த வித்யாக்கா என்னா தருமி சார் நீங்க பார்க்க ராம் மாதிரி யூத்தா இருப்பிங்கன்னு பார்த்தா அதவிட ரொம்ப சூப்பரா இருக்கீங்க'ன்னு ஒரு கமெண்ட் அடிச்சார். அதிலே இருந்தது எனக்கு உள்குத்தா இல்லே தருமி ஐயாவுக்கு வெளிக்குத்தான்னு தெரியலே. எனிவே வித்யா அதை மைண்ட்லே வச்சிருக்கேன், எப்போ தேவைபடுதோ அப்போ வந்து இந்த மாதிரி பட்டும் படாமே யாருக்காவது ஒரு குத்து விட்டுக்கிறேன். அப்புறமா இவருதாங்க ஜிரான்னு சத்தியம் அடிச்சு சொல்லறவரைக்கும் அவருதான் ஜி.ராகவன்னு வித்யா நம்பவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. என்னா பண்ண போட்டோவிலே இருக்கிறமாதிரி எப்பவும் இருக்கமுடியுமா என்னா???ராஜ்வனஜ் வந்துச் சேர்ந்ததும் கல்லூரி வளாகத்திள்ளே இருக்கிற கேண்டினுக்கு சென்றோம்,. அங்கே இருக்கிற கல்பெஞ்சிலே உட்கார்ந்து கதைக்க ஆரம்பித்தோம். அதற்க்குள் வரவனையான் அவருடைய நண்பர் சுகுணாவுடன் வந்து சேர்ந்தார். வந்ததும் மொதல் கமெண்டே "போட்டோவிலே தான் ரொம்ப அழகா இருக்கீங்க" தருமியை பார்த்து. அனைவருடைய அறிமுகபடலம் தொடங்க ஆரம்பித்தது. அதில் ஞானவெட்டியன் ஐயா தன்னைப் பற்றி சின்ன உரைதான் ஆற்றினார். அதற்கப்புறம் யாருமே அறிமுகத்துக்காக வாயே திறக்கவில்லை.


எல்லாரும் மாதிரி நானும் தொடரும் போட்டுக்கிறேன்.ஆளாளுக்கு வந்துக்கிட்டு போட்டோவிலெதான் அழகாக இருக்கீங்கன்னு சக்கை ஓட்டு ஓட்டுறானுங்க.. இந்த பயலே மாதிரி நான் ஏன் மாத்தினேன்னா'ன்னு ஒரு போஸ்ட் போட்டு படத்தே மாத்திப்பிடணும்.

Tuesday, October 10, 2006

Goooood Morrrrrning Chenaaaaaaaai

என்னா தலைப்பை பார்த்து குழம்பமா இருக்கா???. அது ஒன்னுமில்லேங்க ஒரு மாசத்துக்கு முன்னாடிப் பார்த்த ஹிந்தி படத்தோட எபக்ட்'ங்க அது. படம் பேரு என்னானா லெஹெ ரஹோ முன்னாபாய்... (திரும்பவும் முன்னாபாய்). இப்போ அதுக்கும் இந்த தலைப்புக்கும் சம்பந்தம் என்ன???? சம்பந்தம் வரவைச்சிருவோம். நம்ம தமிழ்த் திரை கலையுலக ஞானி பத்மஸ்ரீ கமலஹாசன் நடித்த வசூல்ராஜா MBBS படத்தோட ஒரிஜினல் வெர்சனான முன்னாபாய் MBBS'வோட வித்தியசாமான கதைதளம் தான் இந்த லெஹெ ரஹோ முன்னாபாய்...

ஹி ஹி இப்போ புரிச்சிருச்சா, இது ஒரு படக்குறிப்பு பதிவு.முதல் படத்தோட ரெண்டாம் பாகமோன்னு போய் உட்கார்ந்தால் அது இல்லவே இல்லையின்னு சொல்லும்படியான காட்சிஅமைப்புக்களில் நிமிர்ந்து உட்காரவைக்கிறார்கள். படத்திலே கதையின்னு பார்த்தா மஹாத்மா காந்தியின் அஹிம்சாக் கொள்கைகளை நடைமுறை வாழ்க்கையில் உபயோகப் படுத்த முடியுமா என்ற தர்க்க ரீதியான முரண்பாட்டு கேள்விகளுக்கு முயன்ற அல்லது இயன்றவரை பதில் அளித்துள்ளது இக்கதைகளமும் கதைமாந்தர்களும்.

உதாரணத்திற்கு காந்தியாக நடித்த திலிப்'ன் நடிப்பும் முக பாவனைகளும் அருமை. காந்தி என்றதும் டாக்குமெண்ட்ரி படமான்னா கண்டிப்பாக இல்லை. இது ஒரு முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம்.

ஏதோ ஒரு புத்தகத்திலெ காந்தி சொன்னதா ஒன்று படித்த ஞாபகம் வருது.. "நான் இவ்வளவு காலம் உயிர் வாழ முக்கியக் காரணமே என்னுடைய நகைச்சுவை உணர்வு இருப்பதனால் தான்" அதை மெய்பிக்கும் வகையில் அருமையான காட்சியமைப்புகள். அதுவும் ஆரம்பத்தில் இருந்து சிரிப்பு சரவெடிகள் தான்.

"காந்தியை பத்தி ஏதாவது உனக்குத் தெரியுமா சர்கீயூட்" அப்பிடின்னு சஞ்சய்தத்(முன்னா) சர்கீயூட்டான வர்சிக்கிட்டே கேட்ப்பாரு. அதுக்கு வர்ஸி "அர்ரே பய்யா நோட்டு வாலா..."

அப்பிடின்னா படத்திலே காந்தியே வேறமாதிரியாக கொண்டுப்போயிறுவாங்ன்னு பீதி கிளம்பதான் செய்தது.ஆனா இந்தக் காட்சிக்கு அடுத்து உண்மையிலே காந்தியை பற்றி அறிந்துக் கொள்ள சஞ்சய்தத் ஒரு லைப்ரேரி சென்று காந்தியீசத்தே படிக்கச் செல்வார். அதிலிருந்து காந்தி தன்னுடைய கண்முன்னாடி இருப்பதாக உணர்க்கிறார். (இது ஒரு மனநோய் என்று பயந்து ஒரு மனோதத்துவ நிபுணரிடம் போவதாக கூட ஒரு காட்சி உள்ளது).


இவ்வாறாக விர்சுவல் காந்தியின் உதவியோடு காந்தியவாதி ஆவதும் ரேடியாவில் சில நேயர்களின் பிரச்சினைக்கு தீர்வுச் சொல்வதும்தான் இக்கதை.அத்தீர்வுகளில் ஒரு சின்ன உதாரணம்.

"என்னுடைய அப்பா பணம் முழுவதையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தேன். ஆனால் அது முழுவதும் நஷ்டமாகி விட்டது, இதை எப்பிடி என் தந்தையிடம் சொல்வது, அதை சொல்வதும் நான் தற்கொலைச் செய்துக் கொள்வதும் ஒன்றுதான். ஆகவே நான் இப்பொழுது தற்கொலைச் செய்துக் கொள்ளபோகிறேன்."

இதற்கு முன்னா+காந்தியின் பதிலாக "நீ பணம் முழுவதையும் இழந்தாய்.. சரி ஆனால் உன்னை இழக்க என்ன காரணம், பணம் போனது அது ஒரு வியாபாரத்தினால் தான் அன்றி உன்னால் அல்ல."

"சரி இதை என் தந்தையாரிடம் எப்பிடிச் சொல்ல, பணமில்லா வாழ்க்கையை நினைத்து பார்க்கமுடியுமா இங்கே?"

"உன் தந்தையிடம் போனைக்குடு... ஐயா நீங்கள் உங்கள் பணம் முழுவதையும் இழந்து விட்டிர்கள்!! உங்க பணம் போனா என்ன
உங்க பையன் இருக்கான்லே!! அதற்காக அவனை அடிக்காதீங்க!! அவனை அடிச்சீங்கன்னா வாழ்க்கை முழுசும் உங்ககிட்ட உண்மையே பேச மாட்டான்!!பணம் போனாலும் நீங்கள் உங்கள் மகனை இழக்க வில்லை. ஏனெனில் இதன்பின் ரயில்ல தலையைக் கொடுத்திருப்பான். அவன் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கவில்லை!!! ஆகவே விரைவில் உங்கள் பணம் திரும்ப கிடைக்கும் அது உங்கள் மகனின் உழைப்பில்"

எந்த ஒரு தவறோ அல்லது தோல்விக்கோ தற்கொலை தீர்வு அல்ல. என்பதை விளக்கும் காட்சியின் சிறிய எடுத்துக்காட்டு உரையாடல்கள் தான் மேற்கண்டவைகள். இதுப்போல் பல அருமையான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அப்புறம் ஹீரோயின் பற்றி சொல்லனுமின்னா அதுக்கு ஒரு தனிப் பதிவு தான் போடணும். வித்யாபாலனாம் அவங்க பேரு இதிலே கேரளத்து பெண்குட்டி வேறே, நிறைவான நடிப்பை படத்தில் அளித்துள்ளார்.

