Wednesday, December 20, 2006

நந்தன்

"அம்மா.. அம்மா... என்னை தேடி நந்து வந்தானா??" என்று கேள்வியை எழுப்பியபடி ஒட்டமும்,நடையுமாய் வீட்டினில் நுழைந்தாள் விஜயா. "ஏண்டி எத்தனை தடவை ஒன்கிட்டே சொல்லிருக்கேன்? இப்பிடியெல்லாம் ஓடி வரதேன்னு? இன்னும் கல்யாணத்துக்கு முழுசா ஒரு வாரம் கூட இல்லைடி? எதாவது ரத்தகாயம் வாங்கிறாதேடி!"

"அம்மா! அதுக்கு நான் என்ன செய்யட்டும் சொல்லு? சின்னவயசிலிருந்தே நான் ஆக்டிவா வளர்ந்திட்டேன், அதுவுமில்லாமே நீதான் என்னை அப்பிடி வளர்த்தேன்னு பெருமையா ஊரெல்லாம் சொல்லிட்டு இப்போ என்னோட மேரேஜ் கமிட் ஆன கடைசி ரெண்டு மாசமா ஒரு டயலாக்கே கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி சொல்லிக்கிட்டே இருக்கே!"

"இதே மாதிரிதான் நானும் எங்கம்மாகிட்டே என் கல்யாணத்தப்பேயும் கேட்டேன்... அதுக்கு எங்க பாட்டிதான் பதில் சொன்னாங்க! என்னானா கல்யாணத்துக்கு முன்னாடி ஏதாவது காயம் பட்டா நம்மாலே அந்த விசேஷத்திலே முழுமனசா நிறைஞ்ச படி அனுபிவிக்கமுடியாதாம்! எப்பிடியாவது அந்த காயம் ஞாபகம் வந்து அதே பத்தி நினைச்சிட்டோமின்னா சின்னமுகச்சுழிப்பு வந்தாலும் அதே ஒருத்தவங்க பார்த்திட்டாலும் அட இந்த பொண்ணுக்கோ, பையனுக்கோ இதிலே சம்மதமில்லை'ன்னு நினைச்சிருவாங்களாம்!"

"தாயே, நான் கேட்டதுக்கு பதில் சொல்லுன்னா, வேறே என்னத்தையோ பேசிக்கிட்டு இருக்கே? நான் கேட்டது நந்து வந்தானா'ன்னு??"

"உன்னைமாதிரிதான் அவனும் டீச்சர் வந்துடாங்களா'ன்னு இதுவரைக்கும் அஞ்சுதடவை வந்து கேட்டுட்டு போயிட்டான்!,என்னடி உங்களுக்குள்ளே நடக்குது?? இனிமே அந்த பயங்கிட்டே பேசுறதே குறைச்சிட்டா நான் சந்தோஷப் படுவேன், ஆமா சொல்லிட்டேன். ஒனக்கு ஏதாவது சொல்லிட்டா போதும், அப்புறம் என்கிட்டே நாலு நாளைக்கு பேசமாட்டே! உங்கப்பாவும் ஒனக்கு சப்போர்டா அவரும் என்கிட்டே பேசமாட்டாரு.! ஹிச்.. என்ன பண்ண நான் மட்டும் அதே ஏன் செஞ்சேன்னு தனியே உட்கார்ந்திருப்பேன்."

"மம்! அதெல்லாம் இல்லே! நீதான் எதையும் விடப்பிடியா பிடிச்சு தொங்குவேலே, அதை ஒனக்கு எப்பிடி புரியவைக்கிறது, இதுதான் நல்லவழின்னு நானும்,அப்பாவும் முடிவு பண்ணினோம்! அதுதான் அந்தமாதிரி டிரிட்மெண்ட்!!" இவ்வாறு சொல்லிக்கிட்டு இருக்கும் சமயத்தில் "டீச்சர், டீச்சரு"ன்னு உள்ளே நுழைக்கிறான் நந்து அலைஸ் நந்தகண்ணன்.

