Tuesday, February 5, 2008

எந்த பறவை எழுதியிருக்கும் இந்த கடிதத்தை?

நான்கு நாட்கள் வெளியூருக்குப் போய்விட்டு வந்தால், வீட்டில் எட்டுக் கடிதங்களாவது வந்திருக்கும். தொட்டிலில் கிடக்கிற பிள்ளையைக்கூட அப்புறம்தான் பார்க்கத் தோன்றும். பிரயாண அலுப்பு மாறாத முகமும், கசங்கினஉடைகளுமாக ஒவ்வொரு கடிதத்தையும் வாசிக்க வாசிக்க, விலாப்புறத்தில் மட்டுமல்ல... உடம்பு முழுவதும் சிறகுகளாக முளைத்திருக்கும்.

இரண்டு வாரத்துக்கு முன்னர் வெளிவந்த ஆனந்தவிகடனில் வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி எழுதிய அகமும்புறத்தின் தொடக்க வரிகள் இவை. இந்த இரண்டு வரிகள் நம்முடைய தகவல் பரிமாற்றத்தின் அழகியலை தொலைத்து போன வெறுமை மனதிற்குள் மெல்லமாய் படர்கின்றது.


Success in sight....

தினசரி வழக்கமாகிவிட்டது
தபால் பெட்டியைத் திறந்து
பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.

இரண்டு நாட்களாகவே
எந்த கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.

இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்.

எந்த பறவை எழுதியிருக்கும்
இந்த கடிதத்தை?

-வண்ணதாசன்

இந்த கவிதை படிச்சதும் என்னை என்னோமோ பண்ணிச்சு... இளமைப்பருவத்தில் என்னுடைய தம்பி எங்கள் சித்தப்பா வீட்டில் வளர்க்கப்பட்டான். அவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் இவனைதான் எட்டாம் வகுப்பு படிப்பு வரை வளர்ந்தார்கள். அதன்பின்னர் நானும் என்னுடய அக்கா எங்கம்மா எல்லாரும் அடம்பிடித்து எங்களுடைய வீட்டிலே கொண்டுவந்தோம். மூன்று வயதிலே இருந்து எங்களை விட்டு போன அவனை பெரும்பாலும் பார்ப்பது தீபாவளிக்கும், முழு ஆண்டு விடுமுறையிலும் தான். தீபாவளி வரும் மாதத்திற்கு முன் மாதம் முதலில் எங்களுடைய ஆரம்பிக்கும் அந்த செயின் லெட்டர்ஸ் பரிமாற்றங்கள். முதலில் அவந்தான் சித்தப்பா எழுதும் கடிதத்தில் கடைசியில் அழகான தன்னோட கையெழுத்திலே ராமூர்த்தீ இந்த தீவாளிக்கு நாமே நூறு வாலா ரெண்டு வாங்கி நீ ஒன்னு நா ஒன்னு வைக்கலாமின்னு எழுதுவான். அதுக்கப்புறம் சித்தப்பா எழுதியதுக்கு அப்பா எழுதும் பதில் லெட்டரிலே நானும் எங்கக்காவும் கொஞ்சமும் எழுதுவோம். எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பேனா உபயோகப்படுத்தக்கூடாது என்பதினால் பென்சிலில்தான் எழுதுவது. அப்பா பதில் எழுதிவிட்டு இந்தாடா நீயும் எழுதிட்டு போஸ்ட் பண்ணிருன்னு கொடுப்பாரு. அதை வாங்கியதும் எனக்கும் எங்க அக்காவுக்கும் முதலில் சண்டை வரும், யாரு முதலிலே எழுதுறதுன்னு! ஒரு வழியா சமதானம் ஆகி யாராவது எழுத ஆரம்பிப்போம். அதிலே நானாவது என்னோட அக்காவது போன வாரம் பெரிய சண்டை வந்து நான் அவளை அடிச்சிட்டேன்னு நானோ இல்ல என்னோட அக்கா அவனை அடிச்சிட்டேன்னு எழுதாமே அந்த லெட்டரை முடிப்பது இல்லை. சிலசமயங்களிலே எங்கப்பா அதை படிச்சிட்டு சிரிச்சிட்டே பசங்களா என்ன என்னா'டா இன்னமும் எழுத பாக்கி இருக்கு'ன்னு கேட்பாரு? அப்போல்லாம் ஒன்னுமே புரியாது. இப்போதான் நிறைய புரியுது...

இதேமாதிரி எங்க அப்பத்தா சித்தப்பா வீட்டிலே இருந்தா எங்களுக்கு லெட்டர் எழுதுனுமின்னா என்னோட தம்பிதான் எழுதி தருவான். அப்பத்தா'வுக்கு எழுதப்படிக்க தெரியாது. அதுனாலே அவங்க சொல்ல சொல்ல அவன் எழுதுவான். சில சமயங்களிலே பஸ்ஸிலே பிராயணம் பண்ணினது அப்புறம் அங்க ஆஸ்பத்திரிக்கு போயி டாக்டரை பார்த்ததுன்னு என்னத்தாயவது அப்பத்தா சொல்லும். இவனும் அதெய்யல்லாம் கேட்டு அப்பிடியே எழுதிட்டு கிழே சின்ன சின்ன கமெண்ட்ஸ் எல்லாம் போடுவான். அதை படிக்கிறப்போ நாங்க விழுந்து விழுந்து சிரிப்போம். அந்த லெட்டருக்கு நானும் எங்க அக்காவும் ரீப்ளை பண்ணுறோப்போ அதை மாதிரிதான் கமெண்ட் எல்லாம் போட்டு எழுதுவோம். அந்த கடிதங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை நைட் வர மகாபாரதம், இராமயாணம் தொடரை பற்றிதான் இருக்கும். அப்பத்தா எங்க வீட்டுலே இருந்தா நானு,அக்கா எல்லாரும் சேர்ந்துதான் பார்ப்போம். அப்போ நீயூஸ்பேப்பரிலே அந்த தொடருகளோட தமிழ் வசனம் வரும். அதை படிச்சிக்கிட்டே அந்த தொடர் பார்க்கிறது அப்பிடியொரு சுவராசியமா இருக்கும், அப்பத்தா ஊருக்கு போயிட்டா இதை படிச்சி சொன்னியா, அவரு அம்பு விடுறோப்போ இந்த வசனத்தை அப்பத்தா'கிட்டே சரியா சொன்னீயான்னு லெட்டரிலே எழுதுவோம். இன்னும் என்னோம்மோ இருக்கு. இப்போ டைப் பண்ணதான் முடியல.

இப்போல்லாம் எழுதறதோ இல்லை அந்த இண்லாண்ட் லெட்டரை பொறுமையா மடிச்சு ஒட்டுறதுக்கெல்லாம் முடியுமான்னு தெரியலை. படிப்புக்கப்புறம் இப்பவும் நாங்க வெளியூருலேதான் இருக்கோம். இன்னமும் கடிதப்போக்குவரத்து நடக்குது. அது என்ன வீட்டுக்கு அனுப்பவேண்டிய பணத்துக்கு உண்டான செக், அதை போஸ்ட் இல்ல கொரியர் அனுப்பிட்டு உடனே மொபலிலே அவனுக்கு கால் பண்ணி லெட்டர் வந்ததும் எனக்கு உடனே போன் பண்ணுன்னு வைச்சிரதுதான்..... :(