Thursday, September 27, 2007

சவடன் கதை

"யே ஆத்தா, எங்க சவடப்பச்சியை விடிக்காலே இருந்தே காணேலே? எங்கன போயிருக்கு?"ன்னு வீட்டுக்கு வெளியே நின்னு கேட்ட புள்ள யாருன்னு பார்க்க கண்ணை குருக்கிக்கிட்டு வீட்டை வெளியே வந்துச்சு பர்வதப்பத்தா.

"வாடியாத்தா, மருதமீனாட்சி, என்னாத்துக்கு அப்பச்சிய தேடி வந்தே?"

"அப்பத்தா என்னோட பேரு மீனாட்சி தான், சுருக்குன்னு மீனா'ன்னு கூப்பிடு, அப்போதான் இஸ்டைலா இருக்கும்"

"என்னடியாவேளெ சுடல, சுட்டுருச்சுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேவே, அவன் மருதக்கு போயிருக்கான், கருக்கலிலே போனான், இன்னும் வந்த சேதிய காணாம். என்னா சொல்லனும்?"

"நான் என்ன அப்புச்சி'கிட்டே சேதி சொல்லப்போறேன். சொக்கய்யா தான் பார்த்துட்டு வர சொன்னுச்சு"

"சரி அவன் வந்தா சொல்லிவிடுறேன். சொக்கன் சொல்லிதான் அவன் டவுனுக்கு போயிருக்கான்னு நினைச்சி கிடந்தேன்."

"வந்தா சொக்கய்யா கடைக்கு வரசொன்னுச்சு'ன்னு சொல்லிருப்பத்தா, நானு கம்மா'கிட்டே பாண்டியாட போறேன், நான் இங்கன வந்தேன்னா எங்கம்மா வந்து கேட்டுச்சு'ன்னா சொல்லிரு"ன்னு சொல்லி விட்டு ஓடி விட்டாள்.

கலியாணம் ஆன ரெண்டேமாசத்திலே சீக்கு வந்து செத்துப் போன புருசன் வீட்டிலே இருந்து தம்பி சவடன் வீட்டிலே தங்கினவ தான் பர்வதத்தா. இப்போ வயசு அறுவதஞ்சு தொட்டுருச்சிக்கிறதுக்கு பார்க்கிற பார்வைக்கு கண்ணை குறுக்கி மறுக்கி ஆள கண்டுபிடிக்கிற திரணி'லே தான் அந்த ஊரே நம்புச்சு, இல்லன்னா இன்னும் அம்பது தாண்டிருக்காதுனு தான் சொல்லிருப்பாங்க. பதினாறு வயசிலே மூளியாகி ஒழைக்க ஆரம்பிச்சதுதான் இன்னமும் நாத்து நடுறது, கடலை ஒடக்கிறது, அறுவடையிலே தூசி தட்டுறது'ன்னு எந்த கழனி வேலையானலும் செய்யும். அதுக்கூட ஒடம்பொறந்த சவடமுத்து ஊருக்கு ஒழைக்கிற உத்தமரு, ஒன்னேஒன்னு கண்ணேகண்ணு'ன்னு ஆம்பிள்ள பிள்ளய பெத்துட்டு துபாய் சீமையிலே வேலை பார்க்கிறான்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்ட நல்லவரு. இவரு கூடயும் இருவது வருசம் குடும்பம் நடத்தி சுமங்கலியா செத்துப்போச்சி பேச்சியாத்தா.

"ஏண்டா முத்து, கருக்கலிலே மருத போறேன்னு போனவன் பொழுது சாய வர்றே? எங்கேடலே போயிருந்தே?"

"மேலசந்து மருததேவரு பொண்ணுவயத்து பேத்தி இருக்குலே அது நேத்து பொழுதுலே பெரிய மனுசியாட்டாளாம், அவக வீடு அனுபானடி'லே இருக்குலே, அதுதான் மருதனும் நானும் அங்கன போயி மேக்காரியமெல்லாம் பார்த்திட்டு வந்தோம்"

"என்னோமோ, ஒன்னதேடிக்கிட்டு சொக்கன் அனுப்பிச்சான்னு ஊருக்குள்ளே இருக்கிற குஞ்சான் குளுவனெல்லாம் வந்து நீயிருக்கியான்னு கேட்டு போச்சுக"

"அப்பிடியா, ஆளு அனுப்பினனா? என்ன சோலியா இருக்கும்? ஒரு எட்டு பார்த்தியாறேன், மத்தியானமா அந்த வீட்டிலே தின்னது,பசி வயத்த கிள்ளுது, கேப்பகஞ்சி காஞ்சப்போறேன்னு நேத்து சொன்னீயே, இன்னமும் மிச்சம் இருக்கா, சொக்கப்பச்சிய பார்த்திட்டு வந்து குடிச்சிக்கிறேன்.”

“ஹிம் அதெல்லாம் இருக்கு, வெரசா வா, பேசுறேன் பேசுறேன்னு விடிய விடிய ரெண்டு பயலுகளும் பேசிக்கிட்டு கெடக்காதீயே”

சவடமுத்துவும், சொக்கனும் ஓரு சோட்டு வயசு, அந்த காலத்திலே படிக்க பள்ளிக்கூடம் அனுப்பினா ஊரு வாயக்காலிலே சுத்திட்டு கிடந்த பட்டிக்காட்டு பக்கிகதான். சவடன் கூலிவேலைக்கும் கொலுத்து வேலைக்கும் போயி சம்பாரிக்க ஆரம்பிச்சதும், சொக்கு அந்த வியாபாரம் பார்க்கிறேன், இந்த வியாபாரம் பார்க்கிறேன்னு நஷ்டப்பட்டு நோகமதானே நாமெல்லாம் கஞ்சி குடிச்சோம்! எதுக்கு கஷ்டப்பட்டு பொழக்கனுமின்னு கத்துவட்டி கொடுத்து வாங்கி பொழைக்க ஆரம்பிச்சான். கடன் வாங்கவறனுவக்கு விலாசம் காட்டனுமின்னு ஊருக்குள்ளே இருந்த டீக்கடைக்காரனுக்கே கடன் கொடுத்த ஆறேமாசத்திலே வட்டிக்கு கடையே எழுதி வாங்கிட்டான். அதிலே கொஞ்சகொஞ்சமா விஸ்தரிச்சு இப்போ கிளப் கடையா ஆக்கி சும்மா வந்தா வரட்டும் வராட்டி போகட்டுமின்னு உட்கார்ந்தவன் தான்.

"சொக்கா, என்னாப்பே கூப்பீட்டு விட்டியா? அக்கா சொன்னுச்சு? ஏதும் மருத போயிட்டு வர்ற சோலி இருக்கா என்ன?"

"வாப்பே சவுடா, எங்கனப்போயிருந்தே? நேத்து ரவைக்கு வீட்டுக்கு போனவ இன்னிக்கு ரவைக்கு இங்க வர்ற? என்னாலே சேதி?"

"ஆத்தி ஒனக்கு விசயமே தெரியாதா? மேலதெரு மருதனோட பிள்ளை ஒன்னே அனுப்பானடி'லே கொடுத்து இருந்தானே? அவ மூத்தப்பிள்ள பெரியமனுசாயிட்டா. அவன் மருவானோட இந்த பய மவன் சண்டை போட்டானாமே, அதுக்கு இவரு முருக்கிக்கிட்டு நான் வரமாட்டேன்னு சொல்லிட்டான், அதுனாலே மருதய்யன் போயி சண்டைய தீர்த்து வைக்கிறேன்னு ரெண்டு பய காலிலேயும் விழுந்து எந்திருச்சிட்டு வந்தான்.”

“நீ என்னாப்பே அங்கன போயி பண்ணினே?”

“நான் என்ன பண்ணேனா? நாட்டமை இல்லாத ஊருக்குள்ளே தடியெடுத்தவந்தானே தீர்ப்பு சொல்லனும், அதுதான் ரெண்டு பயலுகள்கிட்டேயும் சமாதானம் பேசினேன், பக்கி பயப்புள்ளக சண்டை வந்ததே சராயம் குடிக்கப்போன வந்த கைகலப்பாம், எழவெடுத்தவனுக அப்பனுக்கு தெரிஞ்ச கோவப்படுவான் சண்டை போட்ட காரணத்தை தவிர மத்ததே தான் பேசிட்டு கெடந்தானுக.”

“கடைசியா என்னாச்சி? சமாதானம் ஆனானுகளா இல்லயா?”

“ஹிம் மருதமவன் என்னத்த நினைச்சானோ சரின்னு போயி கூரை கட்டப்போயிட்டான்.”

“அதுதாண்டா ஒன்ன எங்கனயும் இந்த பயலுக கூட்டிட்டு போறது, ஆகாத காரியத்தையும் ஆக்கி வைக்க பொறந்தவண்டா நீ சவடா!”