அதுவும் அவருடைய ரேடியோ ஸ்டைல் வார்த்தையான "Goooood Morrrrrning Mumbai" கேட்கிறப்பவே சூப்பரா இருக்குப்போய். அவருடைய செகண்ட் இன்னிங்ஸ் வீடுதான் இக்கதையின் ஒரு அங்கமாக இருக்கு.மொத்தத்தில் அருமையான படம் சாமியோவ் இது.....!!!!!

"This is the Era of the Bollywood Sequels"

சரி மறுபடியும் தலைப்புக்கு வர்றேன். இந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்தால் நடிக்கப் போவது நம்முடைய கலைஞானிதான். அதில் நடிக்கப் போகும் ஹீரோயின் சொல்லப்போகும் வசனம்தான் இது. ஹீரோயினா நமக்குத் தெரிஞ்ச இன்னொரு கேரள பெண்குட்டியான அசினை போடுங்கப்பா.. ..
ஹி ஹி..

நம்மளை மாதிரி விமர்சனம் எழுதினவங்க.
குமரன்
சந்தோஷ்
கழகப் போர்வாள்
துபாய் தங்ககம்பி
பினாத்தல் சுரேஷ்
விக்கிபீடியா

Friday, October 6, 2006

கல்யாணக் களை

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துச்சுங்க. அது என்னா கல்யாணக் களை கல்யாணக் களைன்னு சொல்லுறாய்ங்களே அப்பிடின்னா என்னான்னு, நாலஞ்சு பெருசுகளை கூப்பிட்டுக் கேட்டுப் பார்த்தேன். ஒன்னு எனக்கு ஆப்பு வக்கிற கணக்கா சரிப்பா உங்கப்பன்க்கிட்டே சொல்லி சிக்கிரம் கால்கட்டு போடச் சொல்லுறேன்னு சொன்னுச்சு. அட கெரகத்தே நமக்கு நாமே திட்டத்தின்படி ஆப்புவைச்சிக்கிற வேணாமின்னு தெரியமா கேட்டுட்டேன்னு சொல்லி ஓடியாத்திட்டேன். அப்புறம் நம்ம பட்டிக்காட்டு பெருசுக்கிட்டே கேட்டேன். அவரு அதுக்கு ஒரு புது விளக்கவுரை கொடுத்தாரு, என்னானா

"நல்லா விளைஞ்சு கிடைக்கிற வயக்காட்டுலே தேவையில்லமே இருக்கிற செடி,பதறுகளை தான் நாங்கெல்லாம் களைன்னு சொல்லுவோம், ஆனா கல்யாணக் களை'ன்னா உன்னைமாதிரி இளந்தாரி பயலுவெல்லாம் ஒனத்துக்கும் உதவாத களையா மாறிப்போயிடக் கூடாதுன்னு தாப்பா அப்பிடி சொல்லுறது"

அடபாவிங்களா ஒரு ஆளும் உருப்படியான விளக்கம் கொடுக்கமாட்டிங்களா, அப்பிடியே கொடுத்தாலும் நமக்கேதாய்யா ரிப்பிட்டுன்னு வருது. சரி என்னா பண்ணுறது சுயமாவே சிந்திச்சு நம்மகூடவே திரிஞ்ச நாலுப் பயப்புள்ளகளை கவனிச்சிப் பார்த்ததில்லே சின்ன க்ளு கிடைச்சது.

என்னோட கொலிக் ஒருத்தன் எப்பவும் சாயம் போன கலருலே ஒரு சட்டை அப்புறம் பேகிபேரல் பேண்ட்ன்னு தினமும் ஆபிஸ்க்கு வருவான். என்னாய்யா நீ எவ்வளவு பெரிய ஆளூ, நல்லா நாலு டிரெஸ் எடுத்து அதே போட்டுக்கிட்டு வரக்கூடாதா'ன்னா கேட்டா இந்த சட்டை என்னோட மொதல் செமஸ்டருலே எடுத்தது... இந்த பேண்ட்சர்ட் நான் +2 பாஸ் பண்ணினதுக்காக எங்க மாமா எடுத்து கொடுத்ததுன்னு லெக்சர் குடுப்பான்.அந்த லெக்சருக்கே பயந்தே எதுவுமே கேட்குறதில்லே. ஆனா இப்போ பயப்புள்ள கலரு கலரா டிரெஸ் போட்டுக்கிட்டு வர்றான். கூலிங்கிளாஸ், புது கேமரா செல்போன் வித் ஃப்ளுடூத்'ன்னு ஹைடெக்கா வேறே மாறிபோயிட்டான், சும்மாயிருக்க மாட்டாமே என்னாப்பா தீடீரென்னு மாறீட்டேன்னு கேட்டேன். அதுக்கு அவன் ஆமாம் என்னோட வுட்பீ'யோட கட்டளைங்கறான். இந்த மொபைல் அவங்க வாங்கி கொடுத்தது, அதிலே ஆட்இன் கார்டு போட்டு பேசிக்கிட்டு இருக்கோமில்லேன்னு உலகத்துக்கு தேவையான செய்தியே வேற சொன்னான்.

அடபாவி ஒரு செங்கல்கல்லு சைஸ் செல்'லே தூக்கிட்டு வெயிட்டான பார்ட்டியா இருந்தியே! என்னா ஆச்சுடா மக்கா உனக்கு??
பேசுங்கடா நல்லா பேசுங்க! செல்லுலே பேசியே செவிட்டு பயலா போயித் தொலைங்கடா...!

இன்னொரு பயப்புள்ள இவனும் என்கூடதான் குப்பை கொட்டுறான். இவனோட பேரே கல்லுளிமங்கன்னு வச்சிருக்கலாமின்னு நினைக்கத்தோணும். ஒரு முக்கியமான விஷயத்துக்குகூட வாயே தொறக்கமாட்டான். எதானச்சிம் ஒன்னுகேட்டா "ஓ இஸிட்" "ஓகே" இவ்வளவுதான் பதில்லுன்னு சொல்லி மெதுவா காத்தோட உளறுவான். ஆனா என்னா ரசாயான மாற்றம் நடத்துச்சோன்னு தெரியலே இப்போ பயப்புள்ளே நான்ஸ்டாப்'ஆ பேச ஆரம்பிச்சிட்டான். ஒருநாளு சாப்பிடறே நேரத்திலே எப்பிடி இருக்கு இந்த லைப்புன்னு கேட்டுத்தொலைச்சேன். பேசினான் பார்க்கணும் அய்யோ சாமி அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கான். ஓரமா கிடைக்கிற தீட்டின ஆப்புலே நாமே தேடிப் போயி உட்கார்த்தே கதையா பே..பே...ன்னு முழிச்சிக்கிட்டு சோத்தே தின்னேன்.

எங்கூரு பய ஒருத்தன் எப்பவுமே தேமே'ன்னு தான் திரிவான். நல்லநாளு பொல்லநாளுன்னு பார்த்தாலும் மொகத்திலே யாருக்கிட்டேயோ ரெண்டு அடிவாங்கின மாதிரியே திரிஞ்சுக்கிட்டுதான் இருப்பான். இப்போ போனவாரம் ஊருக்குப் போனப்போ ஒரு சாவுவீட்டிலே பார்த்தேன். அவன் பாட்டுக்கு எல்லாத்துக்கிட்டெயும் சிரிச்சிப் பேசிக்கிட்டு இருந்தான். அடபாவி கல்யாணவீட்டிக்கு வந்தா கூட சிரிக்க மாட்டான் ஆனா இங்கே எழவு வீட்டிலே வந்து எல்லா பயலெயும் லந்து விட்டு சிரிக்கிறானே'ன்னு அவனே தனியா கூப்பிட்டு போயி என்னாடா ராசா என்னா ஆச்சு உனக்குன்னு கேட்டேன். அதுதாண்டா கல்யாணம் காட்சின்னு சொல்லுறது'ன்னு பதில் சொன்னான். சரிதான் நமக்கெல்லாம் அதப்பத்தி என்னா தெரியப் போகுதுன்னு செவனேன்னு வந்திட்டேன்.

டிஸ்கி:-

இதெல்லாம் வயித்தெரிச்சல் வந்து நான் போடலேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.

