Thursday, May 17, 2007

கிராமத்திலிருந்து ஒரு காதல் கதை

விடிஞ்சாலும் விடிஞ்சுடும் போலே இருக்கேன்னு சொல்ல ஆரம்பிக்கிற நேரமது, ஒழவு மாட்டை கையிலே பிடிச்சிட்டு தோளிலே கலப்பை போட்டுக்கிட்டு சம்சாரிக நடக்கிறப்போ நாமே இனிமே கூட்டிலே இருக்கக்கூடாதுன்னு எல்லா பறவைகளுக்கும் தெரிஞ்சு போச்சு. குட்டிபறவைகள் தன்னோட தாய் பறவை கொண்டு வரப்போற இரைக்கு காத்துட்டு இருக்குற நேரத்துக்கு முன்னாடியே கத்த ஆரம்பிச்சிருச்சக, அதுக கத்துன கத்துலே மரமும் மெல்ல அசைஞ்சு கொடுத்து ஒங்களை நானு தாங்கிட்டு இருக்கேன்னு தன்னோட இருப்பை சொல்லுக்கிட்டுச்சு, மரத்துக்கு கிழே இருக்கிற பொதர்'ல ஒடகார்ந்து கிடந்த காதல் பறவக ரெண்டுகளுக்கும் தெரிஞ்சு போச்சு கொஞ்சநேரத்துக்கு பிரியப்போறமின்னு அதுகளும் பேச முடிக்கப்போகுதுக.

"ஏண்டி! சும்மா நொண நொண'ன்னு பேசிட்டே இருந்தா! இன்னும் 4 மணிநேரத்திலே காலேஜ் ஆரம்பிச்சிரும்! இப்போ போயி பஸ்ஸை பிடிச்சா தான் நான் போயி சேருவேன்! பேசிமுடி! நானு கிளம்பனும்!"

"ஆத்தி! ரொம்பத்தான் கொணட்டுற! ஏம்மாமன் சீமையிலே போய் படிக்கப்போறன்னா வந்து ஒட்கார்ந்து கிடக்கோம்! இங்கயிருந்து போயி இன்னோரு பொட்டக்காட்டுலே இருக்கிற காலேஜ்'க்கு போவப்போற? அதுக்கு எதுக்கு இம்புட்டு அலட்டலு?"ன்னு தன்னுடைய அத்தைமகன் சரவணனிடம் மகாலெட்சுமி என்ற வாயாடி சொல்லிமுடிந்தாள். சரவணன் திண்டுக்கல் அருகே இருக்கிற பொறியல் கல்லூரி மாணவன், இவளும் அவனும் சில வருடங்களாக ஒருவர்கொருவர் காதலிக்கின்றனர், மகாலெட்சுமி் அப்பாவின் உடன்பிறந்த தங்கை மகன்தான் சரவணன், அதுவுமில்லாமால் சரவணனின் சொந்த அக்காவை தான் மகாலெட்சுமி அண்ணனுக்கு கல்யாணம் செய்திருந்தார்கள்.

"அடியே எருமை மடியிலே இருந்து எந்திரி மொதல்ல! நான் கிளம்புறேன், வெள்ளிக்கிழமை ராவுலே பார்க்கலாம்!"

"என்னா மாமா! கிளம்புறீயா? சரி நீ வர்றவரைக்கும் ஈரம் காயாத அளவுக்கு ஒன்னை கொடுத்துட்டு போ?"

"அடியேய்! எந்திருடி! யாரோ வர்றமாதிரி இருக்குடி?"

"ஹிம் யாரு வர்றப்போற இங்க? இந்த நேரத்திலே? எல்லாமே ஒன்னோட ஒடப்பொறப்பு என்னோட நாந்துனா சிறுக்கிதான்"

"ஏலே! எவடி அது என்னோட தம்பியை கக்கத்துலே போட்டு கசக்கி பிழிச்சிட்டு கெடக்குறது?"ன்னு கோபம் கொண்டவளாய் அங்கே வந்தாள் சரவணன் அக்கா சாந்தி.

"ஆமாம்.. ஒன்னோட தம்பி பஞ்சாரத்திலே சிக்காத சேவலு! நாங்க கக்கத்திலே பிடிச்சு எங்க வீட்டுக்கு தூக்கிட்டு போயிறோம்! ஏன் மதினி அது மட்டும் ஒனக்கு கழுகுக்கு மூக்கு வேர்த்தமாதிரி சரியா எங்களை தேடி வந்துறே?"

