Wednesday, May 2, 2007

மதுரை சித்திரை திருவிழா


மதுரை சித்திரை விழா பற்றிய பலவகையான செவி வழி கதைகள் இருந்தாலும், அவ்விழாவின் முக்கியமான அழகர் ஆற்றில் இறங்கும் விஷேசமான சித்ரபெளர்ணமி தினம் பற்றிய என்னுடைய அப்பத்தா சொன்ன கதையோடு சொன்னதை வைத்து விழா பற்றிய சிறு அறிமுகம்.

ஒரு முறை சந்திரன் தான் ஒருவனே நிகரற்ற அழகன் என நினைத்து யானைமுகமும் எலியை வாகனமாக கொண்ட விநாயகரை குருபன் என நிந்திக்க விநாயகர் சந்திரனுக்கு விரைவில் அழகொழிந்து பிறரை நிந்திக்கும் உன்னை போன்றவர்களுக்கு படிப்பினையாக வளர்ந்து தேயும் பாங்காய் இருப்பாய் என சாபம் கொடுக்க, சந்திரன் சிவனிடம் முறையிட சிவனோ உன்னுடைய அகம்பாவத்துக்கு அதுவே சரியான தண்டனை, ஆகவே அதை ஒன்றும் செய்வதற்கில்லை என பதிலுரைக்கிறார். மேலும் சூரியன் சுட்டெரிக்கும் மாதமான சித்திரையிலும் சந்திரனாகிய உன் திறன் உலகுக்கு தெரியவேண்டியும் சித்திரை மாதத்தில் வரும் முழுநிலவு தினமன்று ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தறே உன் பங்கும் இருக்கவேண்டும் என சாபவிமோசனமும் கொடுக்கிறார். அதே சித்திரபெளர்ணமி தினமன்று மீனாட்சி திருவிழா காண வரும் அழகர் ஆற்றை கடக்க முயல்கிறார். அதிலும் ஒரு உட்கதை ஒன்றும் உள்ளது, மண்டூக மகிரிஷி 'க்கு சாபவிமோசனம் அளிக்கவே அழகர் ஆற்றில் இறங்குவதாகவும் அக்கதைகள் நீளும். இக்கதைகள் உண்மையோ, இல்லை உறுதியாக பொய்யாக இருந்தாலும் திருவிழாக்கள் நடப்பதற்குண்டான காரணம் ஒன்றே ஒன்றுதான், அது மக்கள் அனைவரும் எந்த உயர்வும் தாழ்வும் இல்லாமல் ஒரே இடத்தில் குழுமிக்க வேண்டும் என்பதே.

நேற்றிலிருந்து வைகையாற்றிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு விழா நடைப்பெறும் இடம் அருகே நீர் தேக்கப்பட்டது. அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவத்திற்க்காக பிரத்யேகமாக நீர் பாதையும் கட்டப்பட்டு இருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க இன்று காலை சுமார் ஆறு மணியளவில் பச்சை பட்டு உடுத்தி அழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். அதன்பின்னர் நடைப்பெற்ற உற்சவத்திற்கு பிறகு மண்டகப்படி ஆரம்பித்தது. விழாவை நேரடியாக முன்று நான்கு மணி நேரமும் ரசித்ததில் ஒரு சிறிய மனநிறைவு உண்டாகியது.

பிரத்யேக பாதை

அழகர் கடைசி வரைக்கும் என்னோட முணாவது கண்ணுலே சரியாவே வரலை, அதுனாலே சுட்டாச்சு

இனி விழா துளிகள்:-

ரொம்பவே நாட்களுக்கு பிறகு வையாத்திலே தண்ணி வந்தது.

காலை ஒன்பது மணிக்கே சுட்டெரித்த வெயில்

ஆத்திலே மொட்டை எடுக்கனுமா'ன்னு ஒவ்வொரு பத்தடிக்கும் விசாரிக்கும் நபர்கள்.

போலிஸின் கடுமையான கெடுப்பிடிகள்.

வழக்கம் போல் ஊர் முழுவதும் தண்ணிபந்தலும், அதிலே மோரும்,பனங்காரம்,ரஸ்னாவும் கொடுக்கப்பட்டது.

இப்போதைக்கு மதுரையின் சுப்ரபாதமான "டங்கா துங்கா மவுசுக்காரி" எல்லா இடத்திலேயும் பத்தடி உயரத்துக்கு ஸ்பிக்கர் கட்டி அலரவிடப்பட்டுருந்தது.

"ஏண்டி ரோசா அந்த பச்சை சட்டை ஒன்பின்னாடியே ஊரிலே இருந்தே வாறாண்டி, ஏதானாச்சும் என்னானு கேளுடி?" "ஹீக்கும் அந்த கருவாயன் பின்னாடியே வர்றதே தவிர வேற எதுவும் செய்யமாட்டேன்கிறான்!!"

"ஏலேய் மாப்பு, மொட்டையடிக்கிறப்போ மோதிரம் போடுறென்னு சொன்னே? இதுதானா மாப்பிளை அது?என்னாய்யா ஓடுற தண்ணியிலே கறைஞ்சிடும் போலே?"

"மாமா! காது குத்துறவரே காணோம், யாராவது ஆச்சாரி ஆத்துலே இருக்காங்களான்னு பாருங்க?"

"மொக்கயா! நம்ம சந்துவீட்டு பெருசு அரிசி பருப்பு வாங்கிட்டு போச்சே? என்னோமோ அழகர் திருவிழா அன்னிக்கு ஆத்துக்குள்ளே சோறு ஆக்கி போடபோறன்னு? எங்கன்னு தேடு? வந்ததுக்கு சாப்பிட்டாச்சும் போவோம்"

"எத்தேய்! இங்கன எப்போ இடம் வாங்கிப்போட்டே? சாமியெல்லாம் மண்டகப்படிக்கு வந்து போறளவுக்கு சம்பாரிச்சிட்டியா?"

"ஏண்டா ஒனக்கு பார்த்துருக்கிற பொண்ணு வந்துருக்குன்னு சொல்லி காலையிலே இருந்து சுத்துறோம்? எங்கடா அவிய்ங்களே?"

"ஆத்தி ஏழுமணிக்கு ஊமை வெயிலு மண்டையே பொளக்குது, வாங்கடா சீக்கிரமே வீட்டே பாத்தி ஓடுறுவோம்."

ஹி ஹி நமக்கு காது கொஞ்சம் தெளிவாதான் கேக்குமிங்க.... :)