Wednesday, May 30, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 6

சிந்தாநதி'யின் ஞாபகம் -1

வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2

CVR'ன் ஞாபகம் 3

ஜி'யின் ஞாபகம் - 4

கடைசியாக இம்சை அரசியின் ஞாபக மீட்டல்கள்:-

காவேரிக்கோ ஏதேதோ புரியாத உணர்வுகள் எழ ஆச்சர்யத்தில் இருந்து மீள முடியாதவளாய் குழம்பியபடி அமர்ந்திருந்தாள்.

==================-oOo-==================

திருமணத்திற்கு சென்று வந்ததிலிருந்து காவேரிக்கு ஓரே ஆச்சரியமாக இருந்தது. அன்று ஒரே ஒரு நாள் சில நிமிடங்கள் பேசி சென்றவன் எதற்காக இப்பிடி என்னை பற்றி எல்லா விபரங்களையும் சேகரிக்கனும், தான் தெரிஞ்சுக்கிட்டதை ஏன் சந்தர்ப்பம் எதிர்பார்த்து என்கிட்டே வந்து சொல்லனும், சே இந்த ஆம்பிளக எல்லாருமே இப்பிடிதான் இருக்காங்கன்னு மனதில் நினைத்துக் கொண்டாள். அச்சமயம் அவ்வழியே வந்த வசந்த் அவளிடம் வலிய வந்து பேச்சு கொடுக்கிறான்.

"ஹாய் காவேரி? என்ன பலத்த யோசனை?"

"ஹாய் வசந்த்! அதெல்லாம் ஒன்னுமில்லை! சும்மாதான் உட்கார்ந்து இருக்கேன், தட்ஸ் ஆல்"

"ஹிம் ஐ நோ! ஒன்னோட பெர்சனல் டீடெய்ல்ஸ் எதுக்கு நான் கலெக்ட் பண்ணேன்னு டவுட் இருக்கு? சரியா?"

"ஆமாம்! ஒங்களுக்கு...ம் ம் ஒனக்கு எதுக்கு இந்த வேலை?"

"அட நானா கேட்கலை தாயே! ஒன்னோட ஃப்ரண்ட் உமா'கிட்டே பேசிட்டு இருந்தேன், அவ சரியான ஓட்டை வாய் போலே! நான் ஒன்னு கேட்டா எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டா! அதுவுமில்லாமே சொல்லி முடிச்சிட்டு ஐ யம் ஸ்டெரைக்ட் ஃபார்வேர்ட்'ன்னு சொல்லுறா! நல்ல ஃபிரண்டா தான் பிடிச்சி வைச்சிருக்கே!"

"ஓ எல்லாம் அந்த ஓட்டைவாயி வேலைதானா? தென் ஓகே! அன்னிக்கு சடனா எல்லா டீடெல்ஸ் சொன்னதும் எனக்கு கொஞ்சம் டவுட் வந்துச்சு,"

"ஹிம் என்ன டவுட்?"

"ம்ம் சொல்லுறேன்! ஓகே வசந்த், கொஞ்சம் படிக்க வேண்டியது இருக்கு, அப்புறமா மீட் பண்ணலாம்"

இச்சந்திப்புக்கு பின்னர் தினமும் வகுப்பு முடிந்ததும் இருவரும் மாலையில் குறைந்தது 2 மணிநேரம் பேசி கொள்வதை பழக்கமாக்கி கொண்டனர்.கல்லூரி வளாகத்திலும், காவேரி தங்கியிருக்கும் ஹாஸ்டலிலும் காவேரி மற்றும் வசந்த்'யும் இணைந்து பேசுவதுதான் ஹாட் டாபிக்'ஆக இருந்தது, அதை நினைத்து காவேரியோ, வசந்தோ சட்டை செய்யாமல் இருந்தது தான் எல்லாருக்கும் மிக்க ஆச்சரியமாகவும், இன்னமும் பேசுவதற்கு தூண்டுக்கோலாகவும் இருந்தது, வசந்த் சில சமயங்களில் தன்னை பற்றி வரும் வார்த்தைகளுக்கு அமைதியாக சென்றாலும் காவேரி பற்றி வரும் சில கமெண்ட்களுக்கு மிகவும் கோபப்பட்டு சில சமயம் சண்டைக்கும் போகலானான்.

"என்னடி காவேரி? ஒன்கிட்டே நிறையவே மாற்றம் தெரிய ஆரம்பிச்சிருக்கே?" இப்பிடியொரு குதர்க்கமான கேள்வியோடு ஆரம்பித்தாள் உமா,

"நீ என்ன கேட்கவாறேன்னு எனக்கு கொஞ்சம் விளங்குது? அந்த வசந்த் நம்மோட கிளாஸ் கூட கிடையாது? ஏன் அவன்கிட்டே ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கேன்னு கேட்குறதுக்காக மாற்றமின்னு ஓரே வார்த்தையிலே கேட்டு பார்க்கிறே? அப்பிடிதானே?"

"வாவ்...கிரேட்'டீ! நான் என்ன கேட்கனுமின்னு நினைச்சனோ அதை நீயே சொல்லிட்டே? மரியாதையா சொல்லிரு?"

"Nothing Special உமா! Moreover நீ இப்பிடி பேசுறதும்,குதர்க்கமா கேள்வி கேட்கிறதையும் பார்க்கிறப்போ ரொம்ப வித்தியாசமா நான் ஃபீல் பண்ணுறேன்!"

"காவேரி! யூ மிஸ்டேக்கன் மீ! நார்மலா எல்லாருக்கும் வர்ற சந்தேகந்தான் எனக்கும் வந்துச்சு, ஐ யம் ஸ்டெரைக்ட் ஃபார்வேர்ட், ஸோ நான் கேட்டுட்டேன்!"

"ஹிம்! எங்களுக்குள்ளே அதெல்லாம் இல்லை! அப்பிடியே நடந்தாலும் நான் ஃபர்ஸ்ட் ஒனக்குதான் சொல்லுவேன்! ஓகே?"

உமா நேரடியாகவே வசந்த்'க்கும் தனக்கும் இருக்கும் உறவை பற்றி கேட்டதும் சற்று கோபப்பட்டாலும், அவன் மீது இவளுக்கு காதல் ஏதுவும் வந்துவிட்டதா என கூட கொஞ்சமே குழம்பிதான் போனாள். சரி இதை பற்றி அவனிடமே மறுமுறை சந்திக்கும் பொழுது பேசிக்கொள்ளலாம், என முடிவு செய்து கொள்கிறாள்.