“யேப்பே என்னத்துக்கு இது, இருவது சந்துக இருக்கிற ஊருக்குள்ளே இருக்கிற எல்லாபயலுகளும் நமக்கு வேண்டப்பட்டனுவக தான், அவனுகளுக்குன்னு கஷ்டமின்னு வந்தா நமக்குன்னு வந்ததுதானே?”

“ஏலேய் ஒன்னவர சொன்ன காரியத்தை விட்டு வேற என்னத்தயோ பேசிட்டு இருக்கோம் பாரு, சுப்பைய்யாசாரி சங்கிலி செஞ்சு கொண்டாந்தாட்டாரு, இந்தா பாரு, காளியத்தா’கிட்டே கொடுக்கமுன்ன ஒன்கிட்டே காட்டிபிடனுமின்னு தான் ஒன்ன தேடின்னேன்.”

“ஓ.... ஆமாலு, அவரு பத்து நாளாகுமின்னு சொன்ன தவணை’க்கு சரியா முடிச்சி கொண்டாந்துட்டாரா, அடியாத்தி நல்லாதாய்யா இருக்கு, ஒத்தக்கொடின்னாலும் கெட்டியா இருக்குலே, ஆத்தா பார்த்துச்சின்னா பூரிச்சிருமிலே,என்னோட கெழவி கண்ணமூடுறதுக்குள்ளே தாலிகொடி செஞ்சு கொடுக்கலாமின்னு பார்த்தேன், முடியலை எழவு, இப்போ வந்திருக்கிற மருமகளுகாகவது வாங்கி செஞ்சு மாட்டுன்னு சொல்லிருக்கேன், சரின்னு சொல்லிருக்கான் பய, அவங்க இந்த வருச சித்திரை திருவிழா’வுக்கு வந்தாதான் தெரியும்”

“சவடா, மவன்னு சொன்னதும் ஞாபகம் வருது, பய மருத’லே வீடு ஒன்ன வாங்கி போட்டேன்னே? அதை என்னாடா வாடகைக்கு விட்டுருக்கானா என்ன?”

“ஆமாப்பே, கீதளத்திலே குடும்பம் ஒன்னு குடியிருக்கு, மெத்தயிலே சும்மாதான் போட்டு வைச்சிருக்கான், திருவிழா எதுவும் வந்தாலும் அங்கன வந்து தங்கிருக்கனுமின்னு வைச்சிருக்கான்.”

“சவடமாமோய், ஒன்னந்தானே நானு பொழுது சாயுற நேரத்திலே இருந்து தேடிட்டு இருக்கேன்”ன்னு பெருங்கொரலெடுத்து கூப்பிட்ட முத்தையா’வே பார்க்க வெளியே வந்தான் சவடன்.

“ஏனேலே, பால் தரலன்னா மாட்டுக்கே தீனி வைக்கமாட்டியே, இப்போ என்னத்துக்கு என்னை தேடினே?”

“ஆத்தி, விசயமின்னா தானே ஒன்னை ஊரே கூப்பிடும், அப்போ நான் இந்த ஊருக்காரன் இல்லயா? நீ இப்போ எங்க வீட்டுக்கு வா, பின்னாடி கொத்து வேலை பார்க்கனும், என்னாஏது பண்ணலாமின்னு நீயே வந்து பாத்து சொல்லு.”

“சொக்கப்பா , அப்பச்சி வீடு வரைக்கு போயாந்திறேன்... நீ இங்கன இரு, கஞ்சி குடிக்க சேந்தே வீட்டுக்கு போலாம்”

“ஏமலே, மாடுகண்டுக்கு தண்ணி காட்ட இருக்கிற எடத்தை எடுத்து ரூம்பு தடுக்கப்போறியா? அப்போ ஒன்னோட மாடுகள எங்கன கட்டிப்போடுவே?”

“இருக்கிறதே இம்புட்டு இடந்தானே சவடமாமு, மூத்த பயலுக்கு வேற வயசு முப்பதை தாண்டிருச்சு, அவனுக்கு அடுத்தமாசத்திலே கலியாணத்தை நடத்தி இந்த இடத்திலே வைச்சிரலாமின்னு பார்க்கிறேன். இப்போ பொழங்கிற இடம் பத்தாதிலே? பொண்ணு வேற ஆளாயிருக்கு.....”

“வெளங்கிருச்சு, ஆக இந்த இடத்திலே ரூம்பு தடுக்கத்தான் போறே? யாற கூட்டி கட்டப்போறே? மேலக்கால் பழனி பையன் மேஸ்திரி வேலைதானே பார்த்திட்டு இருக்கான், அவனை கூட்டியே முடிச்சிருவோமா? என்ன சொல்லுறே?”

“மாமு ஒனக்கு என்ன தோணுதோ செய்யி, நானு ஒன்னியும் சொல்லலை.”

“நானு அவன்கிட்டே பேசிட்டு சொல்லுறேன், இப்போ மணி என்ன ஏழா எட்டா.. இன்னோரம் வந்திருப்பான், அவனை போயி கையோட கூட்டியாந்து எம்புட்டு ஆகுமின்னு அவங்கிட்டே விசாரிச்சுபிடலாம்.”

“சவடப்பச்சி சவடப்பச்சி, ஒன்ன சொக்கப்பச்சி கடையிலே தேடிட்டு இருக்காங்க... என்னத்தையோ காணோமா, நீ எதுவும் பார்த்தியான்னு கேட்க ஒன்ன தேடிட்டு இருக்காங்க, வெரசா போ”ன்னு சொல்லிட்டு ஓடிப்போன சீனியாத்தா பேரனோட வேகவேகமாய் சொக்ககடைக்கு ஓடியாந்தான் சவடன்.

“வா மாமு, எங்கன அப்பிடியே நைசா நழுவி ஓடிப்போயிட்டே”ன்னு குத்தலாக கேட்ட சொக்கன் மகன் வேலுவின் முகத்தை பார்த்ததும் சவடனுக்கு பயங்கரமா இருந்தது.

“என்னப்பச்சி, என்னா சொல்லுறே? எங்கன நானு நழுவி போனேன், முத்தைய்யன் கூப்பிடன்னு அவன் வீட்டுக்கு போயிந்திருதேய்ன்.”

“அதுதான் மாமு, போறப்போ என்னத்த எடுத்துட்டு போனே?”ன்னு இன்னொரு பக்கம் சொக்கனோட மூத்த மவன் சாமிக்கண்ணு குதர்க்கமா கேட்டான்.

“ஏலேய்.. என்னாடாப்பே என்ன பேச்சு பேசுறீங்க? என்னத்த நான் எடுத்து போனேன், சொக்கா என்னாப்பே நடத்துச்சு இங்கன”

“என்னத்த அப்பன்கிட்டே குறுக்கு வெசரணையே போடுறே? நீ போனதிலேயிருந்து செஞ்சு வாங்கியாந்த கயித்து சங்கிலியை காணாம், கடைக்குள்ளே தேடு தேடுன்னு தேடியாச்சு, எங்கனயும் காணாம், அப்போ என்னத்த நினைக்கிறதுன்னு நீயே சொல்லு?”

“ஆத்தி, மடப்புர மாரியாத்தா, என்னா சோதனை இது? சாமி நானு என்னத்தயும் எடுக்கல’ப்பே! சொக்கா நீயாவது வாய தொறந்து சொல்லுப்பே”

“அதுவே பேச்சு மூச்சில்லாமே கெடக்கு, நீ பேச்சுவாக்குலே ஒன்னோட தொபையி மருமக கழுத்திலே இதேமாதிரி மாட்டனுமின்னு சொன்னியாமே, அதுக்குதான் எடுத்து வைச்சிருக்கீட்டியா?”

“வேலு பார்த்து நிதானமா பேசுப்பே, ஓரேடியா கொட்டிறாதே, சொக்கன் எதான்னுச்சும் சொல்லட்ட்டும், நானு பேசிக்கிறேன்”

“ஏலே சவடா, ஒன்கிட்டே சங்கிலிய காட்டிட்டு காகிதத்திலே தான் மடிச்சி வைச்சேன், ஆனா எங்கன போச்சின்னு தான் காணலை, ஆனா இந்த பயலுக தான் தேடி பார்த்தானுக, எங்க போச்சின்னு தெரியலை’டா’ன்னு கண்ணிர் விட்டு மூர்ச்சையாகினான் சொக்கன்.

“ஏலேய் வேலு அப்பனை பிடிடா, இந்த பெருச தூக்கி போட்டு மிதிச்சாதான் உண்மைய சொல்லும், ஏய்யா ஒன்னோட தராதரம் என்ன எங்க தராதரம் என்ன? கீச்சாதி’லே இருந்தாலும் ஒன்னையும் எங்கப்பன் மதிப்பு கொடுத்து வைச்சிருந்தான் இல்ல, எப்புறம் என்ன இந்த ஈனப்புத்தி”ன்னு வார்த்தைகளாலும் கைக்களிலும் வெளுத்தான் சாமிக்கண்ணு.