"ம் வாடா! படுபாவி நானும் ரெண்டு நாளா ஒன்னே எப்பிடியாவது ஜெயிச்சிடனுமின்னு இருந்தேன், போச்சுடா, நான் என்னோட தோல்வியே ஒத்துக்கிறேன், தயவுச்செய்து சொல்லிடு சாமி.. என்னாலே முடியலேப்பா"

"என்ன டீச்சர், இப்பிடி சொல்லிட்டிங்க! நீங்க எப்பிடியாவது கண்டுபிடிச்சிருவீங்கன்னு நினைச்சேன். ஆனா கடைசியிலே இப்பிடி தோத்து போயிட்டிங்க?"

"நந்து இதிலே தோத்தது கூட கவலையில்லை ஆனா எனக்கு வருத்தமின்னா நீ இனிமே கொடுக்கப்போறே கமண்ட்லேதான், சும்மாவே என்னயே நீ ரொம்ப லந்து பண்ணுவே? அதுக்கும் மேலே என்னை நீ டீச்சருன்னு சொல்லி கூப்பிடுறேதே ஒரு நக்கலுக்குதானே!"

"டீச்சர், நோ பீலிங்ஸ்.. அது என்ன பாட்டுன்னு சொல்லிறேன். 'புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள் தன்னிலே பொதுவான வழக்கமாம்' க்கிறே வரி பாரதியார் எழுதின புதுமைப்பெண்'கிறே கவிதையிலே வர்ற ஒரு பத்தி அது! நீங்க ஃபெமினா'ல்லாம் வாங்கி படிக்கிறீங்க, ஆனா நம்ம கவிஞர் எழுதின கவிதைகள் தெரியலே'னு சொல்றீங்களே டீச்சர்!"

"ஓ அப்பிடியா! நான் இதுக்காவே ரெண்டு நாளா லைப்பேரியிலே கதியா கிடந்து கிட்டத்தட்ட நூறு புத்தகத்தையெல்லாம் படிச்சேன். அதிலேயும் பாரதி கவிதைகளும் படிச்சேண்டா, ஆனா அதிலே இந்த வரிகள் இருந்துச்சான்னு தெரியலை!"

"அதுக்கு படிச்சேன்னு சொல்லாதீங்க! சும்மா புஸ்தகத்தே மேஞ்சேன்னு சோல்லுங்க. என்னோமோ போங்க! ஒங்களே நான் டீச்சருன்னு சொல்லிக்கிறவே வெக்கமா இருக்கு! இனிமே கவலை படாதீங்க, நீங்க ஜெயிச்சாலும், தோத்தாலும் கிப்ட் பண்ணலாமின்னு புக் வாங்கி வந்தேன் இந்தாங்க."

"டேய், என்னாடா இது பாரதியார் கவிதைகளா.. ரொம்ப நன்றிடா, இனிமே நுனிப்புல் மேயமே முழுசாவே படிக்கிறேன். ஆனா நீ இவ்வளோ பேசியும் உம்மேலே எனக்கு கோவம் வராதுக்கு காரணம் கூட எனக்கு தெரியலைடா? நீ சின்னபிள்ளயா இருக்கிறப்போ நம்ம பக்கத்து வீட்டு பையன் இவ்வளோ அழகா இருக்கானேனு உன்னையே தூக்கிட்டு வந்து எங்கவீட்டிலே வச்சு விளையாடுவேன், ஆனா இப்போதான் பன்னிக்குட்டி ஏன் குரங்கு குட்டி கூட சின்ன வயசிலே அழகாதான் இருக்குங்குறது உண்மைதான் போலே! குரங்குன்னு சொன்னதும்தான் நீ சின்னவயசிலே செஞ்ச குறும்பெல்லாம் ஞாபகம் வருது, எவ்வளோ நாளா நான் ஆசையா வளர்ந்த ரோஜா செடியே தோட்டியோட உடைச்சது, என்னோட சைக்கிளிலே காத்து பிடிங்கி விடுறதின்னு, வீட்டுக்குள்ளே வந்ததும் கையிலே கிடைக்கிறதே விளையாடுறேன்னு சொல்லி அதே போட்டு உடைக்கிறது, ஐயோ நீ வர்றேன்னு சொன்னா போதும் எங்கம்மா உனக்காகவே பொருள்களையெல்லாம் ஒதுங்க வைக்க ஆரம்பிச்சிருவாங்க. இவ்வளவுதான் ஒரு லிஸ்டாவது போடமுடியுமா அது மொழக் கணக்கிலே நீண்டுக்கிட்டுதான் போகும்."