"நாயத்துக்கிழமை ராப்பொழுது பூராவும் தூக்கமா மணி 4ஆனதும் ஓடி வறேலே! அதுமாதிரிதான் நானும் நீ வந்த ஒருமணி நேரம் கழிச்சி வந்துருவேன்!"

"யக்கா! நல்லவேளை நீ வந்து இந்த ராட்சசி'கிட்டேயிருந்து காப்பத்துனே? நான் கிளம்புறேன், இப்போ போனாந்தான் மருத போயி சேர்த்து அங்கயிருந்து காலேஜ் பஸ்ஸை பிடிச்சி சரியா காலேஜ்'க்கு போகமுடியும்! வெள்ளிக்கிழமை சாயுங்காலம் வந்துறேன்!"

"ஏய் இந்தா! நான் கேட்டதை கொடுக்கமே போறீயே? எல்லாமே ஒன்ன சொல்லனும்! எங்கண்ணனை போட்டு பாடப்படுத்துறேன்னு பத்தாமே என்னையும் உசுரே வாங்குற? போய் இப்போ நல்லா தூங்கு?"

"தம்பி நீ கெளம்புடா! இந்த பொசக்கெட்டவளா நான் இழுந்துட்டுப் போறேன்! ஏண்டி யாருடி உசுர வாங்குறா? ஒங்க நொண்ணன் தான் நோண்டுறதுதான் பெருசா இருக்கு? இதிலே நீ வேற?"

"ஏய் இங்கப்பாரு! ஒன்னோட தொம்பி படிச்சி முடிஞ்சதும் நாங்க அவனுக்கு படிச்சப்பிள்ளய தான் கட்டிக்கொடுப்போமின்னு எங்காது படவே பேசிட்டு திரியுற? எனக்கு அது பிடிக்கலை! அவ்ளோதான் சொல்லிட்டேன்!"

"ஆத்தி! மாரியாத்தா! என்ன பண்ணிறிருவே? எங்கப்பன் என்ன சொல்லுதோ? அதத்தான் எந்தம்பி செய்வான்!"

"ம்ம் என்னபண்ணுவேனா? அந்த கெழவனை சோத்துலே உப்புஒறைப்பு போடாமே சோத்தை போட்டுந்தான் கொல்லணும்! விஷம் வைச்சாவா நீங்கல்லாம் சாகப்போறீங்க?"

"சிறுக்கி! எங்கவீட்டுக்கே வரலை? அதுக்குள்ளே எங்கப்பனுக்கு ஒழுங்கா கஞ்சி ஊத்தமாட்டேன்னு சொல்லுறீயே? எந்தம்பிக்கு நல்லபொண்ணாந்தாண்டி பார்க்கணும்"

"பார்ப்பே! பார்ப்பே! அதுக்கப்புறம் ஒன்னோட மொகத்தை சுடுப்பாறையிலே வைச்சி தேய்க்கமே விடமாட்டேன் நானு"

"அடியேய்! வீடு வந்தாச்சு! போய் செவன்னேன்னு மேவேலையே பாரு!"

"ம்ஹீக்கும் இவளுக மட்டும் அத்தை மகனை தொரத்தி தொரத்தி லவ் பண்ணுவாங்களாம் அவியங்களே கலியாணமும் பண்ணிக்குவாங்களாம்! நாங்க பண்ணா மட்டும் வந்துறாளுக எடஞ்சலை கொடுக்கிறதுக்கு"

மகாலெட்சுமிக்கு அந்த நாளும் அதற்க்கப்புறம் வரும் நாலு தினங்களும் வெறுமையாக கழிந்தது, அவளுக்கு இருக்கும் சந்தோஷமான தினங்களான சனி ஞாயித்துக்கிழமைகள் தான். சரவணனுக்கு காலேஜில் ஸ்பெசல் கிளாஸோ, இல்லை வேறு எதாவது வேலை இருந்தால் ஊருக்கு வரமாட்டான், அத்தினங்களில் இவள் சாப்பிடவே மாட்டாள்.வெள்ளிக்கிழமை ராத்திரி பத்துமணிக்கே சரவணன் வந்தாலும் அவனை பார்த்துட்டு வந்துட்டு தான் அன்னிக்கு ராத்திரியே தூங்குவாள். அந்தா இந்தா'வென்று வெள்ளிக்கிழமையும் வந்துவிட்டது. ஆனால் அவளுக்கு முன்னாடியே சரவணனை பார்க்க கிளம்பிவிட்டாள் அவள் மதினி சாந்தி.