"வசந்த்! நான் இப்போ கொஞ்சம் கன்பீயூசன் ஸ்டேஜ்'லே இருக்கேன்'ப்பா! உமா என்கிட்டே வந்து நீ வசந்த் லவ் பண்ணுறீயான்னு கேட்கிறா? வாட் த ராங் வித் அஸ், நாமே நார்மலா தான் இருக்கோம், ஏன் அவங்களுக்கு அப்பிடியொரு டவுட் வருது? டூ யூ ஹாவ் எனி ஐடியா?"

"காவேரி, இந்த லைப் அதாவது காலேஜ் கேம்ப்ஸ்'க்குள்ளே ஒரு பொண்ணும் பையனும் பேசிக்கிட்டா அது லவ் தான்னு கன்பார்ம் பண்ணுவாங்க... Free'யா விடு, எதுக்கும் டென்சன் ஆவாதே? By the way நானே இதை பத்தி பேசலாமின்னு இருந்தேன்! நீயே பேசிட்டே!"

"ச்சே! என்ன உலகம்'டா சாமி! வசந்த் நீயே சொல்லிருக்கே! நீ வீட்டுக்கு ஓரே பையன், அதுனாலே எந்த உறவுமுறை பாசமும் இல்லை, அதுவுமில்லாமே ரொம்பதூரத்திலே இருந்து வந்து இங்க நீ தங்கி படிக்கிற! அதேமாதிரி நிலைமைதான் எனக்கும், எனக்கு அம்மா கிடையாது, தம்பி,தங்கை,அண்ணன்,அக்கா'ன்னு எந்த பந்தபாசமும் கிடையாது, இப்போ இவங்கல்லாம் பேசுறதே பார்க்கிறோப்போ எனக்கு ஒரு ஃபிரண்ட்'ம் இல்லாமே போயிரும் போல இருக்கு!"

"அட ரொம்பதான் ஃபீல்'ஐ போடுறே? ஃFree'யா விடு! Be normal....காதல் வந்ததுக்கு காரணகாரியங்கள் சொல்லாலாம், ஆனா நமக்குள்ளே இருக்கிற நட்பை பத்தி எடுத்து சொல்லுறதுக்கு என்ன காரணம் சொல்லுவே? அவங்க என்ன சொன்னாலும் விட்டு தள்ளிட்டு போயிட்டே இரு, ஒருத்தருக்கு நீ பதில் சொல்ல ஆரம்பிச்சேனா எல்லாருக்கும் பதில் சொல்லிட்டே இருக்கனும். நம்ம மேலே தப்பான அபிப்ரயாத்தை வளர்ந்தவங்க அவங்கதான், நாமே இல்லை, அவங்களா அதை மாத்திக்குவாங்க...."

"ஹிம் நீ சொல்லுறதும் சரியாதான் இருக்கு வசந்த, ஆனா சிலசமயங்களிலே நான் செய்யுறது எனக்கே சரியா தப்பான்னு குழப்பம் வரும். அந்தமாதிரி சமயங்களிலே முடிவெடுக்க முடியாமே திணறப்போ நீ எனக்கு ஆதரவு கொடுக்கிறே? அழனுமின்னு தோணுனாலும் தோள் கொடுக்கிறே? சிரிக்கனுமின்னா கூட சேர்ந்து சிரிக்கிறே? நீ கிரேட்'டா!"

"ஓ இதை வைச்சிதான் இந்த கவிதை எழுதினேயா? , அதை சிலசமயம் விடாமே படிச்சிட்டே இருப்பேன்!"

"அப்பிடியா? எந்த கவிதை?"

"ஆறுதல் சொல்ல நீ இருந்தால்,
அழுவதில் கூட சுகம் உண்டு."

"ஹி ஹி அது நான் எழுதலை! ஒரு இடத்திலே சுட்டது...!"

"அடபாவி, ஒன்னை போய் பெரிய கவிதாயினி'ன்னு நினைச்சேன்னே? அப்போ இதை எழுதினதும் நீயில்லையா?

தந்தை அடித்ததை
தாயிடம் சொல்லி அழும்
பிள்ளை போல..

என் மார்பில் சாய்ந்து
தேம்பிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!

"இது எழுதினது நாந்தான்"

"ஹிம் இந்தமாதிரி நட்பை மையமா வைச்சு எழுதுனா கவிதைகளை வைச்சு தான் ஒன்கிட்டே ஃபிரண்ட்ஷிப் வைச்சிக்கனுமின்னு தோணுச்சு காவேரி"

"ஹிம் ஃபிரண்ட்ஷிப் வைச்சிக்கிறதுக்கு ரீசன் சொல்லுறே? நல்லாயிரு! சரி இப்போ நான் கிளம்புறேன்!"

இப்பொழுது கொஞ்சம் தெளிவான சிந்தனையோடு தன்னுடைய அறைக்கு காவேரி செல்கிறாள். அங்கே தன் அப்பா போன் பண்ணினதாகவும் வந்தால் பேச சொன்னதாகவும் உமா சொல்லியதால் போன்பூத்'க்கு செல்கிறாள் காவேரி.

"ஹலோ அப்பா நல்லாயிருக்கீங்களா?"

"ஹிம் நான் நல்லாயிருக்கேன்.. யாரு கூட காவேரி பேசிட்டு இருந்தே? உமா என்னோமோ சொல்லுறா? எனக்கு எதுவும் பிடிபடலை?"

"ஹய்யோ! அதெல்லாம் ஒன்னுமில்லப்பா! அவ ஏதாவது விளையாட்டுக்கு சொல்லிருப்பா? நீங்க எதுவும் நினைச்சிக்காதீங்க?"

"சரிம்மா! ஒடம்பை நல்லா பார்த்துக்கோ! நல்லா படி! போனை வைச்சிறேன்"

எப்பவும் தன்னிடம் நன்றாக பேசும், இன்று சரியாக பேசாத காரணத்தை தெளிவாக ஊகித்தாள் காவேரி. தான் இல்லாத நேரத்தில் வந்த போனில் தேவையில்லாத விஷயங்களை பேசி அப்பாவிடம் குழப்பத்தை உண்டு பண்ணியிருப்பது உமா வேலைதான்.

"உமா! அப்பாகிட்டே என்ன சொன்ன?"

"நான் ஒன்னுமே சொல்லலையே? ஏன் போன் பண்ணிட்டு வந்ததும் இப்பிடியொரு கேள்வி கேட்கிறே?"

"சந்தேகமா யார்கிட்டே இவ்வளவு நேரமா பேசிட்டு இருந்தேன்னு எங்கப்பா கேட்டாரு? எப்பவும் அந்தமாதிரியெல்லாம் கேள்வி கேட்கமாட்டார் தெரியுமா? நான் எத்தனை தடவை ஒன்கிட்டே சொல்லிட்டேன், இன்னும் நீதான் புரிஞ்சுக்காமே வசந்த்யும் என்னையும் தப்பா நினைச்சிட்டு இருக்கே?"