"டீச்சர், நீங்க சந்தடி சாக்கிலே என்னை பன்னி,குரங்குன்னு சொல்லிட்டிங்க, நல்லாயிருங்க.. அது என்னோமோ உண்மைதான் இனம் இனந்தே தேடி கண்டுபிடிச்சுதானே சேருமின்னு சொன்னது பொய்யில்லை!!"

"நீ வளர்ந்து பெரியவனா ஆனாலும் உன்னோட குறும்பு மட்டும் மாறலேடா, சரி என்னடா மேரேஜ்'க்கு வருவயில்லை??"

"இல்லே டீச்சர், அன்னிக்குதான் எனக்கு கணக்கு பரிட்சை, அடுத்து ஒருநாள்தான் லீவு பிஸிக்ஸ் எக்ஸாமுக்கு, அதுனாலே வரமுடியாது, எங்கேயிருந்தாலும் வாழ்க!ன்னு கட்டாயம் வாழ்த்துவேன்"

"ராஸ்கல்.. உனக்கு வரவர ரொம்ப சேட்டையா போச்சுடா! சரி அம்மா கூப்பிடுறாங்க, அப்புறம் மீட் பண்ணலாம்."

இந்நிகழ்ச்சிக்கு பிறகு விஜி தன்னுடைய கல்யாணவேலைகளில் முழ்கிப்போனாள், நந்துவோ தன்னுடைய மேல்நிலை இறுதி தேர்வுக்காக தயராகிக் கொண்டிருந்தால் அவ்விருவர்களுக்கும் தொடர்பு சுத்தமாக அற்றுப்போனது.வீட்டிலே விஜியின் அம்மாவும் அப்பாவும் கல்யாணத்திற்க்காக அடிக்கடி வெளியே சென்று விடுவதால் அவளுக்கு துணையாய் முதன்முறையாய் நந்து பரிசளிந்த பாரதியார் புத்தகம்தான். விஜியின் திருமணம் இனிதே முடிந்து தன் கணவருடன் வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றாள், அப்போதாவது அவனை சந்திகலாமின்னு முயன்ற வேளையில் அவன் பொது தேர்வு முடித்து என்டரன்ஸ் எக்ஸாம் படிக்க சென்னை சென்று விட்டதாக கேள்விப்பட்டு சிறிய வருத்தமுடன் செல்கிறாள். அதன்பின்னர் அவர்களுக்குள் எவ்விதமான கடிதப்போக்குவரத்தோ, தொலைப்பேசி பேச்சுகள் கூட அமையததால் இன்னும் சிறு காயமாகவே அவ்விருவரும் உணர்கின்றனர்.காலம் உருண்டு ஒடியது.

விஜி, கூடவே தன்மகனேயும் கூட்டிக்கொண்டு ஆறுவருடங்களுக்கு பிறகு இந்தியா வருகிறாள்.தன்னுடைய தாய்வீட்டுக்கு செல்லும் அவள் நேரில் சென்று பார்க்கவேண்டியர்களில் நந்துக்கே முதலிடம்.