“அப்பே கண்ணு, நானு எடுக்கலை’ப்பே, எனக்கு எடுக்கனுமின்னு அவசியமும் இல்லப்பே. நல்லா தேடிப்பாருங்கய்யா”

“எல்லாம் தேடி பார்த்துட்டு ஒன்னை தேடி ஆளு அனுப்பினோம்.... அன்னனைக்கு கடைகண்ணிக்கு போயி மேவேலை பார்த்து கொடுத்து சம்பாரிச்சிட்டு இருக்கிற ஒம்பையன் எப்பிடிய்யா துபாயி போனான், இப்பிடிதான் அப்பன்கிட்டே தெனம் தெனம் பேச்சை கொடுத்து காச களவாண்டு போனீயா சொல்லு?”

“ஆத்தி, இப்பிடியெல்லாம் என்மேலே பழி போடாதேப்பே, காசு இல்லன்னா திங்காமே கூட செத்து போயிருப்போமே தவிர இந்த மாதிரியெல்லாம் செஞ்சுருக்க மாட்டேப்பே... என்னை நம்புப்பே, நான் எதையும் எடுக்கலை அய்யா, சாமி என்னை நம்புய்யா”


சவடன் கைகும்பிட்டு அழுதும் அதை காதிலே வாங்கிக்காத சாமிக்கண்ணு சவடனை இழுந்து போட்டு முதுகில் குத்தி சொல்லிரு சொல்லி’ன்னு அடித்து கொண்டுருந்தான், ஊரே கூடி என்ன நடக்குதுன்னு உள்ளுக்குள்ளே விசாரிச்சிட்டு அதுகளே அப்பிடியா சேதி’ன்னு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிதுக. சவடனை இழுத்து போட்டு தள்ளி படாதபாடு படுத்தி கொண்டிருந்தனர் சாமிகண்ணுவும் , வேலுவும் அவனை அங்க இழுந்து தள்ளுவதும், இப்பிடி தள்ளியும் அடித்து கொண்டிருந்ததில் மூலையில் போயி விழுந்தான் சவடன். மூலையிலே வடை, பஜ்ஜி தின்னு போட்ட இலை பொறுக்கும் சட்டியிலிருந்து விழுந்தது சங்கிலி பொட்டலம்.

“சாமிகண்ணுண்ணே, சங்கிலி இங்கன கெடக்கு, கருமம் இந்த எழவை பார்க்கமே விட்டோம் பாரு, இப்போ ஊரே வேடிக்கை பார்த்திட்டு கெடக்காருய்ங்க, இப்போ என்னத்த பண்ணி தொலைக்கிறது?”

“ஹிம் ஹிம் செவன்னு இரு, நான் பார்த்துக்கிறேன்”ன்னு வெசக்காரபயலுக ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசி என்னத்தயோ முடிவு எடுத்தானுக.

“ஆத்தி வெவரமான பெருசு, எச்சியிலை எடுத்து போடுற சட்டியிலே போட்டு வைச்சிருக்கு பாருங்களேன்”ன்னு தீடீரென்னு அந்த சங்கிலியை பார்ப்பது போலே கத்தினான் சாமிகண்ணு. ஊருசனமெல்லாம் அட ஆமாம் இங்கன தானே கெடந்துச்சு, அதுக்குள்ளே ஏய்யா அப்பச்சியை போட்டு அடிச்சீங்க?ன்னு கேட்ட ஒருத்தனை பார்வையாலே மொறைச்சி அப்புறப்படுத்தினான் வேலு.

“வேலு , அப்பன் மூஞ்சிலே தண்ணி தெளிச்சிவிடுடா, சங்கிலி கெடச்சிட்டுச்சுன்னு சொல்லு, இந்த ஆளு மொகத்திலேயும் தண்ணி தெளிச்சி விட்டு எழுப்பு, வாங்குன அடியிலே சுருண்டு போயி கெடக்கு.”

“அண்ணே, அப்பன் எந்திருக்க மாட்டேமே மருகுதுண்ணே, என்ன பண்ணலாம்?”

“அப்பிடியே மெதுவா தோளிலே போட்டு வீடு வரை தூக்கியாந்திரு, இந்தாளை நானு அப்புறப்படுத்திட்டு கடையே சாத்தியாறேன்”

“சாமிண்ணே, சவடமாமு அவமானத்திலே வீடு போயி என்னத்தயாவது செஞ்சுக்கப்போகுதுண்ணே, அப்புறம் நாமே கஷ்டப்படணும்”

“ஏலேய் நீ என்னாத்துக்கு பயப்படுறே? அது அந்த மாதிரி செஞ்சுக்கிருச்சுன்னா நமக்கு தான் நல்லது, செஞ்ச தப்பு வெளியே தெரிஞ்சுருச்சி, அதுதான் இப்பிடி பண்ணிக்கிருச்சுன்னு நாமே தப்பிச்சுக்கலாம், அதுக்காக அவனுககிட்டே நாமே தோக்கமுடியுமா? நம்ம தராதரம் என்னத்துக்கு ஆகுறது?”

“ஹிம் நீ சொல்லுறதும் சரிதான், ஊருக்காரயங்க சவடமாமே கைதாங்கலா தூக்கிட்டு போறனுவே, வா நாமே அப்பிடியே கெளம்பிக்கோவோம்.”

வீட்டில் சவடனை போட்டதும் பர்வதப்பத்தா’கிட்டே எல்லாத்தையும் சொன்னார்கள். அதுவரைக்கும் அமைதியாய் வீடு வரை வந்த சவடன் மொணங்க ஆரம்பித்தான்.

“சொக்கா... என்னை நம்புப்பே நான் எடுக்கல, என்னை பெத்த ஆத்தா மேல சத்தியமா எடுக்கலை’ப்பே, என்னை நம்பு”

“ஏண்டா எருமையை போட்டு அடிக்கிறமாதிரி அடிச்சிருக்காங்க, ஊருக்காரயங்கே நீங்க செவன்னேன்னு வேடிக்கை பார்த்துட்டு கெடந்தீங்களா?”

“எங்கள எங்க கேள்வி கேட்கவிட்டானுக, அவனுகளா பேசிக்கிட்டு அடிச்சி போட்டானுக”

ஏஞ்சாமி ஊருக்குன்னா நீ ஓடியாடி வேலை பார்ப்பியே, இங்கப்பாரு ஒனக்குன்னு ஒன்னு ஆகியும் இப்பிடி பேசிட்டு கெடக்கானுக”ன்னு கண்ணீர் மல்க சவடனுக்கு ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தாள் பார்வதத்தா.

துக்கம் கொண்ட ராத்திரி நகரவேமாட்டேன்னு அடம் பிடிச்ச அழுத கணக்கா இருட்டி கெடந்த நேரத்திலே ஒருத்தன் கண்ணு மண்ணு தெரியாமே சவடன் வீட்டுக்கு ஓடியாந்தான்.

“ஆத்தா, அப்பச்சி, வீடிக்காத்தலே சொக்கய்யா விஷத்தை குடிச்சிருச்சி, இப்போதான் வைத்தியர் வந்து மாத்து மருந்து கொடுத்திருக்காங்க, சவடப்பச்சி ஒன்னை பார்க்கனுமின்னு சொக்கய்யா கண்ணீர் விட்டு அழுவுதுய்யா”

சேதி கேட்டு உசுரு போற வேதனையிலும் ஓட்டமாய் ஓடி சொக்கன் வீட்டையடைந்தான் சவடன்.

“அப்பே, என்னோட ராசா, எதுக்கு இந்த மாதிரியெல்லாம் பண்ணே? இது எனக்கு நடந்த அவமாணந்தானே, நீ எதுக்கு ஒனக்கு தண்டனை கொடுத்துக்கிட்டே?”

“இல்லடா, சவடா, என்னோட சவடய்யன் அதெல்லாம் செய்யமாட்டான், காசா இறைச்சு போட்டுருந்தாலும் ஒத்த பைசா எடுக்கமாட்டான்னு என்னாலே சொல்லமுடியலை பார்த்திய்யா? என் பொருள் காணாமே போனதும் ஒன்னையும் சந்தேகத்துக்கு இடமா ஆக்கிட்டேனே? அதுவுமில்லாமே கண்ணுமண்ணு தெரியாமே ஒன்ன வேற போட்டு அடிச்சி போட்டுருக்கானுக இந்த காட்டுமெரண்டி பயலுக, அதெ தடுக்கக்கூட சத்திலேமே போயிட்டேன் பாரு..... “ன்னு ஈனஸ்வரத்திலே அழுதான் சொக்கன்.

“இல்ல ஐயா, நீ சந்தேகப்பட்டுக்கிறது உண்மை இல்லையே, ஏதோ சன்னமா தோணிருக்கு அவ்வளோதானே? ஆனா என்னந்தான் அந்த பயலுக அடிச்சாலும் எனக்கிட்டே இருந்த ஒத்த வார்த்தை நான் எடுக்கலை நான் எடுக்கலை’கிறதே தவிர வேற ஒன்னும் இல்லிய்யா?”