"காவேரி! திரும்ப திரும்ப ஒரேமாதிரி சொல்லி போரடிக்காதே! ப்ளிஷ் டெல் மீ எஸ் ஆர் நோ?"

"கட்டாயமா அதுக்கு என்னாலே தெளிவா பதில் சொல்லமுடியும்... நோ..நோ..."

"அப்புறம் எதுக்கு ரெண்டு பேரும் காலநேரம் இல்லாமே பேசிட்டே இருக்கீங்க...? எனக்கு தெரிஞ்சு கிளாஸ் ஹவர்ஸ் போக, ஒன்னை இங்க ஹாஸ்டலிலே பார்த்ததே கிடையாது, எல்லாநேரமும் அவனோட தான் அந்த மரத்தடி கிழே பேசிட்டு இருக்கீங்க! அந்த மரத்தடிக்கு கூட இப்போ பசங்க வசந்தகாவேரி மரமின்னு பேர் வைச்சிட்டாங்க தெரியுமா?"

"உமா! உமா!! எத்தனை தடவைதான் நான் சொல்லுறது, நமக்கு தானா அமையுற உறவுமுறைகளான அம்மா தவிர்த்து எதாவது ஆதாயம் இருக்குமின்னு எதிர்ப்பார்ப்பு'லே தான் இருப்போம். அண்ணா'ன்னா நம்மை படிக்க வைப்பான், நாமே படிச்சு முடிஞ்சதும் வேலை வாங்கி கொடுப்பான், நல்ல வாழ்க்கையை அமைஞ்சு தருவான்'ன்னு நம்மளையறியமாலே எதிர்பார்க்கிறோம், அது அவங்ளோட கடமைன்னு நாமே அதை சொல்லி தப்பிச்சுக்கலாம், இந்தமாதிரி நிறையவே நம்ம உறவுமுறைகளுக்கு எடுத்துக்காட்டு கொடுத்துட்டே போகலாம். ஆனா நட்புன்னு வர்றோப்போ தான் அதுக்கு எதையும் எதிர்பார்த்து ஏற்படுத்திக்க முடியாது. வசந்த் கூட வந்த நட்பு சாதாரணமா தான் இருந்துச்சு, ஆனா சில சம்பவங்களிலே அது இன்னமும் ஸ்டராங்'கா ஆகிருச்சு,"

"என்னோமோ காவேரி! சினிமா டயலாக் மாதிரியெல்லாம் பேசுறே? அப்பிடி என்னா ஒங்க ஃபிரண்ட்ஷிப்'லே ஸ்ட்ராங்'க்கின இன்ஸிண்ட் நடந்துச்சு?"

"ஹிம்! என்ன பேசுனாலும் அதை கிண்டல் பண்ணுறதே ஒன்னோட வேலையா போச்சு, ஒரு நாள் நம்ம காலேஜ் கிரவுண்ட்'லே சைக்கிளிலே ரவுண்ட் அடிச்சிட்டு இருந்தேன், அப்போ என்னயறியாமலே என்னோட துப்பட்டா சைக்கிள் சக்கரத்திலே சிக்கி அய்யோ அதே சொல்லவே முடியலை, துப்பட்டாவே சுடி'யோட பின் பண்ணிருந்ததுனாலே அதுவும் சேர்ந்து இழுந்து கிழிச்சு போச்சு,என்னோட நிலைமையே அப்போ நினைச்சு பாரு, எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுருப்பேன் அங்க இருந்த பசங்க முன்னாடி, அங்க விளையாடிட்டு இருந்த வசந்த்'தான் தன்னோட ஷர்ட்'ஐ கொடுத்து ஹெல்ப் பண்ணினான், அப்போ சில ஆம்பிளக'கிட்டே இருக்கிற அந்த விகல்ப புத்தி அவன்கிட்டே சுத்தமா இல்லை. இன்னமும் நிறைய இருக்கு, அவனை நீங்கல்லாம் சொன்னமாதிரியெல்லாம் கற்பனை பண்ணி பார்க்கமுடியலை, எங்கக்கிட்டே ரெண்டு பேர் நடுவே இருக்கிறது சுத்தநட்பு... அவ்வளோதான்,"

"காவேரி! என்னாடி ஒரு எக்ஸ்டரா-ஆர்டெனரி கேர்ள் மாதிரி பிஹெவ் பண்ணுறே"

"நான் ஆர்டெனரி கேர்ள் தான், வாழ்க்கையிலே நடக்கிற விஷயங்களை சாதாரணமா அதோட போக்கிலே வாழ்ந்துட்டு தான் இருக்கேன், ஆனா என்னை சுத்தியிருக்கிற சில பேர் புரிஞ்சுக்காமே தான் நான் ஒரு எக்ஸ்டரா-ஆர்டெனரியா'ன்னு நினைக்கிறாங்க... அதை நான் தப்புன்னும் சொல்லலை... "

==================-oOo-==================

நண்பர்களே! இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும். இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும். இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும். ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்த அத்தியாயத்தை உளி கொண்டு செதுக்க அண்ணன் செதுக்கல் மன்னன் தேவ் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்....... ;-)

பி.கு:- கதை'க்கு தேவைப்பட்ட கவிதைகளை G3 செய்ய அனுமதி வழங்கிய கவிதாயினி காயத்ரி அக்கா வாழ்க! வாழ்க!!

Thursday, May 17, 2007

கிராமத்திலிருந்து ஒரு காதல் கதை

விடிஞ்சாலும் விடிஞ்சுடும் போலே இருக்கேன்னு சொல்ல ஆரம்பிக்கிற நேரமது, ஒழவு மாட்டை கையிலே பிடிச்சிட்டு தோளிலே கலப்பை போட்டுக்கிட்டு சம்சாரிக நடக்கிறப்போ நாமே இனிமே கூட்டிலே இருக்கக்கூடாதுன்னு எல்லா பறவைகளுக்கும் தெரிஞ்சு போச்சு. குட்டிபறவைகள் தன்னோட தாய் பறவை கொண்டு வரப்போற இரைக்கு காத்துட்டு இருக்குற நேரத்துக்கு முன்னாடியே கத்த ஆரம்பிச்சிருச்சக, அதுக கத்துன கத்துலே மரமும் மெல்ல அசைஞ்சு கொடுத்து ஒங்களை நானு தாங்கிட்டு இருக்கேன்னு தன்னோட இருப்பை சொல்லுக்கிட்டுச்சு, மரத்துக்கு கிழே இருக்கிற பொதர்'ல ஒடகார்ந்து கிடந்த காதல் பறவக ரெண்டுகளுக்கும் தெரிஞ்சு போச்சு கொஞ்சநேரத்துக்கு பிரியப்போறமின்னு அதுகளும் பேச முடிக்கப்போகுதுக.