"ஏண்டா தம்பி! இன்னும் படிப்பு முடிய ஏழெட்டு மாசந்தானே இருக்கு? ஒன்னோட தோஸ்த் ஏதோ படிப்புக்காக என்னோமோ பொரஜக்ட் அது ராக்கெட் பண்ணப்போறன்னு ஏதோ சென்னை,பாம்பே போறேன்னு சொன்னான்? நீ எங்கயும் போவலியா?"

"யக்கா அது பேரு பொரஜக்ட் இல்ல! பிரஜெக்ட்! நான் இங்கேனதான் மருதயிலே பண்ணப்போறேன்! இன்னும் ஆறுமாசந்தான் அதுக்கப்புறம் சுத்தமா படிப்பு முடிஞ்சிரும்! வேலையும் கிடைச்சிருமின்னு நினைக்கிறேன்."

"அப்போ நீ எந்த வெளியூருக்கும் போவலியா? இந்த பக்கிசிறுக்கியே பார்க்கதானே இங்கேயே அந்த பொரஜக்டை பண்ணுறேன்னு சொல்லுறே?"

"ஐயோ சும்மா இரு! அப்பன் காதிலே ஏதுவும் விழுந்து தொலைஞ்சிர போவுது! அதுப்பாட்டுக்கு உடுக்கை அடிக்காமலே சாமியாடும்"

"ஏய் என்னாடா? படிக்கிற இடத்துலே எல்லாப்பயலுவெல்லும் வெளியூர் போறாங்கன்னா நீ போகாத காரணம் அதுதானா? ஏதாவது படிக்கிறதுலே கோளாறு வந்துச்சுன்னு வை அப்புறமா ரவை ரவையா உரிச்சு உப்புக்கண்டம் போட்டு ஊருக்கே விருந்து வைச்சுருவேன் ஆமாம்"ன்னு தன்னுடைய வழக்கமான பாணியிலே திட்டி முடித்தார் சரவணன் அப்பா சுப்பையா.

"அதெல்லாம் இல்லப்பே! மருதக்குள்ளே எங்களுக்கு அதெல்லாம் கிடைக்கிது! இனிமே வெளியூரெல்லாம் போவவேண்டியதில்லை! யக்கா கிளம்பு நீயி! நானும்கூட வர்றேன் ஒன்னோட வீட்டுக்கு"

சாந்தி வீட்டை நோக்கி செல்லும் ஒத்தயடி பாதையில இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

"யக்கா நான் ஒன்னை கேட்கணும். உண்மையா பதிலை சொல்லுவியா?"

"கேளுடா? பதில் சொல்லுறேன்!"

"ஒனக்கு மகா'வே பிடிக்கலையா? எதுக்கு அவக்கூட ஓயாமே வைஞ்சிட்டே இருக்கே? அதுவுமில்லாமே எனக்கு வேற பொண்ணுதான் பார்க்க போறேன்னு சொல்லிட்டு வேற இருக்கே?"

"அதெல்லாம் பொய்க்குதான்! நீயும் அவளும் பழகுறதுலேயோ கல்யாணம் பண்ணிக்கிறதிலேயோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லடா? நீங்க ரெண்டு பேரும் வரைமுறையில்லாமே காடுக்கரை, கமலக்காலு நெழலு'ன்னு ஒதுங்கி கெடந்தா அப்புறம் என்ன எங்களுக்கெல்லாம் மருவாதை இருக்கு? அதுதான் அடிக்கடி வந்து கண்டிக்கிறேன். அதுவில்லாமே அவ ஒரு விஷக்காரி அவளையெல்லாம் அப்பிடி வளர்ந்து கொண்டுவந்தாதான் என்னோட தம்பிக்கு வாழ்க்கை நல்லாயிருக்கும்."

"ம்ஹீம் ரெண்டு பேரும் ஒரேமாதிரி தான் பதில் சொல்லுறீங்க. அவ ஒன்னோட சடமுடியை பிடிச்சு தினமும் ஆட்டுனாதான் சாப்பிடுவேன்னு சொல்லுறா?"

