Wednesday, April 11, 2007

அழகென்ற சொல்லுக்கு....

ஒரு நாள் அர்த்தராத்திரியிலே சேட் பண்ணிட்டு இருக்கிறப்போ தீடிரென்னு கதிர் வந்து அழகுன்னா நீ என்ன நினைக்கிறே'ன்னு கேட்டார். எனக்கு அப்போ சொல்லுறதுக்கு ஒன்னும் தோணலை.எதோ ஒன்னை சொன்னேன், அவர் நம்ம கொத்ஸ்'கிட்டே போயி விளக்கம் கேட்க அவரும் தன்னோட முதுமையிலே கூட இன்னும் தான் இளமையாக எழுதுறதுதான் அழகுன்னு சொல்லி கதிரை ஏமாத்தினதும் மட்டுமில்லாமே அழகை பத்தி பதிவென்னு இட்டு சங்கிலி தொடரா ஆரம்பிச்சி விட்டார். அது அங்க சுத்தி இங்க சுத்தி நம்ம கவிஞர் அய்யனாரும் எழுதி கடைசியா என்னை இழுந்து விட்டுட்டாரு...

அழகுன்னா என்ன'ன்னு ரொம்பவே யோசிச்சு யோசிச்சு பார்த்துட்டேங்க.. ஆனா கொஞ்சகாணு மேட்டர் கிடைச்சிருக்கு, இதெல்லாம் அழகா'ன்னு முழுசா படிச்சிட்டு கேட்டு அடிக்க வந்துறாதீங்க, ஏன்னா ஒங்களை மாதிரி நல்லவங்களுக்கெல்லாம் அது அழகு இல்லை :)

முருகன்:-


அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா

சுடராக வந்தவேல் முருகா - கொடும்
சூரரைப் போரிலே வென்றவேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழமுன்னை யல்லாது பழமேது முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீயல்லவோ முருகா
சக்தியுமை பாலனே முருகா - மனித
சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

இந்த பாடலை கேட்கிறேன்,கேட்டு கொண்டே இருக்கேன். எனக்கு முழுவதுமாக கடவுள் நம்பிக்கை கிடையாது, அதுவும் என்னையறியமாலே குழப்பத்துடனே சில கடவுள் நம்பிக்கை உண்டு, கடவுள் இருக்கா இல்லையா என தர்க்கரீதிக்கு இடைப்பட்ட நிலையில் இருக்கிற Agnostic கோஷ்டியை சேர்ந்தவந்தான் நானும். ஆனால் முருகனை கடவுள் உருவமாய் உருவகப்படுத்த முடியவில்லை. கல்லூரி தினங்களுக்கு அப்புறம் Agnostic நிலையில் தீவிரமான பின்னும் இன்னமும் முருகனை மட்டும் ஏத்துக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவனை என் தோழனாய், என் சகோதரனாயாய் நினைத்துக்கொண்ட சிறுவயது பழக்கம்தான் அது. ஒரு காலகட்டத்தில் முழுவதுமான ஆத்திகவாதியோ இல்லை நாத்திகவாதியோ ஆனால் கூட எந்தமிழின் செல்வன் முருகன் தான் என்றென்றும் அழகன்.

குறும்பு:-

பெரியாளாக வளர்ந்து விட்டாலும் இன்னமும் என்னை சுற்றுவட்டாரத்தில் அடையாளப்படுத்தபடும் வார்த்தை ரெட்டைசுழி வாலு. அந்தளவுக்கு ரொம்பவே குறும்பு பண்ணிருக்கேன். அஞ்சு அல்லது ஆறு வயசு சமயத்திலே ஏதோவொரு இடத்திலே ஓசி சர்க்கரை பொங்கல் வாங்கப்போயி ரொம்ப நேரம் கழிச்சி வந்தேன். படிக்கமாமே வெட்டியா ஊர் சுத்தப்போயிட்டேன்னு அம்மா என்னை குச்சியாலே அடிக்க போறப்போ நான் குனிய போக குச்சி தலையிலே பட்டு பொல பொலன்னு ரத்தம்... அவங்க அதை பார்த்து அழுது நானும் அழுதுட்டே ஆஸ்பத்திரி போறப்போ "அம்மா அந்த சர்க்கரை பொங்கலை வீட்டுக்கு போனதும் சாப்பிடுறேன்"ன்னு சொன்னதும் அழுதுட்டு இருந்த அம்மா சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