"அம்மா நந்து எப்பிடிம்மா இருக்கான், என்னைப் பத்தி எதுவும் விசாரிச்சானா, இல்லேன்னா என்னை பத்தியாவது அவன்கிட்டே சொன்னீய்யா??"

"ஹிச் போடி! உன்னோட கல்யாணத்துக்கு அப்புறம் நீயே இப்போதான் இங்கே வாறே, உன்னோட பிரசவத்துக்கு கூட நான்தான் அங்கே வந்தேன், நீ போனதுக்கப்புறம் நீ வச்ச ரோஜா செடியும், நந்துவும் என்னை வந்து பார்ப்பாங்கன்னு நினைச்சேன், ரோஜாவிலே மட்டும் தினமும் வாசம் வரும், ஆனா இந்த வாலுபய ஏதோ ஊரிலே படிக்கிறான் மட்டும் அவனோட அம்மா சொல்லி மட்டும் தெரியும்,ஆனா அவனே ஒருநாள் கூட நேரிலே பார்க்கலை!."

"என்னம்மா சொல்லுறே! ஒருநா கூட பார்க்கலையா,அவங்கம்மா என்னா சொன்னாங்க,"

"என்னா சொல்லப்போறா, மிலிட்டரி மெடிக்கல் காலேஜ்'லே டாக்டருக்கு படிக்கிறான்னு பெருமையா சொல்லுவா, கடைசியா டீச்சர் எப்பிடியிருக்காங்கன்னு கேட்க சொன்னான்னு சொல்லுவா, அவ்வளவுதான்."

"அட பரவாயில்லையே என்னை மறக்கமே இருக்கானா?? ஆச்சரியம்தான், சரி வா உன்னோட பேரனை ஹாஸ்பிட்டலே காட்டி வரலாம், வந்த ரெண்டுநாளிலே அவருக்கு நம்மூர் வெயில் ஒத்துக்காமே கஷ்டப்படுறாரு"

விஜி தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறாள்.அங்கே மருத்தவர் ஆலோசனைகாக காத்திருக்கும் சமயத்தில் "டீச்சர், டீச்சர்"ன்னு நந்து குரல் கேட்டு ஆச்சரியத்துடன் அந்த இளைஞனே பார்க்கிறாள்.

"நீங்க யாருங்க? யாருன்னு அடையாளம் தெரியலை?? ஆனா சந்தேகத்திலே கேட்கிறேன்? நீங்க நந்து.. நந்தக்கண்ணனா??"

"ஆமா டீச்சர், என்ன அதுக்குள்ளே என்னை மறந்திட்டிங்க பார்த்தீங்களா? ஆனா உங்களே பார்த்தமாத்திரத்திலே அடையாளம் கண்டுபிடிச்சு கூப்பிட்டேனே??"

"டேய் நந்து, நீயா ரொம்ப ஆச்சரியமா இருக்குடா, ஆளே மாறிப்போயிட்டே, பார்க்க என்னோமே ஒரு பயில்வானட்டாம் இருக்கீயா, என்னலே கண்டுப்பிடிக்கமுடியலே, இன்னும் கூட நந்துக்கிட்டே தான் பேசிக்கிட்டு இருக்கோமான்னு சந்தேகமா இருக்குடா?"

"நீங்க என்ன டீச்சர், எங்கம்மாவே என்னை அப்பிடித் தான் பார்த்தாங்க, கேள்விப்பட்டு இருப்பிங்கன்னு நினைக்கிறேன், நான் மெடிக்கல் படிச்சது மிலிட்டரி காலேஜ்லே, அதுனாலேதான் இப்பிடி ஒரு மாற்றம்! ஆனா உங்கக்கிட்டே எனக்கு ஒரு மாற்றம்கூட தெரியலே? அப்பிடியே இருக்கீங்க, இந்த குட்டிபையன் வந்ததுக்கப்புறமும் அப்பிடியே இருக்கீங்க.. ஆமா இவன் பேர் என்ன??"