"ஏண்டி! சும்மா நொண நொண'ன்னு பேசிட்டே இருந்தா! இன்னும் 4 மணிநேரத்திலே காலேஜ் ஆரம்பிச்சிரும்! இப்போ போயி பஸ்ஸை பிடிச்சா தான் நான் போயி சேருவேன்! பேசிமுடி! நானு கிளம்பனும்!"

"ஆத்தி! ரொம்பத்தான் கொணட்டுற! ஏம்மாமன் சீமையிலே போய் படிக்கப்போறன்னா வந்து ஒட்கார்ந்து கிடக்கோம்! இங்கயிருந்து போயி இன்னோரு பொட்டக்காட்டுலே இருக்கிற காலேஜ்'க்கு போவப்போற? அதுக்கு எதுக்கு இம்புட்டு அலட்டலு?"ன்னு தன்னுடைய அத்தைமகன் சரவணனிடம் மகாலெட்சுமி என்ற வாயாடி சொல்லிமுடிந்தாள். சரவணன் திண்டுக்கல் அருகே இருக்கிற பொறியல் கல்லூரி மாணவன், இவளும் அவனும் சில வருடங்களாக ஒருவர்கொருவர் காதலிக்கின்றனர், மகாலெட்சுமி் அப்பாவின் உடன்பிறந்த தங்கை மகன்தான் சரவணன், அதுவுமில்லாமால் சரவணனின் சொந்த அக்காவை தான் மகாலெட்சுமி அண்ணனுக்கு கல்யாணம் செய்திருந்தார்கள்.

"அடியே எருமை மடியிலே இருந்து எந்திரி மொதல்ல! நான் கிளம்புறேன், வெள்ளிக்கிழமை ராவுலே பார்க்கலாம்!"

"என்னா மாமா! கிளம்புறீயா? சரி நீ வர்றவரைக்கும் ஈரம் காயாத அளவுக்கு ஒன்னை கொடுத்துட்டு போ?"

"அடியேய்! எந்திருடி! யாரோ வர்றமாதிரி இருக்குடி?"

"ஹிம் யாரு வர்றப்போற இங்க? இந்த நேரத்திலே? எல்லாமே ஒன்னோட ஒடப்பொறப்பு என்னோட நாந்துனா சிறுக்கிதான்"

"ஏலே! எவடி அது என்னோட தம்பியை கக்கத்துலே போட்டு கசக்கி பிழிச்சிட்டு கெடக்குறது?"ன்னு கோபம் கொண்டவளாய் அங்கே வந்தாள் சரவணன் அக்கா சாந்தி.

"ஆமாம்.. ஒன்னோட தம்பி பஞ்சாரத்திலே சிக்காத சேவலு! நாங்க கக்கத்திலே பிடிச்சு எங்க வீட்டுக்கு தூக்கிட்டு போயிறோம்! ஏன் மதினி அது மட்டும் ஒனக்கு கழுகுக்கு மூக்கு வேர்த்தமாதிரி சரியா எங்களை தேடி வந்துறே?"

"நாயத்துக்கிழமை ராப்பொழுது பூராவும் தூக்கமா மணி 4ஆனதும் ஓடி வறேலே! அதுமாதிரிதான் நானும் நீ வந்த ஒருமணி நேரம் கழிச்சி வந்துருவேன்!"

"யக்கா! நல்லவேளை நீ வந்து இந்த ராட்சசி'கிட்டேயிருந்து காப்பத்துனே? நான் கிளம்புறேன், இப்போ போனாந்தான் மருத போயி சேர்த்து அங்கயிருந்து காலேஜ் பஸ்ஸை பிடிச்சி சரியா காலேஜ்'க்கு போகமுடியும்! வெள்ளிக்கிழமை சாயுங்காலம் வந்துறேன்!"

"ஏய் இந்தா! நான் கேட்டதை கொடுக்கமே போறீயே? எல்லாமே ஒன்ன சொல்லனும்! எங்கண்ணனை போட்டு பாடப்படுத்துறேன்னு பத்தாமே என்னையும் உசுரே வாங்குற? போய் இப்போ நல்லா தூங்கு?"

"தம்பி நீ கெளம்புடா! இந்த பொசக்கெட்டவளா நான் இழுந்துட்டுப் போறேன்! ஏண்டி யாருடி உசுர வாங்குறா? ஒங்க நொண்ணன் தான் நோண்டுறதுதான் பெருசா இருக்கு? இதிலே நீ வேற?"

"ஏய் இங்கப்பாரு! ஒன்னோட தொம்பி படிச்சி முடிஞ்சதும் நாங்க அவனுக்கு படிச்சப்பிள்ளய தான் கட்டிக்கொடுப்போமின்னு எங்காது படவே பேசிட்டு திரியுற? எனக்கு அது பிடிக்கலை! அவ்ளோதான் சொல்லிட்டேன்!"

"ஆத்தி! மாரியாத்தா! என்ன பண்ணிறிருவே? எங்கப்பன் என்ன சொல்லுதோ? அதத்தான் எந்தம்பி செய்வான்!"

"ம்ம் என்னபண்ணுவேனா? அந்த கெழவனை சோத்துலே உப்புஒறைப்பு போடாமே சோத்தை போட்டுந்தான் கொல்லணும்! விஷம் வைச்சாவா நீங்கல்லாம் சாகப்போறீங்க?"

"சிறுக்கி! எங்கவீட்டுக்கே வரலை? அதுக்குள்ளே எங்கப்பனுக்கு ஒழுங்கா கஞ்சி ஊத்தமாட்டேன்னு சொல்லுறீயே? எந்தம்பிக்கு நல்லபொண்ணாந்தாண்டி பார்க்கணும்"

"பார்ப்பே! பார்ப்பே! அதுக்கப்புறம் ஒன்னோட மொகத்தை சுடுப்பாறையிலே வைச்சி தேய்க்கமே விடமாட்டேன் நானு"

"அடியேய்! வீடு வந்தாச்சு! போய் செவன்னேன்னு மேவேலையே பாரு!"

"ம்ஹீக்கும் இவளுக மட்டும் அத்தை மகனை தொரத்தி தொரத்தி லவ் பண்ணுவாங்களாம் அவியங்களே கலியாணமும் பண்ணிக்குவாங்களாம்! நாங்க பண்ணா மட்டும் வந்துறாளுக எடஞ்சலை கொடுக்கிறதுக்கு"

மகாலெட்சுமிக்கு அந்த நாளும் அதற்க்கப்புறம் வரும் நாலு தினங்களும் வெறுமையாக கழிந்தது, அவளுக்கு இருக்கும் சந்தோஷமான தினங்களான சனி ஞாயித்துக்கிழமைகள் தான். சரவணனுக்கு காலேஜில் ஸ்பெசல் கிளாஸோ, இல்லை வேறு எதாவது வேலை இருந்தால் ஊருக்கு வரமாட்டான், அத்தினங்களில் இவள் சாப்பிடவே மாட்டாள்.வெள்ளிக்கிழமை ராத்திரி பத்துமணிக்கே சரவணன் வந்தாலும் அவனை பார்த்துட்டு வந்துட்டு தான் அன்னிக்கு ராத்திரியே தூங்குவாள். அந்தா இந்தா'வென்று வெள்ளிக்கிழமையும் வந்துவிட்டது. ஆனால் அவளுக்கு முன்னாடியே சரவணனை பார்க்க கிளம்பிவிட்டாள் அவள் மதினி சாந்தி.