“பொருள் கிடைச்சாலும் ஒனக்கு எனக்கும் போன மானமருவாதியை மீட்டெடுக்க முடியுமா? நீ குத்தமில்லாதவன்னு நிருபிச்சிட்டே, ஆனா நான் பண்ணின தப்புக்கு நாந்தானே தண்டனை கொடுத்துக்கனும், அதுதான் சத்தமில்லாமே செத்து போலமின்னு பூச்சிமருந்தை குடிச்சிட்டேன், ஆனா காளியத்தா எப்பிடியோ பார்த்து கத்திப்பிட்டா”

“ஆத்தி, ஒனக்கு எதுக்குய்யா இந்த தண்டனையெல்லாம்? பயலுக விவரம் தெரியாமேதான் அடிச்சானுக, பெத்தபிள்ள பிறந்தோப்போ நடந்து பழகிறோப்போ தூக்கி கொஞ்சுனோமின்னா நெஞ்சிலே மிதிஞ்சா வலிக்குமா என்ன? அதுதான் மாதிரிய்யா எனக்கு வலிஞ்சது அவ்வளோதான்”

“என்னோட சாமி, நான் இப்போ படுத்திருக்கிற நிலமையிலே இருந்து எந்திரிச்சு நிக்கனுமின்னு ரொம்ப ஆசையா இருக்குடா சவடா, ஒன்னோட காலிலே நெடுஞ்சாண் கிடையா விழுந்து கெடந்து மன்னிப்பு வாங்கினுமின்னு உசுரு துடிக்கிதுடா சவடா’ன்னு கதறியழுத சொக்கனை கட்டி தானும் கண் நனைந்தான் சவடமுத்து.

பூமி நனைக்க வானமும் அந்த தருணத்தைதான் எதிர்பார்த்து கொண்டு இருந்தது.

Monday, September 24, 2007

ஹைய்யா...கெலிச்சிட்டோம்........ :)

கிரிக்கெட் விளையாட்டில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் பங்குப்பெற்ற இறுதியாட்டாத்தை கண்டுகளித்த சந்தோஷத்திடன் இடப்படும் பதிவு. ஜெயிக்க வேண்டிய மேட்ச்'ஐ இப்பிடி கோட்டை விட்டுருக்கனுகளே, இவனுகளே என்னத்த சொல்லித் தொலைக்கிறது'ன்னு புலம்ப வைச்சிருவானுகளோன்னு வேற பயம். இன்னிக்கு சாயங்காலம் அஞ்சுமணிக்கே ஆபிஸிலே பாதி பேத்த காணாம். அம்புட்டு பயப்புள்ளகளும் வீட்டுக்கு ஓடிப்போயி டிவி முன்னாடி உட்கார்ந்துருச்சுக. ம்ம் ஜெயிச்சா வின்னர் தோத்தா ரன்னர்'ன்னு தான் பார்க்க ஆரம்பிச்சதினாலே பெரிய எதிர்பார்ப்பு ஒன்னும் வரலைன்னு பொய் சொல்லிட்டு தான் மேட்ச் பார்க்க வேண்டிய சூழ்நிலை.

நம்ம பசங்க மேலே அப்பிடியொரு நம்பிக்கை...........

ஹிம் இம்புட்டு எதிர்பார்ப்பு'ஐ ஏற்படுத்திட்டு அந்த அளவுக்கு விளையாட்டு தொலைச்சானுக'ன்னு பார்த்தா எழவு அதுவும் இல்ல... கெளதம் காம்பீர்'ஐ தவிர எல்லாபயலுகளும் சொத்தையா ஆடி பேட்டிங்'லே கவுத்திட்டானுக... கவுதம் காம்பீர்'க்கு அடுத்து உருப்படியா ஸ்கோர் பண்ணினது RP.சர்மா தான். காம்பீர் 75ம் RP.சர்மா 30'ம் எடுக்க அந்தா இந்தா'ன்னு ஐந்து விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் இந்தியா எடுத்தது.
சரி அந்தா இந்தா'ன்னு ஆடி முடிச்சி சரக்கே தூக்கிட்டு சந்தைக்கு வந்தாச்சி, வியாபாரத்தையாவது ஒழுங்க செய்யுவானுகளா, இல்ல இங்கனயும் சொதப்பிருனுவாங்கன்னு பயந்துதான் ஆட்டமே பார்க்க ஆரம்பிச்சோம். முதல் ஓவரிலே RP.சிங் ஹபிஸ்'ஐ தூக்க இன்னொரு பக்கம் இம்ரான் நசிர் நாலாபக்கமும் பாலை விரட்டிக்கிட்டு இருந்தவும் இல்லாமே ஸ்ரீசந்த்'ஐ தொவைச்சி காயப்போட்டுட்டான். மூணாவது ஓவர்'லே கம்ரான் அக்மல்'ஐ சிங் போல்ட்-அவுட் பண்ண ஆட்டம் சூடுகண்டது. இந்த அமளிதுமளியிலும் இம்ரான் சுத்திட்டு இருந்தான், ஒன்னோ ரெண்டோ எடுக்கிறோம்'ன்னு ஓட உத்தப்பா எறித்த டைரக்ட் ஷட்'லே ரன் -அவுட், இப்போ ஆட்டம் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இதன் பின்னர் மிக சாதாரணமாக நகர்ந்த பாகிஸ்தான் ரன் சேர்க்கிறத ஜோகிந்தர் யூனிஸ்-கான்'ஐ கழட்ட வெற்றி இந்தியா பக்கம் நகர ஆரம்பித்தது.

பதான் சோயிப் மாலிக்'ஐ தூக்க உள்ளே வந்தார் சிக்ஸர் சிங்கம் அப்ரிடி. வந்த மொத பால்'லே சிக்ஸர் தூக்குறேன் பேர் வழி'ன்னு மிட்-அப்'லே ஸ்ரீசாந்த்'கிட்டே கேட்ச் கொடுத்துட்டு குகைக்கு திரும்பிருச்சு சிங்கம். அந்தா இந்தான்னு இந்தியா மாதிரி பாகிஸ்தானேயும் மூணு இலக்கத்துக்கு நகர்த்திட்டு போன மிஸ்பா-அல்-உக் ,யாசிர்-அரபாத் ஜோடியை பதான் பிரிக்க இன்னும் கொஞ்சம் இந்திய வெற்றி ஜெகஜோதியா தெரிஞ்சது. ஆனா மிஸ்பா-அல்-உக்'லே என்னமோ உள்ளே நுழைச்ச கதையா வரிசையா மூணு சிக்சர் அடிச்சி வயித்திலே புளியை கரைக்க ஆரம்பிச்சிட்டான்.

கடைசி மூணு ஓவர்'லே 35 ரன்கள் தேவைக்கிறப்போ ஸ்ரீசாந்த் போட்ட முதல் பால்'லே சிக்ஸ்ர்... ரெண்டாவது பால் வைடு... அஞ்சாவது பால் சிக்ஸ் ஜெகஜோதியா எரிஞ்ச விளக்கு அணையப் போகுதா:( அப்பா தங்கமே எதாவது பண்ணுடா'ன்னு இருந்தா ஸ்ரீசாந்த் ஸ்டிக் ஒன்னை கழட்டி தூக்கி எறிச்சிட்டான்...... :)

இன்னும் கொடுமை'க்குன்னு கடைசி ஓவரு'லே 13 ரன்ஸ் வேனுமின்னு போட்ட ரெண்டாவது பால்'லே சிக்ஸ்ர் அடுத்த பால்'லே கேட்ச்'னு பயபுள்ள அல்-ஹக் அவுட் ஆக இந்தியா வெற்றி பெற்றது


வேகமாக அடிச்சது... புரியலைன்னா மன்னிச்சோங்க மக்கா....

Tuesday, September 18, 2007

விழிகளின் அருகினில் வானம்!

"வினோத் என்னோட கியூபிக்கல்'க்கு கொஞ்சம் வரமுடியுமா?" போனில் கார்த்திக் அழைத்ததும் வினோத்'க்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது, எதாவது சொல்லவதாக இருந்தாலும் நேராக தன்னோட இடத்துக்கு வந்துதானே பேசுவான்? ஏன் தீடீரென்று அவன் கியூபிக்கலுக்கு கூப்பிடுறான்? கொஞ்சம் பிரச்சினையான விவகாரமா இருக்கும் போலே'ன்னு மனசுக்குள்ளே நினைத்துக்கொண்டு கார்த்திக் கியூபிக்கல் சென்றடைந்தான் வினோத்.