"அப்பிடியெல்லாம் சொல்லுறாளா? தம்பி படிக்கிற காலத்திலே சரியா படிச்சி முடிஞ்சுறா? எதையாவது மனசை போட்டு கொழப்பிட்டு கோட்டை விட்டுறாதே? அப்பனுக்கு வெவசாயமும் அழிச்சி போச்சு! ஒன்னை படிக்க வைக்கிறேன்னு கெணறு கெடந்த தோட்டத்தையும் வித்து புடுச்சு, என்னத்தையே இருக்கிறத வைச்சி இப்போ ஜீவனை ஓட்டிக்கிட்டு இருக்கு நம்ம குடும்பம்! நீ தலையெடுத்துதான் இனிமே நாமெல்லாம் தழைக்கனும், ஒன்னை இந்தளவுக்கு படிக்க வைக்க நம்ம அப்பன் ரொம்ப சிரமப்படுதுடா! நீ சீக்கிரமே சம்பாரிச்சு அதை இன்னும் கொஞ்சநாளிலே சும்மா இருக்கவிடுடா"

"யக்கா! அதல்லாம் கவலையே படாதே! நீ சொன்னமாதிரி இன்னும் ஏழெட்டு மாசந்தான் படிப்பு முடிஞ்சிரும் , அதுக்குள்ளே கெம்பஸ் செலக்சனிலே வேலை கிடைச்சிருமின்னு நம்புறேன்! அதுக்கப்புறம் பிரச்சினையே இல்லை! என்ன வேலைன்னு கிடைச்சா வெளியூரிலே தான் வேலை கிடைக்கும் அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு!"

"ஆக ஒனக்கு அவளை பார்க்கமே இருக்கிறது தான் கஷ்டமா இருக்கும்! எங்களை பார்க்காதது எல்லாம் அப்பிடி இருக்காதா?"

"இதுக்கு நான் என்ன பதில் சொல்ல? எல்லார்த்தையும் பார்க்கமே இருக்கிறதும் கஷ்டந்தான். நம்ம அப்பன் முன்னமாதிரியெல்லாம் ஏன் என்னை வையிறதே இல்ல?"

"அதுக்கு என்ன தெரியப்போகுது! நீ படிக்கிறே என்ன மார்க் வாங்குறேன்னு? இனி இங்கன வந்தா இவ பின்னாடியே திரியறேன்னு சொல்லாமே சொல்லி திட்டும்? இப்போதான் நீயி படிச்சி முடிக்கப்போறே? அதுமில்லாமே சீக்கிரமே வேலையும் கெடைச்சிருமின்னு தெரியவந்ததும் இப்போல்லாம் செவனேனு சந்தோஷமா இருக்கு"

"யக்கோவ்! ராட்சாசி வர்றா! ஒன்னோட தலைமுடியை தயாரா வைச்சிக்கோ! பிடிச்சி ஆட்டத்தான் இம்புட்டு வேகமா வர்றா?"

"அடியேய் சிறுக்கி! பத்துமணிக்கு என்னாடி ஒனக்கு இங்கேன வேலை?"

"ஆங் என்னோட பிருத்துவிராசரு குருதயிலே வர்றாரு, அவரை எதிர்கொண்டு மணமாலை வாங்கப்போறேன்! எனக்கு முன்னாடியே ஒன்னோட தொம்பிய பார்க்க போயிட்டியா'க்கும்?"

"யாத்தி மாரியாத்தா! ஒன்க்கிட்டே பேசணுமின்னு தாண்டி அவனே இங்கன வாறான்! அவன்கிட்டே என்னான்னு கேளு! நானு இங்கெனந்தான் நிக்கிறேன்"

"அடிய்யே மகா! நான் சொல்லுறதை கேட்டு அழுவாதே? இன்னும் படிப்பு முடிய கொஞ்சநாளுந்தான் இருக்கு! அதுனாலே நான் இங்க வாரவாரமெல்லாம் வந்து பார்க்கமுடியாது! அதுக்கப்புறமும் வேலைக்கு இண்டர்வியூ அதுஇதுன்னு நிறைய வேலை இருக்கு! அதுதான் ஒன்னை பார்த்துட்டு சொல்லிட்டு போலாமின்னு வந்தேன்!"

"ம்ம் எனக்கு ஏற்கெனவே இது தெரியும்! நீ இங்க இனிமே அடிக்கடி வர்றமாட்டேன்னு என்னோட ஃபிரண்ட் சொல்லிட்டா! அவளும் ஒன்னமாதிரி தானே படிக்கிறா! நாந்தான் வயசிலே ஒழுங்க படிக்காமே இப்போ சாணி பொறுக்கிறேன்"

"படிப்பை முடிஞ்சு வந்ததும் எங்கப்பன்'கிட்டே சொல்லி அனுமதி வாங்கிதரதுக்கு சாந்தியக்கா பொறுப்பு ஏத்துக்கிச்சு! அதுனாலே சந்தோஷமா இருடி!"