"ஏண்டா தம்பி! இன்னும் படிப்பு முடிய ஏழெட்டு மாசந்தானே இருக்கு? ஒன்னோட தோஸ்த் ஏதோ படிப்புக்காக என்னோமோ பொரஜக்ட் அது ராக்கெட் பண்ணப்போறன்னு ஏதோ சென்னை,பாம்பே போறேன்னு சொன்னான்? நீ எங்கயும் போவலியா?"

"யக்கா அது பேரு பொரஜக்ட் இல்ல! பிரஜெக்ட்! நான் இங்கேனதான் மருதயிலே பண்ணப்போறேன்! இன்னும் ஆறுமாசந்தான் அதுக்கப்புறம் சுத்தமா படிப்பு முடிஞ்சிரும்! வேலையும் கிடைச்சிருமின்னு நினைக்கிறேன்."

"அப்போ நீ எந்த வெளியூருக்கும் போவலியா? இந்த பக்கிசிறுக்கியே பார்க்கதானே இங்கேயே அந்த பொரஜக்டை பண்ணுறேன்னு சொல்லுறே?"

"ஐயோ சும்மா இரு! அப்பன் காதிலே ஏதுவும் விழுந்து தொலைஞ்சிர போவுது! அதுப்பாட்டுக்கு உடுக்கை அடிக்காமலே சாமியாடும்"

"ஏய் என்னாடா? படிக்கிற இடத்துலே எல்லாப்பயலுவெல்லும் வெளியூர் போறாங்கன்னா நீ போகாத காரணம் அதுதானா? ஏதாவது படிக்கிறதுலே கோளாறு வந்துச்சுன்னு வை அப்புறமா ரவை ரவையா உரிச்சு உப்புக்கண்டம் போட்டு ஊருக்கே விருந்து வைச்சுருவேன் ஆமாம்"ன்னு தன்னுடைய வழக்கமான பாணியிலே திட்டி முடித்தார் சரவணன் அப்பா சுப்பையா.

"அதெல்லாம் இல்லப்பே! மருதக்குள்ளே எங்களுக்கு அதெல்லாம் கிடைக்கிது! இனிமே வெளியூரெல்லாம் போவவேண்டியதில்லை! யக்கா கிளம்பு நீயி! நானும்கூட வர்றேன் ஒன்னோட வீட்டுக்கு"

சாந்தி வீட்டை நோக்கி செல்லும் ஒத்தயடி பாதையில இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

"யக்கா நான் ஒன்னை கேட்கணும். உண்மையா பதிலை சொல்லுவியா?"

"கேளுடா? பதில் சொல்லுறேன்!"

"ஒனக்கு மகா'வே பிடிக்கலையா? எதுக்கு அவக்கூட ஓயாமே வைஞ்சிட்டே இருக்கே? அதுவுமில்லாமே எனக்கு வேற பொண்ணுதான் பார்க்க போறேன்னு சொல்லிட்டு வேற இருக்கே?"

"அதெல்லாம் பொய்க்குதான்! நீயும் அவளும் பழகுறதுலேயோ கல்யாணம் பண்ணிக்கிறதிலேயோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லடா? நீங்க ரெண்டு பேரும் வரைமுறையில்லாமே காடுக்கரை, கமலக்காலு நெழலு'ன்னு ஒதுங்கி கெடந்தா அப்புறம் என்ன எங்களுக்கெல்லாம் மருவாதை இருக்கு? அதுதான் அடிக்கடி வந்து கண்டிக்கிறேன். அதுவில்லாமே அவ ஒரு விஷக்காரி அவளையெல்லாம் அப்பிடி வளர்ந்து கொண்டுவந்தாதான் என்னோட தம்பிக்கு வாழ்க்கை நல்லாயிருக்கும்."

"ம்ஹீம் ரெண்டு பேரும் ஒரேமாதிரி தான் பதில் சொல்லுறீங்க. அவ ஒன்னோட சடமுடியை பிடிச்சு தினமும் ஆட்டுனாதான் சாப்பிடுவேன்னு சொல்லுறா?"

"அப்பிடியெல்லாம் சொல்லுறாளா? தம்பி படிக்கிற காலத்திலே சரியா படிச்சி முடிஞ்சுறா? எதையாவது மனசை போட்டு கொழப்பிட்டு கோட்டை விட்டுறாதே? அப்பனுக்கு வெவசாயமும் அழிச்சி போச்சு! ஒன்னை படிக்க வைக்கிறேன்னு கெணறு கெடந்த தோட்டத்தையும் வித்து புடுச்சு, என்னத்தையே இருக்கிறத வைச்சி இப்போ ஜீவனை ஓட்டிக்கிட்டு இருக்கு நம்ம குடும்பம்! நீ தலையெடுத்துதான் இனிமே நாமெல்லாம் தழைக்கனும், ஒன்னை இந்தளவுக்கு படிக்க வைக்க நம்ம அப்பன் ரொம்ப சிரமப்படுதுடா! நீ சீக்கிரமே சம்பாரிச்சு அதை இன்னும் கொஞ்சநாளிலே சும்மா இருக்கவிடுடா"

"யக்கா! அதல்லாம் கவலையே படாதே! நீ சொன்னமாதிரி இன்னும் ஏழெட்டு மாசந்தான் படிப்பு முடிஞ்சிரும் , அதுக்குள்ளே கெம்பஸ் செலக்சனிலே வேலை கிடைச்சிருமின்னு நம்புறேன்! அதுக்கப்புறம் பிரச்சினையே இல்லை! என்ன வேலைன்னு கிடைச்சா வெளியூரிலே தான் வேலை கிடைக்கும் அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு!"

"ஆக ஒனக்கு அவளை பார்க்கமே இருக்கிறது தான் கஷ்டமா இருக்கும்! எங்களை பார்க்காதது எல்லாம் அப்பிடி இருக்காதா?"

"இதுக்கு நான் என்ன பதில் சொல்ல? எல்லார்த்தையும் பார்க்கமே இருக்கிறதும் கஷ்டந்தான். நம்ம அப்பன் முன்னமாதிரியெல்லாம் ஏன் என்னை வையிறதே இல்ல?"