கல்யாணக் களை'ன்னா கிழ்கண்டவைகள் தான் :-

1) நல்லா அழகான பயலுக பூராவும் அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிச்சிருவானுங்க!
2) புது டெக்னாலாஜியே உபயோகப் படுத்த ஆரம்பிச்சிருவானுங்க!
3) வாய் கிழிச்சுப் போற அளவுக்கு பேச ஆரம்பிச்சிருவானுங்க!
4) கேட்கிறவன் உண்மையா நம்ம பேசுறதே கேட்கிறானாகூட தெரியாமே பேசி கொல்லுறானுவே!
5) குறையாமே பத்து மணி நேரமாவது போன்லேயே பேசுறாய்ங்கே!

Friday, September 29, 2006

பேய்....! பிசாசு...! ஆவீ...!

முணு நாலு வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. கொஞ்சம் பயங்கரமான சமச்சாரம் வெறேங்க, அதனாலே பொறுமையவே படிங்க.

அப்பதேய்ன் குஷி படம் ரிலிஸ் ஆகி இருந்த சமயம், , இன்னிக்கு இந்த படத்தே பார்த்திராலாமின்னு அதுவும் ஞாயித்துகிழமை அதுவுமா நைட் ஷோவுக்கு நானு எங்க கோஷ்டி மொத்தம் ஆறுபேரு சகிதம் கூட்டமா கிளம்பி போனோம். போறேப்பவே ஏரியாக்குள்ளே ஏய் இங்கே பாரு போறமில்லே போறமில்லே... நைட்ஷோ பார்க்கப்போறமில்லேன்னு சத்தமா சவுண்ட் விட்டுக்கிட்டே வந்தான் பிரண்டு கணேசன்.. ஒரே சத்தமா கத்தி பத்துமணிக்கெல்லாம் தூங்கப்போறவய்ங்களெல்லாம் வெறுப்பேத்திட்டு தான் அந்த இடத்தே விட்டு கிளம்பிப்போனோம். பல பேரு வெளியே வந்து புலம்பிட்டுதான் போனாய்ங்க... அதிலெ ஒருத்தேய்ன்.

நிர்மல்:- "ஏலேய் உங்களுக்கு டிக்கெட்டே கிடைக்காதுங்கடா... போயிட்டு சும்மாதான் வரப்போறீங்க... தொலைஞ்சுபோங்கடா நீங்க திரும்பிவர வரைக்கும் இந்த ஏரியா கொஞ்சம் நிம்மதியா இருந்தா சரி.... "

கணேஷ்:- "ஆமாப்பா கலியுலக முனிவரு சாபம் விட்டாருடோய்... போடி போ போயி கவுத்தடிச்சு படு செவனென்னு, ஏலேய் நிருமலா நாளைக்கி நீ வேலைக்கு போயீ கழட்ட போகணும், எங்களுக்கு தான் அதில்லே அதுனாலேதான் நைட்ஷோ போறோம்....அப்புறம் மச்சான் வா தம்மடிக்க போலாமினு சாயங்காலம் கூப்பிடுவேல்லே அப்போதைக்கு பார்ப்போமிடி உன்னோட சாபத்தே..."

நானு:- "டேய் கணேசா ஏண்டா இந்த சவுண்ட் தேவையா... பேசமா வாடா, இப்போ யாரு கேட்டா நீயும் அவனும் தம்மடிக்கிற மேட்டரை.. சும்மா வாடா எங்கப்பா காதிலே விழுந்தா நானும் தம்மடிக்கிறேன்னு..நாளைக்கி என்னையே பெல்ட்'லே அடிப்பாருடா..... "

சங்கர்:- "டேய் ராமா உனக்காச்சிம் பரவாயில்லே.. உங்கப்பா உன்னையே வீட்டுக்குள்ளே வச்சு வெளுப்பாரு.... எங்க நைனா நடுரோட்டிலேயே ஓட ஓட விரட்டி அடிப்பாருடா...... "

கணேஷ்:- "தொடநடுங்கி பயலுகளா... ஏண்டா அப்பாவுக்கெல்லாம் இப்பிடி பயப்பிடிறீங்க.... உங்களுக்கெல்லாம் உங்கப்பாவே எப்பிடி வளர்க்கமின்னுத் தெரியலே... இப்போ என்னை எடுத்துக்கோ, நான் எப்பிடி வளர்த்துக்கிறேன் பாரு, நான் என்னா சொன்னாலும் சரின்னு கேட்பாரு எங்கப்பாரு..... "

நானு:- "உன்னைமாதிரி வீம்புக்கு விளக்குமாத்திலே அடிவாங்குற ஜோலி எங்களுக்கு வேணாமிட்டோய், ஆனா எதுக்கு போனமாசத்திலே ரெண்டுவாரம் உங்க அக்கா வீட்டுலே போயி கிடந்தே, பாண்டியமன்னன் திருச்சி உறையூருக்கு பட்டணபிரவேசம் போயிருந்தாரா... நீ மொத்து வாங்கீ ஊருக்கு ஓடிப்போனது நம்ம முக்குச்சந்து குஞ்சுகுளுவானுக்கும் தெரியுமிடா.... உனக்கு இந்த வாயி மட்டும் இல்லே, அந்த மணிநாயி கூட மதிக்காது..... வா செவனென்னு..."

வினோத்:-" நல்லா கேளு மாமா... நேத்திக்கு சின்னகடை தெருவுலே டீ குடிச்சிக்கிட்டு இருக்கிறப்போ இந்தபய வந்து என்னாடா ஊமையா உனக்கு குழந்தை பொறந்திருக்குன்னு சொல்லவே இல்லேன்னு எதிர்தாப்பலே நின்னுக்கிட்டு இருந்த என்னோட ஆளுக்கு கேட்கறமாதிரி சவுண்டுவிட்டான் செங்ககாட்டான்..!"

நானு:- "டேய் அடங்குடா.... உங்க ஆளு..அய்யோ கேட்கவே கொடுமைடா... ஏலேய் கணேசா வா பேசமே, பாரு ஊமையன் கூட சவுண்டுவிட ஆரம்பிச்சிட்டான்.... நாமேதான் படம் பார்க்கப்போறோம்... ஊருகாரயங்களுக்கு நம்மை படத்தை பயாஸ்கோப்பிலே காட்ட இல்லே...!"

வினோத்:-" டேய் அவனவன் காதல் பண்ணிபாருங்கடா... அப்போ தெரியுமில்லே, நாங்க படற அவஸ்தையெல்லாம்..!"

கார்த்திக்:-" அப்பா சாமிகளா தியேட்டர் வந்திருச்சிடா, மொக்கயனை முன்னாடிப்போய் டிக்கெட் எடுக்க சொன்னோம், எடுத்தானான்னு தெரியலெ..."

சரவணன்: - "டேய் பசங்களா, ஆறுப்பேத்துக்கும் டிக்கெட் எடுத்தாச்சிடா.!வாங்கடா உள்ளுக்க போவலாம். "

படம்மெல்லம் நல்லாதான் இருந்து ஒருபய கூட தூங்ககொள்ளமேதான் வெளியெ வந்தோம். அது ஞாயிற்றுக்கிழமைனலே சாதாரணமாகூட திறந்து இருக்கிற கடைகண்ணி எதுவுமே இல்லெ, அதுவும் மணி ஓன்னறையா ரெண்டொன்னு மறந்துப்போச்சு. அமிர்தம்,மீனாட்சி தியேட்டர்லே இருந்து தெற்குவெளி வீதி வரைக்கும் கொஞ்சகூட்டம் எங்ககூட வந்தாங்க. அதுக்கப்புறம் நாங்க மட்டுந்தேய்ன் நடந்துப்போறோம், ரோட்டிலே.... எங்க காலடி சத்ததை மீறீ ஒரு சத்தம் கேட்குது எல்லா பய காதுக்கும். டைமிலே எல்லாரும் திரும்பிப்பார்த்தோம் யாராவது பொம்பளையாலு யாராச்சிம் வர்றாங்களான்னு.... ஒருத்தரையும் காணோம்... லேசா பயம் அடிவயத்திலே இருந்து கிளம்பி ராக்கெட் கணக்கா ஜிவ்வ்ன்னு மேலே நோக்கி தொண்டை வழியா அம்பூட்டு பேருக்கும் பேசறேன்னு சொல்லி காத்தா வருது.நானு:- "டேய் சனிபயலுவலா.... பயமுருத்தினுமின்னே எவனாவது கொலுசே பைலே போட்டுக்கிட்டு சேட்டை பண்ணிருக்கீங்களா... சொல்லீருங்கடா பயமாஇருக்கு, ஏலேய் கணேசா ஒன்னோட வேலைதானா இது.? "

கணேஷ்:-" இல்லடா...நான் எதுக்கு செய்யபோறேன் இந்தவேலையெல்லாம்......நேத்து ராத்திரி HBO'லே பார்த்தா பேய் படமெல்லாம் ஞாபகம் வருதுடா எனக்கு."