"வினோத், நேத்து நைட் நம்ம கிளைண்ட் போன் செஞ்சு காச்சி எடுத்துட்டாண்டா! நம்ம அரைமண்டயன் ஆன்சைட் கோ-ஆர்டினர்'ம் சேர்ந்துக்கிட்டு ஜால்ரா கொட்டிட்டான்! கிளைண்ட் எதிர்பார்த்த அளவுக்கு நம்ம ப்ராஜெக்ட் குவாலிட்டி கொடுக்கலை! அதுவும் டைம்க்குள்ளே எந்த டெலிவரியும் தரலை! இதுவரைக்கும் பே பண்ணின அமெண்ட் எல்லாம் வேஸ்டான மாதிரி ஃபீலிங்'ன்னு நம்ம சீனியர் மேனஜர்'யையும் வைச்சிகிட்டே போன் கான்பிரன்ஸ்'லே சொல்லிட்டான்."

"என்னாடா கார்த்தி சொல்லுறே? இப்பிடியெல்லாம் அவன் பேசுற அளவுக்கு நாமே என்ன தப்பு பண்ணினோம்? நம்ம டெலிவரி'யெல்லாம் சில சமயங்களிலே லேட்டா ஆனாலும் சரியாதான் அவங்க கேட்கிற எல்லாமே செஞ்சு அனுப்பி இருக்கோமே?"

"ஹிம் சம்திங் பிராப்ளம் இன் அவர் டீம் வொர்க், நான் இதுக்கு யாரையும் பிளேம் பண்ண விரும்பலை! கார்த்தி இன்னிக்கு ஆப்டர் லஞ்ச் மீட்டிங் அரெஞ்ச் பண்ணமுடியும்மா? இதே அங்க வைச்சி டிஸ்கஸ் பண்ணிக்கலாம்..."

"ஹிம் ஓகே'டா அரெஞ்ச் பண்ணிறேன்"ன்னு குழப்பங்களும் ஆச்சரியங்களும் கலந்த உணர்ச்சியுடன் தன்னிடம் வந்து சேர்ந்தான் வினோத்.

வினோத்'ம் கார்த்தியும் ஓரே பள்ளியிலிருந்து இன்ஜினியிரிங் காலேஜ் வரை ஒன்றாக படித்து சென்னை தனியார் மென்பொருள் நிறுவனமொன்றில் கேம்பஸ் இண்டர்வீயூ மூலம் வேலை பெற்றனர். அதே கம்பெனியிலே நாலு வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து இருவரும் அவர்களின் ப்ராஜெக்ட் லீடர் என பதவி உயர்வு பெற்றுள்ளனர். கார்த்திக் வினோத்'ஐ விட ஒரு படி மேலே இருந்தாதாலும் அவர்களின் க்ளையண்ட் ப்ராஜெக்ட்'லே ஆரம்பத்திலே இருந்தாலும் இதில் மெயின் லீட்'ஆக இருந்தான்.

"Friends, we got bad feedback from client side. i don't know why that's caused, Please ensure our job is need to be done before dead line."ன்னு பேசிட்டு கன்பரெண்ஸ் ஹால்'லிருந்து வெளியேறி விட்டான் கார்த்திக்.

மீட்டிங் முடிந்ததும் கார்த்திக் மிகவும் சோர்ந்து உட்கார்ந்து இருந்ததே கண்டதும் வினோத்'க்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது, சின்னவயசில் இருந்து அவனுடன் பழகிவந்தவன் முறையில் மிகவும் அக்கறையுடன் அவனை பற்றிய நினைவலைகளில் மூழ்கினான். ஆறாம் வகுப்பிலிருந்து காலேஜ் இறுதியாண்டு வரை ஒன்றாக ஹாஸ்டலில் ஒன்றாக தங்கியவன் என்ற முறையில் அவனை பற்றி அனைத்தும் தெரிந்து வைந்திருந்தான்.கார்த்திக் சிறுவயதிலே தன்னுடைய தாய் இழந்திருந்ததினால் அவரது அப்பா சென்னையில் ஹாஸ்டல் இணைந்த பள்ளியொன்றில் சேர்ந்து விட்டுருந்தார். கார்த்திக்கு ஐந்து வயது வித்தியாசமுள்ள ஒரே ஒரு அக்காவிற்கும் இவர்கள் பிளஸ்டூ படிக்கும் போது கல்யாணம் ஆகிவிட்டது. யாரிடம் அநாவசியமான பேச்சோ, எதாவது கேளிக்கை பொழுதுப்போக்கிலும் சற்றும் ஆர்வமாய் இல்லாமால் படிப்பில் கவனமாகவே இருந்து பள்ளிக்கூடத்திலேயும்,கல்லூரியிலும் முதல் மாணவனாக தேறியிருந்தான். வேலையிலும் சேர்ந்ததிலே இருந்து கவனமாகவும் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வேலை செய்த காரணத்தினாலும்,ப்ராஜெக்ட் விஷயமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்களில் வெளிநாட்டில் வேலை செய்தானலும் மிகவும் விரைவாக அவனது டீம்'க்கு லீட்'ஆக ஆக்கப்பட்டான். கார்த்திக் தன்னுடைய வாழ்க்கையில் தோல்வியை சந்திறாத காரணத்தினாலே இந்த ஒரு விஷயத்துக்கு கூட மனதொடிந்து இருக்கிறான் என வினோத் முடிவுக்கு வந்தான்.

"வினோ! ஏன் என்னாச்சு? ஏன் கார்த்தி ரொம்ப அப்செட்'ஆ இருக்காங்க? ரொம்ப பிரச்சினையா ஆச்சா?'ன்னு தாமரை குரல் கேட்டு நிமிர்த்தான் வினோத்.

"ஏன் நீ இந்த உலகத்திலே தான் இருந்தே? காலையிலிருந்தே இதேபத்தி தானே பேசிட்டு இருக்கோம், அப்புறமா என்னா வந்து பிரச்சினையா? அப்செட்டா'ன்னு குசலம் விசாரிக்கிறே?"

"ஏய்? என்ன நக்கலா? என்ன நடத்துச்சுன்னு கேட்டேன்? கார்த்தி ஏன் அப்செட்'ன்னு கேட்டேன்? அதுக்கு ஏங்க நீங்க சலிச்சிக்கீறிங்க?"

"அம்மா தாயே! ஒனக்கு அவனை பத்தி ஏதாவது ஒன்னு தெரிஞ்சுக்கனும்? அதுக்கு என்னாவெல்லம் சொல்லி கேட்கிறே? ஒன்னோட ஆளை நேத்து நைட் மீட்டிங்'லே வெள்ளைக்காரன் தொவைச்சி காயப்போட்டுட்டான், அதுவுமில்லாமே நம்ம டீம் ப்ராஜெக்ட் பத்தி டிஸ்சாடிஸ்பிகேசன் வேற சொல்லிருக்கான், அதே கேட்டதிலே இருந்துதான் பய பயங்கர அப்செட், காலை டிபன் சாப்பிட்டானா'ன்னு கூட தெரியலை? என்னா கேட்டாலும் கொஞ்சம் தனியா இருக்கவிடுன்னு அங்கே உட்கார்ந்து இருக்கான்..."

"ஹிம் நீங்க போயி அவரே சாப்பிட கூட்டிட்டு போங்களேன் பிளிஸ்!"

"ஆமாம் நான் சொன்னதும் கேட்கப்போறானா? அவன் அப்பிடிதான் சின்னவயசிலே இருந்தே எந்த தோல்வியோ இல்ல அந்தமாதிரியான சூழ்நிலையிலோ வாழ்ந்து பழகதாவன்! அதுதான் ஒருத்தர் ஒன்னு சொன்னதும் பயலுக்கு பயங்கரமா பொத்துக்கிட்டு வந்து மூஞ்சிய தூக்கி வைச்சிட்டு இருக்கான். நாமே சொல்லி கேட்கமாட்டான், அவனோட அக்கா விஜிக்கா'வுக்கு போன் பண்ணி சொன்னதான் சரியா இருக்கும்"

"ஹிம் பண்ணிசொல்லுங்க... யாராவது கொஞ்சம் ஆறுதலா பேசினாதான் அவருக்கும் நல்லாயிருக்கும்..."

"அநியாத்துக்கு அவன் மேலே அக்கறை எடுத்துக்கிறியே'ம்மா! ஆனா அவன் ஒன்னை கொஞ்சம்கூட மதிக்கமாட்டேன்கிறான்! நீ அவனை லவ் பண்ணுறேன்னு கூட சொல்லிட்டேன்! அதுக்கும் அவன் மசியிறே மாதிரி தெரியலையே! இவனுக்கு எப்போ கல்யாணம் ஏற்பாடு பண்ணலாமின்னு அவங்க அக்கா போன் பண்ணுறோப்பேயும் கேட்பாங்க, இந்த மடையன் எதுக்கும் மாட்டேன்கீறான். என்னந்தான் மனசிலே வைச்சிருக்கான்னு தெரியலை?"

"எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா இல்லயா?? அவங்களே கூப்பிட்டு போயி சாப்பிட வைங்க"

"உத்தரவு மகாராணி!"

"டேய் கார்த்தி! இன்னும் நீ நார்மல் ஆகலையா? அடுத்த மீட்டிங்'குள்ளே நாமே அவங்க கொடுத்த ரீக்வெயர்மெண்ட் முடிச்சிறாலாம்.. இப்போ வந்த சின்ன ஃபீட்-பேக் இப்பிடி ஃபீல் பண்ணிட்டு இருக்கீயே?"

"இல்ல வினோத்! அந்த க்ளைய்ண்ட் எப்பவும் நம்மக்கிட்டே நேரா பேசமாட்டான், அங்க இருக்கிற கோ-ஆர்டினேடர்'கிட்டே ஏதாவது சொல்லுவான். நாமே அவன்கிட்டே இருந்து இன்புட் வாங்கி வேலை செஞ்சுக்கிட்டு இருந்தோம். ஆனா இது எனக்கு என்னோமோ நம்ம ப்ராஜெக்ட்'ஐ கேன்சல் ஆகிறமாதிரி இருக்கு? இது எங்க நடந்த தப்புன்னு தெரியலை. அந்த கோ-ஆர்டினடர் கொல்டி எதாவது சொதப்பிட்டனா'னு தெரியலை? நாமே அவன்கிட்டே எதுவும் தகறாறுகூட பண்ணலேயே? நம்ம சீனியர் மேனஜர் கான்பரெண்ஸ்'லே இருக்கிறப்போ வந்த கம்பைளண்ட்'ஐ நினைச்சி ரொம்ப ஃபீல்'ஆ இருக்கு?"

"கார்த்தி.. இதுதான் உன்க்கிட்டே இருக்கிற பிரச்சினை, ஒரு சின்னவிஷயமானலும் சரி, பெரிய விஷயமானலும் சரி, ரொம்பவே போட்டு மனசை குழப்பிக்கிறே? கொஞ்சம் ஃபீரியா வீட்டு அப்புறம் பார்ப்போமின்னு எதையும் செய்யமாட்டேங்கிறே? இப்போ ஒன்னும் இந்த ப்ராஜெக்ட் விட்டுட்டு நீ போ! வேற ரீசோர்ஸ் வைச்சி நாங்க பார்த்துக்கிறோமின்னு சொல்லலையே?"

"ஓ அப்பிடி வேற சொல்லிருக்கனுமின்னு சொல்லுறீயா?"

"அடேய் எல்லாத்தையும் ரொம்ப சீரியஸா எடுத்துக்காதே'டா! இப்போ இது இல்லாமே போச்சுன்னா நம்மாளே உசுரு வாழமுடியாதுன்னு நினைக்கிறீயா? இல்லல்லே? என்னை பொறுத்தவரைக்கும் இது நம்மாளோட மிஸ்-அண்டர்ஸடாண்டிங்'லே வந்தமாதிரி தான் தெரியுது! போன மீட்டிங்'லே அந்த கொல்டியோட பிகேவியர் சரியில்லை! அவந்தான் ஏதோ சொல்லிருக்கான்!"

"what ever it maybe! நம்மக்கிட்டேயும் தப்பு இருக்குல்ல! டெட்-லைன் முன்னாடி ஏதாவது நாமே டெலிவரி பண்ணிருக்கோமா சொல்லு? இவ்ளோ பிரச்சினை வைச்சிக்கிட்டு அவனை நாமே எதுக்கு தப்பு சொல்லனும்?"

"சரி'டா.. அது எல்லார் மேலேயும் இருக்கிற தப்புதானே? நீ ஏன் அதுக்காக உனக்கு மட்டும் தண்டனை கொடுக்கிறே? நீ மட்டும் தண்டனை அனுவிக்கிறது இங்கயிருக்கிற முக்கியமான ஆளுக்கு பிடிக்கலை'லே?"

"என்ன??? யாரு உன்கிட்டே அந்த நெட்டை கொக்கு தாமரை வந்து கவலை பட்டாளா என்னா??"

"ஹிம் ஆமாம் இப்போ என்னாடா? அவந்தான் உன்னை பார்த்து கவலைப்படுவா? வேற யாரு இருக்கா இங்க பக்கத்திலே?"

"ஏன் நீ என்னை பத்தி ஃபீல் பண்ணமாட்டியா?"

"அடேய் நானாந்தானே வந்து உன்கிட்டே பேசிட்டு இருக்கேன். ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொருவிதமான அக்கறை செலுத்துவாங்க... எல்லாரடேயும் அன்பையும் வாங்கினுமிடா! உனக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு! நீ என்னந்தான் மனசிலே நினைச்சிட்டு இருக்கே'னு யாருக்கும் புரியலை! விஜிக்கா போன் பண்ணுறப்போ எல்லா டைமிலும் அவனை பார்த்துக்கோ! எப்போ கல்யாணமின்னு அவன்கிட்டே பேச்சு எடுக்கலாமின்னு உன்னை வேற என்னை நோட்டம் பார்க்க சொல்லிருக்காங்க"

"ஓ! அக்கா இந்த வேலையெல்லாம் உன்னை பார்க்க சொல்லிருக்கா? எனக்கே அந்த ஐடியா வந்தா சொல்லுறேன்னு சொல்லிருக்கேன்'லே! அப்புறமென்னா.. சும்மா சும்மா எப்பவும் அதை பத்தியே பேச்சு"

"சரி வெளக்கெண்ணே... இப்போ நீ வர்றீயா! சாப்பிட போகலாம்"

வினோத் பேச்சை மீறாத கார்த்திக் அவனுடன் புட்கோர்ட்'க்கு நடக்கலான். வினோத்'ம் அவன் மனதிற்குள் கார்த்திக் நாமே சொன்னதை கேட்டுக்கிறான், இவனை சீக்கிரம் கல்யாணத்துக்கு சம்மதம் பண்ணவைக்கனுமின்னு நினைத்து கொண்டான்.

"கார்த்திக் உனக்கு வேணுமிக்கிறத நீ ஆர்டர் பண்ணிக்கோ! நான் உன்னை விட்டு சாப்பிட்டுட்டேன், எனக்கு ஒரே ஒரு லைட் டீ மட்டும் ஆர்டர் பண்ணு. போன் பண்ணிட்டு வந்திறேன்"

"ஹலோ மகாராணி, தாமரை செல்வி, உன்னோட ஆளு சாப்பிட ஆரம்பிச்சாச்சு! இப்பவே மணி 4'க்கு மேலே ஆச்சு, நீயும் தயவு செய்து சாப்பிடு மகாராணி"

"வினோத்... யாருக்கிட்டே பேசிட்டு வர்றே? டீ வந்துருச்சு! எடுத்துக்கோ"

"நான் யாருக்கிட்டேயோ பேசினா உனக்கு என்னாடா? பேசாமே சாப்பிடு!"

இதுக்கு மேலே என்ன கேள்விகேட்டாலும் பதில் சொல்லமாட்டான்'ன்னு கார்த்திக்'க்கு நல்லாவே தெரியும். சாப்பிட்டு முடித்து ஆபிஸிக்குள் அவனது அக்கா மொபலில் அழைந்ததும் விரைந்து தன்னுடைய இடத்தில் அமர்க்கிறான்.

"ஹலோ அக்கா சொல்லு! நீ எப்பிடிருக்கே? மாமா எப்பிடிருக்காரு? பிள்ளைகளெல்லாம் நல்லா இருக்காங்க இல்ல?"

"எல்லாரும் நல்லா இருக்கோம்! நீ எப்பிடி இருக்கேன்னு சொல்லு? ஆபிஸிலே ஏதோ பிரச்சினை, நீ சாப்பிடமே கூட இருக்கேன்னு வினோ சொன்னான்? உண்மையா அது?"

"மடையன் என்னாத்தயாவது சொல்லுவான்! ஹிம் கொஞ்சம் பிரச்சினைதான், அதுதான் லேட்டா சாப்பிட போனேன், இப்போதான் சாப்பிட்டே வந்தேன், நீ சரியா கால் பண்ணுறே?"

"எதுக்குடா இவ்வளோ லேட்'ஆ சாப்பிடுறே?அதுக்குதான் காலகாலாத்திலே கல்யாணம் பண்ணிக்கோடா'ன்னு சொன்னா கேட்கவே மாட்டெங்கிறே? என்னந்தாண்டா உன்னோட மனசிலே நினைச்சிட்டு இருக்கே? நாங்க எது சொன்னாலும் நீ கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணி வைச்சிருக்கியா?"

"அக்கா! இப்போ எதுக்கு இவ்வளோ கோவப்படுறே? நாந்தான் எனக்கு அந்த ஃபீலிங் வந்ததும் சொல்லுறேன்னு சொல்லிருக்கேன்'லே? பின்ன என்னா?"