இன்னொரு சம்பவம் இதேமாதிரிதான் அதுவும் அதே வயசுன்னு தான் நினைக்கிறேன். எங்க மாமா கல்யாணம் திருப்பரங்குன்றத்திலே நடந்துச்சு, கல்யாண முதல் நாள் வரவேற்பிலே நான் எங்கேயோ வழித்தெரியாமே தொலைஞ்சு போயிட்டேன். கோவிலுக்கு பக்கத்திலே நின்னுட்டு அழுதுட்டு இருந்தோப்பா ஒருத்தர் போலிஸ் ஸ்டேசன்'லே கொண்டு விட்டார்..அங்கே போனதிலே இருந்து ஒரே அழுகைதான், போலிஸெல்லாம் பயந்து போயி என்னாடா வேணும் ஒனக்குன்னு கேட்க.. நான் இதுதான் சான்ஸ்'ன்னு முட்டை பொரட்டா கேட்டேன், ஏன்னா அதுக்கு மொதநாளுதான் எங்கப்பா வாங்கிதரமாட்டேன்னு சொல்லிட்டாரு, அவங்களும் அதை வாங்கிட்டு வர்ற போனநேரத்திலே எங்க சொந்தபந்தம் எல்லாரும் வந்துட்டாங்க.. எங்கப்பாவும் அம்மாவும் அழுதுட்டே என்னை கூட்டிட்டு போறப்பா அப்போவும் "அப்பா அந்த போலிஸ்ண்ணே எனக்கு முட்டை பொரட்டா வாங்கிட்டு வந்துருப்பாங்க"ன்னு சொன்னதும் எங்க மாமா புதுமாப்பிள்ளை விட்ட சாபம் இன்னமும் ஞாபகத்திலே இருக்கு, "அடேய் ஒனக்கும் இதே திருப்பரங்குன்றத்திலே கல்யாணம் நடக்கும், நீயும் இப்பிடிதான் என்னை மாதிரி அலைய போற?" :)

இன்னமும் எங்க சொந்தகாரங்க என்னை இப்போ பார்த்தா நம்பவே மாட்டாங்க.. நானா இப்பிடி மாறிப்போயிட்டேன்னு....

குழந்தைகள்:-

எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயங்களிலே இதுவும் ஒன்னு. என்னோட அக்காவுக்கு குழந்தை பொறந்தப்போ என்கிட்டேதான் சர்க்கரை தண்ணி ஊத்துன்னு சொன்னாங்க. (தாய்ப்பால் தவிர வேற எதுவும் தரக்கூடாதுன்னு டாக்டர் அட்வைஸ்). அப்போதான் பிறந்து சிலமணி துளிகள் ஆனா அவனை மடியிலே வைச்சு சும்மாகாச்சிக்கு சர்க்கரை தண்ணின்னு சொல்லி ஸ்பூனை காட்டுன்னேன். அடடா என்னவொரு அழகு பூமாதிரி மெல்லியதாய் விரல்களும்,பஞ்சு பொதி மாதிரி மொத்த உடலும் இன்னமும் நினைச்சாலும் ரொம்பவே அழகாக உணர்வேன். இன்னமும் எங்க போனாலும் குழந்தைகளை கண்டா குஷி வந்துரும், அவங்க கூட போயி அவங்ளோட கிள்ளைமொழி கேட்கிறது அப்பிடியொரு அழகாக உணர்வேன்.

தனிமை:-

இதை பத்தி நான் ஏற்கெனவே எழுதி தள்ளிட்டேன். ஆனா என்னை பொருத்தவரைக்கும் அது என்னை ஆட்கொண்டது ரொம்பவே அதிகம், சிறுவயசிலே ரொம்பவே அதிகமாக வாயாடிட்டு இப்போ கொஞ்சமே அமைதியான மனோபவத்தை வளர்ந்துக்கிட்ட பிறகு தனிமை தனிமை தான். சிலவருடங்களுக்கு முன்னாடி குற்றால அருவிகளுக்கு சுற்றுலா போயிட்டு ரெண்டு நாள் பசங்ககூட சுத்திட்டு இருந்தேன், ஆனா தீடிரென்று தனிமையிலே இருக்கனுமின்னு தோணினதும் யாருக்கிட்டேயும் சொல்லமே காட்டுக்குள்ளே நான்மட்டும் தனியா 8மணி நேரம் இருந்துட்டு வந்தேன். எந்தவொரு கோட்பாடு இல்லாத சாலைகளும், உதிர்ந்து கருகிய சருகுகளும், சின்ன சின்ன பூச்சிகளும், ரீங்காரவண்டுகளும் அப்பிடியொரு அழகு. அப்போ கவிதை எழுத கிடைச்ச எண்ணங்கள் நிறைய... அதெல்லாம் கவிதையா வடிச்சி சூடு ஆறிப்போயி என்னோட டைரியிலே தூங்கிட்டு இருக்கு...