சரவணன்:- "டேய் நீங்க ரெண்டுபெரும் பேசறப்போகூட அந்த ஜல்ஜல்ன்னு சத்தம் கேட்டிச்சுடா.! "

வினோத்:- "அடேய் இப்போயும் கேட்குதுடா, போறப்பவே எங்க அம்மாச்சி சொன்னுச்சு, ஏண்டா பார்த்து சூதனாமா வந்துசேருடா, இங்கே பாரு நாமெல்லே போயீ பேய்,பில்லி,சூனியத்தோட சேர்ந்து வர்றோம். "

நானு:- "ஊமை செவன்னெனு வாடா. இங்கே பாரு கார்த்தியும், இந்த சவுண்டன்(கணேஷ்)னும் விட்டா இங்கே ... போயிருவானுக போலே... "

சங்கர்:- "கிளம்புறநேரத்திலே கொஞ்சநஞ்சமா பேசினே சவுண்டா... இப்போ பேசுடி கண்ணு,இப்போ பேசு....? "

கணேஷ்:- "டேய் சங்கரா ஏண்டா இந்த மொக்ககுத்து குத்துறே.... விடுடா, இங்கே பாரு நானும் நாலு வார்த்தை பேசலாமின்னு பார்க்கிறேன், ஒன்னுஒன்னா அதுவும் காத்து காத்தா வருதுடா, என்னோட சட்டைவேட்டியெல்லாம் நனைச்சு போச்சுடா.! "

நானு:-" சவுண்டா உன்னோட சட்டை நனைஞ்சது சரி, வேட்டி எப்பிடிரா நனைச்சு போச்சு... அப்புறம் நம்மகூட வர்றது பொம்பளை பேயின்னு நினைக்கிறேன், கொலுசு சத்ததேன் கேட்குது! "

கார்த்திக்:- "ராமா இந்த ஆராய்ச்சிகேள்வி தேவைதானா இப்போதைக்கு..? "

சரவணன்:- "ஆமாண்டா அவனவனுக்கு அவன் உசுரு மேலேயும் கீழயும் போயி வந்து இப்போ பேசுறெப்போ தொண்டைகுழியிலே எட்டிப்பார்க்கிது. இவியங்களுக்கு ஆராய்ச்சியெல்லாம் பண்ணச்சொல்லுது இந்த நேரத்திலே, "

சங்கர்: - "டேய் இங்க பாருங்கடா அமிர்தம் தியேட்டர் நம்ம வீட்டிலே இருந்து பத்துநிமிசம் நடைதான்.... ஆனா பயத்திலே இப்போ அந்த முக்குலே இருந்து இங்கே வர்றதுக்கு ஒருமணிநேரம் ஆனா மாதிரி இருக்கு.... இன்னும் ரெண்டு சந்து போகணுமிடா, இப்போ ஈரக்கொலைலே என்னோமோ புடுச்சு ஆட்டுறமாதிரி இருக்குடா..! "

நானு:-" டேய் ஒன்னு பண்ணுவோமா.... பேசமே ஓடுவோமாடா இங்கெயிருந்து... நடக்க நடக்கதானே நம்மக்கூட அந்த சத்தம் வருது... !"

ஓடியே எங்கதெருமுனைக்கு வந்துட்டோம், ஆனா அந்த சத்தம் நிக்கலே.... இங்கே இன்னோரு வினை ஆரம்பிச்சது, ஊருக்குள்ளே இருக்கிறே அம்பூட்டு நாயும் அங்கேனேதான் கிடந்துச்சுக, நாங்க ஓடி வந்தவுடேனே என்னோமோ வேத்துகிரகத்திலே இருந்து வந்தக மாதிரி தொரத்துக அம்பூட்டு நாயிகளும் எங்களை, ஓடினாதானே கொரைக்குதுன்னு மெதுவா மறுபடியும் நடக்க ஆரம்பிச்சோம், பேயிக்கிட்டே தப்பிச்சு நாயிக்கிட்டே மாட்டிக்கிட்டே கணக்கா சேர்த்துதான் மறுபடியும் கொரக்க ஆரம்பிச்சதுக, அப்போ ஒரு அதிசயம் நடந்த மாதிரி எங்க தெரு மணி நாயி சத்ததே கேட்டு ஓடி வந்துச்சு, அதுக்கு நாங்க பிஸ்கெட்ட்ல்லாம் வாங்கிப் போட்டுறதினாலே ஒரு சவுண்ட் விட்டுச்சு, அந்த எபக்ட்க்கு எல்லா நாயிகளுக்கும் ஓடிப்போயிருச்சுக,

நானு:-"அப்பா சாமி மணி நாங்க வாங்கி போட்ட பிஸ்கெட்டுக்கு ஒரு உதவி பண்ணியே, அப்பிடியே எல்லார் வீட்டு வரக்கும் வந்து ட்ராப் பண்ணிட்டு போயிரு..!!!"

கணேஷ்:- "ஏலேய் யாருகூட பேசிட்டு வர்றே நீயீ.. ??"

நானு:- "நம்ம கொலச்சாமி மணிக்கிட்டே!!"

கணேஷ்:- "அதுச்சரி நாயிக்கெல்லாம் பேசிக்கிறீங்களா..பேசுங்க பேசுங்க.. இன்னும் பாரு அந்த ஜல்ஜல் சத்தம் கேட்குது.. இந்த மணிநாயி வந்தும் கேட்குதினா எவன் ரத்தம் குடிக்க பின்னாடி வருதுன்னு தெரியலே.. ??"

சவுண்டன் பேசி முடிக்கிறக்குள்ளே மணி அவன் காலே கடிச்சிட்டு ஓடிப்போயிருச்சு, என்னா பிரச்சினையோ அவங்க ரெண்டு பேருகளுக்குள்ளே, என்னா சண்டைன்னு கூட தெரியலே.. அதுக்கப்புறம் அந்த பயலே இழுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி அவங்க வீட்டுக்கு போயி தகவல் சொல்லி முடியறதுக்குள்ளே விடிஞ்சுப்போச்சு.

ஆனா விடியறவரைக்கும் விடாமே திரும்ப திரும்ப ஜல்ஜல்ன்னு எல்லா பய காதிலேயும் கேட்டுக்கிட்டேதான் இருந்திச்சு.

Monday, September 25, 2006

நல்லவேளை இன்னிக்கு திங்கட்கிழமை

நல்லவேளை இன்னிக்கு திங்கட்கிழமை, அதனாலே கொஞ்சமாச்சிம் வேலைய பாருங்கப்பா, கிழே இருக்கிற படங்களையெல்லாம் பார்த்துப்பிட்டு மளமளன்னு வேலைகளை தொடங்குங்க.......


Feeling like this as today is Monday.Cheer up and enjoy your work.

Tuesday, September 19, 2006

நான் ஏன் மாத்தினேன்னா

இதுவும் நான் எப்பவும் எழுதுறமாதிரி சுயபுராணந்தான். அதுவும் பெரிய சோககதை வேறங்க. என்னா நாங்க உன்னோட பதிவு படிக்கிறதே ஒரு கொடுமையான சோகம்தான்னு யாருப்பா புலம்புறது. அப்பிடியெல்லாம் பேசப்பிடாது, நாளப்பின்னே வந்துப் போற இடமா இல்லயா, நான் வேற உங்க பதிவுக்கெல்லாம் வரணுமா இல்லியா, அதுனாலே என்னாடோ சோகத்திலே நீங்களும் இப்போ கலந்துகங்க, அப்புறமா உங்களுடோதே எடுத்து விடுங்க, நானும் வந்துக்கிறேன். இதத்தான் வள்ளுவரய்யா என்னா சொல்லிருக்காருன்னா....

"நகுதற் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு."

குறளிலே இருக்கிறமாதிரி உங்களோட கருத்தே சொல்லிவீங்கன்னு நினைக்கிறேன். சரி இவ்வளவு பில்டப் போதும், விஷயத்துக்கு வர்றேன். ஒரு விஷயம் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமா இருந்திருக்கும், என்னாடா திடீரென்னு ப்ரொப்பல் போட்டோவே மாத்திடானேன்னு....!?

நானும் என்னோட பிரண்டும் கொஞ்சநாளைக்கி முன்னாடி பெங்களூரு போர(Forum)மில்லே இருக்கிற லேண்ட்மார்க்கில்லே புத்தகம் வாங்கலாமின்னு போயிருந்தோம். நாங்கல்லாம் எப்போ அங்கே போனால்லும் தமிழ்புத்தகங்கள் இருக்கிற பக்கத்திற்குத்தான் போறது. அதுக்கு என்னா காரணமின்னு நான் சொல்லமே உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமின்னு நினைக்கிறேன். அன்னிக்குன்னு பார்த்து பொன்னியின் செல்வனோட இங்கிலிபிஸ் பதிப்பு அந்த பகுதிலே இருந்துச்சு. நான் சும்மா இருக்கமாட்டமே அதை எடுத்து என்னோட பிரண்டுக்கிட்டே டேய் இதை வாங்குவோமான்னு கேட்டேன், எதுக்குன்னா அங்கே நாலு பொண்ணுங்க எங்களை மாதிரி புஸ்தகம் பொறுக்கிக்கிட்டு இருந்தாங்க. சரி அதுககிட்டே படம் காமிக்கிலாமின்னு.