"அதுக்கு என்ன தெரியப்போகுது! நீ படிக்கிறே என்ன மார்க் வாங்குறேன்னு? இனி இங்கன வந்தா இவ பின்னாடியே திரியறேன்னு சொல்லாமே சொல்லி திட்டும்? இப்போதான் நீயி படிச்சி முடிக்கப்போறே? அதுமில்லாமே சீக்கிரமே வேலையும் கெடைச்சிருமின்னு தெரியவந்ததும் இப்போல்லாம் செவனேனு சந்தோஷமா இருக்கு"

"யக்கோவ்! ராட்சாசி வர்றா! ஒன்னோட தலைமுடியை தயாரா வைச்சிக்கோ! பிடிச்சி ஆட்டத்தான் இம்புட்டு வேகமா வர்றா?"

"அடியேய் சிறுக்கி! பத்துமணிக்கு என்னாடி ஒனக்கு இங்கேன வேலை?"

"ஆங் என்னோட பிருத்துவிராசரு குருதயிலே வர்றாரு, அவரை எதிர்கொண்டு மணமாலை வாங்கப்போறேன்! எனக்கு முன்னாடியே ஒன்னோட தொம்பிய பார்க்க போயிட்டியா'க்கும்?"

"யாத்தி மாரியாத்தா! ஒன்க்கிட்டே பேசணுமின்னு தாண்டி அவனே இங்கன வாறான்! அவன்கிட்டே என்னான்னு கேளு! நானு இங்கெனந்தான் நிக்கிறேன்"

"அடிய்யே மகா! நான் சொல்லுறதை கேட்டு அழுவாதே? இன்னும் படிப்பு முடிய கொஞ்சநாளுந்தான் இருக்கு! அதுனாலே நான் இங்க வாரவாரமெல்லாம் வந்து பார்க்கமுடியாது! அதுக்கப்புறமும் வேலைக்கு இண்டர்வியூ அதுஇதுன்னு நிறைய வேலை இருக்கு! அதுதான் ஒன்னை பார்த்துட்டு சொல்லிட்டு போலாமின்னு வந்தேன்!"

"ம்ம் எனக்கு ஏற்கெனவே இது தெரியும்! நீ இங்க இனிமே அடிக்கடி வர்றமாட்டேன்னு என்னோட ஃபிரண்ட் சொல்லிட்டா! அவளும் ஒன்னமாதிரி தானே படிக்கிறா! நாந்தான் வயசிலே ஒழுங்க படிக்காமே இப்போ சாணி பொறுக்கிறேன்"

"படிப்பை முடிஞ்சு வந்ததும் எங்கப்பன்'கிட்டே சொல்லி அனுமதி வாங்கிதரதுக்கு சாந்தியக்கா பொறுப்பு ஏத்துக்கிச்சு! அதுனாலே சந்தோஷமா இருடி!"

"ஓ என்னோட நாந்துனா அதெல்லாம் செய்யுறாங்களா? கணக்குவழக்கு இல்லாமே திட்டந்தான் தெரியுமின்னு தான் நெனைச்சேன்!"

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடைய கல்லூரி இறுதி படிப்புக்குண்டான வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு கல்லூரி கேம்ப்ஸ் செலக்சனிலும் பெரிய கம்பெனி வேலைக்குண்டான அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தன்னோட ஊருக்குள் வருகிறான் சரவணன். உறுதி அளித்தப்படியே சாந்தி அவளோட அப்பாவிடம் தன்னோட தம்பி,மகாலெட்சுமி கல்யாணத்தை பத்தி பேசுகிறாள்.

"யப்பே! தம்பியும் படிச்சி முடிச்சிட்டான்! அவனுக்கு வேலையும் கிடைச்சிருச்சுன்னு வேற சொல்லுறான்! இனிமே அவனுக்கு எந்நாந்துனா கொண்டி மாடு மகா'வே முடிஞ்சி வைச்சிரலாமா?"

"ஏந்தாயி அதுக்கு நானு அனுமதிக்கமாட்டேன்னு சொன்னா நீ என்ன பதில் சொல்லுவே?"

"ம்ம் என்னாப்பே இப்பிடி கேட்கிறே?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல தாயி! நான் இன்னைவரைக்கும் அந்த பயலே ஆளாக்கி பார்க்கனுமின்னு தான் கண்டிப்பா இருந்தேன், காலேஸு போறன்னு சொன்னாங்கிறதுக்காக காடு கரையே வித்துதான் கொடுத்தேன், இவனும் ஒழுங்கதானே போயிட்டு வந்துட்டு இருந்தான், ஒன்னோட கலியாணத்துக்கப்புறம் பயக்கிட்டே மாத்தம் வந்துதான் அவனை சத்தம் போட்டுட்டே இருந்தேன், என்னோட சொல்லுக்காக தானோ என்னோவோ ஏதோ படிச்சி முடிச்சிட்டான், வேலையும் வாங்கிப்பிட்டேன்னு சொல்லுறான். ஒன்னே ஒன்னு ஆத்தா! நான் பெத்த ரெண்டுலே ஒன்னுக்கூட தரிசா போயிறக்கூடாதுன்னு நான் கடவுளா கும்பிடற இந்த மண்ணுக்கிட்டே வேண்டிக்கிட்டே இருப்பேன். விதை நெல்லை வித்துதான் சோறு பொங்கி திங்கனுமின்னு சொன்னா திங்காமே சாவான் வெவசாயி, என்னை மாதிரி மண்ணை நம்பி பொழைச்சனுவனுக்கு அதே வித்து அடுத்த விதை முளைக்க வைக்கனுமின்னு இருந்துச்சு, அது பதறா போயிரக்கூடாதுன்னு தான் பொத்தி வளர்த்தேன், இப்போ விளைஞ்சு அது கதிரா தான் வந்துருக்கு. இன்னவரைக்கும் கொழு கொம்பா நான் நின்னுட்டேன். அப்பனா இருந்து மவனே வளர்த்து காட்டிட்டேன், இனிமே ஏட்டிலே சொன்னமாதிரி அவன் என்னை ஒலகத்துக்கு அடையாளம் கட்டுவானுன்னு நம்புறேன், அவனோட ஆசைக்கோ விருப்பத்துக்கோ என்னிக்குமே குறுக்கிலே நிக்கமாட்டேன்"

இவ்வாறு சுப்பையா சொல்லி முடிந்ததும் அங்கே வந்து சேருகிறாள் மகா.