"ஹிம் இப்பிடிதான் கடைசி ரெண்டு வருசமா சொல்லிட்டு இருக்கே? நானும் மலைக்கோட்டை சாரதாஸ் போறப்போலாம் இந்த பட்டுச்சேலைய தம்பி கல்யாணத்துக்கு எடுத்துக்கலாமின்னு நினைச்சிட்டு வர்றேன், இப்பிடியே இந்த ரெண்டுவருஷமா எல்லா டிசைன்'ம் போயிருச்சு.."

"உன்னோட கஷ்டம் உனக்கு? வேற என்னத்த சொல்லுறது?"

"ஆமாம் எந்தம்பி'க்கு கல்யாணம் பண்ணி வைக்கவேணாமா? அப்பா கூட உன்னோட கல்யாணத்தை பத்திதான் எப்பவும் நினைச்சிட்டு இருக்காரு. அப்புறமிடா வர்றபோற பொண்ணுக்கு எடுக்கப்போற பட்டுச்சேலை பார்டர்'டோட எனக்கு கொஞ்சம் பெருசா எடுக்கனுமின்னு இப்பவே சொல்லிக்கிறேன்'ப்பா!"

"எடுக்கலாம்! எடுக்கலாம்.... காஞ்சிப்புரத்துக்கே போயி நெய்ய குடுத்தே வாங்கலாம்.. இப்போ நான் வேலை பார்க்கபோறேன். போனை வைச்சிரு!"

"டேய் கார்த்தி! விஜிக்க்கா போன் பண்ணாங்களா?"

"வாடா வா! நீ தான் போன் பண்ணி எல்லாத்தையும் சொன்னியா?"

"ஆமாம், நாங்கெல்லாம் சொல்லி நீ கேட்டுற போறியா என்னா? அதுதான் போன் பண்ணி சொன்னேன்!"

"நல்லாந்தான் வேலை பார்க்கிறே? இப்போ நான்மட்டும் இன்னும் சாப்பிடல'ன்னு சொல்லிருந்தேன்னா அக்கா இந்நேரம் அழுதுருக்கும்! நான் இப்போதான் சாப்பிட்டு உள்ளே வர்றேன்னு சொன்னதும் வழக்கம்போலே சாரதாஸ், பட்டுச்சேலைன்னு கல்யாணப் பேச்சை எடுத்துட்டு போனை வைச்சிருன்னு வைச்சிருச்சு!"

"கார்த்தி இந்த வாரம் சனிக்கிழமை எதுவும் பிளான் வைச்சிருக்கியா என்ன? ஃபீரியா இருந்தா சொல்லு! உன்னோட அபார்மெண்ட்'க்கு நான் வர்றேன்"

"வீக்கெண்ட் ஊருக்கு போலாமின்னு இருந்தேன், சரி நீ வா, நான் சாயங்காலத்துக்கு மேலே ஊருக்கு போயிக்கிறேன்."

அந்த வார சனிக்கிழமையில் கார்த்திக் குடியிருக்கும் அபார்ட்மெண்ட்'க்கு சென்றடைந்தான் வினோத்.

"கார்த்தி வந்த விஷயத்தை நேரடியாகவே கேட்டுறேன்! நீ கல்யாணம் பண்ணிக்கிறதிலே என்ன பிரச்சினை?"

"வினோத் எவ்வளவு தடவை'டா நான் ஒரே மாதிரி பதிலை திரும்ப திரும்ப சொல்லிட்டே இருக்கிறது??"

"ஏன் அமெரிக்கா போனப்போ எதாவது வெள்ளக்காரி'கிட்டே மனசை கொடுத்துட்டு வந்துட்டியா? அதுதான் பத்து பக்கத்திலே யாருக்கோ மெயில் அனுப்பிட்டு இருக்கீயா டெய்லி?"

"ஹிம் மண்ணாங்கட்டி! அதெல்லாம் அங்க பழகின ஃபிரண்ட்ஸ்'க்கு அனுப்புறதுடா? இதெல்லாம் சந்தேகப்பட்டு கேட்பீயா நீ?"

"பின்ன என்னாடா? தேய்ச்சு போன ரிக்கார்ட் மாதிரி ஒரே வார்த்தையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தா? கேட்க்கிற எங்களுக்கு வெறுப்பா ஆகாதா? உனக்கு உண்மையிலே தாமரையே பிடிக்கலையா? ஸ்டெரைக்ட் ஃபார்வேட்'ஆ சொல்லு?"

"இதென்னா தூது வந்து கேட்கிறமாதிரி இருக்கு?"

"ஆமாம் அப்பிடியே வைச்சிக்கோ?"

"சரி அப்போ நானும் அப்பிடியே பதில் சொல்லிக்கிறேன்.... இப்போதைக்கு எதுவும் என்னாலே பதில் சொல்லமுடியாது!"

"அதான் ஏன்னு சொல்லு?"

"என்னா ஏன் ஏன்னு கேட்டா நான் எப்பிடி வளர்த்தேன்னு உனக்கு நல்லாவே தெரியும்? என்னோட பத்துவயசிலே அம்மா இறந்துட்டாங்க, எங்க அக்கா'வுக்கு அப்போ பதினஞ்சு வயசு, அவளுக்கும் ஒன்னும் தெரியாது, ரெண்டு பேரையும் ஹாஸ்ட்லிலே சேர்த்து எங்கப்பா படிக்க வைச்சாரு! நீயும் நானும் ஓரே ஹாஸ்டலிலே தானே தங்கி படிச்சோம், எனக்குதான் அம்மா இல்ல, உனக்கு ரெண்டு பேரு இருந்தும் ஏன் ஹாஸ்ட்லிலே சேர்த்துவிட்டு மாசமாசம் வந்து உன்னை பார்த்துட்டு போறங்கன்னு நினைப்பேன், அப்போல்லாம் உங்கம்மா என்னை பார்த்து சிரிப்பாங்க பாரு, அதை எப்பவும் நினைச்சிட்டு இருப்பேன், லீவுலே ஊருக்கு போறப்போ அக்கா கூட இருக்கிறப்போ அவகூட இருக்கிறப்போயும் எங்க அம்மா பக்கத்திலே இருக்கிறமாதிரி நினைச்சிக்குவேன்."

"சரி கார்த்தி, நீ அம்மா இழந்ததினாலே அந்த வருத்தம் இருக்குன்னு சொல்லுறே? சரி அதுக்கும் கல்யாணம் வேணாமின்னு சொல்லுறதுக்கும் என்னாடா காரணம் இருக்கு?"

"அதுதான் சொல்லுறேன், நான் சின்னவயசிலே இழந்த அந்த தாய்மை உணர்வை என்னோட மனைவி வந்து தரனுமின்னு எதிர்பார்க்கிறேன்! அவ்வளவுதான்"

"கார்த்தி இங்கதான் நீ தப்பு பண்ணுறே? தாய்மை தர்ற பொண்ணு கிடைக்குமின்னு காத்திருக்கிறேன்னு சொல்லுறது தப்பான எண்ணமிடா! ஆணும் பொண்ணும் சமமின்னு சொல்லிக்கிற பொண்ணுகளுக்கிட்டே அவங்க செலுத்துற பாசத்திலே நாமே சமம்'ஐ இல்லாடா? நீ அன்னிக்கு சாப்பிடலைன்னதும் ரொம்பவே வருத்தப்பட்ட தாமரையும் சரி, நீ சொன்னமாதிரி இன்னும் சாப்பிடமே மட்டும் இருந்தேன்னு சொல்லிட்டா விஜிக்கா அழுதுருக்குமின்னு சொன்னியா அதெல்லாம் பாசமா இல்ல உன்மேலே வைச்சிருக்கிற அக்கறையினாலோ வந்தது இல்லாடா? அவங்ககிட்டே இயற்கையா இருக்கிற அந்த தாய்மையான பண்பினாலே தாண்டா"

"உன்னோட வார்த்தைக்களை ஒத்துக்கிறேன் வினோ! ஆனா தாமரை மேலே எனக்கு அப்பிடியொன்னும் ஈர்ப்பு வரலையே"

"அடபாவி இதுக்கொரு லெக்சர் செண்டி டயலோக்'கோட கொடுக்கனுமா என்ன? தகரடப்பா'க்குள்ளே கூழாங்கல்லை போட்டு உருட்டுனாப்பலே குரலு, பனைமரத்திலே கால்வாசியே வெட்டி எடுத்துட்டு அதுக்கு துணி மாட்டி விட்ட மாதிரி உருவத்தை வைச்சிக்கிட்டே ஒன்னை ஒரு பொண்ணு லவ் பண்ணுது'ன்னா அது பெரிய விஷயமில்லயா?

"அடபாவி இப்பிடி கலாய்க்கீறியே?"