பாவிபய நான் கேட்டகேள்விக்கு அவன் பதில் சொல்லனுமின்னு

"ஏண்டா நாமேதான் ஏற்கெனவே அதைத்தான் தமிழிலேயே படிச்சிட்டுட்டொமில்லே அதுமில்லேமா இதைப் படிச்சால்லும் உனக்கு புரியப்போகுதா" ன்னு கேட்டுப்பிட்டான்.

அப்பவாச்சிம் சும்மா நான் இருந்திருந்தா கொஞ்சநஞ்ச மானமாவது மிச்சிருக்கும்.,

"ஏன் நம்மக்கிட்டேதான் டிக்சனரி இருக்கே, இதெ எழுத்துக்கூட்டி வாசிச்சு அதிலே அர்த்தம் பார்த்துக்கிலாம்"ன்னு சொல்லித்தொலைச்சேன்.

அவ்வளவுதான் அந்த கட்டடமே இடிச்சுப் போறமாதிரி ஹெக்கேபுக்கேன்னு சிரிச்சுத் தொலைச்சானுவே எல்லா பயலுவேல்லும், சரி பரவாயில்லே நமக்கும் ஹீயூமர் சென்ஸ் இருக்குன்னு நினைச்சு நானும்தான் சேர்ந்தே சிரிச்சுத்தொலைச்சேன்.அதிலே ஒரு பொண்ணு பிரண்டுஸ் படத்திலெ விஜய் விடாமே சிரிக்கிறமாதிரி சிரிச்சிக்கிட்டே அதுகூட வந்த இன்னோரு பொண்ணுக்கிட்டே இந்த கோமாளிதாண்டி பிலாக்கெல்லாம் எழுதுறதுன்னு சொல்லிட்டா. எனக்கு வந்திச்சே கோவம் அப்பிடியே ஒன்னும் பேசமே கொள்ளமெலெ அங்கெயிருந்து வந்திட்டேன். நம்மளை மாதிரி ஆளுக்கெல்லாம் பேசுறத விட காரியத்தைதான் செய்யனுமின்னு மறுநாளே போட்டோவே தூக்கீட்டேன். என்னோட உண்மையான போட்டோ இருந்தா தானே இப்பிடி காமெடி பண்ணுவாய்கே.

"ஹே இப்போ என்னா செய்வீங்க.... இப்போ என்னா செய்வீங்க...."
சரி போட்டோவே தூக்கியாச்சு, வேறே என்னாதான் வைக்கலாமின்னு யோசிச்சு யோசிச்சு ஒருவழியா கடைசிலே நம்ம தல கூப்பிடறமாதிரி கொஞ்சம் ராயலா வேணுங்கறதுனாலே இந்த ரிச்சிரிச் படத்தை போட்டேன்.ரிச்சிரிச் பத்தி சொல்லுணுமின்னா சொல்லிக்கிட்டே போவணும். எனக்குப் பிடிச்ச கார்ட்டூன் கதாபாத்திரத்திலே இந்த பயதான் கொஞ்சம் இன்ஸ்பிரேசனெ ஏறபடுத்தினே கதாபாத்திரம் அது. அவனைமாதிரியே நாமெல்லும் பெரிய பணக்காரனா ஆவனுமின்னு.....!

உங்களுக்கு இந்த பயபுள்ளேயே பத்தி நல்லா தெரிச்சிருக்குமின்னு நினைக்கிறேன், டாலரும் தங்ககாசுமா வாழுற பயப்புள்ளே, நமக்கு யாராவது பழனிக்கோ இல்ல திருப்பதிக்கோ போயிட்டு வந்தா வாங்கிட்டு வர்ற சாமி படம் போட்ட டாலர்தானே தெரியும்.

அப்பிறம் இன்னொரு விஷயம் இன்னொரு என்னை கவர்ந்த கார்ட்டூன் கதாபாத்திரத்திமின்னா வாரமலரில்லே வந்த ஒருத்தன் (பேரு என்னான்னு மறந்துப் போச்சு) எதையாவது வரைந்தானா அப்பிடியே உண்மையாகவே வருமில்லே, அந்த கதாபாத்திரமும் எனக்கு ரொம்பபிடிக்கும்..... உங்களுக்கெல்லாம் எந்த எந்த கதாபாத்திரங்கள் பிடிக்குமின்னு சொல்லுங்க பார்ப்போம்.

Wednesday, September 13, 2006

மதுரை புத்தகக் கண்காட்சி
எங்கூர் பக்கம் எதாவது கண்காட்சின்னா அதுவும் தமுக்கத்திலே சித்திரைப் பொருட்காட்சி இல்லன்னா மடீசியா போடுறே பொருட்காட்சிதான் பேமஸ். இப்போதான் மொதமுறையா புத்தககண்காட்சி போட்டுருந்தாங்க. நல்லாதான் இருத்திச்சு, சின்னப்புள்ளலே எதாவது பொருட்காட்சி போட்டா எங்கப்பாக்கிட்டே கூட்டிக்கிட்டு போகச்சொல்லி நச்சரிப்பேன். காரணம் என்னானா அங்கே போனா பெரிய தோச சைஸ்க்கு அப்பளம் சாப்பிடலாம், ராட்டினம் இருந்தா அதிலே சுத்தலாம். ஆனா இப்போ சில வித்தியாசங்கள் கண்கூடாக தெரிஞ்சுப் போச்சு, நாமும் வளர்ந்துட்டோமில்லே.
தமுக்கத்திலே நடுமையப் பகுதிலே அழகா செட் போட்டு நன்றாக செய்திருந்தார்கள் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்தவர்கள். சனிக்கிழமை என்பதனால் நன்றாக கூட்டம் வந்திருந்தது. சினிமா தியேட்டர்களிலும், ராஜாஜி,மாநகராட்சி ஈகோ பார்க்கிற்கு வரும் கூட்டத்தை விட கொஞ்சம்தான் அதிகம்.

நான் சனிக்கிழமை மாலைவேளையில் சென்று எனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்கின்றதா எனமுதலில் ஒவ்வோரு ஸ்டாலிலும் சுற்றிப் பார்த்தேன். சில புத்தகங்கள் தலைப்புக்களிலேயே வாங்கும்படி ஈர்த்தன, வெகுஜன எழுத்தாளர் எழுதிய சில புத்தகங்களும், சில புத்தகங்களில் புரட்டும் பொழுது கண்ணிற்கு தென்படும் வரிகளில் ஈர்க்கப்பட்டு வாங்க வேண்டுமென நினைத்த புத்தகங்கள் பல. இவ்வாறக படித்தும் ரசித்தும் சிலவற்றை வாங்க வேண்டுமேன முடிவு செய்து அன்றே வாங்கிய புத்தகங்களின் எண்ணிகை மொத்தம் பதினொன்று.

அன்றைய தினத்தில் ஒரு சுவராசியமான விஷயமெனில் நான் வாங்கிய கந்தப் புராணம், ஓஷோவின் மீண்டும் புல் தானாக வளர்கின்றது, பெரியாரின் பொன்மொழிகள் ஆகிய புத்தகங்களை தெரிவுச் செய்து பணம் செலுத்த சென்றப் போது அந்த பதிப்பகத்தாரின் காசாளார் என்னை உற்றுநோக்கி என்னவோ கேட்க வருவது போல முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மறுபடியும் சென்றேன். எவ்வகையான புத்தகங்கள் வாங்க வேண்டுமென அனைத்துப் புத்தகங்கள் அனைத்தையும் விருவிருவென எடுத்துக் கொண்டு பில்லுக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்தேன். ஆனால் முதன்முறையாக ஒரு ஸ்டாலில் ஆண்டாள் பிரியதர்சினியின் மன்மதஎந்திரம் கவிதைத் தொகுப்பை புரட்டிப் பார்த்து தாக்குண்டுப் போனேன், ஆம் கீழ்கண்டவைகள்தான் நான் முதலில் அப்புத்தகத்தில் வாசித்தவைகள்,

ஒருநாள் தினவு
உனக்கு
ஒருநாள் உணவு
எனக்கு.


நீங்கள் நினைத்தது சரியே... ஆம் அக்கவிதை தொகுப்பு பாலியல் தொழிலாளி பற்றியதே.