மதுரை:-

கழுதைக்கும் எங்கூருக்கும் எனக்கும் வைச்சு நீங்க பழமொழி சொன்னீங்கன்ன சிரிச்சிட்டே ஏத்துக்குவேன். ஏன்னா என்னாந்தான் வெளிநாடு,வெளிமாநிலமின்னு இருந்தாலும் நாமே அட்லிஸ்ட் ஒரு வினாடியாவது நம்மோளோட அந்த சொந்தமண்ணை நினைச்சு பார்க்கமே இருக்கமுடியாது. அந்தமாதிரி மழைநாளிலே வெளிவரும் மண்மணத்திலே நம்மளயறியாமலே சொந்த ஊர் ஞாபகம் வர ஆரம்பிச்சிடும். அதுக்கு காரணம் என்னான்னா சின்னவயசிலே விளையாடுறப்போ மழை வந்துடுச்சேன்னு வீட்டுக்குள்ளே ஓடி போயி சன்னல் வழியா சொட்டா சொட்டா வானம் பூமியிலே தண்ணி ஊத்தி விளையாடுற அந்த விளையாட்டை ரசிக்கிறப்போ வர்ற மண் வாசம் நுகர்ந்தவங்க எங்கே இருந்தாலும் அதே தருணம் திரும்ப நடக்கிறப்போ சொந்தமண்ணை நினைக்க ஆரம்பிச்சிரும்.

அந்தவகையிலே என்னோட ஊர் ரொம்பவே அழகு, மீனாட்சி அம்மன் கோவில் எதிரிலே இருக்கிற பள்ளிக்கூடத்திலே படிச்சிட்டு மதியவேளைகளிலே கோவிலுக்கு போயி விளையாடுற அந்த தருணங்கள் இன்னமும் அழகு.

தமிழ்:-

மதுரையும் தமிழையும் தனித்தனியான அழகுன்னு பிரிச்சு எழுதுறதுக்கு எனக்கே பிடிக்கலை. எனக்கு ரொம்ப பிடித்தமான அழகுன்னா நம்ம மொழியோட அழகுதான். இரட்டை கிளவிகளும், வெண்பாக்களும்,குறளும், காப்பியங்களும் தமிழ்மொழியின் சிறப்புகள். ஒவ்வொரு பகுதியிலும் வேவ்வேறுவிதமா பேசினாலும் அதொட தனித்தன்மையை இழக்காமல் இருக்கிறது அழகு. எந்த மொழிக்கும் அழகே அதோட எந்தவொரு பிறமொழி கலந்தாலும் அம்மொழியோட வளம் கெட்டு விடக்கூடாது. அந்தவகையில் நமது தமிழ் சொல்வளமிக்க மொழி. இன்னமும் அதை நல்லமுறையில் பயன்படுத்தி பிற்சந்ததியினரும் நம்தமிழ் மொழியை நினைத்து பாரதி சொன்னது போல பெருமிதப்பட வேண்டும்.

என்னையும்,உங்களையும் இணைந்த நம் தாய்மொழி தமிழ் அழகு, அதைவிட மொழிக்கு முன்னால் வரும் இரட்டைஎழுத்து சொல்லுக்கு உரியவள் என்றென்றும் அழகு..

இதுப்போல அழகாக??? பதிவு எழுத நான் அழைக்கும் மூவர்:-

மருத இளவரசர் தருமி ஐயா..
.
மருத சிங்கம் குமரன்...
சந்திரமதி அக்கா... (அண்ணா'ன்னு சொன்னா அடிக்க வருவாங்களா??)

சிறப்பு அழைப்பாளராக எங்கள் மருத சிங்கத்திலென்று பங்காளி
(அண்ணே நான் கூப்பிட்டுட்டேன், யாரும் கூப்பிடாமலே பதிவு போட்டாச்சுனு ஃபீல் பண்ணாதீங்க)