"ஆத்தி அப்பே! தம்பி மேலே இம்புட்டு பாசமா தான் இருந்தியா! வேதாந்தி மாதிரி ஒலக ஞானமெல்லாம் பேசுறே? கேட்டியாடி கொண்டிமாடு மகா! எங்கப்பு ஒங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிறுச்சு"

"ஹிம்! அது அப்போ பேசிட்டு இருக்கிறோப்பவே வந்துட்டேன்! அதுதானே சொன்னனே? நீங்களாம் விஷக்கார குடும்பம் ஒங்களுக்கெல்லாம் விஷம் வைச்சாலும் கொல்லமுடியாது! இனி இந்த பெருசுக்கு பழையசாதமும்,புளிச்சாறும் போட்டு கொன்னாத்தான் உண்டு."

Monday, May 14, 2007

ஆகீத்தா! ஐவத்து!!!

வாரம் பூராவும் அநியாயத்துக்கு வேலை வேலைன்னு கண்ணுமண்ணு தெரியாமே பார்த்து பார்த்து கண்ணெல்லாம் பூத்து போச்சு, சரி நாமெல்லும் எங்கனயாவது போய் F5 ஆகிட்டு வரலாமின்னு பெங்களூரூ (பன்னேர்கட்டா) தேசிய மிருககாட்சி சாலைக்கு ஒரு குரூப்பாதாய்யா கிளம்பிபோனோம்.

நம்மளை பேச்சுலர் வாழ்க்கையே வெறுப்பேத்துற மாதிரி எல்லா பயலுகளும் ஜோடியோட திரியுறானுக!

ஹிம் என்னத்த சொல்ல அது ஒரு இம்சையா போச்சுங்க..... :(


நம்ம முன்னோரெல்லாம் பார்க்க மிருகக்காட்சி சாலைக்கெல்லாம் போயிருக்கியா'னு நம்ம பயப்புள்ள போன் போட்டு விசாரிச்சான்! அவன் எதுக்கு அப்பிடி கேட்டானுன்னு ஒரு இடத்திலே நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க!(பி.கு:- செவப்பு கலருலே இருக்கிறது நானு விட்ட சவுண்டு)

அமைதியாதானே இருக்கோம், எதுக்கு அந்த சைட்லே இருந்து ஒரு போட்டோ?
இந்த சைட்லே இருந்து போட்டோ!! நாங்கெல்லாம் ஆம்பிளக'டா மண்டயா!
ஓ! ஆம்பி்ளக எலலாம் இவ்வளோ அழகா இருப்பாங்களா??? :)
உங்களுக்கு யாருங்க ஆபிசர் வெள்ளை பெயிண்ட் அடிச்சது??சார்! கொஞ்சம் கேமரா பக்கத்திலே வாங்களேன்....!
இன்னும் கொஞ்சம் பக்கத்திலே வாங்க!!!
ஏன் சார்!! ஒங்களுக்கு எலும்புகறி பிடிக்காதா???

ஒன்னோட மொகரகட்டை'கெல்லாம் நான் போஸ் கொடுக்கமுடியாது...
இவனுகளுக்கு பொழுது போகலன்னா கேமேரா'வா தூக்கிட்டு வந்துறானுக? பெரிய புரொபசனல் கொரியர் மண்டயனுக!

சிபி'கிட்டே நீங்கதான் தொடை கறி கேட்டிங்களா???

பொழப்பு கெட்டவன் எதை போட்டோ எடுக்கிறான் பாரு???அய்யோ!! அய்யோ!! பார்த்துட்டான்! பார்த்துட்டான்!!தம்பி! ஒனக்கு இந்த டீ.ஆர் தெரியுமா?ராசா அவருக்கிட்டே சொல்லி வை!என்னாவா?? நேத்து ரெண்டு பசங்க வந்து என்னை பார்த்து "ஹைய்யா! டீ.ஆர்'ன்னு சவுண்ட் விடுறாய்ங்க!!அதை கேட்டுட்டு எங்க கரடி இனத்துக்கே வந்து அவமானமா நாங்கெல்லாம் நினைக்கிறோம்.

தூரமா நின்னா எங்களுக்கு எப்பிடி தெரியும்? பக்கத்திலே வாம்மா மின்னலு?
சொன்னப்பேச்சை கேட்டு பக்கத்திலே வர்றீயா??? வாம்மா !! வா!!

டாய் ஓடிப்போயிரு! இல்லை, வரிக்குதிரை'கிட்டே கடி வாங்கி செத்தவன்னு பேரு வாங்கிறாதே?
"ஹலோ! எதுக்கு இப்பிடி கோவிச்சுக்கீறீங்க? நீங்க ஆம்பிளயா? பொம்பளயா'ன்னு கேட்டதுக்கு இப்பிடியா கோவம் வரும்?"

வந்துட்டானுக! கம்பி வழியா போட்டோ எடுக்க!
அடேய்! ஏண்டா நீயும் திங்க ஒன்னுமே வாங்கிட்டு வரலையா??
மழை பெய்ஞ்சா ஒங்க புள்ளியெல்லாம் அழிச்சிறாதா??உங்களுக்கு யாருங்க ஆபிசர்! பல் விளக்கி விடுவாங்க?

அடேய்! கூண்டுக்கு வெளியே நிக்கிறோமின்னு திமிரா?இவிய்ங்களுக்கு போஸ் கொடுத்து கொடுத்தே டயர்டாகி போச்சு..
ஹைய்யா! இப்போ போட்ட சோமாஸ் குளிக்கிது...,ஓடி வந்துரு! யாரு குளிச்சாலும் பார்க்கிறாய்ங்க போக்கத்த பசங்க.....
அடேய்! நான் இப்போ சாப்பிட போறேன்... அதை போட்டோ எடுத்து வச்சு அதுக்கு ஒரு கமெண்ட் போட்டு வைக்காதே!
ஏலே! அரைடவுசரு சொன்னா கேளுடா!
விடு! விடு! அவனை பார்த்தாலே தெரியலை! திருந்தாத ஜென்மமின்னு!ஹிம்! இப்போ பாரு ! சைட்'லே பொட்டிய தூக்கிட்டு வந்துட்டான்!
ஒன்னையெல்லாம்!
இந்த மரத்தை பிடுங்கி அடிச்சாதான் திருந்துவே ராஸ்கல்....நோ கமெண்ட்ஸ்... ஹி ஹி

Monday, May 7, 2007

காதல் அரும்பிய தருணங்கள் - II

வழக்கமான இனியதொரு மாலைவேளையில்
கேள்விகளின் பிறப்பிடமான உன்னிடமிருந்து
காதல் கொண்டதேனென்று
இன்னுமொரு தரம் கணை

நினைவுட்டலில் என்மனம் பின்னோக்கி,

அதொரு கார்த்திகை மாதம்
வீதியில் விளக்கேற்றும் பெண்களில்
தனியொரு பிரகாசமாய் உன்னின் விழிச்சுடர்!
நம் பரஸ்பர பார்வை பரிமாற்றங்களின்
மையமாய் ஒளிச்சுடர்.