கண்ணதாசன்,பாலகுமரன்.வைரமுத்து,தபூசங்கர்,சாண்டில்யன்,இராமகிருஷ்ணன்,வடிவேல்! என அனைத்து தரப்பட்ட எழுத்தாளர்களின், மற்றும் நமது கெளதம் எழுதிய கிழக்கு பதிப்பகத்தாரின் வெளியிட்டான பத்துக் கட்டளைகள் புத்தகங்களும் வாங்கினேன். மொத்தம் நான் வாங்கிய புத்தகங்கள் முப்பத்தி ஒன்று. இம்முறை ஆங்கிலப் புத்தகங்களில் ஒன்றுகூட வாங்கவில்லை. ஆமாம் எத்தனை நாளைக்கு தான் ஒரு பக்கத்தை படிக்க லிப்கோ,கன்சியஸ்ன்னு பார்த்து அர்த்தம் கண்டுபிடிச்சு படிச்சிக்கிட்டு இருக்கிறது, நமக்கு என்ன தெரியுதோ அதை மட்டும் செய்வோமின்னு அதை வாங்கலை.

அங்கே கண்காட்சியிலே இருந்த எல்லா புத்தகத்தையும் தூக்கிட்டு வந்திரலமின்னு ஒரு நப்பாசை கூட இருந்துச்சு. நம்மளை மாதிரி விஐபி ஏதாவது தப்பு பண்ணினா ஏதாவது ஒரு மாளிகையிலே ஜெயில்ல வைப்பங்களாமே, நம்ம பெருசை போட்டுத் தள்ளிட்டு இந்த புத்தகக்கண்காட்சி இருக்கிற இந்த தமுக்கம் மைதானத்திலயே அடைச்சு வைக்கனுமின்னு கோரிக்கை விட வேண்டியதுதான், நல்லா ஓசியா பூரா புத்தகத்தையும் படிக்கலாம், கோழிகறி சாப்பிட்டுக்கிட்டே....

புத்தககண்காட்சி நிறைவுநாள் என்பதனால் நிறைய பிரபலங்களை காணமுடிந்தது. அதுவும் குறிப்பாக வைரமுத்து,ரவி தமிழ்வாணன் ஆகியோர் வருகைப் புரிந்திருந்தனர். அடுத்த வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் மதுரையில் புத்தகத்திருவிழா நடக்கும் என அறிவிப்பு கிடைத்தது. ஹீம் அடுத்த வருடமும் சென்று வந்து இதுப்போல் ஒரு பதிவிடுவேன்.

Wednesday, September 6, 2006

போயி விவசாயத்தை பாருங்கய்யா.......

போனமுறை ஊர்பக்கம் போனாப்ப எங்கப்பத்தா கிராமத்து பக்கம் போயிட்டு வராலாமின்னு கூப்பிட்டுச்சு.அங்கெனே சிம்பிளா இருக்கிற மாதிரி காட்டனுமின்னு லீ ஜீன்ஸ்+ ரீபேக் ஷீ நம்ம படபொட்டி, தூக்கிட்டு திரியிற பொட்டி,ரேபான் கிளாஸ் சகிதமா கிளம்பினேன் பட்டிகாட்டுக்கு.

பஸ்'லே ஊருக்குள்ளே போறதுகுள்ளே பாதி உசுருபோச்சு, எப்பிடிதான் தினமும் இதிலே போயிட்டி வருதுகுலோ சனங்க எல்லாம். நாங்கலெல்லாம் பெங்களுருலே ஏசி காத்து'லெ போயிட்டு வர்றோம். அய்யோ அய்யோ.....

ஊருக்குள்ளே போயி இறங்கினவுடனே தடல்புடலா வரவேற்பானுங்கன்னு பார்த்தா ரெண்டு அரைடிக்கெட்டுக பக்கத்திலே வந்து பார்த்துட்டு ஹீம் பூச்சாண்டி இல்லயின்னு கன்பார்ம் பண்ணிட்டு போயிருச்சுக. அதுக்கப்புறமும் கண்ணாடி போட்டுக்கிட்டு தானே நடந்தேன். காடுகரையே காட்டுறேன்னு காச்சுபோன கட்டதரையை காட்டதானே என்னை இழுத்துட்டு வந்தியா நீயீ, ஏலெய் செவனைன்னு வாடா இன்னும் கொஞ்சம் தூரந்தான் நம்ம காடுகரை,நடநட நடந்து கடைசிய தோட்டவீட்டுக்கு கூட்டிட்டு போச்சு அப்புத்தா, அய்யோயோ அந்த வீட்டுலபெருசு ஓன்னு கெடக்கு, எங்க வீட்டுக்கு வந்தாலே நொணநொண்ணு கேள்வி கேக்கும் என்னா கேட்கபோகுதோ.... நினைச்சுக்கிட்டு போன மாதிரியே நோண்ட ஆரம்பிருச்சு.

"என்னப்பே என்னா வேலை பார்க்கிறே பெங்களூருலே...?"

"நானு கம்பியூட்டர் இஞ்சினியர்..! "

"அதிலே என்னா வேலை பார்க்கீறே..? "

"என்னா வேலைன்னா எதுமாதிரின்னு கேட்கிறீங்களா..?"

"ஆமாப்பே "

"நானு சிஸ்டம் அட்மினிஸ்டேரர்...!"

"என்னப்பே என்னா சொன்னே இங்கிலிபிஸ்ல சொல்லு "

"நானு கணினி நிர்வாகி "

"அப்பிடின்னா என்னாதான் உனக்கு வேலை "

என்னாத்தா சொல்ல அதுக்கிட்டே............ கம்ப்யூட்டர்,ரவுட்டரு,சுவிச்சுன்னு மெயிடென் பண்ணறே வேலை அதுஇதுன்னு கொஞ்சம் விளக்க வச்சேன்.

"சரிசரி விடு ஒரே வார்த்தைலை சொல்லுனுமின்ன கழுதை மேய்கீறே..?"

"ஏய் பெருசு என்னா கிராமத்துகுத்தல்னா இதுதானா ஆமா கழுதைதான் மேய்க்கீறேன் அதுவும் கம்ப்யூட்டர் கழுதைக அதுக்கு இப்போ என்னாங்குறே...?"

"ஆங் எம்புட்டு ஓவா வாங்குறே அதுக்கு கூலியா..?"

"கழுதை மேய்க்குறவன் வாங்குறதோட கொஞ்சுண்டு அதிகமாதான் நான் வாங்குறேன்...!"

அதுக்குப்புறம் அது கேட்ட பலகேள்விகளுக்கு நான் எதுவுமே பதிலே பேசலே.முக்கியமா கம்பிட்டர் படிச்சவே பூரா பயலுகளும் முட்டாபசங்கன்னு சொல்லி மடக்கப் பார்த்துச்சு...எங்கப்பா எதுக்கடுத்தாலும் நாங்கல்லாம் அந்த காலத்திலே எம்புட்டு கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம் நீங்க இப்பிடி சொகுசு வாழ்க்கையா இருக்கும்போதே எண்பதிரண்டு நொட்டைசொல்லுன்னு நீட்டிமுழங்குவாரு. நாமெல்லும் அந்த கஷ்டமான வாழ்க்கையின்னா என்னான்னு பார்க்கலாம் வந்தா இதுகதான் இங்க கஷ்டங்களா.

என்னப்பத்தா நீங்க வாழ்ந்த வீடெல்லாம் காட்டுறேன்னு சொல்லி கூட்டியாந்தே, இம்சையே தான் கூட்டிவச்சிருக்கே, டேய் நீ நிக்கிறது நம்ம மண்ணுடா,ஆனா இதுக்கு முன்னாடி இது பூராவும் பொட்டகாடா கிடைத்துச்சு, உங்கப்பன்சித்தப்பனுங்க தான் வந்து இதையெல்லாம் மண்ணையெல்லாம் தட்டிவிட்டு கிணறு வெட்டி நாலுபக்கமும் மரங்கொடியெல்லாம் நட்டு விட்டானுங்க. நமக்கு எம்புட்டு நிலமிருக்குன்னு சர்வே பண்ணி திருமங்கலத்திலே சர்க்கார் ஆபிஸ்ல பதிச்சு வச்சிருக்கானுவே அவிய்ங்களுக்கு அடுத்து நீதான் அம்புட்டுக்கும் கையெழுத்து போடபோற வாரிசுன்னு சொன்னிச்சு. அய்யோ ஒங்க கொடுமை தாங்க முடியலயே, இதை எல்லாத்தையும் வித்தாலும் அஞ்சுடிஜிட் அமவுண்ட் காசு வராது, வேற எதாவது பொன்னு காசுன்னு சேர்ந்திருந்தா கூட தூக்கிட்டாச்சிம் போகலாம், இத வச்சி என்னா பண்ணமுடியும்.