"ஓ என்னோட நாந்துனா அதெல்லாம் செய்யுறாங்களா? கணக்குவழக்கு இல்லாமே திட்டந்தான் தெரியுமின்னு தான் நெனைச்சேன்!"

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடைய கல்லூரி இறுதி படிப்புக்குண்டான வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு கல்லூரி கேம்ப்ஸ் செலக்சனிலும் பெரிய கம்பெனி வேலைக்குண்டான அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தன்னோட ஊருக்குள் வருகிறான் சரவணன். உறுதி அளித்தப்படியே சாந்தி அவளோட அப்பாவிடம் தன்னோட தம்பி,மகாலெட்சுமி கல்யாணத்தை பத்தி பேசுகிறாள்.

"யப்பே! தம்பியும் படிச்சி முடிச்சிட்டான்! அவனுக்கு வேலையும் கிடைச்சிருச்சுன்னு வேற சொல்லுறான்! இனிமே அவனுக்கு எந்நாந்துனா கொண்டி மாடு மகா'வே முடிஞ்சி வைச்சிரலாமா?"

"ஏந்தாயி அதுக்கு நானு அனுமதிக்கமாட்டேன்னு சொன்னா நீ என்ன பதில் சொல்லுவே?"

"ம்ம் என்னாப்பே இப்பிடி கேட்கிறே?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல தாயி! நான் இன்னைவரைக்கும் அந்த பயலே ஆளாக்கி பார்க்கனுமின்னு தான் கண்டிப்பா இருந்தேன், காலேஸு போறன்னு சொன்னாங்கிறதுக்காக காடு கரையே வித்துதான் கொடுத்தேன், இவனும் ஒழுங்கதானே போயிட்டு வந்துட்டு இருந்தான், ஒன்னோட கலியாணத்துக்கப்புறம் பயக்கிட்டே மாத்தம் வந்துதான் அவனை சத்தம் போட்டுட்டே இருந்தேன், என்னோட சொல்லுக்காக தானோ என்னோவோ ஏதோ படிச்சி முடிச்சிட்டான், வேலையும் வாங்கிப்பிட்டேன்னு சொல்லுறான். ஒன்னே ஒன்னு ஆத்தா! நான் பெத்த ரெண்டுலே ஒன்னுக்கூட தரிசா போயிறக்கூடாதுன்னு நான் கடவுளா கும்பிடற இந்த மண்ணுக்கிட்டே வேண்டிக்கிட்டே இருப்பேன். விதை நெல்லை வித்துதான் சோறு பொங்கி திங்கனுமின்னு சொன்னா திங்காமே சாவான் வெவசாயி, என்னை மாதிரி மண்ணை நம்பி பொழைச்சனுவனுக்கு அதே வித்து அடுத்த விதை முளைக்க வைக்கனுமின்னு இருந்துச்சு, அது பதறா போயிரக்கூடாதுன்னு தான் பொத்தி வளர்த்தேன், இப்போ விளைஞ்சு அது கதிரா தான் வந்துருக்கு. இன்னவரைக்கும் கொழு கொம்பா நான் நின்னுட்டேன். அப்பனா இருந்து மவனே வளர்த்து காட்டிட்டேன், இனிமே ஏட்டிலே சொன்னமாதிரி அவன் என்னை ஒலகத்துக்கு அடையாளம் கட்டுவானுன்னு நம்புறேன், அவனோட ஆசைக்கோ விருப்பத்துக்கோ என்னிக்குமே குறுக்கிலே நிக்கமாட்டேன்"

இவ்வாறு சுப்பையா சொல்லி முடிந்ததும் அங்கே வந்து சேருகிறாள் மகா.

"ஆத்தி அப்பே! தம்பி மேலே இம்புட்டு பாசமா தான் இருந்தியா! வேதாந்தி மாதிரி ஒலக ஞானமெல்லாம் பேசுறே? கேட்டியாடி கொண்டிமாடு மகா! எங்கப்பு ஒங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிறுச்சு"

"ஹிம்! அது அப்போ பேசிட்டு இருக்கிறோப்பவே வந்துட்டேன்! அதுதானே சொன்னனே? நீங்களாம் விஷக்கார குடும்பம் ஒங்களுக்கெல்லாம் விஷம் வைச்சாலும் கொல்லமுடியாது! இனி இந்த பெருசுக்கு பழையசாதமும்,புளிச்சாறும் போட்டு கொன்னாத்தான் உண்டு."