"பார்த்தியா! நாமே பேசிக்கிட்டே நம்ம நாட்டு விருந்தாளியே அறிமுகப்படுத்தி வைக்க மறந்துட்டேன். இவர் பேர் சொன்னாக்கூட நீ ஆச்சரியபடுவே!!"

"என்ன டீச்சர், விருந்தாளியா?? அப்போ இவரு அந்நாட்டு பிரஜையா??? சரி பேர் என்னான்னு சொல்லுங்க? ஒங்ககிட்டே என்ன கேட்கிறது, நான் அவருகிட்டே கேட்டுக்கிறேன், ஹாய் டியர் வாட் இஸ் யூவர் நேம்?"

"என்னோட பேரு நந்த குமார்"ன்னு தமிழிலே பதிலளிக்கிறான் குழந்தை.

"என்னடா பண்ண சொல்லுறே, எனக்கு இவன் பிறந்ததும் பேர் வைக்கனுமின்னு வந்தோப்பா எனக்கு தோணினது உன்னோட பேர் நந்து மட்டும்தான்"

"டீச்சர்! என்ன சொல்லுறீங்க, அப்படியென்ன நான் உங்க வாழ்க்கையிலே வந்துட்டேன்??"

"ஆமாண்டா எனக்குன்னு கூட பிறந்தவங்க யாரும் கிடையாது, இந்தா அம்மா முன்னாடியே சொல்லுறேன், எனக்குன்னு நானே பேசி, நானா சண்டை போட்டுக்கிட்டு அழுது,அப்புறமா சிரிச்சுக்கிட்டு தனியாளாதான் வளர்ந்தேன்.அப்புறமா நீ என்னோட வந்ததுகப்புறமா தான் பாசம்,சண்டை,குறும்புதனம், இன்னும் என்னோமோ உன்கிட்டே இருந்து எனக்கும் வந்துச்சு. நீ எனக்கு மானசீகமான சகோதரனா இருந்தேடா,ஆனா இப்போ நீ அதையும் தாண்டி இன்னோரு உறவுக்குள்ளே வந்துட்டே!"

"டீச்சர்! என்னை அறியாமலே இப்போ எனக்கு கண் கலங்குது!"

"என் பையனுக்கு நந்து'ன்னு பேர் வைச்ச ராசியோ என்னோமோ உன்னைமாதிரியே தான் அவனும் இருக்கான் அவன் உடைச்ச பொருளே மட்டும் குவிச்சு வச்சா அது எவரெஸ்டா உசரத்துக்கு வந்திரும். இன்னோன்னு ஹாஸ்பிடலுக்கு வந்திட்டா இவனை பார்த்து டாக்டருங்க எல்லாம் அலறுவாங்க??"

"ஏன் இவன் டாக்டருக்கு ஊசி போடுவானா??"

"இல்லேடா... டாக்டர்'ங்க ஹார்ட்பீட் டெஸ்ட் பண்ண ஸ்டெஸ்தஸ்கோப்பை காதிலே மாட்டிக்கிறோப்போ படக்குன்னு எடுத்து அதிலே கத்திருவான்,அவங்கதான் பாவம், அதுக்கப்புறம் அவங்களே பார்க்கவே பரிதாபமா இருக்கும். உன்னயே விட பத்து மடங்கு குறும்புக்காரன்தான். அங்கே பாரு இவனே டெஸ்ட் பண்ணின டாக்டர் காதை பிடிச்சிட்டே போறாரு பாரு! அதுதான் இவன் என்னோட இளையமகன்டா, குறும்புன்னா குழந்தைக எப்பிடி பண்ணுவாங்கன்னு எனக்கு சொன்ன நீதான் என்னோட மானசீகமான மூத்தமகன்...."

"முல்லைச் சிரிப்பாலே - எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய். ... இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ? அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ?"