சரி கிளம்புற நேரத்திலேயாவது நம்ம சேட்டையே பெருசுக்கிட்டே காட்டாலமின்னு பெருசு நாப்பது மொழம் கவுறு வாங்கியாரேன், இந்த நிலபுலத்தெயல்லாம் கட்டி மதுரைக்குள்ளே நம்மை வீட்டு பக்கம் கொண்டாந்து விட்டுறு, நான் அங்கேனே சேல்ஸ் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். ஒரு மொறை மொறைச்சு பார்த்து வாயை திறந்துச்சு, அப்புறமா எனக்கு காதும் கேட்கலை, அது இருக்கிற பக்கத்திலே கண்ணும் சரியா தெரியலே.

இந்த ஊருல எங்கப்பாரு என்னா கஷ்டப்பட்டாருன்னு கடைசிவரைக்கும் தெரியலே. எனக்கு நல்லாதான் குட்டிசாத்தான் அலறிச்சு, தூக்கிட்டுதிரியறிதிலே ஓயீபீ கனக்ட் ஆச்சு. எனக்கு தெரிஞ்சு அங்கனே கஷ்டமின்னா சும்மா தொணதொணன்னு பேசிக்கிட்டே இருந்தானுவே, ஒரு பய வீட்டுலேயும் ஏசி மெசினே காணோம், ஊரை சுத்தி மரமா இருத்துச்சு, சும்மா சும்மா ஜில்லுன்னு காத்து வேற அடிச்சிக்கிட்டே இருந்துச்சு.இங்க வேலையிலிருந்து பத்தி விட்டாங்கனா விவசாயம் பார்க்கப்போறேன் ஏன்னா அதுவும் சும்மா உட்கார்த்திருக்க வேலைதானே.

அதுக்கு முன்னாடி அந்த பெருசை போட்டு தள்ளிட்டுதான் ஊருக்குள்ளே போகணும்.

Thursday, August 31, 2006

புது பொட்டிங்கபக்கத்து கேபின்காரனோட மானிட்டர் பிள்ளையார். இவருக்கு திங்கள்கிழமை சந்தனம்+ மஞ்சள் அலங்காரமேல்லாம் பண்ணிருத்தார்.நேத்திக்கு எடுத்தபடமிது. ஓவர் வெளிச்சத்திலே ஒன்னுமே சரியா தெரியமா போச்சுங்க.
ஆனா விநாயகரோட வடிவம் மட்டும் கோட்டு ஓவியம் மாதிரி அழகா வந்திருக்கு.திருப்பதிசாமி என்னோட மானிட்டர் மேல் வீற்றிருந்து எனக்கு அருள்பாலிக்கிறார்.இவரு எங்களோட அறையோட சுவத்திலே இருந்து அருள்பாலிக்கும் பெருமாள்சாமிஇதை தினமும் காலையில் வந்து முழுவதும் வாசிக்காமல் ஒரு வேலையையும் ஆரம்பிரக்கிறேதே கிடையாது.
இதப்பத்தி சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்லை... ஹீ ஹீ.இதப்பத்தி ஒன்னே ஒன்னு இருக்கு. அது என்னான்னா தாகம் தீர்க்கும் பாட்டில்.... ஹீ ஹீ

Friday, August 25, 2006

நானும் என் (ச)முகங்களும்மரிக்கும் மனிதங்களும், பிணம்பொறுக்கிய கொடுமைகளும்
தூங்கிஎழும் முன்னரே தலைப்புச்செய்திகளாக
செவிமடுக்கும் வேதனைகள் வேண்டாமென
உறக்கத்திலும் தொழும்கரங்கள்....!
இம்மாந்தரின் கடும்வன்மங்களும் சுடும்வசவுகளும்
தாங்கி பொறுத்தருளும் வல்லமையும்
எந்தாயிடம் உணவுவேண்டி விளிக்கும்
கண்ணீர்கோரா கலங்கிய கண்களுடன்....!
என் இணைபோட்டிதனை உருவாக்கி
அத்தொன்று பொறமைகொளச் செய்யவல்லா
உனக்குமொரு வழிதனைக் கொண்டுச் செல்லவேண்டி
உன்னைவிட உயரப்போகவேண்டியே உயர்ந்தேன்....!
பிறரிடம் தவறுகளும் வலிகளும் தரச்செய்யும்
கடுமை நிறைந்த போக்குகளுமாகிய
கறைபடிந்த வதனமாய் பெற்றோனோ
வாழ்வோட்ட காலவெளியில்....!
வானவீதிகளிலேயே திரிந்தலையும் கடவுள்களையும்
மண்வீதிகளில் வேடமணிந்த மனிதர்களையும்
எதிர்கொள்ளும் திறம்வேண்டும்
முன்னதை ஆவலுடன் பின்னதை வெறுப்பென....!
எல்லைக்கோட்டமையா வக்கிரகோரங்களும்
நிலைகுலைக்கும் கேடுதருணங்களும்
என்னுளும் எனைச்சார்ந்த வழிமக்களிலும்
களையகோரும் ஆற்றல்வேண்டி என்னின் சிந்தை....!

Thursday, August 17, 2006

எஸ்.கே. அவர்களின் கவனத்திற்கு

திரு.எஸ்.கே ஐயா அவர்களுக்கு என்னுடைய முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய முந்தைய கவிதை பதிவில் பிழைகளை சுட்டிகாட்டியதற்கு. உங்களின் பெரிய மனது என்னை நிலைகுலைய வைக்குதய்யா. தாங்கள் எங்கே.. அற்பன் நான் எங்கே,
நீங்கள் வந்து என்னிடம் மன்னிப்பு என்ற வார்த்தையை உபயோகபடுத்தலாமா..?

நான் வெள்ளிக்கிழமை திருப்பதி போற அவசரத்தில எதையும் உருப்படியாக செய்யாமால் போய்விட்டேன். முதலில் பிரிவாற்றண்மை'னு தலைப்பு வச்சிட்டு அதுல கால் மிஸ்ஸாடுச்சின்னு கப்பி சொன்னவுடனே திரும்ப தலைப்பை மாற்றினேன்.

தரிசனம் முடிந்து சொந்த ஊர் மதுரைக்கு சென்றுவிட்டேன். அதன்பின் அதற்கு வந்த பின்னூட்டங்களை நான் பார்க்க முடியவில்லை. நீங்கள் இட்ட பின்னூட்டத்தை திங்கள்கிழமை அன்றே நான் பார்க்கநேரிட்டது. ஆனால் அந்த இடத்தில் Unicode எழுத்துகள் சரியாக தெரியவில்லை.ஒரு பின்னூட்டம் நீங்கள் இட்டது என்பதனால் படிக்கமாலயே பிரசுரித்தேன்.

புதனன்று ஆபிஸ் வந்து பார்த்தப்பதான் முழுவிபரங்களும் தெரிந்தது. தாங்களின் பரித்துரைகளை உடனே நிறைவேற்றி விட்டேன். முக்கியமான ஒன்றான தலைப்பை மாற்றவேண்டும் என்பதனால் தமிழ்மணத்தில் சென்று தலைப்பை மாற்றக்கோரி விண்ணப்பமிட்டேன். இதுவரையில் எனக்கு எதுவும் தகவல் வரவில்லை.

இவ்விளக்கங்கள் உங்களிடம் தனியாக சென்றடைய தாங்களின் மின்னஞ்சல் முகவரி என்னிடம் இல்லை. ஆகவே இதையே பதிவாக இடுகிறேன்.

வேல்தாங்கி அருள்பாலிக்கும்
என்னப்பன் முருகனின்
புகழ்பரப்பும் தாங்களின்
கரங்களை பற்றியெடுத்து
நன்றிதனை நவில்கிறேன்.
தாங்களின் இருப்பிடதிசை
நோக்கி மெய்நிகராய்.

Friday, August 11, 2006

பிரிவாற்றாமைபிரிவுறுவலி நீங்க உணர்வுகள் பிரவாகமெடுத்து
உன்னை இறுக்கி அணைக்கத் துவங்குகிறேன்...
ஆனால் உந்தன் உணர்வுகள் உணர்த்தியது என்னுள்
மகவை அணைக்கும் தாயென...!
பிரிவுற்றவேளைகளில் என் நினைவுறுத்தவேண்டி
என்ன செய்வாயென கேள்விதொடுத்தாய்..?
உன் புகைபடமென்றேன் நான்,
நீயோ உன்னுடைய நகக்கீறல்கள்
எனபதிலுறுத்தாய்...!

கடிதங்களிலும்,கைப்பேசியிலும்
கவிதைகளாய் எழுதித்தள்ளுகிறாயே என
உன் வினாவிற்கு பகிரங்கமான விளக்கம் இது...

மானசீகமாய் கடவுளைத் தொழவேண்டி
ஜபிக்கும் பக்தர் வகையறாக்களில்
நானும் ஒருவன் தான்....!