"ஹிம் அதுதான் சொல்லுறேன், அந்த பொண்ணே எவ்வளோ தூரம் இறங்கி வந்து உன்னயே விரும்புறேன்னு சொல்லுறா! நீ ரொம்பதான் பிகு பண்ணிட்டு இருக்கே? பொண்ணே நம்மக்கிட்டே சொல்லிட்டா நாமே ஆம்பிள்ளதனத்தை காட்டுனுமின்னு மாட்டேன்னு ஒரு வேளை சொல்லுறீயோ?"

"சே சே அதெல்லாம் இல்ல! இப்போதைக்கு என்ன சொல்லுனுமின்னு தோணலையே எனக்கு"

"அதுதாண்டா நீ சொன்னமாதிரி பாசத்தோட அந்த பொண்ணு அன்னிக்கு டைம்'க்கு வாங்க சாப்பிட போலமின்னு கூப்பிட்டா அவளை நீ போயி சாப்பிடுன்னு சொல்லிட்டு வீம்புக்கென்னே ஒரு மணி நேரம் கழிச்சி போவியே? அவ என்னிக்காவது சமைச்சி கொண்டு வந்து சாப்பிடுங்கன்னு சொன்னா இல்ல இப்போ பசியில்லை திருப்பி விடுவே! முதலிலே இதெல்லாம் பார்க்கிறப்போ உன்னை கண்டா அவளுக்கு கோவந்தான் வந்துச்சாம், ஆனா இப்போல்லாம் ஒரு குழந்தையாட்டம் தான் நீ அடம்பிடிக்கிறேன்னு சமாதானமா போறாளாம்"

"என்னை குழந்தைன்னு யாரு சொன்னது?"

"எல்லாமே அந்த நெட்டை கொக்கு தான்"

"ஹிம் அவளுக்கு அவளோ சேட்டையா? நான் வேணாமின்னு சொன்னா அது குழந்தை மாதிரி அடம்பிடிக்கிறதா என்ன?"

"பின்னே... அன்னிக்கு ஆபிஸிலே சின்ன பிரச்சினைக்கு நீ டென்சனா ஆகி உட்கார்ந்து இருந்தோப்பே நீ நார்மலா ஆகிருனுமின்னு அவ தவிச்ச தவிப்பு இருக்கே! தட்டிலே வைச்ச சோத்தை எல்லாத்தயும் நம்ம குழந்தை சாப்பிடறனுமின்னு தவிக்கிற அம்மா'வோட எக்ஸ்பிரஷ்ன்ஸ்'டா! அதெல்லாம் எங்க உனக்கு தெரியப்போகுது?"

"டேய் வினோ! எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிரு போதும்! இதென்னும் நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறமாதிரி நீயும் அனுபவிடா'ன்னு சொல்லுறமாதிரி இல்லயே?"

"ஆஹா சரியான டைமிலே ஞாபகப்படுத்திட்டே? நான் இப்பவே கிளம்புறேன், அம்மணி வேற மேட்னி ஷோ போனுமின்னு சொன்னா? எதாவது தீயேட்டருலே டிக்கட் கிடைக்குதான்னு பார்த்துட்டு அவளை போயி கூட்டிட்டு போகனும்..."

"ஹிம் இந்த கேள்வி கேட்டதும் தான் உன்னோட ஆளு ஞாபகம் வருதா என்ன? சரி நீ கிளம்பு... நீ இருந்தா இன்னிக்கு டி-நகர் அஞ்சப்பர்'லே போயி லஞ்ச் சாப்பிடலாமின்னு இருந்தேன், உனக்குதான் முக்கியமான வேலை இருக்கே?"

திங்கள்க்கிழமை அலுவலகம் வந்ததிலிருந்து வீனோத்'க்கு வெகு ஆச்சரியம் காத்திருந்தது, எவ்வளவு சொல்லியும் லைட் கலர் சட்டை போடவே மாட்டான், இன்னிக்கு போட்டு வந்துருக்கான், அதுவுமில்லாமே என்னிக்கும் இல்லாமே இன்னக்கு காலையிலே ஹெட்-செட் மாட்டி பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கான்.

"ஹாய் வினோ, தாமரை எங்கடா இருக்கா? ஓ இங்கதான் இருக்கீங்களா மேடம், வாங்க காப்பி சாப்பிட புட்-கோர்ட் போலாமா?"

"என்னாச்சு இவருக்கு, இன்னிக்கு தீடீரென்னு வெளியே எல்லாம் கூப்பிடுறார்ன்னு வெகுஆச்சரியமாய் கிளம்பினாள் தாமரை.

"ஹலோ அக்கா! நாந்தான் கார்த்தி பேசுறேன், நாமே சீக்கிரமே உனக்கு காஞ்சிப்புரம் போயி பட்டுச்சேலை நெய்ய குடுத்துறாலாம்"ன்னு சொல்லி மகிழ்ச்சியாக தாமரையுடன் புட்-கோர்ட்க்கு விரைந்தான் கார்த்திக்.

அவனுடைய சிஸ்ட்ம் ஹெட்-போனில் மெல்லிதாய் காற்றில் கரைந்து கொண்டிருந்ததொரு கானம்.

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதன்முதல் அனுபவமோ?

Friday, September 14, 2007

நாளை முதல் தமிழ் பார்வையாளனுக்கு....??????

கண்டமேனிக்கு கவுத்தடிச்சு யோசிச்சாலும் நமக்கு மட்டுப்படாத விஷயம் ஒன்னே ஒன்னுங்க. எல்லாத்தையும் கூட்டி கழிச்சு வகுத்து பெருக்கி பார்த்தும் புரியமாட்டேங்கீதுங்க. என்னான்னு நீங்க கேட்கிறது புரியுது, ஒருத்தவங்க் வீட்டுக்குள்ளே தகறாறு போலே அதுனாலே அவங்க பண்ண தொழிலே பிரிச்சிக்கிட்டாங்க. சரி அதுக்குக்காக புது கடை ஒன்னு ஆரம்பிக்கிறாங்க. பத்து கடைக்கு இருபது கடையா வைச்சிருக்கிற ஒருத்தர்க்கு போட்டியா ஆரம்பிக்கிறாங்க. அதுவும் அவங்களுக்குள்ளே ஒட்டும் ஒறவுமா இருந்துட்டு இப்போ தனிகடை போடப்போறாங்களாம்.

இந்த கடை எவ்வளோ நாளா இருக்கும், மறுபடியும் அவங்க கூடிட்டா இந்த கடையா மூடிருவாங்களா? இல்ல இந்த கடையே அந்த கடைகளோட சேர்ந்துருவாங்களா?

முன்னாடி எங்கயோ எதோ ஒரு ஜோக் ஒன்னு படிச்சேன். (இல்லாத) எமலோகத்திலே நைட் 7.30 மணிக்கு பச்சை விளக்கு எரியும், 8மணிக்கு மஞ்சள் லைட் எரியுமின்னு இப்போ இந்த கடையிலும் 7.30'க்கு எதோ கொடுக்க போறாங்களாமே, அப்போ இனிமே 7.30 மணிக்கு பச்சையும்,மஞ்சள் விளக்கு சேர்ந்து எரியுமா??

Wednesday, September 12, 2007

GTalk - தனிப்பயன் - custom - கஷ்டம் - பதிவு

நமது அன்பு தம்பி கப்பிநிலவர் ஏற்படுத்திய டிரெண்ட்'ஐ பின்பற்றி ஒரு பதிவு.......

காலைல அலுவலகத்துக்கு வந்து பொட்டியைத் திறந்து ஜிடாக்ல நுழைஞ்சு custom மெசெஜை(தனிப்பயன் வாசகம் என்று சொல்லலாமா??) மாற்றும்போது ஒரு யோசனை..இந்த கஸ்டம் வாசகங்கள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி மற்றவர்களைக் கொஞ்சம் கஷ்டப்படுத்தினா என்ன....அதான் கடந்த சில தினங்களில் ஜிடாக்கில் என் தனிப்பயன் வாசகங்கள் கீழே...

ஹி ஹி இதெயெல்லாம் கவிஜ லிஸ்ட்'லிலே சேர்த்துக்கோங்க மக்கா... :)


மன்றாடலின் கடைநிலையில் துளிர்க்கும் புன்னகையில் சிலிர்க்கிறது,
நனைந்த சிறகுகளின் வழியூடும் தென்றலென நமது பிரியம்....

நஞ்சுதோய்ந்த பாம்புகள் அடர்ந்த வனபயணங்களில் வழிகாட்டியென
உந்தன் அன்பு பெருக்கில் பனிக்கும் கண்களின் ஒளி...

வண்ணகலவைகளின் கூட்டணியாய் அமைந்து விட்ட ஓவியமொன்றின் நினைவு,
உந்தன் கோபதாபத்தில் விளைந்த வதனம்.....

வாதங்களும் பிரதிவாதங்களிலும் நிகழந்துவிட்ட
இறுக்கமென்ற இடைவெளி தளர்த்த
சிறகு விரித்து பறந்து போனது
சினேகமென்னும் பறவை....