கருக்கலின் பிறகு கதிரவன் மின்னும்
பாங்காய் என்னின் இருள் மனதிலிருந்து
காதலின் ஒளி ஏற்றிய தினமது!

எதுகைகளிலும் மோனைகளிலும்
சொல்லி தெரிவதில்லை காதல்.

Wednesday, May 2, 2007

மதுரை சித்திரை திருவிழா


மதுரை சித்திரை விழா பற்றிய பலவகையான செவி வழி கதைகள் இருந்தாலும், அவ்விழாவின் முக்கியமான அழகர் ஆற்றில் இறங்கும் விஷேசமான சித்ரபெளர்ணமி தினம் பற்றிய என்னுடைய அப்பத்தா சொன்ன கதையோடு சொன்னதை வைத்து விழா பற்றிய சிறு அறிமுகம்.

ஒரு முறை சந்திரன் தான் ஒருவனே நிகரற்ற அழகன் என நினைத்து யானைமுகமும் எலியை வாகனமாக கொண்ட விநாயகரை குருபன் என நிந்திக்க விநாயகர் சந்திரனுக்கு விரைவில் அழகொழிந்து பிறரை நிந்திக்கும் உன்னை போன்றவர்களுக்கு படிப்பினையாக வளர்ந்து தேயும் பாங்காய் இருப்பாய் என சாபம் கொடுக்க, சந்திரன் சிவனிடம் முறையிட சிவனோ உன்னுடைய அகம்பாவத்துக்கு அதுவே சரியான தண்டனை, ஆகவே அதை ஒன்றும் செய்வதற்கில்லை என பதிலுரைக்கிறார். மேலும் சூரியன் சுட்டெரிக்கும் மாதமான சித்திரையிலும் சந்திரனாகிய உன் திறன் உலகுக்கு தெரியவேண்டியும் சித்திரை மாதத்தில் வரும் முழுநிலவு தினமன்று ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தறே உன் பங்கும் இருக்கவேண்டும் என சாபவிமோசனமும் கொடுக்கிறார். அதே சித்திரபெளர்ணமி தினமன்று மீனாட்சி திருவிழா காண வரும் அழகர் ஆற்றை கடக்க முயல்கிறார். அதிலும் ஒரு உட்கதை ஒன்றும் உள்ளது, மண்டூக மகிரிஷி 'க்கு சாபவிமோசனம் அளிக்கவே அழகர் ஆற்றில் இறங்குவதாகவும் அக்கதைகள் நீளும். இக்கதைகள் உண்மையோ, இல்லை உறுதியாக பொய்யாக இருந்தாலும் திருவிழாக்கள் நடப்பதற்குண்டான காரணம் ஒன்றே ஒன்றுதான், அது மக்கள் அனைவரும் எந்த உயர்வும் தாழ்வும் இல்லாமல் ஒரே இடத்தில் குழுமிக்க வேண்டும் என்பதே.

நேற்றிலிருந்து வைகையாற்றிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு விழா நடைப்பெறும் இடம் அருகே நீர் தேக்கப்பட்டது. அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவத்திற்க்காக பிரத்யேகமாக நீர் பாதையும் கட்டப்பட்டு இருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க இன்று காலை சுமார் ஆறு மணியளவில் பச்சை பட்டு உடுத்தி அழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். அதன்பின்னர் நடைப்பெற்ற உற்சவத்திற்கு பிறகு மண்டகப்படி ஆரம்பித்தது. விழாவை நேரடியாக முன்று நான்கு மணி நேரமும் ரசித்ததில் ஒரு சிறிய மனநிறைவு உண்டாகியது.

பிரத்யேக பாதை

அழகர் கடைசி வரைக்கும் என்னோட முணாவது கண்ணுலே சரியாவே வரலை, அதுனாலே சுட்டாச்சு

இனி விழா துளிகள்:-

ரொம்பவே நாட்களுக்கு பிறகு வையாத்திலே தண்ணி வந்தது.

காலை ஒன்பது மணிக்கே சுட்டெரித்த வெயில்

ஆத்திலே மொட்டை எடுக்கனுமா'ன்னு ஒவ்வொரு பத்தடிக்கும் விசாரிக்கும் நபர்கள்.

போலிஸின் கடுமையான கெடுப்பிடிகள்.

வழக்கம் போல் ஊர் முழுவதும் தண்ணிபந்தலும், அதிலே மோரும்,பனங்காரம்,ரஸ்னாவும் கொடுக்கப்பட்டது.

இப்போதைக்கு மதுரையின் சுப்ரபாதமான "டங்கா துங்கா மவுசுக்காரி" எல்லா இடத்திலேயும் பத்தடி உயரத்துக்கு ஸ்பிக்கர் கட்டி அலரவிடப்பட்டுருந்தது.

"ஏண்டி ரோசா அந்த பச்சை சட்டை ஒன்பின்னாடியே ஊரிலே இருந்தே வாறாண்டி, ஏதானாச்சும் என்னானு கேளுடி?" "ஹீக்கும் அந்த கருவாயன் பின்னாடியே வர்றதே தவிர வேற எதுவும் செய்யமாட்டேன்கிறான்!!"

"ஏலேய் மாப்பு, மொட்டையடிக்கிறப்போ மோதிரம் போடுறென்னு சொன்னே? இதுதானா மாப்பிளை அது?என்னாய்யா ஓடுற தண்ணியிலே கறைஞ்சிடும் போலே?"

"மாமா! காது குத்துறவரே காணோம், யாராவது ஆச்சாரி ஆத்துலே இருக்காங்களான்னு பாருங்க?"

"மொக்கயா! நம்ம சந்துவீட்டு பெருசு அரிசி பருப்பு வாங்கிட்டு போச்சே? என்னோமோ அழகர் திருவிழா அன்னிக்கு ஆத்துக்குள்ளே சோறு ஆக்கி போடபோறன்னு? எங்கன்னு தேடு? வந்ததுக்கு சாப்பிட்டாச்சும் போவோம்"

"எத்தேய்! இங்கன எப்போ இடம் வாங்கிப்போட்டே? சாமியெல்லாம் மண்டகப்படிக்கு வந்து போறளவுக்கு சம்பாரிச்சிட்டியா?"

"ஏண்டா ஒனக்கு பார்த்துருக்கிற பொண்ணு வந்துருக்குன்னு சொல்லி காலையிலே இருந்து சுத்துறோம்? எங்கடா அவிய்ங்களே?"

"ஆத்தி ஏழுமணிக்கு ஊமை வெயிலு மண்டையே பொளக்குது, வாங்கடா சீக்கிரமே வீட்டே பாத்தி ஓடுறுவோம்."

ஹி ஹி நமக்கு காது கொஞ்சம் தெளிவாதான் கேக்குமிங்க.... :)