கிள்ளைமொழி பேசிக் கொல்லும்,
கிளியொருத்தி குரலை கேட்டு கிளர்வுற
தொடர்புறுகிறேன்.....!
கிடைக்கும் சில மெய்நிகர் முத்தங்கள் எனக்கு...
இன்னும் சில கவிதைகள்
வாசிக்கும் உமக்கு....

Friday, August 4, 2006

கவிதையாய் கைப்புள்ளை காவியம் (101 வரிகளில்)

திக்கற்ற கட்டிட காடுதனிலமர்ந்து
கணினியென்னும் அடிமையை
ஏவல் செய்யும்
விழிகருக்கும் பணியில்
புத்துணர்வு திரும்பவேண்டி
வலைபூக்கள் சொரிந்த
சாலைகளில் பயணிக்கும்
பயணிகள் அனைவருக்கும்
தாய்மொழி தங்கதமிழில்
சிரிப்பு தரவேண்டி சங்கமென்றை
கண்டளித்தாய் எமக்கு
செந்தமிழில் பெயரிட்டாய்
வருத்தப்படாத வாலிபர் சங்கமென..

கைப்புள்ளயெனும் தானே
தலைவர் எனறிவித்து
அடிவாங்கும் உன் திறமைதனை
பலவகைகளை கண்டறித்தாய்
உன் திறமையின் விளைவுகளின்
விளைவாக விளைந்த
விழுபுண்களில் சாய்ந்து
விழுந்திராத விழாநாயகனான
உன்னைப்போற்றி கவிஎழுத
மின்மடலில் வினவினேன்...!

பதிலுற்றாய் விதிமுறையோடு
அதை வாசித்தால் நகைச்சுவை
மிளிரவேண்டுமெனவும்
வாசிக்கும் நெஞ்சங்கள்
சிறிதளவேணிணும்
புண்பட்டிட கூடாதென
இவ்வாறே உன்னுள்
வியாபித்திற்கும் தலைவனுக்கே
உரித்தாகும் சீரியபண்பு...?

அந்தூர் எந்தூர்
இந்தூரில் வசித்தாலும்
மாசுமருவற்ற தங்கதலைவனான
உன் திருமுகம் மனகண்ணில்
நிறுத்திட வரம்வேண்டி
நிழற்படம் வெளியிடகோரலாம்
தினமும் தரிசிக்கும்
பாக்கியம் பெற்றவர்
கழிக்கவேண்டும் திருஷ்டி
ஆகவே வேண்டாம்..

உன்னை வாழ்த்திட
பத்துவரியை மனதிலுறுத்தி
எழுத தொடங்கினேன்
அனுமார் வாலென
நீட்டித்தது உந்தன்புகழ்
எப்படியும் நிறைவுறும்
நூறாவது வரிகளின் இறுதியில்...!
சங்கத்தின் நூறாவதுநாள்
உந்தன் புகழ்பாடும்
பதிவுகளின் கணக்கு நூறு
அன்னியமொழி சேரும்
அச்சமேனே எனகருதி
தமிழில் உரைக்கிறேன்
இதொரு உடன்நிகழ்வுசெயல்

வாழ்த்தி உரைத்து
முடிக்கிறேன் இவ்வரியை
தொடங்கலாம் கலாய்க்கும்திணைதனை...

உதார்விடும் உன்னழகில்
கவரப்பட்ட இரும்பாய்
கழக கண்மணிகளின்
ஆதரவுகரங்கள் எண்ணிக்கை
கடல்தாண்டியும் செல்லுமெனில்

இளமாய் மிதமாய்
அடிகள் இடியென
விவாயத்திலும் விழுமோ
வெடிகுண்டுகள் அழிக்கும்
சிவம்தனிலும் பிரதிபலிக்குமோ
தேவகானங்கள் இயற்றும்
அரசவை கவிஞனுக்கும்
விழுமோ உன்மாதிரி...?

மண்ணின் மைந்தன்
பாண்டிய அன்புசெல்வன்
வில்லாய் வடிக்கும்
வீரதிருமகன் வாங்கும்
அடிகள் உன்னளவில்
சற்று குறையே...!
நீர் பெற்றதை பகிர்ந்தளிக்கும்
மனபாங்கு சிபிமன்னனிடம்
கிடையாதென்பது திண்ணம்....!

மக்கள்படை மாத்திரமே
சார்ந்ததல்ல உந்தன்பாசறை
களிறுபடையும் கப்பற்படையும் சேர்ந்தே
பொன்னெ மிளிர்கின்றன....!

திங்களொரு ஒன்றுமறியாமானுடர்
உன்னவை வரப்பெற்று
பரிசில்கள் பலபெறுவார்யென....!
உள்ளவாகை மிகுதியில் வந்து
அம்மானுடர் பெற்றுசெல்வது
ஆப்பசைத்த மாருதியின்
இலவச ராசனுபவங்கள்...!

சிரிப்பன்பதை மட்டுமே கொள்கைகொண்ட
இவ்வரசவை வாழுமெனில்
கவிதனை முடிவுற விளைகிறேன்
மனதில் தொங்கும்வினாவுடன்

சச்சரவுகளில் பயணிக்கும்
பயணிகள் அனைவருக்கும்
சுயவெறுப்புகளை கடந்து
ராஜபாட்டையில் வரவியலுமாயென...........?????

கைப்புள்ள கிளம்பு உன்வேட்டைக்கு
காத்திருக்கிறோம் நாங்கள்
நீ வாங்கிவரும் குச்சிமிட்டாயிக்கும்,குருவிபொறைக்கும்.... :-)

Friday, July 28, 2006

காதலியை காதலிக்கிறவர்களுக்காகஇந்த மாதிரி என்னைபத்தி
கவிதை எழுதிறதுதான் உனக்கு வேலையா
வேற பொழப்பில்லையா என வினவுகிறாய்!
சரிதான் உன்நினைப்புதானடி என்னோட
பொழப்பை கெடுக்கிறது....


உன் வீட்டுக்கு முறைவாசல்
வருகின்றபோது உங்கள்
பகுதி செய்தித்தாள் போடும்
பையனிடம் ஒரு பரஸ்பர ஒப்பந்ததுடன்
தற்காலிகமாய்
அந்த வேலை என்னிடம்...


நீ அனுப்பிய கவிதையை
என் தோழிகள் படித்துவிட்டர்கள்
என கோபத்துடன் வார்த்தைகளாக
கூறுகிறாய்,
ஆனால் உன் கண்களில்
அன்று பொறமைதீ
எரிந்திருக்கும் எனக்கு
தெரியாதா என்னா.....


உனக்காக
காத்திருந்து காத்திருந்து
ரொம்ப கடுப்பா போச்சுடின்னு
பொய் கோபம் வெடிக்கிறது
என்னுள்
அதற்கு நீ கொடுக்கும்
சமாதானமுத்தங்களை
வேண்டி...


திரும்ப திரும்ப
ஒரே மாதிரிதான்
உனக்கு ஒரு வேலையை
செய்ய தெரியுமா என
கேட்கிறாய் விழிக்கிறேன் நான்
உன் கன்னங்களிலிருந்து
என் உதடுகளை
எடுக்கும் பொழுது....


புத்தகத்தை திரும்பவேண்டி
உன் வீட்டிற்க்குள் நுழையும் முன்னே
அண்ணே உங்களுக்கு யார் வேணும்
விளிக்கிறாள் உன் அண்ணன்மகள்
உன்னிடமிருந்து புத்தகத்தை பெற்று
கிளம்பி வாசலடையும் முன்னே
செல்லம் அவரு உனக்கு மாமா
அண்ணன் இல்லையின்னு எனக்கு
மட்டுமே கேட்கும்படி
சத்தமாய் சொல்கிறாய்.....


திபாவளியன்று
பலகாரங்களை சுமந்து
முதன்முறையாக என்இல்லத்தினுள்
பெளர்ணமியென
நுழைகிறாய்...
விடயமாய் வலதுகாலை
முன்வைத்து...


உனக்கு கித்தார்
வாசிக்க தெரியுமாடா..
வினவும் நீ
நான் என்னவென
பதிலளிப்பேன் என
அறிந்தும் வார்த்தைகள்
வரட்டும் என்று
விஷமத்துடன்
என் கண்களை
ஊடுறுவுகிறாய்....


உன் தோழியிடம்
பேசும்பொழுது அவளை
கட்டிபிடிக்கிறாய்
ஹீம் எனக்கு இப்போது
விளங்கின்றது உன்னுடைய
குறிப்பால் உணர்த்தும் தன்மை...தலைக்கு சிக்கெடுக்கும் பொழுது
உன்னை மாதிரி நல்ல லூசா
இருந்தா என்னா என
என்னை சுட்டிகாட்டி
உலகத்திற்கு தெரியாத
உண்மையை அறிவித்துவிட்டதாக
சிரித்துக்கொள்கிறாய்...